என் மலர்
விளையாட்டு
துபாய்:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ்ரான 87 ரன் குவித்தார். பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்தில் 72 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடினார்.
கடைசி ஓவரில் அணிக்கு 10 ரன் தேவைப்பட்டது. இதில் 5-வது பந்தை ஜடேஜா சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டநிலையில் அந்த பந்தையும் சிக்சர் அடித்தார்.ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணிக்கு இது 5-வது வெற்றி (13 ஆட்டம்) ஆகும்.
கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்கிய கொல்கத்தா தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் அந்த அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.
வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
இந்த ஆட்டத்தில் எங்களது திட்டங்கள் சாதகமாக சென்றது என்று நினைக்கிறேன். டாசில் ஜெயித்தது மகிழ்ச்சி அளித்தது. இந்த சீசனில் ஜடேஜா அற்புதமாக விளையாடினார். எங்களது அணியில் அவர் மட்டும் தான் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை எடுத்தார். விளையாடாத வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம்.அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
ருதுராஜ் கெய்க் வாட்டை வலை பயிற்சியின் போது பார்த்தோம். ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து அவர் மீண்டு வர 20 நாட்கள் ஆனது. ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். அவர் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர். அவர் நிறைய பேசும் நபர் அல்ல. எனவே சில நேரங்களில் நிர்வாகத்துக்கு ஒரு வீரரை அளவிடுவது கடினம்.
அவரை முதல் ஆட்டத்தில் விளையாட வைத்தபோது விரைவில் அவுட் ஆனார். நெருக்கடியால் அவர் வெளியேறினாரா? அல்லது அவரது இயல்பான விளையாட்டா? என்பதை சொல்வது கடினம். ஒரு வீரரை பற்றி கணிக்க ஒரு பந்து மட்டும் போதாது.
நாங்கள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற வில்லை என்றாலும் இந்த தொடரில் எங்களது சிறப்பை வெளிப்படுத்துவது முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இதுவரை 13 ஆட்டங்களில் 5 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது.
இந்தநிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்ட னான டோனி ஓய்வு பற்றி வதந்திகள் பரவி வருகின்றன.
நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது. போட்டி முடிந்ததும் டோனி டி-சர்ட்டில் தனது கையெழுத்தை இட்டு கொல்கத்தா அணி வீரர்கள் நிதிஷ்ரானாவுக்கு கொடுத்தார். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் ஜோஸ் பட்லருக்கு டோனி தனது டி-சர்ட்டில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார். அதேபோல் மும்பை அணியில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, குர்னல் பாண்ட்யா ஆகியோருக்கும் தான் கையெழுத்திட்ட டி-சர்ட்டை வழங்கி இருந்தார்.
இதனால் டோனி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியை டோனியே வழிநடத்துவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அபுதாபி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அபுதாபியில் இன்று நடக்கும் 50-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
பஞ்சாப் அணி 12 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை பிரகாசபடுத்திக்கொள்ளும். பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கிறிஸ்கெய்ல், மன் திப்சிங், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் முகமது ஷமி, ரவி பிஸ்னொய், ஜோர்டன் ஆகியோர் உள்ளனர். பஞ்சாப் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
ராஜஸ்தான் அணி 12 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல் மற்ற அணிகளின் முடிவுகளும் ராஜஸ்தானுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
அந்த அணியில் பென்ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஆர்ச்சர் நல்ல நிலையில் உள்ளார். மேலும் ஆல்ரவுண்டர் ராகுல் திவேதியாவும் அதிரடியாக விளையாடக்கூடியவர்.
ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன் இலக்கை ராஜஸ்தான் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்க இருந்த நடப்பு சாம்பியனான இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் கடைசி நேரத்தில் விலகினார். அவரது தந்தையும், பயிற்சியாளருமான டி.கே. சென்னுக்கு அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் வேறுவழியின்றி விலக நேரிட்டது. இந்த நிலையில் பயிற்சியாளர் மற்றும் லக்ஷயா சென்னுடன் தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் ஆகியோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் ஜெயராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போது எங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுள்ளனர். ஆனால் எங்களுக்குரிய உணவு உள்ளிட்ட விவரங்கள் எதையும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்ததற்கான மருத்துவ சான்றிதழ் உள்ளது. கொரோனா அறிகுறியும் இல்லை. ஜெர்மனியின் உள்ளூர் அதிகாரிகளை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இங்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து உடனடியாக தாயகம் திரும்ப வாய்ப்பு உண்டா? என்பதை அறிய விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜெர்மனியில் இந்த இரண்டு வீரர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தும் நாட்களுக்கான செலவுத் தொகையை வழங்குவதாக இந்திய விளையாட்டு ஆணையம் உறுதி அளித்துள்ளது.






