search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கெடுவான் கேடு நினைப்பான்!
    X

    கெடுவான் கேடு நினைப்பான்!

    • பாஞ்சாலி செய்த உதவிக்குக் கைமாறு செய்ய நெடுநாளாய்க் காத்திருந்தானாம் கண்ணபிரான்.
    • "அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்" என்பதே அந்த விடுகதை.

    கவுரவர் சபையில் சூதாட்டத்தின்போது பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தை நாம் அனைவரும் அறிவோம். அப்போது கவுரவர்களில் ஒருவனும் துரியோதனனின் தம்பியுமான துச்சாதனன் பாஞ்சாலி துகிலை உரிய முற்பட்டான்.

    கண்ணில்லாத திருதராஷ்டிரனும் கண்ணைக் கட்டிக்கொண்ட காந்தாரியும் அமர்ந்திருந்த சபைதான் அது. பீஷ்மர் போன்ற சான்றோர் பலர் சபையில் இருந்தும்கூட, பாஞ்சாலியின் துகிலுரிதல் என்ற இழிசெயலைத் தடுக்க முடியவில்லை.

    மாவீரர்களான பாஞ்சாலியின் கணவர் ஐவரும் சூதாட்டத்தில் தோற்று துரியோதனனின் அடிமைகளாய்ச் செயலற்று அமர்ந்திருந்தார்கள்.

    அத்தனை பேரும் கைவிட்டார்களே? திரவுபதி என்ன செய்வாள் பாவம்?

    அவள் மனிதர்கள் கைவிட்டதால் தன் இஷ்ட தெய்வமான கண்ணக் கடவுளைச் சரணடைந்தாள். அவள் பக்தியுடன் கண்ணனின் அருள்வேண்டி அவனைக் கதறி அழைக்கலானாள்.

    தன் இரு கரங்களையும் உயர்த்தி, அவள் முற்றிலுமாகக் கண்ணனைச் சரணடைந்ததும், கண்ணன் துவாரகையில் இருந்தபடியே அவளுக்கு ஆடை தந்து அருள்புரிந்தான் என்று அந்த வியத்தகு நிகழ்வைச் சொல்கிறது மகாபாரதம்.

    துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் அப்போது அவள் ஆடை மேலும் மேலும் வளர்ந்ததையும் மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:

    `வையகம் காத்திடுவாய் - கண்ணா

    மணிவண்ணா என்றன் மனச்சுடரே!

    ஐய நின் பதமலரே - சரண்

    ஹரி ஹரி ஹரி என்றாள்!

    பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல

    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

    தையலர் கருணையைப் போல் - கடல்

    சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்

    கண்ணபிரான் அருளால் - தம்பி

    கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

    வண்ணப் பொற் சேலைகளாம் - அவை

    வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

    எண்ணத்தி லடங்காவே - அவை

    எத்தனை எத்தனை நிறத்தனவோ!

    பொன்னிழை பட்டிழையும் - பல

    புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்

    சென்னியிற் கைகுவித்தாள் - அவள்

    செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே

    முன்னிய ஹரிநாமம் - தன்னில்

    மூளுநற் பயனுல கறிந்திடவே

    துன்னிய துகில் கூட்டம் - கண்டு

    தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!`

    கண்ணன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்துக் காப்பாற்றியது வியப்புத்தான். அவன் குளித்துக் கொண்டிருந்த கோபிகைகளின் ஆடைகளைத் திருடிய திருட்டுக் கண்ணன் அல்லவா?

    ஆடை திருடுபவன், தன் இயல்பான திருட்டுக் குணத்தை விட்டுவிட்டு, பாஞ்சாலிக்கு ஆடையைக் கொடுக்க முன்வந்தது ஏன்? அதுபற்றியும் ஒரு நாட்டுப்புறக் கதை பேசுகிறது.

    ஒருமுறை கண்ணன் கத்தியால் பழம் நறுக்கிக் கொண்டிருந்தான். தவறுதலாக அந்தக் கத்தி கண்ணன் கையில் பட்டுவிட்டது. கை விரலில் இருந்து குருதி பெருகத் தொடங்கியது.

    அங்கே கூடியிருந்த பலர் எதுவும் செய்யாமல் அனுதாபத்தோடு கண்ணனைப் பார்த்தவாறு இருந்தனர்.

    ஆனால் ராஜ பத்தினியாகிய திரவுபதி பதறிப்போனாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. கண்ணன் விரலில் குருதி வழியலாமா?

    தான் கட்டியிருந்த புதுப் பட்டுப்புடவையின் முந்தானையைச் சடாரென்று கிழித்தாள் அவள். உடனே அந்தப் பட்டுத் துணியைத் தண்ணீரில் நனைத்துக் கண்ணன் விரலில் கட்டுப் போட்டுக் குருதி பெருகுவதைத் தடுத்தாள்.

    காயம் உடனே ஆறிவிட்டது. அதுசரி. ரத்தக்காயம் எப்படி உடனே ஆறும்? காயமாக இருந்தால்தானே உடனே ஆறாது? அது காயமல்ல. மாயம்!

    திரவுபதிக்குத் தன்மேல் உள்ள அளவற்ற பாசத்தை உலகறியச் செய்ய வேண்டிக் கண்ணன் செய்த மாயம்!

    பாஞ்சாலி செய்த உதவிக்குக் கைமாறு செய்ய நெடுநாளாய்க் காத்திருந்தானாம் கண்ணபிரான். சாதாரணக் கடனுக்கு வட்டி வளர்வதுபோல், கண்ணனின் நன்றிக்கடனுக்கும் காலம் செல்லச் செல்ல வட்டி மேலே மேலே வளர்ந்து கொண்டே இருந்தது!

    அந்த நன்றிக் கடனைத் தீர்க்கும் வாய்ப்பு துரியோதனன் சபையில் வாய்த்தது. ஒரே ஒரு சின்னப் பட்டுத்துணிக்குப் பிரதியாக மலை மலையாய்ச் சேலைகளைக் கொடுத்துத் தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டான் கண்ணன் என்கிறது அந்த அழகிய நாட்டுப்புறக் கதை.

    பாஞ்சாலி துகிலுரிதல் தொடர்பாக இன்னொரு நாட்டுப்புறக் கதையும் உண்டு. கண்ணன் ஒருமுறை குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது அவன் இடுப்புத் துணியை ஒரு மீன் இழுத்துக் கொண்டு சென்று விட்டதாம்.

    குளத்து நீரில் கைகளால் எவ்வளவோ துழாவிப் பார்த்தும் ஆடை போன இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீனாக அவதாரம் எடுத்த திருமால் அவன். ஆனால் ஒரு மீன் இழுத்துச் சென்ற ஆடையை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதை என்ன சொல்ல! ஆடையில்லாமல் எப்படிக் கரையேறுவது? கண்ணன் தவித்துக் கொண்டிருந்தானாம்.

    அந்த வழியே பலர் சென்றார்கள். கண்ணனையும் கண்ணன் குளித்துக் கொண்டிருந்த குளத்தையும் பார்த்துக் கொண்டே தான் சென்றார்கள். ஆனால் யாரும் கண்ணனின் இக்கட்டை உணரவுமில்லை. உணர்ந்து உதவ முன்வரவுமில்லை.

    அப்போது அவ்வழியே வந்தாள் பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி. கண்ணனின் தவிப்பைப் பார்த்துத் திகைத்தாள். யோசித்து நிலைமையை உடனே புரிந்துகொண்டாள். தன் சேலையின் முந்தானையைக் கிழித்துக் குளத்தில் வீசினாள்.

    கண்ணன் அவள் சேலைத் துணியைத் தன் இடுப்பில் சுற்றிக் கொண்டு கரையேறினான். சம்சாரக் கடலில் மூழ்குபவர்களைக் கரையேற்றும் கண்ணன், அன்று சாதாரணக் குளத்தில் இருந்து கரையேறியது பாஞ்சாலி செய்த உதவியால்தான்.

    தன் மானம் காத்த பாஞ்சாலியின் மானத்தைத் தக்க சந்தர்ப்பத்தில் தான் முன்வந்து காத்தான் கண்ணபிரான் என்கிறது இந்த நாட்டுப்புறக் கதை.

    இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை பற்றிய தத்துவக் கண்ணோட்டத்தை காந்தி விளக்கியுள்ளார்.

    பாஞ்சாலி ஆன்மாவின் உருவகம். பஞ்ச பாண்டவர்கள் ஐம்புலன்களின் உருவகங்கள். வாழ்க்கை என்கிற சூதாட்டத்தில் நூற்றுக்கணக்கான தீய சக்திகளிடம் ஐம்புலன்களும் தங்களை இழக்கின்றன.

    அப்போது ஆன்மா இறைவனைச் சரணடைய, இறைவன் அதன் மானத்தைக் காத்துக் கடைத்தேற்றுகிறார் என்பதன் விளக்கமே மகாபாரதம் என்கிறார் மகாத்மா.

