என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சிவபெருமானுக்கும் சந்திரபகவானுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
    • யார் பிட்சையிடும்போது அந்த பாத்திரம் புல்லாகுதோ அப்போதான் சிவனின் கையோடு ஒட்டியிருக்கும் அந்த கபாலம் விலகும்னு விதி.

    மார்கழி மாசம் சொர்க்கம் பற்றிய பழமொழி சொல்றீங்க... இதுக்கு ஒரு சபாஷ் போட்டாலும் எங்கேயோ உதைக்குதேன்னு யோசிக்கிறீங்களா?

    கட்டுரை எழுத உட்காரும் போதே பக்கத்தில் காத்துவாக்குலே ஒரு காதல் இல்லைங்க சத்தியமா யாரோ இரண்டு பேரோட பேச்சு சத்தம், காதை சற்றே தீட்டிக்கொண்டு கேட்க, ஏம்பா... மாலைமலர்லே உன்னைப் பத்தி ஒரு பழமொழி சொல்லி இருக்காங்களாமே?

    என்னன்னு?

    எந்த வேலை வெட்டிக்கும் போகாம விருந்துக்குன்னு வந்துட்டு இன்னமும் கிளம்பாமத் தரையைத் தேச்சிட்டு இருக்கியே அதைத்தான் பூடகமா சொல்லி இருக்காங்களாம்.

    சம்பந்தப்பட்ட மனிதர் நம்ம டைட்டிலைப் பார்த்து ரேப்பிடோவோ, மெட்ரோ டிரைனோ பிடித்து வந்து அடிக்க வருவதற்குள் எஸ்கேப்.

    யப்பா அதென்னடா சோறு கண்ட இடம் சொர்க்கன்னு கேட்கறீங்க. நாம நினைக்கிறாமாதிரி... மல்லாக்கா படுத்துட்டு விட்டத்தைப் பார்த்து வேளா வேளைக்கு முட்டையோட கறிக்குழம்பும் சாப்பிட்டுகிட்டு கிடக்கிறது சொல்லுறீயா? அண்ணாத்தேயின் வார்த்தையில் இளநீர் வெட்டும் அரிவாளின் விஷ்க்.

    அய்யோ இல்லைங்க. நிஜமாகவே இந்த பழமொழி ஆண்டவன் சமாச்சாரம்தான். அடடா ஆள்பவர்கள் இல்லைங்க ஆண்டவர்..

    ஆண்டவர்னா பிக்பாசுதானே...

    அடப்பாவி ஆண்டவன்னா கடவுள். நான் சட்டென்று கட்டுரைக்குள் நுழைந்தேன்.

    சிவபெருமானுக்கும் சந்திரபகவானுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

    அட அதான் எங்களுக்கு தெரியுமே, தொடர்பில்லாமயா அவரு சந்திரனை தலையிலே ஸ்டைலா வைச்சிருக்காரு...

    நிலான்னா யாருக்குத்தான் பிடிக்காது. நிலாவிலே வடை சுடற ஆயாவை பார்க்கவே நானெல்லாம் நடுராத்திரியிலே வானத்தை உத்து உத்துப் பார்த்திருக்கிறேனாக்கும்.

    ஏம்பா அதென்ன இந்த நிலா மாசத்துலே ஒரு நாள் மட்டும் முழுசா இருக்கு. அது எதனாலன்னு உனக்கு தெரியுமா?

    எங்கே சொல்ல விடறீங்க? நிலா முழுமையானதுக்கும் ஒரு கதை இருக்கு.

    சொல்லு சொல்லு கேட்போம்... அவர் ஆர்வமானார். நான் ஆரம்பித்தேன். ஒருமுறை தட்சனால் ஏற்பட்ட சாபத்தில் இருந்து மீள சிவபெருமானை நோக்கி சந்திரன் தவம் இருந்து அதன் பயனாக முழுமையான ஆற்றலையும் பெற்ற தினமே பவுர்ணமி. அதுவும் சாதாரண பவுர்ணமியில்லைங்க ஐப்பசி பவுர்ணமி. மத்த மாசத்தைக் காட்டிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும். அப்போது சந்திரன் மிக அதிக ஒளியுடன் காட்சி தருவதாக அறிவியல் ரீதியாகவும் நிரூபணம் செய்யப்பட்டு இருக்கு.

    ஒருமுறை சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    அடடா அடுத்த கதையா?

    ம்... பிரம்மாவிற்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தது. இப்படி என்னை அடிக்கடி நீங்க எதிர்த்து பேசுறாமாதிரி ஒருதபா பிரம்மனும் எதிர்த்து பேசிட்டார். நம்ம சிவனுக்கு கோபம் வந்து ஐந்து தலையிலே ஒரு தலையை எடுத்துட்டார். இதனால அவருக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டுவிட்டது. பகதி பிட்சாந்தி... என்று பிட்சாண்டியாக காட்சியளி க்கும் சிவன் கையில் பிரம்மனின் கபாலமே பிட்சைப் பாத்திரமாக மாறிவிடுகிறது.

    யார் பிட்சையிடும்போது அந்த பாத்திரம் புல்லாகுதோ அப்போதான் சிவனின் கையோடு ஒட்டியிருக்கும் அந்த கபாலம் விலகும்னு விதி. அவரு தன் விதியை நொந்து காசிக்கு போகிறார். அங்கே ஸ்ரீ அன்னபூரணி தேவி அன்புடன் அவருக்கு சாப்பாடு போட கபாலம் நிரம்பி, தோஷமும் விலகிட்டதாம். இது நடந்ததும் ஒரு ஐப்பசி மாத பவுர்ணமி.

    தம்பி இன்னும் பழமொழியோட விளக்கத்திற்கு வரலை...

    அங்கேதானே வர்றேன். நாம சாப்பிடும் சாப்பாடுதான் ஆண்டவன். இத்தனை உழைப்பும் எதற்காகங்க எண்ஜான் வயிற்றுக்காகத்தானே.

    சிவனின் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம். நல்ல மனத்தோடு நல்ல எண்ணங்களோடு, அன்போடு சமைக்கப்படும் உணவு ஒரு சொர்க்கம் மாதிரி ருசிக்குமாம்.

    நல்லா சொல்லு இப்போ சுடுதண்ணியைக் கூட சுகிலேதானே ஆர்டர் பண்றாங்க.

    அட இருங்க சார். அஹமன்னம், அன்னமே கடவுளின் வடிவம். அன்னமே தானாக இருக்கிறேன் என்று ஈசனே சொல்வதாக சாம வேதம் கூறுகிறது.

    நாம் வசிக்கும் இந்த உலகம் நிலம்,நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று பஞ்ச பூதங்களால் ஆனது. திருமூலர் இதை அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று அழகாக கூறியிருக்கிறார்.

    அந்த பஞ்ச பூதங்கள் ஒருமித்து செயல்பட்டு எல்லா உயிர்களுக்கும் உணவும் நீரும் குறைவின்றி கிடைக்கச் செய்ய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தொடரப்படுவதே அன்னாபிஷேகம் ஆகும்.


    நிலத்தில் விதைக்கும் நெல், ஆகாயத்தில் இருந்து பொழியும் மழை நீரினால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியன் வெப்பத்தால் பால் இறுகி நெல்லாய் உயர்ந்து நிற்கிறது. அதன் பின் உமி நீக்கி அரிசியாக்கி மண்ணால் ஆன பானையில் நீரில் கலந்து, காற்றின் உதவியால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள எல்லா உயிர்களுக்கும் உணவாகிறது.

    இப்போது சொல்லுங்கள் அன்னமும் பஞ்சபூதங்களோடு சேர்ந்ததுதானே. பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரிசி அன்னமாக இறைவனிடம் போய் சேருவதைப் போல, பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய உயிர்களும் ஒருநாள் இறைவனின் பாதம் போய் சேரவேண்டும்.

    உமி நீங்கி நெல்லாகி அரிசியாய் மாறி பக்குவப்படும் உணவைப் போல மனிதனும் பக்குவப்பட்டால் சொர்க்கம் அடையலாம் என்பதன் மாற்றம் தான் சோறு கண்டால் சொர்க்கம்.

    அட என்ன அருமையா சொல்லிகினேப்பா...

    முழு நிலவு நாளில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதைக் காண்பவர்களுக்கு எந்த நோய் நொடியும் வராது, நினைத்தது நடக்கும் மோட்சம் கிட்டும் என்பதும் ஐதீகம்.

    சிவலிங்கத்தின் கீழ்ப்பகுதி-பிரம்ம பாகம்

    நடுப்பகுதி- விஷ்ணு பாகம்

    மேற்பகுதி - சிவபாகம்

    இந்த முன்று பிரிவாக பிரிக்கப்படும் சிவலிங்கத்தின் திருமேனியை மூடும் அளவிற்கு அன்னத்தை சாத்துவார்கள். வேத பாராயணம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களை படித்து, தீபாராதனைச் செய்து பிரசாதமாக கொடுப்பார்கள். பிரசாதம் போக மீதமான அன்னத்தை திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைப்பார்கள். இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பலனடையும். சிலநேரம் பசியில் வாடும் ஏழைகளின் வயிறும் நிறையும்.

    சந்திரன் சாபம் மேற்கொண்டார் என்று சொன்னோம் அல்லவா, சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. அதன் மூலம் அன்னாபிஷேகம் செய்யும் போது சந்திரனைப் போல பலம் பெற்று ஒளிவீசி முழு ஆற்றலும் பெறுவார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

    அன்னாபிஷேகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்கமாகக் கருதப்படுவதால், அன்னா பிஷேகத்தை தரிசனம் செய்வது கோடி சிவ லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு சமம்.

    இனிமே சோறு கண்ட இடமே சொர்க்கம்னு சொல்லும் முன்னர் சிவபெருமானை நினைத்துக் கொள்ளுங்கள்.

    • 1978 -ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
    • வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    மனதில் என்ன தோன்றுகிறதோ?

    யாராக இருந்தாலும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் துணிந்து சொல்லக்கூடியவர் விஜயகாந்த். இதனால் அவர் இழந்தது அதிகம்.

    அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நியாயத்தின் பக்கம் இருந்து கொண்டு ஓங்கி குரல் கொடுத்து வந்தார் விஜயகாந்த்.

    அவரது சுபாவத்தை தான் நடிக்கும் படங்களிலும் வெளிப்படுத்தினார்.

    நாராயணன் விஜயராஜாக மதுரை திருமங்கலத்தில் பிறந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையுடன் சேர்ந்து அவரது ரைஸ் மில் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து 1978 -ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அப்போது படத்தின் இயக்குனர் காஜா அவருக்கு விஜய காந்த் என்ற பெயரை சூட்டினார். 1979-ம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தில் நடித்தார்.

    அடுத்ததாக 1980-ம் ஆண்டு இவர் நடித்த தூரத்து இடி முழக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகி அவர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை விஜய காந்த்துக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

    இந்தப் படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி பதிப்பில் ரஜினியும், தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர். அங்கும் படம் வெளியாகி வெற்றியை பெற்றது. எஸ்.ஏ.சந்திர சேகருடன் 17 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.

    அடுத்ததாக அவர் நடித்து வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், என் புருஷன் எனக்கு மட்டும்தான் போன்ற குடும்ப பாங்கான படங்களின் மூலம் பெண்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து ரஜினி, கமல் ஆகியோருக்கு இடையே தனக்கென ஒரு தனி இடத்தை சினிமா துறையில் உருவாக்கினார்.

    விஜயகாந்த் படம் என்றாலே அதிரடி சண்டை படம் தான் என்று திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே திருப்தி செய்தார்.

    சண்டை காட்சிகளில் சுவரில் காலை ஊன்றி கொண்டு சுற்றி சுற்றி எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தார்.

    அந்தக் காட்சிகள் விஜயகாந்தின் அடையாளச் சின்னமாகவே இதுவரை இருந்து வருகிறது. பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்களை பயன்படுத்தாமல் அவரே துணிச்சலாக நடித்தார்.

    1984-ல் பதினெட்டு படங்களும், 1985-ல் பதினேழு படங்களும் நடித்து சாதனை செய்தார்.

    புரட்சிகரமான பல படங்களில் நடித்ததால் ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது.

    தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். பல புதுமுக இயக்குனர்களை உருவாக்கிய பெருமை விஜயகாந்தை சேரும். அரவிந்தராஜ் இயக்கிய ஊமை விழிகள், ஆர்.கே.செல்வமணியின் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அவரால் அறி முகப்படுத்தப்பட்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

    அவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் நூறு நாட்கள் தாண்டி சாதனை படைத்தது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அழைக்கப்பட்டார்.

    ஊமை விழிகள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற படங்களில் தன் வயதுக்கு அதிகமான கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்துள்ளார்.

    விஜயகாந்த் 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்துள்ளார். இந்த 36 ஆண்டுகளில் அவர் 156 படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த சகாப்தம் படமே அவரது கடைசி படம். அதில் விஜயகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தார்.

    1979-ம் ஆண்டு முதல் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு கதாநாயகன் ஆகி சினிமாவில் உச்சம் தொட்டார். சினிமா உலகம் உள்ள வரை விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    • நடைப்பயிற்சியின் பலன்களை உறுதி செய்ய பல்வேறு ஆய்வுகள் உலகநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • இன்சுலின் ஹார்மோன் பணியை செய்யவிடாமல் தடுக்க கூடியதாக இருப்பது உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் தான்.

    'உலகின் நீரிழிவு நோயின் தலைநகரம்' என்று கருதப்படும் நாடாக உள்ளது இந்தியா. காரணம் உலகின் ஒட்டுமொத்த சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் 17 சதவீதம் பேர் நம் நாட்டினர் தான். அதில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே உடற்பயிற்சியை மேற்கொள்வதாக ஆய்வுகள் கூறுவது வருத்தத்திற்குரியது.

    பல ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் கூட உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாமல், மருந்து மட்டுமே போதும் என்ற தவறான கணிப்பில் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர்.

