என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், அர்ஜூனா விருதுக்கு சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் நம்பர்-1 வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி, சென்னையைச் சேர்ந்த இவர் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பெல்ஜியம், ஐஸ்லாந்தில் நடந்த சாட்டிலைட் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில், வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

    அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதற்காக அவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலா ஜனோடியிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

    கொரோனா வைரஸ் காரணமாக சென்னை திரும்பிய அவர் வீட்டில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டார். 4-வது கட்ட ஊரடங்கில் கிடைத்த தளர்வு நம்பிக்கை அளிக்க அவர் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

    இந்த நிலையில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், அர்ஜூனா விருதுக்கு பவானி தேவியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா வாள்வீச்சு சம்மேளனம் இதை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கூறும் போது:-

    அர்ஜூனா விருதுக்கு பவானி தேவி பெயரை பரிந்துரை செய்துள்ளது. இதற்கான தகுதி அவருக்கு உள்ளது. இந்த விருது பவானி தேவிக்கு கிடைக்கும் பட்சத்தில் 2024, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எங்களது உத்தேசத் திட்டத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

    இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் பரவ காரணமாக அமையும் என்றார். பவானி தேவி உலக தரவரிசையில் சபரே பிரிவில் 45-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக சீனியர் சுழற்பந்து வீச்சாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் 2016-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் 39 வயதான ஹர்பஜன்சிங் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய அணிக்காக மீண்டும் விளையாட நான் தயாராக இருக்கிறேன். ஐ.பி.எல். போட்டி பவுலர்களுக்கு மிகவும் கடினமானதாகும். ஏனெனில் இந்த போட்டிக்கான மைதானம் சிறியதாகும். உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது என்பது மிகவும் சவாலானதாகும். ஐ.பி.எல். போட்டியில் அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால், சர்வதேச போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் தானே?. ஐ.பி.எல். போட்டியில் பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் நான் நன்றாக பந்து வீசுவதுடன் விக்கெட்டும் வீழ்த்துகிறேன். எனக்கு வயதாகி விட்டது என்பதால் தேர்வாளர்கள் என்னை அணித்தேர்வில் கருத்தில் கொள்வதில்லை.

    நான் உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. கடந்த 4-5 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து வருகிறேன். இருப்பினும் அவர்கள் என்னை கண்டு கொள்வதில்லை. சர்வதேச போட்டியில் எல்லா அணிகளிலும், ஐ.பி.எல், அணிகளை போல் தரமான வீரர்கள் கிடையாது. அனைத்து ஐ.பி.எல். அணிகளிலும் ‘டாப்-6’ வீரர்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகளின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பேர்ஸ்டோ, வார்னர் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடிகிறது என்றால் சர்வதேச போட்டியிலும் அவர்களது விக்கெட்டை கைப்பற்ற முடியுமல்லவா?. இந்திய அணியில் விளையாடுவது என் கையில் இல்லை. தற்போதைய இந்திய கிரிக்கெட் அமைப்பில் ஒருவரும் உங்களிடம் இது பற்றி பேசமாட்டார்கள்’ என்று தெரிவித்தார். 
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கராச்சி:

    16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க செப்டம்பர் மாதம் வரை ஆஸ்திரேலிய எல்லைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருப்பதால், இந்த 20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடப்படலாம் என்று கூறப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் ஐ.சி.சி. நிர்வாகிகள் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், தேர்வு குழு தலைவருமான மிஸ்பா உல்-ஹக் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    16 அணிகள் கலந்து கொள்ளும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த போட்டி குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஒரு மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ பொறுத்து இருந்து பார்த்து எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவசர கோலத்தில் முடிவு எடுக்கக்கூடாது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை பார்க்க எல்லோரும் விரும்புகிறார்கள். சர்வதேச அளவிலான போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கு இந்த உலக கோப்பை போட்டி சிறப்பான வாய்ப்பாக இருக்கும்.

    கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். விளையாட்டுகள் நடைபெறாததால் மக்களுக்கு பொழுதுபோக்கு எதுவும் இல்லை. இந்த நிலையை கடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே நாங்கள் ஜூலை மாதம் தொடங்கும் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை வீரர்கள் பின்பற்றுவது என்பது எளிதான காரியமல்ல. பாகிஸ்தானில் 3 வாரம் பயிற்சி மற்றும் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சி மேற்கொண்டால் இங்கிலாந்து தொடருக்கு தயாராகி விடலாம் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து பயணத்துக்கு 25 முதல் 27 வீரர்கள் செல்லலாம் என்று நினைக்கிறோம். ஏனெனில் இடையில் மாற்று வீரர் கேட்க முடியாது. அத்துடன் வீரர்கள் அனைவரும் தொடக்கம் முதல் முடிவு வரை ஒன்றாக இருப்பதால் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இங்கிலாந்து தொடரில் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது 2-வது விக்கெட் கீப்பராக இடம் பெறுவார். பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆட்ட தரத்தில் விராட்கோலி (இந்தியா), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜோரூட் (இங்கிலாந்து) ஆகியோருக்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளார். 20 ஓவர் கேப்டன் பொறுப்பிலும் பாபர் அசாம் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஜப்பானில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பேஸ்பால் லீக் ஜூன் 19-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஜப்பானில் ஆண்டுதோறும் பேஸ்பால் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மார்ச் மாதம் 20-ந்தேதி லீக் தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லீக் தள்ளி வைக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஏப்ரல் மாதத்தில் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு போட்டிகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதனால் ஜூன் 19-ந்தேதி ரசிகர்கள் இன்று பேஸ்பால் லீக் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19-ந்தேதி போட்டிகள் தொடங்கினால், ஜப்பானில் தொடங்கப்படும் முதல் தொழில்முறை போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

    இந்த லீக்கில் விளையாடும் பெரும்பாலான அணிகள் பயிற்சியை தொடங்கியுள்ளன.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு டெஸ்ட் அணிக்கான கேப்டனை தேடிவரும் நிலையில், அதை ஏற்க தயார் என டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டிக் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டி காக்கிற்கு அதிகமாக சுமையை கொடுக்க விரும்பவில்லை. அதனால் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கமாட்டோம் என்று தென்ஆப்பிரிக்கா கி்ரிக்கெட் போர்டு தெரிவித்துவிட்டது.

    இந்நிலையில் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன் என்று தொடக்க பேட்ஸ்மேன் டீல் எல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘டெஸ்ட் அணி கேப்டன் பதவி என்பது உண்மையிலேயே எளிதான பயணம் கிடையாது. ஆனால், கேப்டன் என்பது எனக்கு இயல்பாகவே இருக்கக் கூடியது.

    கடந்த காலங்களில் நான் கேப்டனாக பணியாற்றியுள்ளேன். பள்ளி, மாகாணம் மற்றும் பிரான்சிஸ் அளவிலான அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளேன். இயல்பாகவே அந்த பணியை ரசித்து செய்துள்ளேன். கேப்டன் பதவி ஏற்க வேண்டும் என்றால், நிச்சயம் அது ஏற்றுக் கொள்வேன்’’ என்றார்.

    டீன் எல்கர் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்காக இரண்டு முறை கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2017 லார்ட்ஸ் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 211 ரன்னில் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 2019-ல் 107 ரன்னில் வெற்றி பெற்றது.
    அதிகமாக சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியலில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை பின்னுக்குத் தள்ளினார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா.
    உலகளவில் அதிகமாக சம்பாதிக்கும் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு ஒசாகா இந்திய ரூபாய் மதிப்பில் 284 கோடி ரூபாய் (37.4 மில்லியன் அமெரிக்க டாலர்) சம்பாதித்துள்ளார். இதன் மூலம் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை நான்கு ஆண்டுகளாக வகித்து வந்த செரீனா வில்லியம்சை (36 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒசாகா முந்தினார்.

    மரியா ஷரபோவா 2015-ம் ஆண்டு 29.7 மில்லியன் டாலர் சம்பாதித்திருந்தார். இதுதான் டென்னிஸ் வீராங்கனையின் ஒரு வருடத்தின் அதிக வருமானமாக இருந்தது. தற்போது ஒசாகா அதை முறியடித்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக உள்ள சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் தலைவராக நீடிக்க முடியாது என மத்திய பிரதேச மாநில உறுப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அவர் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் கடந்த மார்ச் 28-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் கங்குலி ஐ.சி.சி. வாரியத்திற்கு உறுப்பினராக சேர்க்கப்பட்டார். பி.சி.சி.ஐ. சார்பில் அவர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஐ.சி.சி. தலைவராக உள்ள இந்தியாவைச் சேர்ந்த ‌ஷசாங் மனோகரின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. அந்தப் பதவிக்கான போட்டியில் கங்குலி உள்ளார். இதற்காகவே அவர் ஐ.சி.சி. வாரியத்திற்கு நியமனம் ஆனார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனும், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இயக்குனருமான சுமித் கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஐ.சி.சி. வாரியத்திற்கு நியமிக்கப்பட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி நீடிக்க முடியாது என்று மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கங்குலி மற்றும் கிரிக்கெட் வாரிய மற்ற நிர்வாகிகளுக்கு இ-மெயில் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சஞ்சீவ் குப்தா கூறியதாவது:-

    பி.சி.சி.ஐ.யின் விதிமுறை புத்தகப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு யாராவது நியமிக்கப்பட்டால் அவர் வாரியத்தின் தலைவர் பதவி வகிக்க தடை உள்ளது.

    ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்கப்பட்ட உடன் கங்குலியின் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி தானாகவே காலியாகிவிடும். பி.சி.சி.ஐ.யின் விதி 14(9) இதைத் தெளிவாக சொல்கிறது. இதனால் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவராக நீடிக்க முடியாது.

    இவ்வாறு சஞ்சீவ் குப்தா தெரிவித்துள்ளார்.

    இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நிராகரித்துள்ளார்.
    தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவை டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பிசிசிஐ-யை முன்னாள் வீரர் அதுல் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.

    கேப்டன் பொறுப்பை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. டெஸ்டுக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக இருக்க வேண்டும். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவருக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு 2 கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீரர் அதுல் வாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேப்டன் பதவியை பிரித்து வழங்குவது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் விராட் கோலியின் பணி சுமை குறையும். ஆனால் இந்த சுமையை அவர் விரும்புவார். 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று அவர் நினைப்பார்.

    தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தி 4 முறை கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை.

    எனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளுக்கு விராட் கோலி கேப்டனாக தொடரலாம். 20 ஓவர் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும். இதன் மூலம் கோலிக்கு நெருக்கடி குறையும்.

    இவ்வாறு அதுல் வாசன் கூறியுள்ளார்.
    இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் உடல்நலக்குறைவால் மொகாலியில் காலமானார்.
    புதுடெல்லி:

    இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் (வயது 96) மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 8-ம் தேதி மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 12-ந்தேதி அன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக தொடர்ந்து பல்பீர் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்தவர் ஆவார்.

    இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் பல்பிர்சிங். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது. ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சாதனை பல்பிர் சிங் வசமே உள்ளது.

    1952-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இறுதிச்சுற்றில் இந்திய அணியில் (6-1) வெற்றியில் 5 கோல்கள் அடித்து அசத்தினார் பல்பிர் சிங். 1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பிர் சிங்  தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பிர் சிங்குக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    ஊரடங்கிற்கு முன் காயம் ஏற்பட்டதாகவும் தற்போது காயத்தில் இருந்து மீண்டு விட்டாலும், இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் உடல் தகுதியில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதனால் ஒருவார பயிற்சிக்குப் பிறகு உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தாம் உள்ளதாக ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

    நியூசிலாந்து தொடரின்போது ரோகித் சர்மா காயம் அடைந்தார். அதன்பின் தற்போது வரை அவர் விளையாடாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது என அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டாக ஆடி வருகிறார்.

    இந்த நிலையில் உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியே சிறந்தது என்று பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

    இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டியால் தான் வளர்ந்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. உலகக்கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல் .கிரிக்கெட் தான் சிறந்த போட்டியாகும். ஐ.பி.எல். தொடரில் சில சவால்கள் மிகப்பிரமாதமானவை, கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் ஸ்டெய்ன், பும்ரா, மலிங்காவை எதிர்கொள்வது சுவாரசியம். கோலி, டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதைப் பார்ப்பது வித்தியாசமானது.

    கெவின் பீட்டர்சன் உண்மையில் நாங்கள் எல்லாம் ஐ.பி.எல். ஆடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர். வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்.

    இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
    அனுமதியின்றி வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டதால் ஷர்துல் தாகூர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    கொரேனா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    ஊரடங்கால் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், கேப்டன் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் வீட்டிலிருந்துபடி உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தனது பண்ணைத் தோட்டத்தில் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று பயிற்சி மேற்கொண்டார். வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட முதல் கிரிக்கெட் வீரர் ஆவார்.

    ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் மைதானங்களில் பயிற்சி பெற மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ‌ஷர்துல் தாகூர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது.

    பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் உள்ள அவர் கிரிக்கெட் வாரியத்திடம், எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்துள்ளதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது ‘‘‌ஷர்துல் தாகூர் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் வெளிபுறப் பயிற்சியில் ஈடுபட்டது துரதிர்ஷ்டவசமானது. ஒப்பந்த வீரர்களை நாங்கள் வெளிப்புற பயிற்சிக்கு அனுமதிக்கவில்லை. அவராகவே சென்று பயிற்சியில் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது. இது நல்ல முடிவு அல்ல’’ என்றார்.
    ×