என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தீபக் சாஹருக்கு மாற்று வீரராக சென்னை அணி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மும்பை:

    பும்ரா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது தீபக் சாஹரும் விலகி உள்ளார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சாஹரை மெயின் அணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீபக் சாஹர் பேட்டிங்கும் செய்வதால், அவர் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.


    இதனையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தீபக் சாஹர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

    • வங்காள தேசத்தில் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
    • முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் வருகிற 14-ந் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி களமிறங்கியது. வங்காள தேச அணியின் பந்து வீச்சை நாளாபுறமும் அடித்து ரன்களை குவித்தனர். வங்காள தேச பந்து வீச்சாளர்கள் 10 ரன்ரேட்டுக்கு ரன்களை வாரி வழங்கினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக கான்வே -கிளின் பிலிப்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    வங்காளதேசம் அணி தரப்பில் சைபுதீன் மற்றும் எபடோட் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காள தேச அணி களமிறங்கியது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கேப்டன் சகீப் அல்ஹசன் 70 ரன்கள் குவித்தார். மேலும் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதுவரை நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 1 தோல்வியுடன் உள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 தோல்வியுடனும் வங்காள தேசம் அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் நாளை மோதுகிறது.

    முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் வருகிற 14-ந் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.

    • பிரபல நடிகைகள் ஹியூமா குரேசி மற்றும் சோனாக்ஷி சின்கா ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
    • ஹியூமா குரேசியுடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்து நிகழ்த்தப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்துள்ளது. அதனால் சீனியர் வீரர் ஷிகர் தவான் தலைமையில் இத்தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் சாதித்துக் காட்டியுள்ளது.

    இந்நிலையில் 36 வயதுடைய தவான் கிரிக்கெட்டை தவிர்த்து அடுத்த காட்டமாக சினிமாவில் கால் பதித்துள்ளார். ஏற்கனவே தந்தையிடம் அடி வாங்குவது முதல் ஜடேஜாவை கலாய்த்தது வரை விதவிதமாக ஜாலியான வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது "டபுள் எக்ஸ்எல்" எனும் பாலிவுட் படத்தில் முதல் முறையாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

    உடல் பருமனான பெண் சந்திக்கும் பிரச்சனைகளை தாண்டி அந்தப் பெண்ணுக்குள் இருக்கும் ஆசைகள், கனவுகளை அந்தப் பெண் எப்படி அடைகிறார் என்ற கதை களத்தை கொண்ட அந்த படத்தை இயக்குனர் ஸட்ரம் ரமணி இயக்குகிறார்.

    அதில் பிரபல நடிகைகள் ஹியூமா குரேசி மற்றும் சோனாக்ஷி சின்கா ஆகியோர் நடிக்கவுள்ளனர். அந்த படத்தின் வாயிலாக பாலிவுட் திரையில் ஷிகர் தவான் கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார். வரும் நவம்பர் 4-இல் வெளியாகும் அந்த படத்தில் அவரது கேரக்டர் வெற்றி பெறும் பட்சத்தில் நாளடைவில் நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தில் நடிப்பதற்காக ஹியூமா குரேசியுடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது.

    கிளாசன் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 49 ரன்னும் (8 பவுண்டரி), ஸ்ரேயாஸ் அய்யர் 23 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நிகிடி, போஜனுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    இந்த வெற்றி மூலம் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் தொடரையும், ஒரு நாள் தொடரையும் இழந்தது.

    நேற்றைய வெற்றி மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை சமன் செய்தது.

    அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி இந்த ஆண்டில் 38 வெற்றியை பெற்றுள்ளது. டெஸ்டில் 2, ஒருநாள் போட்டியில் 13, 20 ஓவர் ஆட்டத்தில் 23 என 38 வெற்றி கிடைத்துள்ளது.

    2003-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் இந்திய அணி 37 வெற்றிகளை பெற்று இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும். * * * தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கோப்பையுடன் கேப்டன் ஷிகர் தவான் இருப்பதை படத்தில் காணலாம்.

    • டிரையத்லான் பந்தயத்தில் தமிழகத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது.
    • கர்நாடகா 27 தங்கம் உள்பட 88 பதக்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு ஒரு தங்கம் உள்பட 3 பதக்கம் கிடைத்தது.

    டிரையத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது. ஆகாஷ், பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய அணி கலப்பு தொடரில் 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதல் இடத்தை பிடித்தது.

    யோகாசான போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவில் நிவேதா, கீத்திகா, வைஷ்ணவி, ரோகிணி, காயத்ரி ஆகியோர் கொண்ட தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது. இதே போல யோகானம் ரித்மிக் ஜோடி பிரிவில் நிவேதா-அபிராமி ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது.

