search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி மனு தாக்கல்- போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
    X

    பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி மனு தாக்கல்- போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

    • தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
    • 1983 ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரோஜர் பின்னி

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ தலைவர் பதவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (வயது 67) இன்று மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

    இதேபோல் தற்போதைய செயலாளர் ஜெய் ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். பொருளாளர் பதவிக்கு ஆஷிஷ் ஷேலார், இணை செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு தலைவர் பதவிக்கு அருண் துமால், உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் டால்மியா, கைருல் ஜமால் மஜூம்தார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்போதைக்கு இவர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறினார்.

    ரோஜர் பின்னி, 2019-ஆம் ஆண்டு முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 1979ம் ஆண்டு முதல் 1987 வரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல், 1980 முதல் 1987 வரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 830 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 629 ரன்களும் எடுத்துள்ளார்.

    1983 ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி. உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×