என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • குரூப் ஏ பிரிவு புள்ளி பட்டியலில் கத்தாருக்கு கடைசி இடம்.
    • லீக் சுற்றுடன் வெளியேறுவதால் கத்தார் ரசிகர்கள் சோகம்.

    தோஹா:

    2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை நடத்தும் கத்தார் அணி, முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

    இதனை தொடர்ந்து, 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை எதிர் கொண்ட கத்தார் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அடுத்ததாக செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கத்தார் எதிர்கொள்கிறது.

    எனினும் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் குரூப் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்த கத்தார் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கோப்பை தொடரிலும் இருந்து வெளியேறி உள்ளது. இது கத்தார் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முதல் பாதியில் நெதர்லாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.
    • 2வது பாதியில் ஈக்வடார் வீரர் கோல் அடித்து சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
    • உலகக் கோப்பையில் கத்தார் அணி இன்று முதல் கோலை பதிவு செய்தது

    உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடந்த குரூப்-ஏ லீக் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தார் அணி, செனகலுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செனகல் வீரர்கள், முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றனர். அந்த கோலை 41வது நிமிடத்தில் பவுல்யே தியா அடித்தார்.

    அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2வது கோலை பதிவு செய்தது செனகல். 48வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார் பமாரா டைதியோ.

    அதன்பின் போட்டியை சமன் செய்யும் நோக்கில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. முகமது முன்டாரி கோல் அடித்து ஆறுதல் அளித்தார். உலகக் கோப்பையில் கத்தார் அணியின் முதல் கோல் இதுவாகும்.

    அதன்பின், கத்தார் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த செனகல் அணி 84வது நிமிடத்தில் மற்றொரு கோல் போட்டது. மாற்று வீரர் சம்பா டியங் இந்த கோலை பதிவு செய்தார். இறுதியில் 3-1 என செனகல் அபார வெற்றி பெற்றது.

    • ஹென்னிஸி தனது பாக்சை விட்டு வெளியே பாய்ந்து வந்து பந்தை தடுக்க முயன்றார்.
    • உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும்.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் வேல்ஸ் கோல்கீப்பர் ஹென்னிஸி நடுவரால் ரெட் கார்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்த ஈரான் வீரர் மெஹ்தி தாரெமி, பந்தை துரத்திக்கொண்டு கோல் கம்பத்தை நெருங்கினார். ஆபத்தை உணர்ந்த ஹென்னிஸி, அவரது எல்லையை விட்டு வெளியே பாய்ந்து வந்து, தாரெமிக்கு முன்னதாக பந்தை தடுக்க முயன்றார். அதற்குள் தாரெமி அடித்த பந்து ஹென்னஸியை தாண்டி சென்றுவிட்டது.

    அதேசமயம் வந்த வேகத்தில் ஹென்னிஸி, தாரெமியை உதைக்க, இருவரும் கீழே விழுந்துவிட்டனர். விதிமுறை மீறலை கவனித்த போட்டி நடுவர் மரியோ எஸ்கோபார், ஹென்னிஸிக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டினார். ஆனால் வீடியோ மானிட்டரைப் பார்த்த அவர், பின்னர் தனது முடிவை மாற்றி, ரெட் கார்டு காண்பித்தார். இதையடுத்து ஹென்னிஸி சோகத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இந்த உலகக் கோப்பையில் முதல் ரெட் கார்டு இதுவாகும்.

    உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும். உலகக் கோப்பையில் ரெட் கார்டு பெற்ற மூன்றாவது கோல் கீப்பர் ஹென்னிஸி ஆவார். இதற்கு முன்பு 2010ல் தென் ஆப்பிரிக்காவின் இடுமெலங் குனே, 1994ல் இத்தாலி கோல் கீப்பர் ஜியன்லுகா பக்லியுகா ஆகியோர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கூடுதல் நேரத்தில் இரு தரப்பினரும் வெற்றிக்கான கோலை பதிவு செய்ய ஆக்ரோஷத்துடன் முன்னேறினர்.
    • வெற்றி பெற்றதும் ஈரான் வீரர்கள் மரியாதை நிமித்தமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர்.

    உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-பி பிரிவில் உள்ள ஈரான், வேல்ஸ் அணிகள் மோதின. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை இரு தரப்பிலும் தவறவிட்டனர். ஆட்டநேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. அதன்பின்னர் கூடுதல் நேரத்தில் இரு தரப்பினரும் வெற்றிக்கான கோலை பதிவு செய்ய ஆக்ரோஷத்துடன் முன்னேறினர்.

    இந்த போராட்டத்தில் ஈரான் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியது. ரூபஸ் செஸ்மி, ரமின் ரசீயன் தலா ஒரு கோல் அடித்து, வேல்ஸ் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இறுதியில் 2-0 என ஈரான் வெற்றிபெற்றது.

    வெற்றி பெற்றதும் ஈரான் வீரர்கள் மரியாதை நிமித்தமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர். அப்போது ஈரான் மற்றும் வேல்ஸ் நாடுகளின் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வேல்ஸ் ரசிகர்களின் கைதட்டி பாராட்டியதைப் பார்த்த சில ஈரானிய வீரர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • 40-வது ஓவரில் போட்டி அப்படியே நியூசிலாந்து பக்கம் சாய ஆரம்பித்தது.
    • திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம்.

    நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று, 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

    இதனைத் தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 306/7 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர்கள் பின் ஆலன் 22 (25), டிவோன் கான்வே 24 (42) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து டேரில் மிட்செலும் 11 (16) சொதப்பினார்.

    இறுதியில் கேன் வில்லியம்சன், டாம் லதாம் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இதனால், நியூசிலாந்து அணி 47.1 ஓவர்கள் முடிவில் முடிவில் 309/3 ரன்களை சேர்த்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. டாம் லதாம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 145 ரன்களும், கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 94 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தார்கள்.

    இப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு ஷிகர் தவன் பேட்டிகொடுத்தார். அதில், ''பேட்டிங்கில் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். பந்துவீச்சிலும் முதல் 10-15 ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு நெருக்கடியை ஏற்படுத்தினோம். ஆனால், அடுத்து சரியாக செயல்படவில்லை. ஷார்ட் பால்களை தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தோம். லதாம் அதனை சிறப்பாக அட்டாக் செய்தார். குறிப்பாக (ஷர்தூல் தாகூர் வீசிய) 40ஆவது ஓவரில் போட்டி அப்படியே நியூசிலாந்து பக்கம் சாய ஆரம்பித்தது.

    40ஆவது ஓவரில் ஷர்தூல் தாகூர் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசியதால், டாம் லதாம் அதனை சிறப்பாக எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால், அந்த ஓவரில் 25 ரன்கள் கசிந்தது.

    அணியில் இருக்கும் அனைவரும் இளம் வீரர்கள். பந்துவீச்சு, பீல்டிங் இரண்டையும் மேம்படுத்தியே ஆக வேண்டும். திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம். அடுத்த போட்டிகளில் இந்த குறைகளை சரிசெய்து, பலமிக்க அணியாக களமிறங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு தவான் கூறினார்.

    • எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை.
    • காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மர் காயம் அடைந்தார். 79-வது நிமிடத்தில் நெய்மர் பந்தை கடத்தி சென்ற போது எதிரணி வீரர் பறிக்க முயன்றார். அப்போது கால் இடறி நெய்மர் கீழே விழுந்தார். இதில் கணுக்காலில் ஏற்பட்ட வலியால் அவர் துடித்தார்.

    உடனே அணியின் மருத்துவர் களத்துக்குள் வந்து நெய்மரை பரிசோதித்தார். பின்னர் நெய்மர் போட்டியில் இருந்து வெளியேறினார். மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது கண்கள் கலங்கி இருந்தன.

    காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறியதாவது:-

    நெய்மரின் காயத்தின் தன்மை குறித்து மதிப்பீட்டை பெற நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. நாளை (இன்று) காயம் குறித்து புதிய மதிப்பீட்டை பெறுவோம் என்றார். பயிற்சியாளர் டைட் கூறும் போது, நெய்மர் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்றார்.

    • கபில் தேவ்-ன் சாதனையையும் வாஷிங்டன் சுந்தர் முறியடித்துள்ளார்.
    • வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து - இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவான்- சுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் வந்த பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) என சொதப்பியதால் மிடில் ஓவரில் தடுமாறியது. அப்போது நிதானமாக ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் ( 36) , ஸ்ரேயாஸ் ஐயர் (80 ) ரன்களை அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

    எனினும் ஆக்லாந்து மைதானம் மிக சிறியது என்பதால் 300 ரன்கள் என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் 4 ஓவர்கள் தான் மீதம் இருந்தது. அப்போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார். 16 பந்துகளை மட்டுமே சந்தித்த சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார்.

    இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை. ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் அதிரடி காட்டுவது சாதாரணம் அல்ல. பிட்ச் அந்த அளவிற்கு கடினமாக இருக்கும்.

    இதே போல கபில் தேவ்-ன் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஏற்கனவே கூறியதை போல அதிரடி காட்ட முடியாது. அங்கு கடந்த 1992ம் ஆண்டு கபில் தேவ் 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். அதன்பின் சுரேஷ் ரெய்னா 2009-ல் 211.11 வைத்திருந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    • வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 306 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகளும் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி இன்று நடந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்கள்.

    டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 24-வது ஓவரில் இந்தியாவின் முதல் விக்கெட் விழுந்தது. சுப்மன் கில் 50 ரன்னில் பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஷிகர் தவானும் ஆவுட் ஆனார். டிம் சவுதி பந்தில் கேட்ச் ஆனார். ஷிகர் தவான் 77 பந்தில் 72 ரன் எடுத்தார்.

    அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரிஷப் பண்ட் 15 ரன்னில் (23 பந்து) பெர்குசன் பந்தில் போல்டு ஆனார். அடுத்து களம் வந்த சூர்யகுமார் யாதவ் (4 ரன்) அதே ஓவரில் அவுட் ஆனார்.

    அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 160 ரன்னாக (32.5 ஓவர்) இருந்தது. அடுத்து ஸ்ரேயாஸ் அய்யருடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா 39.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. ஸ்ரேயாஸ் அய்யர் 56 பந்தில் அரை சதம் அடித்தார். சஞ்சு சாம்சன் 38 பந்தில் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வாஷிங்டன் சுந்தர் களம் வந்தார். அவர் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆனார். அவர் 76 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும்.

    இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், டிம் சவுதி தலா 3 விக்கெட்டும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடியது. ஃபின் ஆலன் - கான்வே தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆலன் 22 ரன்னிலும் கான்வே 24 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் 11 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து கேப்டன் வில்லியம்சன் - டாம் லாதம் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதலில் நிதானமாக விளையாடிய லாதம் அதன்பின்னர் அதிரடியாக விளையாடினார். 76 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 306 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 104 பந்தில் 145 ரன்களுடனும் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 27-ந் தேதி நடக்கிறது.

    • ஸ்டூவர்ட் பிராட் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.
    • இந்த ஜோடி 2021 புத்தாண்டு தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணத்திற்கு முன்பே தந்தையானார் ஸ்டூவர்ட் பிராட்வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இந்த மகிழ்சியான செய்தியை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில், மோலி கிங் தனது மகளின் நெற்றியில் முத்தமிடுவதும், பிராட் மகளின் கன்னங்களில் முத்தமிடுவது போன்ற புகைப்படங்கள் இருந்தது. குழந்தையின் பெயரையும் இந்த ஜோடி அறிவித்துள்ளது. உலகிற்கு வரவேற்கிறோம் அன்னபெல்லா பிராட். நாங்கள் ஒருபோதும் இவ்வளவு காதலித்ததில்லை என்று பதிவின் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.


    மோலி கிங் மற்றும் பிராட் 2012 முதல் காதலித்து 2021 புத்தாண்டு தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்டூவர்ட் பிராட் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் தேஜ்நரைன் சந்தர்பால் செயல்பாடுகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸின் பயிற்சி ஆட்டத்தில் தேஜ்நரைன் சந்தர்பால் களமிறங்கியுள்ளார்.

    கான்பெர்ரா:

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான சந்தர்பால் சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அதிகமாகவே ஆட்டம் கண்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கியுள்ளார்.

    பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய தேஜ்நரைன் சந்தர்பால், ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமான விளையாடி சதம் விளாசினார். இடதுகை பேட்ஸ்மேனான தேஜ்நரைன் சந்தர்பால், 293 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 119 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தேஜ்நரைன் சந்தர்பாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை விளாசியுள்ள தேஜ்நரைன் சந்தர்பால், 73.16 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் தேஜ்நரைன் சந்தர்பால் செயல்பாடுகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

    சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள் பெரிய அளவில் சோபிக்க தவறி வந்துள்ளனர். இதனை ஷிவ்நரைன் சந்தர்பால் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் மாற்றிக் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஷிவ்நரைன் சந்தர்பால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் அணி 2-6 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது.
    • வேல்ஸ் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் நேற்றுடன் ஒரு ஆட்டத்தில் மோதிவிட்டன. இன்று முதல் 2-வது போட்டியில் விளையாடுகின்றன.

    'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கத்தார்-செனகல் ( மாலை 6.30), நெதர்லாந்து-ஈக்வடார் ( இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    போட்டியை நடத்தும் கத்தார் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் ஈக்வடாரிடமும் , செனகல் 0-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப் போவது யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெதர்லாந்து , ஈக்வடார் அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்து தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் 44-வது வரிசையில் உள்ளது.

    இரு அணிகள் மோதிய ஒரேயொரு ஆட்டம் டிரா ஆனது.

    குரூப் 'பி' பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் வேல்ஸ்-ஈரான் (மாலை 3.30), இங்கிலாந்து-அமெரிக்கா (நள்ளிரவு 12.30 ) அணிகள் மோதுகின்றன.

    வேல்ஸ் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. ஈரான் அணி 2-6 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும்.

    இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஈரானை நசுக்கியதால் அமெரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அமெரிக்க அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    ×