என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 4-ம் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தது.
    • ஆட்டநேர முடிவில் சுவிட்சர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் செர்டான் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக 26-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். தொடர்ந்து 35-வது நிமிடத்தில் செர்பியாவின் டுசான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

    முதல் பாதியின் கடைசி கட்டத்தில் 44-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரில் எம்போலோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 48-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரெமோ புருலெர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், சுவிட்சர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததால் சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. செர்பியா அணி தொடரில் இருந்து வெளியேறியது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் கேமரூன் அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் பிரேசில், கேமரூன் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தது.

    இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதி. இதில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபுபெக்கர் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. 

    பிரேசில் அணி தோல்வி அடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 657 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஹாரி புரூக் அதிகபட்சமாக 153 ரன் எடுத்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.

    ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர். இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஹாரி புடூக் 153 ரன்னில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் 41 ரன்னும், ராபின்சன் 37 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஜாஹித் முகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், முகமது அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் பொறுமையுடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஷபிக் 89 ரன்னும், ஹக் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்தார்.
    • ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் வர்ணனையாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், வர்ணனையின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.

    • முதல் பாதியில் உருகுவே அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது.
    • உருகுவே வீரர் ஜார்ஜியன் அடுத்தடுத்து 2 கோல் அடித்தார்.

    கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஹெச் பிரிவில் இன்று இரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் கானா, உருகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 26 நிமிடத்தில் உருகுவே வீரர் ஜார்ஜியன் அரராஸ்கேட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    தொடர்ந்து 32 நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்திய உருகுவே வெற்றி பெற்றது. எனினும் ஹெச் பிரிவில் அடுத்த சுற்றுக்கு கோல்கள் அடிப்படையில் தென்கொரியா 2வது அணியாக முன்னேறியதால்,  கானாவும், உருகுவேயும் போட்டியில் இருந்து வெளியேறின.

    • முதல் பாதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.
    • கூடுதல் நேர ஆட்டத்தில் தென்கொரிய வீரர் 2வது கோல் அடித்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஹெச் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தென் கொரியா, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ ஹோர்டா கோல் அடித்தார். 27 நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் யங் வோன் பதில் கோல் அடித்ததால் முதல் பாதி ஆட்ட முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

    2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 91வது நிமிடத்தில் வாங் ஹி ஷான் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய தென் கொரியா வெற்றி பெற்றது. அடுத்த சுற்று ஆட்டத்திற்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

    • எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள்.
    • பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மேற்கு இந்திய தீவை தேர்ந்த ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, நசென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தமது ஓய்வு முடிவினை அவர் அறிவித்து உள்ளார். இதையடுத்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள பிராவோ டி20 லீக்கில் 15 ஆண்டுகள் விளையாடிய பிறகு நான் இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன் என்று இன்று அறிவிக்கிறேன். இது ஒரு சிறந்த பயணம், நிறைய ஏற்ற தாழ்வுகளுடன் இருந்தது. அதே நேரத்தில், நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மற்றும் முக்கியமாக எனது ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள் என்பதை நான் அறிவேன்.

    ஆனால் அதே நேரத்தில் பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை அணியில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த தலைமுறை சாம்பியன்களுக்கு உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் எனது அழைப்பு இப்போது உள்ளது. பல ஆண்டுகளாக அனைத்து ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 61 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்தார்.
    • சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்தார். 

    அசிம் காசி 37 ரன்னும், சத்யஜீத் பச்சாவ் 27 ரன்னும் அடித்தனர். நவ்ஷாத் ஷேக் 31 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.

    இதையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். சிராக் ஜானி 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 46.3 ஓவர் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதுடன் விஜய் ஹசாரே கோப்பையை 2வது முறையாக தட்டிச் சென்றது.

    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • இரண்டாவது இன்னிங்சில் இன்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது

    பெர்த்:

    ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின்போது லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சேன் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது. இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் . மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீசும் சிறப்பான தொடக்கம் கண்டது. 2-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 18 ரன்களுடனும் , தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும்,களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த தேஜ்நரின் சந்தர்பால் 51 ரன்களிலும் , கிரேக் பிராத்வெய்ட் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.அந்த அணியின் ஜெர்மன் பிளாக்வுட் 36 ரன்களிலும் , கைல் மேயெர்ஸ் 21 ரன்களும் ,ஜேசன் ஹோல்டர் 27 ரன்களும், புரூக்ஸ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 283 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் , பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து 315 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடி வரும் ஆஸ்திரேலியா, இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீசின் முதல் இன்னிங்சைவிட ஆஸ்திரேலியா 344 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

    • இன்றைய போட்டிகளின் முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.
    • இரண்டாவது சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

    நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்) ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இன்றைய போட்டி முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.

    'எச்' பிரிவில் உள்ள தென்கொரியா இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் கானா-உருகுவே அணிகள் மோதுகின்றன.

    இதில் போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. மற்ற அணிகள் வெற்றி கட்டாயத்தில் உள்ளன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டங்களில் 'ஜி' பிரிவில் செர்பியா-சுவிட்சர்லாந்து அணிகளும், பிரேசில்-கேமரூன் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அடுத்த சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்று விட்ட நிலையில் மற்ற அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி , கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெறும்.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து-'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா (இரவு 8.30), 'சி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா-'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிகள் வெளியேற்றப்படும்.

    • அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.

    மும்பை:

    2023-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 23-ந்தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

    ஏலத்தில் பங்கு பெறும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்வது கடந்த நவம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க 991 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 714 பேர் இந்தியர்கள். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசி லாந்தில் இருந்து 27 வீரர் களும், இலங்கையில் இருந்து 20 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    மொத்தம் 277 வெளி நாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்து கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை தான் ஏலத்தில் தேர்வு செய்ய முடியும்.

    பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள். 20 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1.50 கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் என உள்ளது. இதில் ரூ.2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.

    பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், வில்லியம்சன், நிகோலஸ் பூரன், கேமமுன் கரீன் உள்பட 21 பேர் ரூ.2 கோடி அடிப்படையில் உள்ளனர். ரூ.2 கோடி மற்றும் ரூ.1.50 கோடி அடிப் படை விலை பட்டியலில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை. ரூ.1 கோடி பட்டியலில் மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே ஆகிய 3 இந்திய வீரர்கள் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த பிராவே ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

    ×