    உண்மையில் சர்க்கரை நோயினைப் பொறுத்தமட்டில் மருந்துகள் தரும் பலனை விட நடைப்பயிற்சியும், உடல்பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும் மிகப்பெரும் பலன்களைத் தரக்கூடியதாக உள்ளன. நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் வரை மிதமான செயல்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் என்கிறது நவீன அறிவியல். இதனால் இன்சுலின் செயல்திறன் அதிகரிக்கும் என்றும், சர்க்கரை அளவு கட்டுப்படும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    முதுமையில் நீரிழிவு நோய் கட்டுப்பட உணவு கட்டுப்பாட்டிற்கு அடுத்தாற் போல், அடுத்து இருக்கும் ஒரே வழி உடல்பயிற்சி தான். முதுமையில் உடல் சோர்ந்து எலும்புகளும் தசைகளும் வலுவிழந்த நிலையில் அத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது கடினம் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் நல்வாழ்வை நாட வேண்டி, மருத்துவமனை வாசலை நாடாமல் இருக்க, மனதில் திறம் கொண்டால் உடல் ஒத்துழைப்பு நல்கும். ஆரோக்கியம் கிட்டும்.

    மனம் செம்மையானால் உடலில் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடும் சீராகும் என்கிறது நவீன அறிவியல். "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்கிறது தமிழ் நூலான திருமந்திரம். அத்தகைய மனம் சீராக இருக்கவும், ஆயுட்காலம் கூடுவதற்கும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. முதுமையில் அமர்ந்த இடத்திலேயே தியானப் பயிற்சியினை மேற்கொள்ள உடல் புத்துணர்வு பெறுவதுடன் மனஅழுத்தம் நீங்கி சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கப்படும்.

    டைப் 1 மற்றும் டைப் 2 வகையான நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதியுறுவதாக 'அமெரிக்கன் டயாபெடிக் அசோசியேஷன்' கூறுகின்றது. தூக்கத்திற்க்கும், உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    அத்தகைய தூக்கமின்மையைப் போக்குவது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் எளிய வழி. எனவே தியானம் செய்வதும், எண்ணெய் குளியல் எடுப்பதும் தூக்கமின்மையைப் போக்கி சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் தியானம் மேற்கொள்வது முதுமையில் இயல்பான தூக்கத்தை உண்டாக்கி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

    தியானத்தை மையமாகக் கொண்டு 6 மாதங்கள் தொடர் கண்காணிப்பிற்கு பின், இதய நோயாளிகளிடம் நடைபெற்ற ஆய்வில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைவதாகவும், HbA1c எனும் மூன்று மாத மதிப்பீட்டின் அளவு குறைவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுவது சிறப்பு. ஆகவே தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் வரை தியானப்பயிற்சி மேற்கொள்வது முதுமையில் நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், இதயம் காக்கவும் எளிய வழிமுறை.

    மன அழுத்தமே முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணம். எனவே தியானம் செய்வது 'என்டார்பின்ஸ்' எனும் மனமகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன் சுரப்பிகளை தூண்டி மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இந்த என்டார்பின்கள் முதுமையில் இயற்கை வலிநிவாரணிகளாகவும் செயல்படுவது கூடுதல் சிறப்பு.

    முதுமையில் மூன்று மாத கணிப்பான HbA1C அளவானது என்ன மருந்து எடுத்தாலும், பலருக்கு கட்டுப்படாமலே இருக்கும். இந்த சர்க்கரை அளவை எண்ணி எண்ணியே பலர் மனம் உடைந்து முதுமையில் ஆரோக்கிய நம்பிக்கையை இழக்கின்றனர். இத்தகைய நிலைகளில் பிற மருந்துகளுடன் சித்த மருத்துவத்தை மேற்கொள்வது HbA1C அளவைக் குறைக்க உதவும். அது மட்டுமின்றி பல்வேறு காரணிகள் HbA1C அளவை பாதிப்பதாக உள்ளன.

    ரத்த சோகை நோய், வைட்டமின் பி-12 குறைபாடு, குடிப்பழக்கம், ரத்தத்தில் அதிகரித்த பித்தத்தின் (பிலிரூபின்) மற்றும் யூரியா அளவு போன்ற நோய்நிலைகள் HbA1c அளவை பொருத்தமில்லாமல் அதிகமாக காட்டும். அதே போல் ரத்த இழப்பு, கல்லீரல் நோய்கள், குருதியேற்றம், ரத்தத்தில் அதிகமாகும் டிரைகிளிசெரைட் அளவு, ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் HbA1c அளவை பொருத்தமில்லாமல் குறைவாக காட்டும் என்கின்றன ஆய்வுத்தரவுகள். எனவே மனம் தளராமல் மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    நீரிழிவு நோயின் மிக முக்கிய தொந்தரவாக கருதப்படுவது நீரிழிவுப்புண். நாட்பட்ட புண்ணை ஆற்றுவதற்கு மத்தன் தைலம், வெட்பாலை தைலம் போன்ற பல சித்த மருந்துகள் பலன் தருவதாக உள்ளன. மன அழுத்தம், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் இவற்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சிறு ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை உண்டாக்கி புண் ஆறுவதைத் தள்ளிப்போடும். எனவே மது அருந்துதல், புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

    முதுமையில் மதுப்பழக்கமும், புகைப் பிடித்தலும் நீரிழிவு நோயில் கூடுதல் சவால்களை உண்டாக்கும் என்கின்றன ஆய்வுகள். ஆல்கஹால் குடிப்பதால் "உடலுக்கு நல்லது, தூக்கம் வரும், துக்கம் நீங்கும்" போன்ற தவறான தகவல்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் தவறான பாதை. திடீரென உண்டாகும் மாரடைப்புக்கும், பக்க வாதத்திற்கும் இது துணை புரியும். இன்னும் பல நோய்நிலைகளுக்கு இவை முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

    "உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு" என்பது சொலவடை. அதாவது உணவு உண்ட பின், ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவானது சோம்பலையும், மயக்கத்தையும் உண்டாக்கும். ஆதலால் 'நண்பு பெற உண்டபின் குறுநடை கொள்வோம்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

    நடைப்பயிற்சியின் பலன்களை உறுதி செய்ய பல்வேறு ஆய்வுகள் உலகநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தினசரி 10000 காலடிகள் (steps) நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவதுடன், ரத்த அழுத்தத்தின் அளவும் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பு.

    சீரான நடைப்பயிற்சி மேற்கொள்வதால் HbA1C 0.5 சதவீதம் அளவு குறைவதுடன், ரத்த அழுத்தம் குறைவதாகவும், உடல் எடை குறைவதாகவும் ஆய்வுத்தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே முதுமையில் முடிந்த வரை நடைப்பயிற்சி செய்வது சர்க்கரை நோயை முடிவுக்கு கொண்டு வரும்.

    ஆக கொஞ்சம் நடைப்பயிற்சியும், அத்துடன் தியானப் பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும் பழகுவது சர்க்கரை அளவைக் குறைத்து முதுமையில் வாழ்வை இனிப்பாக்கும்.

    முதுமையில் இடுப்பு மூட்டு எலும்புகள் தேய்மானத்தால் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டில் அமர்ந்தபடியே யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இது சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    எளிய யோகாசனப் பயிற்சிகளான தாடாசனம், கோமுகாசனம், பாவன முக்தாசனம், சலபாசனம், வக்ராசனம், தனுராசனம், பட்சி மோத்தாசனம், மயூராசனம் ஆகியவற்றை பழகி வருவது நல்லது. வைட்டமின் டி3 அளவு குறைவதும் நீரிழிவு உண்டாக காரணமாக நவீன அறிவியல் கூறுகின்றது. எனவே வெயிலில் கொஞ்சம் நடைபயிற்சி செய்வதும், சூரிய வணக்கம் செய்வதும் முதுமையில் பலன் தரக்கூடும்.

    நீரிழிவு கட்டுப்பட எக்காலத்திலும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நம் குடலில் உட்கிரகிக்கப்படும் சர்க்கரை சத்து உடல் செல்களை சென்றடைவதற்கு இன்சுலின் ஹார்மோன் திறவுகோலாக உள்ளது.

    அத்தகைய இன்சுலின் ஹார்மோன் பணியை செய்யவிடாமல் தடுக்க கூடியதாக இருப்பது உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் தான். ஆகவே உடலில் கொழுப்பின் அளவை சீராக கட்டுப்பாட்டில் வைப்பது இன்சுலின் பணியை சீராக்கி, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். இதற்கு நடைப்பயிற்சி, உடல் பயிற்சி போன்றவை பேருதவி புரியும்.

    இதய நோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்குப் பின் அமெரிக்கா மற்றும் கனடாவில் இறப்புக்கான நான்காவது முக்கிய காரணியாக, மருந்துகளின் பக்க விளைவுகள் (ADR) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் இறப்புக்கான காரணங்களில் ஏ.டி.ஆர். ஆறாவது இடத்தில் இருப்பதாக உள்ளது. ஆகவே நீரிழிவு கட்டுப்பட மருந்துகளைக் குறைத்து, உணவுக் கட்டுப்பாடும், உடல்பயிற்சியும் மேற்கொள்வது மருந்துகளைக் காட்டிலும் சிறந்தது.

    5000 ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலரும், பதஞ்சலியும் தோற்றுவித்த யோகாசனக் கலையை இன்றைய உலகம் தலையில் வைத்துக் கொண்டாடுவதோடு பயன்படுத்த அறிவுறுத்தி அங்கீகாரம் அளிக்கின்றது. நம் முன்னோர்கள் நமக்காக, நம் நலனிற்காக, தோற்றுவித்த மரபுக்கலைகளும், மரபு வாழ்வியல் முறைகளும் இன்னும் ஏராளம்.

    இவற்றை மறந்த நாம் தாராளமாய் மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை தேடி அலைவது என்பது அறியாமையின் உச்சம். ஆகவே இனியும் விழிபிதுங்கி நிற்காமல் விழிப்புடன் செயல்பட்டு, நல்வாழ்விற்கான பாதையை உருவாக்க வேண்டியது அவசரமான அவசியம்.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • திறமைக்கு ஏற்ற நல்ல வேலை கிடைப்பது தள்ளிக் கொண்டே போகும்.
    • பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்தால் கால சர்ப்ப தோஷத்தின் தாக்கம் கண்டிப்பாக கட்டுப்படும்.

    தோஷங்களில் மிக மிக மோசமான தோஷமாக கருதப்படுவது கால சர்ப்ப தோஷம். ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு இடையே மற்ற 7 கிரகங்களும் சிக்கிக்கொள்ளும் அமைப்பைதான் ஜாதக ரீதியாக கால சர்ப்ப தோஷம் என்று சொல்கிறார்கள்.

    ராகு-கேது பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் மற்ற 7 கிரகங்களும் தங்களது பலத்தை இழந்து விடுவது இந்த தோஷத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. அதாவது யார் ஒருவருக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கிறது என்று சொல்கிறார்களோ அவருக்கு ராகு-கேது தவிர மற்ற 7 கிரகங்களால் எந்த நல்ல பலனும் கிடைக்கவே கிடைக்காது என்கிறார்கள்.

    பொதுவாக ஒருவருக்கு தேவையான முக்கிய யோகங்கள் அனைத்தையும் கால சர்ப்ப தோஷத்துக்குரிய கிரக அமைப்புகள் கை கூட செய்யாமல் தடுத்து நிறுத்தி விடுவதாக ஜோதிட சாஸ்தி ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தோஷம் ஏன் ஏற்படுகிறது? என்று ஆய்வு செய்தால் அதன் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. பெற்றவர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகள் மீது தான் விழும் என்று சொல்வார்கள். இதுதான் கால சர்ப்ப தோஷமாக ஒருவருக்கு மாறுவதாக கூறப்படுகிறது.

    அதாவது ஒருவர் மிகப்பெரிய பாவங்கள் செய்தால் அதற்கான தண்டனை அவர்களது வாரிசுகளுக்கு கால சர்ப்ப தோஷமாக மாறி துன்புறுத்தும் என்கிறார்கள். இதனால்தான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்களை வம்ச ரீதியாக வகைப்படுத்தி சொல்வார்கள். இது தவிர கடந்த பிறவியில் செய்த பாவங்களும் பாவமூட்டையாக மாறி கால சர்ப்ப தோஷ வடிவத்தில் வாட்டி வதைக்கும் என்றும் சொல்வது உண்டு.

    கால சர்ப்ப தோஷத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் படும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் பல வகைகளாக இருக்கும். முக்கியமாக உரிய வயது வந்த பிறகும் திருமணம் தள்ளிக்கொண்டே போகும். கால சர்ப்ப தோஷம் மிக மிக கடுமையாக இருந்தால் சிலருக்கு 37 வயது ஆன பிறகுதான் திருமணம் கைகூடும் என்கிறார்கள்.


    கால சர்ப்ப தோஷத்தால் சிலருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். திருமணம் ஆனாலும் குழந்தை பாக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். சில வகையான கால சர்ப்ப தோஷங்கள் திருமண வாழ்வில் பிரச்சினைகளை கொடுத்து கொண்டே இருக்கும். சில இளைஞர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் எல்லாம் இருக்கும். ஆனால் திறமைக்கு ஏற்ற நல்ல வேலை கிடைப்பது தள்ளிக் கொண்டே போகும்.

    இவை மட்டு மல்ல... சில கால சர்ப்ப தோஷங்கள் உறவுகளிடம் வெறுப்பை ஏற்படுத்த செய்து விடும். உடநலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி நோய்களை கொடுத்து கொண்டே இருக்கும். இப்படி வகை வகையாக துன்புறுத்த செய்யும் ஆற்றல் கால சர்ப்ப தோஷத்துக்கு உண்டு.

    ராகு-கேதுவின் அமைப்பை அடிப்படையாக கொண்டு கால சர்ப்ப தோஷத்தை 12 வகையாக பிரித்துள்ளனர். ராகு 1-வது வீட்டிலும், கேது 7-ம் வீட்டிலும் இருந்தால் அது அனந்த கால சர்ப்ப தோஷம் ஆகும். ராகு 2-ம் வீட்டிலும், கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் அது குளிக கால சர்ப்ப தோஷம் ஆகும்.

