என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
    ஆன்டிகுவா:

    இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.

    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 9.3 ஓவர்களில் அந்த அணி 46 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குணதிலகா 9 ரன்னிலும், டிக்வெல்லா 4 ரன்னிலும், பதும் நிசங்கா 5 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு ஆஷென் பந்தரா, தினேஷ் சண்டிமாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமால் 46 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 54 ரன்னும், ஆஷென் பந்தரா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பாபியன் ஆலென், கெவின் சின்கிளைர், ஜாசன் ஹோல்டர், ஒபெட் மெக்கா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், அந்த அணியின் வீரர்கள் அடித்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் ஒரு ஓவரில் பாபியன் ஆலென் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.

    19 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாசன் ஹோல்டர் 14 ரன்னும் (23 பந்து, ஒரு சிக்சர்), பாபியன் ஆலென் 21 ரன்னும் (6 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிமோன்ஸ் 26 ரன்னிலும், இவின் லீவிஸ் 21 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும் கேப்டன் பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

    இலங்கை அணி தரப்பில் லக்‌ஷன் சண்டகன் 3 விக்கெட்டும், டி சில்வா, சமீரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அதிரடியாக 21 ரன்கள் திரட்டியும் ஆல்-ரவுண்டராக ஜொலித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் பாபியன் ஆலென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நாளை (இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு) நடக்கிறது.
    சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
    புதுடெல்லி:

    பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள கேஸ்டில்லோனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 69 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று இருக்கும் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 1-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

    இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ இறுதி சுற்றில் ஆசிய சாம்பியனான இந்திய வீராங்கனை பூஜா ராணி 0-5 என்ற கணக்கில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான நவோமி கிரஹாமிடம் (அமெரிக்கா) வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். 57 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஜாஸ்மின் 0-5 என்ற கணக்கில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான இர்மா தெஸ்டாவிடம் (இத்தாலி) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 8 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை அள்ளியது.
    டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி. இந்திய அணிக்கு 2 உலக கோப்பைகளை வென்று பெருமை சேர்த்தவர் டோனி. 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.

    மேலும் டோனி தலைமையில் 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஐ.சி.சி. நடத்தும் அனைத்து தொடர்களின் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் டோனி ஆவார்.

    கேப்டன் பதவி மட்டு மல்லாமல் பேட்டிங்கிலும் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 2005-ல் அறிமுகமான அவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.

    இந்த நிலையில் டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    2007-ல் இந்திய அணி இங்கிலாந்து சென்றது நினைவில் இருக்கிறது. அப்போது ராகுல்டிராவிட்தான் கேப்டன். அப்போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். டிராவிட் என்னை சந்தித்தார்.

    இந்திய அணியை வழி நடத்த முடியாதது பற்றி என்னிடம் அவர் தெரிவித்தார். கேப்டன் பொறுப்பு பேட்டிங்கை பாதிப்பது குறித்தும் தெரிவித்தார். இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து தெண்டுல்கரிடம் அணியை வழிநடத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். இருவரும் (தெண்டுல்கர், டிராவிட்) அணியை வழி நடத்த விரும்பாவிட்டால் என்ன செய்வது என்று தெண்டுல்கரிடம் கேட்டேன்.

    எம்எஸ் டோனி- சரத்பவார்

    இந்திய அணியை வழிநடத்துவதற்கு நம்மிடம் மேலும் ஒரு வீரர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை எம்.எஸ்.டோனி என்றார் தெண்டுல்கர். இதற்கு பிறகு டோனியிடம் கேப்டன் பதவியை வழங்கினோம்.

    இவ்வாறு சரத்பவார் கூறினார்.

    டோனி முதலில் 20 ஓவர் போட்டிக்கு கேப்டன் ஆனார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி, டெஸ்ட்டுக்கு கேப்டனாக இருந்தார். 2018 வரை அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தார்.

    டோனி தலைமையில் இந்திய அணி 72 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 41-ல் வெற்றி, 28-ல் தோல்வி கிடைத்தது. ஒரு ஆட்டம் டை ஆனது. 2 போட்டி முடிவில்லை.

    200 ஓருநாள் போட்டியில் 110-ல் வெற்றி கிடைத்தது. 74 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. 5 ஆட்டம் டையில் முடிந்தது. 11 ஆட்டம் முடிவில்லை.

    டோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டில் விளையாடி உள்ளது. இதில் 27 போட்டியில் வெற்றி கிடைத்தது. 18-ல் தோல்வி ஏற்பட்டது. 15 ஆட்டம் டிரா ஆனது.

    மார்டின் குப்திலின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி 20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.
    வெலிங்டன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று தொடர் சமனிலையில் இருந்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. வேட் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்கள் குவித்தார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 36 ரன்கள் எடுத்தார்.
     
    அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 36 ரன்னும், பிலிப்ஸ் 34 ரன்னும் எடுத்துள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியவுக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.

    ஆட்ட நாயகன் விருது மார்டின் கப்திலுக்கும், தொடர் நாயகன் விருது இஷ் சோதிக்கும் அளிக்கப்பட்டது.
    2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு முதல் முறையாக சுவிஸ் ஓபன் போட்டியில் தான் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
    பாசல்:

    சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில், மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். 

    நடப்பு உலக சாம்பியனான பி.வி.சிந்து, துவக்கம் முதலே கரோலினாவின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். முதல் செட்டை 12-21 என பறிகொடுத்த சிந்து, இரண்டாவது செட் ஆட்டத்தில் மேலும் பின்தங்கினார். 5-21 என அந்த செட்டையும் இழக்க, பி.வி.சிந்துவின் கனவு தகர்ந்தது. 35 நிமிடங்களில் சிந்துவை வீழ்த்திய கரோலினா சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். 

    2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு முதல் முறையாக இந்த போட்டியில் தான் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். கரோலினாவிடம் சிந்து தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வி அடைந்துள்ளார். இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். 
    மார்ச் 8-ந்தேதி (நாளை) உலக மகளிர் தினம் கொண்டாடும் நிலையில், விளையாட்டுத்துறையில் தற்போது சாதித்து வரும் இந்திய வீராகனைகளை நினைவு கூர்வோம்...
    இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 37), சர்வதேச அரங்கில் தொடர் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். 2012-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். வரும் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இது அவர் பங்கேற்கும் இரண்டாவது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டி ஆகும்.

    சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் தங்கள் அனுபவங்களை மற்ற வீரர்களுக்கு பகிர்ந்து கொள்வதுடன், குத்துச்சண்டையை பிரபலப்படுத்தும் வகையிலும், ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும்.

    19 நாட்களில் 5 தங்கம் வென்ற ஹிமா தாஸ்

    ஹிமா தாஸ்

    வளர்ந்து வரும் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் 19 நாட்களில் 5 சர்வதேச தங்கபதக்கத்தை வென்று சாதனைப்படைத்தவர். 21 வயதாகும் இவர் ஏற்கனவே பல விருதுகளை வென்றவர். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஹிமா தாஸை, டிஎஸ்பி-யாக நியமனம் செய்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டுள்ளார். பணி நியமனம் பெற்ற மேடையில் பேசிய ஹிமா தாஸ், காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு நிறைவேறிவிட்டதாக கூறினார். தன்னை காவல்துறை அதிகாரியாக பார்க்க வேண்டும் என்பது தனது அம்மாவின் ஆசைகூட என்றும் அவர் கூறினார்.

    ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிவி சிந்து

    பிவி சிந்து

    இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண் வீராங்கனைகளில் ஒருவர் பி.வி. சிந்து. 2016-ம் அண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஒலிம்பிக் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

    ஆனால், துரதிருஷ்டவசமாக ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொண்டு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மேலும், 2019 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அசத்தினார். 2017 ஏப்ரலில் உலதரவரிசையில் 2-வது இடத்தை பிடித்து சாதனைப்படைத்தார். 2018 காமன்வெல்த், 2018 ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சாய்னா நேவால்

    சாய்னா நேவால்

    இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.

    உலகின் நம்பர் பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்தவர். 24 சர்வதேச தொடர்களை வென்றவர். இதில் 11 சூப்பர் சீரிஸ் டைட்டில் அடங்கும்.

    2012-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். 2015-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கமும், 2017-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த்தில் ஒற்றையர் பிரிவில் இரண்டு முறை தங்கபதக்கமும், கலப்பு அணியில் ஒரு முறையும் தங்கம் வென்றுள்ளார். ஆசிய போட்டிகளில் இரண்டு முறையும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று முறையும் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
    ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்.9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

    கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    அகமதாபாத் கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட் சதம் விளாச, வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னில் ஆட்டமிழக்காமல் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
    அகமதாபாத் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. தொடரை கைப்பற்றிய பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘‘சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் தோல்வியில் இருந்து மீண்டு வந்து தொடரை வென்ற விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. முதலாவது டெஸ்ட் தோல்வியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது.

    அதன்பிறகு பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் மிகவும் தீவிரத்துடன் செயல்பட்டு எழுச்சி பெற்றிருக்கிறோம். கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட்- வாஷிங்டன் சுந்தரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அக்‌சர் பட்டேலும் நன்றாக ஆடினார். தொடரை வெல்வது மகிழ்ச்சிதான். ஆனால் எப்போதும் முன்னேற்றம் காண சில விஷயங்கள் இருக்கிறது.

    அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 6-7 ஆண்டுகளாக எங்களது நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அவரைத்தான் அதிகம் நம்பி இருக்கிறோம். முதலாவது டெஸ்டில் தோற்ற பிறகு ரோகித் சர்மா 2-வது டெஸ்டில் அடித்த சதம் சரிவில் இருந்து மீள உதவியது. அத்தகைய ஆடுகளத்தில் 150 ரன்கள் என்பது, பேட்டிங் ஆடுகளத்தில் 250 ரன்கள் எடுப்பதற்கு சமமானது. தொடர் முழுவதும் அவரது இன்னிங்ஸ் முக்கியமானதாக அமைந்தது.

    இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்று விட்டதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் இதுவே எங்களுக்கு கவனச்சிதறலாக இருந்தது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளோம்’’ என்றார்.
    அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் 317 ரன் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் பகல்- இரவாக நடந்த 3-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    அகமதாபாத்தில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

    2012-13-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. கடைசியாக 2012-13-ல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    அதன்பிறகு விளையாடிய தொடர்களில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா சாதித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கிலும் (2012-13), வெஸ்ட் இண்டீசை 2-0 என்ற கணக்கிலும் (2013-14), தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கிலும் (2015-16), நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கிலும் (2016-17), இங்கிலாந்தை 4-0 என்ற கணக்கிலும் (2016-17), வங்காளதேசத்தை 1-0 என்ற கணக்கிலும் (2016-17), ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கிலும் (2016-17), வீழ்த்தியது.

    அதைத்தொடர்ந்து இலங்கையை 1-0 என்ற கணக்கிலும் (2017-18), ஆப்கானிஸ்தானை 1-0 என்ற கணக்கிலும் (2018), வெஸ்ட் இண்டீசை 2-0 என்ற கணக்கிலும் (2018-19), தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கிலும் (2019-20), வங்காளதேசத்தை 2-0 என்ற கணக்கிலும் (2019-20), தற்போது இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கிலும் (2020-21) தோற்கடித்தது.

    அதாவது ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளை சொந்த மண்ணில் 2 முறையும், நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளை தலா ஒரு தடவையும், விழ்த்தியது.

    ஆஸ்திரேலியா அணி 2 தடவை அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் இதை நிகழ்த்தியிருந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை வென்று சாதித்துள்ளது.
    ஐபிஎல் போட்டிக்கான இடங்கள் மற்றும் தேதியை இறுதி செய்வதற்காக ஆட்சி மன்ற குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது.
    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை நடத்த உத்தேச அளவில் முடிவு செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

    அடுத்த வாரம் நடக்கும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் போட்டிக்கான இடங்கள் மற்றும் தேதி இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டிகள் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடைபெறும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.
    2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.
    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டை சந்தித்தார். 43 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-10 என்ற நேர்செட்டில் பிளிச்பெல்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 13-21, 19-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகம் ஆனார்.
    ஆமதாபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 5 ஆட்டங்கள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. தனது அறிமுக தொடரிலேயே கவாஸ்கர் 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1987-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவர் 125 டெஸ்டில் ஆடி 34 சதம் உள்பட 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டியில் விளையாடி 3,092 ரன்களும் எடுத்துள்ளார்.

    71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நினைவு பரிசாக தொப்பியை வழங்கி கவுரவித்தார். முன்னதாக கவாஸ்கர் ஸ்டேடியத்தில் ‘கேக்’ வெட்டி சிறப்பித்தார். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். ‘நான் அவரது ஆட்டத்தை வியந்து பார்த்ததுடன் அவரை போன்று உருவாக முயற்சித்தேன். அதில் ஒருபோதும் மாற்றமில்லை. அவர் தான் என்றும் எனது கதாநாயகன்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
    ×