என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் பாதியில் அமெரிக்க வீரர் கோல் அடித்தார்.
    • இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் பி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் ஈரான்-அமெரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    2வது பாதியில் ஆட்டத்தை சமன் செய்ய ஈரான் வீரர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் இங்கிலாந்து வீரர் 2 கோல்கள் அடித்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற பி பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2வது பாதி ஆட்டத்தின் 50 வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 51வது நிமிடத்தில் மற்றொரு வீரர் பில் போடன் ஒரு கோல் அடித்து வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.

    68வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டு மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பி பிரிவில் 7 புள்ளிகளுடம் அந்த அணி முதலிடம் பிடித்தது.

    • முதல் பாதியில் செனகல் அணி ஒரு கோல் அடித்தது.
    • ஆட்டநேர முடிவில் செனகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஈகுவடார், செனகல் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் செனகல் அணி சிறப்பாக ஆடியது . ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சர் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் செனகல் 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மொய்சஸ் கைசெடொ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலடியாக செனகல் அணியின் கலிடோ கவுலிபலி 70-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

    இந்த தோல்வியின் மூலம் ஈகுவடார் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    • முதல் பாதியில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்தது.
    • கத்தார் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் நெதர்லாந்து, கத்தார் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரெங்கி டி ஜாங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வென்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்தது.

    கத்தார் அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    • இந்திய அணி பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    • நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹேமில்டனில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (புதன் கிழமை) நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது. மழையால் ரத்தானாலோ அல்லது தோற்றாலோ இந்தியா ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.

    சூர்யகுமார் யாதவ், சுப் மன்கில், கேப்டன் தவான் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம்லாதம், கேப்டன் வில்லியம்சன், பின் ஆலன், கான்வே சவுத்தி, ஹென்றி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 

    • கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன்.
    • என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான்.

    கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரின்போது விராட் கோலி கேப்டனாக இருந்தார்.அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல், லீக் சுற்றுடன் நாடு திரும்பியது. இதனால், விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துவந்த நிலையில், அவரே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனையெடுத்து மூன்று விதமான அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகினார்.

    இதனைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்தியதுபோல், இந்திய அணிக்கும் பல கோப்பைகளை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியை ஏற்றப் பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பைனலுக்கு கூட முன்னேறவில்லை. அடுத்து டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக ரோகித் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால், ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், டி20 அணிக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற கேள்விக்கு தற்போது கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம்.

    என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    2019-ம் ஆண்டில் பிரித்வி ஷா 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • லீக் போட்டிகளில் அதிக பணம் கிடைப்பதால் வீரர்கள் அதில் விளையாட ஆர்வம்.
    • டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றம்

    ஐ.பி.எல். உள்பட பல டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் பிரபலம் அடைந்துள்ளன. இதில் விளையாடும் வீரர்களுக்கும் அதிக அளவில் பணம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் இதுபோன்ற தொடர்களில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் நினைத்ததுபோல் லீக் போட்டிகளில் விளையாட முடியாது. மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, கிரிக்கெட் வாரியம் என்.ஓ.சி. அளித்தால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது.

    தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருநது டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷம் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

    மார்ட்டின் கப்தில் பிக் பாஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியிடம் கேட்கப்பட்ட போது, கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியது என்பது சுவாரஸ்யமானது. நான் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ளேன். இந்த வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறேன். வருகிற வருடத்தில் எவ்வாறு நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது.

    உண்மையா சொல்லப்போனால், நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து நான் யோசிக்கவில்லை. வருடம் மாதங்களில் போதுமான அளவிற்கு போட்டிகள் உள்ளன. ஆனால், அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் நிலைத்து நின்று கிரிக்கெட் சூழல் மாறுவது குறித்து யோசிக்க முயற்சிக்க வேண்டும்.'' என்றார்.

    • பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும்.
    • பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம்.

    நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றாலும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் 1 -0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் புது முகங்களாக அர்ஷிதீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.

    ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜோடியாக அறிமுகமான இவர்கள் இடது - வலது கை பவுலர்களாக எதிரணிக்கு சவாலை கொடுப்பவர்களாக உள்ளனர்.

    இந்நிலையில் பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷிதீப் சிங் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    உம்ரான் மாலிக்குடன் நான் மகிழ்ச்சியாக செயல்படுகிறேன். என்னை போலவே அவரும் அவ்வப்போது நகைச்சுவைகளை செய்வார். பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம்.

    ஏனெனில் 155 வேகத்தில் அவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஓவரிலேயே 135 வேகத்தில் எதிர்கொள்ளும் என்னை சந்திக்கும் போது தடுமாறுகிறார்கள். அந்த வகையில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறோம். இந்த நட்பை தொடர விரும்புகிறோம்.

    ஒருநாள் போட்டிகள் மிகவும் பெரியதாகும். அதில் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும். அதனால் எப்போதுமே என்னுடன் எதிர்புறம் பந்து வீசும் பவுலரை நான் பார்ப்பேன். அவர் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் நான் விக்கெட் எடுப்பதை விட ரன்களை குறைவாக கொடுக்க நினைப்பேன்.