    ராகு 3-ம் வீட்டிலும், கேது 9-ம் வீட்டில் இருந்தால் அது வாசுகி கால சர்ப்ப தோஷம் ஆகும். ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் இருந்தால் அது சங்குபால கால சர்ப்ப தோஷம் ஆகும். ராகு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் இருந்தால் அது பத்மன கால சர்ப்ப தோஷம் ஆகும். ராகு 6-ம் வீட்டிலும், கேது 12-ம் வீட்டில் இருந்தால் அது மகாபத்மன் கால சர்ப்ப தோஷம் ஆகும்.

    ராகு 6-ம் வீட்டிலும், கேது 1-ம் வீட்டிலும் இருந்தால் அது தட்சக கால சர்ப்ப தோஷமாகும். ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் இருந்தால் அது கார்கோடக கால சர்ப்ப தோஷமாகும். ராகு 9-ம் வீட்டிலும், கேது 3-ம் வீட்டிலும் இருந்தால் அது சஞ்சிசுட கால சர்ப்ப தோஷமாகும். ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-ம் வீட்டிலும் இருந்தால் அது கடக கால சர்ப்ப தோஷம் ஆகும்.

    ராகு 11-ம் வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் இருந்தால் அது விசிதன கால சர்ப்ப தோஷம் ஆகும். ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் இருந்தால் அது சேஷநாக கால சர்ப்ப தோஷம் ஆகும். இந்த 12 வகையான கால சர்ப்ப தோஷங்களுக்கு ஏற்ப ஒருவருக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் அல்லது சற்று குறைவாக இருக்கலாம்.


    இந்த 12 வகையான கால சர்ப்ப தோஷங்களில் எந்த வகையான கால சர்ப்ப தோஷ பாதிப்பு இருக்கிறது என்பதை ஜோதிடரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப வழிபாடுகள் அல்லது பரிகார பூஜைகளில் ஈடுபட்டால் தோஷத்தில் இருந்து நிச்சயமாக விடுவித்துக் கொள்ள முடியும்.

    பொதுவாக கால சர்ப்ப தோஷம் என்றதும் ராமேசுவரம், காளகஸ்தி, திருபாம்புரம் போன்ற கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து தோஷ நிவாரண பூஜைகளை செய்ய பரிந்துரைப்பார்கள். கால சர்ப்ப தோஷம் மிக சாதாரணமாக இருந்தால் சிவாலயங்களில் திங்கட்கிழமை தோறும் பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே போதும். பிரச்சினை தீர்ந்து விடும்.

    சங்கடகர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்வது நல்ல பலன் தரும். தினமும் மகா மிருத்யுஞ்சய மகா மந்திரத்தை 108 தடவை உச்சரித்து வந்தாலும் தோஷ நிவர்த்தி பெறலாம். நாகர் வழிபாடு மிக மிக நல்லது.

    கால சர்ப்ப தோஷம் மிக உக்கிரமாக இருந்தால் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் திருபாம்புரம் ஆலயத்துக்கு சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ராகு-கேது தலங்களில் மிக மிக சிறப்பான தலமாக இந்த தலம் கருதப்படுகிறது. 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் கோவில், கருவறை பின்புறம் ராகு-கேது தோஷ நிவர்த்தி பூஜை செய்வார்கள். அதில் பங்கேற்றால் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி பெற முடியும்.

    சென்னை குன்றத்தூரில் சேக்கிழாரால் ஏற்படுத்தப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான தலம் உள்ளது. அதுவும் ராகு-கேது தோஷத்துக்கான மிக சிறந்த பரிகார தலம். இந்த தலத்துக்கு ராகு கால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தி அடைந்து நன்மைகளை பெற முடியும்.

    காஞ்சிபுரத்தில் மகாகாளேஸ்வரர் என்ற ஆலயம் இருக்கிறது. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் இந்த ஆலயம் அமைந்து உள்ளது. மாகாளன் என்ற நாகம் இந்த தலத்துக்கு வந்து லிங்கம் அமைத்து பூஜைகள் செய்து பலன் பெற்றதாக புராண குறிப்புகள் உள்ளன. இதனால் மூலவர் பெயர் மகாகாளேஸ்வரர் என்று ஆனது. இதுவும் ராகு-கேது பரிகார தலமாகும். இங்கு வழிபட்டாலும் கால சர்ப்ப தோஷம் உடனடியாக விலகும்.

    சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயத்தில் ஆதிசேஷன் பூஜைகள் செய்து அருள் பெற்றதாக புராண வரலாறு சொல்கிறது. இங்கு வழிபட்டால் கால சர்ப்ப தோஷங்கள் கண் இமைக்கும் நேரத்தில் விலகும் என்று சொல்வார்கள்.

    சிதம்பரம் நடராஜர் ஆலயமும் மிக சிறந்த கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலம் ஆகும். இந்த தலத்தில்தான் ஒவ்வொருவரின் தலைவிதியும் எழுதப்படுவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வழிபட்டால் அந்த தலைவிதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு கால சர்ப்ப தோஷ வீரியம் அடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆலயங்களுக்கு செல்ல இயலாதவர்கள் பித்ரு வழிபாட்டை உரிய முறைப்படி செய்தே தீர வேண்டும். அமாவாசை நாட்களில் காகத்துக்கு வைத்து விட்டு சாப்பிடுவதை வழக்கத்தில் கொள்ள வேண்டும். பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்தால் கால சர்ப்ப தோஷத்தின் தாக்கம் கண்டிப்பாக கட்டுப்படும்.

    அன்னதானம் செய்வது, ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவி செய்வது, முதியோர் இல்லங்களுக்கு சென்று உடைகள் வழங்குவது போன்றவையும் மிக சிறந்த கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள் ஆகும். 33 வயது வரைதான் கால சர்ப்ப தோஷம் ஒருவரை ஆட்டி படைக்கும் என்பார்கள். அதன் பிறகு அது அவரை செல்வத்திலும், புகழிலும் மேம்படுத்தும் என்ற அம்சம் உள்ளது.

    எனவே கால சர்ப்ப தோஷம் கண்டு பயப்பட வேண்டியது இல்லை.

    • வசீகரமான ரிஷப ராசியினரே. உங்களைப் போல் உங்கள் வாழ்க்கைத் துணையும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.
    • திருமணத்திற்கு கோட்சார கிரகங்கள் சாதகமாக இருப்பவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. கிரகங்களில் வருட கிரகங்களான குரு,ராகு/கேது, சனி இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப/அசுப பலன்கள் அதிகம். ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால் கோட்சார கிரகங்கள் அதன் தசா புக்தி காலத்தில் சம்பவத்தை நடத்தி வைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது. ஒருவரின் ஆசை மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கிய பலன் ஜனன கால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோச்சார கிரகங்களும் தசா புத்தியும் உதவும். ஒரு தனிநபரின் ஜாதகத்தினை கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும் தசா புக்திகளுடன், சம்பந்தம் பெறும் கோச்சாரம் சம்பவத்தை 100 சதவீதம் கச்சிதமாக நடத்தி தரும். இந்த கட்டுரையில் கோட்சார கிரகங்களால் 2024ல் யாருக்கு திருமண வாய்ப்பு உள்ளது எனப் பார்க்கலாம்.

    மேஷம்

    தூய உள்ளம் நிறைந்த மேஷ ராசியினர். தனக்கு அமையும் வாழ்க்கைத் துணை தன்னைப் போல் எதிலும் நேர்மையும் நியாயமும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டின் துவக்கத்தில் ஜென்ம குருவாக ராசியில் நின்று 5, 7, 9-ம்மிடங்களை பார்வையி டுகிறார். ஏப்ரல் 21, 2024-க்குப் பிறகு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்குச் சென்று 6,8,10ம் இடங்களைப் பார்க்கிறார். ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் லாபஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று 1, 5, 8-ம் இடங்களை பார்வையிடுகிறார். ராகு பகவான் விரய ஸ்தானத்திலும் கேது பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார். ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் இருந்த போது திருமணத் தடையை சந்தித்தவர்களுக்கு கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் திருமணத் தடை அகலும். மேலும் மாங்கல்ய தோஷம், ஆயுள் தோஷம் விலகும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும்.

    ரிஷபம்

    வசீகரமான ரிஷப ராசியினரே. உங்களைப் போல் உங்கள் வாழ்க்கைத் துணையும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆண்டின் துவக்தத்தில் விரய ஸ்தானத்தில் நின்று குருபகவான் 4, 6, 8-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். ஏப்ரல் 21-ல் ஜென்ம ராசிக்குள் நுழையும் குரு பகவான் 5, 7, 9-ம் இடங்களைப் பார்வையிடுகிறார்.ஆண்டு முழுவதும் 10-ல் நிற்கும் சனி பகவான் 12,4,7-ம் மிடங்களைப் பார்வையிடுகிறார். லாப ஸ்தானத்தில் ராகுவும் பஞ்சம ஸ்தான கேதுவும் நிற்கிறார்கள்.

    குரு பார்வையால் மாங்கல்ய தோஷம் களத்திர தோஷம் விலகுகிறது. இதனால் திருமணத் தடை அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். ராகு கேதுக்கள் ரிஷப ராசிக்கு காதல், கலப்பு திருமணத்தை அதிகம் நடத்தி தருவார்கள். ஏப்ரல் 2024-ல் ராசிக்குள் வரும் குருபகவான் காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தருவார்.


    மிதுனம்

    அறிவாற்றல் நிறைந்த மிதுன ராசியினர் தங்களைப் வாழ்க்கைத் துணையும் புத்தி சாதுர்யத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த புதிய வருடத்தில் வருட கிரகமான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் லாப ஸ்தானத்தில் நின்று 3 , 5, 7-ம் இடங்களுக்கு சுபிட்சம் வழங்குகிறார். ஏப்ரல் 21, 2024-ல் விரய ஸ்தானம் செல்லும் குருபகவான் 4, 6, 8-ம் இடங்களைப் பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 11, 3, 6-ம் இடங்களை இயக்குகிறார். ராகு தொழில் ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் நிற்கிறார்கள். குரு பார்வையால் சனி பலத்தால் குல தெய்வ அருளால், முன்னோர்கள் நல்லாசியால் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் விலகும்.திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். திருமணத்திற்கான நாளை எண்ண வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    தாயன்பு நிறைந்த கடக ராசியினரே தாயைப் போல் அன்பான வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த புத்தாண்டில் குருபகவான் எப்ரல் 21 வரை 10-ம்மிடத்தில் நின்று 2,4,6-ம்மிடங்களை பார்வையிடுகிறார். ஏப்ரலில் குருப்பெயர்ச்சிக்கு பின் லாப ஸ்தானம் சென்று 3,5,7-ம் இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நின்று 2,5,10-ம் மிடங்களை பார்க்கிறார். ராசிக்கு 3ல் கேதுவும் 9-ல் ராகுவும் அமர்ந்து இருக்கிறார்கள். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது. ஏப்ரல் 21-க்குப் பிறகு குரு பார்வை களத்திர ஸ்தானத்தில் பதிவதால் திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

    சிம்மம்

    ஆளுமைத் திறன் நிறைந்த சிம்ம ராசியினர் தங்களைப் போன்று நிர்வாகத் திறன் நிறைந்த வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். ஏப்ரல் 21 வரை பாக்கிய ஸ்தானத்தில் நின்று 1, 3, 5-ம் இடங்களை பார்வையிடுகிறார். குருப் பெயர்ச்சிக்கிப் பின் தொழில் ஸ்தானம் சென்று 2,4,6-ம் இடங்களை புனிதப்படுத்துகிறார். சம சப்தம ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 1, 4, 9-ம் இடங்களுக்கு தனது பார்வையை பதிக்கிறார். ராகு பகவான் அஷ்ட ஸ்தானத்திலும் கேது பகவான் தனம், வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். கண்டகச் சனிக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் கேதுவும் அவமானம், வம்பு, வழக்கு, விபத்து, கண்டம், சர்ஜரி பற்றிக் கூறும் எட்டாமிடத்தில் ராகுவும் நிற்பதால் சுய ஜாதக ரீதியாக ராகு புத்தி, கேது புத்தி சனி புத்தி நடப்பவர்கள் சுய ஜாதகத்தை சரிபார்த்து திருமணம் நடத்த வேண்டும்.

    கன்னி

    இளமைப் பொழிவு நிறைந்த கன்னி ராசியினர் புதுமையான எண்ணம் கொண்ட வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். ஆண்டின் துவக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் 2, 4, 12-ம் இடங்கள் விருத்தியடையும். ஏப்ரலுக்குப் பிறகு பாக்கிய ஸ்தானம் செல்லும் குருபகவான் 1, 3, 5-ம்மிடங்களை புனிதமாக்குவார். ஆண்டு முழுவதும் 6-ல் நிற்கும் சனி பகவான் 8, 12, 3-ம் இடங்களை பார்க்கிறார். ராசியில் கேது 7-ல் ராகு. கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டு இருப்பதால் ஜனன ஜாதகத்தில் மீனத்தில் உள்ள கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணத்திற்கு சாதகமான தசை புத்தி நடப்பில் இருந்தால் திருமணத் தடை அகலும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். ஏழாமிடமான மீனம் இரட்டை ராசி என்பதால் முதல் திருமணத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடைபெறும்.


    துலாம்

    நியாயமும், நேர்மையும் நிறைந்த துலாம் ராசியினர் தங்களைப் போன்று நியாயமான வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். ஆண்டின் துவக்கத்தில் சம சப்தம ஸ்தானத்தில் நின்று 11,1,3-ம் இடங்களை பார்க்கிறார். ஏப்ரல் 21-ல் குரு பகவான் அஷ்டம ஸ்தானம் சென்று 12,2,4-ம் இடங்களைப் பார்க்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 7,11, 2-ம் மிடங்களை பார்க்கிறார். 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார். குரு மற்றும் சனியின் பார்வை பலத்தால் களத்திர ஸ்தானம், குடும்ப ஸ்தானம் இயங்குகிறது. நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமாக திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடைபெறும். ஏப்ரல் வரை ராசியை குரு பார்ப்பதால் வசதியான நல்ல வாழ்க்கைத் துணை. அமையும். மறுமண யோகம் உள்ளது.

