என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்காவில் ஆடியதை போன்று தான் கோலி நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார் என முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அதிருப்தி அடைந்துள்ளார்.
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அவர் 4 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    இந்த நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அதிருப்தி அடைந்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் ஆடியதை போன்று தான் கோலி நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார். ஷார்ட் பந்துகளை எதிர் கொள்ளும் போது அவர் கவனமுடன் ஆட வேண்டும். அவரது மோசமான ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    இனி வரும் காலங்களில் இதுபோன்று விளையாடாமல் இருக்குமாறு அவரை எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

    நேற்றைய போட்டியில் 8 ரன் எடுத்தது மூலம் விராட் கோலி சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். 96 இன்னிங்சில் அவர் 5,002 ரன்னை இந்திய மண்ணில் எடுத்துள்ளார். சராசரி 59.54 ஆகும்.

    சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்னை தொட்ட 4-வது விராட் கோலி ஆவார். தெண்டுல்கர் 6,976 ரன்னுடன் முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 5,406 ரன்னுடன் 2-வது இடத்திலும், ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 5,178 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    எகிப்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செனகல் அணி முதல் முறையாக ஆப்பிரிக்க கோப்பையை கைப்பற்றியது.
    ஆப்பிரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டி கேமரூனில் நடந்தது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் செனகல்-எகிப்து அணிகள் மோதின. ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. 
    கூடுதல் நேரத்திலும் இதே நிலையே நீடித்தது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் செனகல் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி முதல் முறையாக ஆப்பிரிக்க கோப்பையை கைப்பற்றியது.

    இதற்கு முன்பு செனகல் இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. 2002-ம் ஆண்டு கேமரூனிடனும், 2019-ல் அல்ஜீரியாவிடமும் தோற்று இருந்தது. தற்போது வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
    பெண்களுக்கான ஆசிய கால்பந்து போட்டியில் சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
    மும்பை:

    பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் நவிமும்பையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சீனா- தென்கொரியா அணிகள் மல்லுகட்டின. 

    விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் தென்கொரியா 2 கோல்கள் அடிக்க, பிற்பாதியில் எழுச்சி பெற்ற சீனா 68 மற்றும் 72-வது நிமிடங்களில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து வெற்றிக்குரிய கோலை அடிக்க இரு அணியினரும் வரிந்து கட்டி நின்றனர். 

    கடைசி நிமிடத்தில் சீனாவின் ஸியாவ் யுஸ் கோல் போட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவின் கனவை தகர்த்து 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. சீனா கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்த கோப்பையை வென்று இருந்தது. 

    இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் பல வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது நினைவு கூரத்தக்கது.

    96வது இன்னிங்ஸில் 5 ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலம் சச்சின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் கோலி 4 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 5 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி நேற்று படைத்தார்.

    ஒருநாள் போட்டிகளில் தனது 249வது இன்னிங்ஸை கோலி விளையாடினார். சொந்த மண்ணில் அவருக்கு இது 96வது  இன்னிங்ஸ். இதில் 5000 ரன்களை கடந்ததன் மூலம் சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

    சச்சின் தனது 121 இன்னிங்ஸ்களிலும்,  ஜாக் காலிஸ் 130 இன்னிங்ஸிலும் 
    5 ஆயிரம் ரன்களை எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 138 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டினார். 

    இதுவரை 100 இன்னிங்ஸ்களுக்குள் இந்த சாதனை படைத்த ஒரே பேட்ஸ்மேன் கோஹ்லிதான்.அதே நேரத்தில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி 4வது இடத்தில் உள்ளார். 

    ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 6976 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பாண்டிங் 5,521 ரன்கள் எடுத்தார்.  தென்ஆப்பிரிக்க மண்ணில் காலிஸ் 5186 ரன்கள் குவித்தார். இந்திய மண்ணில் கோஹ்லி இதுவரை 5002 ரன்கள் எடுத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொல்லார்டு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் தனது 100வது விக்கெட்டை கைப்பற்றினார்.
    அகமதாபாத்:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியினரின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கியது. அந்த அணியில் ஜெசன் ஹோல்டர் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார்.

    ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து இறங்கிய ஹோல்டர்- ஆலன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை கடந்தது.

    இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் பிரிசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், இஷான் கிஷணும் களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். இவர் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 60 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய விராட் கோலி 8 ரன்னிலும், இஷான் கிஷண் 29 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் அவுட்டாகினர்.

    தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இந்தியா 28 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 26 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

    மகாராஷ்டிரா ஓபன் டென்னிசி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் ஜோடி தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
    புனே:

    மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஆகியோரை எதிர்த்து விளையாடினர்.

