என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் ரத்தசோகை நோயும், தீர்வுகளும்
    X

    முதுமையில் ரத்தசோகை நோயும், தீர்வுகளும்

    • அடுத்தபடியாக சாமையும் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்ட சிறுதானியங்களாக உள்ளன.
    • திரிபலையில் சேரும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி அந்த மகத்தான பணியை செய்கின்றது.

    "உடம்பு ரொம்ப அசதியா இருக்கு" என்று முதுமையில் பலர் வருத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அன்றாட வாழ்வியல் பணிகளை செய்வது கூட சிரமமானதாக மாறிவிடுகிறது. அந்த அசதிக்கு சர்க்கரை வியாதி போன்ற நாட்பட்ட நோய்நிலைகள் முக்கிய காரணமாக இருப்பினும், அதிகம் பேர் அவதிப்படும் மற்றொரு நோய்நிலையாக இருப்பது 'அனீமியா' எனும் 'ரத்தசோகை' தான்.

    முதுமையில் உடல் நலம் மட்டுமின்றி மன நலத்திலும் மாற்றத்தை உண்டாக்கக்கூடியது இந்த ரத்தசோகை. முகம் மட்டுமின்றி, உடலும் வெளிறிப்போய், தீவிர நிலையில் இந்நோய் உயிரிழப்பையே ஏற்படுத்தும் இயல்புடையது. அகத்தியர் காலத்திலே அதிகம் காணப்பட்ட இந்த நோய்நிலை 'வெளுப்புநோய்' என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    முதுமையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் பாதிக்கப்படும் நோய்நிலையாக ரத்தசோகை உள்ளது. 'அனீமியா' எனும் 'ரத்தசோகை' இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மட்டுமல்லாது, வளர்ந்து வரும் நாடுகளிலும் பெரும் சவாலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளுத்த முகமும், வெளுத்த நகமும், உடல் சோர்வும், பெருமூச்சு வாங்கலும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

    சத்துக் குறைபாட்டால் உண்டாகும் ரத்தசோகையானது முதுமையில் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் வரக்கூடியது. இது ஒருபுறமிருக்க, முதுமையில் நீரிழிவுக்கு நாட்பட எடுத்துக்கொள்ளும் மெட்பார்மின் மருந்தும், அசீரணம் மற்றும் வாயுத் தொல்லைக்கு காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் அமிலநீக்கி (ஆன்டாசிட்) மருந்துகளும், வைட்டமின் பி-12 குறைபாட்டை உண்டாக்கி ரத்தசோகைக்கு வழிவகுக்கும். ஆகவே மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகளை நாடுவது முதுமையில் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.

    புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்நிலைகளைப் போல, முதுமையில் ரத்தசோகை நோயினை உண்டாக்குவதில் எலும்பு மஜ்ஜை செயலிழப்பும் முக்கிய பங்காற்றுகிறது. காரணம் எலும்பு மஜ்ஜை செல்கள் ரத்த சிவப்பணுக்கள் உண்டாக முன்னோடியாக உள்ளன.

    ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதாலும், உடலில் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவதாலும் ரத்தசோகை நோய் உண்டாகிறது. இன்னும் சில வகை மருந்துகளும் முதுமையில் ரத்தசோகை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

    முதுமையில் உண்டாகும் நாட்பட்ட சிறுநீரக நோயிலும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் சுரக்கும் 'எரித்ரோபோய்டின்' எனும் ஹார்மோன் சுரப்பு குறைவதே அதற்கு காரணமாகின்றது. இந்த சுரப்பு எலும்பு மஜ்ஜைகளில் செயல்பட்டு ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை துரிதமாக்கும். இவற்றின் பற்றாக்குறையால் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைவதால் அதன் மூலமும் ரத்தசோகை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மூக்கிரட்டை கீரையும், திரிபலை சூரணமும் பலன் அளிக்கக்கூடும்.

