என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    பெங்களூரு, 

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அந்த அணியின் பயிற்சி குழுவில் அங்கம் வகிக்கும் மைக் ஹெஸ்சன் (அணி இயக்குனர்), சைமன் கேடிச் (தலைமை பயிற்சியாளர்), ஸ்ரீதரன் ஸ்ரீராம் (பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்), ஆடம் கிரிப்பித் (பந்து வீச்சு பயிற்சியாளர்), ஷங்கர் பாசு (உடற்தகுதி பயிற்சியாளர்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார். 5 ஆண்டுகள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு உள்ள 48 வயதான சஞ்சய் பாங்கர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
    சென்னை:

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும். ஆல்-ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான அக் ஷர் பட்டேல் லேசான கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டதால் கடைசி நேரத்தில் முதலாவது டெஸ்டில் சேர்க்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் ரன்களை வாரி வழங்கினார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது பந்து வீச்சு இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே விமர்சித்தார். இதனால் இப்போது உடல்தகுதியை எட்டி பயிற்சியில் ஈடுபட்டு வரும் அக் ஷர் பட்டேல் 2-வது டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தரும் பவுலிங்கில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்தியதால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. முதலாவது டெஸ்டில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்து வீச்சில் கையில் காயமடைந்த அஸ்வினுக்கு அந்த காயம் பயப்படும்படி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அணி நிர்வாகம் நிம்மதிபெருமூச்சு விட்டுள்ளது.

    முதலாவது டெஸ்டில் தொடக்கத்தில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கமாக திகழ்ந்தது. இதனால் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்து விட்டது. கடைசி இரு நாட்களில் தான் சுழற்பந்து வீச்சு எடுபட்டது. அதற்குள் இந்திய அணியின் கதையே முடிந்து போனது.

    இந்த டெஸ்டுக்கு அருகில் உள்ள மற்றொரு ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. பந்து இன்னும் அதிகமாக சுழன்று திரும்பும் வகையில் புதிய ஆடுகளத்தின் தயாரிப்பு இருக்கும் என்று தெரிகிறது. அதாவது வரும் நாட்களில் ஆடுகளத்தில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால், அதன் பிறகு ஆடுகளம் வெயிலில் நன்கு காய்ந்து உலர்ந்து விடும். அவ்வாறான சூழலில் ஆடுகளத்தில் சீக்கிரமாக வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து எகிறத் தொடங்கி விடும். முதல் நாளில் இருந்தே ஓரளவு சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தால் அதன் பிறகு ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்காது.

    தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவித்துள்ள நிலையில் அவர் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 13-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடக்கிறது.

    3-வது டெஸ்ட் பகல்- இரவாக வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், 4-வது டெஸ்ட் மார்ச் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

    கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜன் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியில் அவர் இடம்பெற்று உள்ளார்.

    இந்த நிலையில் அவரை தமிழக அணியில் இருந்து விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டது. இதனால் அவரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் காயம் அடைந்த வேகப்பந்து வீரர்கள் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமன் விகாரி ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. எனவே நடராஜன் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

    29 வயதான நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்தின் போது சர்வதேச போட்டியில் அறிமுகமானார். கடைசி 20 ஓவர் போட்டியில் 2 விக்கெட் கைப்பற்றினார். 3 ஒருநாள் தொடரில் 6 விக்கெட் எடுத்தார்.

    20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் அறிமுகமானது போல் டெஸ்டிலும் அவர் முதல் முறையாக விளையாடினார். பிரிஸ்பேனில் நடந்த 4-வது டெஸ்டில் நடராஜன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    முன்னணி வேகப்பந்து வீரர்கள் காயமடைந்ததால் அவருக்கு டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

    தற்போது அவர் விஜய் ஹசாரே போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுகிறார். 

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து கால கட்டத்துக்கு ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று அந்நாட்டு முன்னாள் கேட்பன் நாசர் உசேன் கூறியுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோரூட் தனது சிறப்பான பேட்டிங் மூலம் தற்போது டெஸ்ட் தர வரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    30 வயதான ஜோரூட் சமீபத்தில் இலங்கை பயணத்தின்போது முதல் டெஸ்டில் 228 ரன்னும், 2-வது டெஸ்டில் 186 ரன்னும் குவித்தார். இந்த 2 டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றிபெற அவரது பேட்டிங் காரணமாக இருந்தது.

