என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- சூரியனை வழிபடும் நேரத்தில் இல்லையென்று சொல்லாமல் யார் எதைக் கேட்டாலும் தானமாக தருவதால் வள்ளல் என்று பெயர் கொள்கிறான்.
- ஒரு விரக்தியான மனநிலையில், தள்ளப்படும் அவனின் மனப்போராட்டத்தில் விழுந்த வார்த்தையாக இந்தப் பழமொழியைக் கொள்ளலாம்.
கண்டா வரச்சொல்லுங்க..
யாரை?
ஆறிலும் சாவு நூறிலும் சாவு இந்த பழமொழிக்கான விளக்கத்தை...
இனிமேல்தானே எழுதவே போறோம் அப்போ எப்படி முன்னாடியே கண்டுக்கிறது.
சரிதான், ஒரு டிரண்டிற்காக அந்த வரியில் ஆரம்பித்தேன்.. உடனே கேள்வி கேட்க எங்கிருந்துதான் வர்றீங்களோ?
ஏம்பா போனவாரம்தான் சொர்க்கம் போறதைப் பற்றி குறிப்பிட்டு இப்போ சாவைப் பற்றியா? செத்ததுக்குப் பிறகுதானே சொர்க்கமா நரகமான்னு முடிவு செய்ய முடியும்.
பழமொழிக்கு விளக்கம் சொல்றதை விடவும், உனக்கு விளக்கம் சொல்லித்தான் மூச்சு வாங்குது.
அலுத்துக்காதே ஆறிலும் சாவு நூறிலும் சாவு எத்தனை பேமஸ் டயலாக்...
டயலாக் இல்லை பழமொழி.
சரி பழமொழிக்கு என்ன விளக்கம் வைச்சிருக்கே?
எங்கே சொல்ல விடறே ?
அட சொல்லித்தான் பாரேன். யாருகிட்டே ஆறிலேயும் சாவு நூறிலேயும் சாவு வா... வா... வந்து சொல்லிப்பாரு...
அந்த குரலை சற்று நேரம் அன் மியூட் செய்துவிட்டு...
மனிதன் இறுதிநிலை மரணம். அந்த மரணத்தை நோக்கித்தான் நாட்காட்டியின் ஒவ்வொரு தாளும் கிழிக்கப்பட்டு வருகிறது. வரலாறு அம்மனிதர்களின் வாழ்வியலை தன் செப்பேடுகளில் எழுதி வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ உணர்வுகளை நம்மில் கடத்துகிறது வாழ்க்கை.
டபுள் ஆக்ட் படங்களின் வரிசையில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ஒருவர் வீரனாகவும், இன்னொருவர் கோழையாகவும் வருவார்கள். இடம் மாறுவார்கள். பகையை வீழ்த்துவார்கள். ஏதாவது ஒரு காட்சியில் எப்படியும் சாவப்போகிறோம், அது ஆறிலேனாலும் சரி நூறினாலும் சரி என்று வசனம் வராத ஒரு திரைப்படமே இருக்க முடியாது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமல்ல காமெடிக் காட்சிகளுக்கும் பொருந்தும். வாடா நீ சண்டைக்கு வாடா... அமைதிப்படுத்திட ஆளிருக்கும் போது எம்பிக் குதிக்கும் சில தைரிய ஆசாமிகளின் பாதுகாப்பு கவசமாக இவ்வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோம்.
இந்த வீராவேசமான வார்த்தைகளுக்கும் இந்த பழமொழிக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றால் நம்மால் நம்ம முடிகிறதா?
ஆறு என்பதற்கு இங்கு அமைதி என்று பொருள். ஆர்ப்பரிக்கும் கடலும், அலைபாயும் மனதையும் சேர்த்து தணிப்பதும் ஒரு வகையான அமைதிதான். பெரும் சப்தத்தின் பிறகு, ஆழமான ஒரு அமைதி பிறக்கும் அது ஆறுபோல் தெளிந்திருக்கும்.

நூறு என்பது எண்ணிக்கையை மட்டுமல்ல, அழி, வெட்டு, பொடி என்ற சில அர்த்தங்களும் அதில் உள்ளது. இதன் ஒட்டுமொத்த சாரம்சம் வீரம் என்பதாகும்.
அமைதியாக இருப்பவனுக்கும், வீரமாக இருப்பவனுக்கும் சாவு என்பது பொதுவானது. எனவே இடம், பொருள், சூழ்நிலை இவற்றை மனதில் கொண்டு நம் உணர்வுகளைக் கையாண்டு நாம், நம் வாழ்வை இனிதாக நிறைவு செய்ய வேண்டும் என்பதைத்தான் இப்பழமொழி வாயிலாக விளக்கப்படுகிறது.
அன்றைய கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் வீரர்களை போருக்கு அனுப்பும் முன்னர், அவர்களின் மனம் அதைரியப்படாமல், வீரத்தை விதைக்கவும், வீரன் ஒருமுறை இறக்கிறான், கோழை பலமுறை இறக்கிறான் என்று இந்த பழமொழியைச் சொல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.
தங்கள் அனுபவத்தை பகிரும் பெரியவர்களின் கூற்றுப்படி, மன்னரும், மக்களும் ஏற்றத்தாழ்வுகளை சுமந்திருந்தாலும் எல்லாரும் ஒரு நாள் ஒரு பிடி சாம்பலாகத்தான் போகிறார்கள் என்பதையும் ஒரு விளக்கமாக கொள்ளலாம்.
கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க அந்தணனாய் கையேந்தி... புண்ணியத்தைப் பெறும் கண்ணனின் செய்கையையும், கர்ணனின் தானத்தையும் வெகு அழகாக... 1964ல் வெளிவந்த கர்ணன் படத்தில் சிவாஜி கர்ணனாகவே வாழ்ந்திருப்பார்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் .... பாடல் கேட்டு, கலங்காதவர்களே இருக்க முடியாது.
பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால்
குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள்
சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே!
அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு
என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம்.
தான சூர வீர கர்ணனின் பிறப்பு பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
பிருதையின் மகளான குந்தி தேவி, துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்ய அந்த பணிவிடையில் மகிழ்ந்த அவர் ஒரு வரம் தருகிறார். குந்திதேவி எந்த தேவதையை நினைத்து துருவாசர் சொன்ன மந்திரத்தை சொல்கிறாரோ, அந்த தேவதையின் அம்சமாக ஒரு குழந்தை பிறக்கும் என்பது அந்த வரம்.
அவர் விளையாட்டாக மந்திரத்தை சூரியனைப் பார்த்து உச்சரிக்க, கவச குண்டலத்துடன் கர்ணன் உருவாகிறான். திருமணமாகாத பெண்ணுக்கு குழந்தையா என்று அஞ்சி, கர்ணனை ஆற்றில் அனுப்பி வைக்கிறாள். அதிரதன், ராதை தம்பதிகளுக்கு மகனாக சூதப் பரம்பரையில், வளர்கிறான். சூரியனை வழிபடும் நேரத்தில் இல்லையென்று சொல்லாமல் யார் எதைக் கேட்டாலும் தானமாக தருவதால் வள்ளல் என்று பெயர் கொள்கிறான்.
கர்ணன் மகாபாரத்தில் இராதேயன், வசுசேனன் என்று பெயர்களாலும் கூப்பிடப்படுகிறான்.
பெரும் புறந்தள்ளுதலுக்குப் பிறகு துரியோதனனின் நண்பனாக வாழ்கிறான். குந்திதேவி தன் பாண்டவர்களுக்கு எதிராக நீ போரிட வேண்டாம் என்று குருசேத்திர போருக்கு முன்னதாக தனது மூத்தப்பிள்ளையான கர்ணனிடம் கேட்கிறார்.
தாய் பாசத்தில் மனம் குளிர்ந்தாலும், அம்மா இதுநாள் வரையில் என்னை காத்து என்னை நண்பனாக நேசித்து வாழ்ந்து வரும் துரியோதனனுக்கு நான் தீங்கு இழைக்க முடியாது.. அதே நேரம் என் சகோதரர்களுக்கு என்னால் எந்த தீங்கும் நேராது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இது தவிர, நான் பாண்டவர்களின் பக்கம் சேர்ந்தாலும் சரி, கவுரவர்களுடன் இணைந்தாலும் சரி என் இறப்பு என்பது உறுதியாகிப் போகிறது.
எனவே ஐந்துபேருடன் சேர்ந்து ஆறாக மாறினாலும் எனக்கு சாவு உறுதி, நூறு பேரான கவுரவர்களுடன் சேர்ந்தாலும் எனக்கு சாவு உறுதி.
ஆகவே ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன ? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்று சொல்கிறான்.
ஒரு விரக்தியான மனநிலையில், தள்ளப்படும் அவனின் மனப்போராட்டத்தில் விழுந்த வார்த்தையாக இந்தப் பழமொழியைக் கொள்ளலாம்.
- மனித வாழ்க்கையில் நிறைவு என்பதும் முழுமை என்பதும் எப்போதும் கிடையவே கிடையாது.
- வரலாறு தொடங்கிய காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
வாழ்க்கையின் அருமை உணர்ந்த வாசகப் பெருமக்களே!
வணக்கம்.
வாழ்க்கை ஓர் அழகிய பயணம். 'அத்தனை தூரத்தையும் நாமே ஓடிக் கடந்துவிட வேண்டும்' என்று நாம் நினைத்தாலும் அது நடைமுறை வாழ்வியலில் சாத்தியமில்லை என்பதே சமூகம் கண்டறிந்த உண்மை.
மனித சமூகத்தில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய தொலைவும் காலமும் ஏற்கனவே விதிக்கப்பட்டே பூமிக்கு அனுப்பப்படுகின்றனர். காலம் முடிந்ததும் எந்தவிதமான சலுகைகளும் இல்லாமல், பணியை முடித்துவிட்டுத் திரும்பி விட வேண்டியது தான். அப்படியென்றால் விட்டகுறை தொட்டகுறையோடு மனித வாழ்க்கை முழுமையடையாமல் நின்றுபோய் விடுமே? அதை யார் முழுமைக்குள் கொண்டுவருவது?.
மனித வாழ்க்கையில் நிறைவு என்பதும் முழுமை என்பதும் எப்போதும் கிடையவே கிடையாது; அது வளர்நிலை மட்டுமே!. அறிவியல், அழகியல், ஆன்மீகம், தத்துவம், பொருளியல், அருளியல், இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தொழில்நுட்பம், உணவு, உடை, இருப்பிடம் என்று சமூகத்தில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் தன்னிறைவு என்பது கிடையவே கிடையாது; மாறாக வளர்ந்துகொண்டே இருப்பதே நிலையானது. வளர்ச்சி என்பதும் ஒருவகையில் பார்த்தால் மாறிக்கொண்டே இருப்பது; மாற்றம் ஒன்றே மாறாதது; அதுவே வளர்ச்சியும் ஆகும்.
வரலாறு தொடங்கிய காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சியில் மனிதப் பங்களிப்பு மகத்தானது. எந்த ஒரு தனி மனிதனாலும் தனிப்பட்ட சாதனைகளை இந்தச் சமூகத்தில் நிகழ்த்தி விட முடியாது.
காலம் காலமாக நிகழ்ந்துவரும் மனிதப் பிறப்பு, இருப்பு, இறப்புச் சுழற்சியில் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான். அவனுக்கான வாழ்க்கையை அவனே புதிதாக உருவாக்கிக் கொண்டு அவன் வாழத் தொடங்குவதில்லை. ஏற்கனவே வாழ்ந்த முன்னோர்களின் வழியில் அவன் வாழ்வதற்குப் பழகிக் கொள்கிறான். ஆணும் பெண்ணுமாக இணையும் குடும்ப வாழ்வை ஏற்படுத்தி அவனுக்கான சந்ததிகளையும் உருவாக்கிக் கொள்கிறான்.
தனக்கென வாழ்வது, தனக்கென வாழ்ந்து பிறருக்காகவும் வாழ்வது, பிறருக்காக மட்டுமே வாழ்வது என்கிற கோட்பாட்டியல் நெறிகளில் அவனது வாழ்க்கைப்பாடுகள் செல்லுகின்றன. ஒருநாள் அவனது காலம் முடிந்து போகிறது. அவனது காலம் முடிந்தாலும் ஏதோவொரு வகையில் அவனது வாரிசுகளின் வழியே அவனது வாழ்வியல் நோக்கங்கள் தொடரத்தான் செய்கின்றன.
அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தொடர் ஓட்டம் தான். முன்னோரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஓடத் தொடங்கும் நாம், அந்தப் பண்பட்ட வாழ்வியலைச் செழுமைப்படுத்தி, அப்பழுக்கில்லாமல் அடுத்த தலைமுறையின் கைகளில் கொடுத்துவிட்டு விடைபெற வேண்டும். அப்போது தான் நாம் நல்வாழ்வு வாழ்ந்ததற்கான அர்த்தம்.
தனிமனிதன், குடும்பம், குடி, இனம், சமூகம் எனப் பல்வேறு நிலைகளில் மனித வாழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே பிற்காலத்தில் சாதி, மதம், இனம், சமூகம் எனவும் ஆனது. எப்படியாயினும், மனிதவாழ்வு தொடர் ஓட்டம் என்றால் குடும்பம் சார்ந்த சந்ததித் தொடரையே நாம் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும். தந்தை, தாய், மகன், மகள், பேரன், பேத்தி என வளரும் வாரிசுமுறை வளர்ச்சியில் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டும்.

சுந்தர ஆவுடையப்பன்
"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்"
என்ற திருக்குறளில் திருவள்ளுவர், ஒரு மனிதன் சரியானமுறையில் வாழ்ந்திருக்கிறானா? இல்லையா? என்பதை அவனது சந்ததிகளின் குணநலன்களை வைத்துத் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் ஒவ்வொரு குடும்ப மனிதனும் தனது செயல்களால் சிறந்து விளங்குகிறான் என்பதை அவனது பிள்ளைகளை அவன் ஒழுங்காக வளர்த்திருக்கிறானா? என்பதை வைத்தும் முடிவுக்கு வரலாம்.
ஒரு நாட்டில் ஒரு ராஜா நாட்டு மக்களிடம் வரி ஏதும் வாங்காமலேயே ஆட்சி செய்து வந்தான். வரி வாங்குவதற்குப் பதிலாக, நாட்டில் வீடுதோறும் காலையில் ஒரு மரக்கால் நெல்லைக் கொடுத்து விட்டு, மாலையில் அதே ஒரு மரக்கால் அளவு அரிசியை அரசாங்கத்தினர் பெற்று வந்தனர். அரசன் பணமாக வரி வசூல் செய்யவில்லையே ஒழிய, மக்கள் தினமும் ஒரு மரக்கால் அரிசி கொடுப்பதற்குச் சிரமப்பட்டு வந்தனர்.
ஒருநாள் அரசனுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உள்ளூர் பிரமுகர்கள், பக்கத்துநாட்டு ராஜாக்கள் எல்லாரும் திரண்டுவந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். ஆனால் நாட்டின் பொதுமக்கள் யாருமே ராஜாவை வந்து பார்த்து நலம் விசாரிக்கவில்லை. வருத்தமடைந்த ராஜா அமைச்சரை அழைத்துக் காரணத்தை விசாரித்தார்.
"காரணம் நீங்கள் வரிவாங்கும் முறைதான் ராஜா!. ஒரு மரக்கால் நெல் கொடுத்துத் தினமும் ஒரு மரக்கால் அரிசி கேட்கிறீர்கள்!; ஒரு மரக்கால் நெல்லை அரைத்தால் அரை மரக்கால் அரிசி தான் கிடைக்கும்; பாவம் ஏழை மக்கள் தினமும் அரை மரக்கால் அரிசியைக் கூடுதலாகக் கொடுப்பதற்கு எங்கே போவார்கள்?. அதனால் தான் உங்கள் மீது அவர்களுக்குப் பரிதாபம் ஏற்படவில்லை!; வந்தும் பார்க்கவில்லை!" என்றார் அமைச்சர்.