    முதல் செட்டில் இந்திய ஜோடி தோற்றாலும், அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி வென்றது.

    இந்த இறுதிப்போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 44 நிமிடங்கள் நீடித்தது.  இதில், 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
    அகமதாபாத்:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கத்தில் பவுண்டரி அடிக்காத ஹோப் (8) சிராஜ் வீசிய 3-வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த பந்தும் பவுண்டரிக்கு விரட்டும் போது போல்ட் என்ற முறையில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த பிராவோ - கிங் ஜோடி பொறுமையுடன் விளையாடியது. இந்த ஜோடியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். ஓரே ஓவரில் இரண்டு (பிராவோ 18 - கிங் 13) பேரையும் வீழ்த்தி அசத்தினார். இதேபோல சாஹலும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிக்கோலஸ் பூரன் 18 ரன்னிலும் பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அடுத்து ஹோசைன் 0 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஹோல்டர் - அலன் ஜோடி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. பொறுப்புடன் ஆடிய ஹோல்டர் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியையும் வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். ஆலன் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சிறுது நேரத்திலேயே ஹோல்டரும் 57 ரன்னில் வெளியேறினார்.

    கடைசியில் 43.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் பிரிதிஷ் கிருஷ்ணா 2 விக்கெட்டும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ளார்.
    அகமதாபாத்:

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். தனது அபார பந்து வீச்சால் சர்வதேச அளவில் முன்னணி பந்து வீச்சாளராகத் திகழ்ந்து வருகிறார்.

    இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில பொலார்டு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் 60 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்தப் பட்டியலில் முகமது ஷமி 56 போட்டியிலும், பும்ரா 57 போட்டியிலும், குல்தீப் யாதவ் 58 போட்டியிலும், இர்பான் பதான் 59 போட்டியிலும் 100 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ராணுவ அதிகாரி. இவர் ஆயுதத் தொழிற்சாலையில் வெடிகுண்டு தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. இவரது தந்தை திரிலோக்சந்த். 

    இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் காசியாபாத் இல்லத்தில்புற்றுநோயால் இன்று காலமானார்.

    ரெய்னாவின் தந்தையின் மூதாதையர் கிராமம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவாரி என்பது குறிப்பிடத்தக்கது.
    1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஐ.சி.சி. உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

    1000 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்திய அணி வீரர்கள்

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் வாசிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார்.
    அகமதாபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 

    இந்திய அணி புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தொடரில் இருந்து ரோகித் சர்மா- பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணியின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா 2. இஷான் கிஷான் 3. விராட் கோலி 4. சூர்யகுமார் யாதவ் 5. ரிஷப் பண்ட் 6. ஷர்துல் தாகூர் 7. முகமது சிராஜ் 8. சாஹல் 9. வாசிங்டன் சுந்தர் 10. பிரசித் கிருஷ்ணா 11. தீபக் ஹூடா

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்

    1. ஷாய் ஹோப் 2. பிரான்டன் கிங் 3. டேரன் பிராவோ 4. நிகோலஸ் பூரன் 5. பொல்லார்ட் (கேப்டன்) 6. ஜாசன் ஹோல்டர் 7. அலென் 8. அல்ஷாரி ஜோசப் 9. கெமார் ரோச் 10. அகேல் ஹூசைன் 11. புரூக்ஸ்

    புரோ கபடி லீக் போட்டியில் டெல்லி அணி 57 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாட்னா 55 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
    பெங்களூர்:

    12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. நேற்று 3 ஆட்டங்கள் நடந்தது.

    முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- மும்பை அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 33-35 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. மும்பை அணி பெற்ற 6-வது வெற்றியாகும். தமிழ் தலைவாஸ் 5-வது தோல்வியை தழுவியது.

    2-வது ஆட்டத்தில் உ.பி.யோதா- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் உ.பி.யோதா 39-35 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 12-வது தோல்வி ஏற்பட்டது.

    கடைசி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 35-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது. அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். ஜெய்ப்பூர் அணிக்கு 7-வது தோல்வி கிடைத்தது.

    டெல்லி அணி 57 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாட்னா 55 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. பெங்களூர், அரியானா, மும்பை, உ.பி.யோதா ஆகிய அணிகள் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளன.

    தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 5 தோல்வி, 6 டையுடன் 45 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாட்னா- பெங்கால் (இரவு 7.30), பெங்களூர்- குஜராத் (இரவு 8.30), டெல்லி- உ.பி.யோதா (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.
    ×