    தற்போது இந்திய பயணத்தின்போது சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு ஜோரூட்டின் அபாரமான பேட்டிங்தான் காரணம். அவர் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (218 ரன்) அடித்தார். 2-வது இன்னிங்சில் 40 ரன் அடித்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து கால கட்டத்துக்கு ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று அந்நாட்டு முன்னாள் கேட்பன் நாசர் உசேன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜோரூட் திகழ்வார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    அவருக்கு 30 வயதுதான் ஆகிறது. இதனால் இங்கிலாந்தின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார். டெஸ்டில் அதிக ரன் எடுத்த குக்கின் சாதனையை முறியடிப்பார். நான் பார்த்த வகையில் ஜோரூட்டை போல் எந்தவொரு இங்கிலாந்து வீரரும் சுழற்பந்தை எதிர் கொள்வதில்லை. ஜோரூட் சுழற்பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டு மிகவும் அபாரமாக விளையாடுகிறார்.

    இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்டிலும் இங்கிலாந்து தோற்கும் என்று கூறினார்கள். அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில் ஜோரூட் தலைமையிலான அணி முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோரூட் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 100 டெஸ்டில் விளையாடி 8,507 ரன் எடுத்துள்ளார். சராசரி 50.33 ஆகும். 20 சதமும் 49 அரை சதமும் அடித்துள்ளார்.

    அலஸ்டர் குக் 12,472 ரன்னுடன் (161 டெஸ்ட்) முதல் இடத்திலும், கிரகாம் கூச் 8,900 ரன்னுடன் (118 டெஸ்ட்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அபார பேட்டிங்கால் 60 புள்ளிகளை கூடுதலாக சேகரித்த அவர் மொத்தம் 883 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார். இதனால் 4-வது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி மேலும் ஒரு இடம் இறங்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜோ ரூட் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக கோலியை முந்தியிருக்கிறார்.

    தரவரிசையில் சரிவை சந்தித்த இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே.


    சென்னை டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (1, 0) சொதப்பிய இந்திய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 3 இடங்கள் சரிந்து 11-வது இடத்துக்கு பின்தங்கினார். இதே டெஸ்டில் முதல் இன்னிங்சில் 91 ரன்கள் நொறுக்கிய இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தரவரிசையில் மாற்றமின்றி 13-வது இடத்தில் நீடிக்கிறார். இருப்பினும் 12 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 703 புள்ளிகளை எட்டியிருக்கிறார். இந்திய முழு நேர விக்கெட் கீப்பர் ஒருவர் 700 புள்ளிகளை கடப்பது இதுவே முதல் முறையாகும். மற்ற இந்திய வீரர்கள் புஜாரா 7-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), ரோகித் சர்மா 23-வது இடத்திலும் (5 இடம் குறைவு), சுப்மான் கில் 40-வது இடத்திலும் (7 இடம் உயர்வு), வாஷிங்டன் சந்தர் 81-வது இடத்திலும் (2 இடம் ஏற்றம்) உள்ளனர்.

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக இறங்கி இரட்டை சதம் (210 ரன்) அடித்ததோடு 395 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைக்க உதவிய வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் கைல் மேயர்ஸ் 448 புள்ளிகளுடன் தரவரிசையில் 70-வது இடத்துக்கு நுழைந்திருக்கிறார். தரவரிசையின் அறிமுகத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெற்ற அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை இதுவாகும்.

    இதே போல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 19 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 16-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி 46-ல் இருந்து 35-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார். சென்னை டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஜாலத்தில் இந்தியாவின் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மிரள வைத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6-ல் இருந்து 3-வது இடத்தை எட்டியுள்ளார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். பும்ரா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தில் இருக்கிறார்.

    டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா) ஆகியோர் உள்ளனர்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார்.
    மெல்போர்ன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 64-ம் நிலை வீரரான 23 வயது பிரான்சஸ் டிபோவை (அமெரிக்கா) சந்தித்தார்.

    3½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்சஸ் டிபோ 2-வது செட்டை தனதாக்கியதுடன், அடுத்த செட்டில் டைபிரேக்கர் வரை கடும் சவால் அளித்தார். முடிவில் ஜோகோவிச் 6-3, 6-7 (3-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் கூறுகையில், ‘மிகவும் கடுமையான சவால் அளித்த டிபோவை பாராட்ட விரும்புகிறேன். அவரது ஆட்டம் அருமையாக இருந்தது. அவர் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டார். வெப்பம் காரணமாக ஆடுவதற்கு கடினமாக இருந்தது. நான் இதுபோன்ற சூழ்நிலையை சந்திப்பது முதல்முறையல்ல. எனவே இதுபோன்ற நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும்’ என்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-பென் மெக்லாச்லன் (ஜப்பான்) ஜோடி 4-6, 6-7 (0-7)என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு பெற்ற தென்கொரியாவின் ஜி சுங் நாம்-மின் கு சாங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மெல்போன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் நாட்டின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா,  பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார். 