    அதை செய்தாலே அழுத்தம் உண்டாகி யாருக்காவது விக்கெட் விழுந்து விடும். ஏனெனில் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். எனவே நான் எதிரணியை அட்டாக் செய்தால் என்னுடைய பார்ட்னர் பவுலர் கட்டுப்பாடாகப் பந்து வீசுவார்.

    என்று கூறினார். 

    • ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.
    • இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    கேப்டவுன்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களை வைத்துள்ளது. இந்த அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வாசிம் அக்ரம் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்
    • நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?.

    பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்தவர் வாசிம் அக்ரம். 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    56 வயதான வாசிம் அக்ரம் தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். தான் முதன்முதலாக பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆனபோது, அப்போதைய கேப்டன் சலீம் மாலிக் தன்னை வேலைக்காரன் போன்று நடத்தினார். துணிகள் மற்றும் காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    வாசிம் அக்ரமின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டிற்கு சலீம் மாலிக் பதில் அளித்துள்ளார்.

    சலீம் மாலிக் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அவருடைய கருத்துகள் மற்றும் எந்த அர்த்தத்தில் அவர் அதை எழுதினார் என்பதைப் பற்றிய அவரது பார்வையை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான் அணி தொடர்களில் விளையாட செல்லும்போது அங்கு சலவை மெசின் பயன்படுத்தப்படும். நாங்கள் யாரும் கைகளால் துணிகளை துவைப்பது கிடையாது.

    நான் அவரிடம் இதுகுறித்து இன்றும் பேசவில்லை. அந்த புத்தகத்தையும் படிக்கவில்லை. அதனால் அதுகுறித்து முழுமையாக கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஒரு சகாக்கள். இணைந்து நேரத்தை செலவழித்துள்ளோம். ஆகவே, நான் எந்தவிதமாக சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை.

    நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?. நான் ஏன் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டும்.

    துணி துவைப்பு, மசாஜ் செய்வது குறித்து அவரை பேசியது, அவர் அவரையே அவமதித்துள்ளார். இதுவரை அவரிடம் பேசவில்லை. எந்த அர்த்தத்தில் அவர் அப்படி எழுதினார் என்பது எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு சலீம் மாலிக் தெரிவித்துள்ளார்.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது.

    கராச்சி:

    17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் நவம்பர் 27 அன்று இஸ்லமாபாத் வந்தடைந்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9-ந் தேதி முலதானிலும், கடைசி டெஸ்ட் போட்டி 17-ம் கராச்சியிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புக்கு தருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது மற்றும் இங்கு இருப்பது சிறப்பிக்குரியது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது.

    கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீரர்கள் அறையில் மெக்சிகோ ஜெர்சியால் தரையை மெஸ்சி சுத்தம் செய்ததாக பாக்சர் குற்றச்சாட்டு
    • மெக்சிகோவை அர்ஜென்டினா 2-0 என வீழ்த்தியது

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவிற்கு எதிராக களம் இறங்கியது. இதில் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற முடியும் என நிலையில் அர்ஜென்டினா 2-0 என மெக்சிகோவை வீழ்த்தியது.

    இந்த போட்டி முடிந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்களது அறையில் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது மெக்சிகோ வீரர் அணியும் ஜெர்சிக்கு மேல் அர்ஜென்டினா வீரர்கள் குதிப்பது போன்றும், மெஸ்சி ஜெர்சியை காலால் மிதித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெர்சியால் அறையை க்ளீன் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகின.


    இது மெக்சிகோ நாட்டின் குத்துச் சண்டை வீரர் கனாலோ அல்வாரேஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ''நம்முடைய ஜெர்சி மற்றும் தேசியக்கொடியால் அறையை மெஸ்சி சுத்தம் செய்வதை பார்த்தீர்களா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அத்துடன், ''நான் மெஸ்சியை பார்த்துவிடக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அவருக்கு நன்றாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

    இது டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மெஸ்சியின் ரசிகர்கள் சிலர், மெஸ்சி தரையை சுத்தம் செய்வது போன்று அதில் காட்டப்படவில்லை. மேலும், மெக்சிகோ கொடி அங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அல்வாரஸ், மெக்சிகோவை அவமானப்படுத்தினர் எனக் குறிப்பிட்டார்.

    முன்னாள் அர்ஜென்டினா வீரர் செர்ஜியோ, ''நீங்கள் பிரச்சினையை தேடாதீர்கள். விளையாட்டு முடிந்த பின்னர், வீரர்கள் அறையில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. விளையாடிய பின்னர், வியர்வையால் நனைந்திருக்கும் ஜெர்சியை வீரர்கள் தரையில் போட்டு வைப்பது வழக்கமானதுதான் எனத் தெரிவித்தள்ளார்.

    அல்வாரேஸ் ''நான் அர்ஜென்டினாவிற்கு மரியாதை அளிக்கிறேன். மெக்சிகோவிற்கும் மரியாதை அளிக்க வேண்டும். நான் அர்ஜென்டினாவை பற்றி பேசவில்லை. மெஸ்சி செய்த மோசமான காரியத்தை பற்றி பேசுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ×