என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மலரும் நினைவுகள் மீனா: மறக்க முடியாத முத்து
- தங்க நிறத்தில் ஜொலிக்கும் உடையில் மகாராணி போன்ற கெட்அப்.
- இவ்வளவு பிசியிலும் இந்த மாதிரி வேறு விசயங்களிலும் எப்படி கவனம் செலுத்த முடிகிறது என்று நினைப்போம்.
குலுவாலிலே, மொட்டு மலர்ந்தல்லோ!
தட்டி தட்டி வண்டு துறந்தல்லோ, ஹே தேன் குடிக்க நேரம் உண்டல்லோ, தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ...
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ...
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ...
இந்த ஒரு பாடலுக்காக எவ்வளவு மேக்-அப், காஸ்ட்யூம்... அப்பப்பா... இந்த பாடலுக்கான காட்சிகள் சென்னையிலும், கேரள மாநிலம் சொர்னூரிலும் மாறி மாறி எடுக்கப்பட்டது. செட்டிங் போட்டு எடுக்க வேண்டிய காட்சிகள் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.
கேரள பாரம்பரிய உடை, கதகளி உள்ளிட்ட கேரள நடன காட்சிகள் சொர்னூரில் வெளிப்புறத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டது.
சென்னையில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எனது பிறந்த நாளும் வந்தது. படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டியது மட்டுமல்ல. முதல் முறையாக ஓட்டலில் ஒரு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்தேன். பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடந்தது. அந்த காலத்தில் ஓரிரு நட்சத்திர ஓட்டல்கள்தான் சென்னை யில் இருந்தன. அதுவரை அந்த மாதிரி பார்ட்டிகளெல்லாம் நான் நடத்தியது கிடையாது. எனக்கு அது புதுமையாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தது.
ஏனெனில் ரஜினி சார், பிரபு சார் கே.எஸ்.ரவிக்குமார் சார் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் விருந்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் நேரில் வந்து வாழ்த்தியது எனக்கு மறக்க முடியாத தருணம்.
அதே போல் இந்த படத்தில் ஒரே காஸ்ட்யூமில் 20 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். ரொம்ப ஹெவியான டிரஸ் தினமும் எப்படா ஷூட்டிங் முடியும்? எப்படா மேக்அப்பை கலைப்பது என்றி ருக்கும். எத்தனையோ நாட்கள் காரில் திரும்பும் போதே மேக்அப்பை ஒவ்வொன்றாக கலைப்பேன்.
ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். நாங்கள் செல்லும் குதிரை வண்டியின் அச்சாணியை வடிவேல் எடுத்து விடுவார். அச்சாணியை கழற்றியதும், வண்டி சாய்ந்து கீழே சகதியில் விழுந்த காட்சியும் படமாக்கப்பட்டது சென்னையில்.
ஆனால் அந்த அச்சாணி பற்றி பேசும் காட்சி படமாக்கப்பட்டது மைசூரில்...
மிகப்பெரிய ஹிட் படம் முத்து. ஆனால் படப்பிடிப்பின் போது அதன் அருமை புரியவில்லை. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் கதை தெரியாது. ரஜினி சார் ஜோடி என்பதால் கதையை தெரிந்து கொள்வதில் நான் ஆர்வம் காட்டவும் இல்லை.
அடிக்கடி செட்டில் சும்மாவே இருப்பேன். அதை பார்த்ததும் என்னை விட என் அம்மாவுக்கு தான் கூடுதல் சந்தேகம்.
அதை நேரிலேயே ரவிக்குமார் சாரிடம் கேட்டும் விட்டார். 'என்ன சார்? இந்த படத்தில் என் பொண்ணுக்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கா சார். அவள் வளர்ந்து வரும் பெண் என்றார்.
என் அம்மாவிடம் இருந்து அப்படி ஒரு கேள்வியை அவரும் எதிர்பார்க்கவில்லை.
என்னம்மா, இப்படி கேட்டுட்டீங்க.... படம் வெளிவரட்டும் பாருங்கள். அப்புறம் தெரியும் உங்களுக்கு....! நானும் அதற்கு அப்புறம்தான் உங்களோடு பேசுவேன்' என்று கூறிவிட்டார்.
தில்லானா... தில்லானா.... பாடல் காட்சிக்காக நான் ரெடியாக இருந்தேன். தங்க நிறத்தில் ஜொலிக்கும் உடையில் மகாராணி போன்ற கெட்அப்.
நீண்ட நேரம் ஆகி யும் என்னோடு ஆடக்கூடிய நடன குழுவினர் வரவில்லை. ஆனால் அதற்காக டைரக்டர் கவலைப்படவில்லை. டக்கென்று ஒரு முடி வெடுத்தார். என்னை மட்டும் தனியாக ஆட வைத்து படமாக்கினார். அதன் பிறகு வெட்டல், ஓட்டல் எல்லாம் அவர் சம்பந்தப்பட்ட வேலை என்பதை சொல்ல வேண்டிய தில்லை. இப்படித்தான் இருப்பார் ரவிக்குமார் சார்.
இந்த பட ஷூட்டிங்கின்போது எங்க ளுக்கு இன்னுமொரு ஆச்சரியமான விசயம் நடக்கும். அதாவது ரஜினி சாரை பார்க்க பல அரசியல் தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் ரொம்ப நெருக்கமாக அரசியல் பற்றியும் விவாதித்து கொண்டிருப்பார்.
எங்களுக்கு அவரை பார்த்து ஆச்சரிய மாக இருக்கும். இவ்வளவு பிசியிலும் இந்த மாதிரி வேறு விசயங்களிலும் எப்படி கவனம் செலுத்த முடிகிறது என்று நினைப்போம்.
இந்த படம் வெற்றி படம் மட்டுமல்லாமல் இந்த படம் அதில் நடித்த, வேலை பார்த்த ஒவ்ெவாருவரின் மனதையும் தொட்ட படம்.
அதற்கு காரணம் தேனப்பன்சார், கிரேன் மனோகர் சார் என்று படக்குழுவை சேர்ந்த பலருக்கு அந்த படத்தில் ஏதாவது ஒரு சீனில் தலை காட்டும்படி வாய்ப்பு வழங்கி இருந்தார் ரவிக்குமார் சார். வழக்கமாக அவர் மட்டும் ஏதாவது ஒரு காட்சியில் நச்சென்று தோன்றி முத்திரை பதிப்பார். ஆனால் இந்த படத்தில் பலருக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியதால் எல்லோருக்கும் அவர்களே நடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதனால் எல்ேலாரும் முத்துவை கொண்டாடினார்கள்.
இன்னொரு அனுபவத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.
(தொடரும்....)