ராஜா, மரணிக்கும் தறுவாயில், தனது அடுத்த வாரிசான இளவரசனை அழைத்தார்," மகனே! மக்களிடம் நான் வரி வாங்கிய வகையில் எனக்கு ஏகப்பட்ட கெட்டபெயர் வந்து விட்டது. நீ உனது ஆட்சித் திறத்தால் எனக்கு நல்ல பெயர் வரும்படியாகப் பார்த்துக்கொள்!" என்று கூறிவிட்டு உயிரை விட்டு விட்டார்.
ராஜாவின் அடுத்த வாரிசான இளவரசன் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஒரு மாதத்திலேயே, தனது தந்தைக்கு மிக நல்லபெயரை உண்டாக்கிவிட்டான். எப்படி?.
தந்தை ஒரு மரக்கால் நெல்லைக் கொடுத்து, ஒரு மரக்கால் அரிசி கேட்டார். ஆனால் அவரது மகனோ அவரை நல்லவராக்கும்படிக்கு, ஒரு மரக்கால் தவிட்டைக் கொடுத்துவிட்டு ஒருமரக்கால் அரிசி கேட்கத் தொடங்கிவிட்டான்.
தந்தை தன்னிற் சிறந்த மகனை உருவாக்குவதே தொடர் ஓட்டத்தில் செய்யவேண்டிய வாழ்வியற் கடமையாகும். ஆனால் இங்கோ தகப்பன் செய்த தீமையே பரவாயில்லை எனும்படிக்கு, மகன் பெருந்தீமைக்காரனாக இருப்பது வளர்ப்புக் கோளாறு; சந்ததிப் பிழை.
திருவள்ளுவர் சமூக அக்கறையோடு தாம் வார்த்துள்ள திருக்குறளில், தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை வகுத்துக் கூறுகிறார். தன் மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்ய வேண்டியது தந்தையின் கடமையாகும். தொட்ட தொழில் எல்லாவற்றிலும் முந்தியிருக்கும் மகனைப் பார்த்து, இவனை இந்த அளவுக்குச் சிறந்தவனாக உருவாக்க இவன் தந்தை என்ன பாடுபட்டாரோ! என்று மற்றவர்கள் வியக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
"மகனறிவு தந்தையறிவு" எனும் பழந்தமிழ் மொழி, தந்தை தன்னைப்போலவே மகனை அறிவு பெற்றவனாக வளர்த்தெடுப்பான் என்கிறது. ஆயினும் தன்னிலும் சிறந்த அறிவுற்ற தலைமுறையாக அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டியதே நிகழ்காலத் தலைமுறையின் பொறுப்பு ஆகும்.
திருவிழாக் காணவந்த தந்தை, நெருக்கியடிக்கும் கூட்டத்தில், தனது தோளில் பிள்ளையைத் தூக்கிவைத்துச் சாமியைக் காட்டுவதுபோல, எதிர்காலத்திற்கான அறிவை அடுத்த தலைமுறைக்கு ஊட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமையாகும். தாய் தந்தையின் வாழ்வியல் லட்சியங்கள் அவர்கள் காலத்தில் நிறைவேறாமல் போனாலும் அவற்றைத் தமது காலங்களில் நிறைவேற்றிக் காட்ட வேண்டியது அடுத்த தலைமுறையின் ஆத்மார்த்தக் கடமையாகும்.
சீனப் பெருந்தலைவர் மாசே துங்குக்கி பிடித்த ஒரு கதை. ஒரு சிறிய கிராமம். அதைச் சுற்றி அதைப் போலவே ஏழெட்டு கிராமங்கள். இந்தக் கிராமங்களை ஒட்டினாற்போல ஒரு பெரிய மலை. அந்த மலைக்கு அடுத்த பக்கத்தில் ஒரு பெரிய நகரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, மருத்துவம் போன்ற எல்லா வசதிகளுக்கும் அந்த நகரத்தைத் தான் நம்பியி ருந்தனர்.
ஒருபக்கம் கிராமங்கள்; மறுபக்கம் நகரம்; நடுவில் பெரிய மலை. அன்றாடம் படிக்கச் செல்ல வேண்டுமென்றாலும், அவசரத் தேவையாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் மலையைச் சுற்றிக்கொண்டு பதினைந்து கல் தொலைவு நடந்தே செல்ல வேண்டும். வாகன வசதிகளெல்லாம் அப்போது கிடையாது. உயிருக்குப் போராடும் பல கிராம மனிதர்கள் மலையைச் சுற்றி நகரத்திற்குத் தூக்கிச் செல்லும் வழியிலேயே இறந்து விடுவார்கள்.
கிராமத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் யோசித்தான். மலையைச் சுற்றிச் சென்றால் பதினைந்து கல் தொலைவு. ஆனால் மலையின் குறுக்கே உள்ள தூரம் வெறும் மூன்று கல் அளவுதான். மலையைச் சுற்றிச் சுற்றி மக்கள் செல்லாமல் இருக்க, பேசாமல் மலையைப் பிளந்து குறுக்கே பாதையை உருவாக்கினால் என்ன?
கையில் உளியும் கடப்பாறையும் சுத்தியலும் எடுத்துக்கொண்டு மலையடிவாரத்திற்குச் சென்று நின்றான். கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் முன்னிலையில் உளியை வைத்துச் சுத்தியலால் மலையை உடைக்கத் தொடங்கினான்.
மலையின் கடவுள் இதைப் பார்த்துவிட்டுத், தேவதேவனிடம் சென்று என்ன நடக்கப் போகிறதோ என்று அஞ்சி நின்றான். அவ்வளவு லேசில் மலையை அவனால் தகர்த்துவிட முடியாது. பொறுமையாய் இரு பார்ப்போம் என்று ஆறுதல் சொன்னார் தேவதேவன்.
உளிகொண்டு அடுத்த தட்டுத் தட்டும்போது, ஊர்மக்களில் ஒருவன் கேட்டான்,"என்ன செய்யப் போகிறாய்?".
"நான் மலையை உடைத்துப் பாதையை உருவாக்கப் போகிறேன்!"
" தனிமனிதனாகிய உன்னால் இந்தச் சின்ன உளியையும் சுத்தியலையும் வைத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவ்வளவு பெரிய மலையை உடைக்க முடியாது!".
"என்னால் முடியாவிட்டால் என்ன? என்காலம் வரை நான் முயல்வேன்!; என்காலத்திற்குப் பின் என் மகன் உடைப்பான்!; அவன் காலத்திற்குப் பின் அவன் மகன் தகர்ப்பான்!; ஆண்டுகள் நூறானாலும் எனது லட்சியம் ஒருநாள் நிறைவேறும். இந்த மலை உடைபடும்; என் மக்களுக்கான பாதை திறக்கப்படும்!" என்று நம்பிக்கையோடு முழக்கமிட்டான் அந்தக் கிராமத்து மனிதன்.
வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதேவனே அஞ்சிவிட்டானாம். மலையின் கடவுளைப் பார்த்து, "அவன் சந்ததி மீது நம்பிக்கைவைத்துப் பேசுவதைப் பார்த்தால் நிச்சயம் ஒருநாள் உடைத்து விடுவான்.எனவே நீயாகவே கொஞ்சம் நகர்ந்து வழிகொடுத்து விடுவது நல்லது" என்றாராம். மலையின் கடவுளும் நகர்ந்து கொண்டானாம்.
நமது வாழ்வியல் ஓட்டம் சமூகத்தை மேம்படுத்தும் தொடர் ஓட்டமாக இருக்கட்டும். வரும்போது இருந்த பூமியை மேலும் செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறையிடம் தந்துவிட்டுச் செல்வோம்.
தொடர்புக்கு: 9443190098
- ஆலயத்தில் தனி சன்னதியில் பிரத்யங்கிராதேவி அருள்பாலிக்கிறாள்.
- பிரத்யங்கிராதேவிக்கு யாகம் செய்து வழிபட்டால் வெற்றி தரக்கூடிய பலம் கிடைக்கும்.
கும்பகோணம் ஆலயங்களை வழிபட செல்லும் போது நிச்சயமாக திருநாகேஸ்வரம் செல்வீர்கள். ராகு-கேது தலங்களில் மிக சிறந்த தலமான இந்த தலத்துக்கு அருகில்தான் ஒப்பிலியப்பன் கோவிலும் இருக்கிறது. அதுபோல இந்த ஆலயங்களுக்கு அருகில் இன்னொரு அற்புதமான தலம் இருக்கிறது.
அது அய்யாவாடியில் இருக்கும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆலயம் ஆகும். கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள மிக மிக பழமையான ஆலயங்களில் பிரத்யங்கிராதேவி ஆலயமும் ஒன்றாகும்.
உண்மையில் இது மிக சிறப்பான சிவாலயம் ஆகும். மூலவராக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்பாள் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தேவார பாடல் பெற்ற சிவதலங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் பிரத்யங்கிராதேவி அருள்பாலிக்கிறாள். வடக்கு திசை நோக்கி சிம்ம முகம், 18 கரத்துடன் சிரித்த முகத்துடன் பிரத்யங்கிரா தேவி காணப்படுகிறாள். தலையில் சந்திரன் அணிந்து, சூலம், பாசம் ஏந்தி இருக்கிறாள். அவளுக்கு இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
புராண வரலாறு காரணமாக இந்த தலத்து பிரத்யங்கிராதேவி புகழ் பெற்றவளாக மாறி இருக்கிறாள். இதனால் இந்த ஆலயத்தை பிரத்யங்கிராதேவி ஆலயம் என்றே அனைவரும் அழைக்கிறார்கள். பிரத்யங்கிராதேவியோடு இணைந்த இந்த ஆலயத்தின் தல வரலாற்றை தெரிந்து கொண்டால்தான் அவளது சிறப்பை நாம் உணர முடியும்.
பஞ்ச பாண்டவர்கள் கவுரவர்களிடம் தோற்று நாட்டை இழக்க நேர்ந்ததால் வனவாசம் சென்றனர். காடுகளில் சுற்றி திரிந்தனர். யார் கண்களிலும் தென்படாமல் வாழ வேண்டும் என்பதற்காக அடர்ந்த காடுகளுக்குள்ளும் சென்றனர். அந்த சமயத்தில் கொடிய விலங்குகள் தாக்கி விடுமோ என்று அச்சப்பட்டனர்.
காடுகளுக்குள் அலைந்ததால் அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு சரியான தூக்கமும் இல்லாமல் போய்விட்டது. தங்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும் என்று கதிகலங்கினார்கள். அப்போது பஞ்ச பாண்டவர்கள் 5 பேருக்கும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு இறையருள் கிடைத்தது.
இழந்த நாட்டை மீண்டும் மீட்க வேண்டுமானால் பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து பிரத்யங்கிராதேவியை வழிபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பிரத்யங்கிராதேவிக்கு யாகம் செய்து வழிபட்டால் வெற்றி தரக்கூடிய பலம் கிடைக்கும். தேவையில்லாத அச்சம் நீங்கும் என்று பாண்டவர்களிடம் கூறப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீ பிரத்யங்கிராதேவியை வழிபட பஞ்ச பாண்டவர்கள் முடிவு செய்தனர். காடுகளுக்குள் செல்லும் இடங்களில் எல்லாம் பிரத்யங்கிராதேவி ஆலயம் உள்ளதா? என்று தேடினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கும்பகோணம் அருகே அவர்களுக்கு பிரத்யங்கிராதேவி அருள் கிடைத்தது.

கும்பகோணம் பகுதியில் இருந்த பஞ்ச பாண்டவர்களுக்கு சுயம்பு மூர்த்தியாக பிரத்யங்கிராதேவி காட்சியளித்தாள். இதனால் பாண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பிரத்யங்கிராதேவிக்கு உரிய முறையில் வழிபாடுகள் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பூக்களை சேகரிக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு பூக்கள் கிடைக்கவில்லை.
அப்போது அந்த பகுதியில் பிரமாண்டமாக நின்று கொண்டிருந்த ஆலமரம் பாண்டவர்களின் கண்களில் பட்டது. பூ கிடைக்காவிட்டால் பரவாயில்லை, ஆல மரத்தின் இலையை பறித்து அதையே வண்ண வண்ண பூக்களாக கருதி பிரத்யங்கிராதேவிக்கு சூட்டி வழிபடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஆலமரத்து இலைகளை பறித்து வந்து பிரத்யங்கிராதேவிக்கு பூஜை நடத்தினார்கள்.
பாண்டவர்களின் பூஜையால் மனம் மகிழ்ந்த பிரத்யங்கிராதேவி அவர்களுக்கு மன தைரியத்தையும் ஆற்றலையும் அள்ளி அள்ளி கொடுத்தாள். இதனால் பாண்டவர்கள் போரில் கவுரவர்களை வீழ்த்தி மீண்டும் தங்களது நாட்டை பெற்று ஆட்சி செய்தனர்.
பாண்டவர்கள் 5 பேரும் யாகம் நடத்தி பூஜைகள் செய்து பிரத்யங்கிராதேவி அருள் பெற்ற இடம் என்பதால் அந்த இடத்துக்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் பேச்சுவழக்கில் அய்யாவாடி என்று மாறி போனது. இந்த தலத்தில் இப்போதும் தல புராணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆல மரம் தலவிருட்சமாக இருக்கிறது.
இங்கு அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் மன தைரியும் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். சனி தோஷம் உள்பட முக்கிய தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். இதனால் தமிழகத் தில் எந்த ஆலயத்திலும் இல்லாத படி இந்த பிரத்யங்கி ராதேவி ஆலயத்தில் நடக் கும் அமாவாசை வத்தல் யாகம் மிகவும் புகழ் பெற் றாக உள்ளது.
மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அசுர மன்னன் கிரண்யகசி புவை கொன்ற பிறகும் அவரது ஆவேசம் தணியாதபடி இருந்தது. அவரை கட்டுப்படுத்த சிவபெரு மான் புதுமையாக சிங்க முகம் மற்றும் கழுகு இறக்கைகளுடன் ஒரு அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்துக்கு சரபேஸ்வரர் என்று பெயர்
அந்த சரபேஸ்வரரின் இறக்குகளில் ஒன்றில் பிரத்யங்கிராதேவி அமர்ந்து மகா விஷ்ணுவின் உக்கிரத்தை தணித்ததாக வரலாறு உள்ளது. எனவே சக்தி அம்சங்களில் பிரத்யங்கிராதேவி மிக மிக சக்தி வாய்ந்தவள் என்று கருதப்படுகிறது. இதனால்தான் ஆதி காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்லும் போது பிரத்யங்கிராதேவியை வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்தி ருந்தனர்.
குறிப்பாக பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலை யாகம் என்ற ஒரு வகை யாகத்தை நடத்துவதை மன்னர்கள் கடை பிடித்து வந்தனர். மிக பிரமாண்டமான யாக குண்டங்களில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை போட்டு வழிபடுவது தான் நிகும்பலை யாகம் ஆகும். இந்த யாகம் நடத்துவது மன்னர்கள் காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து வருகிறது.
ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க ராமர் முயற்சி செய்தபோது ராவணன் அதை தடுத்து நிறுத்த இந்த யாகத்தை நடத்தியதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ராவணன் தனது சகோதரர்களில் ஒருவனும் மிக பலசாலியுமான இந்திரஜித்தை இந்த யாகத்தை நடத்த வைத்தான். இந்திரஜித் இந்த தலத்துக்கு வந்துதான் அந்த யாகத்தை மேற்கொண்டான்.
இதற்காக அவன் இந்த தலத்தின் 8 திசைகளிலும் மயான பூமியை தோற்றுவித்து நிகும்பலை யாகம் நடத்தியதாக குறிப்புகள் உள்ளன. இதை அறிந்ததும் ராமனும் பிரத்யங்கிரா தேவி அருள் வேண்டி அதே நிகும்பலை யாகத்தை நடத்தினார். இருவரும் போட்டி போட்டு யாகம் நடத்தினாலும் பிரத்யங்கிராதேவி ராமனுக்கே உதவி செய்தாள்.
இந்திரஜித் வெற்றி பெற அருள் பாலிக்கவில்லை. இதனால்தான் ராமன் கூடுதல் பலம் பெற்றதாக சொல்வார்கள். இந்த தலத்தில் இந்திரஜித் மயானம் அமைத்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போதும் அங்கு ஆலயம் அருகே மயான பூமி இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரத்யங்கிராதேவிக்கு நடத்தப்படும் நிகும்பலை யாகம் என்பது மிக மிக ஆற்றல் வாய்ந்தது.
