என் மலர்
விளையாட்டு
- முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.
- முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது பிரான்ஸ்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.
எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
- முதல் பாதியில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.
- ஆட்ட நேர இறுதியில் போலந்து 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து, சவுதி அரேபியா அணிகள் மோதின.
முதல் பாதியின் 39-வது நிமிடத்தில் போலந்தின் ஜிலின்ஸ்கி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார்.
இரண்டாவது பாதியில் 82வது நிமிடத்தில் ராபர்ட் லெவான்டௌவுஸ்கி ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முதல் போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை சவுதி அரேபியா அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
- வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.
- காரணம் டி20 கிரிக்கெட்டில் நிறைய வித்தியாசமான பந்துகளை வீச வேண்டும்.
மும்பை:
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சார்பாக அறிமுகமான உம்ரான் மாலிக் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 306 ரன்கள் என்ற இலக்கை எட்டிய இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது .
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது:-
டாம் லாதம் போன்ற திறமையான வீரர்களை விரைவில் ஆட்டம் இழக்க செய்யுங்கள். நியூசிலாந்தில் அவர் ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார். நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்கள் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும்.
வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவர் டி20 கிரிக்கெட் விட ஒருநாள் போட்டியில் தான் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். காரணம் டி20 கிரிக்கெட்டில் நிறைய வித்தியாசமான பந்துகளை வீச வேண்டும். அது அவருக்கு கிடையாது. மாறாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே லைனில் சரியாக தொடர்ந்து வீச வேண்டும் .
இதனை உம்ரான் மாலிக் நன்றாக செய்தார். இதேபோன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாகலுக்கு ஓய்வு வழங்கிவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும். குல்திப் யாதவ் நுணுக்கங்களாக பந்து வீசுவார். அதனை எதிர்கொள்ள நியூசிலாந்து வீரர்கள் தடுமாறுவார்கள். இதனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுங்கள்.
என்று அவர் கூறினார்.
- முதல் பாதியில் ஆஸ்திரேலிய அணி ஒரு கோல் அடித்தது.
- இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, துனீசியா அணிகள் மோதின.
முதல் பாதியின் 23-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் டூயூக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார். இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் துனீசியா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இரு போட்டிகளில் ஒரு டிரா, ஒரு தோல்வி என ஒரு புள்ளியுடன் துனீசியா கடைசி இடத்தில் உள்ளது.
- முதல் ஒரு நாள் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே.
- 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 307 ரன் இலக்கு எடுக்கப்பட்டது பரிதாபமே.
ஹேமில்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் நாளை (27-ந்தேதி) நடக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. அந்த அளவுக்கு பந்து வீச்சில் பலவீனத்தை காண முடிந்தது. 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 307 ரன் இலக்கு எடுக்கப்பட்டது பரிதாபமே.
இதனால் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், யசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை வாரி கொடுத்து இருந்தனர். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஒருவர் மட்டுமே ரன்களை அதிகம் கொடுக்காமல் நேர்த்தியாக பந்து வீசினார்.
தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்த வரை மாற்றம் செய்யப்படமாட்டாது என்றே தெரிகிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன், பின் ஆலன், பிலிப்ஸ், கான்வே, சவுத்தி, பெர்குசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி 'டை' ஆனது. 5 ஆட்டம் முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
- கிரிக்கெட் விளையாட்டில் இப்படி ஒரு எனர்ஜியை இதற்கு முன்பு நான் உணர்ந்ததே இல்லை.
- வங்காளதேச அணிக்கு எதிராக டிசம்பர் 4-ம் தேதி ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரில் கோலி விளையாட உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை என கடும் விமர்சனம் எழுந்து வந்தது.
ஆனால் அவை அனைத்திற்கும் ஆசிய கோப்பையில் சதம் அடித்து பதிலடி கொடுத்திருந்தார் விராட் கோலி. டி20 உலக கோப்பை தொடரில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்தார். டி 20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வில் உள்ள விராட் கோலி, வங்காளதேச அணிக்கு எதிராக டிசம்பர் 4-ம் தேதி ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். இதற்காக தற்போதிலிருந்தே விராட் கோலி தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் விராட் கோலி தற்போது பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உலக கோப்பையில் ரசிகர்களால் தற்போது வரை பேசி வரும் போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தான்.
சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா சந்தித்தது. இதில் கோலி பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த கோலி, 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும், இந்த டி 20 உலக கோப்பை தொடரில் சிறந்த போட்டி இது தான் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர். இது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றையும் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.
பேட்டிங் முடிந்து மைதானத்தில் இருந்து தான் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை பகிரந்த விராட் கோலி, "அக்டோபர் 23, 2022 எப்போதும் என் இதயத்தில் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் இப்படி ஒரு எனர்ஜியை இதற்கு முன்பு நான் உணர்ந்ததே இல்லை. எப்படி ஒரு பாக்கியம் நிறைந்த மாலை வேளை அது" என நெகிழ்ந்து போய் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
- ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது.
- இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல.
ரியாத்:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.
2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சி அலைக் கடல் பொங்கியது. அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது. இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994-ல் பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது மாதிரியே கார் பரிசு வழங்கப்பட்டது.