    அதே போல் நாட்பட்ட கிருமி தொற்றிலும், புற்றுக்கட்டி நோய்நிலையிலும், ஆட்டோ-இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்பு சார்ந்த நோய்நிலையிலும் ரத்தசோகை உண்டாவதால் மருத்துவர் ஆலோசனைப்படி நோயினைக் கணித்து சிகிச்சை மேற்கொள்வது வெளுப்பு நோய் நீங்க வழி வகை செய்யும்.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்


    முதுமையில் அவ்வப்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை செய்து பார்ப்பது மட்டுமின்றி, ரத்தத்தில் இரும்பு சத்தின் அளவும், பெரிட்டின் அளவும் பரிசோதனை செய்து ரத்தசோகை நோய்நிலையை கணிப்பது நல்லது.

    சித்த மருத்துவ தத்துவத்தின் படி நோய்களுக்கு காரணமாக இருக்கும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் பித்த குற்றத்தின் பாதிப்பால் வெளுப்பு நோய் உண்டாவதாக உள்ளது. ஆதலால் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள உணவு முறைகளும், எளிய மூலிகை மருந்துகளும், தாது கலப்புள்ள மருந்துகளும் பித்த பாதிப்பை சரிசெய்து, சோகை நோயின் சோகத்தைப் போக்கி பலனளிப்பதாக உள்ளன.

    சித்த மருத்துவ மூலிகைகளில் முருங்கை இலை, கறிவேப்பிலை, முளைக்கீரை, வெந்தயகீரை, கரிசாலை, பொன்னாங்கண்ணி, சிறுகீரை போன்ற கீரை வகைகளும், கடைச்சரக்குகளில் திப்பிலி, வெந்தயம் ஆகியன ரத்தசோகை நோயைப் போக்குவதில் பலன் அளிப்பதாக உள்ளன. மேற்கூறிய இவைகள் "உணவே மருந்து' என்பதற்கு எளிய உதாரணங்கள்.

    முதுமையில் கிட்டத்தட்ட 34 சதவீதம் பேர் சத்துக் குறைபாட்டால் ரத்தசோகைக்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் பாதி பேருக்கு (50 சதவீதம்) இரும்பு சத்து குறைபாடு தான் காரணம் என்பதால் மேற்கூறிய கீரை வகைகள் நல்ல பலனளிக்கும்.

    முதுமையில் இரும்பு சத்து குறைபாடு உண்டாக, போதிய சத்தான உணவு கிடைக்காமல் போவது முக்கிய காரணமாக உள்ளது. சத்தான உணவு என்றாலே பலருக்கும் நினைவில் வருவது அசைவ உணவுகள் தான். உண்மையில் அதே சத்துக்களைக் கொண்டதாக, நமது பாரம்பரிய உணவு வகைகள் உள்ளன. அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்டதாக சிறு தானியங்களான கம்பு மற்றும் சாமை உள்ளன. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ரத்தசோகைக்கு மட்டுமின்றி சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்டிரால் நிலையில் நல்ல பலன் தரும்.

    முதுமையில் சத்தான உணவு அவசியம் என்பதால் பழங்களை அவ்வப்போது எடுத்துக்கொள்வது நற்பலன் தரும். முக்கியமாக பேரிச்சை, அத்தி பழம், கொய்யா, நெல்லி, மாதுளை, உலர்ந்த திராட்சை, ஆப்பிள், ஆகிய பழங்கள் பெரும் பயனளிக்கும். அல்லது சித்த மருந்துகளான மாதுளை மணப்பாகு, அத்தி பழ மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகிய மருந்துகளை எடுக்கலாம்.

    கீரை வகைகளில் அதிகம் இரும்பு சத்தினை கொண்ட பாலக்கீரையை விட 25 மடங்கு அதிக இரும்பு சத்தினைக் கொண்டதாக உள்ளது முருங்கைக்கீரை. இந்த முருங்கையை கறிவேப்பிலையுடன் சேர்த்து அத்துடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் சீரகம் சிறிது உப்பு சேர்த்து சூப் வைத்துக் குடிக்க ரத்தசோகை நோயில் நல்ல பலன் தரும். அதே போல் கறிவேப்பிலையை பொடி செய்து அவ்வப்போது உணவில் சேர்த்து எடுத்துக்கொள்வது அனீமியாவை விரட்ட உதவும்.

    முதுமையில் ரத்தசோகையைப் போக்க பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவு வகைகளை நாடுவது நல்ல பலனளிக்கும். பாரம்பரிய அரிசி வகைகளில் மாப்பிள்ளை சம்பா, பூங்கார், சிகப்பரிசி, சிவப்பு குருவிக்கார் ஆகிய அரிசி வகைகள் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்டுள்ளதால் இவற்றாலான உணவு வகைகளை சேர்ப்பது நல்லது.

