என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத்-வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 39 ஆட்டங்கள் முடிந்து விட்டன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றி 2 தோல்வியுடனும், குஜராத் டைட்டன்ஸ் 6 வெற்றி, 1 தோல்வியுடனும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் , குஜராத். 2-வது இடத்திலும் உள்ளன.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 வெற்றி , 2 தோல்வியுடனும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி , 3 தோல்வியுடனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 வெற்றி, 4 தோல்வியுடனும் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. இந்த அணிகள் முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளன.

    பஞ்சாப் கிங்ஸ் 8 புள்ளியும் (4 வெற்றி, 4 தோல்வி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (3 வெற்றி , 4 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 3 வெற்றி, 5 தோல்வி ) தலா 6 புள்ளியும் பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளி பெற்று உள்ளது. மும்பை இந்தியன்ஸ் தான் மோதிய 8 ஆட்டத்திலும் தோற்றது.

    ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத்-வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். குஜராத் அணி முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு ஒரு போட்டியில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றது.

    குஜராத் அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 8 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுத்து 7-வது வெற்றியுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. அதன்பின்னர் தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    குஜராத்தை மீண்டும் வீழ்த்தி ஐதராபாத் 6-வது வெற்றியுடன் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் நன்றாக இருக்கிறது.

    ஐதராபாத் அணியின் பலமே வேகப்பந்து வீச்சுத்தான். புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன், ஜான்சென் ஆகியோர் சிறந்த வேகப்பந்து வீரர்களாக உள்ளனர்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    மும்பை:

    ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 
    குஜராத் டைட்டன்ஸ் 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பெங்களூர் அணி 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை அணிகள் முறையே 6 முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளது.

    பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் குல்தீப் சென் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    புனே:

    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரியான் பராக் அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 27 ரன்கள் எடுத்தார்.

    பெங்களூர் சார்பில் சிராஜ், ஹசில்வுட், ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தத்தளித்தது. கேப்டன் டூ பிளசிஸ் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பெங்களூர் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

    ராஜஸ்தான் சார்பில் குல்தீப் சென் 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஐபிஎல் போட்டியில் ஆயிரம் டாட் பந்துகளை வீசி சாதனையை படைக்கும் 13-வது வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றுள்ளார்.
    மும்பை:

    10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. 

    15-வது வருடமாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றனர். இதில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பிராவோ சென்னை அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார்.

    பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் பந்துவீச்சின் போது பிராவோ ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் டாட் பந்துகளை (ரன் விட்டு கொடுக்காத பந்து) வீசி சாதனை படைத்தார்.

    ஐபிஎல்-லில் இந்த சாதனையை படைக்கும் 13-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அதிக டாட் பந்துகளை வீசி முதல் இடத்தில் இந்தியாவின் புவனேஸ்வர்குமார் உள்ளார்.

    மேலும் இந்த பட்டியலில் அஸ்வின், நரேன், மலிங்கா, ஹர்பஜன், பும்ரா உள்ளிட்டோர் உள்ளனர்.
    பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் பராக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 8, படிகல் 7, அஸ்வின் 17 என பவர் பிளேயில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது.

    இதனையடுத்து சம்சன் - மிட்செல் ஜோடி பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 27 ரன்கள் எடுத்த சம்சன் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக ஹெட்மயர் 3, மிட்செல் 16, போல்ட் 5, கிருஷ்ணா 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் சிறப்பாக ஆடிய ரியான் பராக் 56 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

    பெங்களூர் அணி தரப்பில் சிராஜ், ஹசில்வுட், ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    புனே:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 32-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 5-வது இடத்திலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இதனால் 6-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூர் அணி வீரர்கள் விபரம்:-

    டு பிலிசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(வ), ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்

    ராஜஸ்தான் அணி வீரர்கள் விபரம்:-

    ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டேரில் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
    டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 5-வது இடத்திலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
    புனே:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 32-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 5-வது இடத்திலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இதனால் 6-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூர் அணி கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, டெல்லி, லக்னோ ஆகியவற்றை வென்று இருந்தது. பஞ்சாப், சென்னை, ஐதராபாத்திடம் தோற்று இருந்தது. பெங்களூர் அணியில் கேப்டன் டுபெலிசிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்‌ஷல் படேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ராஜஸ்தான் அணி ஐதராபாத், மும்பை, லக்னோ, கொல்கத்தா, டெல்லி ஆகியவற்றை வென்று இருந்தது. பெங்களூர், குஜராத் அணிகளிடம் மட்டும் தோற்று இருந்தது.

    ஏற்கனவே பெங்களூர் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதற்கு ராஜஸ்தான் இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் ஜோஸ்பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், யசுவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
    சி.எஸ்.கே. அணி 6-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் மீது அதிருப்தி அடைந்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி மீண்டும் பஞ்சாப் கிங்சிடம் தோற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் ஷிகர் தவான் 59 பந்தில் 88 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), பனுகா ராஜபக்சே 32 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பிராவோவுக்கு 2 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் 11 ரன்னில் வெற்றி பெற்றது.

    அம்பத்தி ராயுடு 39 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்) , ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ரபடா, ரிஷி தவான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    சி.எஸ்.கே. அணி 6-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் மீது அதிருப்தி அடைந்தார். இதுதொடர் பாக அவர் கூறியதாவது:-

    எங்களது தொடக்கம் நன்றாகவே இருந்தது. புதிய பந்தில் நாங்கள் நேர்த்தியாக வீசினோம். ஆனால் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை விட்டு கொடுத்து விட்டோம்.

    கடைசி 2 முதல் 3 ஓவர்களில் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. 170 முதல் 175 ரன்னுக்குள் நாங்கள் பஞ்சாப்பை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கடைசியில் பந்து வீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டனர்.

    பேட்டிங்கில் எங்களது தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் 6 ஓவர்களில் ரன்கள் எடுக்கவில்லை. அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.

    எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. நாங்கள் வலிமையுடன் திரும்புவோம்.

    இவ்வாறு ஜடேஜா கூறி உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை மீண்டும் வருகிற 1-ந் தேதி சந்திக்கிறது.

    பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். அந்த அணி அடுத்த போட்டியில் லக்னோவை வருகிற 29-ந் தேதி எதிர்கொள்கிறது. 

    சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 88 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 

    அடுத்து ஆடிய சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அம்பதி ராயுடு 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் புதிய மைல் கல்லை தொட்டுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் 199 இன்னிங்சில் 6086 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 46 அரை சதமும் அடங்கும். நேற்று 2 ரன் எடுத்தாபோது ஷிகர் தவான் 6 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்தார். 

    ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எடுக்கும் 2-வது வீரர் ஆவார். விராட் கோலி 207 இன்னிங்சில் 6,402 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா (5,764), டேவிட் வார்னர் (5,668), ரெய்னா (5,528) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாண்ட்னர் 8 ரன்னும், ஷிவம் டுபே 9 ரன்னில் அவுட்டாகினர். 40 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு கெய்க்வாட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஜடேஜா, ராயுடுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ராயுடு அதிரடியில் இறங்கினார். கடைசி 5 ஓவரில் 70 ரன்கள் தேவைப்பட்டது.

    16-வது ஓவரில் ராயுடு 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 23 ரன் கிடைத்தது. 17வது ஓவரில் 6 ரன் கிடைத்தது. 18வது ஓவரில் 6 ரன் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 

    இதனால் கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். 
    அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஷிகர் தவான்- பனுகா ராஜபக்சே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், 37 பந்துகளில் அரை சதம் கடந்தார். 

    தொடர்ந்து அவர் சதத்தை நோக்கி முன்னேற, மறுமுனையில் பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லிவிங்ஸ்டோன் 19 ரன்கள், பேர்ஸ்டோ 6 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.
    சென்னை அணி பஞ்சாப்பிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு இன்று பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

    சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷாருக்கான், நாதன் எல்லிஸ், வைபவ் அரோரா ஆகியோருக்குப் பதிலாக சந்தீப் ஷர்மா, ரிஷி தவான் மற்றும் பனுகா ராஜபக்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப்பிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ளதால் இன்றைய போட்டி சிஎஸ்கே அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 
    ×