இந்த யாகத்தில் கலந்து கொண்டதால் பஞ்சபாண்டவர்கள் இழந்த நாட்டை மீட்டது போல நீங்கள் எதையெல்லாம் இழந்தீர்களோ அவை அனைத்தையும் பெற முடியும். குறிப்பாக இந்த யாகத்தில் கலந்து கொண்டு வத்தல் வழங்கினால் எதிரிகள் தொல்லை அடங்கும். கடன் தொல்லை தீரும். பதவி உயர்வு வேண் டும் என்பவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும்.
வியாபாரம் செழிக்க வேண்டும் என்றால் இந்த யாகத்தில் பங்கேற்க வேண்டும். ஏராளமான வியாபாரிகள் நிகும்பலை யாகம் செய்து லாபம் பெற்று வருகிறார்கள். திருமண தடை நீக்கும் ஆற்ற லும் இந்த யாகத்துக்கு உண்டு. இந்த யாகம் நடக்கும் போது 108 வகை பொருட்களும் சேர்ப்பார்கள். சனி பகவானின் மகன் குளிக்கன் இந்த யாகம் செய்து பலன் பெற்று இருப்பதால் சனி தோஷம் உள்ளவர்கள் இந்த யாகத்தில் பங்கேற்று தோஷ நிவர்த்தி பெற முடியும்.
சமீப காலமாக நிகும்பலை யாகம் மிகவும் புகழ் பெற்றுள்ளது. அமாவாசை நாட்களில் அய்யாவாடி தலத்தில் நடக்கும் யாகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கி றார்கள். தமிழகம் முழுவதும் இருந்து இந்த ஆலயத்துக்கு வந்து செல்கிறார்கள். இத்தகைய சிறப்புடைய இந்த ஆலயத்துக்கு கும்பகோணம் யாத்திரையின்போது தவறாமல் செல்லுங்கள்.
இந்த ஆலயத்துக்கு செல்வதற்காக நீங்கள் சிரமப்பட தேவையில்லை. கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஒப்பிலியப்பன் கோவிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் திருநாகேஸ்வரம், ஒல்லியப்பன் தலங்களுக்கு பிறகு அய்யாவாடி தலத்துக்கும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம். பவுர்ணமி, அமாவாசை தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. இந்த தலத்தில் புத்திர தீர்த்தம் அமைந்துள்ளது. அதில் தீர்த்தம் தெளித்துக் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பானது. தினமும் இந்த தலத்தில் 4 கால பூஜை நடத்தப் படுகிறது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்தி ருக்கும். அதற்கேற்ப உங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த வாரம் நியாய மான கோரிக்கைகளுக்கு உடனே வெற்றி தரும் திருபுவனம் ஆலயம் பற்றி பார்க்கலாம். திரு புவனம் சரபேஸ்வரர் மிக மிக சக்தி வாய்ந்த வர். அது எப்படி என்பதை அடுத்த வாரம் காணலாம்.
- பாஞ்சாலி செய்த உதவிக்குக் கைமாறு செய்ய நெடுநாளாய்க் காத்திருந்தானாம் கண்ணபிரான்.
- "அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்" என்பதே அந்த விடுகதை.
கவுரவர் சபையில் சூதாட்டத்தின்போது பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தை நாம் அனைவரும் அறிவோம். அப்போது கவுரவர்களில் ஒருவனும் துரியோதனனின் தம்பியுமான துச்சாதனன் பாஞ்சாலி துகிலை உரிய முற்பட்டான்.
கண்ணில்லாத திருதராஷ்டிரனும் கண்ணைக் கட்டிக்கொண்ட காந்தாரியும் அமர்ந்திருந்த சபைதான் அது. பீஷ்மர் போன்ற சான்றோர் பலர் சபையில் இருந்தும்கூட, பாஞ்சாலியின் துகிலுரிதல் என்ற இழிசெயலைத் தடுக்க முடியவில்லை.
மாவீரர்களான பாஞ்சாலியின் கணவர் ஐவரும் சூதாட்டத்தில் தோற்று துரியோதனனின் அடிமைகளாய்ச் செயலற்று அமர்ந்திருந்தார்கள்.
அத்தனை பேரும் கைவிட்டார்களே? திரவுபதி என்ன செய்வாள் பாவம்?
அவள் மனிதர்கள் கைவிட்டதால் தன் இஷ்ட தெய்வமான கண்ணக் கடவுளைச் சரணடைந்தாள். அவள் பக்தியுடன் கண்ணனின் அருள்வேண்டி அவனைக் கதறி அழைக்கலானாள்.
தன் இரு கரங்களையும் உயர்த்தி, அவள் முற்றிலுமாகக் கண்ணனைச் சரணடைந்ததும், கண்ணன் துவாரகையில் இருந்தபடியே அவளுக்கு ஆடை தந்து அருள்புரிந்தான் என்று அந்த வியத்தகு நிகழ்வைச் சொல்கிறது மகாபாரதம்.
துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் அப்போது அவள் ஆடை மேலும் மேலும் வளர்ந்ததையும் மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:
`வையகம் காத்திடுவாய் - கண்ணா
மணிவண்ணா என்றன் மனச்சுடரே!
ஐய நின் பதமலரே - சரண்
ஹரி ஹரி ஹரி என்றாள்!
பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல் - கடல்
சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்
பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்
பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்
கண்ணபிரான் அருளால் - தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப் பொற் சேலைகளாம் - அவை
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே - அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ!
பொன்னிழை பட்டிழையும் - பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்
சென்னியிற் கைகுவித்தாள் - அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே
முன்னிய ஹரிநாமம் - தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திடவே
துன்னிய துகில் கூட்டம் - கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!`
கண்ணன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்துக் காப்பாற்றியது வியப்புத்தான். அவன் குளித்துக் கொண்டிருந்த கோபிகைகளின் ஆடைகளைத் திருடிய திருட்டுக் கண்ணன் அல்லவா?
ஆடை திருடுபவன், தன் இயல்பான திருட்டுக் குணத்தை விட்டுவிட்டு, பாஞ்சாலிக்கு ஆடையைக் கொடுக்க முன்வந்தது ஏன்? அதுபற்றியும் ஒரு நாட்டுப்புறக் கதை பேசுகிறது.
ஒருமுறை கண்ணன் கத்தியால் பழம் நறுக்கிக் கொண்டிருந்தான். தவறுதலாக அந்தக் கத்தி கண்ணன் கையில் பட்டுவிட்டது. கை விரலில் இருந்து குருதி பெருகத் தொடங்கியது.
அங்கே கூடியிருந்த பலர் எதுவும் செய்யாமல் அனுதாபத்தோடு கண்ணனைப் பார்த்தவாறு இருந்தனர்.
ஆனால் ராஜ பத்தினியாகிய திரவுபதி பதறிப்போனாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. கண்ணன் விரலில் குருதி வழியலாமா?
தான் கட்டியிருந்த புதுப் பட்டுப்புடவையின் முந்தானையைச் சடாரென்று கிழித்தாள் அவள். உடனே அந்தப் பட்டுத் துணியைத் தண்ணீரில் நனைத்துக் கண்ணன் விரலில் கட்டுப் போட்டுக் குருதி பெருகுவதைத் தடுத்தாள்.
காயம் உடனே ஆறிவிட்டது. அதுசரி. ரத்தக்காயம் எப்படி உடனே ஆறும்? காயமாக இருந்தால்தானே உடனே ஆறாது? அது காயமல்ல. மாயம்!
திரவுபதிக்குத் தன்மேல் உள்ள அளவற்ற பாசத்தை உலகறியச் செய்ய வேண்டிக் கண்ணன் செய்த மாயம்!
பாஞ்சாலி செய்த உதவிக்குக் கைமாறு செய்ய நெடுநாளாய்க் காத்திருந்தானாம் கண்ணபிரான். சாதாரணக் கடனுக்கு வட்டி வளர்வதுபோல், கண்ணனின் நன்றிக்கடனுக்கும் காலம் செல்லச் செல்ல வட்டி மேலே மேலே வளர்ந்து கொண்டே இருந்தது!
அந்த நன்றிக் கடனைத் தீர்க்கும் வாய்ப்பு துரியோதனன் சபையில் வாய்த்தது. ஒரே ஒரு சின்னப் பட்டுத்துணிக்குப் பிரதியாக மலை மலையாய்ச் சேலைகளைக் கொடுத்துத் தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டான் கண்ணன் என்கிறது அந்த அழகிய நாட்டுப்புறக் கதை.
பாஞ்சாலி துகிலுரிதல் தொடர்பாக இன்னொரு நாட்டுப்புறக் கதையும் உண்டு. கண்ணன் ஒருமுறை குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது அவன் இடுப்புத் துணியை ஒரு மீன் இழுத்துக் கொண்டு சென்று விட்டதாம்.
குளத்து நீரில் கைகளால் எவ்வளவோ துழாவிப் பார்த்தும் ஆடை போன இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீனாக அவதாரம் எடுத்த திருமால் அவன். ஆனால் ஒரு மீன் இழுத்துச் சென்ற ஆடையை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதை என்ன சொல்ல! ஆடையில்லாமல் எப்படிக் கரையேறுவது? கண்ணன் தவித்துக் கொண்டிருந்தானாம்.
அந்த வழியே பலர் சென்றார்கள். கண்ணனையும் கண்ணன் குளித்துக் கொண்டிருந்த குளத்தையும் பார்த்துக் கொண்டே தான் சென்றார்கள். ஆனால் யாரும் கண்ணனின் இக்கட்டை உணரவுமில்லை. உணர்ந்து உதவ முன்வரவுமில்லை.
அப்போது அவ்வழியே வந்தாள் பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி. கண்ணனின் தவிப்பைப் பார்த்துத் திகைத்தாள். யோசித்து நிலைமையை உடனே புரிந்துகொண்டாள். தன் சேலையின் முந்தானையைக் கிழித்துக் குளத்தில் வீசினாள்.
கண்ணன் அவள் சேலைத் துணியைத் தன் இடுப்பில் சுற்றிக் கொண்டு கரையேறினான். சம்சாரக் கடலில் மூழ்குபவர்களைக் கரையேற்றும் கண்ணன், அன்று சாதாரணக் குளத்தில் இருந்து கரையேறியது பாஞ்சாலி செய்த உதவியால்தான்.
தன் மானம் காத்த பாஞ்சாலியின் மானத்தைத் தக்க சந்தர்ப்பத்தில் தான் முன்வந்து காத்தான் கண்ணபிரான் என்கிறது இந்த நாட்டுப்புறக் கதை.
இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை பற்றிய தத்துவக் கண்ணோட்டத்தை காந்தி விளக்கியுள்ளார்.
பாஞ்சாலி ஆன்மாவின் உருவகம். பஞ்ச பாண்டவர்கள் ஐம்புலன்களின் உருவகங்கள். வாழ்க்கை என்கிற சூதாட்டத்தில் நூற்றுக்கணக்கான தீய சக்திகளிடம் ஐம்புலன்களும் தங்களை இழக்கின்றன.
அப்போது ஆன்மா இறைவனைச் சரணடைய, இறைவன் அதன் மானத்தைக் காத்துக் கடைத்தேற்றுகிறார் என்பதன் விளக்கமே மகாபாரதம் என்கிறார் மகாத்மா.
இந்த மகாபாரத நிகழ்ச்சி பற்றித் தமிழில் ஓர் அழகிய விடுகதை உண்டு. `அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்` என்பதே அந்த விடுகதை.
அத்தினம் என்ற சொல் சூதாட்டம் நடந்த அஸ்தினாபுரி நகரத்தைக் குறிக்கும். `ஓட்டை` கை என்பது கண்ணன் வாழ்ந்த `துவார` கையைக் குறிப்பிடுகிறது.

அஸ்தினாபுரிக்கும் துவாரகைக்கும் ஆயிரம் காத தூரம் என்றாலும், பாஞ்சாலி பக்தியை விலையாய்க் கொடுத்து கண்ணன் தந்த சேலையைப் பெற்றுக்கொண்டாள், அதுவும் ஒருவகை வியாபாரம் அல்லவா என வியக்கிறது இந்த அழகான விடுகதை!
இந்தக் கதை தொடர்பாக, இதன் நீட்சியாக, வேறொரு நாட்டுப் புறக்கதையும் உண்டு.
துச்சாதனன் பற்றி இழுத்த துணி வளர்ந்து வளர்ந்து தரையில் ஒரு மலைபோல் குவிந்தது. அவையெல்லாம் கண்ணனின் நெசவுத் தறியில் நெய்யப்பட்ட அபூர்வ ஆடைகள் அல்லவா?
எனவே அவற்றின் எழில் விவரிக்க இயலாததாய் இருந்தது. கடவுள் நெய்த ஆடைகளை மனிதர் நெய்த ஆடைகளோடு ஒப்பிட இயலுமா என்ன?
அந்த ஆடைகளின் அழகைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள் கவுரவர்களின் மனைவியர் நூறுபேரும். அவற்றைத் தாங்கள் அணிந்துகொள்ள ஆசைகொண்டார்கள். அந்த ஆடைகள் அனைத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு அந்தப்புரம் சென்றார்கள்.
தாங்கள் ஏற்கெனவே அணிந்திருந்த உடையைக் களைந்துவிட்டு, புத்தம்புதிய சேலைகளை ஆர்வத்தோடு அணிந்து கொண்டார்கள்.
இந்தப் பளபளக்கும் புதுச் சேலையை சபையில் உள்ள அனைவருக்கும் காட்டும் எண்ணத்தோடு புத்தாடை புனைந்து சபைக்கு வந்தார்கள்.
அதற்குள் திரவுபதியின் ஆடையை இழுத்து இழுத்துச் சோர்ந்து போனான் துச்சாதனன். யானை பலம் கொண்ட அவன் கையும் வலிக்கத் தொடங்கியது.
இனியும் இழுக்கத் தன்னால் இயலாது எனக் கருதிய அவன், தளர்ச்சி அடைந்து பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி இழுக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தன் சிம்மாசனத்தில் தொப்பென்று போய் அமர்ந்து நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.
துகிலுரியும் படலம் முடிந்ததை அறிந்த கண்ணன் கலகலவென்று நகைத்தான். துவாரகையில் இருந்தவாறே தன் கையைத் தட்டி உதறினான்.
அடுத்த கணம் புதிதாய்த் தோன்றிய அத்தனை சேலைகளும் மறைந்தன. திரவுபதி ஏற்கெனவே தன் உடலை மூடியிருந்த பழைய ஆடையோடு காட்சி தந்தாள்.
அந்தப்புரம் சென்று பழைய ஆடையைக் களைந்து புத்தாடையோடு வந்து நின்ற கவுரவர்களின் மனைவியர் அத்தனை பேரின் ஆடையும் அந்தரத்தில் மாயமாய் மறைந்தது!
யாரை நிர்வாணப்படுத்த கவுரவர்கள் முயன்றார்களோ அந்தக் கவுரவர்களின் மனைவியர் அனைவரும் நின்ற கதியைப் பார்த்து சபையினர் தங்கள் விழிகளை மூடிக் கொண்டார்கள் என்கிறது அந்த நாட்டுப்புறக் கதை.
கெடுவான் கேடு நினைப்பான் என்பதையும் தன் வினை தன்னைச்சுடும் என்பதையும் விளக்குகிற கதை இது. நாட்டுப்புற மக்களின் அறநெறி சார்ந்த மனத்தை விளக்கும் கதைகள் இவை.
பெண்மையை இழிவுபடுத்த முனைபவர்களின் அழிவு நிச்சயம் என்ற உண்மையைத் தான் மகாபாரதம் காலம் காலமாய் போதித்துக் கொண்டிருக்கிறது.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- அடுத்தபடியாக சாமையும் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்ட சிறுதானியங்களாக உள்ளன.
- திரிபலையில் சேரும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி அந்த மகத்தான பணியை செய்கின்றது.
"உடம்பு ரொம்ப அசதியா இருக்கு" என்று முதுமையில் பலர் வருத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அன்றாட வாழ்வியல் பணிகளை செய்வது கூட சிரமமானதாக மாறிவிடுகிறது. அந்த அசதிக்கு சர்க்கரை வியாதி போன்ற நாட்பட்ட நோய்நிலைகள் முக்கிய காரணமாக இருப்பினும், அதிகம் பேர் அவதிப்படும் மற்றொரு நோய்நிலையாக இருப்பது 'அனீமியா' எனும் 'ரத்தசோகை' தான்.
முதுமையில் உடல் நலம் மட்டுமின்றி மன நலத்திலும் மாற்றத்தை உண்டாக்கக்கூடியது இந்த ரத்தசோகை. முகம் மட்டுமின்றி, உடலும் வெளிறிப்போய், தீவிர நிலையில் இந்நோய் உயிரிழப்பையே ஏற்படுத்தும் இயல்புடையது. அகத்தியர் காலத்திலே அதிகம் காணப்பட்ட இந்த நோய்நிலை 'வெளுப்புநோய்' என்று விவரிக்கப்பட்டுள்ளது.
முதுமையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் பாதிக்கப்படும் நோய்நிலையாக ரத்தசோகை உள்ளது. 'அனீமியா' எனும் 'ரத்தசோகை' இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மட்டுமல்லாது, வளர்ந்து வரும் நாடுகளிலும் பெரும் சவாலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளுத்த முகமும், வெளுத்த நகமும், உடல் சோர்வும், பெருமூச்சு வாங்கலும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
சத்துக் குறைபாட்டால் உண்டாகும் ரத்தசோகையானது முதுமையில் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் வரக்கூடியது. இது ஒருபுறமிருக்க, முதுமையில் நீரிழிவுக்கு நாட்பட எடுத்துக்கொள்ளும் மெட்பார்மின் மருந்தும், அசீரணம் மற்றும் வாயுத் தொல்லைக்கு காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் அமிலநீக்கி (ஆன்டாசிட்) மருந்துகளும், வைட்டமின் பி-12 குறைபாட்டை உண்டாக்கி ரத்தசோகைக்கு வழிவகுக்கும். ஆகவே மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகளை நாடுவது முதுமையில் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.
புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்நிலைகளைப் போல, முதுமையில் ரத்தசோகை நோயினை உண்டாக்குவதில் எலும்பு மஜ்ஜை செயலிழப்பும் முக்கிய பங்காற்றுகிறது. காரணம் எலும்பு மஜ்ஜை செல்கள் ரத்த சிவப்பணுக்கள் உண்டாக முன்னோடியாக உள்ளன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதாலும், உடலில் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவதாலும் ரத்தசோகை நோய் உண்டாகிறது. இன்னும் சில வகை மருந்துகளும் முதுமையில் ரத்தசோகை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
முதுமையில் உண்டாகும் நாட்பட்ட சிறுநீரக நோயிலும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் சுரக்கும் 'எரித்ரோபோய்டின்' எனும் ஹார்மோன் சுரப்பு குறைவதே அதற்கு காரணமாகின்றது. இந்த சுரப்பு எலும்பு மஜ்ஜைகளில் செயல்பட்டு ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை துரிதமாக்கும். இவற்றின் பற்றாக்குறையால் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைவதால் அதன் மூலமும் ரத்தசோகை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மூக்கிரட்டை கீரையும், திரிபலை சூரணமும் பலன் அளிக்கக்கூடும்.
அதே போல் நாட்பட்ட கிருமி தொற்றிலும், புற்றுக்கட்டி நோய்நிலையிலும், ஆட்டோ-இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்பு சார்ந்த நோய்நிலையிலும் ரத்தசோகை உண்டாவதால் மருத்துவர் ஆலோசனைப்படி நோயினைக் கணித்து சிகிச்சை மேற்கொள்வது வெளுப்பு நோய் நீங்க வழி வகை செய்யும்.

மருத்துவர் சோ.தில்லைவாணன்
முதுமையில் அவ்வப்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை செய்து பார்ப்பது மட்டுமின்றி, ரத்தத்தில் இரும்பு சத்தின் அளவும், பெரிட்டின் அளவும் பரிசோதனை செய்து ரத்தசோகை நோய்நிலையை கணிப்பது நல்லது.
சித்த மருத்துவ தத்துவத்தின் படி நோய்களுக்கு காரணமாக இருக்கும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் பித்த குற்றத்தின் பாதிப்பால் வெளுப்பு நோய் உண்டாவதாக உள்ளது. ஆதலால் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள உணவு முறைகளும், எளிய மூலிகை மருந்துகளும், தாது கலப்புள்ள மருந்துகளும் பித்த பாதிப்பை சரிசெய்து, சோகை நோயின் சோகத்தைப் போக்கி பலனளிப்பதாக உள்ளன.
சித்த மருத்துவ மூலிகைகளில் முருங்கை இலை, கறிவேப்பிலை, முளைக்கீரை, வெந்தயகீரை, கரிசாலை, பொன்னாங்கண்ணி, சிறுகீரை போன்ற கீரை வகைகளும், கடைச்சரக்குகளில் திப்பிலி, வெந்தயம் ஆகியன ரத்தசோகை நோயைப் போக்குவதில் பலன் அளிப்பதாக உள்ளன. மேற்கூறிய இவைகள் "உணவே மருந்து' என்பதற்கு எளிய உதாரணங்கள்.
முதுமையில் கிட்டத்தட்ட 34 சதவீதம் பேர் சத்துக் குறைபாட்டால் ரத்தசோகைக்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் பாதி பேருக்கு (50 சதவீதம்) இரும்பு சத்து குறைபாடு தான் காரணம் என்பதால் மேற்கூறிய கீரை வகைகள் நல்ல பலனளிக்கும்.
முதுமையில் இரும்பு சத்து குறைபாடு உண்டாக, போதிய சத்தான உணவு கிடைக்காமல் போவது முக்கிய காரணமாக உள்ளது. சத்தான உணவு என்றாலே பலருக்கும் நினைவில் வருவது அசைவ உணவுகள் தான். உண்மையில் அதே சத்துக்களைக் கொண்டதாக, நமது பாரம்பரிய உணவு வகைகள் உள்ளன. அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்டதாக சிறு தானியங்களான கம்பு மற்றும் சாமை உள்ளன. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ரத்தசோகைக்கு மட்டுமின்றி சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்டிரால் நிலையில் நல்ல பலன் தரும்.
முதுமையில் சத்தான உணவு அவசியம் என்பதால் பழங்களை அவ்வப்போது எடுத்துக்கொள்வது நற்பலன் தரும். முக்கியமாக பேரிச்சை, அத்தி பழம், கொய்யா, நெல்லி, மாதுளை, உலர்ந்த திராட்சை, ஆப்பிள், ஆகிய பழங்கள் பெரும் பயனளிக்கும். அல்லது சித்த மருந்துகளான மாதுளை மணப்பாகு, அத்தி பழ மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகிய மருந்துகளை எடுக்கலாம்.
கீரை வகைகளில் அதிகம் இரும்பு சத்தினை கொண்ட பாலக்கீரையை விட 25 மடங்கு அதிக இரும்பு சத்தினைக் கொண்டதாக உள்ளது முருங்கைக்கீரை. இந்த முருங்கையை கறிவேப்பிலையுடன் சேர்த்து அத்துடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் சீரகம் சிறிது உப்பு சேர்த்து சூப் வைத்துக் குடிக்க ரத்தசோகை நோயில் நல்ல பலன் தரும். அதே போல் கறிவேப்பிலையை பொடி செய்து அவ்வப்போது உணவில் சேர்த்து எடுத்துக்கொள்வது அனீமியாவை விரட்ட உதவும்.
முதுமையில் ரத்தசோகையைப் போக்க பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவு வகைகளை நாடுவது நல்ல பலனளிக்கும். பாரம்பரிய அரிசி வகைகளில் மாப்பிள்ளை சம்பா, பூங்கார், சிகப்பரிசி, சிவப்பு குருவிக்கார் ஆகிய அரிசி வகைகள் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்டுள்ளதால் இவற்றாலான உணவு வகைகளை சேர்ப்பது நல்லது.
சிறுதானியங்களில் கம்பு, அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்பு சத்தினை உடையதாக உள்ளதால் கம்பு கொண்டு செய்யப்படும் களி, கூழ், அடை போன்ற உணவு வகைகள் அனீமியாவைப் போக்க பலன் தரும். அதே போல் முதலில் குதிரைவாலியும், அதற்கு அடுத்தபடியாக சாமையும் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்ட சிறுதானியங்களாக உள்ளன.
உண்மையில் 'குப்பைகீரை' என்று கருதப்படும் முளைக்கீரையும் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எளிமையாக கிடைப்பதால் அதன் மகத்துவம் புரியாமல் இரும்பு சத்து மாத்திரைகளை நாடுவது இயல்பாகிவிட்டது. அசைவ உணவுப் பிரியர்கள் வெள்ளாட்டு கறி, ஈரல், எலும்பு இவற்றை சூப் செய்து குடித்து வர அனீமியாவில் பலன் தரும்.
மூலிகை மருந்துகள் மட்டுமின்றி இரும்பு தாதுச் சரக்குகளை மையமாகக் கொண்ட சித்த மருந்துகளான அய செந்தூரம், அயகாந்த செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகள் இரும்பு சத்துக் குறைபாட்டால் உண்டாகும் ரத்தசோகையைப் போக்க பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இத்தகைய மருந்துகளை நோய்நிலைக்கு ஏற்றார் போல் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மருத்துவர் ஆலோசனைப்படி எடுப்பதும் நல்லது.
பொதுவாகவே இரும்பு சத்துள்ள மாத்திரைகளை எடுக்கும் போது மலச்சிக்கல் உண்டாகக்கூடும். முதுமையில் ஏற்படும் மலச்சிக்கலுடன் இரும்பு சத்து மாத்திரைகளால் உண்டாகும் மலச்சிக்கலும் கூடி முதுமையை வாட்டும். அதனை சரி செய்ய இரும்பு சத்துள்ள மாத்திரை எடுத்துக்கொள்ளும் காலகட்டத்தில் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.
சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்தினை எடுத்துக்கொள்வது மலச்சிக்கலை போக்க உதவும். அத்துடன் இரும்பு சத்து குடலில் உட்கிரகிக்கவும் உதவும். திரிபலையில் சேரும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி அந்த மகத்தான பணியை செய்கின்றது.
வைட்டமின் சி உள்ள உணவுகள் மற்றும் பழங்கள் நமது உடலில் இரும்புசத்து உட்கிர கித்தலை அதிகமாக்கும் தன்மை உடையது என்கிறது இன்றைய நவீன அறிவியல். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்த நம் முன்னோர்கள் இரும்புசத்துள்ள அய செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகளை நெல்லிக்காய் சேர்ந்த திரிபலை சூரணத்துடன் உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர் என்பது அறிவியலை விஞ்சும் ஆச்சரியம்.
நாம் உண்ணும் உணவு குடலில் சாரமாக மாறி அடுத்து, செந்நீர் எனும் ரத்தமாக மாறுவதாக சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. சித்த மருத்துவ கூற்றுப்படி ரத்தம் முதலிய சப்த தாதுக்களை வன்மைப்படுத்த அனைவருக்கும் சத்தான உணவு அவசியம்.
இன்றைய நவீன அறிவியல் ரத்தசோகை நோயை போக்க உதவும் என்று கூறும் ஜிங்க், மெக்னீசியம், காப்பர், செலினியம் ஆகிய கனிம சத்துக்களும், போலிக் அமிலம் போன்ற எண்ணற்ற வைட்டமின்களும் நம் பாரம்பரியமாக பழகி வந்த உணவு முறைகளில் கணக்கி இல்லாமல் மண்டிக்கிடக்கின்றது. அத்தகைய உணவு முறைகளை நாடுவது முதுமையில் ரத்தசோகையை போக்கி வளமான வாழ்விற்கு வழிகோலும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- பிள்ளைகளின் பருவ வயதில் வரும் நல்ல வரன்களை தவறவிட்டு பிற்காலத்தில் வருந்துகிறார்கள்.
- கர்ம வினையை அனுபவிக்க ஜாதகரின் பிள்ளைகளின் வாழ்க்கையில் வேதனையை தருகிறார்.
தர்மகர்மாதிபதி யோகம்
கால புருஷ தத்துவப்படி காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும். கால புருஷ ஒன்பதாம் அதிபதியான குருவிற்கும் கர்மாதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும்.
குரு+சனி சம்பந்தம் என்பது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
தர்மம் என்றால் ஒருவர் தனது செய்கையால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த, செய்யும் தொழில் மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள்.
ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள் கிடைக்க ஜனன கால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்பதோடு அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவீகிதம் சுபத்தன்மையுடன் வரமாக செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்.
ஜனன கால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் நீசம், அஸ்தமனம் வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக பிரம்மகத்தி தோஷமாகவும் செயல்படும். இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாது.
குரு, சனி இணைவு எவ்வாறு திருமணத்தை தடை செய்கிறது என்பதை காணலாம். குரு என்றால் குழந்தை (பிள்ளைகள்) சனி என்றால் கர்மா. குருவிற்கு சனி பார்வை இருப்பவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் பற்றிய சிந்தனையும் கவலையும் இருந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளை கங்காரு போல் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பார்கள். பிள்ளைகள் சாப்பிடும் உணவு, உடை, கல்லூரி படிப்பு, திருமண வாழ்க்கை என அனைத்து செயல்களிலும் தங்கள் விருப்பத்தை திணிப்பார்கள். எந்த விஷயத்திலும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த கிரகச் சேர்க்கை இருக்கும் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண கால கட்டங்களில் சரியான வரனை தேர்வு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அழகு, அந்தஸ்து, படிப்பு, கவுரவம் என பல்வேறு மணல் கயிறு கண்டிஷன் போட்டு வரனை தேர்ந்தெடுப்பதால் திருமணத் தடை ஏற்படுகிறது.
எல்லா விதத்திலும் சிறப்பான ஒரு வரனை தேர்வு செய்ய முயற்சித்து திருமணத்தடைக்கு தாங்களே காரணமாகிறார்கள். பிள்ளைகளின் பருவ வயதில் வரும் நல்ல வரன்களை தவறவிட்டு பிற்காலத்தில் வருந்துகிறார்கள்.
ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லாத பல பிள்ளைகள் பெற்றோரை மதித்து காலம் கடந்து திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். வெகு சில பிள்ளைகள் தங்களின் சாமர்த்தியத்தால் பெற்றோரை சரி செய்து திருமணத் தடையை தகர்த்து விடுகிறார்கள். ஒரு சிலரின் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் நடந்தாலும் பெற்றோரை அடிக்கடி சந்திக்க முடியாமல் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் வாழும் சூழல் ஏற்படுகிறது அல்லது திருமணத்திற்கு பிறகு திருமண வாழ்கையில் மனக்கசப்பு ஏற்படுகிறது. சனி என்றாலே கசப்பு தானே. இந்த கிரக இணைவின் வேலையே திருமணம் தொடர்பான ஏதாவது ஒரு விசயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மன சங்கடத்தை தருவதுதான்.
இதில் இன்னொரு ஆச்சரியப்படும் விசயமும் இருக்கிறது. இந்த கிரக சம்பந்தம் இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளில் பலர் திருமண வாழ்க்கையை விரும்பாமல் பெற்றோர்களின் அன்பிற்காக 40-45 வயதைக் கடந்தும் பெற்றோருடன் வாழ்கிறார்கள்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
பிள்ளைகளின் அன்பைக்கண்டு வியப்பதா? பெற்றோர்களின் அக்கறையை மதிப்பதா? . இதில் பெற்றோர்களையோ பிள்ளைகளையோ குறை சொல்ல முடியாது. நடப்பவை அனைத்தும் கர்மகாரகன் ஸ்ரீ சனி பகவானின் வேலைகள். குருவிற்கு சனி பார்வை இருப்பதால் அதாவது கர்மகாரகன் சனி தன் பார்வை பலத்தால் பொருளாதாரத்தை மிகைப்படுத்தலாக வழங்கி கர்ம வினையை அனுபவிக்க ஜாதகரின் பிள்ளைகளின் வாழ்க்கையில் வேதனையை தருகிறார்.
