search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா
    X

    ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா

    • ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது.

    கிளாசன் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 49 ரன்னும் (8 பவுண்டரி), ஸ்ரேயாஸ் அய்யர் 23 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நிகிடி, போஜனுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    இந்த வெற்றி மூலம் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் தொடரையும், ஒரு நாள் தொடரையும் இழந்தது.

    நேற்றைய வெற்றி மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை சமன் செய்தது.

    அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி இந்த ஆண்டில் 38 வெற்றியை பெற்றுள்ளது. டெஸ்டில் 2, ஒருநாள் போட்டியில் 13, 20 ஓவர் ஆட்டத்தில் 23 என 38 வெற்றி கிடைத்துள்ளது.

    2003-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் இந்திய அணி 37 வெற்றிகளை பெற்று இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும். * * * தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கோப்பையுடன் கேப்டன் ஷிகர் தவான் இருப்பதை படத்தில் காணலாம்.

    Next Story
    ×