என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் உலக கோப்பை நடத்தும் இந்திய அணி மிகவும் வலுவானதாக உள்ளது. இதனால் உலக கோப்பை வெல்ல அந்த அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இன்றுள்ள சூழலில் இந்திய அணி மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

    அகமதாபாத்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை ஆறு 20 ஓவர் உலக கோப்பை நடந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் ஒருமுறையும் உலக கோப்பையை வென்றுள்ளன.

    கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற அதிகமான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி அகமதாபாத்தில் பயிற்சி பெற்று வருகிறது. பயிற்சிக்கு பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை நடத்தும் இந்திய அணி மிகவும் வலுவானதாக உள்ளது. இதனால் உலக கோப்பை வெல்ல அந்த அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இன்றுள்ள சூழலில் இந்திய அணி மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பையில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடும். அதே நேரத்தில் இந்தியா 3 வடிவிலான போட்டியிலும் வளமாக இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு கூடுதலான வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்தியாவில் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுவதால் எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ராகுல் திவேதியாவும் உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடுவது சந்தேகமே.
    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    வருகிற 12-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 20 ஓவர் போட்டிகள் உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் நடக்கிறது.

    20 ஓவர் போட்டியில் தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுவது சந்தேகமாகும்.

    நடராஜனுக்கு முழங்கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு முன்பு அவர் காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகமே. வேகப்பந்து வீரரான நடராஜன் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் தொடரில் 6 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

    சுழற்பந்து வீரரான வருண் சக்கரவர்த்தி உடல் தகுதி சோதனையில் தோல்வி அடைந்தார். காயத்தில் இருந்து குணமடைந்து அவர் முழு உடல் தகுதி பெறவில்லை.

    அவர் ஏற்கனவே காயம் காரணமாக ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் உடல் தகுதி இல்லாத காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருண் சக்கரவர்த்தி கடந்த ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ராகுல் திவேதியாவும் உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடுவது சந்தேகமே.

    வருண் சக்கரவர்த்தி இடத்தில் மும்பை இந்தியன் அணி வீரரான ராகுல் சாகர் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. அவர் 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார்.
    விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் மும்பை அணியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை - சவுராஷ்டிரா அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.

    இறுதியில், மும்பை அணி 41.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மும்பை அணியில் இடம் பெற்ற பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கடந்த 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 183 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனையாக இருந்தது.

    இதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற விராட் கோலி உதவினார்.

    இதேபோல், தோனி மற்றும் விராட் கோலி சாதனையை பிரித்வி ஷா முறியடித்து விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணி அரையிறுதி செல்ல வழிநடத்தி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ஏ.டி.கே. மோகன் பகான்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் அரைஇறுதியின் 2-வது சுற்றில் நேற்றிரவு மல்லுகட்டின.

    வெற்றி பெறும் அணிக்கு இறுதி வாய்ப்பு என்பதால் இரு அணி வீரர்களும் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடினர். இருப்பினும் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகானின் ஆதிக்கமே சற்று ஓங்கியது. 38-வது நிமிடத்தில் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்து ஏ.டி.கே. அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி தந்தார். 68-வது நிமிடத்தில் மற்றொரு ஏ.டி.கே. வீரர் மன்விர் சிங் இரு பின்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி சூப்பராக கோல் போட்டார். பதிலடி கொடுக்க போராடிய கவுகாத்தி அணி 74-வது நிமிடத்தில் கோல் திருப்பியது. கோல் கீப்பர் தடுத்து திரும்பி வந்த பந்தை அந்த அணியின் சுஹைர் தலையால் முட்டி கோலாக்கினார். 81-வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. ஆனால் கவுகாத்தி அணியின் லூயிஸ் மச்சடோ பந்தை கோல் கம்பத்திற்கு வெளியே அடித்து வீணாக்கி விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி இருந்தால் ஆட்டத்தில் நீயா-நானா? என்ற இழுபறி நிலை உருவாகியிருக்கும். முடிவில் ஏ.டி.கே. மோகன் பகான் 2-1 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது. முதலாவது ஆட்டத்தின் முடிவையும் சேர்த்து ஏ.டி.கே. மோகன் பகான் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    வருகிற 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எப்.சி.-யை எதிர்கொள்கிறது.
    ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் 61 வயதான ஜோச்சிம் லோ 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
    பெர்லின்:

    ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் 61 வயதான ஜோச்சிம் லோ 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் ஜெர்மனி அணி 2014-ம் ஆண்டில் உலக கோப்பை போட்டியில் மகுடம் சூடியது. ஆனால் 2018-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஜெர்மனி லீக் சுற்றுடன் வெளியேறி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பயிற்சியாளர் பதவியை விட்டு விலகும்படி ஜோச்சிம் லோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய அவர் பதவியை துறக்கவில்லை.

    இந்த நிலையில் வரும் ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்க உள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியுடன் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக ஜோச்சிம் லோ அறிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை அவரது ஒப்பந்த காலம் இருக்கும் நிலையில் ஓராண்டுக்கு முன்பே விலகுகிறார். அவரது முடிவை ஜெர்மனி கால்பந்து சங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ‘தேசத்தின் சிறந்த கால்பந்து வீரர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிகச்சிறந்த அற்புதமான வெற்றிகளும் கிடைத்திருக்கின்றன. வேதனையான தோல்விகளையும் சந்தித்து இருக்கிறேன். ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும் வகையில் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு முடிக்க எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்று ஜோச்சிம் லோ குறிப்பிட்டார்.

    ஜோச்சிம் லோவின் 15 ஆண்டுகால பயிற்சியின் கீழ் ஜெர்மனி அணி இதுவரை 189 சர்வதேச போட்டிகளில் விளையாடி 120-ல் வெற்றி, 38-ல் டிரா, 31-ல் தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்து வீசியதுடன், ஒரு சதமும் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார் அஷ்வின்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அஷ்வின் அபாரமாக விளையாடினார். பிப்ரவரியில் நடைபெற்ற 3 போட்டியில் 24 விக்கெட் வீழ்த்தியதுடன், 176 ரன்களும் அடித்தார். அதில் சென்னையில் விளையாடிய முக்கியமான போட்டியில் சதம் விளாசினார். இதனால் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருதை அஷ்வின் தட்டிச் சென்றுள்ளார்.

    ஜனவரி மாதத்திற்கான விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே விருதுகளை கைப்பற்றியுள்ளனர்.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி சவுராஷ்டிராவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை - சவுராஷ்டிரா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த சுவராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது. சிராக் ஜானி ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் சவுராஷ்டிரா அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். பிரித்வி ஷா 29 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 67 பந்தில் சதம் விளாசினார். ஜெய்ஸ்வால் 104 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.

    பிரித்வி ஷா 123 பந்தில் 185 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை 41.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பிரித்வி ஷா ஏற்கனவே புதுச்சேரிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 227 ரன்கள் குவித்து உலக சாதனைப்படைத்திருந்தார். டெல்லிக்கு எதிராக 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியா தொடரின்போது மோசமாக விளையாடியதால் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது உள்ளூர் போட்டியில் அசத்தி வருகிறார்.
    தொடக்க வீராங்கனை மந்தனா ஆட்டமிழக்காமல் 80 ரன்களும், ராவத் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், ஜுலான் கோஸ்வாமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டியில் செய்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் 157 ரன்னில் சுருண்டனர். இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி 10 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மான்சி ஜோஷி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ராஜேஸ்வர் கெய்க்வாரட் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை மந்தனா- அடுத்து வந்த ராவத் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவிக்க இந்திய அணி 28.4 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மந்தனா ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 80 ரன்களும், ராவத் 89 பந்தில் 62 ரன்கள் எடுத்தனர். மந்தனா 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசினார்.
    கொரோனா பாதிப்பால் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட பஜ்ரங் பூனியா முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார்.
    ரோம்:

    ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைபிரிவின் இறுதிப்போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, மங்கோலியாவின் துல்கா துமுர் ஒசிரை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் 0-2 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த பஜ்ரங் பூனியா கடைசி 30 வினாடி இருக்கையில் எதிராளியை மடக்கி 2 புள்ளிகள் எடுத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.

