என் மலர்
விளையாட்டு
- வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
பிரஸல்ஸ்:
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப்-எப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது.
இந்த போட்டியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது. தலைநகரின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வன்முறை ஏற்பட்டது. கலவர தடுப்பு போலீசாருடன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரக்காரர்கள் பைரோடெக்னிக் பொருட்கள், எறிகணைகள், கம்புகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நெடுஞ்சாலையில் தீ வைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
- இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை
- பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார்.
சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காததால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.
தலைவர், துணைத்தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியியில் உள்ளனர்.
- முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'இ' பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
இதற்கு பதிலடியாக 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.
போட்டியின் முடிவில் 'இ' பிரிவில் ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தால் போதும். ஜப்பானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
- அதிவேக கோல் அடித்து கனடா வீரர் சாதனை படைத்தார்.
- குரூப் எப் பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் குரோஷியா உள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரோஷியா, கனடா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் கோல் அடித்தார். இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது ஆகும்.
எனினும் 36வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரேஜ் கிராமரிச் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 44வது நிமிடத்தில் மார்கோ லிவாஜா கோலை அடித்து குரோஷியாவை முன்னிலை பெறச் செய்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றிருந்தது.
2வது பாதி ஆட்டத்திலும் குரோஷியா அணி சிறப்பாக விளையாடியது. 70வது நிமிடத்தில் ஆண்ட்ரேஜ் கிராமரிச் 2வது கோலை அடித்தார். மேலும் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் 94வது நிமிடத்தில் குரோஷியா வீரர் லோவ்ரோ மேஜர் ஒரு கோல் அடிக்க அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் எப் பிரிவில் நான்கு புள்ளிகளுடன் குரோஷியா முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக பெல்ஜியத்திற்கு எதிரான கடைசி ஆட்டத்தில் டிரா செய்தாலே அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.
- அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
- இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்வையாளர்கள் அதிக அளவில் கண்டுகளித்தனர்.
அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அங்கு நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து, 566 பேர் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.
இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்... இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
- முதல் பாதியில் கோல் அடிக்கும் இரு அணிகளின் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
- இரண்டாவது பாதியில் மொராக்கோ அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமனிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியின் 73-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அப்தெல் ஹமீது சபிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் சகாரியா அபுக்லால் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் குரூப் எப் பிரிவு புள்ளிப்பட்டியலில் மொராக்கோ 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
- முதல் பாதியில் கோல் அடிக்கும் இரு அணிகளின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
- 2வது பாதியில் கோஸ்டா ரிகா அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கச் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமனிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் கெய்ஷர் ஃபுல்லர் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர இறுதியில் கோஸ்டா ரிகா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. இதன்மூலம் குரூப் இ பிரிவு புள்ளிப்பட்டியலில் ஜப்பான், கோஸ்டா ரிகா தலா 3 புள்ளிகளுடன் 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளது.
- குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோரும் நேற்றிரவு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
- பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் டோனியும் பாட்டு பாடுவது, அவரும் இணைந்து நடனமாடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் டோனி பங்கேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பார்ட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, டோனி மனைவி சாக்க்ஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளது அந்த வீடியோவில் தெரிந்தது. மேலும், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் டோனியும் பாட்டு பாடுவது, இணைந்து நடனமாடுவதும் அந்த வைரல் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதை அவரது மனைவி சாக்க்ஷி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருந்த வீடியோ மூலம் தெரிய முடிகிறது.
நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றிய கையுடன் ஹர்திக் பாண்டியா, டோனி உடன் துபாயில் இணைந்துள்ளார். ஹர்திக் பாண்டியா மட்டுமில்லாமல், அவரின் சகோதரர் குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோரும் நேற்றிரவு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
பாண்டியா பிரதர்ஸ் உடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட டோனி : வைரல் வீடியோ! #dhoni #HardikPandya #maalaimalar pic.twitter.com/bc3z5DL3Z6
— Maalai Malar தமிழ் (@maalaimalar) November 27, 2022
வரும் 2023 ஐபிஎல் தொடருக்கு பின் டோனி, அத்தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. எனவே, அவரது தலைமையில் 5ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனாகி, அவரை சிறப்பான முறையில் வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
- உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார்.
- அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.
கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி சமன் செய்தார்.
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். ஏற்கனவே சவுதி அரேபியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் தொட்டார்.
மரடோனா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 2-வது ஆண்டு நினைவு தினத்துக்கு மறுநாளில் மெஸ்சி இந்த சாதனையை சமன் செய்தார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.
- இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது.
- கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஹாமில்டன்:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர்தவான், சுப்மன்கில் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்ட்டது.
இந்த நிலையில் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், இந்த போட்டி 29 ஓவர்கள் (ஒரு அணிக்கு) கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே உணவு இடைவேளை அளிக்கப்படும். குடிநீர் இடைவேளை ஏதும் அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆட்டம் தொடர்ந்த பிறகு தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார், கில் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். கில் 45 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 30-ந் தேதி நடைபெறும்.
- 1983 ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.
- 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது டேவிட் முர்ரே சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.
1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய டேவிட் முர்ரே, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கண்ட சிறந்த விக்கெட் கீப்பர் என பெயர் எடுத்த டேவிட் முர்ரே, போதை பழக்கத்திற்கு அதிகம் அடிமையானதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பழக்கம் காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளான டேவிட் முர்ரே, 1975- 76 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் மீண்டும் சில காரணத்தின் பெயரில் விளையாட அனுமதிக்கப்பட்டு வந்தார் டேவிட் முர்ரே. 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது டேவிட் முர்ரே சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.
அப்படி ஒரு சூழலில் 1983 ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 10 ஒரு நாள் போட்டிகள் வரை ஆடியுள்ள டேவிட் முர்ரே, ஆதிக்கம் நிறைந்த சிறந்த விக்கெட் கீப்பராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், பிரிட்ஜ்டவுனில் தனது வீட்டின் முன்பு டேவிட் முர்ரே மயங்கி விழுந்து காலமானதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் டேவிட் முர்ரேவின் மறைவுக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
டேவிட் முர்ரேவின் மகனான ரிக்கி ஹொய்டியும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விக்கெட் கீப்பராக 1990-களில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாஜி நவுஷி என்ற பெண்மணிக்கு 33 வயதாகும். இவர், 5 குழந்தைகளின் தாய்.
- மெஸ்சியின் ஆட்டத்தை நேரில் பார்க்க கேரளாவில் இருந்து கத்தாருக்கு பயணித்த 5 குழந்தைகளின் தாய்
தோஹா:
உலகக் கோப்பை போட்டி காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை கால்பந்து ஜூரம் பற்றிக்கொண்டுள்ளது. நம் நாட்டிலும் கால்பந்து மோகம் அதிகமுள்ள மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இதன் பரபரப்பு பரவியிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். நாஜி நவுஷி என்ற பெண்மணி. 33 வயதாகும் இவர், 5 குழந்தைகளின் தாய்.
அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சியின் அதிதீவிர ரசிகை. களத்தில் தனது அபிமான ஹீரோவின் சாகசத்தை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே நவுஷியின் கார் பயணத்தின் நோக்கம். மலையாள தேசத்தில் இருந்து 'மணல் தேசத்துக்கு' தனது பயணத்தை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கினார் நவுஷி. அவரது கார், மும்பையில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக கத்தாருக்கு நவுஷி தானே தனியாக காரை ஓட்டிச்சென்றார்.

இவரின் நாயகரின் அணியான அர்ஜென்டினா, சவுதி அரேபியாவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதில் அனேக அர்ஜென்டினா ரசிகர்களைப் போல நவுஷிக்கும் வருத்தம்தான். ஆனால், 'உலக கோப்பையை வெல்லும் அர்ஜென்டினாவின் பயணத்தில் இது ஒரு சிறு பின்னடைவுதான். எனது ஹீரோ மெஸ்சி ஆடுவதை நேரில் காணப்போகிறேன் என்பதே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்கிறார் இவர் உற்சாகப் படபடப்புடன்.
நவுஷியின் மனம் கவர்ந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று நள்ளிரவு மெக்சிகோவை சந்தித்து வெற்றி பெற்றது. நவுஷியின் கார் ஒரு நகரும் வீடாகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மேற்புறத்தில் கூடார வசதியும், காருக்குள் மினி சமையல்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மாவு, மசாலாக்கள் போன்ற சமையல் பொருட்களையும் போதுமான அளவு 'ஸ்டாக்' வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்கிறார்.
நாஜி நவுஷி தனது காருக்கு 'ஊலு' என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கிறார். இந்த மலையாள வழக்குமொழிச் சொல்லுக்கு 'அவள்' என்று பொருள். கால்பந்து காதலி நவுஷியை சுமந்துகொண்டு பாலைவன மண்ணில் பறந்துகொண்டிருக்கிறது, 'ஊலு'.