    விருச்சிகம்

    உதவி செய்வதில் உயர்ந்த விருச்சிக ராசியினர் விரும்பியதை மன பலத்தால் அடையும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புவார்கள்.ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 21 வரை குருபகவான் 6-ம்மிடத்தில் நின்று 10, 12,2-ம் இடங்களையும் ஏப்ரலுக்குப் பிறகு 7ம்மிடம் சென்று 11, 1,3-ம் இடங்களை பார்வையிடுகிறார். ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனியாக பலன் தந்தாலும் 6,10,1-ம் இடங்களை பார்க்கிறார். 5-ல் ராகுவும் 11-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். தடைபட்ட திருமணம் நடக்கும். 5-ம்மிட ராகு வால் சுய விருப்ப விவாகம் அதிகரிக்கும். முதல் திருமணம் தோல்வியடைந்து இரண்டாம் திருமணத்திற்கு வரன் பார்பவர்களுக்கு வரன் அமைந்து திருமணம் நடைபெறும். வாலிப வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.

    தனுசு

    ஆன்மீக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினர் எந்த சந்தர்ப்பத்திலும் வில்லை போல் வளைந்து கொடுக்கும் வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். 2024 ஆங்கிலப் புத்தாண்டு துவக்கத்தில் குரு பஞ்சம ஸ்தானத்தில் நின்று 1,9,11-ம் இடங்களைப் பார்க்கிறார். ஏப்ரல் 21-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 6-ம்மிடத்திற்குச் சென்று 10, 12,2-ம் இடங்களைப் பார்க்கிறார். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆட்சி பலம் பெற்ற சனி பகவான் 5,9,12-ம் இடங்களை பார்க்கிறார். நவகிரகங்களில் நிழல் கிரகமான ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தா னத்திலும் சஞ்சாரம் செய்கிறார். சுய ஜாதக தோஷத்தாலும் கோட்சார கிரகங்களாலும் தடை பட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும்.

    மகரம்

    விடாமுயற்சி நிறைந்த மகர ராசியினருக்கு உழைப்பில் ஆர்வம் நிறைந்த வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். குருப் பெயர்ச்சிக்கு முன் 4-ம்மி டமான சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் 8,10,12-ம் இடங்களைப் பார்க்கி றார். ஏப்ரல் 21 குருப்பெயர்ச்சிக்குப் பின் 5-ம் மிடம் சென்று 9, 11, 1-ம் இடங்களை பார்வையிடுகிறார். ஏழரைச் சனியின் மூன்றாம் பாகம். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி 4, 8,11-ம் இடங்களை பார்க்கிறார். ராகு பகவான் 3-ம்மிடமான முயற்சி ஸ்தானத்திலும் கேது பகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார்கள்.திருமண வயதில் உள்ளவர்களின் திருமணம் நடக்கும். சுய ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்துவிடும். மிக பிரம்மாண்டமாக சிறப்பாக திருமணம் நடைபெறும். கல்யாணம் எப்படி நடக்கும் என்று கவலையோடு இருந்தவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்.

    கும்பம்

    உழைப்பில் ஆர்வம் மிகுந்த கும்ப ராசியினர் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள்.குரு பகவான் ஏப்ரல் 21 வரை 3-ம்மிடத்தில் நின்று 7,9,11-ம் இடங்களை பார்க்கிறார். ஏப்ரல் 21-க்குப் பிறகு 4-ம்மிடம் செல்லும் குருபகவான் 8,10,12-ம் இடங்களைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் நிற்கும் சனிபகவான் 3,7,10-ம் இடங்களை பார்க்கிறார். ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ஜென்மத்தில் சனி புனர்பூ தோஷம். குடும்ப ஸ்தானத்தில் ராகு எட்டில் கேது என்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபட வாய்ப்பு உள்ளது. எட்டாமிடம் என்பது பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்தை நடத்துவது நல்லது.

    மீனம்

    சாந்த குணம் நிறைந்த மீன ராசியினர் அமை தியான வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். ஆண்டின் துவக்கத்தில் ராசி அதிபதி குரு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நின்று 6, 8, 10-ம் இடங்களை பார்க்கிறார். ஏப்ரலுக்குப் பிறகு 3-ம் இடம் சென்று 7, 9, 11-ம் இடங்களை பார்க்கிறார். விரய ஸ்தானத்தில் நின்று 2,6,9-ம் இடங்களை பார்க்கிறார். ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் நிற்கிறார்கள். ராசியில் ராகு ஏழில் கேது சர்ப்ப தோஷம். திருமணம் நடைபெறும் வாய்ப்பு மிக மிக குறைவு . அப்படி நடந்தாலும் குடும்ப மரபிற்கு ஒத்து வராத கலப்பு திருமணமாகவே இருக்கும். கோச்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத போது எந்த சுப நிகழ்வு நடக்கும் பொழுது மகிழ்வாகவும் நடந்து முடிந்த பிறகு அனுபவிக்கும் வேதனை காலத்திற்கும் தீராத மன வேதனையையும் தரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் திரு மணத்தை நடத்துங்கள். மிகக் குறிப்பாக காத லர்கள் இந்த 1½ வருடம் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாமல் இருப்பது சிறப்பு.

    பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதக கட்டத்தில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து பலன் கொடுக்கும். கோட்சார கிரக சஞ்சாரம் வினைகளில் இருந்து மீளும் சந்தர்ப்பம் ஏற்படும். கோட்சாரம் சாதகமாக இருக்கும் காலங்களில் செய்யப்படும் முயற்சிகள் நல்ல பலன் தரும். திருமணத்திற்கு கோட்சார கிரகங்கள் சாதகமாக இருப்பவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம்.
    • சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.

    தமிழ்நாட்டின் கிழக்கு பகுதி எல்லையாக வங்கக் கடலோரம் விளங்கி வருகிறது. வடக்கே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடங்கி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் வரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கரையோர பகுதியில் 13 மாவட்டங்களும், 561 மீன்பிடி கிராமங்களும் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மீனவ மக்களுக்கு தொழில் தருவது கடல், பொழுதுபோக்கு இடமாக அமைவது கடற்கரை. அலையோடு விளையாடியே பழக்கப்பட்ட அவர்களுக்கு, கடற்கரை வரை வந்து முத்தமிடும் அலைகள், நம் வீட்டு முற்றம் வரை வந்து மிரட்டும் என்று உணர்த்திய ஆண்டு 2004.

    19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் ஆர்ப்பரித்து எழுந்து 14 நாடுகளின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது.

    "உலகம்தான் அழிகிறதோ?" என்ற மரண பயத்தில் உயிர் பிழைக்க ஓடிய மக்களையும் தயவுதாட்சண்யம் இன்றி சுனாமி அரக்கன் வாரிச் சுருட்டிக்கொண்டான். இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் வசித்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்து போனார்கள். 43 ஆயிரத்து 786 பேர் இன்றுவரை காணவில்லை.

    தமிழகத்திலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். பொருட்சேதமும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்பட்டது.

    சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம். கடற்கரையோரம் அன்றைக்கு எழுந்த மரண ஓலம், அலைகளின் ஓசையையே அடங்கச் செய்துவிட்டது. சுனாமிக்கு இரையான கட்டிடங்கள், சுவடுகளாக இன்னும் பல இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன.

    சுனாமிக்கு முன்னால் எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் காதல் மனம் வீசியது. ஆனால், சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.

    இன்றைக்கு வங்கக் கடற்கரையோர கிராமங்களில், சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று மறைந்தவர்களை மனதில் நினைத்து, கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அலைகள் ஓய்வதில்லை. அதுபோல், சுனாமி நினைவுகளும் ஓயப்போவதில்லை. காலங்கள் கடந்தாலும் நினைவுகள் தொடரும்.

    • நமது சாதனைகள் நம்மைப் பற்றி பேசட்டும். நாம் பேச வேண்டாம்.
    • தான் செய்யும் தான, தர்மங்களை பறை சாற்றக்கூடாது.

    மனம் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். அதனை கட்டுப்படுத்த தெரியாமல் தானே மனிதன் ஒவ்வொரு நொடியும் பாடாய் படுகிறான். இந்த மனதில் ஆசை, கோபம், எதிர்பார்ப்பு, நோய் பற்றிய பயம், உறவுகள் பற்றிய கவலை, வீடு, சொத்து என எத்தனையோ எண்ணங்கள் ஓடி வந்து மனதில் புகுந்து வெளியே செல்ல மறுக்கின்றன. பட்டா வாங்கி தங்கி விடுகின்றன.

    இதனால் முதலில் நோயினைப் பற்றி பார்ப்போம். எண் சாண் உடம்பில் எண்ணில் அடங்கா பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் தானே பல செய்திகளை அரைகுறையாய் அறிந்து தன்னைத் தானே அதிக பயத்திற்கு உட்படுத்திக் கொள்கின்றான். எப்போதும் அந்த நோயினைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கின்றான்.

    இதற்கு சரியான மருத்துவ ஆலோசனை, சிகிச்சையினை முறையாய் பின்பற்றுதல் மிக அவசியம்.

    இதனுடன் சில மன நலப்பயிற்சிகளையும் செய்ய சில ஞானிகளின் வழி காட்டுதல்களும் இருக்கின்றன. அதனையும் பார்ப்போம். பயிற்சி செய்வோம். இவற்றில் பல மேல் நாட்டு ஞானிகளின் வழி காட்டுதல் முறைகளாக கூறப்பட்டிருந்தாலும் சில மேலை நாட்டு மகான்கள் மற்றும் நம் நாட்டு மகான்களும் இதனை பரிந்துரைக்கச் செய்கின்றனர்.

    இம்முறையில் நம் ஆரோக்கியத்தினை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என்கின்றனர். மனிதின் மூலம் இதனை செய்ய முடியும் என்கின்றனர். காட்டில் இருக்கும் விலங்குகளுக்கு யார் சென்று வைத்தியம் செய்கின்றனர். தன்னைத் தானே அவை குணப்படுத்திக் கொள்கின்றன. இதற்கு நம் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்.

    நம் உடல் பாதிப்பு துளிர் விடும் பொழுதே அறிகுறிகளைச் சொல்கின்றது. அதனை நாம் கவனிப்பதே இல்லை. நம் உடம்பிற்கும் மனதிற்கும் நல்ல தொடர்பு இருக்க வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது. அமைதியாய் கண்களை மூடி ஒரு பத்து நிமிடம் உட்காருங்கள்.

    உங்கள் உருவத்தினை மனக்கண் முன் நிறுத்திக் கொள்ளுங்கள். எந்த பகுதியில் பாதிப்பு என்று நினைக்கின்றீர்களோ அப்பகுதி ஆரோக்கியமாய் இருப்பதாக உருவகித்து உணருங்கள். அமைதியாய், நிதானமாய் இதனைச் செய்யுங்கள்.

    சிலருக்கு தன் உருவத்தினை மனக் கண்ணில் கொண்டு வந்து பார்ப்பது என்பது சற்று கடினமாக இருக்கலாம். இவர்கள் அமைதியாய் கண்களை மூடி உங்கள் கால் முதல் தலைவரை ஒவ்வொரு வெளி உறுப்பு, உள் உறுப்பு இவற்றில் கவனத்தினை செலுத்துங்கள். உங்கள் உடல் உங்களோடு பேசுவதனை உங்களால் உணர முடியும். பாதிப்பு இருக்கும் இடத்தில் கவனம் செலுத்துங்கள். அந்த உறுப்பு நல்ல ஆரோக்கியம் அடைவதாக உறுதியாய் நம்புங்கள். இப்பயிற்சி ஆரோக்கியத்தினைக் கூட்டுவதோடு மன பயத்தினையும் நீக்கும்.

    சிலர் இந்த நோயின் காரணமாக தன்னைத் தானே வெறுத்துக் கொள்வார்கள். தன் உடலின் மீதே வெறுப்பு கொள்வார்கள். இப்படி செய்யவே கூடாது. உங்கள் உடலினை ஆரோக்கியத்தினை நீங்கள் நேசிக்கின்றீர்கள், அன்பும், கவனமும் காட்டுகின்றீர்கள் என்ற எண்ணம் மனதில் பதிய வேண்டும்.

    அதே போன்று சிலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. அளவுக்கு மீறிய கஷ்டம், வறுமை வரும் போது தனக்கு வேலை கேட்கும் இடத்தில் தனது கஷ்டங்களை அதிகம் விவரித்து கூறுவார்கள். இவர்களுக்கு தகுதியும், படிப்பும் நன்கு இருந்தாலும் கூட வேலை கொடுப்பவர். இவரது வறுமை நிலையினை புரிந்து ஆதாயம் எடுப்பார். குறைந்த சம்பளம், அதிக நேர வேலை என இவர்கள் இன்னமும் சோர்ந்து விடுவார்கள். ஆகவே பரிதாப நிலை மூலம் தீர்வு காண முயல்வது அநேக இடங்களில் இன்றைய கால சூழ்நிலையில் சரி வருவது இல்லை. ஆக ஒருவர் தானே தன்னை சுய பரிதாபத்திற்கு உள்ளாக்கும் மன நிலையினைக் கொள்ளக் கூடாது.

    * உறவுகள், நண்பர்கள் இவர்களுக்கு நம் வாழ்க்கை பாதிப்புகளை சினிமா படம் போல் காண்பிக்க வேண்டாமே. இவ்வாறு செய்ய செய்ய மனம் உறுதியற்ற நிலையினை அடைந்து விடும்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * நாம் கடந்த காலத்தில் சில தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். (உதாரணமாக) இந்த தொழில் நல்ல லாபம் கொடுக்கும் என எண்ணி கடன் வாங்கி முதலீடு செய்து அதிக நட்டத்தினை அடைந்திருக்கலாம். இது உங்களது பிரச்சினை. நீங்கள் தான் தீர்வு காண வேண்டும். மற்றவர்களிடம் இதனை விளாவாரியாக கூறும் போது அவர்கள் உங்கள் எதிரே பரிதாபப்பட்டு பேசுவது போல் நடித்து பின்னால் கை கொட்டி சிரிப்பர். இது உங்கள் மனதினை அதிக காயப்படுத்தும். ஆக இந்த 'கதை' சொல்வதினை நிறுத்த வேண்டும். அதே போல் வருங்கால திட்டங்களையும் பகிரக் கூடாது.