    உலகின் முன்னணி வீராங்கனையான கரோலின், ஒசாகாவுக்கு கடும் சவால் அளிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த கணிப்புகளை தகர்த்த நவோமி ஒசாகா, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-2, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாம் சுற்றில் ஓனஸ் ஜாபருடன் மோத உள்ளார்.

    இதேபோல் ஒற்றையர் பிரிவில் இதுவரை 23 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், நினா ஸ்டோஜனாவிக்கை 6-3, 6-0 என எளிதாக வீழ்த்தி மூன்றாம் சுற்றை உறுதி செய்தார். 

    ஆஸ்திரேலிய ஓபனில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா கடந்த ஆண்டு மூன்றாம் சுற்றில் வெளியேறினார். இது அவருக்கு மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்த முறை மூன்றாம் சுற்றில் அவரைவிட தரநிலையில் மிகவும் பின்தங்கி உள்ள ரஷிய வீராங்கனை அனஸ்தாசியாவை எதிர்கொள்கிறார். 
    சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் ரஹானேவின் மோசமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருப்பதாக அவர் மீது இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

    மும்பை:

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 578 ரன்கள் எடுக்கவிட்டது இந்திய அணிக்கு பாதகமாகிவிட்டது.

    இந்த டெஸ்டில் இந்திய அணியில் ரோகித்சர்மா, துணை கேப்டன் ரஹானே ஆகியோர் சொதப்பினர். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே முதல் இன்னிங்சில் ஒரு ரன் எடுத்தும், 2-வது இன்னிங்சில் டக்-அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தார்.

    ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் மெல்போர்ன் டெஸ்டில் ரஹானே சதம் அடித்தார். கோலி நாடு திரும்பியதால் பொறுப்பை ஏற்ற ரஹானே தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

    ஆனால் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் ரஹானேவின் மோசமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருப்பதாக அவர் மீது இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் கூறும்போது, ‘‘கேப்டனாக இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக ரஹானேவை நான் பார்க்கும்போது, அவர் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த பிறகு 27 (நாட் அவுட்), 22, 4, 37, 24, 1 மற்றும் 0 ஆகிய ரன்களை எடுத்துள்ளார். சதம் அடித்த பிறகு சிறந்த வீரர்கள் அந்த பார்மை எடுத்து செல்கிறார்கள். சில வீரர்கள் அந்த பார்மில் இருந்து வந்துவிடுகிறார்கள்’’ என்று கூறி உள்ளார்.

    ரஹானே மீது விமர்சனம் எழுந்தாலும் அவருக்கு கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியில் புஜாராவும் ரஹானேவும் எங்களது மிக முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஆவர். அவரது திறமைகளை நாங்கள் நம்புகிறோம். அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் என்றார்.

    இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கடைசியாக 7 இன்னிங்சில் 64 ரன் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில்தான் நடக்கிறது. இப்போட்டி வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    “23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 10-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) நினா ஸ்டோலுனோவிக் (செர்பியா) மோதினர்.

    அதில் செரீனா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அன்சீ 6-2, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் அலிஸ் கார்னெட்டை தோற்கடித்தார்.

    9-ம் நிலை வீராங்கனை பெட்ரோ குவிட்டோலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கோர்ஸ்டியா (ரூமேனியா) 6-4, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினாவின் ஸ்வார்ட்ஸ்மேன் -முல்லர் (பிரான்ஸ்) மோதினர். இதில் ஸ்வார்ட்ஸ்மேன் 6-2, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    முதல்பாதியில் பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்துக்கு போதுமான நெருக்கடியை கொடுக்கவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    சென்னை:

    தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    முதல்பாதியில் பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்துக்கு போதுமான நெருக்கடியை கொடுக்கவில்லை. சில ரன்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே சொன்னது போல் ஆடுகளம் மெதுவாக காணப்பட்டதால் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்கவில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுத்து விட்டனர். முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவித்த அவர்களுக்கே எல்லா பாராட்டும் சேரும். அது மட்டுமின்றி களத்தில் எங்களது உத்வேகத்தை வெளிப்படுத்தும் உடல்அசைவும், தீவிரத்தன்மையும் முழுமையாக இல்லை. ஆனால் 2-வது இன்னிங்சில் ஓரளவு பரவாயில்லை. அணியில் இடம் பெற்ற 4-வது மற்றும் 5-வது பந்து வீச்சாளரின் (வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம்) பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அஸ்வினும், வேகப்பந்து வீச்சாளர்களும் தொடர்ந்து சீராக பந்து வீசினர். அவர்களை போல் சுந்தரும், நதீமும் சிக்கனமாக பந்து வீசியிருந்தால் கூடுதல் அழுத்தம் கொடுத்து 80-90 ரன் களை குறைத்திருக்கலாம். இதே போல் முதல் இன்னிங்சில் நாங்கள் 80 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தாலும் ஆட்டம் ஏறக்குறைய சரிசம வாய்ப்பில் இருந்திருக்கும். முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த போதே இந்த டெஸ்ட் அவர்கள் பக்கம் சென்று விட்டதாக நினைக்கிறேன்.