சவுதி அரேபியா இன்றைய 2-வது போட்டியில் போலந்தை எதிர் கொள்ளும் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் வீரர்கள் மேலும் பரிசு மழையில் நனைவார்கள். அந்த நாடும் கால்பந்து வீரர்களை வெகுவாக பாராட்டும்.
- சவுதி அரேபியா வீரர்களிடம் அந்த அணியின் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் ஆவேசமாக சில கருத்துக்களை பேசினார்.
- உங்கள் திறமை முழுவதையும் கொடுங்கள்.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு 10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.
இதற்கு பின்னனியில் சவுதி அரேபியாயின் பயிற்சியாளர் தான் காரணம் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போட்டியில் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இடைவெளியின் போது சவுதி அரேபியா வீரர்களிடம் அந்த அணியின் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் ஆவேசமாக சில கருத்துக்களை பேசினார். இதனையடுத்து 2-வது பாதியில் சவுதி அரேபியா வீரர்கள் ஆக்ரோசமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
பிகில் படத்தில் விஜய் பேசியது போல சவுதி அரேபியா பயிற்சியாளர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிகில் பட பாணியில் வீரர்களை உசுப்பேத்திய சவுதி அரேபியா பயிற்சியாளர்- வைரலாகும் வீடியோ#HerveRenard #worldcupfootball2022 #maalaimalar pic.twitter.com/Ok7M3tjQCI
— MM Public (@MmPublic) November 26, 2022
வீடியோவில் சவுதி அரேபியா பயிற்சியாளர் கூறியதாவது:-
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் மெஸ்ஸி ஆடுகளத்தின் நடுவில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றால் மிகவும் கவனமாக இருங்கள். தடுப்பாட்டத்தை பலப்படுத்துங்கள். அவர்களை பாருங்கள்...பதட்டமின்றி நிதானமாக விளையாடுகிறார்கள். உங்களுக்கு அது தெரியவில்லையா? நம்மால் மீண்டு வர முடியும் என்று நீங்கள் உணரவில்லையா? வாருங்கள் நண்பர்களே. இது உலக கோப்பை. உங்கள் திறமை முழுவதையும் கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- விராட் கோலி தான் குடித்த தண்ணீர் பாட்டிலில் டோனி படத்தை பார்த்து எங்கு பார்த்தாலும் டோனியின் முகம் தான் என தனது இன்ஸ்டாகிராமில் வைத்த ஸ்டோரியும் சமூகவலைதளங்களில் வைரலானது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஜி பிரிவு லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பிரேசில் கால்பந்து ரசிகருடன் இணைந்து சென்னை அணி கேப்டன் டோனியின் ஜெஸியை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலங்களாக டோனி என்ன செய்தாலும் அது புகைப்படமாக மாறி இணையத்தை கலக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் விளையாடிய புகைப்படம், குடும்பத்துடன் அமர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த புகைப்படங்களில் இணையத்தில் வைரலானது.
அது மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தான் குடித்த தண்ணீர் பாட்டிலில் டோனி படத்தை பார்த்து எங்கு பார்த்தாலும் டோனியின் முகம் தான் என தனது இன்ஸ்டாகிராமில் வைத்த ஸ்டோரியும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் கத்தார் கால்பந்து உலக கோப்பை போட்டி வரை டோனிக்கு ரசிகர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு சாட்சி என டோனியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்.-ராயலசீமா பல்கலைக்கழக (ஆந்திரா) அணிகள் மோதின.
- எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் ராயலசீமா பல்கலைக் கழகத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
சென்னை:
தென் மண்டல பல்கலைக் கழக அணிகளுக்கான பெண்கள் பேட்மிண்டன் போட்டி பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக் கழகத்தில் நடந்தது. இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்.-ராயலசீமா பல்கலைக்கழக (ஆந்திரா) அணிகள் மோதின.
இதில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் ராயலசீமா பல்கலைக் கழகத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் மூலம் எஸ்.ஆர்.எம். அணி அகில இந்திய பல்கலைக் கழகம் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிக்கு தகுதி பெற்றது.
- அரியானா 33-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
- இன்றைய போட்டியில் மும்பை-பெங்கால், புனே-தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா-பாட்னா அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத்:
புரோ கபடி லீக் போட்டி தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் டெல்லி அணி 50-47 என்ற கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 26-41 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியிடம் தோற்றது. தமிழ் தலைவாஸ் 7-வது தோல்வியை தழுவியது.
நேற்று நடந்த கடைசி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் அரியானா 33-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அரியானா அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பாட்னா 7-வது தோல்வியை தழுவியது.
புனே அணி 64 புள்ளியுடன் முதல் இடத்திலும், ஜெய்ப்பூர் 59 புள்ளியுடன் 2-வது இடத்திலும், பெங்களூரு 58 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. உ.பி. யோதா, டெல்லி (தலா 50 புள்ளிகள்) பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ் (தலா 48 புள்ளி) ஆகியவை முறையே 4 முதல் 7-வது இடங்களில் உள்ளன.
இன்றைய போட்டியில் மும்பை-பெங்கால், புனே-தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா-பாட்னா அணிகள் மோதுகின்றன.






