என் மலர்
விளையாட்டு
கிறிஸ்ட்சர்ச்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 டெஸ்ட் போட்டி தொடரில் மவுண்ட் மவுக்கானுவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் திணறியது. 83 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர் ஷான் மசூத் ரன் எதுவும் எடுக்காமல் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்கவீரர் ஆபித் அலி (25 ரன்), ஹாரிஸ் சோகைல் (ஒரு ரன்), பவாத் ஆலம் (2 ரன்) ஆகியோரது விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார்.
5-வது விக்கெட்டான அசார் அலி- கேப்டன் முகமது ரிஸ்வான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 61 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஜேமிசனே கைப்பற்றினார்.
அடுத்து பஹீம் அஸ்ரப் களம் வந்தார். மறுமுனையில் இருந்தனர் அசார் அலி தொடர்ந்து சிறப்பாக ஆடினார். தேனீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. அசார் அலி 90 ரன்னிலும், அஸ்ரப் 26 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அசார் 93 ரன்னிலும் 48, ரன்னிலும் வெளியேறினார். 83.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் ஹெண்ட்ரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அணி வீரர்களின் எண்ணிக்கையை 20-ல் இருந்து 22 ஆக உயர்த்திக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மும்பை அணியில் கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 19 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார். அவர் மும்பை சீனியர் அணியில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.
லண்டன்:
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. உலக தரவரிசை பட்டியலில் அவர் 7-வது இடத்தில் உள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த 25 வயதான பி.வி.சிந்து தற்போது இங்கிலாந்தில் தங்கி உள்ளார். இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக பி.வி.சிந்து கூறியதாவது:-
ஒலிம்பிக் போட்டிக்கு நான் நன்றாக திட்டமிட்டுள்ளேன். பதக்கத்தை பெற எல்லோரும் 100 சதவீதம் கடினமான உழைப்பை கொடுக்கவே விரும்புவார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதை நான் ஆவலுடன் விரும்புகிறேன். அதற்காக கடுமையாக உழைக்கிறேன். இது எளிதானதல்ல என்று எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் அவர் பங்கேற்கிறார். தாய்லாந்து ஓபன் பேட் மின்டன் போட்டி வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொள்கிறார்.
பி.வி.சிந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் மயிரிழையில் தங்கப் பதக்கத்தை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கிலாவது தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்கில் உள்ளார்.
கடந்த ஆண்டு பாசல் நகரில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் பெற்றார். இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவார். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த்தில் அவர் சாதித்து இருந்தார்.
பி.வி.சிந்து இதுவரை 326 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 139 போட்டியில் தோற்றுள்ளார்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
4 டெஸ்ட் போட்டி தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.
இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி சரியான பதிலடி கொடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா விளையாடுகிறார். காயம் காரணமாக முதல் 2 டெஸ்டில் விளையாடாத அவர் அணியோடு தாமதமாக இணைந்து கொண்டார்.
14 நாட்கள் தனிமைக்கு பிறகு ரோகித் சர்மா இந்திய வீரர்களுடன் இணைந்து சிட்னி மைதானத்தில் பயிற்சியை தொடங்கினார். அவருக்கு அணியின் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புஜாராவுக்கு பதிலாக அவர் கடைசி 2 டெஸ்டில் துணை கேப்டனாக பணியாற்றுவார்.
11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாட போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 5-வது வரிசையில் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அணி நிர்வாகமே இதுகுறித்து இறுதி முடிவை எடுக்கும். தொடக்க வீரரான மயங்க் அகர்வால் இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால் அவர் இடத்தில் ரோகித் சர்மா தொடக்க வீரராக ஆடலாம் என்று கருதப்படுகிறது.
இதேபோல மிடில் ஆர்டரில் விளையாடும் ஹனுமா விகாரியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் அவரது வரிசையான 5-வது இடத்தில் ரோகித் சர்மா களம் இறக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
ரோகித் சர்மாவின் இட வரிசை குறித்து இன்னும் அணி நிர்வாகத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
33 வயதான ரோகித் சர்மா 32 டெஸ்டில் விளையாடி 2,141 ரன் எடுத்துள்ளார். சராசரி 46.54 ஆகும். 6 சதமும், 10 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) குவித்துள்ளார்.
இதில் வெளிநாடுகளில் 18 டெஸ்டில் 816 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 26.32 ஆகும். அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோகித் சர்மா தொடக்க வீரர் வரிசையில் 5 டெஸ்டில் 3 சதத்துடன் 556 ரன் எடுத்துள்ளார். 5-வது வரிசையில் 9 டெஸ்டில் 3 அரை சதத்துடன் 437 ரன் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு எந்தவொரு ஆட்டத்திலும் விளையாடாமல் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். இதனால் அவரால் நல்ல நிலையில் ஆட முடியுமா? என்ற சந்தேகமும் இருக்கிறது.