    கடந்த 29-ந்தேதி தொடங்கிய தேசிய விளையாட்டு போட்டி இன்று முடிவடைகிறது. நேற்றைய போட்டியின் முடிவில் தமிழக அணி 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் ஆக மொத்தம் 73 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் 56 தங்கம், 34 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 121 பதக்கத் துடன் முதல் இடத்தில் உள்ளது.

    மராட்டியம் 38 தங்கம் உள்பட 138 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், அரியானா 34 தங்கம் உள்பட 106 பதக்கத்துடன் 3-வது இடத்திலும், கர்நாடகா 27 தங்கம் உள்பட 88 பதக்கத்துடன் 4-வது இடத்திலும் உள்ளன.

    • தென் ஆப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
    • இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியானது. எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது. ஐபிஎல் இந்த சீசன் எனது நம்பிக்கையை உயர்த்தியது. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் இந்தியா-ஏ அணிக்காகவும் சிறப்பாக பந்து வீசினேன்.

    நீங்கள் சில நேரங்களில் விக்கெட்டுகளைப் பெறுவீர்கள், சில நேரங்களில் நீங்கள் விக்கெட்டுகளைப் பெறுவதில்லை. இருப்பினும் என் நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும். எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆரம்பம் முதல் அமெரிக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர்.
    • ஆட்டத்தின் முடிவில் 8-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

    புவனேஷ்வர்:

    17 வயதுக்கு உட்பட்டவருக்கான ஜூனியர் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கி உள்ள இந்த போட்டித் தொடர் 30-ந் தேதி வரை புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில் துவக்க நாளான நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்திய மகளிர் கால்பந்து அணி பலம் வாய்ந்த அமெரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது.

    ஆரம்பம் முதல் தீவிரம் காட்டிய அமெரிக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மெலினா ரெபிம்பாஸ் பிரே 2 கோல்களை அடித்தார். பதிலுக்கு கோல் போடுவதற்கு இந்திய வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதிவரை இந்திய அணி கோல் அடிக்காததால் அமெரிக்க ஜூனியர் கால்பந்து அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    • தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
    • 1983 ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரோஜர் பின்னி

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ தலைவர் பதவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (வயது 67) இன்று மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

    இதேபோல் தற்போதைய செயலாளர் ஜெய் ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். பொருளாளர் பதவிக்கு ஆஷிஷ் ஷேலார், இணை செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு தலைவர் பதவிக்கு அருண் துமால், உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் டால்மியா, கைருல் ஜமால் மஜூம்தார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்போதைக்கு இவர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறினார்.

    ரோஜர் பின்னி, 2019-ஆம் ஆண்டு முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 1979ம் ஆண்டு முதல் 1987 வரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல், 1980 முதல் 1987 வரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 830 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 629 ரன்களும் எடுத்துள்ளார்.

    1983 ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி. உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
    • இன்றைய ஆட்டத்தில் டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டார்

    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது. இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர்.

    அணியின் வழக்கமான கேப்டன் பவுமா, முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2-வது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. 2-வது போட்டியில் கேசவ் மகாராஜ் தென் ஆப்பிரிக்காவின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. டேவிட் மில்லர் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்தினார். இவ்வாறு 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், "ஒவ்வொரு போட்டியின் டாஸின் போதும் வெவ்வேறு தென் ஆப்பிரிக்கா கேப்டன்களுடன் ஷிகர் தவான் இவ்வாறு தான் நிற்பார்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 99 ரன்களில் சுருண்டது
    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக முன்னேறியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 10 ரன்களில் வெளியேறினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மான் கில், 49 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 2 ரன்களும் எடுக்க, 19.1 ஓவரிலேயே இந்தியா இலக்கை எட்டியது. 19வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

    • குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலான் - டிகாக் ஆடினர். 6 ரன்னில் இருந்த டி காக் 1 பவுண்டரியுடன் வாஷிங்டன் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஹெண்டிரிக்ஸ் 3 ரன்னிலும் மார்க்ரம் 9 ரன்னில் நடயைக் கட்டினர்.

    இதனையடுத்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மலான் 15, மில்லர் 7, பெஹ்லுக்வாயோ 5, கிலாசன் 34, ஃபார்டுயின் 1, நோர்க்யா 0 என ஆட்டமிழந்தனர்.

    இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • 37 வயதான பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையான உலக போட்டிகளில் கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதற்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 4-0 என்ற கணக்கில் சக வீரர் சவுரவ் கோத்தாரியை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். மகாராஷ்டிராவைச் ர்ந்த 37 வயதான பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையான உலக போட்டிகளில் கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    25 சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பங்கஜ் அத்வானிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த மனிதரின் சாதனைகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    25 உலக சாம்பியன்ஷிப் பட்டம். என் சாம்பியனுக்கு

    வாழ்த்துக்கள். உங்கள் விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் முடிவில்லாதது. என் சகோதரனே உன்னை என்றும் நேசிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×