திருமணம் மட்டுமல்ல கல்லூரி படிப்பை தேர்வு செய்வதிலும் தொழிலை தேர்வு செய்வதிலும் இதே நிலைதான். இந்த கிரக சம்பந்தம் உள்ள பெற்றோர்கள் சுய தொழில் செய்பவர்களாக இருந்தால் தங்களின் வாழ்வின் கடைசி நாள் வரை தொழில் பொறுப்பை பிள்ளைகளிடம் ஒப்படைக்க முன்வருவது இல்லை. பிள்ளைகளின் மேல் உள்ள அதீத அன்பு மற்றும் அக்கறையில் பொறுப்புக்களை தாங்களே சுமக்கிறார்கள். இதை மேலும் தெளிவாக புரியும் படி ஒரு திரைப்படக் கதையின் மூலம் விளக்குகிறேன்.
சந்தோஷ் சுப்பிரமணியம் 2008-ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி கூறப்பட்டு இருக்கும். அந்த படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவியும் தந்தையாக பிரகாஷ் ராஜூம் நடித்திருப்பார்கள். தந்தை தன் மகன் மேல் உயிரையே வைத்து இருப்பார்.
காலை எழுந்தது முதல் இரவு வரை தன் மகன் சாப்பிடும் உணவு மற்றும் அணியும் உடையில் இருந்து அன்று ஆற்ற வேண்டிய கடமைகள் வரை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார். சுயமாக இயங்கும் உரிமையை மகனுக்கு கொடுக்க மாட்டார். மகனுக்கோ தன் எதிர்காலத்தை பற்றிய பல்வேறு லட்சியங்களும் கனவுகளும் இருக்கும். தந்தையின்.
மேல் இருக்கும் மதிப்பு மரியாதையால் தனது ஆசைகளை மனதில் போட்டு அடக்குவார். ஒரு கட்டத்தில் தந்தையிடம் தன் எண்ணங்களை வெளிப்படுத்தி விடுவார். பிள்ளைகளின் உணர்வை பெற்றோர்கள் உணர வேண்டும் என்பதை தந்தைக்கு உணர்த்துவதே கதை. நிஜ வாழ்க்கையில் பல குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்களைத் தானே படம் எடுக்கிறார்கள்.
பரிகாரம்
1. உளவியில் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு தர முயன்றால் பெற்றோர்கள் 30-35 வயதில் பெற்ற வாழ்வியல் ஞானத்தை விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்த இந்த காலத்து பிள்ளைகள் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் 20 வயதிலேயே பெற்று விடுகிறார்கள். வாழ்வின் எதார்த்தத்தையும் பக்குவத்தையும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.
சில குடும்பங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எதையும் கலந்து ஆலோசிப்பதில்லை. பிள்ளைகளுடன் பெற்றோர்கள் கலந்து ஆலோசிக்கும் போது எத்தகைய பாதகமும் சாதகமாகும்.
2. ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம், சுப நிகழ்வுகள் தடைபடுகிறது என்றால், கட்டாயம் கர்மவினை காரணமாக இருக்கும். குரு, சனி சம்பந்தம் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறும் போதும், குருவிற்கு சனி பார்வை இருப்பதும், நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்ற குரு சனி சம்பந்தம் இருப்பது ஒருவருக்கு யாருடைய சாபத்தாலோ ஏற்பட்ட கர்ம வினை தொடர்ச்சியாகும். எத்தனையோ குடும்பங்கள் வசதி இருந்தும் இது போன்ற சில சாபத்தினால் கடைசி வரை பிள்ளைகளைப் பற்றிய கவலையுடனே வாழ்கிறார்கள். ஒரு சில குடும்பங்கள் தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து போவதற்கும் இதுவே காரணம். ஒரு குடும்பத்தையே அழிக்கும் அளவிற்கு அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை பிரசன்னத்தில் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.
3. சனிக்கிழமையன்று, குளித்து நூறு ஆண்டுகளான வேப்பமரத்தின் குச்சிகளை ஒடித்து எடுக்க வேண்டும். ஒடித்து எடுத்த குச்சி வளையாமல் கோணாமல் நேராக இருக்கும்படியானதாக இருக்க வேண்டும்.
குச்சிகளை பிசிறுகளில்லாமல் கல்லில் தேய்த்து வழுவழுப்பாக்கிக் கொள்ளவும். பின் அதன்மேல் நயம் சந்தனம் பூசிக்காய வைத்து விடவும். இப்போது தெய்வீக வேப்பங்குச்சி தயார். இந்த குச்சிகளை தினமும் மாலையில் ஊதுபத்தி போல் ஏற்றி புகை போட சனிபகவானால் ஏற்படும் தாக்கம் குறைந்து சுப நிகழ்வுகள் கைகூடும். 90 நாட்களுக்குள் வெற்றி உறுதி.
4. அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறும் குரு, சனி சம்பந்தத்தால் பிரம்மகத்தி தோஷத்தை அனுபவிப்பவர்கள் மாதம்தோறும் அமாவாசையில் பித்ருக்களை நினைத்துத் தர்ப்பணம் கொடுத்து படையல் இட்டு வணங்குவது மிகவும் சிறப்பானது.
அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தவறாமல் தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசைகளில் பித்ரு வழிபாடு செய்வது அவசியம். இந்த நாளில் நதி, குளம் அல்லது சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில் மூழ்கி நீராடிப் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம் செய்து பின் வீட்டுக்கு வந்து படையல் போட்டு முன்னோர்களை வணங்க வேண்டும். பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுப்பதுடன், காகத்துக்கு எள் கலந்த தயிர் சாதம் வைப்பதும் பித்ருக்களின் பரிபூரண ஆசிகளை பெற்றுத் தரும்.
5. திருநள்ளாறு அல்லது குச்சனூர் ஸ்ரீ சனி பகவானை வணங்கி வந்தால் மனக்கவலைகள் மற்றும் கெடுபலன்கள் நீங்கி விடும்.
6. மனம் தளராமல் தொடர்ந்து குல தெய்வத்தை வழிபட வேண்டும்.
7. வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபாடு செய்யவேண்டும்.
8. சனி பகவானால் கெடுபலன் ஏற்படாமல் தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். வஞ்சக எண்ணம், பொறாமை, அடுத்தவர்களின் முன்னேற்றத்தை கெடுக்கும், பழிவாங்கும் எண்ணத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
வாழ்வியல் ரீதியாக ஜனன கால ஜாதகத்தில் திருமண பாவகங்களில் எந்த குறைபாடும் இல்லாத பலருக்கு ஏற்படும் இடர்களை ஆய்வு செய்து அனுபவத்தின் அடிப்படையில் புலப்பட்ட சில தகவல்களை இந்த கட்டுரையில் தெரிவித்திருக்கிறேன். மனிதர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான வினைகளை அனுபவிப்பதற்கு விதிப் பயன் தான் காரணம் என்றாலும் சுய உணர்வுவோடு செயல்பட்டு கர்மாவை மாற்றியமைக்க முயற்சி செய்வது சாலச் சிறந்தது.
- கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
- கடைசியாக கடவுள் மனிதனைப் படைத்துக் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு முதியவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நம்மை விட சற்று வயதில் கூடியவர்களின் அறிவும், அனுபவமும் எந்த பல்கலைக்கழகத்தில் போய் எவ்வளவு பணம் கொட்டி படித்தாலும் கிடைக்காது. எளிதாக கிடைக்கும் அபார ஞானம் இவை. எனவேதான் எனக்கு பேசும் வாய்ப்பு கிட்டியது என்று கூறினேன். அவர் பேசிய போது அவர் படித்ததாக மனித வாழ்வின் போக்கினைப் பற்றி ஒரு குறிப்பினை கூறினார்.
கடவுள் ஒருநாள் கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரை நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல்தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்கள் வாழ்வாய்" எனக் கூறினார்.
கழுதை இதற்கு இறைவனிடம் வேண்டியது, "நான் கழுதையாக இருக்கின்றேன். 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்" என்றது. கடவுள் கழுதையின் வேண்டுகோளினை ஏற்றார்.
அடுத்து இறைவன் ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார். "நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு உணவு கொடுப்பான். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்" என்றார்.
இதற்கு நாய் கூறியது, "கடவுளே, எனக்கு 20 வருடம் ரொம்ப அதிகம். ஆகையால் எனக்கு 15 வருடங்களே போதும்" என்றது. கடவுளும் "சரி" என்று நாயின் ஆசையினை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் ஒரு குரங்கினைப் படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு குரங்கு மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மனிதனை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்கள் வாழ்வாய்" என்றார்.
இதற்கு குரங்கு கூறியது, "கடவுளே எனக்கு 20 வருடங்கள் ரொம்ப அதிகம். 10 வருடம் போதும்" என்றது. கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.

கமலி ஸ்ரீபால்
கடைசியாக கடவுள் மனிதனைப் படைத்துக் கூறினார். "நீ ஒரு மனிதன். ஆறு அறிவு உள்ள ஜீவன். நீ மட்டுமே உன் அறிவினைக் கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில்தான். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்" என்று கூறினார்.
இதற்கு மனிதன் கூறினான், "எனக்கு 20 வருடங்கள் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்று சொன்ன 20 வருடங்களையும், நாய்க்கு கிடைத்த 15 வருடங்களையும், குரங்கு கிடைத்த 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடுங்கள்" என்றான்.
கடவுளும் மனிதனின் ஆசையை நிறைவேற்றினார். அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாய் மனிதனாக வாழ்கிறான். கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லா சுமைகளையும் தாங்கிக் கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு அடுத்த 15 வருடங்கள் நாயாக இருந்து அவர்கள் வீட்டில் அனைவரையும் பாதுகாத்துக் கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான். வயதான பிறகு குரங்கு போல் மகன் வீடு, மகள் வீடு என தாவி, பேரக் குழந்தைகளுக்கு வித்தை காட்டி மகிழ்வித்து பின் மரணிக்கின்றான்.
இதுதான் மனித வாழ்க்கையின் உண்மை என முடித்தார் அந்த முதியவர்.
கதை கற்பனைதான். இல்லையென சொல்லவில்லை. ஆனால் எத்தகைய ஆழ்ந்த கருத்துக்கள், உண்மைகள். இந்த கருத்து. உண்மையிலேயே மனிதனுக்கு அவசியமானது. ஆழ்ந்து யோசித்தால் நம் வாழ்வினை நம்மால் சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காகவே இங்கு இந்த கதை குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முதியவர் மேலும் கூறினார்.
* 3 வேளை உண்ண உணவு, உடை, இருப்பிடம் எனக்கு உள்ளது. நான் உலகில் உள்ள 70 சதவீத மக்களை விட வசதியானவனாக இருக்கின்றேன்.
* வங்கியில் கணக்கு இருந்தாலே ஒருவன் பணக்காரன்தான். சுமார் 75 சதவீத மக்களுக்கு வங்கியில் கணக்கு இல்லை. எனக்கு வங்கியில் சுமார் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது. நானும் பணக்காரனே.
* என்னிடம் கணிப் பொறி இல்லை. பரவாயில்லை. அவ்வாறு இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே.
* என்னிடம் செல்போன் உள்ளது. பல கோடி மக்களிடம் இல்லை.
* நோய் என்று எதுவுமே எனக்கு கிடையாது.
* எனக்கு இந்த வயதிலும் பார்க்க முடியும். பேச முடியும். கேட்க முடியும். சுமார் 22 கோடி மக்களுக்கு இதில் ஏதேனும் ஒரு பாதிப்பு உள்ளது.
* போர், பட்டினி, சிறைவாசம் என எத்தனை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தப்பி வாழ்பவன் அதிர்ஷ்டசாலி. நான் அதிர்ஷ்டசாலியே.
* வயதான பெற்றோர்களை உடன் வைத்து நன்கு கவனித்து வாழ்பவன் பெரிய பாக்கியவான். எனவே நான் பாக்கியவான்.
* இன்றைய கால கட்டத்தில் தாகம் எடுக்கும் போது சுத்தமான நீர் காசு கொடுக்காமல் குடிக்கக் கிடைத்தால் அவன் கொடுத்து வைத்தவன். எனவே நான் கொடுத்து வைத்தவனே.
* எழுத, படிக்கத் தெரிந்தவன்.
* தலை நிமிர்ந்து வாழ முடிந்தால் அதுதான் வாழ்வு. அந்த வாழ்வின் நான் பெற்றுள்ளேன்.
* நான் வாழும் இங்கு ஜாதி, மதம் எதுவும் கிடையாது. ஆக இந்த ஆசீர்வாதங்களை அனைவரும் பெற்று வாழ வேண்டும் என ஆசீர்வதித்தார்.
இந்த ஒளி சக்தியினை நாமும் நம்முள் வளர்த்துக் கொள்வோமா?.
அந்த முதியவர் பகிர்ந்த மற்றொரு உரை:
* சதா தன் மனைவியை குறை கூறுபவரும் சரி, மற்றவர்கள் முன் மட்டம் தட்டி பேசுபவர்களும் சரி, பொதுவில் மணமான ஆண்களும் சரி காலை வேளையில் உங்கள் மனைவி ஓடும் ஓட்டத்தினை 10 நிமிடங்கள் கவனியுங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்று புரியும்.
* 10 நிமிடங்கள் இமயமலையில் பனியில் வாழும் ஞானிகள் முன் அமருங்கள். நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவது தெரியும்.
* ஒரு பெரிய தலைவரைப் பற்றிய புத்தகத்தினைப் படியுங்கள். நாம் கற்றது ஏட்டுக் கல்வி மட்டுமே, எதுவுமே இல்லை என்று தெரியும்.
* 10 நிமிடம் பெட்டிக் கடை, டீ கடை வியாபாரி முன் அமருங்கள். நாம் சம்பாதிப்பதனைப் பற்றி தெரியும்.
* 10 நிமிடம் விஞ்ஞானி முன் அமருங்கள். நம் அறியாமையின் அளவு தெரியும்.
* 10 நிமிடம் நம் எல்லை காக்கும் ராணுவ வீரர்கள் முன் அமருங்கள். நம் தேசப் பற்றும் தியாகமும் எத்தனை குறைவானது என்று தெரிந்து வெட்கப்பட்டு விடுவோம்.
* பத்து நிமிடம் ஒரு விவசாயி முன்பு அமர்ந்தால் நாம் எந்த அளவு கடினமாக உழைக்கவில்லை. எந்த அளவு அதிகமாக சாப்பிடு கின்றோம் என்பதனை உணருவோம்.
இப்படி சிந்தித்தாலே ஒருவருள் இருக்கும் ஒளி ஜொலிக்க ஆரம்பிக்கும்.
எத்தனை அற்புதமான கருத்துக்கள். பலரும் படித்து கூட இருக்கலாம். ஆயினும் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து மனதினில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
நம் ஆன்ம பலம் கூடுவதற்கும், நம்முள் இருக்கும் ஒளி சக்தியினை உணர்வதற்கும் சில நியதிகள் நமக்கு தேவை.
* உறுதி தேவை. இதனை தியானம், பிரார்த்தனை, பக்தி மூலம் பெற முடியும். இவை வலிமையான வழியாகும்.
* அந்த வலிமையினை நல்ல வழிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். வம்பு, சண்டைகளில் விரயம் செய்யக் கூடாது.
* காலம் நதி போன்றது. திரும்ப வராது. எனவே காலத்தினை நல்ல முறையில் செலவழிக்க வேண்டும்.
* எண்ணங்களே சுமைதான். எனவே தேவையற்ற யோசனைகள் வேண்டாமே.
* நம் வேலைகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை, தன்னம்பிக்கை அவசியம்.
* சுதந்திரம் வேண்டும். நம் கைத்தடியினை வீசி நடக்க நமக்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அது அடுத்தவர் மூக்கினை இடிக்காத அளவுக்கு கட்டுப்பாடு வேண்டும்.
* எதனையும் எதிர்பார்க்காது வாழ்வது தவம். இந்த தவம் அனைத்து நல்லவற்றினையும் கொண்டு வந்து சேர்க்கும். முயற்சிப்போமா?
- தங்க நிறத்தில் ஜொலிக்கும் உடையில் மகாராணி போன்ற கெட்அப்.
- இவ்வளவு பிசியிலும் இந்த மாதிரி வேறு விசயங்களிலும் எப்படி கவனம் செலுத்த முடிகிறது என்று நினைப்போம்.