    சிறுதானியங்களில் கம்பு, அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்பு சத்தினை உடையதாக உள்ளதால் கம்பு கொண்டு செய்யப்படும் களி, கூழ், அடை போன்ற உணவு வகைகள் அனீமியாவைப் போக்க பலன் தரும். அதே போல் முதலில் குதிரைவாலியும், அதற்கு அடுத்தபடியாக சாமையும் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்ட சிறுதானியங்களாக உள்ளன.

    உண்மையில் 'குப்பைகீரை' என்று கருதப்படும் முளைக்கீரையும் அதிகப்படியான இரும்பு சத்தினைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எளிமையாக கிடைப்பதால் அதன் மகத்துவம் புரியாமல் இரும்பு சத்து மாத்திரைகளை நாடுவது இயல்பாகிவிட்டது. அசைவ உணவுப் பிரியர்கள் வெள்ளாட்டு கறி, ஈரல், எலும்பு இவற்றை சூப் செய்து குடித்து வர அனீமியாவில் பலன் தரும்.

    மூலிகை மருந்துகள் மட்டுமின்றி இரும்பு தாதுச் சரக்குகளை மையமாகக் கொண்ட சித்த மருந்துகளான அய செந்தூரம், அயகாந்த செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகள் இரும்பு சத்துக் குறைபாட்டால் உண்டாகும் ரத்தசோகையைப் போக்க பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இத்தகைய மருந்துகளை நோய்நிலைக்கு ஏற்றார் போல் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மருத்துவர் ஆலோசனைப்படி எடுப்பதும் நல்லது.

    பொதுவாகவே இரும்பு சத்துள்ள மாத்திரைகளை எடுக்கும் போது மலச்சிக்கல் உண்டாகக்கூடும். முதுமையில் ஏற்படும் மலச்சிக்கலுடன் இரும்பு சத்து மாத்திரைகளால் உண்டாகும் மலச்சிக்கலும் கூடி முதுமையை வாட்டும். அதனை சரி செய்ய இரும்பு சத்துள்ள மாத்திரை எடுத்துக்கொள்ளும் காலகட்டத்தில் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்தினை எடுத்துக்கொள்வது மலச்சிக்கலை போக்க உதவும். அத்துடன் இரும்பு சத்து குடலில் உட்கிரகிக்கவும் உதவும். திரிபலையில் சேரும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி அந்த மகத்தான பணியை செய்கின்றது.

    வைட்டமின் சி உள்ள உணவுகள் மற்றும் பழங்கள் நமது உடலில் இரும்புசத்து உட்கிர கித்தலை அதிகமாக்கும் தன்மை உடையது என்கிறது இன்றைய நவீன அறிவியல். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்த நம் முன்னோர்கள் இரும்புசத்துள்ள அய செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகளை நெல்லிக்காய் சேர்ந்த திரிபலை சூரணத்துடன் உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர் என்பது அறிவியலை விஞ்சும் ஆச்சரியம்.

    நாம் உண்ணும் உணவு குடலில் சாரமாக மாறி அடுத்து, செந்நீர் எனும் ரத்தமாக மாறுவதாக சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. சித்த மருத்துவ கூற்றுப்படி ரத்தம் முதலிய சப்த தாதுக்களை வன்மைப்படுத்த அனைவருக்கும் சத்தான உணவு அவசியம்.

    இன்றைய நவீன அறிவியல் ரத்தசோகை நோயை போக்க உதவும் என்று கூறும் ஜிங்க், மெக்னீசியம், காப்பர், செலினியம் ஆகிய கனிம சத்துக்களும், போலிக் அமிலம் போன்ற எண்ணற்ற வைட்டமின்களும் நம் பாரம்பரியமாக பழகி வந்த உணவு முறைகளில் கணக்கி இல்லாமல் மண்டிக்கிடக்கின்றது. அத்தகைய உணவு முறைகளை நாடுவது முதுமையில் ரத்தசோகையை போக்கி வளமான வாழ்விற்கு வழிகோலும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×