    இந்த மகாபாரத நிகழ்ச்சி பற்றித் தமிழில் ஓர் அழகிய விடுகதை உண்டு. `அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்` என்பதே அந்த விடுகதை.

    அத்தினம் என்ற சொல் சூதாட்டம் நடந்த அஸ்தினாபுரி நகரத்தைக் குறிக்கும். `ஓட்டை` கை என்பது கண்ணன் வாழ்ந்த `துவார` கையைக் குறிப்பிடுகிறது.

    அஸ்தினாபுரிக்கும் துவாரகைக்கும் ஆயிரம் காத தூரம் என்றாலும், பாஞ்சாலி பக்தியை விலையாய்க் கொடுத்து கண்ணன் தந்த சேலையைப் பெற்றுக்கொண்டாள், அதுவும் ஒருவகை வியாபாரம் அல்லவா என வியக்கிறது இந்த அழகான விடுகதை!

    இந்தக் கதை தொடர்பாக, இதன் நீட்சியாக, வேறொரு நாட்டுப் புறக்கதையும் உண்டு.

    துச்சாதனன் பற்றி இழுத்த துணி வளர்ந்து வளர்ந்து தரையில் ஒரு மலைபோல் குவிந்தது. அவையெல்லாம் கண்ணனின் நெசவுத் தறியில் நெய்யப்பட்ட அபூர்வ ஆடைகள் அல்லவா?

    எனவே அவற்றின் எழில் விவரிக்க இயலாததாய் இருந்தது. கடவுள் நெய்த ஆடைகளை மனிதர் நெய்த ஆடைகளோடு ஒப்பிட இயலுமா என்ன?

    அந்த ஆடைகளின் அழகைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள் கவுரவர்களின் மனைவியர் நூறுபேரும். அவற்றைத் தாங்கள் அணிந்துகொள்ள ஆசைகொண்டார்கள். அந்த ஆடைகள் அனைத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு அந்தப்புரம் சென்றார்கள்.

    தாங்கள் ஏற்கெனவே அணிந்திருந்த உடையைக் களைந்துவிட்டு, புத்தம்புதிய சேலைகளை ஆர்வத்தோடு அணிந்து கொண்டார்கள்.

    இந்தப் பளபளக்கும் புதுச் சேலையை சபையில் உள்ள அனைவருக்கும் காட்டும் எண்ணத்தோடு புத்தாடை புனைந்து சபைக்கு வந்தார்கள்.

    அதற்குள் திரவுபதியின் ஆடையை இழுத்து இழுத்துச் சோர்ந்து போனான் துச்சாதனன். யானை பலம் கொண்ட அவன் கையும் வலிக்கத் தொடங்கியது.

    இனியும் இழுக்கத் தன்னால் இயலாது எனக் கருதிய அவன், தளர்ச்சி அடைந்து பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி இழுக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தன் சிம்மாசனத்தில் தொப்பென்று போய் அமர்ந்து நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

    துகிலுரியும் படலம் முடிந்ததை அறிந்த கண்ணன் கலகலவென்று நகைத்தான். துவாரகையில் இருந்தவாறே தன் கையைத் தட்டி உதறினான்.

    அடுத்த கணம் புதிதாய்த் தோன்றிய அத்தனை சேலைகளும் மறைந்தன. திரவுபதி ஏற்கெனவே தன் உடலை மூடியிருந்த பழைய ஆடையோடு காட்சி தந்தாள்.

    அந்தப்புரம் சென்று பழைய ஆடையைக் களைந்து புத்தாடையோடு வந்து நின்ற கவுரவர்களின் மனைவியர் அத்தனை பேரின் ஆடையும் அந்தரத்தில் மாயமாய் மறைந்தது!

    யாரை நிர்வாணப்படுத்த கவுரவர்கள் முயன்றார்களோ அந்தக் கவுரவர்களின் மனைவியர் அனைவரும் நின்ற கதியைப் பார்த்து சபையினர் தங்கள் விழிகளை மூடிக் கொண்டார்கள் என்கிறது அந்த நாட்டுப்புறக் கதை.

    கெடுவான் கேடு நினைப்பான் என்பதையும் தன் வினை தன்னைச்சுடும் என்பதையும் விளக்குகிற கதை இது. நாட்டுப்புற மக்களின் அறநெறி சார்ந்த மனத்தை விளக்கும் கதைகள் இவை.

    பெண்மையை இழிவுபடுத்த முனைபவர்களின் அழிவு நிச்சயம் என்ற உண்மையைத் தான் மகாபாரதம் காலம் காலமாய் போதித்துக் கொண்டிருக்கிறது.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×