    கொரோனா பாதிப்பால் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட பஜ்ரங் பூனியா முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார். அத்துடன் இந்த வெற்றியின் மூலம் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்துள்ளார். ஏற்கனவே இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (53 கிலோ) தங்கம் வென்று இருந்தார். இந்த போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்தை கைப்பற்றியது.
    கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி 3-ந் தேதி ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் அரியணையில் ஏறிய ஜோகோவிச் அது முதல் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.
    நியூயார்க்:

    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்.

    உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி 3-ந் தேதி ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் அரியணையில் ஏறிய ஜோகோவிச் அது முதல் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.

    18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கும் 33 வயதான ஜோகோவிச் 2011-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி முதல்முறையாக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறினார். தற்போது அவர் 5-வது முறையாக முதலிடத்தில் இருக்கிறார். 5 வெவ்வேறு காலகட்டங்களில் அவர் மொத்தம் 311 வாரங்கள் முதலிடத்தில் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    48 ஆண்டு கால உலக தரவரிசை வரலாற்றில் இதற்கு முன்பு 39 வயதான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மொத்தம் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜோகோவிச் நேற்று தகர்த்தார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ததால் பெடரர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பெடரர் தோகாவில் நேற்று தொடங்கிய கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் மூலம் மீண்டும் களம் திரும்புகிறார்.

    ஆண்டின் இறுதியில் அதிக முறை நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்த வீரர்கள் பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (இருவரும் தலா 6 முறை) ஆகியோர் இணைந்து முதலிடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தை பிடித்து இருப்பது குறித்து ஜோகோவிச் கருத்து தெரிவிக்கையில், ‘டென்னிஸ் ஜாம்பவான்களின் பாதையில் நானும் பயணிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாம்பவான்களின் வரிசையில் நானும் இடம் பிடிக்க வேண்டும் என்று இளம் வயதில் கண்ட கனவு தற்போது உறுதியாகி இருக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் முழுமையான ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டால் எல்லாவற்றையும் சாத்தியமாக்கலாம்’ என்றார்
    இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
    ஆன்டிகுவா:

    இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.

    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 9.3 ஓவர்களில் அந்த அணி 46 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குணதிலகா 9 ரன்னிலும், டிக்வெல்லா 4 ரன்னிலும், பதும் நிசங்கா 5 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு ஆஷென் பந்தரா, தினேஷ் சண்டிமாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமால் 46 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 54 ரன்னும், ஆஷென் பந்தரா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பாபியன் ஆலென், கெவின் சின்கிளைர், ஜாசன் ஹோல்டர், ஒபெட் மெக்கா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், அந்த அணியின் வீரர்கள் அடித்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் ஒரு ஓவரில் பாபியன் ஆலென் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.

    19 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாசன் ஹோல்டர் 14 ரன்னும் (23 பந்து, ஒரு சிக்சர்), பாபியன் ஆலென் 21 ரன்னும் (6 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிமோன்ஸ் 26 ரன்னிலும், இவின் லீவிஸ் 21 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும் கேப்டன் பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

    இலங்கை அணி தரப்பில் லக்‌ஷன் சண்டகன் 3 விக்கெட்டும், டி சில்வா, சமீரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அதிரடியாக 21 ரன்கள் திரட்டியும் ஆல்-ரவுண்டராக ஜொலித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் பாபியன் ஆலென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நாளை (இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு) நடக்கிறது.
    சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
    புதுடெல்லி:

    பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள கேஸ்டில்லோனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 69 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று இருக்கும் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 1-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

    இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ இறுதி சுற்றில் ஆசிய சாம்பியனான இந்திய வீராங்கனை பூஜா ராணி 0-5 என்ற கணக்கில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான நவோமி கிரஹாமிடம் (அமெரிக்கா) வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். 57 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஜாஸ்மின் 0-5 என்ற கணக்கில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான இர்மா தெஸ்டாவிடம் (இத்தாலி) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 8 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை அள்ளியது.
    ×