என் மலர்
விளையாட்டு
- உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
- கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது.
இதனையடுத்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைல் பயனார்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
இந்த மாதம் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியுடன் இந்த குழு இணைந்து செயல்படுவர்.
பிளெமிங் அணியில் இணைவது வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் ஊழியர்களுக்கும் நல்லது என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அவருக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவர் ஒஹானியன் என பெயரிட்டுள்ளனர்.
வாஷிங்டன்:
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு டென்னிசிலிருந்து ஓய்வு அறிவித்தார். இவருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவருடைய கணவர் அலெக்சிஸ் ஓஹானியன் சமூக வலைதளங்களில் அறிவித்தார்.
மேலும் செரீனாவும் குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைபடத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல் பெண் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் என பெயரிட்டிருந்தனர். இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவர் ஒஹானியன் என பெயரிட்டுள்ளனர்.
- அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம்.
- 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.
டூப்ளின்:
இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.
ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரிங்குசிங் கூறியதாவது:-
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம். 3-வது போட்டியிலும் வென்று உயர்நிலையை அடைவதை இலக்காக கொண்டுள்ளோம்.
முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். ஆனால் மழையால் என்னால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.
ஐ.பி.எல். போட்டியில் 5 சிக்சர்கள் அடித்தது எனது வாழ்க்கையை மாற்றியது. அந்த தருணத்தை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்து உள்ளார்கள். ரசிகர்கள் என் மீது அன்பை பொழிவதால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
25 வயதான ரிங்குசிங் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வானார். 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் ரிங்குசிங் 21 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.
ஹம்பன்டோட்டா:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மண்ணில் மோதுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மெகா வெற்றியை ருசித்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 4-வது முறையாகவும் கேப்டனாக 2-வது முறையாகவும் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அசார் அலி மற்றும் யூனிஸ் கான் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
- ஐபிஎல் தொடர் வருடம் வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
- தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்காது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர் வருடம் வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அடுத்த ஆண்டு இந்த மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் ஐபிஎல் தொடர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெறுவார்
- ஸ்ட்ரீக் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.
- அவர் ஸ்ட்ரீக்கிடம் பேசிய மெசேஜ்யை டுவிட்டரில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக். இவர் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஸ்ட்ரீக் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருப்பதாக அவரே வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளார்.
இது முழு வதந்தியாகும். பொய்யான தகவல் பரப்பபட்டுள்ளது. நான் உயிருடன் இருக்கிறேன். நன்றாகவும் உள்ளேன். இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். சமூக ஊடகங்களில் சரி பார்க்கப்படாமல் தகவல்கள் பரவுகிறது. என்னை பற்றி தகவல் அனுப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ட்ரீக் அந்த செய்தியில் தெரிவித்து உள்ளார்.
மேலும் இதனை பொய்யான செய்தி என சக வீரரான ஹென்றி ஒலங்காவும் தெரிவித்துள்ளார். அவர் ஸ்ட்ரீக்கிடம் பேசிய மெசேஜ்யை டுவிட்டரில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே.
இவ்வாறு அந்த பதிவில் கூறினார்.
ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4933 ரன்கள் அடித்ததுடன், 455 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
2005-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ட்ரீக், பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் 2-வது இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் (10.72 வினாடி) மீண்டும் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
- 23 வயதான ஷாகாரி ரிச்சர்ட்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.
புடாபெஸ்ட்:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் உலகின் அதிவேக பெண்மணி யார்? என்பதை தீர்மானிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இறுதிப்போட்டியில் 9 வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் கடைசி ஓடுபாதையில் இருந்து ஓட தொடங்கிய அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலில் சற்று பின்தங்கி இருந்தாலும் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அனைவரையும் பின்னுக்கு தள்ளி 10.65 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் 2-வது இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் (10.72 வினாடி) மீண்டும் வெள்ளிப்பதக்கம் பெற்றார். நடப்பு சாம்பியனும், 5 முறை தங்கப்பதக்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியவருமான மற்றொரு ஜமைக்கா வீராங்கனை 36 வயது ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் 10.77 வினாடியில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
23 வயதான ஷாகாரி ரிச்சர்ட்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.
2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஷாகாரி ரிச்சர்ட்சன் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் ஒரு மாதம் தடையுடன் அந்த ஒலிம்பிக்கையும் தவறவிட வேண்டியதானது. அத்துடன் அவர் கடந்த ஆண்டு (2022) நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் ஏற்கனவே வாகை சூடியிருந்தார். பெண்கள் பிரிவில் ஷாகாரி ரிச்சர்ட்சன் வெற்றியின் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் இரு பிரிவிலும் அமெரிக்கா 2017-ம் ஆண்டுக்கு பிறகு முழுமையாக கோலோச்சியுள்ளது.
ஷாகாரி ரிச்சர்ட்சன் கூறுகையில், 'எனது முதலாவது பெரிய சர்வதேச போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று இருப்பதால் இதனை நிச்சயமாக ஒரு நல்ல தொடக்கம் என்றே சொல்வேன். இதில் எனது சிறந்த திறன் வெளிப்பட்டது. நான் முன்பை விட நல்ல நிலையை எட்டி இருக்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்' என்றார்.
- ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனா அல்லது இடக்கை பேட்ஸ்மேனா என்பது முக்கியமே அல்ல.
- மூன்று இடக்கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்ற விவாதம் முற்றிலும் பயனற்ற ஒரு சிந்தனை.
மும்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டாப்-7 பேட்மேன்களில் குறைந்தது 3 இடக்கை ஆட்டக்காரர்கள் இடம் பெற வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
ரவி சாஸ்திரியின் யோசனைக்கு இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கம்பீர் கூறுகையில், 'ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனா அல்லது இடக்கை பேட்ஸ்மேனா என்பது முக்கியமே அல்ல. மூன்று இடக்கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்ற விவாதம் முற்றிலும் பயனற்ற ஒரு சிந்தனை. நீங்கள் விளையாடுபவர்களின் தரத்தை தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல வீரர் இடக்கை அல்லது வலக்கை எதுவாக இருந்தாலும் எல்லா சூழலிலும் சிறப்பாக ஆடுவார்.' என்றார்.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
சென்னை:
எம்.சி.சி.- முருகப்பா தங்கக் கோப்பைக்கான 94-வது அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்திய கடற்படை, இந்திய ரெயில்வே, ஹாக்கி கர்நாடகா, மத்திய தலைமை செயலகம், 'பி' பிரிவில் பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட், இந்திய தணிக்கை துறை அலுவலகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளில் இரு ஆட்டங்கள் நடக்கின்றன. தமிழ்நாடு-தணிக்கை துறை அலுவலகம் (மாலை 4.15 மணி), இந்திய ரெயில்வே- மத்திய தலைமை செயலகம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. 4 ஆண்டுக்கு பிறகு நடக்க உள்ள இந்த போட்டியில் சாம்பியன் கோப்பையை வெல்லும் அணி ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.5 லட்சமும் பரிசுத்தொகையாக பெறும். அரைஇறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் கிடைக்கும் இது தவிர சிறந்த வீரர், சிறந்த முன்கள வீரர், சிறந்த கோல் கீப்பர் மற்றும் பின்கள வீரர், இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்பவர், தொடர்நாயகன் ஆகியோருக்கு உயர்ரக சைக்கிளுடன், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
இந்த தகவலை சென்னையில் நேற்று எம்.சி.சி. தலைவர் விஜய்குமார், முருகப்பா குழும நிர்வாகி அருண் முருகப்பன் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 'கொரோனா பெருந்தோற்று காரணமாக 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த போட்டியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டில் உள்ள முன்னணி அணிகளின் அற்புதமான ஆட்டத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இந்த ஆண்டு பரிசுத்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன. ஹாக்கி போன்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது. இந்த போட்டியை பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்று கூறினர்.
- 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டியில் ஜோதியால் 29-வது இடத்தையே பிடிக்க முடிந்தது
- ஆண்களுக்கான 800மீ ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார் சோபிக்க தவறினார்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி கலந்து கொண்டார்.
ஆனால் அவர் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து, அவருடைய தகுதிச்சுற்று பிரிவில் (ஹீட்) ஏழாவது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஜோதியின் தேசிய சாதனையாக 12.78 வினாடி உள்ளது. இந்த இலக்கைக் கூட அவரால் எட்ட முடியவில்லை.
ஒவ்வொரு பிரிவிலும் (ஹீட்) இருந்து முதல் நான்கு பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்பின் வேகமாக பந்தய தூரத்தை கடந்த மேலும் 4 பேர் (அனைத்து பிரிவிலும் இருந்து மொத்தமாக) அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ஜோதியால் 29-வது இடத்தையே பெற முடிந்தது.
ஆண்களுக்கான 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் கிருஷ்ணன் குமார், அவருடைய பிரிவில் (ஹீட்) 7-வது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார். அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 50.36 வினாடிகளில் கடந்தார். அவருடைய சிறந்த ஓட்டம் ஒரு நிமிடம் 45.88 வினாடியாகும். ஒவ்வொரு ஹீட்டிலும் இருந்து முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். மேலும், வேகமாக ஓடிய மூன்று பேர் தேர்வு செய்யப்படுவாரக்ள்.
ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி குறைந்தபட்சம் அரையிறுதிக்காவது முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தகுதி சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நாளான கடந்த சனிக்கிழமை 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சப்ளே இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
ஏற்கனவே, 20கி.மீ. ஆண்கள் நடைபயணம், ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கான நீளம் தாண்டுதல், ஆண்களுக்கனா டிரிபிள் ஜம்ப், 400மீ தடைதாண்டி ஓட்டம் ஆகியவற்றில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.
- இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
- இதுவரை விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டப்ளின்:
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.
முதல் 2 ஆட்டத்தில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் பும்ரா வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிதேஷ் சர்மா, ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இன்னும் வாய்ப்பை பெறவில்லை.
இந்திய அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோரும், பந்துவீச்சில் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பால் ஸ்டிரிங் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக போராடும்.
இரு அணிகள் இடையே இதுவரை நடந்த 7 டி20 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.






