என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உறவுகளில் உன்னத உறவுநிலை!
    X

    உறவுகளில் உன்னத உறவுநிலை!

    • மனிதர்களின் குடும்ப உறவுகள் ஒன்னுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை.
    • புதிய தலைமுறையும் பட்டுப் போகாமல் பழைய தலைமுறையின் உரம்பெற்றுத் தளிர்த்து வளர முடியும்.

    தலைமுறை உறவுகளில் உன்னதம் காணும் உயரிய வாசகர்களே!

    வணக்கம்!

    தலைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி எனத் தலைமுறைகளின் சுருக்கக் குறியீடுகளாகக் கொண்டு குறிப்பிட்டு வருகின்றது.

    தொழில்நுட்பத்தில் எத்தனை 'ஜி'க்கள் மாறி வந்தாலும் தலைமுறை உறவுகள் மாறிவிடுவதில்லை. கணவன், மனைவி, அப்பா, அம்மா, பெற்றோர் பிள்ளைகள், மாமா தாய்மாமா, அத்தை, அண்ணன், அண்ணி, அக்கா, தம்பி, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியார், மருமகன், மருமகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி என வரும் மனித குடும்ப உறவுப் பரிமாணத்தில் எந்தச் சிறு மாற்றமும் நிகழ்ந்து விடுவதில்லை.

    மனிதர்களின் குடும்ப உறவுகள் ஒன்னுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை. அவை பாசமெனும் கண்களுக்குத் தெரியாத அன்பின் கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பவை. இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் வாழ்க்கைச் சூழல் மாற்றங்களால் பல உறவுப்பெயர்கள் தொலைந்துபோகத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும் அவற்றுள் தொலைக்க முடியாத உன்னத உறவாகத் "தாத்தா பாட்டி- பேரன் பேத்தி" உறவே திகழுகிறது என்றால் அதனை எவராலும் மறுக்க முடியாது.

    சமுதாய அமைப்பில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்வியல் 'குடும்பம்' என்னும் அமைப்பியலுக்குள் வருகிறது. ஒவ்வொரு குடும்பமும் பின்னர் வாழையடி வாழையாய் வளர்ந்து பல்கிப் பெருகத் தொடங்குகிறது. இப்பெருக்கத்தில்தான் உறவுமுறை நெருக்கமும் உருவாகிறது. ஒரு குடும்பத்தின் நிகழ்காலத்தில் மிக அதிகமான வயது கொண்டோர் தாத்தா பாட்டியாகவும், மிகக் குறைந்த வயதுடையோர் பேரன் பேத்திகளாகவும் இருக்கின்றனர். இந்த இருவேறு தலைமுறை சார்ந்த இருவருக்கிடையே மலரும் அன்புணர்வின் உறவுப் பெருக்கத்தில்தான் மனிதப் பண்புசார்ந்த வளர்ச்சிகள் உச்சம் காணவிருக்கின்றன.

    தாத்தா பாட்டிகளின் பெயர் சொல்லவும் அவர்களின் புகழ் விளங்கவும் பிறந்தவர்கள் 'பெயரன்'. 'பெயர்த்தி'கள்; இந்த மூலச்சொற்களே பேச்சுவழக்கில் பேரன் பேத்திகள் ஆயின. அதனால் தான் மரபுசார்ந்த குடும்ப வழக்கில் தாத்தா பாட்டிகளின் பெயர்களையே பேரன் பேத்திகளுக்கு வைக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது.

    "அது என்ன தாத்தா உன்னை மட்டும் 'தாத்தா' என்று கூப்பிடச் சொல்கிறார்கள்?" என்று கேட்ட பேரனிடம் தாத்தா சொன்னார்," நீ உன் அப்பா அம்மாவிடம் "தா! தா!"என்று எதை வாங்கித் தரச்சொன்னாலும் எல்லாவற்றையும் வாங்கித் தரமாட்டார்கள்!. ஆனால் தாத்தாவிடம் எதைக்கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் வாங்கித் தந்துவிடுவோம். அதனால்தான் எல்லாப் பேரன் பேத்திகளும் 'தா!தா!'என்றே அழைக்கின்றனர்".

    "அப்படியா தாத்தா! இந்தக் குளிர்காலத்தில் ஐஸ் கிரீம் கேட்டால் வாங்கித் தருவீர்களா?" என்று கிண்டலாகக் கேட்டான் பேரன். "ஓ! அவசியம் வாங்கித் தருவேன்! உனக்கு ஒன்று வாங்கித் தரும் சாக்கில், சர்க்கரை நோயாளியான இந்தத் தாத்தாவும் ஒரு ஐஸ்கிரீமை வாங்கிச் சுவைத்துவிடுவேன் அல்லவா?" என்று நகைச்சுவையாகப் பதில் சொன்னார் தாத்தா.

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்


    முதிர்ந்த அனுபவத்தையும், மூப்பின் வயதினையும் உடைய மூத்தோர்கள், தங்கள் அனுபவத்தையும் அறிவினையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் மிக உடையவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் , பூமிக்குப் புதிதாக வந்த இளையோர்களோ எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஆர்வம் மிகுதி உடையவர்களாகத் திகழுகின்றனர். அறிவும் அனுபவமும் ஆர்வமும் சந்திக்கின்ற மையப் புள்ளியாகத் 'தாத்தா-பேரன்' உறவு திகழுகிறது.

    இந்த வகையில் அனுபவப் புதையலாகத் திகழும் தாத்தா பாட்டிகளும், ஆர்வத் தேடலாக விரையும் பேரன் பேத்திகளும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதால் ஒத்துப் போகின்றனர்.

    எங்கெல்லாம் 'தாத்தா பேரன்'கள் இணைந்து வளர்கின்றனரோ அங்கெல்லாம் இருவருக்குமே நன்மைகள் பல விளையும் மாயவித்தை நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அப்பா, அம்மா, மாமா அத்தை போன்ற மற்ற எந்த உறவை விடவும் தாத்தா பாட்டியிடம் மட்டுமே ஒட்டுதல் உறவு உடையவர்களாகப் பேரன் பேத்திகள் விளங்குகின்றனர். அதற்குக் காரணம், பேரன் பேத்திகள் செய்யும் சேட்டைகள் உள்ளிட்ட அனைத்துச் செயல்களையும், மாறுபடாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தாத்தா பாட்டிகளிடம் மட்டுமே இருக்கிறது. கோபமும் எரிச்சலும் அடையாத பொறுமை, அப்பழுக்கற்ற அன்பு, அரவணைக்கும் பாசம், அனுபவம் கற்றுக்கொடுத்த அறிவு, ஆதரிக்கும் தாராளம் ஆகியவை தாத்தா பாட்டிகளின் நிரந்தரச் சொத்துகள்.

    இப்படி இருப்பதால், தாத்தா பாட்டி, பேரன் பேத்தி இரு தரப்புமே நலமான வாழ்க்கையைப் பெறுகின்றனர். இளையோர்களுக்கு நேர்முறைச் சிந்தனைகள் வளர்கின்றன; அவர்கள் எளிதில் மனச்சோர்வு அடைந்துவிடாமல் எந்தச் செயலிலும் நம்பிக்கை ஆர்வத்தோடு இயங்குகின்றனர். அதே போல, வயதாகிவிட்டதே என்று சோர்ந்துபோய் விடாமல், மூளைப் புத்துணர்ச்சியோடு, வாழும் காலத்தை நீட்டித்துக் கொண்டு மூத்தோர்கள் மகிழ்ச்சியோடு வாழும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

    தாத்தா பேரன் உறவு என்பது வெறும் பிறப்பாலாகிய உறவு மட்டுமல்ல: அது உணர்வுபூர்வமான உறவு. தாத்தாவோடு நெருங்கிப் பழகும்போது ஒவ்வொரு பேரனும் அவனையறியாமலேயே மனத்தளவில் முதிர்ச்சிப் பக்குவம் அடைகிறான். அதைப்போலவே பேரன் பேத்திகளோடு பழகி அளவளாவி விளையாடும்போது ஒவ்வொரு தாத்தா பாட்டியுமே அவர்களை அறியாமலேயே குழந்தைகளாகி இளமைப் புதுமை அடைகின்றனர்.

    தாத்தா பாட்டிகளோடு சேர்ந்து வாழும் பேறுபெற்ற குழந்தைகள் உண்மையிலேயே இந்த உலகத்தில் வரம் வாங்கி வந்தவர்கள்; இதையே, பேரன் பேத்திகளோடு சேர்ந்து வாழும் பேறுபெற்ற தாத்தா பாட்டிகளும் வரம் வாங்கி வந்தவர்களே! என்றும் கூறலாம். இது, சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கூட்டுக்குடும்ப வாழ்வியலுக்கு வேண்டுமானால் பொருந்தி வரலாம். ஆனால் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில் இது பொருந்த வருமா? நடைமுறைச் சாத்தியமா?.

    சரியான கேள்விதான். கூட்டுக்குடும்ப வாழ்விலும் வீட்டு உறுப்பினர் ஒவ்வொருவருமே வேலைக்குப் போகத்தான் செய்தார்கள்; அவர்களது வேலைகளெல்லாம் ஒரே ஊரில் வயல்வெளிசார்ந்து ஒரே இடத்தில் இருந்தது. அதனால் ஒரே வீட்டில் கூடிவாழ்ந்து குதூகலித்து இருந்தனர்.

    குழந்தைகளுக்கு, சோறூட்ட ஒருவர், கதைசொல்ல ஒருவர், விளையாட்டுக் காட்ட ஒருவர், தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க ஒருவர், குளிக்க வைக்க ஒருவர், கண்டிக்க ஒருவர், அரவணைக்க ஒருவர்… என ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர் எனப் பலர் இருந்தனர் ஆனால் இன்றைய புறாக்கூண்டு அடுக்கக வாழ்வியலில் அப்பா அம்மாவைத் தவிர வேறு முகங்களைக் காணும் வாய்ப்பே கிடையாது. அதனால் செல்பேசிகளும், தொலைக்காட்சிகளும் காட்டும் கார்ட்டூன் சித்திரக் கதைமாந்தர்களே உறவுகளாக மாறிப்போன அவலம்.

    என்ன செய்யலாம்?.

    வாழ்வியலைப் பின்னுக்குத் தள்ளி வைக்கமுடியாது. அதன் ஓட்டத்திலேயே முடிந்த அளவுக்கு உறவுகளை ஒட்டவைத்து வளர்க்க முனைதலே புத்திசாலித்தனம். பேரன் பேத்திகள் ஓர் ஊரிலும்(நாட்டிலும்கூட) தாத்தா பாட்டிகள் ஓர் ஊரிலும் வாழ்ந்தால், அடிக்கடி இவ்விரு தரப்பினரும் சந்தித்து வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

    குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு விடுமுறை வாய்க்கும் போதெல்லாம் தாத்தா பாட்டி வீடுகளுக்குப் பேரன் பேத்திகளை அவசியம் அழைத்து வரவேண்டும். இதனால் பணச்செலவும் வீண் அலைச்சலும் உண்டாவதாக யாரும் சலித்துக் கொள்ளக் கூடாது. இவ்வகைச் சந்திப்புகள் மூலமாக நம் சந்ததிகளே அறிவுப் புத்துணர்வும் பண்பாட்டுச் சம்பாத்தியத்தையும் பெறுகின்றனர்.

    முடிந்த அளவுக்குத் தாத்தா பாட்டிகளும் தங்களால் முடிந்த அளவுக்குப் பயணம் செய்து பேரன் பேத்திகளைச் சென்று பார்த்து வருவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுகடவுளரைப்

    பார்த்து வருவதைப் போல மகன் மகள் வீடுகளுக்குச் சென்று பேரன் பேத்திகளைப் பார்த்து வருவதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். இது குடும்பக் கடமை மட்டுமல்ல; சமூகக் கடமையும் கூட.

    "வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபு!" என்று வள்ளல்பெருமான் குறிப்பிடுவது, மனிதகுல வளர்ச்சியின் மேன்மையை உணர்த்தும் வரிகள். மனிதன், குடும்பம், குடி, இனம், சமுதாயம் போன்ற பல்வேறு நிலைகளில் இணைந்தும் பிணைந்தும் மனிதன் செயலாற்ற வேண்டியதை வலியுறுத்தும் வரிகள் இவை.

    பல தலைமுறைகளாக வளர்ந்து வரும் குடும்பத்தில், அப்போதைக்கு, முதல் தலைமுறை தாத்தா பாட்டி என்றால், மூன்றாம் தலைமுறை பேரன் பேத்திகள். குடும்ப மரத்தின் வேர்களையும் கிளைகளையும் இளையோர்களிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் தாத்தா, பாட்டி எனும் மூத்தோர்களே ஆவர். ஒவ்வொரு பேரனும் பேத்தியும் நல்வழிக் கதைகளோடு, தமது மூதாதையர்களின் கதைகளையும் பாடுகளையும், தங்கள் தாத்தா பாட்டிகள் வழியே மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியும். இதன் வழிமுறையில் ஒவ்வொரு இளந்தலைமுறையும் பண்பாட்டு அறிவு பெற்றுப் பெருமை கொள்ள முடியும்.

    ஒரு மாலை நேரத்தில், ஒரு தாத்தாவும் ஒரு பேரனும் அவர்கள் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தத் தெரு முனையில் பேரனின் ஆசிரியர் வருவதை பார்த்த தாத்தா, "பேராண்டி! ஓடிப்போய் ஒளிந்துகொள்! உன் கணக்கு ஆசிரியர் வருகிறார்! பார்த்தால் பள்ளிக்கு ஏன் வரவில்லை? என்று கேட்பார்!" என்று பதற்றத்துடன் சொன்னார். இன்றைக்குக் கணக்கு ஆசிரியர் இறந்து போனதால் பள்ளிக்கு விடுமுறை! என்று அவனது அப்பாவிடம் பொய் சொல்லித்தான் பேரன் வீட்டில் இருக்கிறான் என்பது தாத்தாவுக்குத் தெரியும்.

    பேரன் பதற்றமில்லாமல் தாத்தாவிடம் சொன்னான், " தாத்தா! முதலில் நீ வீட்டுக்குள் போய் ஒளிந்துகொள்! நீ இறந்து விட்டதாகப் பொய் சொல்லித்தான் நான் பள்ளிக்கே விடுமுறை போட்டிருக்கிறேன்!". நல்ல நகைச்சுவை என்று சிரித்து மகிழ்ந்தார் தாத்தா.

    தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகள், நேரில் சந்தித்து உடன்வளரும் சூழல் தற்போது குறைந்து போனாலும். வீடியோ அழைப்புகள், வாட்ஸ் அப்புகள், இன்ஸ்டாகிராம், சூம் போன்ற எத்தனையோ நவீனத் தொழில்நுட்ப வசதிகள் வந்துள்ளன. உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு. ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட கலந்துரையாடல்களும், கதையாடல்களும்கூட நல்ல பயனளிக்கும்.

    அப்படி இருந்தால்தான் பழைய தலைமுறை இற்றுப்போகாமல், புதிய தலைமுறையோடு மேவிப் போக முடியும். புதிய தலைமுறையும் பட்டுப் போகாமல் பழைய தலைமுறையின் உரம்பெற்றுத் தளிர்த்து வளர முடியும்.

    தொடர்புக்கு 9443190098.

    Next Story
    ×