search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேரி கோம்
    X
    மேரி கோம்

    உலக மகளிர் தினம்: விளையாட்டில் சாதித்து வரும் இந்திய வீராங்கனைகள்

    மார்ச் 8-ந்தேதி (நாளை) உலக மகளிர் தினம் கொண்டாடும் நிலையில், விளையாட்டுத்துறையில் தற்போது சாதித்து வரும் இந்திய வீராகனைகளை நினைவு கூர்வோம்...
    இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 37), சர்வதேச அரங்கில் தொடர் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். 2012-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். வரும் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இது அவர் பங்கேற்கும் இரண்டாவது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டி ஆகும்.

    சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் தங்கள் அனுபவங்களை மற்ற வீரர்களுக்கு பகிர்ந்து கொள்வதுடன், குத்துச்சண்டையை பிரபலப்படுத்தும் வகையிலும், ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும்.

    19 நாட்களில் 5 தங்கம் வென்ற ஹிமா தாஸ்

    ஹிமா தாஸ்

    வளர்ந்து வரும் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் 19 நாட்களில் 5 சர்வதேச தங்கபதக்கத்தை வென்று சாதனைப்படைத்தவர். 21 வயதாகும் இவர் ஏற்கனவே பல விருதுகளை வென்றவர். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிற்கு தகுதி பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஹிமா தாஸை, டிஎஸ்பி-யாக நியமனம் செய்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டுள்ளார். பணி நியமனம் பெற்ற மேடையில் பேசிய ஹிமா தாஸ், காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு நிறைவேறிவிட்டதாக கூறினார். தன்னை காவல்துறை அதிகாரியாக பார்க்க வேண்டும் என்பது தனது அம்மாவின் ஆசைகூட என்றும் அவர் கூறினார்.

    ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிவி சிந்து

    பிவி சிந்து

    இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண் வீராங்கனைகளில் ஒருவர் பி.வி. சிந்து. 2016-ம் அண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஒலிம்பிக் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

    ஆனால், துரதிருஷ்டவசமாக ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொண்டு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மேலும், 2019 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அசத்தினார். 2017 ஏப்ரலில் உலதரவரிசையில் 2-வது இடத்தை பிடித்து சாதனைப்படைத்தார். 2018 காமன்வெல்த், 2018 ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சாய்னா நேவால்

    சாய்னா நேவால்

    இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.

    உலகின் நம்பர் பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்தவர். 24 சர்வதேச தொடர்களை வென்றவர். இதில் 11 சூப்பர் சீரிஸ் டைட்டில் அடங்கும்.

    2012-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். 2015-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கமும், 2017-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த்தில் ஒற்றையர் பிரிவில் இரண்டு முறை தங்கபதக்கமும், கலப்பு அணியில் ஒரு முறையும் தங்கம் வென்றுள்ளார். ஆசிய போட்டிகளில் இரண்டு முறையும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று முறையும் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
    Next Story
    ×