குலுவாலிலே, மொட்டு மலர்ந்தல்லோ!
தட்டி தட்டி வண்டு துறந்தல்லோ, ஹே தேன் குடிக்க நேரம் உண்டல்லோ, தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ...
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ...
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ...
இந்த ஒரு பாடலுக்காக எவ்வளவு மேக்-அப், காஸ்ட்யூம்... அப்பப்பா... இந்த பாடலுக்கான காட்சிகள் சென்னையிலும், கேரள மாநிலம் சொர்னூரிலும் மாறி மாறி எடுக்கப்பட்டது. செட்டிங் போட்டு எடுக்க வேண்டிய காட்சிகள் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.
கேரள பாரம்பரிய உடை, கதகளி உள்ளிட்ட கேரள நடன காட்சிகள் சொர்னூரில் வெளிப்புறத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டது.
சென்னையில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எனது பிறந்த நாளும் வந்தது. படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டியது மட்டுமல்ல. முதல் முறையாக ஓட்டலில் ஒரு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்தேன். பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடந்தது. அந்த காலத்தில் ஓரிரு நட்சத்திர ஓட்டல்கள்தான் சென்னை யில் இருந்தன. அதுவரை அந்த மாதிரி பார்ட்டிகளெல்லாம் நான் நடத்தியது கிடையாது. எனக்கு அது புதுமையாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தது.

ஏனெனில் ரஜினி சார், பிரபு சார் கே.எஸ்.ரவிக்குமார் சார் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் விருந்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் நேரில் வந்து வாழ்த்தியது எனக்கு மறக்க முடியாத தருணம்.
அதே போல் இந்த படத்தில் ஒரே காஸ்ட்யூமில் 20 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். ரொம்ப ஹெவியான டிரஸ் தினமும் எப்படா ஷூட்டிங் முடியும்? எப்படா மேக்அப்பை கலைப்பது என்றி ருக்கும். எத்தனையோ நாட்கள் காரில் திரும்பும் போதே மேக்அப்பை ஒவ்வொன்றாக கலைப்பேன்.
ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். நாங்கள் செல்லும் குதிரை வண்டியின் அச்சாணியை வடிவேல் எடுத்து விடுவார். அச்சாணியை கழற்றியதும், வண்டி சாய்ந்து கீழே சகதியில் விழுந்த காட்சியும் படமாக்கப்பட்டது சென்னையில்.
ஆனால் அந்த அச்சாணி பற்றி பேசும் காட்சி படமாக்கப்பட்டது மைசூரில்...
மிகப்பெரிய ஹிட் படம் முத்து. ஆனால் படப்பிடிப்பின் போது அதன் அருமை புரியவில்லை. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் கதை தெரியாது. ரஜினி சார் ஜோடி என்பதால் கதையை தெரிந்து கொள்வதில் நான் ஆர்வம் காட்டவும் இல்லை.
அடிக்கடி செட்டில் சும்மாவே இருப்பேன். அதை பார்த்ததும் என்னை விட என் அம்மாவுக்கு தான் கூடுதல் சந்தேகம்.
அதை நேரிலேயே ரவிக்குமார் சாரிடம் கேட்டும் விட்டார். 'என்ன சார்? இந்த படத்தில் என் பொண்ணுக்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கா சார். அவள் வளர்ந்து வரும் பெண் என்றார்.
என் அம்மாவிடம் இருந்து அப்படி ஒரு கேள்வியை அவரும் எதிர்பார்க்கவில்லை.
என்னம்மா, இப்படி கேட்டுட்டீங்க.... படம் வெளிவரட்டும் பாருங்கள். அப்புறம் தெரியும் உங்களுக்கு....! நானும் அதற்கு அப்புறம்தான் உங்களோடு பேசுவேன்' என்று கூறிவிட்டார்.
தில்லானா... தில்லானா.... பாடல் காட்சிக்காக நான் ரெடியாக இருந்தேன். தங்க நிறத்தில் ஜொலிக்கும் உடையில் மகாராணி போன்ற கெட்அப்.
நீண்ட நேரம் ஆகி யும் என்னோடு ஆடக்கூடிய நடன குழுவினர் வரவில்லை. ஆனால் அதற்காக டைரக்டர் கவலைப்படவில்லை. டக்கென்று ஒரு முடி வெடுத்தார். என்னை மட்டும் தனியாக ஆட வைத்து படமாக்கினார். அதன் பிறகு வெட்டல், ஓட்டல் எல்லாம் அவர் சம்பந்தப்பட்ட வேலை என்பதை சொல்ல வேண்டிய தில்லை. இப்படித்தான் இருப்பார் ரவிக்குமார் சார்.
இந்த பட ஷூட்டிங்கின்போது எங்க ளுக்கு இன்னுமொரு ஆச்சரியமான விசயம் நடக்கும். அதாவது ரஜினி சாரை பார்க்க பல அரசியல் தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் ரொம்ப நெருக்கமாக அரசியல் பற்றியும் விவாதித்து கொண்டிருப்பார்.
எங்களுக்கு அவரை பார்த்து ஆச்சரிய மாக இருக்கும். இவ்வளவு பிசியிலும் இந்த மாதிரி வேறு விசயங்களிலும் எப்படி கவனம் செலுத்த முடிகிறது என்று நினைப்போம்.
இந்த படம் வெற்றி படம் மட்டுமல்லாமல் இந்த படம் அதில் நடித்த, வேலை பார்த்த ஒவ்ெவாருவரின் மனதையும் தொட்ட படம்.
அதற்கு காரணம் தேனப்பன்சார், கிரேன் மனோகர் சார் என்று படக்குழுவை சேர்ந்த பலருக்கு அந்த படத்தில் ஏதாவது ஒரு சீனில் தலை காட்டும்படி வாய்ப்பு வழங்கி இருந்தார் ரவிக்குமார் சார். வழக்கமாக அவர் மட்டும் ஏதாவது ஒரு காட்சியில் நச்சென்று தோன்றி முத்திரை பதிப்பார். ஆனால் இந்த படத்தில் பலருக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியதால் எல்லோருக்கும் அவர்களே நடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதனால் எல்ேலாரும் முத்துவை கொண்டாடினார்கள்.
இன்னொரு அனுபவத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.
(தொடரும்....)
- உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.
- கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும்.
இப்புத்தாண்டில் இனிதான வாழ்வு நமது ஆகட்டும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும் இன்றைய சூழலில் ஒருவர் எந்த அளவுக்கு முழுமையாக உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதே மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவித நோய்க்கும் ஆளாகாமல் இருக்கும் நல்ல ஆரோக்கியமே ஆனந்தமான வாழ்க்கையை நல்கும் எனலாம். எனவே அவ்வப்போது தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், சிறிய உடல் உபாதை என்றாலும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதும், நல்ல மனநலத்துடன் மகிழ்வாக தினப்படி வாழ்வை அமைத்துக் கொள்வதும் புத்தாண்டை மேலும் இனிதாக்கும்.
நம் வாழ்வில் நமக்கு கிடைத்திருக்கும் நம் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் நமது வணிக உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவிப்போம். இது நம் சூழலை மேம்படுத்தும்
உணர்ச்சி மேலாண்மை தற்போது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த சூழலிலும் பதட்டப்படாமல், சினம் கொள்ளாமல், நிதானமாக செயல்படுவோம். நிரந்தர வெற்றியை நமதாக்குவோம்.
இந்த புத்தாண்டில் நாம் அடைய விரும்பும் அனைத்து லட்சியங்களையும் அடைந்து விட்டதாக நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். இது நமது ஆழ்மனதின் அற்புத ஆற்றலின் மூலம் நிஜமாகவே நாம் விரும்பியவை நியாயமாக நமக்கு கிடைக்க வழி வகுக்கும்.
இன்றைய உலகம் தகவல்களால் நிறைந்திருக்கிறது. தகவல்கள் எல்லா வகையிலும் நம்மை சூழ்ந்து நம் கவனத்தை ஈர்க்கின்றது. நமக்கு எது வேண்டிய தகவல் எது வேண்டாத தகவல் என்பதை அறிந்து நமது நேரம் விரயமாவதை தவிர்க்க வேண்டும். நேரம்தான் உண்மையான செல்வம் இதை சரியாக புரிந்து செயல்படுவோம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது இந்த தலைமுறையில் மிகவும் குறைந்து விட்டது.இனி நேரடியாக அவ்வப்போது நண்பர்களோடு, உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.
ஸ்மார்ட் வாட்ச்சும் எலக்ட்ரிக்கல் வாகனமும் வாழ்க்கையை பெரிய அளவிற்கு தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை கற்போம். நம் வாழ்வின் மேம்பாட்டிற்கு தக்க வகையில் அதை பயன்படுத்துவோம்.
நம் எல்லோர் முன்னும் வாய்ப்புகள் வரிசை கட்டி சென்று கொண்டிருக்கிறது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வை வளமாக்கிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. தளராது முயற்சி திட்டமிட்ட கடினமான உழைப்பு எப்போதுமே வெற்றியை நமதாக்கும் என்பதில் ஐயமில்லை.
ஒரு செயலை செய்ய முடிவு செய்த பின்னர் அதில் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கக் கூடாது. நன்று என தெரிந்து விட்டால் அதை இன்றே செய்யும் குணம் வேண்டும். நேரத்தை விரயம் செய்வதை நிறுத்துவது தான் பலருக்கு செயல் திறனை மேம்படுத்தி வெற்றி தந்திருக்கிறது.
நமக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். முடிந்தால் தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் 30 நிமிடம் ஒதுக்கி நாம் தினப்படி செய்த வேலைகளை பட்டியலிட்டு அவைகளில் இருக்கின்ற குறை நிறைகளை குறித்து வைத்துக்கொண்டு நாளைய நிகழ்ச்சிகளை இன்றைக்கு திட்டமிட வேண்டும். இது நேர மேலாண்மைக்கு பெரிதும் உதவும்.
உங்களுடைய அனைத்து எண்ணங்களையும் யோசனைகளையும் பதிவு செய்யுங்கள். நீங்கள் ஒரு செயலை செய்யும் பொழுது ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து பின் வேலையை தொடருங்கள். உங்கள் வேலையை சிதறடிக்க கூடிய அனைத்தையும் தெளிவாக ஒதுக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மேஜை எப்பொழுதும் நீங்கள் என்ன வேலை செய்யப் போகிறீர்களோ அது தொடர்பான பொருட்கள் மட்டும் இருக்கட்டும். எக்கச்சக்கமான பொருட்களால் நிரப்பாதீர்கள்.
ஒரு விஷயத்தை புதிதாக செய்யும் பொழுது அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அப்போது ஒரு நிபுணர் போல செயல்படுங்கள். நிபுணர்கள் எப்பொழுதும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் பொழுது முழு கவனத்தை அதில் மட்டுமே செலுத்துவார்கள்.
மின்னஞ்சலை பார்ப்பது வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளுக்கு பதில் போடுவது என்பதற்கு ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி செய்யுங்கள். புதிய பொருட்கள் வாங்கும் போது அது உங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பலமுறை உங்களுக்குள்ளே நீங்களே கேள்வி எழுப்பு பின் முடிவுக்கு வாருங்கள்.
சில நாட்கள் உங்களுக்கு மிக சிக்கலாகவும் மனசோர்வும் தந்தால் வேலை வலு மிகுதியாக இருந்தால் உங்களை நீங்களே புத்துணர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.
கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும். அவை பற்றிய வருத்தங்களும் குற்ற உணர்வுகளும், சுமையாக நமக்கு இருக்க வேண்டாம். அனைத்தையும் விட்டொழிப்போம். வருங்காலம் எப்போதும் பிரகாசமாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய பயம் வேண்டாம். நிகழ்காலத்தை நிஜமாகவே முழுமையாக நாம் அனுபவித்து பயன்படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்வான வாழ்வே நமக்கு சொந்தமாய் இருக்கும்.
- மெராமெக் குகைகளின் கண்கவர் காட்சிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
- கற்காலங்களில் இது போன்ற குகைகளே மனிதர்களின் வசிப்பிடங்களாக இருந்திருக்கின்றன.
கற்பனைக் கெட்டாத அற்புதக்காட்சி ஒன்று கண் முன்னே பிரகாசமாக நின்றால் எப்படி இருக்கும்? உடலும், மனமும் ஒருசேர வானில் பறக்கத் துடிக்குமே, அப்படி ஒரு அனுபவம், அமெரிக்காவின், 'மெராமெக் குகையைக் காணும்போது ஏற்படுவது உண்மை. இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள்! நாட்டுக்கு நாடு அது சற்று வேறுபட்டாலும், நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி, தம் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நம்மைக் கவர்ந்திழுத்து அவைகள் நம்மை பிரமிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், நம் சக்திக்கு அப்பாற்பட்ட சில படைப்புகள் நம்மை நிறைய சிந்திக்கவும் வைக்கின்றன. நாட்டுக்கு நாடு, மனிதர்களும், மதங்களும், சட்ட திட்டங்களும், கலாச்சாரமும், பண்பாடும் மாறலாம். ஆனால் இயற்கையின் சட்ட திட்டங்கள் அகில உலகிற்கும் பொதுவான -வையாகத்தான் உள்ளன என்பதை உணரச் செய்யும் அற்புதக் காட்சி இது.
1722-ல் பிலிப் ரெனால்ட் என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த இந்தக் குகை ஏறக்குறைய 7.4 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மெராமெக் கேவெரென் என்ற குகை, அமெரிக்காவின் மிசோரி, ஸ்டாண்டன், ஓசர்க்கினின் உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிறைய வெடியுப்பு இருந்ததால் ரெனால்ட் இந்த குகைக்கு வெடியுப்புக் குகை என்று பெயரிட்டார். 400 மில்லியன் ஆண்டுகளாகப் படிந்திருக்கும் மிகவும் விலை மதிப்பு மிக்க தாதுப்பொருட்கள் நிறைந்த இம்மலைப்பகுதியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் அணி திரண்டு காண வருகிறார்கள். செயின்ட் லூயிசின் தென்மேற்கே அமைந்துள்ள மெராமெக் குகைகள், இயற்கை நிலத்தடி அதிசயத்தின் ஏழு நிலைகளைக் காண ஆண்டுக்கு 100,000 முதல் 150,000 பார்வையாளர்கள் வருகின்றனர்.

மிசோரியின் புதையுண்ட பொக்கிசம்! அதிசயத்தின் உச்சம்! மெராமெக் பள்ளத்தாக்கின் வளமான உருளும் மலைகளுக்கு அடியில், கனிம அமைப்புகள் அரிதானதாகவும், தனித்துவமான வண்ணம் கொண்டதாகவும் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துவரும் இயற்கையின் இந்த ஆபரணங்கள், மெராமெக் குகைகளின் கண்கவர் காட்சிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப்பகுதியே குகை என்று அறியப்படுகிறது. கற்காலங்களில் இது போன்ற குகைகளே மனிதர்களின் வசிப்பிடங்களாக இருந்திருக்கின்றன.

பவளசங்கரி
இன்றும் கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பல குகைகள் நம் இந்தியாவிலும் காணப்படுகின்றன. மேகாலயா மாநிலத்தின் ஜெயிண்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரேம் லியாத் பிராஹ் என்ற குகை 31 கி.மீ. நீளம் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளக் குகையாகக் கருதப்படுகிறது. அதே போல் இந்த மெராமெக் குகை தமக்குள் பலப்பல அதிசயக் காட்சிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. கசித்துளி படிவுகள், சுண்ணாம்பு, மெக்னீசியம் போன்றவற்றால் ஆன இக்குகை வரலாற்று முக்கியத்துவமும், திகிலும் நிறைந்த அனுபவம் அளிப்பது. இங்கு மிக அதிகப்படியான தாதுப்பொருட்களின் படிமம், 70 அடி உயரமும், 60 அடி அகலமும், 35 அடி தடிமனும் கொண்டுள்ளது. இக்குகையின் மகுடமாகத் திகழும் இதுவே அமெரிக்க நகரத்தின் முதல்தர குகைக்காட்சி.