    நமது சாதனைகள் நம்மைப் பற்றி பேசட்டும். நாம் பேச வேண்டாம்.

    * பல அலுவலகங்களில் இதனை நான் கவனித்துள்ளேன். மாமியார்-மருமகள், பிள்ளை- பெற்றோர் பிரச்சினைகளை அன்றாடம் வரும் தொடர் சீரியல்கள் போல் ஒரு வரி விடாது பேசுவார். இது தேவையா? விடாது உங்கள் மனதிற்கு அழிவுப் பூர்வமாகவே சிந்திக்க சொல்லிக் கொடுக்கின்றீர்கள். மேலும் உங்களிடம் கதை கேட்பவரே உங்கள் எதிரி ஆகலாம்.

    * அதே போல் தனக்கு வரும் வருமானம், அதனை திறமையாய் செலவு செய்யும் விதம் இதனை பட்டியல் இட்டு பேசக் கூடாது.

    * தான் செய்யும் தான, தர்மங்களை பறை சாற்றக்கூடாது.

    மேற்கூறப்பட்டவை சொல்பவர், கேட்பவர் இருவரின் மனநிலையினையும் பாதிக்கின்ற செயல்கள் என்பதால் இவை அனைத்தையும் நீக்கி விட வேண்டும். அப்போது தான் மனம் காலியாய் இருக்கும்.

    அநேகருக்கு பிறர் தன்னை எப்போதும் மனதால் காயப்படுத்திக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும், ஏளனப்படுத்திக் கொண்டும் இருப்பதாகக் கூறி மனம் நொந்து, உடைந்து இருப்பர். தனக்கு மரியாதை என்பதே இல்லை என நினைப்பர்.

    ஒருமுறை, இரு முறை மற்றவர் உங்களை காயப்படுத்தினால் அது அவர்களின் தவறாக இருக்கலாம். ஆனால் எப்போதுமே இப்படி நடக்கின்றது என்றால் அதற்கு அவரவரே பொறுப்பாவர்.

    * எதற்கு எடுத்தாலும் 'சரி', 'ஆமாம்', 'எஸ்' என்று சொல்வது தவறு. முறையல்லாதவற்றில் 'சரியில்லை', 'தவறு', 'நோ' என்று சொல்லும் திறன் வேண்டும். எல்லாவற்றுக்கும் 'சரி' என சொல்பவர்களை சிந்திக்கும் திறன் அற்றவர்களாகத்தான் இந்த உலகம் பார்க்கும். அவர்கள் மீது எந்த மரியாதையும் இருக்காது.

    *அடிக்கடி அழுவது, பிறரை குறை கூறுவது அடுத்தவருக்கு ரொம்ப 'போர்' அடிக்கும். அனைவரும் சிரித்து மகிழ்ச்சியாய் இருக்கவே விரும்புகின்றனர். ஆகவே அழுது, புலம்பி பிறரை குறை கூறும் மனநிலையில் இருப்பவர்களிடம் இருந்து அனைவரும் ஓடி விடுவர்.

    * நீங்கள் கூப்பிடும் அடுத்த நொடியில் நான் அப்படியே ஓடி வந்து விடுவேன் என்று யாரிடமும் கூறாதீர்கள். அப்படி நடக்காதீர்கள். இது மற்றவர்களை உங்கள் மீது அதிக ஆதிக்கம், அதிகாரம் செய்ய வைக்கும். நீங்கள் அதிகம் பாசம் வைக்கும் நபருக்காக செய்யும் இந்த செயல் உங்களுக்கு அந்த நபராலேயே மன வேதனை களைத் தரும்.

    உங்கள் நேரம், உங்களுக்கான ஓய்வு என உங்களுக்கு கவனம் செலுத்தும்போது மரியாதையும் கூடும். மன நிலையும் கூடும்.

    * ஏழ்மை என்பதனை நம் வாழ்வில் நம் முயற்சியால் நாம்தான் உழைத்து, சேமித்து துரத்தி அடிக்க வேண்டும். ஏழ்மையினை நினைத்து மூலையில் உட்கார்ந்தால் ஒன்றும் நடக்காது.

    சிலர் பகலில் சக்தி குறைவாக, சோர்வாக இருப்பார்கள். கேட்டால் இரவில் தூக்கம் சரியாக இருப்பதில்லை. அதிகம் புரண்டு புரண்டு படுக்கிறேன். இதனால் பகலில் மிகவும் சோர்வாக இருக்கின்றேன் என்பர்.

    * தூக்கமின்மைக்கு மருத்துவ காரணங்களும் உண்டு. ஆனால் அமைதியற்ற மனமும், அதிக எண்ண ஓட்டங்களும் கூட தூக்க மின்மைக்கு முக்கிய காரணம் ஆகின்றது. அதுவும் அழிவுப்பூர்வமான எண்ணங்கள் இருக்கும் போது அதே எண்ண ஓட்டத்தால் தூக்கமின்மை ஏற்படுகின்றது.

    * தினமும் குறித்த நேரம் (உதாரணமாக) 9 மணி அல்லது 10 மணி என தூங்க செல்ல வேண்டும். அதனை விடுத்து மாறி மாறி ஒருநாள் 9 மணி, ஒருநாள் 12 மணி என உறங்க சென்றால் முறையான தூக்கம் இருக்காது.

    * தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பே எளிதான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். கனமான உணவு, உணவு உண்டவுடன் அப்படியே படுப்பது போன்றவை தூக்க மின்மை, உடல் நல பாதிப்பு என ஏற்படுத்துகின்றன.

    * குடியும், புகையும் தூக்கத்தினை வெகுவாய் கெடுக்கும். தூக்கமின்மை மன நலத்தினை பாதிக்கக் கூடியது. மேற்கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களுமே புத்தரின் போதனைகளை எளிய நடையினில் தொகுத்து கொடுக்கப்பட்டு உள்ளன. இவை மன நலத்தினை காப்பதற்கும், அமைதியான தியான முறையினை பின்பற்றவும் பெரிதும் உதவும்.

    • உடனே ‘அடச் சீ..’ என்ன சார் நீங்கள்? நான் அர்த்தம் கேட்டால் நீங்கள் இப்படி..? என்று அப்பாவித் தனமாக கேட்பார்.
    • காட்சியில் கட்டிபிடித்தபடி பாறை மீதிருந்து உருண்டு கீழே ஓடும் ஆற்றில் வந்து விழ வேண்டும்.

    இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...

    இப்படி ஒரு மலையாள வார்த்தையை நான் ரஜினி சாரிடம் சொல்ல...

    அதன் அர்த்தத்தை அவர் ஒவ்வொருவரிடமும் போய் கேட்டு அடி வாங்குவார்.

    கடைசியில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்று கேட்பார். அவர் சுற்றும், முற்றும் பார்த்து விட்டு ரஜினி சாரை கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் நச்சென்று கொடுப்பார்.

    உடனே 'அடச் சீ..' என்ன சார் நீங்கள்? நான் அர்த்தம் கேட்டால் நீங்கள் இப்படி..? என்று அப்பாவித் தனமாக கேட்பார்.

    அதற்கு ரவிக்குமார் சார் 'நீ கேட்டதற்கு அர்த்தம் இது தானே. நீ ஒரு ஆம்பளையா போயிட்டே. அதனால் தான் கன்னத்தில் கொடுத்தேன். இதுவே பொம்பளையா இருந்திருந்தா உதட்டில் கொடுத்திருப்பேன் என்பார்.

    நகைச்சுவையாக ரசிக்கப்பட்ட இந்த காட்சியில் நான் குதிரை வண்டியில் ராணி மாதிரியாக வேடம் போட்டுக்கொண்டு இருப்பேன்.

    இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...

    என்பதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு என்னை தேடி ரஜினி சார் ஓடி வருவார். அப்போது நான் குளிப்பதற்காக தலை, காது, கை, இடுப்பில் அணிந்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைத்து கொண்டிருப்பேன்.


    தினமும் ஷுட்டிங் முடிந்து மாலையில் தான் அவ்வளவு பெரிய பாரத்தையும் இறக்கி வைக்க முடியும். அன்று பகலிலேயே மேக்கப்பை கலைக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

    அதே நேரம் இன்னொரு சங்கடத்தையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அதாவது கோபத்தில் வரும் ரஜினி சார் என்னை கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டும். அந்த காட்சியில் கட்டிபிடித்தபடி பாறை மீதிருந்து உருண்டு கீழே ஓடும் ஆற்றில் வந்து விழ வேண்டும்.

    குறிப்பிட்ட படி காட்சிக்கு தயாராகி பாறை மீது சென்றோம். அப்போது கோடை காலம் போல் கேரளத்திலும் வெயில் சுட்டெரித்தது. ஷுட்டிங் வேறு மதிய நேரத்தில் நடந்ததால் வெயிலில் பாறை கொதித்தது.

    காலில் செருப்பும் போடாததால் ஆ... ஊ... என்றபடி தான் சென்றேன். ஷாட் ரெடி என்றதும் பாறையில் உருள தொடங்கினோம். அவ்வளவு தான்... உடலில் நெருப்பு பட்டதுபோல் ஆங்காங்கே சூடு போட்டு தாக்கியது. கால், கை, இடுப்பில் சூடு தாங்க முடியவில்லை. அதே நேரம் ஆற்றுக்குள் விழும் முன்பே குளித்தது போல் வியர்வையில் உடல் நனைந்தது. அந்த காட்சியில் நடித்து முடித்ததே ஒரு போராட்டம் போல் இருந்தது.

    படம் முழுக்க ஹெவியான அதே டிரெஸ் தான். கழுத்தில், காதில், கைகளில், தலையில் நிறைய நகைகளெல்லாம் அணிந்த படி இருப்பேன். அதுவே மிகப்பெரிய பாரமாக இருக்கும். காலையில் இருந்து மாலை வரை ஒரே டிரெஸ்... நகைகளை சுமந்து கொண்டிருப்பதே ஒரு மாதிரி இருக்கும். அதுவும் வெயில் நேரத்தில் ஷுட்டிங் நடந்ததால் வியர்த்து கொட்டும். கை, கால்களில் நனைந்து அது ஒரு தனி டிசைனாக தெரியும்.

    மேக்அப்பும் ரொம்ப அதிகமாக இருக்கும். இப்போதைய சாதாரண 'மேக்கப்'களை பார்த்துவிட்டு அந்த காலத்தில் இவ்வளவு அரிதாரம் பூசியிருக்கிறோமே என்று என்னை நினைத்து நானே ஆச்சரியப்பட்டேன்.

    மேக்அப் மட்டும் ஓவர் பில்ட் அப் கிடையாது. பல காட்சிகளும் அப்படித்தான்.


    குதிரை வண்டியில் நானும், ராஜினி சாரும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் அதே நேரம் வண்டி யையும் ஓட்டியபடி செல்வோம்.

    வண்டியையும் ஓட்டியபடி பாடலுக்கு ஏற்றபடி முகபாவனையுடன் நடிப்பது அவ்வளவு ஈசி கிடையாது.

    ரஜினி சார் அதிலும் கச்சிதமாக நடித்தார். எனக்கு தான் அந்த வண்டி பயணம் பல நேரங்களில் பயத்தை ஏற்படுத்தியது.

    கிளைமேக்ஸ் காட்சியில் ஜெயபாரதி அம்மா என்னை கோவிலுக்கு அழைத்து வருவார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் போது ரஜினி சார் இல்லாமல் குதிரை வண்டி மட்டும் வரும்.

    அதை பார்த்ததும் முத்துவுக்கு என்ன ஆச்சு..? என்று நானும், ஜெயபாரதி அம்மாவும் பதற்றத்துடன் வண்டியில் ஏறியதும் குதிரைகள் எங்களை வீட்டுக்கு கொண்டு சேர்க்கும். கடைசி வரை வண்டியை யாரும் ஓட்டவில்லை.

    இந்த காட்சி தான் முதலில் படமாக்கப்பட்டது. எனக்கோ பயம். வண்டி சரியான பாதையில் தான் செல்கிறதா? எங்காவது குடை சாயுமா? என்ற பயத்துடனேயே இருந்தேன்.

    உண்மையி்ல் நடந்தது வேறு. வண்டிக்காரர் வண்டிக்குள் மறைந்து இருந்தபடி வண்டியை ஓட்டி செல்வார். அந்த அளவுக்கு சிரமப்பட்டு காட்சிகளை படமாக்கினார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி சார் கையில் ஒரு பாம்பை பிடித்து வைத்திருப்பார். அவரோடு வண்டியில் இருக்கும் நான் பாம்பை பார்த்ததும் பயந்து பா.. பா... பாம்பு என்பேன்.

    அவரும் பாம்பா.. என்றபடி என்னிடம் நீட்டுவார். அதை நான் வாங்கிவெளியே போட வேண்டும்.

    அந்த காட்சியில் ரஜினி சார் கையில் வைத்திருந்தது நிஜபாம்பு. அவருக்கு பயம் இருந்தது? அதை வெளிக்காட்டாமல் இருந்தாரா? என்பது எனக்கு தெரியாது.

    ஆனால் பாம்பை பார்த்ததும் எனக்கு பயத்தில் உடலே நடுங்கியது. அவர் தான் அது ஒன்றும் செய்யாதும்மா என்றார்.

    ஆனாலும் எனக்கு தைரியம் இல்லை. வாங்குவது போல் கையை அருகில் கொண்டு செல்வேன். அவ்வளவு தான் பாம்பை தூக்கி வீசிவிடுவார். இப்படித்தான் அந்த காட்சி படமாக்கப்பட்டது.

    ஷுட்டிங் நடப்பதை பார்க்க பெரும் கூட்டம் வேறு கூடியிருந்தது. அவர்களை சமாளிக்க மொத்த யூனிட்டும் படாத பாடுபட்டது.

