என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது.
    • அடுத்து வரும் போட்டிகளில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.

    ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த கூறியுள்ளார். சென்னை, நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    இதில் 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இவ்விரு தொடர்களுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடரில் 2 போட்டியில் 17 ரன் மட்டும் எடுத்த இவர், 2 ஒருநாள் போட்டியில் 15 ரன் மட்டும் எடுத்துள்ளார்.

    தவிர இவர், நடப்பு ஆண்டில் இதுவரை விளையாடிய 11 ஒருநாள் போட்டியில், 326 ரன் (சராசரி 40.75, ஸ்டிரைக் ரேட் 98.19) மட்டும் எடுத்துள்ளார். ஆனால், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    இவர், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 10 ஒருநாள் போட்டியில், 284 ரன் (சராசரி 71.00, ஸ்டிரைக் ரேட்105.57) எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 36 ரன் (38 பந்து) விளாசினார்.

    இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே நிறைய பேர், பண்ட் சொதப்புகிறார் என பேசத் துவங்கிவிட்டனர். இதற்கேற்ப இவர், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்படுகிறார்.

    தனக்குத் தானே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்கிறார். இழந்த பார்மை மீட்டு, எழுச்சி பெறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக இவர், சிறிது காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தால் நல்லது. தேர்வுக்குழுவினர், அடுத்து வரும் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கிப் பார்ப்பதை விட, தற்போதே ஓய்வு வழங்கிவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டாவது சுற்றில் விளையாட போர்ச்சுக்கல் தகுதி பெற்றது.
    • இரண்டாவது பாதியில் புருனோ பெர்னாண்டஸ் 2 கோல்கள் அடித்தார்.

    உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற குரூப் ஹெச் பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, உருகுவேயை எதிர்கொண்டது. முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 2வது பாதியின் 54 வது நிமிடத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ  தலையால் முட்டி உருகுவே வலைக்குள் பந்தை தள்ளினார். ஆனால் மற்றொரு வீரர் புருனோ பெர்னாண்டஸ் மேல் பந்து பட்டுச் சென்றதால் அந்த கோலை நடுவர் பெர்னாண்டசிற்கு வழங்குவதாக அறிவித்தார். 


    ஆட்ட நேரம் முடிந்து நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது 93வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து  வெற்றியை உறுதி செய்தார். 


    இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்திய போர்ச்சுக்கல், தனது .பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. 

    • முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
    • ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது பிரேசில்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப் ஜி பிரிவு ஆட்டம் ஒன்றில் வலிமையான பிரேசில் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், முதல் பாதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் எடுத்துக் கொடுத்த பந்தை, மற்றொரு வீரர் கேஸ்மிரோ கோலாக மாற்றினார். இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படாததால் அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

    • முதல் பாதியில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2-வது பாதியில் தென் கொரியா 2 கோல் அடித்தும் 3-2 என்ற கணக்கில் தோற்றது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, தென் கொரியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34வது நிமிடத்தில் முகமது குதுஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதியில் கானா அணி 2- என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தென் கொரியா அணியின் சோ கு சங் இரண்டாவது பாதியில் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68- து நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • சச்சின், சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற 1-வது ஒருநாள் போட்டியில் அரை சதமும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.

    அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.

    அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் செர்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2வது பாதியில் அதிரடியாக ஆடிய கேமரூன் இரு கோல் அடித்து சமன் செய்தது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் செர்பியா, கேமரூன் அணிகள் மோதின.

    போட்டியின் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் காஸ்டெலொடோ ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் செர்பியா இரு கோல்கள் அடித்து அசத்தியது. 46-வது நிமிடத்தில் பாவ்லோவிக் ஒரு கோலும், 48வது நிமிடத்தில் சாவிக் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் செர்பியா 2-1 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 53-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேமரூன் வின்செண்ட் அபுபக்கர் 63 வது நிமிடத்திலும், எரிக் மாக்சிம் 66வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    ஆட்டநேர இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு.
    • உலகக்கோப்பை தொடருக்கு முன் இன்னும் 25 ஆட்டங்களே உள்ளன.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.

    அடுத்த வருடம் நவம்பர்- டிசம்பரியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி எப்படியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என நினைக்கிறது.