    இந்த டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட பந்தின் தரம் (எஸ்.ஜி. வகை பந்து) திருப்திகரமாக இல்லை. 60 ஓவர்களுக்கு பிறகு அதன் தன்மையை இழந்து விட்டது. ஒரு டெஸ்ட் அணியாக இதற்கு முன்பு இத்தகைய அனுபவத்தை சந்தித்ததில்லை. இருப்பினும் தோல்விக்கு இதை காரணமாக சொல்லமாட்டேன். எங்களை விட இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது என்பதே உண்மை. வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி.

    இவ்வாறு கோலி கூறினார்.

    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் .டாஸ் ஜெயித்தது முக்கியமானது. இருப்பினும் நாங்கள் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். வெளிநாட்டு மண்ணில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதம். கடைசி நாளில் ஆண்டர்சனின் வியப்புக்குரிய பந்துவீச்சு திருப்பத்தை ஏற்படுத்தியது’ என்றார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், சோபியா கெனின் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    மெல்போர்ன்:

    ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-3, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் செர்பியாவின் லாஸ்லோ ஜெரேவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 63-ம் நிலை வீரரான கனடாவின் வாசெக் போஸ்பிசிலை விரட்டியடித்து தொடர்ச்சியாக 15-வது வெற்றியை பதிவு செய்தார்.

    ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஒரே இந்தியரான தரவரிசையில் 144-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் 2-6, 5-7, 3-6 என்ற நேர்செட்டில் 73-ம் நிலை வீரரான லிதுவேனியாவின் ரிக்கார்டஸ் பெரன்கிஸ்சிடம் தோற்று வெளியேறினார்.

    மற்ற ஆட்டங்களில் பெரேட்டினி (இத்தாலி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பாபியோ போக்னினி (இத்தாலி), கச்சனோவ் (ரஷியா), போர்னா கோரிச் (குரோஷியா) உள்ளிட்டோர் வெற்றி கண்டனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான சோபியா கெனின் (அமெரிக்கா) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்லிசை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் ‘நம்பர் ஒன் புயல்’ ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-0, 6-0 என்ற நேர்செட்டில் 82-ம் நிலை வீராங்கனை டாங்கா கோவினிக்கை (மான்ட்னெக்ரோ) ஊதித் தள்ளினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 44 நிமிடமே தேவைப்பட்டது. அதே சமயம் 2 முறை சாம்பியனான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த போட்டியின் போது சுவாச பிரச்சினை காரணமாக அஸரென்கா மைதானத்தில் சிகிச்சை பெற்று விளையாடினார். இதே போல் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா காயத்தால் பாதியில் விலகினார்.

    மற்ற ஆட்டங்களில் ஸ்விடோலினா (உக்ரைன்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கோகோ காப் (அமெரிக்கா), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கோன்டாவிட் (எஸ்தோனியா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோர் தங்களது முதல்தடையை வெற்றிகரமாக கடந்தனர்.
    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 75 டெஸ்டில் 386 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவருக்கு இந்த போட்டி 75-வது டெஸ்டாகும். 75 டெஸ்டில் அஸ்வின் 386 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    அவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெய்னை முந்தினார். ஸ்டெய்ன் 75 டெஸ்டில் 383 (142 இன்னிங்ஸ்) விக்கெட் கைப்பற்றி இருந்தார். அஸ்வின் 140 இன்னிங்சில் 386 விக்கெட்டை தொட்டார்.

    இலங்கையை சேர்ந்த முரளீதரன் 75-வது டெஸ்டில் 420 விக்கெட்டை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்து சாதித்தார்.

    அஸ்வின் 28-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களில் இலங்கையை சேர்ந்த ஹெராத்துடன் இணைந்து 3-வது இடத்தை பிடித்தார். முரளீதரன் 75 டெஸ்டில் 35 முறையும், ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து) 33 முறையும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். ஏற்கனவே மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய மைதானங்களில் 3 தடவை 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி இருந்தார்.

    அஸ்வின் ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து தொடக்க வீரரை பர்ன்ஸ்சை அவுட் செய்தார். இதன் மூலம் 100 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கு முன்பு 1907-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெர்ட் ஓக்ளர் என்ற சுழற்பந்து வீரர் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

    ×