    கூட்டம் உள்ளே வந்தால் காமிராவுக்குள் வந்து விடுவார்கள். கோபப்பட்டாலும், கூட்டத்தின் கோபம் எங்கள் மீது திரும்பிவிடும். அப்புறம் படப்பிடிப்பே நடத்த முடியாத சூழ்நிலை வந்துவிடும் என்பதால் மிகவும் அமைதியாக அவர்களை சமாளிக்கப் பார்த்தார்கள்.

    ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்தமாக அவர்கள் மொய்த்ததால் கூட்டத்தில் சிக்கி சிரமப்பட்டேன். அன்று அந்த யூனிட்டில் நான் மட்டும் தான் பெண். ரொம்பவே பயந்துவிட்டேன்.

    கூட்டத்தில் இருந்து ரஜினி சாரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றார்கள். ஒரு வழியாக நானும் தப்பித்தேன்.


    சற்று தூரத்தில் தான் எங்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் இடம் இருந்தது. மதிய உணவுக்காக சென்றோம். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம்.

    என்னை பார்த்த ரஜினி சார் 'ஏம்மா... ஒரு மாதிரி பேசாமல் இருக்கிறே...' என்றார். அதை கேட்டதும் மனதுக்குள் பொங்கிய கோபத்தில்..

    என்ன சார் நீங்கள்லாம் இப்படி இருக்கீங்க. எவ்வளவு பெரிய கூட்டம்..? ரஜினி சாரை மட்டும் பாதுகாப்பதில் குறியாக இருந்தீர்கள். என்னை அம்போன்னு விட்டுட்டீங்கள்ல? என்று குமுறினேன்.

    அதை கேட்டதும் ரஜினி சார் 'அதனால் தான் இப்படி இருக்கியா? இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம் கவலைப்படாதே' என்றார்.

    மதிய உணவு முடிந்து ஷுட்டிங் புறப்பட்டோம். இப்போது எனக்கு முன்னால் ரஜினி சார். பின்னால் கே.எஸ்.ரவிக்குமார் சார். அவர்களுக்கு நடுவில் நடந்து சென்ற போது ஜாலியாக இருந்தது. பரவாயில்லை. நமக்கு இரண்டு ஜாம்பவான்கள் பாதுகாப்பாக வருகிறார்கள் என்ற நினைப்புடன் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு சென்றேன்.

    மேலும் முக்கிய நிகழ்வுகளை அடுத்த வாரம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன்.

    (தொடரும்...)

    • நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் வானவில் பாலம் நயாகரா அருவி அருகில் உள்ளது.
    • நயாகரா நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு பசுமையான அழகியப் பூங்கா உள்ளது.

    மனமும், உடலும் இளகி அப்படியே வானில் பறப்பது போன்றதொரு அற்புத அனுபவத்தைப் பெற வேண்டுமா? தன்னையே மறந்து, அதனுள்ளேயே கரைந்து, மறைந்து போய்விட மாட்டோமா என்று பித்தாகி, ஏங்கி நிற்கச் செய்யும் ஓர் இயற்கை அதிசயம் என்றால் அது நயாகரா பேரருவிதான்!

    நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. உலகின் மிக அரிதான அருங்காட்சிகளில் ஒன்றாகப் போற்றப்படும் இந்த அழகிய காட்சியைக் காண ஆண்டுதோறும் 1 கோடி மக்கள் திரண்டு வருகின்றனர். ஓவென 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் பிரமாண்டமான நீர்வீழ்ச்சி இது! வெண்பனி நுரையாகப் பொங்கி வழியும் நீர்க்கோலம்.

    1846-ம் ஆண்டில் இருந்து உலக மக்களையெல்லாம் கவர்ந்து இழுக்கின்ற ஒரு கற்பனைக்கெட்டாத அற்புதக் கலைக் களஞ்சியம்! வாழ்நாளில் ஒரு முறையேனும் அந்த அதிசயத்தைக் கண்டுவிடத் துடிக்கும் மனித மனம். கண்டபோதும் மீண்டு வர மனமின்றி அதற்குள்ளேயே கரைந்து போய்விடத் தோன்றும் மாயத் தோற்றம்!

    வட அமெரிக்காவின் மிகப்பழமையான, வரலாற்றுப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்விழ்ச்சியின் அழகை வர்ணிக்க சாமானிய மனிதரால் ஆகாது. இயற்கையை அள்ளிப் பருகி, அதை அற்புத முத்துக்களாக வெளிக்கொணர்ந்து கோர்த்து அழகிய கவி மாலையாக்கித் தந்திட ஒரு கவிஞராக அல்லது ஒரு ஓவியராக இருக்க வேண்டும். படகில் நீர்வீழ்ச்சியின் மிக அருகே செல்லும்போது அந்த நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகள் நம்மைச்சுற்றி பூமாறிப் பொழிந்து நனையச் செய்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் இனிய சூழல். ஒரு புறம் நீர் வீழ்ச்சியின் அழகை அள்ளிப் பருகும் வேளையில் மறுபுறம் பசும்புல்வெளியினூடே உல்லாசமாக ஓடித் திரியும் சீகல் பறவைகளின் கூட்டம், ஒன்றோடொன்று மூக்கோடு மூக்கை உரசியவாறு கொஞ்சித் திரிவதையும் காணத்தவறி விடக்கூடாது.

    ஈரி ஏரியில் இருந்து வழிந்தோடும் நீரே நயாகரா நதியாக பாய்ந்து பபலோ என்ற இடத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடா என்ற இரு பெரிய நாடுகளுக்கு இடையில் கொட்டுகிறது. நீர் வீழ்ச்சியில் இருந்து சில மீட்டர்கள் தொலைவு வரை ஒரு படகில் அழைத்துச் செல்வார்கள். ஒரு முறைக்கு சுமார் 100 பேர் வரை அந்தப் படகில் செல்ல முடியும்.

    நயாகரா நீர்வீழ்ச்சி நியூயார்க் மாநிலத்தின் ஒரு அடையாளச் சின்னம் என்றால் அது மிகையில்லை. ஒரு புறம் அமெரிக்காவும், மறுபுறம் கனடாவின் எல்லையையும் விரிவுபடுத்தும் பரந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் உயரம் 187 மீட்டர். நயாகரா என்பது ஒரு ஆற்றின் பெயர். ஆற்றின் பெயரே அருவிக்கும் வழங்குகிறது. இந்த ஆறு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சென்று வடக்காகத் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படித் திரும்பும் முனையில்தான் நயாகரா அருவி உள்ளது. இதன் மேற்குக் கரையில் கனடாவும், கிழக்குக் கரையில் அமெரிக்காவும் உள்ளது. கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையில் நயாகரா உள்ளது.

    உலகப் புகழ்பெற்ற இந்த நயாகரா நீர்வீழ்ச்சி வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு அழகிய பேரருவி. கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் சுழன்றோடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது இப்பேரருவி.

    நயாகரா நீர்வீழ்ச்சி இரண்டு பெரிய அருவிகளால் ஆனது. இதிலுள்ள சுமார் 85 சதவீதம் நீர் கனடாவில் உள்ள குதிரை இலாட அருவியிலும் மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாத ஒரு சிறிய, பிரைடல் வெய்ல் என்ற அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீட்டர் அகலமும், 53 மீ. உயரமும் கொண்டது, நயாகரா அருவி மிகவும் அகலமானது.

    அமெரிக்க அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. இந்த பேரருவியினூடே ஒவ்வொரு நிமிடமும் ஆறு மில்லியன் கன அடிக்கும் (168,000 m³) அதிகமான நீர் பாய்ந்து செல்கிறது. அமெரிக்க அருவியில் தண்ணீர் 10 சதவீதம்தான் விழுகிறதாம். எஞ்சிய பகுதி முழுவதும் இந்த குதிரை லாடப் பாறையில் கொட்டுகிறது!

    இந்தப் பேரரருவியின் நீரோட்டம், இங்குள்ள ராபர்ட்டு மோசஸ் மின் நிலையம், ஆடம் பெக் ஆகிய இரு மின் நிலையங்களுடன் சேர்ந்து 4 கிகாவாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்றால் அது, நீரோட்டத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் மின்னாற்றலால் சுற்றுப்புறச் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவதில்லை என்பதுதான்.

    பவளசங்கரி

    பவளசங்கரி

    மேற்கண்ட 3 அருவிகளையும் அருகிருந்து காண்பதென்பது கற்பனைக்கும் எட்டாத அற்புதக் காட்சி. இதனை மெயிட் ஆப் த மிஸ்ட் என்பார்கள். படகு மூலம் அந்தப் பிரமாண்ட அருவியின் அருகில் செல்லும் போது வேற்று உலகிற்கு வந்துவிட்ட ஒரு வித்தியாசமான மன நிலையே வந்துவிடுகிறது. அமெரிக்கப் பகுதியில் இருந்தும் கனேடியப் பகுதியில் இருந்தும் படகு மூலம் குதிரை லாட அருவியின் அருகே செல்ல முடியும். 'சோ'வென்று கொட்டும் அருவி நீர் தெறித்து நம் உடைகள் நனைந்து விடாமல் இருப்பதற்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட நீல நிற நெகிழி ஆடையை வழங்குகிறார்கள்.

    நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் வானவில் பாலம் நயாகரா அருவி அருகில் உள்ளது. இந்த பாலத்தின் மீது நடந்து செல்ல முடியும். நயாகராவின் அழகை ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொள்ளவும் இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது. நயாகரா நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு பசுமையான அழகியப் பூங்கா உள்ளது.

    1885-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காதான் அமெரிக்காவிலேயே தொன்மை வாய்ந்த பூங்கா என்கிறார்கள். இந்தப் பூங்காவினுள் சென்றவுடன் திடீரென ஒரு பேரிரைச்சல் நம்மை நிலை குலையச் செய்யும். ஆம், நயாகரா ஆறு தடதடவென்ற அதிர்வுடன் அதலப் பாதாளத்தில் கொட்டிக் கொண்டிருக்கும். நாம் சமதரையில் நிற்பது போல் தோன்றினாலும் உச்சிப் பாறைகளில் நின்று கொண்டிருப்பதை உணர்வோம். ஆனால் நயாகரா ஆறு நமக்குக் கீழே கரை புரண்டு ஓடி வந்து இடி முழக்கத்துடன் படு பாதாளத்தில் பாயும். பாறைகளில் விழுந்துமுட்டி மோதி மீண்டும் மேலெழும்பித் தாவி தண்ணீர்த் திவலைகளைத் தெறிக்கச் செய்யும்! உலகில் வேறு எங்கும் காண இயலாத பேரெழில் மிக்கக் காட்சி இது!

    இந்த அற்புதத்தை முதன் முதலில் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர் பங்குத் தந்தை லூயிசு ஹென்னபின் என்ற ஐரோப்பியர். பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத் துறையினரின் மிகச்சிறப்பான பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. அனைத்து இடங்களையும் வசதியாக சுற்றிப் பார்க்க பலவிதமான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். வானிலேறி வட்டமிட்டு பறந்து கொண்டே இனிய காட்சிகளைக் கண்டுகளிக்க ஹெலிகாப்டர் விட்டிருக்கிறார்கள். ஆடம்பர விடுதிகள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கடைகள், சோலைகள், பசும்புல் தரைகள் என அருவியைச் சுற்றி பார்க்க வேண்டிய காட்சிகள் ஏராளம். கட்டணம் சற்று அதிகமாகத் தெரிந்தாலும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அது இணையானது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    உச்சியில் இருந்து கீழே விழும் அருவியின் உயரம் 170 அடி என்றாலும் அது பூமியைத் துளைத்து இன்னுமோர் 170அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்று விடுவதால் இந்த அருவியில் பாதி ஆகாய அருவியாகவும், மீதி பாதாள அருவியாகவும் வீழ்கிறது. ஈரி, கியூரன், மிச்சிகன், சுப்பீரியர் என்னும் நான்கு மாபெரும் ஏரிகளில் இருந்து அதிகளவு தண்ணீர் இந்த ஏரிக்கு வருகிறது. பிரமாண்ட அருவியாகக் கொட்டும் நீர் மீண்டும் ஆறாகப் பெருக்கெடுத்து கனடாவில் உள்ள ஒன்டாரியோ என்ற ஏரியில் சென்று சேர்கிறது. மீண்டும் அங்கிருந்து செயின்ட் லாரன்சு என்ற ஆறாகி இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கலக்கிறது. ஏறத்தாழ இரண்டு லட்சத்து இரண்டாயிரம் கன அடி தண்ணீர் இந்த அருவியில் கொட்டியதாம். இப்போது அமெரிக்காவும் கனடாவும் இதில் பாதியை மின் உற்பத்திக்காகப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

    குதிரை இலாடம் போன்று அரை வட்ட வடிவமாகத் தோன்றும் லாடப் பாறையில் கொட்டும் அருவியும் கூட அரைவட்ட வடிவமாகவே காணப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகிறது.

    நெடிதுயர்ந்த பாறைகளால் வளைந்த சுவர் போல சூழப்பட்டு குகை போல் இந்த இடம் உள்ளது. பனிமூட்டப்பாவை என்று அழைக்கப்படும் இந்த இடத்திற்கு வெகு அருகில் பயணிகளை அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். சிறிய கப்பல் போன்ற பெரிய பெரிய விசைப்படகுகள் கொண்ட படகுத்துறை இதற்கெனவே அமெரிக்க அருவிப்பகுதியில் இருக்கிறது. மூன்று தளங்கள் கொண்ட இந்த விசைப்படகின் மூலம் லாடப் பாறைக்கு அருகே, ஆற்றின் நடுவே நிறுத்தி குளிர்ந்த சாரலினூடே கொட்டும் அருவியைக் காணும் அனுபவம் நினைவை விட்டு அகலாத ஒப்பற்றதோர் அனுபவம் என்றால் அது மிகையில்லை. அங்குள்ள பாறையின் குகைக்குள் விசைப்படகு நெருங்க நெருங்க கடுங்குளிரும், அருவியின் ஓ வென்ற இரைச்சலும் உடலை குலுங்கச் செய்வதைத் தவிர்க்க இயலாது.

