search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
    X
    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

    நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுமா பாகிஸ்தான்?

    பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. உள்ளூரில் நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறாார்கள்.
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் நியூசிலாந்துக்கு இந்த வெற்றி முக்கியமானதாக அமைந்துள்ளது.

    தொடக்க டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 373 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி டிரா செய்ய கடைசி நாளில் கடுமையாக போராடியது. ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் 4.3 ஓவர்கள் மீதம் இருக்கையில் பாகிஸ்தானை ஆல்-அவுட் ஆக்கி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெருக்கு வலது காலில் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த போதிலும் வலி நிவாரண ஊசி போட்டுக்கொண்டு இடைவிடாது பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. காயம் குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி சேர்க்கப்பட்டு உள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து தற்போது 360 புள்ளிகளுடன் (66.7 சதவீதம்) 3-வது இடம் வகிக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த டெஸ்டிலும் வாகை சூடி 60 புள்ளிகளை பெற்றாக வேண்டும். அதை அடையும் முனைப்புடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். வலுவான அணியாக திகழும் நியூசிலாந்து உள்நாட்டில் கடைசி 16 டெஸ்டுகளில் தோற்றதே இல்லை. அத்துடன் 2011-ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து அணி உள்ளூரில் ஆசிய அணிகளிடம் தோற்றது கிடையாது. அந்த பெருமையையும் தக்க வைக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அனுபவ வீரர்கள் குறைவு என்றாலும் நியூசிலாந்துக்கு முடிந்த அளவுக்கு சவால் கொடுத்து பார்த்தனர். தொடக்க டெஸ்டில் பவாத் ஆலம் அடித்த சதம் அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கும். கை பெருவிரலில் ஏற்பட்ட லேசான எலும்பு முறிவால் முதலாவது டெஸ்டில் ஒதுங்கியிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நேற்று நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்து விட்டார் என்று அணி மருத்துவ குழு கூறினால் மட்டுமே இந்த டெஸ்டில் விளையாடுவார். ஒருவேளை உடல்தகுதியை எட்டாவிட்டால் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார். நியூசிலாந்தின் வீறுநடைக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா? அல்லது பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
    Next Story
    ×