பளிங்கு போன்ற பளபளப்பான, சுண்ணாம்பும் மக்னீசியமும் கலந்ததொரு கலவை குகையின் மேற் கூரையில் சொட்டுச்சொட்டாக அரும்பி, பாறைகளாக வளரத் துவங்குகின்றன. சிறிய கம்பியாக வளரத் தொடங்கி மெல்ல மெல்ல பக்கத்தில் உள்ள கம்பிகளுடன் ஒன்றிணைந்து மிகப்பெரும் பளிங்குப் பாறைகளாக உருப்பெறுகிறது. ஏழு நிலைகள் கொண்ட இந்த குகையின் ஐந்து நிலைகள் பூமிக்கு அடியில் இருக்கின்றன. மற்றைய இரண்டு நிலைகள் மட்டுமே வெளியே தெரிகின்றன. ஓன்க்ஸ் (ONYX) எனப்பெயர் கொண்ட இப்பாறைப் படிமங்கள், ஆண்டுகள் ஆக ஆக பிரம்மாண்ட வடிவமும் பரிணாமமும் பெற்று காண்போரை பிரம்மிப்பின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன. ஆயிரமாயிரம் விசுவரூப லிங்கங்களாக உருப்பெற்று நிற்கின்றன.

லெஸ்டர் பி. தில் என்ற குகை ஆய்வாளர் 1935-ல் இக்குகை ஐந்து மேற்படிவமும், 26 மைல் நீளமும் உடையதைக் கண்டுபிடித்தார். 1933-ல் இருந்து இது பொதுமக்களின் சுற்றுலாத் தளமாகியுள்ளது.
இந்த இடத்தை ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக்கி, ஒலி, ஒளி காட்சியமைப்பும் ஏற்படுத்தி ஒரு கண் கொள்ளாக் காட்சியாக்கி, தங்கள் வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாத்து வைத்துள்ளனர். இதன் சிறப்பம்சமாக 70-அடி அகலமும் 35 அடி உயரமும் கொண்ட மேடைத் திரை உள்ளது. தேனிலவு இணைகளுக்கான அழகான சிறு அறைகளும் உருவாக்கப் பட்டுள்ளது.
குகையை முழுவதுமாகச் சுற்றிவர சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சுமார் ஒரு மைல் தூரத்திற்கு மேல் உள்ளது. குகையின் ஒரு தனித்துவமான அம்சம் என்றால் அது ஒயின் டேபிள் உருவாக்கம் ஆகும். இது ஒரு அரிய குகை அமைப்பு. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குகை நீருக்கடியில் இருந்தபோது உருவானதாகக் கூறப்படும் திராட்சை போன்ற சிறிய கோளங்கள் உருவாகின்றன. இந்தக் குகை 400 மில்லியன் ஆண்டுகளாக இருந்ததாகக் கூறப்படுவது சுவையான செய்தியாக இருந்தது.
இருண்டு கிடக்கும் குகை மின் விளக்குகளால் பளீரென வெளிச்சம் பெறுகிறது. ஒவ்வொரு இடத்தைக் கடக்கும் போதும் வழிகாட்டி அதை அணைத்துவிட்டு மறுபடி அடுத்த இடத்தில் போய் மின்விளக்கைப் போடுகிறார். திகில் நிறைந்த பயணமான இதில் நீளமும், உயரமுமான பாறைகள் சூழ்ந்திருக்க, குகையைச் சுற்றிலும் சலசலக்கும் நீரின் சத்தமும் சேர்ந்து கொள்கிறது.
மேடாக ஏறும் குகையின் நுழைவாயிலிலேயே மஞ்சள் நிறத்தில் ஒரு பிரம்மாண்டமான பாறைப்படிமம், 35 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடப்பட்டு மெய்சிலிர்க்கச் செய்கிறார்கள்.
அந்த குகைக்குள்ளேயே ஒரு திரையரங்கு போன்ற அமைப்பும் உள்ளது. என்ற அதில் ஒரு திரைப்படக் காட்சியும் நடக்கிறது. கும்மென்ற இருண்ட குகை வெளியில் பளீரென விளக்கு எரிந்து, இதயத் துடிப்பை ஒரு சில நொடிகள் நிறுத்தி வைத்துப் பின்னர் வானுக்கும் பூமிக்கும் நெடிதுயர்ந்து நிற்பது போல் 70 அடி உயரம், 60அடி அகலமும், 35 அடி தடிமனும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான வைரப் பாறை தக தகவென மின்னிக் கொண்டிருந்த அதன் வயது 70 மில்லியன் வருடங்கள் என்றது ஆச்சரியத்தின் உச்சமாக இருந்தது.
செயின்ட் லூயிசிலிருந்து மேற்கு நோக்கி சுமார் 60 மைல் தொலைவில் அமைந்துள்ள இங்கு பயிற்சி பெற்ற வழிகாட்டிகளால், 15 முதல் 20 பார்வையாளர்கள் கொண்ட குழுக்களாக அமைத்து அழைத்துச் செல்லப்படுகிறது.
- ஆத்ம விசாரம் கை கூடிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமயம் தான்.
- ஆன்மிக அன்பர்களுக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
குடும்பத்தைத் துறந்த துறவியர்க்குக் குடும்பமே இல்லை என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்தைத் துறந்தார்களே தவிர, மற்றபடி சமுதாயமே அவர்கள் குடும்பம்தான்.
அதனால்தான் தன்னலம் நீக்கிப் பொது நலத்தோடு வாழும் துறவியர் எழுத்தாளர்களாகப் பரிணமிக்கும் போது அந்த எழுத்து மகத்துவம் நிறைந்ததாக மாறி விடுகிறது. சமுதாயத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இருபெரும் இதிகாசங்களை எழுதிய வால்மீகியும் வியாசரும் துறவியரே. அவர்கள் சமஸ்கிருதத்தில் எழுதிய துறவியர்.
தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார் போன்றோர் தமிழில் எழுதிய துறவியர். மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி.
இந்த வரிசையில் திருவண்ணாமலையில் வாழ்ந்த ஸ்ரீரமணர் தமிழில் எழுதிய துறவி. அவர் பற்பல உன்னதமான தமிழ் நூல்களை இயற்றியுள்ளார்.
`உபதேச உந்தியார், உள்ளது நாள்பது, ஏகான்ம பஞ்சகம், ஆன்ம வித்தை, அட்சர மண மாலை, அருணாசல அஷ்டகம், அருணாசல நவமணிமாலை, பகவத் கீதாசாரம்` என்றிப்படித் தலைப்புகள் அமைந்து ரமணரால் இயற்றப்பட்ட நூல்கள் ஒவ்வொன்றும் உயரிய ஆன்மிகச் சிந்தனைகளைத் தாங்கியுள்ளன.
ஆதிசங்கரரின் `தட்சிணா மூர்த்தி ஸ்தோத்திரம், ஹஸ்தா மலக ஸ்தோத்திரம்` போன்ற சமஸ்கிருத நூல்களையும் ரமணர் அழகிய தமிழில் ஆக்கித் தந்துள்ளார்.
ரமணர் பேசியது குறைவு என்றாலும் ஆன்மிக நெறியில் எவ்விதம் முன்னேறுவது என்பது பற்றித் தமது பற்பல சிந்தனைகளை எழுத்திலும் பல நேரங்களில் சீடர்களுடனான பேச்சிலும் பதிவு செய்துள்ளார்.
அவற்றின் முக்கியத்துவம் கருதிச் சீடர்கள் பலர் அவற்றை உடனுக்குடன் குறித்து வைத்துள்ளனர். ஸ்ரீரமணரின் சிந்தனைகள் இன்றும் ஆன்மிக அன்பர்களுக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
`மூச்சின் ஓட்டத்தை மனத்தால் உற்று நோக்கிக் கொண்டிருந்தால் மனம் கட்டுப்படும். அவ்வாறான நிலைத்த கண்காணிப்பு நமது மூச்சை உறுதிப் படுத்தும். மூச்சை நெறிப்படுத்தினால் போதும். நம் மனம் வலையில் பிடிபடும் பறவை போல அமைதியாகும். மூச்சுக் காற்றும் மனமும் ஒரே சக்தியின் இரு கிளைகள் போன்றவை' என்பது ஸ்ரீரமணர் கருத்து.

ஸ்ரீரமணரின் ஆன்மிகச் சிந்தனைகள் பலவும் மனத்தை மையமாகக் கொண்டு அதை உற்று நோக்கி ஆராய்பவை. உளவியல் விஞ்ஞானி போலச் செயல்பட்டு மனித மனம் தொடர்பான பல உண்மைகளைக் கண்டு பிடித்துக் கூறியுள்ளார் ரமணர்.
`மனம் என்பது ஓர் அதிசய சக்தி. அதுவே பற்பல நினைவுகளைத் தொடர்ந்து தோற்று விக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்த்தால் மனம் என்று தனியாய் ஒரு பொருள் இல்லை என்பது உறுதிப் படுகிறது. நம் நினைவுகளின் தொகுப்பே நமது மனம் எனப்படுகிறது.
மனம் அளவிறந்த நினைவுகளால் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது. அந்தத் தன்மையால் அது பெரிதும் பலவீன மடைகிறது. நினைவுகள் அடங்க அடங்க மனம் ஒருமைப்பட்டு வலிமையை அடைகிறது. அத்தகைய நினைவுகள் அடங்கி விட்ட ஒருமுகப்பட்ட மனத்திற்கு ஆத்ம விசாரம் எளிதாய் சித்திக்கும். ஆத்ம விசாரம் கை கூடிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமயம் தான்.
மந்திரங்களைச் சொல்லும்போது முழுமையான மன ஒருமைப்பாட்டுடன் இடைவிடாது சொல்லவேண்டும். அப்படிச் சொல்வதால் கட்டாயம் மனம் அடங்கும். பின் மனம் மந்திரம் மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும். ஆத்ம விசாரமே தவம். ஆத்ம விசாரமன்றிப் பிறிதொரு தவமில்லை.
யோகம், தவம், மந்திரம் எல்லாமே தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். ஆன்மிக நெறியில் தன்னை அறிதல் என்பது மிக முக்கியம். தன்னைச் சரியாக அறிந்து கொண்டாலன்றி ஆன்மிகத்தில் முன்னேற இயலாது.
என்றிப்படியெல்லாம் ஒரு குருவுக்கே உரிய உள்ளார்ந்த ஞானத்துடன் தான் சொல்ல வரும் சிந்தனைகளைத் தெள்ளத் தெளிவாய்த் தெரிவிக்கிறார் ஸ்ரீரமணர்.
அவர் சொல்லிச் சென்றிருக்கும் மகா வாக்கியங்களை ஒருமுறை படித்துவிட்டுக் கடந்துவிட முடியாது. அவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பலமுறை யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.
ஸ்ரீரமணர் அதிகம் மவுனம் பழகியவர் எனச் சொல்லப்படுகிறது. பாதாள குகையில் நெடு நாள் மவுனத்தில் தானே அவர் தவமிருந்தார்?
ஆனால் உண்மையில் ரமணரின் மவுனம் எப்படிப்பட்ட மவுனம்? பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்து விட்டால் அது மவுனமாகி விடுமா? மவுனம் என்றால் என்ன என்பது பற்றியும் ஸ்ரீரமணர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
`மவுனமாக இருப்பது நல்லதுதான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் பல்வேறு நினைவுகளில் ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அத்தகைய மவுன விரதத்தால் எந்தப் பயனும் இல்லை. அது உண்மையான மவுன விரதம் அல்ல' என்கிறார் அவர். வாயளவில் மட்டுமல்லாமல் மனத்தளவிலும் எந்த நினைவுமில்லாமல் மவுனம் பழகவேண்டும் என்கிறார்.
பணிவு மிக நல்லது. பணிவு வர வர ஒருவன் ஆன்மிக ரீதியாக முன்னேறுகிறான் என்று பொருள். அதுசரி. பணிவு வர வரவேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்? அதற்கும் விளக்கம் தருகிறார்.
`இறைவன் ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட அவனுடைய கருவிகளே. இதை ஒவ்வொருவரும் உணரும்போது தானாகப் பணிவு வராமல் போகாது.` என்கிறார்.
`குருவின் அருட்பார்வையில் பட்டவர் அவரால் ரட்சிக்கப் படுவாரே அன்றி ஒருநாளும் கைவிடப்பட மாட்டார்' என்பது ரமணரின் வாசகம்தான்.
அப்படியானால் குருவின் திருவடி சரணம் என எண்ணி நாம் எந்தச் செயலும் செய்யா திருக்கலாமா? அப்படி இருக்கலாகாது என்கிறார்.
`குருவின் திருவடியைச் சரணடைந்தாலும் ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே குரு காட்டிய வழிப்படி நடந்து முக்தியடைய வேண்டும். அதுதான் முக்திக்கான வழி` என்கிறார்.
நாம் நமக்கான மகிழ்ச்சியை நமக்கு வெளியே தேடுகிறோம். ஆனால் நிரந்தரமான மகிழ்ச்சி என்பது ஒருபோதும் வெளியில் இருந்து கிட்டாது.
`மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று' என அறுதியிட்டுக் கூறுகிறார்.
விதியை ரமணர் ஒப்புக் கொள்கிறார்.
`விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. இந்த வாழ்க்கையில் நன்மை வந்தால் ஆர்ப்பரிக்கா மலும் தீமை வந்தால் ஒரே யடியாய்த் துவண்டு போகாமலும் இருக்க ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது. பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனத்தில் சுகமோ கவலையோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் மனம் சலனமின்றி உள்ளது.`
என்றெல்லாம் தம் சிந்தனைகளை அடியவர்களிடம் பதிவு செய்துள்ளார் ஸ்ரீரமணர்.
உலகின் முக்கியப் பிரமுகர்களெல்லாம் அவரைத் தேடித் திருவண்ணாமலை வந்தார்கள். அவர் முன்னிலையில் தங்களுக்கு நிம்மதி கிடைப்பதை உணர்ந்தார்கள்.
தம்மைத் தேடி எத்தனை பெரிய பிரமுகர்கள் வந்தாலும் அதனால் ஸ்ரீரமணர் மனம் பாதிக்கப்பட்டதில்லை. பகட்டு கர்வம் போன்ற வார்த்தைகளுக்கு அவர் அகராதியில் இடமே இல்லை.
ஒருமுறை ரமணாஸ்ரமத்தில் அன்பர்கள் ஏற்பாட்டில் ஒரு பெரிய பூஜை நடந்தது. அதன் நிறைவில் அனைவருக்கும் அன்னதானமும் ஏற்பாடாகியிருந்தது.
பல இடங்களில் இருந்து வந்த பல முக்கியப் பிரமுகர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டார்கள். அவர்களில் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், வெளிதேசத்தவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள்.
ஆனால் அன்னதானம் நடைபெறும் நேரத்தில் அந்த இடத்தில் நெருக்கடி அதிகமாகியது. பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் கிடுகிடுவென்று பற்பல பரதேசிகள் விவரமறியாமல் வந்து அமர்ந்து விட்டார்கள்.
ஆசிரம நிர்வாகி திடீரென நிகழ்ந்த இந்தக் களேபரத்தைக் கண்டு திகைத்தார். பிரமுகர்களுக்கு அங்கீகாரம் தரவேண்டியது முக்கியமல்லவா? இப்போது என்ன செய்வது? அவர்களுக்கான இருக்கையில் பரதேசிகள் வந்து அமர்ந்திருக்கிறார்களே?
பரதேசிகளிடம் அவர்களுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கிறது என்று எடுத்துச் சொல்லி அவர்களை அங்கு செல்லுமாறு வேண்டினார் நிர்வாகி.
பரதேசிகள் இங்கிதம் அறிந்தவர்கள். மறுபேச்சுப் பேசாமல் தாங்கள் தவறுதலாய் வந்துவிட்டதாய்ச் சொல்லி, உடனே விலகி கிழக்குப் பந்தலுக்குச் சென்று அங்கே உணவு உண்ண வரிசையில் அமர்ந்துவிட்டார்கள்.
அன்னதானத்தைத் தொடங்கும் முன் எப்போதும் ஸ்ரீரமணரிடம் ஆசி பெறுவது நிர்வாகியின் வழக்கம். ரமணரைத் தேடினால் அவரை எங்குமே காணோம்.
