என் மலர்
விளையாட்டு

அரியானா அணிக்கு 8-வது வெற்றி
புரோ கபடி லீக் போட்டி: அரியானா அணிக்கு 8-வது வெற்றி - ஜெய்ப்பூரை வீழ்த்தியது
புரோ கபடி லீக் போட்டியில் டெல்லி அணி 57 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாட்னா 55 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
பெங்களூர்:
12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. நேற்று 3 ஆட்டங்கள் நடந்தது.
முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- மும்பை அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 33-35 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. மும்பை அணி பெற்ற 6-வது வெற்றியாகும். தமிழ் தலைவாஸ் 5-வது தோல்வியை தழுவியது.
2-வது ஆட்டத்தில் உ.பி.யோதா- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் உ.பி.யோதா 39-35 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 12-வது தோல்வி ஏற்பட்டது.
கடைசி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 35-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது. அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். ஜெய்ப்பூர் அணிக்கு 7-வது தோல்வி கிடைத்தது.
டெல்லி அணி 57 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாட்னா 55 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. பெங்களூர், அரியானா, மும்பை, உ.பி.யோதா ஆகிய அணிகள் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளன.
தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 5 தோல்வி, 6 டையுடன் 45 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாட்னா- பெங்கால் (இரவு 7.30), பெங்களூர்- குஜராத் (இரவு 8.30), டெல்லி- உ.பி.யோதா (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.
Next Story






