search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மீண்டும் ஏமாற்றம்
    X

    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மீண்டும் ஏமாற்றம்

    • 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டியில் ஜோதியால் 29-வது இடத்தையே பிடிக்க முடிந்தது
    • ஆண்களுக்கான 800மீ ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார் சோபிக்க தவறினார்

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி கலந்து கொண்டார்.

    ஆனால் அவர் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து, அவருடைய தகுதிச்சுற்று பிரிவில் (ஹீட்) ஏழாவது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஜோதியின் தேசிய சாதனையாக 12.78 வினாடி உள்ளது. இந்த இலக்கைக் கூட அவரால் எட்ட முடியவில்லை.

    ஒவ்வொரு பிரிவிலும் (ஹீட்) இருந்து முதல் நான்கு பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்பின் வேகமாக பந்தய தூரத்தை கடந்த மேலும் 4 பேர் (அனைத்து பிரிவிலும் இருந்து மொத்தமாக) அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ஜோதியால் 29-வது இடத்தையே பெற முடிந்தது.

    ஆண்களுக்கான 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் கிருஷ்ணன் குமார், அவருடைய பிரிவில் (ஹீட்) 7-வது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார். அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 50.36 வினாடிகளில் கடந்தார். அவருடைய சிறந்த ஓட்டம் ஒரு நிமிடம் 45.88 வினாடியாகும். ஒவ்வொரு ஹீட்டிலும் இருந்து முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். மேலும், வேகமாக ஓடிய மூன்று பேர் தேர்வு செய்யப்படுவாரக்ள்.

    ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி குறைந்தபட்சம் அரையிறுதிக்காவது முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தகுதி சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடக்க நாளான கடந்த சனிக்கிழமை 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சப்ளே இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

    ஏற்கனவே, 20கி.மீ. ஆண்கள் நடைபயணம், ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கான நீளம் தாண்டுதல், ஆண்களுக்கனா டிரிபிள் ஜம்ப், 400மீ தடைதாண்டி ஓட்டம் ஆகியவற்றில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.

    Next Story
    ×