நிர்வாகி தேடித் தேடிச் சோர்ந்து போனார். இறுதியில் ரமணரையே பிரார்த்தித்து அவர் இருக்கும் இடத்தைத் தமக்குக் காட்டியருளுமாறு வேண்டினார்.
பின்னர் ஸ்ரீரமணர் கிழக்குப் பந்தலில் பரதேசிகளோடு பரதேசியாய் வரிசையில் சாப்பிட அமர்ந்திருப்பதை அவர் கண்டுபிடித்தார். அவர் மனம் பதறியது.
`சுவாமி, ஏன் இங்கு வந்து அமர்ந்தீர்கள்? இப்படிச் செய்யலாமா? உங்கள் இருப்பிடம் இது வல்லவே?` எனக் கண்ணீருடன் வினவினார்.
`நானும் பரதேசி தானே? நீங்கள்தானே பரதேசிகளுக்குக் கிழக்குப் பந்தல் வரிசை என்று சொன்னீர்கள். நீங்கள் அறிவுறுத்தியபடி எனக்குரிய வரிசை இதுதான்! அதனால்தான் உங்கள் சொல்படி நான் இங்கு வந்து உட்கார்ந்தேன்!` என்று முகத்தில் எந்தச் சிணுக்கத்தையும் காட்டாமல் சாந்தமாய் பதிலளித்தார் ஸ்ரீரமணர்.
பிரமுகர்களுக்குக் கூடுதல் மதிப்பளித்து பரதேசிகளை ஒதுக்கியது தவறு என்பதை நிர்வாகியின் மனம் புரிந்துகொண்டது. உலகில் எல்லோரும் பிரமுகர்களே என்பதை அவர் அறிந்துகொண்டார். ஸ்ரீரமணரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு வேண்டினார் அந்த நிர்வாகி.
ஸ்ரீரமணர் வாழ்வில் இதுபோல் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. ரமணர் தாம் எழுதியது போலவும் பேசியது போலவும் வாழ்ந்தவர். தம் ஓயாத தவத்தால் கடவுளென்றே பலரால் கருதப்பட்டவர், இன்றும் கருதப்படுபவர் பகவான் ஸ்ரீரமணர்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.
- சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர்.
கீழ்ப்படிதல் என்னும் பண்புக்குணம் நிறைந்த அன்பின் வாசகர்களே!
வணக்கம்.
குடும்பத்தில், வளரும் பிள்ளைகளிடத்திலும், கல்விக்கூடங்களில், பயிலும் மாணவர்களிடத்திலும், அலுவலகங்களில், பணிபுரியும் பணியாளர்களிடத்திலும் நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடிய அருங்குணம் 'கீழ்ப்படிதல்' ஆகும். நாட்டில் ஆட்சியாளர்களால் வகுக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது ஒவ்வொரு சமூக மனிதனின் கடமையுமாகும்.
கீழ்ப்படிதல் என்பதே மரபைப் பேணுகிற, மரபைக் கடைப்பிடிக்கிற, மரபுவழி நடக்கின்ற நேர்மையான வழியாகும். "மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்!" என்கிற தொல்காப்பிய நூற்பா, மனிதன் மரபைப் பின்பற்றி வாழவில்லையென்றால், வாழ்க்கைமுறையே கந்தர கோலம் ஆகிப்போகும் என எச்சரிக்கிறது; மரபைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
காட்டுமிராண்டி வாழ்வில் இருந்து மனிதன் படிப்படியாக மீளத்தொடங்கி, நாகரிக வாழ்வியலுக்குள் புகுந்து சிறப்படைந்ததற்குக் கீழ்ப்படிதலே முக்கியக் காரணம். இயற்கைக்குக் கட்டுப்பட்டு உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. உலகச் சுழற்சிக்கேற்பக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பருவநிலைக்கு ஏற்றவாறு மனித வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாற்றம் பெறுகின்றன.
இரவு, பகல், மழை, வெய்யில், காற்று, புயல், மேடு, பள்ளம், மலை, கடல், வயல், பாலைவனம், ஆறு-வெள்ளம் என நடைமுறை வாழ்வியலில் தாம் காணும் முரண்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப, இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.
காலை எழுவதில் தொடங்கி இரவு துயில்வது வரை, நேரத்திற்குக் கீழ்ப்படியக் கற்றுக் கொள்பவர்களே உழைப்பில் சிறந்த வெற்றியாளர்கள். சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து செல்பவர்களால் மட்டுமே சரியான இலக்கைச் சரியான நேரத்தில் சென்று அடைய முடியும். அலுவலகத்திலும் அவ்வப்போது மேலதிகாரிகளும் முதலாளிகளும் விதிக்கும் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே உற்பத்தியும் பணியும் எதிர்பார்த்த சிறந்த நிலையை எட்டும்.
கீழ்ப்படிதல் என்பது ஒருவகை ஒழுக்கம். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு செயலின் வெற்றிக்கு நிர்வாகம் விதிக்கிற விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனாலும் அதனைக் கடைப்பிடிப்பதில் ஓர் இலகுத் தன்மை இருக்க வேண்டும்.
ஒரு தனியார் தொழிற்சாலை. உள்ளே வாசலைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் ஓர் இளைஞர் நின்று தம் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலைக்குள் காரில் நுழைந்த ஆலையின் முதலாளி, இளைஞர் தம் அடித்துக் கொண்டிருப்பதைக் காரின் கண்ணாடிக் கதவை இறக்கிப் பார்த்தார். இளைஞர் இவரைக் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. கடும்கோபத்தோடு தொழிற்சாலையின் தன் அறைக்குள் நுழைந்து, உள் தொலைபேசி மூலமாக மேனேஜரை அழைத்தார்.

"கேட்டைத் தாண்டி உள்ளே வரும் வழியில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒருவன் தம் அடித்துக் கொண்டிருக்கிறான்.
தொழிற்சாலை வளாகத்திற்குள் புகைபிடிக்கக் கூடாது என்று எத்தனைமுறை சொல்வது?.நம் தொழிற்சாலையில் விதியும் இருக்கிறது!. நீங்கள் நேராகச் சென்று, அவனிடம் எந்த அறிவுரையும் கூறாமல், அவனது பேரை மட்டும் கேட்டு, உடனடியாக அவனது கணக்கை முடித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.
சரி எனச் சொல்லிவிட்டு வெளியே சென்ற மேனேஜர் அடுத்த பதினைந்து நிமிட நேரத்தில், முதலாளி அறைக்குள் வந்து, "நீங்கள் சொன்னதைச் செய்துவிட்டேன் முதலாளி!" என்று பணிவாகச் சொன்னார். "ரொம்பச் சரி!. கீழ்ப்படிதல் இல்லையென்றால் இதுதான் நடக்கும் என்று மற்ற தொழிலாளர்களுக்கு இது படிப்பினையாக இருக்க வேண்டும்!" என்றார் முதலாளி.
ஆரம்பத்தில் நாம் பார்த்த அந்த மரத்தடி இளைஞர், இப்போது கேட்டில் இருந்த செக்யூரிட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார், " என்னங்க தொழிற்சாலை இது?; நான் என்னோட நண்பர் இங்க வேலை பார்க்கிறவரைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்து ஒரு ஓரமா நின்னு தம் அடிச்சுட்டு இருந்தேன்.
அப்ப, யாரோ ஒருத்தர் வந்து என்னோட பேரு என்ன?ன்னு கேட்டார். கூட வா!ன்னு கூட்டிட்டுப் போயி! ஏதோ ஒரு பெரிய நோட்டுல கணக்குப் போட்டு, அதில ஒரு கையெழுத்தையும் வாங்கிட்டுக், கையில் ஒரு கவரையும் குடுத்து அனுப்பிச்சு விட்டுட்டாரு. வெளியில் வந்து பார்த்தா கவர்ல 52 ஆயிரம் ரூபாய் பணம் இருக்குது!. எனக்கு ஒன்னும் புரியலிங்களே?" என்றார். செக்யூரிட்டியோ அவரை விடப் புரியாமல் குழம்பிப்போய் நின்றார்.
இப்போது உங்களுக்குக் கொஞ்சம் புரிந்திருக்கும். தொழிற்சாலைக்குள் வந்து விதிமீறல் செய்திருப்பது வெளிஆள் என்பது தெரியாமல் முதலாளிக்குக் கோபம் வந்திருக்கிறது. ஆனாலும் ஆலை மேலாளரின் கண்மண்தெரியாத கீழ்ப்படிதல் தன்மை, இளைஞர் ஆலைத் தொழிலாளிதானா? என்பதைப் பரிசீலிக்காமலேயே, அந்தப்பெயரில் உள்ள யாரோ ஒருவரின் கணக்கை முடிக்க வைத்திருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டவர் காரணம் தெரியாமல் விழிப்பதற்கு இதுதான் காரணம்.
கீழ்ப்படிதல் என்றால், விதி என்று இருந்தால் எந்தக்கேள்வியும் கேட்காமல் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதுதான். ஆனால் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படும் இயலாமை, சர்வாதிகார மனப்பான்மையை உருவாக்கி விடுகிறது. அதனால்தான் அந்த ஆலை முதலாளிக்குத் தொடர்பில்லாத நபர் மீது கோபம் வந்துவிட்டது. ஆனாலும், பொறுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய மேலாளர், இங்கு அவசரகதியான கீழ்ப்படிதலோடு நடவடிக்கை எடுத்ததற்கு முதலாளியின் கோபம் காரணமாகிவிட்டது.
வீட்டிலோ, வெளியிலோ விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டியது அனைவருக்குமே பொருந்தும். இதில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு என்பது கிடையவே கிடையாது. கீழ்ப்படிதலே அனைத்தையும் சுமூகமாக்கிவிடும் தாரக மந்திரம்.
சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர். இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். அப்போதுதான் குடியாட்சித் தத்துவம் சிறப்பாகக் கோலோச்ச முடியும்.
அலுவலகங்களில், ஒவ்வொருவருக்கும் அவரவரின் பணியளவைப் பொறுத்து அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பணிபுரியும் தருணங்களில் தத்தமது கடமைத் தகுதிக்கு ஏற்றவாறு விதிகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிதலோடு நடந்துகொள்வதே பணியாளருக்கு உரிய நடத்தை விதிகளாகும்.
நாம் ஓட்டும் வாகனங்களில், கியர், கிளட்ச், ஆக்சிலேட்டர், பிரேக், ஸ்டீயரிங் என ஐந்து வகையான அமைப்புகள் இருக்கின்றன. வண்டியை முன்னே நகர்த்தி ஓட்டுவதற்கும், பின்னே நகர்த்திச் செலுத்துவதற்கும் இந்த ஐந்தையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. கீழ்ப்படிதல் உணர்வோடு, கைகளையும் கால்களையும் கொண்டு இந்த ஐந்தையும் அவ்வவற்றிற்குரிய விதிமுறைகளோடு பயன்படுத்தினால், வாகனத்தை விரும்பிய இடத்திற்கு, விரும்பிய வேகத்தில், விபத்துகள் ஏதுமின்றி கொண்டு செலுத்தலாம். இல்லையென்றால் விளைவுகள் எதிர்மறையானவையாகவே அமையும்.
சாலைகள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லுகின்ற சந்திப்புகளில், சிவப்பு, மஞ்சள், பச்சை எனும் குறியீடுகள் மாற்றி மாற்றி ஒளிர்கின்றன. இவற்றின் தன்மைகளுக்கேற்ப நாம் சாலைகளைக் கடந்தால் விபத்துகள் ஏற்படாது; போக்குவரத்து நெருக்கடிகளும் உண்டாகாது. எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்.
வீட்டில் கணவன் மனைவி இருவரில் யார் பெரியவர்? என்கிற ஆணவம் தலைதூக்கத் தொடங்கினால் கீழ்ப்படிதல் தொலைந்துபோகும்; இல்லற நெறிமுறைகளும் காணாமல் போகும். பெற்றோர்கள் கூறுவதைப் பிள்ளைகள் கேட்க வேண்டும்; பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் முக்கியமான தருணங்களில் பிள்ளைகளின் ஆலோசனைகளைப் பெற்றோர்களும் கேட்க வேண்டும். இங்கே கீழ்ப்படிதல் என்பது, அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்ப நடந்துகொள்வது. அதிகார மமதையோடு நடந்துகொள்ள எண்ணினால் தவறுகளே தாராளமாகிவிடும்.
வெளிநாட்டில், ஒரு வீட்டில்,சாப்பாட்டு மேசையில் இரவு உணவு பரப்பப் பட்டிருந்தது. வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சிறுவர்களான மகன், மகள் ஆகியோர் ஆளுக்கொரு தட்டோடு மேசை அருகில் வந்தனர். உணவுக்கு முன் சூப் சாப்பிடுவதற்காக ஆளுக்கொரு கப்பை எடுத்து சூப்பை ஊற்றி நிரப்பிக்கொண்டு கரண்டி மூலம் அருந்தத் தொடங்கினர்.
அப்பாவுக்கு 'ஹாய்!' சொல்லிக்கொண்டே அருகில் வந்த சிறுவனான மகன், "டாடி! இந்தக் கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?" என்று கேட்டான். அப்பாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது." வாயை மூடிக்கொள்! சாப்பிட வந்தால் சாப்பிடும் வேலையை மட்டும் பார்! தேவையற்ற பேச்சுக்களைப் பேசாதே!" எச்சரித்தார் அப்பா. நமக்கேன் வம்பு எனக் கீழ்ப்படிதலோடு வாயை மூடிக்கொண்டான் மகன்.
டின்னர் முடிந்தது. எல்லாரும் மகிழ்ச்சியாக வரவேற்பறைக்கு வந்து ஐஸ் கிரீம் சுவைத்துக் கொண்டிருந்தனர். இப்போது மகனை அன்போடு அருகில் அழைத்தார் அப்பா. " சாப்பிடும்போது அருவருப்பான கரப்பான் பூச்சி போன்ற விசயங்களைப் பேசக்கூடாது! அதனால் தான் திட்டினேன்!. சரியா?. இப்போது கேள்! கரப்பான் பூச்சி குறித்த உனது கேள்வி என்ன?".
"அதை விடுங்கள் அப்பா! அது முடிந்துபோய் விட்டது. இப்போது வேண்டாம்!" என்றான் மகன். " சும்மா சொல்! என்ன சொல்ல வந்தாயோ சொல்!" என்று வற்புறுத்தினார் அப்பா!. " அது வேறு ஒன்றுமில்லை அப்பா! நீங்கள் சூப்பைச் சுவைத்துக் கொண்டிருந்த கப்பில் ஒரு இறந்த கரப்பான் பூச்சி மிதந்து கொண்டிருந்தது! அதைச் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லதா? என்பதைத்தான் கேட்க முயற்சித்தேன்! வேறு ஒன்றுமில்லை!".
அவ்வளவுதான் பையன் சொல்லி முடிப்பதற்குள் பாத்ரூமுக்குள் ஓடிய தந்தை சாப்பிட்ட உணவு அனைத்தையும் வாஷ்பேசினில் வாந்தியெடுத்துவிட்டார். அளவுக்கதிகமான அதிகாரத் தன்மையும், நிலைமைக்கு ஒத்துப் போகாத கீழ்ப்படிதலும் எந்த நிலைமைக்குக் கொண்டுபோய் விடும் என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த உதாரணம்.
ஒவ்வொரு கீழ்ப்படிதலிலும் ஓர் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. அந்த அதிகாரத்தின் நியாயத் தன்மையைப் பொறுத்தே கீழ்ப்படிதலுக்கான பலன் நமக்கு வந்து சேர்கிறது. ஆண்டவனை முழுமையாக நம்புகிறவர்கள் அவனுக்கு எதிர்ப்பில்லாத கீழ்ப்படிதலைச் செய்கிறார்கள்.
அரசனை மக்கள் நம்புவதும், ஆசிரியரை மாணவர் நம்புவதும், நிர்வாகத்தினரைப் பணியாளர் நம்புவதும், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புவதும் முழுமையான கீழ்ப்படிதலுக்கு வழி வகுக்கும்.
ஆம்!
நாம் யாரை நம்பிக் கீழ்ப்படிகிறோமோ இல்லையோ…
முதலில் நம்மை நம்பி நமக்கு நாமே கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்!
தொடர்புக்கு: 9443190098.