    ஆனால், டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து தொடரை தவிர்த்து இன்னும் 25 போட்டிகளில்தான் இந்திய அணி விளையாட உள்ளன. இந்த நிலையில் தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் டைமண்ட்-ஐ தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது கைஃப் கூறியதாவது:-

    50 ஓவர் உலகக் கோப்பைக்கு தன்னை தயார்படுத்த இந்திய அணி விரும்பினால் நியூசிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் தொடரில் இருந்து அதை செய்ய வேண்டியது அவசியம். உலகக் கோப்பைக்கு முன் அதிக அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இல்லை. உலகக் கோப்பை வரை 25 போட்டிகள் இருக்கலாம்.

    முக்கியமான பிரச்சினை பந்து வீச்சில் உள்ளது. நீங்கள் ஷர்துல் தாகூரை பார்த்தீர்கள் என்றால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் விளையாடவில்லை. முகமது சிராஜ் இந்தியாவிற்கு திரும்பியதை பார்த்து இருப்பீர்கள். அவர் ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.

    ஏன் புவனேஷ்வர் குமார் அணியில் இல்லை. அதற்கான எந்த காரணமும் என்னிடம் இல்லை. அவர் சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், அணியில் இடம் பெறவில்லை. புது வீரர்களை தேடுவதற்கான பழைய வீரர்களை இழந்து கொண்டு வருகிறோம். டைமண்ட்-ஐ தேடுவதற்கான தங்கத்தை தொலைத்த கதையாக இருக்கிறது.

    உலகக் கோப்பைக்கு தயார் படுத்துதல் தொடங்கிவிட்டால், அதன்பின் பரிசோதனை என்ற பேச்சுக்கே நேரமில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் கடந்து விட்டால், உலகக் கோப்பைக்கான அணுகுமுறைகளை தேட வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, வீரர்கள் யார் என்பதை முடிவு செய்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.

    • தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.
    • தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 'ஜி' பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கேமரூன்-செர்பியா ( மாலை 3.30 ), பிரேசில்-சுவிட்சர்லாந்து (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    கேமரூன் தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடமும், செர்பியா 0-2 என்ற கணக்கில் பிரேசிலிடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரேசில் , சுவிட்சர்லாந்து அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.

    5 முறை சாம்பியனான அந்த அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக ஆடவில்லை. ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து தர வரிசையில் 15-வது இடத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய ஆட்டங்களில் பிரேசில் 3-ல் சுவிட்சர்லாந்து 2-ல் வெற்றி பெற்று உள்ளன.

    குரூப் 'எச்' பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் தென் கொரியா- கானா (மாலை 6.30), போர்ச்சுக்கல்-உருகுவே (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. கானா அணி 2-3 என்ற கணக்கில் போர்ச்சுக்கலிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும்.

    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கொண்ட போர்ச்சுக்கல் அணி முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. உருகுவே அணி பலம் வாய்ந்த போர்ச்சுகலை தோற்கடித்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் மகாரஷ்டிரா அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் குவித்தார்.
    • இந்த போட்டியில் அவர் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் விளாசினார்.

    விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

    இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். அதில் 43 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.

    • 37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும்.

    ரியாத்:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த அவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

    அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரரான ரொனால்டோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதில் அவர் சாதனையும் புரிந்துள்ளார்.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது ரொனால்டோ இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

    அந்த கிளப் நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து அவர் மான்செஸ்டர் யுனைடட் கிளப் மானேஜர் எரிக் டென்னை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    இந்த நிலையில் சவுதி அரேபியா கிளப் ஒன்று ரொனால்டோ தங்கள் கிளப்பில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை வழங்க முன் வந்துள்ளது.

    ரியாத்தில் உள்ள அல்நாசர் கிளப் ரொனால்டோவை 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.1838 கோடி தர இருப்பதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும். இதை சி.பி.எஸ். ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

    37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் அந்த கிளப்பில் விளையாட தனது விருப்பத்தை தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ரொனால்டோவின் இறுதி முடிவுக்காக அந்த கிளப் காத்திருக்கிறது.

    அல் நாசர் அணி ஆசியாவின் சிறந்த கிளப்களில் ஒன்றாகும். 9 'லீக்' பட்டங்களை வென்றுள்ளது. ரொனால்டோ கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக கோப்பையில் கானாவுக்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மா இல்லாததால் தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    • 14 இன்னிங்சில் ஒரு சதம் 4 அரைசதம் விளாசியுள்ளார்.

    இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான கில். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவிற்கு அவ்வப்போது ஓய்வு அளிக்கப்படும்போது சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதுவரை 14 இன்னிங்சில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் விளாசியுள்ளார். சராசரி 60-க்கு மேல் ஆகும்.

    நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 45 ரன்கள் எடுத்திருந்தார்.

    இரண்டு மூன்று முறை மழையால் போட்டி நிறுத்தப்பட்டு இறுதியாக கைவிடப்பட்டது. இப்படி நடப்பதால் வீரர்கள் ஏமாற்றம் அடைவதுடன் எரிச்சலும் அடைவார்கள். ரசிகர்களும் அதேபோல்தான்.

    இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்த அணியில் இடம் பிடிப்பதற்கு அச்சாரம் போட்டிவிடலாம் என நினைத்திருந்தார்.

    போட்டி ரத்தான பிறகு, எதிர்காலம் மற்றும் மழை பெய்தால் போட்டியை நடத்த மாற்று ஏற்பாடு குறித்து பேட்டியளித்தார்.

    இதுகுறித்து சுப்மன் கில் கூறியதாவது:-

    உள்விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாடுவது சற்று கடினம். ஒருவேளை மழை பெய்தால் மைதானத்திற்கு மேல் கூரை அமைக்கலாம். இது எல்லாம் கிரிக்கெட் போர்டு எடுக்க வேண்டிய முடிவு. அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் எரிச்சலூட்டும்.

    ஏராளமான போட்டிகள் மழையால் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஒரு நிலைப்பாட்டை நான் எப்படி எடுப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. இது மிகப்பெரிய முடிவு. ஆனால் மேற்கூரை அமைப்பதாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.

    இந்திய அணியில் நிரந்த இடம், தொடக்க பேட்ஸ்மேன் என்ற முன்னோக்கிய யோசனையை நான் பார்க்கவில்லை. அதிகப்படியான வாய்ப்பை பெறுவதற்கான அனைத்தையும் பெற முயற்சிப்பேன். அதன்பின் அதிக ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்காக மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

    முதல் ஒருநாள் போட்டியில் கூட நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அணி நிர்வாக கூட்டத்தில் கூட நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்துதான் பேசப்படும். நிலைத்து நின்ற பேட்ஸ்மேன் இன்னிங்சை பினிஷ் செய்தால், அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார்.

    • நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்.
    • கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

    நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றது. அடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் இதில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.


    கடந்த 2015-ல் அறிமுகமானாலும் 2-வது கிரிக்கெட் போட்டியை 2019-ல் விளையாடினார். பின்னர் 2021 வரை இந்திய அணியில் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் இந்த வருடம் ராஜஸ்தானின் கேப்டனாகவும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார். அதில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு நல்ல ரன்களை குவித்து நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு டி20 உலக கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கொந்தளித்த ரசிகர்களின் கோபத்தை தணிக்க அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து ஏ ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரை அறிவித்து பிசிசிஐ மழுப்பியது.


    அதில் 3 -0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு நடைபெற்று வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்கள் எடுத்தார் சஞ்சு சாம்சன். ஆனாலும் 6வது பவுலர் தேவை என்பதற்காக அடுத்த போட்டியிலேயே மனசாட்சியின்றி இந்திய நிர்வாகம் அவரை அதிரடியாக நீக்கியது.


    சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு எவ்வளவு மறுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அநீதிக்கு எதிராக ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு என்ற பொன்னெழுத்துக்களை கொண்ட பதாகைகளை தாங்கி பிடித்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.


    ஆம் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் "கத்தாரில் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் கொண்ட நாங்கள் சஞ்சு சமசனுக்கு ஆதரவு கொடுக்கிறோம்" என்றும் "எந்த போட்டியாக இருந்தாலும் எந்த அணியாக இருந்தாலும் அல்லது வீரராக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்" என மிகப்பெரிய பதாகைகளில் தங்களது ஆதரவு வசனங்களை கையில் பிடித்து ஆதரவு கொடுத்தார்கள்.

    இதை அவரின் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உட்பட ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். 

    ×