    வானவில் பாலம் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பக்க அருவியில் அமைந்துள்ள பாலம் சூரிய ஒளி வீசும்பொழுது அருவியின் எதிரில் அழகான வானவில் தோன்றிக் காட்சியளிக்கிறது!

    இரவு 7 மணிக்கு மேல் வண்ண விளக்குகளின் ஒளியில் பளீரென மின்னும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும். ஆயிரக்கணக்கான வானவில்கள் வானில் இருந்து புறப்பட்டு அணிவகுத்து தொங்குவது போல் பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பலவிதமான வண்ணக்கோலங்களில் கண்ணுக்கு விருந்தாகிவிடுகிறது. அருவியின் தண்ணீர் அந்த ஒளிக்கதிர்களால் அசையும் வண்ணக் கதிர்களாக மாறி மனம் மயங்கச் செய்து விடுகிறது. அமெரிக்காவின் பக்கத்தில் இருக்கும் அருவிக்கு மணப்பெண்ணின் முகத்திரை என்று பெயரிட்டுள்ளனர்.

    எப்போதும் நீண்ட வரிசையில், சிறு பிள்ளைகள் உட்பட, எல்லா வயதினரும் நீர்வீழ்ச்சியைப் பார்க்க காத்திருக்கிறார்கள். மஞ்சள் நிற மழை அங்கியை அணிந்து கொண்டு, மெய்ட் ஆப் த மிஸ்ட் VII படகில் பயணம் செய்தபோது சில மணித் துளிகள் சுற்றியிருந்த உலகம் அப்படியே நிலைத்து நின்றுவிடுகிறது.

    கடந்த 12,000 ஆண்டுகளில் நயாகரா நீர்வீழ்ச்சி சுமார் 11 கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி நகர்ந்து இப்போதிருக்கும் இடத்துக்கு வந்துள்ளதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. ஒரு சமயம் அரிப்பு வீதம் ஆண்டுக்கு சுமார் ஒரு மீட்டராக இருந்தது. இப்போது, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் சுமார் 36 சென்டிமீட்டராக உள்ளது. மென்மையான மணற்பாறை மற்றும் பிளவுறத்தக்க களிமண் பாறை அடுக்குகளின் மேல் இருக்கும் கடினமான பனிக்காலத்தில் இந்த அருவியும் நதியும் முழுவதுமாக உறைந்துக் கிடக்கும் அழகையும் வாய்ப்ப மைந்தால் காணத் தவறிவிடக் கூடாது. மொத்த அழகும் உறைந்த நிலையில், அமைதியாகக் காட்சியளிப்பதைக் காணும்போது வேறோர் உலகில் பயணம் செய்வது போன்ற மாயையை ஏற்படுத்தும்!

    • தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது.
    • கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது.

    ராமேசுவரம்:

    தனுஷ்கோடி... ஆழிப்பேரலை தாக்கி அழிந்ததின் 59 ஆண்டு நினைவு தினம் இன்று. சேதமடைந்த கட்டிடங்கள் நினைவுகளாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என்று இரண்டு கடல் பகுதியை கொண்டது தனுஷ்கோடி துறைமுக நகரம் இலங்கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. இதனால் இங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கினால் அதிகளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் தனுஷ்கோடியில் துறைமுகம் அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு துறைமுகம் அமைக்கப்பட்டு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இரண்டு கப்பல் போக்குவரத்து 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த துறைமுகத்திற்கு அதிகளவில் சரக்கு கொண்டு செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு போட்மெயில் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டது. இதனால் தனுஷ்கோடி மிகப்பெரிய அளவில் வர்த்தக துறைமுக நகரமாக மாறியது.

    இந்த பகுதி மக்கள் தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. இலங்கை வழியாக செல்லும் பயணிகள் தங்களது பணத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் அலுவலகம், காவல் துறை, சுங்கத்துறை, தபால் அலுவலகம், ரெயில் நிலையம் என பரந்து விரிந்து காணப்பட்ட தனுஷ்கோடி துறைமுக நகரம், ஆழிப்பேரலையில் சிக்கிகொண்டு அழிந்து போகும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

    கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளிலும், அரசுத்துறை அதிகாரிகள் என அலுவலகத்திலும் இருந்தனர். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கடலின் சீற்றமும் அதிகமானது. நள்ளிரவு 12.30 மணிக்கு கொட்டித்தீர்த்த மழை சுழன்று அடித்த காற்று கடலில் எழுந்த ஆழிப்பேரலை தனுஷ்கோடியை தாக்கியது. விடியும் என காத்திருந்த மக்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

    அரசுத்துறை கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதால் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கடுமையாக சேதமடைந்தது இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு தனுஷ்கோடி கடலுக்குள் சென்று விட்டது. 

    ஆழிப்பேரலையில் சிக்கி சின்னாபின்னமான ரெயில்

    ஆழிப்பேரலையில் சிக்கி சின்னாபின்னமான ரெயில்

    பாம்பன் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரெயில் சிக்னல் கிடைக்காமல் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேரலையில் சிக்கி தூக்கி வீசப்பட்ட அந்த ரெயிலில் இருந்த பயணிகள் ஏராளமான பேர் உயிரிழந்தனர். விடிந்தால் 24-ந்தேதி அதிகாலையில் தனுஷ்கோடியில் தாக்கிய புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை. 8 இரும்பு கர்டர்களை தூக்கி கடலில் வீசியது. 45 நாட்களுக்கு பின் பாம்பன் பாலம் ரெயில்வே துறையினரால் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

    தனுஷ்கோடியை புயல் தாக்கியது காலையில் தான் தெரியவந்தது. துறைமுக நகரம் எங்கு பார்த்ததாலும் தண்ணீர் நிறைந்த சிறு சிறு தீவுகள் போல காட்சி அளித்தது. புயலில் சிக்கி உயரிழந்தவர்கள் சடலங்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தது. மரண ஓலங்கள் அழுகை என மனதை தவிக்க வைத்து இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது.

    இன்றும் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் தாக்கத்தை முழுமையை புரிந்து கொள்ளமுடிகிறது. புகழ் பெற்ற துறைமுக நகரம் தனது அழிவுக்கு பின் பழமையை எடுத்துகாட்டும் விதமாக கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றது. தனுஷ்கோடிக்கு நேராக வாகனங்கள் வர முடியாது. 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையில் வாகனங்கள் வந்து விடும். இதன் பின் அங்கிருக்கும் பிரத்யேக வாகனங்கள் மூலம் தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும். வழி நெடுகிலும் கடலில் இருந்து மணல் மேடுகளாக காணப்படுகின்றது. கடல் நீரில் தான் இந்த வாகனம் சென்று வருகிறது. பாதுகாப்பற்ற பயணமாக இருந்தாலும் இதை தவிர வேறு வழி கிடையாது. தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை பார்த்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரிச்சல்முனை வரை சாலைகள் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆண்டுக்கு 3 கோடி வரை வந்து செல்லுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகளான கழிவறை, வாகன நிறுத்தம், பொதுமக்கள் கடற்கரையோரம் அமர்ந்து பொழுது போக்கிடும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும், இடிந்து போன தேவாலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நீதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும்போது புதுப்பொலிவு பெற்று விடும். மேலும் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் மீண்டும் தனுஷ்கோடி பிரமாண்ட நகரமாக மாறி விடும் என்ற நம்பிக்கையுடன் இன்றளவும் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் 59 ஆண்டு நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

    • தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டதும் மக்களின் பேராதரவால் அ.தி.மு.க. எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார்.
    • முதலமைச்சராக பதவியேற்றவர், தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகவே மறைந்தார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திரையுலகில் ஒரு புதிய வரலாறும், அரசியலில் ஒரு மாபெரும் புரட்சியும் உருவாக்கி, உலக மக்கள் அனைவராலும் போற்றிப்பாராட்டும் வகையில் வாழ்ந்து வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர்.

    தி.மு.க. இயக்கத்தை வளர்த்து, அரியணையில் அமர்த்தி, அண்ணாவை முதலமைச்சராக்கி, அவரது மறைவுக்கு பிறகு கருணாநிதியை முதலமைச்சராக்கிய முக்கியமானவர்களில் முதன்மையானவர் எம்.ஜி.ஆர்.. தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டதும் மக்களின் பேராதரவால் அ.தி.மு.க. எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார்.

    முதலமைச்சராகப் பதவியேற்றவர், தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று தேர்தல்களிலும் அமோக வெற்றிபெற்று முதலமைச்சராகவே மறைந்தார். மனிதநேயத்தின் அடையாளமாக, அனைத்து மக்களுக்குமான சேவை நிறைந்த ஆட்சி, நேர்மையான அதிகாரம் என்ற வகையில் 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தினார்.

    அவருக்குப் பிறகு ஜானகியம்மாள், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராவதற்கும் எம்.ஜி.ஆரின் செல்வாக்குதான் அடிப்படை காரணம். தமிழகத்தின் தனிப்பெரும் சக்தியாக, ஒட்டுமொத்த மக்களின் பேராதரவைப் பெற்ற அவதாரப் புருஷராக, திரைப்படத்தை அறிவாயுதமாகப் பயன்படுத்திய ஒப்பற்ற கலையுலக மேதமையாக இன்றுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதநேயரின் நினைவுநாள் இன்று.

    கடையேழு வள்ளல்கள் மக்கள் பணத்தை வாரி வழங்கி வள்ளலானார்கள். ஆனால் திரைப்படத்தில் நடித்து, தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கடைசி வரை வாரி வழங்கி வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக வாழ்ந்து வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். தனது சொந்த நிதியில் இருந்து அறக்கட்டளை தொடங்கி இலவசக்கல்வி, இலவச மருத்துவமும் மக்களுக்கு கொடுத்தார்.

    அவரது பண்புகளை பின்பற்றியே, யாரிடமிருந்தும் நன்கொடை பெறாமல் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் நிதியில் இருந்து மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளையை தொடங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அரசுப்பணியில் சேருவதற்கான பயிற்சியை 17 ஆண்டுகளாக தொடர்ந்து இலவசமாக வழங்கிவருகிறோம். 

    மனிதநேய அறக்கட்டளையில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப்பணித்தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதி, மாவட்ட நீதிபதி, அரசு உதவி வக்கீல் போன்ற உயர்பதவிகளுக்கு 3,708 மாணவர்களும், குரூப்-4 மற்றும் இதர துணைநிலை பதவிகளுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 170 சாதிப்பிரிவுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பாடத்திட்டத்துடன் எங்கள் மாணவர்களுக்கு எம்.ஜி.ஆரின் மனிதநேயம், நேர்மை, திறமை, பொறுமை போன்ற பண்புகளையும் கற்றுத்தருகிறோம்.

    மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத்திட்டம் போன்று பொதுமக்களுக்கு மூன்று வேளையும் குறைந்த செலவில் உணவு தர வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான், மனிதநேய அறக்கட்டளை மூலம் சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட மலிவு விலை உணவகம். ஜெயலலிதா என்னை பெருநகர சென்னை மேயராக்கியதும், இந்த மலிவு விலை உணவகத்தின் நீட்சியாக அம்மா உணவகத்தை மேம்படுத்தி, ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் முதலில் சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் கொண்டுசென்று எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுத்தோம்.

    எம்.ஜி.ஆரின் அறிவுரைகளை அரச கட்டளையாக ஏற்றுக்கொண்டு, அவரது வழியில் நேர்மை, சேவை, தூய்மை போன்ற பண்புகளைக் கடைப்பிடித்து குடிசை மாற்று வாரிய உறுப்பினர், எம்.எல்.ஏ., மேயர் ஆகிய பதவிகளில் சுயநலமற்ற முழுநேர சேவையாளனாகப் பணியாற்றினேன்.

    தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த எம்.ஜி.ஆர். அரசு சலுகைகளை நிராகரித்து தன் சொந்த செலவில் பணியாற்றியது போலவே, நானும் மேயர் பதவியில் இருந்தபோது அரசு சலுகைகளை முற்றிலும் நிராகரித்து என் சொந்த செலவில் பணியாற்றினேன். 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்' என்று வினா எழுப்பி, அதற்கு விடையாகவும் வாழ்ந்து காட்டிய எம்.ஜி.ஆரின் பாதையில் என்னை போன்று கோடிக்கணக்கான பக்தர்கள், ரசிகர்கள் இன்றும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து சேவை செய்து அவரது புகழ்பரப்பி வருகிறார்கள்.

    சக பக்தர்களுடன் இணைந்து எம்.ஜி.ஆரின் புகழை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், பேரானந்தமும் வேறு எந்த பதவியிலும் கிடைக்கவில்லை. எனவே எம்.ஜி.ஆரால் எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த பெருவாழ்வில், இனி தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக விலகி நின்று, மனிதநேய அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கில் வெற்றி அடைந்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் உயர்த்துவதற்கும், சக மனிதர்களுக்கு முழுநேரமும் அர்ப்பணிப்புடன் சேவைபுரிந்து புரட்சித்தலைவரின் புகழ் பரப்புவதையுமே என் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருப்பேன் என்று இந்நாளில் உறுதியேற்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • மனிதர்களின் குடும்ப உறவுகள் ஒன்னுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை.
    • புதிய தலைமுறையும் பட்டுப் போகாமல் பழைய தலைமுறையின் உரம்பெற்றுத் தளிர்த்து வளர முடியும்.

    தலைமுறை உறவுகளில் உன்னதம் காணும் உயரிய வாசகர்களே!

    வணக்கம்!

    தலைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி எனத் தலைமுறைகளின் சுருக்கக் குறியீடுகளாகக் கொண்டு குறிப்பிட்டு வருகின்றது.

    தொழில்நுட்பத்தில் எத்தனை 'ஜி'க்கள் மாறி வந்தாலும் தலைமுறை உறவுகள் மாறிவிடுவதில்லை. கணவன், மனைவி, அப்பா, அம்மா, பெற்றோர் பிள்ளைகள், மாமா தாய்மாமா, அத்தை, அண்ணன், அண்ணி, அக்கா, தம்பி, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியார், மருமகன், மருமகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி என வரும் மனித குடும்ப உறவுப் பரிமாணத்தில் எந்தச் சிறு மாற்றமும் நிகழ்ந்து விடுவதில்லை.

