என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தமிழக வேகப்பந்து வீரர் டி.நடரா ஜனை முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டி உள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் முக்கிய பங்கு வகித்து உள்ளார். அவர் 7 ஆட்டத்தில் 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்த சீசனில் யசுவேந்திர சாஹலுக்கு (ராஜஸ்தான்) அடுத்தபடியாக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார்.

    நடராஜனை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஐதராபாத் அணி தக்க வைத்து கொண்டது. பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

    இந்தநிலையில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடரா ஜனை முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காயத்தில் இருந்து மீண்டு ஐ.பி.எல்.லில் ஆடி வரும் நடராஜனின் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் யார்கர் ஸ்பெசலிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ஆனால் அவர் நன்றாக பிடித்து வீசுகிறார். காயத்தால் அவரை இந்திய அணி இழந்து இருந்தது. அவர் மீண்டும் போட்டி களத்தில் இருப்பார். 16 முதல் 20 ஓவர்கள் வரை பந்து வீசுவதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

    நடராஜன் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதை அவர் நோக்கமாக கொண்டுள்ளார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

    ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங் சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது.

    5-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 23 ரன்னில் வென்றது. 6-வது போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் 3 விக்கெட்டில் தோற்றது. 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    சி.எஸ்.கே. அணி 8-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் சி.எஸ்.கே. உள்ளது.

    பஞ்சாப்பிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மும்பைக்கு எதிராக டோனி சிறப்பாக விளையாடி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அந்தப் போட்டியில் சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அதை சரி செய்வது அவசியமாகும்.

    மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை அணியை மீண்டும் வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 ரன்கள் எடுத்தால் ஷிகர் தவான் புதிய சாதனை படைப்பார்.
    சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் புதிய மைல் கல்லை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர் ஐ.பி.எல். போட்டியில் 198 இன்னிங்சில் 5998 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 45 அரை சதமும் அடங்கும். இன்னும் 2 ரன் எடுத்தால் தவான் 6 ஆயிரம் ரன்னை தொடுவார். இந்த ரன்னை எடுக்கும் 2-வது வீரர் ஆவார். விராட் கோலி 207 இன்னிங்சில் 6402 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    ரோகித்சர்மா (5764), டேவிட் வார்னர் (5668), ரெய்னா (5528) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
    டென்னிஸ் தரவரிசையில் உலக அளவில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை போராடி வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    பெல்கிரேட்:

    செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மோதினர்.

    முதல் செட்டை ஆண்ட்ரே ரூப்லெவ் 6- 2 என எளிதில் வென்றார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சுதாரித்து ஆடிய ரூப்லெவ் 6-0 என கைப்பற்றினார்.

    இறுதியில், ரூப்லெவ் 6-2, 6-7(4), 6-0 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த போட்டி மொத்தம் இரண்டு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது. 
    நடப்பு ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 

    அடுத்து இறங்கிய மும்பை அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் நேற்று சமன் செய்தார். இருவரும் தலா 6 சதங்கள் அடித்துள்ளனர்.

    இவர்களைத் தொடர்ந்து, விராட் கோலி 5 சதமும், சுரேஷ் ரெய்னா 4 சதமும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் பொல்லார்டு, திலக் வர்மா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 

    மும்பை சார்பில் பொல்லார்டு, மெரிடித் தலா 2 விக்கெட் எடுத்தனர். டேனியல் சாம்ஸ், பும்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இஷான் கிஷண் 8 ரன்னிலும், ப்ரெவிஸ் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு கட்டத்தில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. திலக் வர்மா, பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
    திலக் வர்மா 38 ரன்னில் அவுட்டானார். பொல்லார்டு 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மும்பை அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது லக்னோ அணி பெறும் 5வது வெற்றியாகும். மும்பை அணி தொடர்ந்து 8வது தோல்வியை சந்தித்தது.
    வெற்றியின் முதல் மந்திரமானது குழுவாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற உணர்வில் உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
    பெங்களூரு:

    கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. கண்டீரவா ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    விளையாட்டு சக்தியானது இந்தியாவின் சக்தியை கூட்டுகிறது. விளையாட்டுத் துறையில் பெற்ற அங்கீகாரம் தேசத்தின் மதிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. 

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களின் முகத்தில் பதக்கம் வென்ற மகிழ்ச்சி மட்டுமல்லாமல், தேசத்துக்காக விளையாடிய மகிழ்ச்சியும் இருந்தது.

    கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்காகவோ, தங்கள் குடும்பத்துக்காகவோ அல்லது பல்கலைக் கழகங்களுக்காகவோ விளையாடுவதாக நினைக்காமல், நாட்டுக்காக விளையாடுவதாக நினைத்து விளையாடுங்கள்.

    வெற்றியின் முதல் மந்திரமானது குழுவாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற உணர்வில் உள்ளது. இதை நாம் விளையாட்டிலிருந்து கற்றுக்கொள்கிறோம். இந்த உத்வேகம் உங்கள் வாழ்க்கையில் முன்னேறவும், எதிர்காலத்தில் பதக்கங்களை வெல்லவும் உதவும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    துவக்க விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், கர்நாடக விளையாட்டுத் துறை அமைச்சர் நாராயண கவுடா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    பெங்களூரு:

    கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. கண்டீரவா ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது. 

    விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மல்லர்கம்பம் போன்ற உள்ளூர் விளையாட்டுகளை இப்போட்டியில் சேர்க்கவேண்டும் என்ற யோசனையை வரவேற்றார். உள்நாட்டு விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய அவர், போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் வெற்றிக்கான குழு உணர்வை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ‘தேசமும் கலாச்சாரமும் இணைந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன. மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டும். மக்கள் இங்குள்ள சிறந்ததை விட்டுவிட்டு மேற்கு நாடுகளைப் பார்க்கிறார்கள்’ என்றும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

    விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், கர்நாடக விளையாட்டுத் துறை அமைச்சர் நாராயண கவுடா மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

    இப்போட்டியில் 200 பல்கலைக்கழகங்களில் இருந்து 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர். 
    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் அதிரடியால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விக்கு இன்றைய போட்டியிலாவது முற்றுப்புள்ளி வைப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். லக்னோ அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    துவக்க வீரர் குயிண்டன் டி காக் 10 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் மணீஷ் பாண்டே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குருணால் பாண்டியா 1 ரன்னிலும், தீபக் ஹூடா 10 ரன்னிலும் அவுட் ஆகினர். 

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் சளைக்காமல் மும்பை பந்துவீச்சாளர்களை மிரட்டிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார். 61 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். 

    இதனால், லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக பதோனி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை தரப்பில் பொல்லார்டு, மெரிடித் தலா 2 விக்கெட் எடுத்தனர். டேனியல் சாம்ஸ், பும்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

    இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.
    25 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்து 11.30 மணியளவில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் கரை ஏறினார். இந்த தூரத்தை அவர் 4 மணி 48 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பெருமாள், போலீஸ்காரர். இவரது மனைவி சந்தியா. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார்.

    இவர்களது மகள் சஞ்சனா (வயது 10). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் வீராங்கனையான சஞ்சனா சாதனை நிகழ்ச்சிக்காக இன்று வி.ஜி.பி. கடற்கரையில் இருந்து காலை 6.30 மணிக்கு கடலில் நீந்த தொடங்கினார். அவருக்கு பாதுகாப்பாக படகில் நீச்சல் வீரர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

    25 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்து 11.30 மணியளவில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் கரை ஏறினார். இந்த தூரத்தை அவர் 4 மணி 48 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அவரது இந்த சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு விவேகானந்தா கலையரங்கில் நடந்த பாராட்டு விழாவில் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமை தாங்கினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா, கடலோர பாதுகாப்பு ஐ.ஜி. சின்னசாமி, விளையாட்டுத்துறை மானேஜர் வீரபத்ரன், டாக்டர். கந்தையா யாதவ், நிதின் போத்ரா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  பங்கேற்க உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் ஜூன் 9ம் தேதி தொடங்க உள்ளது. 2-வது போட்டி கட்டாக்கில் ஜூண் 12-ம் தேதி, 3-வது போட்டி விசாகப்பட்டினத்தில் ஜூன் 14-ம் தேதி, 4-வது போட்டி ராஜ்கோட்டில் ஜூன் 17-ம் தேதி, 5-வது போட்டி பெங்களூருவில் ஜூன் 19-ம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரே ஓவர் மட்டும் வீசி 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 
    டாஸ் வென்ற குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 69 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றி பெற்றது.

    குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
    இதன்மூலம் ஒரு இன்னிங்சின் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் மற்றும் டி20 போட்டியில் 20வது ஓவரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரஸ்ஸல் படைத்தார்.

    ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் கடைசி ஓவரில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×