    மனிதர்களின் குடும்ப உறவுகள் ஒன்னுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை. அவை பாசமெனும் கண்களுக்குத் தெரியாத அன்பின் கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பவை. இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் வாழ்க்கைச் சூழல் மாற்றங்களால் பல உறவுப்பெயர்கள் தொலைந்துபோகத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும் அவற்றுள் தொலைக்க முடியாத உன்னத உறவாகத் "தாத்தா பாட்டி- பேரன் பேத்தி" உறவே திகழுகிறது என்றால் அதனை எவராலும் மறுக்க முடியாது.

    சமுதாய அமைப்பில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்வியல் 'குடும்பம்' என்னும் அமைப்பியலுக்குள் வருகிறது. ஒவ்வொரு குடும்பமும் பின்னர் வாழையடி வாழையாய் வளர்ந்து பல்கிப் பெருகத் தொடங்குகிறது. இப்பெருக்கத்தில்தான் உறவுமுறை நெருக்கமும் உருவாகிறது. ஒரு குடும்பத்தின் நிகழ்காலத்தில் மிக அதிகமான வயது கொண்டோர் தாத்தா பாட்டியாகவும், மிகக் குறைந்த வயதுடையோர் பேரன் பேத்திகளாகவும் இருக்கின்றனர். இந்த இருவேறு தலைமுறை சார்ந்த இருவருக்கிடையே மலரும் அன்புணர்வின் உறவுப் பெருக்கத்தில்தான் மனிதப் பண்புசார்ந்த வளர்ச்சிகள் உச்சம் காணவிருக்கின்றன.

    தாத்தா பாட்டிகளின் பெயர் சொல்லவும் அவர்களின் புகழ் விளங்கவும் பிறந்தவர்கள் 'பெயரன்'. 'பெயர்த்தி'கள்; இந்த மூலச்சொற்களே பேச்சுவழக்கில் பேரன் பேத்திகள் ஆயின. அதனால் தான் மரபுசார்ந்த குடும்ப வழக்கில் தாத்தா பாட்டிகளின் பெயர்களையே பேரன் பேத்திகளுக்கு வைக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது.

    "அது என்ன தாத்தா உன்னை மட்டும் 'தாத்தா' என்று கூப்பிடச் சொல்கிறார்கள்?" என்று கேட்ட பேரனிடம் தாத்தா சொன்னார்," நீ உன் அப்பா அம்மாவிடம் "தா! தா!"என்று எதை வாங்கித் தரச்சொன்னாலும் எல்லாவற்றையும் வாங்கித் தரமாட்டார்கள்!. ஆனால் தாத்தாவிடம் எதைக்கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் வாங்கித் தந்துவிடுவோம். அதனால்தான் எல்லாப் பேரன் பேத்திகளும் 'தா!தா!'என்றே அழைக்கின்றனர்".

    "அப்படியா தாத்தா! இந்தக் குளிர்காலத்தில் ஐஸ் கிரீம் கேட்டால் வாங்கித் தருவீர்களா?" என்று கிண்டலாகக் கேட்டான் பேரன். "ஓ! அவசியம் வாங்கித் தருவேன்! உனக்கு ஒன்று வாங்கித் தரும் சாக்கில், சர்க்கரை நோயாளியான இந்தத் தாத்தாவும் ஒரு ஐஸ்கிரீமை வாங்கிச் சுவைத்துவிடுவேன் அல்லவா?" என்று நகைச்சுவையாகப் பதில் சொன்னார் தாத்தா.

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்


    முதிர்ந்த அனுபவத்தையும், மூப்பின் வயதினையும் உடைய மூத்தோர்கள், தங்கள் அனுபவத்தையும் அறிவினையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் மிக உடையவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் , பூமிக்குப் புதிதாக வந்த இளையோர்களோ எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஆர்வம் மிகுதி உடையவர்களாகத் திகழுகின்றனர். அறிவும் அனுபவமும் ஆர்வமும் சந்திக்கின்ற மையப் புள்ளியாகத் 'தாத்தா-பேரன்' உறவு திகழுகிறது.

    இந்த வகையில் அனுபவப் புதையலாகத் திகழும் தாத்தா பாட்டிகளும், ஆர்வத் தேடலாக விரையும் பேரன் பேத்திகளும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதால் ஒத்துப் போகின்றனர்.

    எங்கெல்லாம் 'தாத்தா பேரன்'கள் இணைந்து வளர்கின்றனரோ அங்கெல்லாம் இருவருக்குமே நன்மைகள் பல விளையும் மாயவித்தை நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அப்பா, அம்மா, மாமா அத்தை போன்ற மற்ற எந்த உறவை விடவும் தாத்தா பாட்டியிடம் மட்டுமே ஒட்டுதல் உறவு உடையவர்களாகப் பேரன் பேத்திகள் விளங்குகின்றனர். அதற்குக் காரணம், பேரன் பேத்திகள் செய்யும் சேட்டைகள் உள்ளிட்ட அனைத்துச் செயல்களையும், மாறுபடாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தாத்தா பாட்டிகளிடம் மட்டுமே இருக்கிறது. கோபமும் எரிச்சலும் அடையாத பொறுமை, அப்பழுக்கற்ற அன்பு, அரவணைக்கும் பாசம், அனுபவம் கற்றுக்கொடுத்த அறிவு, ஆதரிக்கும் தாராளம் ஆகியவை தாத்தா பாட்டிகளின் நிரந்தரச் சொத்துகள்.

    இப்படி இருப்பதால், தாத்தா பாட்டி, பேரன் பேத்தி இரு தரப்புமே நலமான வாழ்க்கையைப் பெறுகின்றனர். இளையோர்களுக்கு நேர்முறைச் சிந்தனைகள் வளர்கின்றன; அவர்கள் எளிதில் மனச்சோர்வு அடைந்துவிடாமல் எந்தச் செயலிலும் நம்பிக்கை ஆர்வத்தோடு இயங்குகின்றனர். அதே போல, வயதாகிவிட்டதே என்று சோர்ந்துபோய் விடாமல், மூளைப் புத்துணர்ச்சியோடு, வாழும் காலத்தை நீட்டித்துக் கொண்டு மூத்தோர்கள் மகிழ்ச்சியோடு வாழும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

    தாத்தா பேரன் உறவு என்பது வெறும் பிறப்பாலாகிய உறவு மட்டுமல்ல: அது உணர்வுபூர்வமான உறவு. தாத்தாவோடு நெருங்கிப் பழகும்போது ஒவ்வொரு பேரனும் அவனையறியாமலேயே மனத்தளவில் முதிர்ச்சிப் பக்குவம் அடைகிறான். அதைப்போலவே பேரன் பேத்திகளோடு பழகி அளவளாவி விளையாடும்போது ஒவ்வொரு தாத்தா பாட்டியுமே அவர்களை அறியாமலேயே குழந்தைகளாகி இளமைப் புதுமை அடைகின்றனர்.

    தாத்தா பாட்டிகளோடு சேர்ந்து வாழும் பேறுபெற்ற குழந்தைகள் உண்மையிலேயே இந்த உலகத்தில் வரம் வாங்கி வந்தவர்கள்; இதையே, பேரன் பேத்திகளோடு சேர்ந்து வாழும் பேறுபெற்ற தாத்தா பாட்டிகளும் வரம் வாங்கி வந்தவர்களே! என்றும் கூறலாம். இது, சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கூட்டுக்குடும்ப வாழ்வியலுக்கு வேண்டுமானால் பொருந்தி வரலாம். ஆனால் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில் இது பொருந்த வருமா? நடைமுறைச் சாத்தியமா?.

    சரியான கேள்விதான். கூட்டுக்குடும்ப வாழ்விலும் வீட்டு உறுப்பினர் ஒவ்வொருவருமே வேலைக்குப் போகத்தான் செய்தார்கள்; அவர்களது வேலைகளெல்லாம் ஒரே ஊரில் வயல்வெளிசார்ந்து ஒரே இடத்தில் இருந்தது. அதனால் ஒரே வீட்டில் கூடிவாழ்ந்து குதூகலித்து இருந்தனர்.

    குழந்தைகளுக்கு, சோறூட்ட ஒருவர், கதைசொல்ல ஒருவர், விளையாட்டுக் காட்ட ஒருவர், தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க ஒருவர், குளிக்க வைக்க ஒருவர், கண்டிக்க ஒருவர், அரவணைக்க ஒருவர்… என ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர் எனப் பலர் இருந்தனர் ஆனால் இன்றைய புறாக்கூண்டு அடுக்கக வாழ்வியலில் அப்பா அம்மாவைத் தவிர வேறு முகங்களைக் காணும் வாய்ப்பே கிடையாது. அதனால் செல்பேசிகளும், தொலைக்காட்சிகளும் காட்டும் கார்ட்டூன் சித்திரக் கதைமாந்தர்களே உறவுகளாக மாறிப்போன அவலம்.

    என்ன செய்யலாம்?.

    வாழ்வியலைப் பின்னுக்குத் தள்ளி வைக்கமுடியாது. அதன் ஓட்டத்திலேயே முடிந்த அளவுக்கு உறவுகளை ஒட்டவைத்து வளர்க்க முனைதலே புத்திசாலித்தனம். பேரன் பேத்திகள் ஓர் ஊரிலும்(நாட்டிலும்கூட) தாத்தா பாட்டிகள் ஓர் ஊரிலும் வாழ்ந்தால், அடிக்கடி இவ்விரு தரப்பினரும் சந்தித்து வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

    குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு விடுமுறை வாய்க்கும் போதெல்லாம் தாத்தா பாட்டி வீடுகளுக்குப் பேரன் பேத்திகளை அவசியம் அழைத்து வரவேண்டும். இதனால் பணச்செலவும் வீண் அலைச்சலும் உண்டாவதாக யாரும் சலித்துக் கொள்ளக் கூடாது. இவ்வகைச் சந்திப்புகள் மூலமாக நம் சந்ததிகளே அறிவுப் புத்துணர்வும் பண்பாட்டுச் சம்பாத்தியத்தையும் பெறுகின்றனர்.

    முடிந்த அளவுக்குத் தாத்தா பாட்டிகளும் தங்களால் முடிந்த அளவுக்குப் பயணம் செய்து பேரன் பேத்திகளைச் சென்று பார்த்து வருவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுகடவுளரைப்

    பார்த்து வருவதைப் போல மகன் மகள் வீடுகளுக்குச் சென்று பேரன் பேத்திகளைப் பார்த்து வருவதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். இது குடும்பக் கடமை மட்டுமல்ல; சமூகக் கடமையும் கூட.

    "வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபு!" என்று வள்ளல்பெருமான் குறிப்பிடுவது, மனிதகுல வளர்ச்சியின் மேன்மையை உணர்த்தும் வரிகள். மனிதன், குடும்பம், குடி, இனம், சமுதாயம் போன்ற பல்வேறு நிலைகளில் இணைந்தும் பிணைந்தும் மனிதன் செயலாற்ற வேண்டியதை வலியுறுத்தும் வரிகள் இவை.

    பல தலைமுறைகளாக வளர்ந்து வரும் குடும்பத்தில், அப்போதைக்கு, முதல் தலைமுறை தாத்தா பாட்டி என்றால், மூன்றாம் தலைமுறை பேரன் பேத்திகள். குடும்ப மரத்தின் வேர்களையும் கிளைகளையும் இளையோர்களிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் தாத்தா, பாட்டி எனும் மூத்தோர்களே ஆவர். ஒவ்வொரு பேரனும் பேத்தியும் நல்வழிக் கதைகளோடு, தமது மூதாதையர்களின் கதைகளையும் பாடுகளையும், தங்கள் தாத்தா பாட்டிகள் வழியே மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியும். இதன் வழிமுறையில் ஒவ்வொரு இளந்தலைமுறையும் பண்பாட்டு அறிவு பெற்றுப் பெருமை கொள்ள முடியும்.

    ஒரு மாலை நேரத்தில், ஒரு தாத்தாவும் ஒரு பேரனும் அவர்கள் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தத் தெரு முனையில் பேரனின் ஆசிரியர் வருவதை பார்த்த தாத்தா, "பேராண்டி! ஓடிப்போய் ஒளிந்துகொள்! உன் கணக்கு ஆசிரியர் வருகிறார்! பார்த்தால் பள்ளிக்கு ஏன் வரவில்லை? என்று கேட்பார்!" என்று பதற்றத்துடன் சொன்னார். இன்றைக்குக் கணக்கு ஆசிரியர் இறந்து போனதால் பள்ளிக்கு விடுமுறை! என்று அவனது அப்பாவிடம் பொய் சொல்லித்தான் பேரன் வீட்டில் இருக்கிறான் என்பது தாத்தாவுக்குத் தெரியும்.

    பேரன் பதற்றமில்லாமல் தாத்தாவிடம் சொன்னான், " தாத்தா! முதலில் நீ வீட்டுக்குள் போய் ஒளிந்துகொள்! நீ இறந்து விட்டதாகப் பொய் சொல்லித்தான் நான் பள்ளிக்கே விடுமுறை போட்டிருக்கிறேன்!". நல்ல நகைச்சுவை என்று சிரித்து மகிழ்ந்தார் தாத்தா.

    தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகள், நேரில் சந்தித்து உடன்வளரும் சூழல் தற்போது குறைந்து போனாலும். வீடியோ அழைப்புகள், வாட்ஸ் அப்புகள், இன்ஸ்டாகிராம், சூம் போன்ற எத்தனையோ நவீனத் தொழில்நுட்ப வசதிகள் வந்துள்ளன. உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு. ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட கலந்துரையாடல்களும், கதையாடல்களும்கூட நல்ல பயனளிக்கும்.

    அப்படி இருந்தால்தான் பழைய தலைமுறை இற்றுப்போகாமல், புதிய தலைமுறையோடு மேவிப் போக முடியும். புதிய தலைமுறையும் பட்டுப் போகாமல் பழைய தலைமுறையின் உரம்பெற்றுத் தளிர்த்து வளர முடியும்.

    தொடர்புக்கு 9443190098.

    ×