என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மொபைல் பாதுகாப்பு:
    • அனைத்து பாஸ்வோர்டுகளையும் சேமிக்க வேண்டாம்.

    பல ஆண்டுகளாக செல்போன் பாதுகாப்பு பொதுவாக கவனிக்கப்படாத அச்சுறுத்தலாக உள்ளது. போன் பாதுகாப்பு, பொதுவாக, அது இருக்கும் வரை பிரச்சனை இல்லை, ஆனால் தாக்கப்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சனை.

    நம்மைப்பற்றிய ஒவ்வொரு முக்கிய தகவலும் இப்போது நம் உள்ளங்கையில், ஸ்மார்ட்போன்களுக்குள் பொதிந்திருக்கிறது. சைபர் திருட்டுப்பயல்கள் குறிவைக்கும்போது நாம் செல்போன்கள் கொண்டு செல்லும் ஆபத்தை எவ்வாறு குறைப்பது என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

    இன்றைய மொபைல் "போன்" என்பது ஒரு கம்ப்யூட்டர், தரவு சேமிப்பு சாதனம், வழி சொல்லும் சாதனம் மற்றும் ஒலி மற்றும் வீடியோ ரெக்கார்டர் ஆகும். இது ஒரு மொபைல் வங்கி மற்றும் சமூக வலைப்பின்னல் மையம், புகைப்பட தொகுப்பு காதலியின் பொக்கிஷம், மனைவியின் பெட்டகம், குழந்தைகளின் நினைவு ……இன்னும் எத்தனையோ!

    அதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது!

    ஆனால் இதே செயல்பாடுகள் அனைத்தும் நம் மொபைல் சாதனங்களை தீங்கிழைக்கும் ஆசாமிகளுக்கு அயனான இலக்குகளாக ஆகின்றன.

    நம்மில் பெரும்பாலோர் நம் தேவைகள் அனைத்தையும் ஒரே சாதனத்தில் வைத்திருப்பதை விட்டுவிட விரும்பவில்லை என்பதால், பாதுகாப்பாக இருக்க நாம் என்ன செய்யலாம்?

    மொபைல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்றால் என்ன?

    மொபைல் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற மொபைல் சாதனங்களை குறிவைக்கும் சைபர் தாக்குதலின் வழிமுறையாகும். PC அல்லது நிறுவன சேவையகத்தின் மீதான தாக்குதலைப் போலவே, மொபைல் பாதுகாப்பு அச்சுறுத்தல், சாதனத்தில் தீங்கிழைக்கும் மற்றும் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளைச் செயல்படுத்த மொபைல் மென்பொருள், வன்பொருள் மற்றும் நெட்வொர்க் இணைப்புகளில் உள்ள பலவீனங்களைபயன்படுத்துகிறது.

    ஒரு உதாரணம், ஹேக்கர்கள் நம் மொபைலில் அத்துமீறி நுழையும்போது, அவர்கள் நம் வங்கி மற்றும் ஜி பே போன்ற பணம் சம்மந்தப்பட்ட சமாச்சாரங்களை ஊடுருவலாம், நம் ஐடி மற்றும் தனிப்பட்ட கணக்குகளை அணுகுவதும் திருடுவதும் சுலபம் ஆகும், கூடுதலாக, ஹேக்கர்கள் தங்கள் நலனுக்காக நமது மொபைல் வாலட்கள் மற்றும் நிதித் தகவல்களைக் கடத்தலாம்.

    ஜெயராமன் ரகுநாதன்

    ஜெயராமன் ரகுநாதன்

    மொபைல் சாதனங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால் அவற்றின் மீது சைபர் கிரைமினல்கள் கவனம் செலுத்துகின்றனர். இதன் விளைவாக, இந்தச் சாதனங்களைக் குறிவைக்கும் இணைய அச்சுறுத்தல்கள் விரிவடைந்துள்ளன.

    ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மொபைல் பாதுகாப்பு:

    ஆண்ட்ராய்டுக்கான இணைப்புகளை வழங்கும் விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஸ்மார்ட்போன்களை வாங்கவும்.

    அனைத்து பாஸ்வோர்டுகளையும் சேமிக்க வேண்டாம்.

    இரண்டு லெவல் செக்யூரிட்டியைப் பயன்படுத்தவும்.

    உள்ளமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்கள் வைபை நெட்வொர்க் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் (பொது வைஃபையில் கவனமாக இருக்கவும்).

    ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தவும்

    உங்கள் ஆண்டிராய்டு மொபைலின் தரவை காப்புப் பிரதி எடுக்கவும்.

    கூகுள் பிளேயில் இருந்து மட்டுமே பயன்பாடுகளை வாங்கவும்.

    உங்கள் சாதனத்தை என்க்ரிப்ட் செய்யவும்.

    விபிஎன்-ஐப் பயன்படுத்தவும்.

    ஐபோன் பயனர்களுக்கான மொபைல் பாதுகாப்பு

    உங்கள் ஐபோன் இயங்குதளத்தை (ஐ.ஓ.எஸ்.) புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.

    "எனது ஐபோனைக் கண்டுபிடி" அம்சத்தை செயல்படுத்தவும்.

    4-எண் பின் நம்பரைவிட விட நீளமான கடவுக்குறியீட்டை அமைக்கவும்.

    இரண்டு லெவல் செக்யூரிட்டியைப் பயன்படுத்தவும்.

    போனை "சுய அழிவுக்கு" அமைக்கவும், அதாவது 10 முறை தோல்வியுற்ற கடவுச்சொல் முயற்சிகளுக்குப் பிறகு அதைத் துடைக்கவும்.

    உங்கள் ஐகிளவுடு மற்றும் ஐ டியூன்ஸ் கடவுச்சொற்களை தவறாமல் மாற்றவும்.

    பொது வைபையை தவிர்த்து பாதுகாப்பான வைபையை மட்டும் பயன்படுத்தவும்.

    நம்பகமான ஐபோன் சார்ஜிங் நிலையங்களை மட்டும் பயன்படுத்தவும்.

    ஐபோன் பூட்டுத் திரையில் Siri ஐ முடக்கிவிடுங்கள்.

    கேமரா, மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்த ஆப்ஸ் அனுமதிகளைத் திரும்பப் பெறவும்.

    உங்கள் தொலைபேசியை ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக்கண்டு பிடிக்க சில் சுட்சுமங்கள் இருக்கின்றன.

    உங்கள் மொபைலை யாராவது ஹேக் செய்கிறார்களா என்பதைக் கண்டறிவது சவாலானதாக இருக்கலாம், ஏனெனில் ஹேக்கர்கள் பெரும்பாலும் சாமர்த்தியத்துடன் இருக்க முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், உங்கள் போன் சமரசம் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில அறிகுறிகள் மற்றும் படிகள் உள்ளன:

    வழக்கத்திற்கு மாறான பேட்டரி வடிகால்: உங்கள் போனின் பேட்டரி வழக்கத்தை விட கணிசமாக வேகமாக வடிந்தால், அது பின்னணியில் ஹேக்கிங் இருக்கலாம்.

    அதிக வெப்பமடைதல்: உங்கள் போன் வழக்கத்திற்கு மாறாக சூடாக இருந்தால், அது தீங்கிழைக்கும் மென்பொருளின் அடையாளமாக இருக்கலாம் அல்லது ஆதாரங்களை நுகரும் ஒரு முரட்டு செயலியாக இருக்கலாம்.

    அதிகரித்த தரவு பயன்பாடு: உங்கள் தரவு பயன்பாட்டைக் கண்காணிக்கவும். உங்கள் பழக்கத்தை நீங்கள் மாற்றாதபோது, தரவுப் பயன்பாட்டில் திடீர் அதிகரிப்பு, அங்கீகரிக்கப்படாத தரவுப் பரிமாற்றத்தைக் குறிக்கலாம்.

    மெதுவான செயல்திறன்: உங்கள் போன் திடீரென மந்தமாகவும், பதிலளிக்காமலும் இருந்தால், அதுவும் ஹேக்கிங் முயற்சியாகவோ இருக்கலாம்.

    எதிர்பாராத பாப்-அப்கள்: நீங்கள் அடிக்கடி பாப்-அப் விளம்பரங்கள் அல்லது விசித்திரமான அறிவிப்புகளைப் பார்த்தால், அது திருட்டு செயலி அல்லது தீங்கிழைக்கும் செயலியின் காரணமாக இருக்கலாம்.

    விவரிக்கப்படாத கட்டணங்கள்: விவரிக்கப்படாத கட்டணங்கள் ஏதேனும் உள்ளதா என உங்கள் தொலைபேசி கட்டணத்தைச் சரிபார்க்கவும். சில ஹேக்கிங் முயற்சிகள் பிரீமியம்-ரேட் அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

    முடக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்: உங்கள் அனுமதியின்றி உங்கள் மொபைலின் பாதுகாப்பு அம்சங்கள் (ஆன்டிவைரஸ் அல்லது பயர்வால் போன்றவை) முடக்கப்பட்டிருந்தால், அது சேதமடைவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    அறிமுகமில்லாத பயன்பாடுகள் அல்லது அமைப்புகள்: நீங்கள் நிறுவாத பயன்பாடுகள் அல்லது உங்களுக்குத் தெரியாமல் மாற்றப்பட்ட அமைப்புகளைத் தேடுங்கள்.

    கணக்குகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல்: உங்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் அல்லது பிற கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டால், அது சமரசம் செய்யப்பட்ட தொலைபேசியுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

    வழக்கத்திற்கு மாறான உரைகள் அல்லது அழைப்புகள்: உங்கள் சொந்த எண் அல்லது அறிமுகமில்லாத எண்களில் இருந்து உங்களுக்கு விசித்திரமான உரைகள் அல்லது அழைப்புகள் வந்தால், அது சமரசம் செய்யப்பட்ட தொலைபேசியின் அடையாளமாக இருக்கலாம்.

    விசித்திரமான கோப்புகள் அல்லது மீடியா: நீங்கள் உருவாக்காத அல்லது பதிவிறக்காத அறிமுகமில்லாத கோப்புகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உங்கள் மொபைலில் பார்க்கவும்.

    சுருங்கச்சொன்னால்…..

    ஹேக்கர்கள் தொடர்ந்து மொபைல் சாதனங்களை குறிவைத்து வருவதால், தொலைபேசி பாதுகாப்பு மற்றும் மொபைல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. PCகள் மற்றும் பிற வகையான கணினி வன்பொருள்களை விட மொபைல் சாதனங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. அவர்கள் தீம்பொருள், சமூக பொறியியல், வலைத் தாக்குதல்கள், நெட்வொர்க் தாக்குதல்கள் மற்றும் உடல் திருட்டு போன்ற வடிவங்களில் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் சொந்த கேஜெட்களைப் பாதுகாக்க விரும்பினாலும், ஒரு தெளிவான புரிதலுடன் இருங்கள். விழிப்புணர்வு பயிற்சி மற்றும் வலுவான பாதுகாப்பு விஷயங்களை நன்றாக தெரிந்து கொள்ளூங்கள். பின்னர் ஆபத்தைத் தணிக்க அதிக தொழில்நுட்ப எதிர் நடவடிக்கைகளை எடுக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

    மொபைல் போன் பெரிய சவுகரியம் தான், ஆனால் அதன் மூலம் பெரும் ஆபத்தும் வரக்கூடும்.

    எதற்கும் ஜாக்கிரதை!

    • வாழையினைப் போல கடவுள் கைங்கரியங்களுக்கு தேங்காயும் பயன்படுகிறது.
    • மரபணுவியல் சோதனைகளின் அடிப்படையில் தென்கிழக்காசியாவே தென்னையின் தாயகமாக இருந்துள்ளது.

    தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் என்று சொல்லுவார்கள்.

    எட்டடி என்னங்க.. இப்போ உள்ள பிள்ளைகள் 100 அடி பாய்வாங்க. அத்தனையும் அவ்வளவு ஷார்ப். கை வைக்காமலே கீறும் அளவிற்கு.

    அடடே உம்பிள்ளையா? என்ற வெற்றி இலக்கில் சிக்கிய பிள்ளையை உறவினர்களும், குடும்பத்தினர்களும் குறிப்பிடுவது உண்டு. அது யாரோட புள்ளை தாய் எட்டடி பாய்ந்தால் அவன் 16 அடி பாய மாட்டானா? என்று பாராட்டாகவும்..

    ஆமா இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை ? அவன் ஸ்கூல் எந்த திசையிலே இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு , இத்தனை நாள் கரிச்சி கொட்டிட்டு இப்போ பர்ஸ்ட் மார்க் எடுத்ததும் பழமொழி சொல்லி எம்பிள்ளைன்னு பீத்திக்க வேண்டியது என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.

    தாய்வழி சமூக அமைப்புக் கொண்டது இந்தியா. பெரும்பாலும் நல்லதுக்கும் கெட்டதுக்கும், ஏன் திட்டுவதற்கு கூட தாயினைப் பழித்தோ பாராட்டியோ வார்த்தைகளைக் கேட்டு இருப்போம். அப்படித்தான் இந்த பழமொழியும்.

    ஒரு தாய், எட்டடியை அதாவது குருபிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ, மகேஸ்வரா, குரு சாக்ஷாத், பரபிரம்மா, தஸ்மை, ஸ்ரீ குருவே நமக- இவைகள் தான் அந்த எட்டடி. இதனை தன் மகனுக்கு பயந்து அதாவது இங்கே பயந்து என்பதன் அர்த்தம் கற்றுக் கொடுத்து, அவனை குருகுலத்திற்கு அனுப்பினால், அவன் பதினாறு வகை செல்வங்களைப் பெற்று வென்று வருவான் என்று பொருள்.

    இரண்டு விதமான அர்த்தங்கள் கொண்டதுதான் இந்த பழமொழி. அர்த்தம் சொல்வதற்கு முன்னாடி எதைப்பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்னு ஒரு ரவுண்ட் அடிப்போமா.

    உடலில் எதையும் கழிக்காத மரமாக வாழையைச் சொல்லலாம். பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப்பகுதி என எதுவும் வீணாகாது. வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகிறது. இந்த நார் இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன.

    இது மட்டுமல்ல வாழைமரம் ஒரு வளர்ந்த தாவரம். அதை மரம் என்ற இலக்கில் சேர்க்க முடியாது. ஒவ்வொரு வருஷமும் 170லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்வதில் உலகத்திலேயே இந்தியாதான் நம்பர் ஒன்னாக இருக்கிறது.

    வாழையடி வாழையா தழைத்து ஓங்கணுன்னு வாழ்த்துகளைப் பெற்றுத்தரும் வாழை மரம். இந்த வாழை மரத்தை தாய் என்றும் குறிப்பிடுவார்கள். வாழை மரக்கன்றுகளை நடும் போது எட்டடி இடைவெளியில் நடவேண்டும். தாய்க்கு அர்த்தம் சொல்லியாச்சு. அப்போ பிள்ளைக்கு.... அதுக்குத்தானே வர்றோம்.

    தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீருன்னு உணர்ச்சி பொங்கப் பாடியிருப்பார் சிவாஜி, கண்ணதாசனின் வரிகளை ... பெற்ற பிள்ளை போடாத சோத்தை வளர்த்த தென்னை தருமின்னு சொல்வாங்க.

    சங்க இலக்கியத்தில் தெங்கு, தாழை என்றும் பெயர் உண்டு. ஒருமுறை பயிரிட்டால் வம்சத்திற்கும் பலன் தருவதால்தான் தென்னம் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.

    வாழையினைப் போல கடவுள் கைங்கரியங்களுக்கு தேங்காயும் பயன்படுகிறது. சிவபெருமானின் அடையாளமாகவும், இறைவனுக்குப் படைக்கும் நிவேதானப் பொருளாக வும், மகாலட்சுமியின் அம்சமாகவும் இருக்கிறது.

    இதையெல்லாம் தாண்டி ஒரு ருசிகரமான அனுபவம் தென்னம்பிள்ளைக் கல்யாணம். அட வாழைமரத்திற்கு தாலிகட்டுவதைப் போல தென்னைக்கும் கட்டுவார்களா என்று கேட்கறீங்க ? இதுவும் கல்யாணம்தான். நம் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு சடங்கு செய்வதைப் போலத்தான்.

    எங்கட தென்னம்பிள்ளை பெரியாளாகித்து.. இத்தினி மணிக்கு தண்ணிவாக்கிறோம். எல்லாரும் வாருங்கோ என்று அடுத்த, பக்கத்து வீடுகளுக்கு அழைப்பு விடுவார்கள். அப்படி அழைப்பு விடுவது வட்டா எனப்படும்.

    அழைப்பு வந்தவுடன் குடும்பமாக பெண்கள் கூடி பலகாரம் செய்வார்கள். குலவையிட்டு தென்னம்பிள்ளைக்கு குடம்குடமாக தண்ணீர் வார்த்து ஒரு நல்ல சேலையொன்றை எடுத்துவந்து சுற்றி, இருபுறமும் நிறைகுடம் விளக்கு வைத்து தென்னை மகளுக்கு ஆரத்தி எடுத்து கண்ணூறு கழிப்பார்கள். மஞ்சளும் குங்குமமும் அப்பி தன் தங்க நகைகளைப் பூட்டிய தென்னைப்பெண் நாணத்தில் ஓலைக்கூந்தல் விரித்து மதர்த்து நிற்பாள். இப்படித்தான் தென்னையின் கல்யாணம் நடைபெறுமாம்.

    தென்னையை தாழை என்றழைக்கும் வழக்கம் நெடுநாளாக இருந்தது. மரபணுவியல் சோதனைகளின் அடிப்படையில் தென்கிழக்காசியாவே தென்னையின் தாயகமாக இருந்துள்ளது.

    தென்னை வாழ வைப்பது மட்டும் இல்லைங்க.. போட்டுத் தள்ளவும் செய்யும்.

    என்னாது? வடிவேலு வாய்ஸ்ல படிக்கவும்.

    தலைக்கூத்தல் என்று ஒரு சொல்லாடல் உண்டு. உங்களுக்குத் தெரியுமா?!

    இளநீரில் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. மிகச்சிறந்த உடலுக்கு தீங்கு விளைவிக்காத பானமாக கருதப்படும் இளநீர் கொலைபானமாகவும் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பொட்டாசியம்தான்.

    அட ஊர்லே ஒரு பெரிசு, இந்தா மண்டையைப் போடறேன்.. அந்தா மண்டையப் போடறேன்னு இழுத்துட்டுக் கிடக்கு, பாலூத்தி பாலூத்தியே கடனாளி ஆயிடுவேன் போலிருக்கு.. என்ன செய்யன்னு அலுத்துகிட்ட ஒரு அட்டிக்கு நம்மூரு பெரிசு ஒண்ணு சொல்லிக் கொடுத்ததுதான் இந்த இளநீர் டெக்னிக்.

    இப்படி பொசுக்குன்னு போவாத உசுரை, இழுத்துப்பிடிச்சி நல்லெண்ணை வெச்சி.. தலைக்கு ஊத்தி.. அதே தலையைச்சீவிறா மாதிரி இரண்டு இளநீரை வெட்டி குடிக்க கொடு.. பொட்டுன்னு போயிடும்.

    நிஜமாவா?

    அட நானென்ன பொய்யாச் சொல்றேன்..

    இழுத்துப் பறிச்சிட்டு கிடக்கிறதுக்கு போய்ச்சேர்ந்தா நல்லதுதானே என்று கூட்டுச்சதியை கருணைக்கொலை என்று பெயரிட்டுச் செய்வார்கள். இதற்குப் பெயர்தான் தலைக்கூத்தல்.

    கோலாகல சடங்காக நடைபெற்று வந்த தலைக்கூத்தல் சமீபத்தில் சமூக அமைப்புகள், மற்றும் காவல்துறையால் குறைந்திருக்கிறது.

    இதே அதிர்ச்சியோட பழமொழியின் அர்த்தத்தை பார்த்திடலாமா?

    வாழை மரத்தினை தாய் என்றும், தென்னைமரத்தினை பிள்ளை யென்றும் அழைப்பார்கள்.

    வாழை மரத்திற்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்திற்கு பதினாறடி இடைவெளியும் விட்டு நட வேண்டும். அப்போதுதான் அதன் வேர்கள் நீளும் என்பதையே இப்பழமொழி உணர்த்துகிறது.

    நல்ல கதை....முருகனும் விநாயகனும் மாம்பழத்திற்காக ஊரையே சுற்றியது போல இருக்குன்னுதானே நினைக்கிறீங்க. ஒருவழியா எல்லாத்தையும் சுற்றிக்காட்டிட்டீங்கன்னுதானே சொல்றீங்க..

    ஒரு குறிப்பு செய்தியும் சொல்றேன் கேளுங்க... நாகப்பட்டினம் திருத்தெங்கூர் அருள்மிகு வெள்ளிமலைநாதர், தஞ்சாவூர் பாபநாசம் தாலுகா, காவிரி ஆத்துக்கு வடக்கு கரையில் உள்ள வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோவில்களில் தென்னை மரம் தலவிருட்சமாக உள்ளது.

    தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் என்ற பழமொழியின் விளக்கத்தோடு... அடுத்தவாரம் சந்திக்கலாம்.

    -லதா சரவணன்

    • காவிரி கரையோரத்தில் மண் எடுத்து அதில் லிங்கம் செய்து தினமும் அதற்கு மலர் மாலைகள் சூடி வழிபாடு செய்து வந்தாள்.
    • ஜோதி ரூபமாக காட்சி அளிக்கும் சிவபெருமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பார்வதி தேவி முடிவு செய்தாள்.

    கணவன்-மனைவிக்கு இடையே மன ஒற்றுமை இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் அது வாழ்க்கையாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்காது. இம்சையாகத்தான் இருக்கும்.

    கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் எத்தனையோ பிரார்த்தனை தலங்கள் உள்ளன. கும்பகோணத்திலும் பல ஆலயங்களில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கான வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கும்பகோணத்துக்கு மிக அருகில் இருக்கும் திருசத்திமுற்றம் தலம் கணவன்-மனைவி ஒற்றுமைக்கு கை கொடுக்கும் தலமாக கருதப்படுகிறது.

    பொதுவாக ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு புராண நிகழ்வின் பின்னணியில் பலன் கொடுப்பதாக இருக்கிறது. அத்தகைய புராண வரலாற்று பின்னணி கொண்ட தலங்களில் ஒன்றாக திருசத்தி முற்றம் தலம் திகழ்கிறது. கும்பகோணம் அருகே உள்ள இந்த தலத்துக்கு பெயர் வந்த காரணம் ருசிகரமானது. சிவபெருமானுக்கு சக்தியாகிய பார்வதிதேவி கொடுத்த முத்தத்தின் அடிப்படையில் அந்த ஊருக்கு 'சக்தி முத்தம்' என்ற பெயர் ஏற்பட்டது.

    நாளடைவில் பேச்சு வழக்கில் சத்திமுற்றம் என்று மாறிப்போனது. இந்த தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு சிவக்கொழுந்தீசர் மற்றும் தழுவக்குழைந்த நாதர் என்று இரு பெயர்கள் உள்ளன. இந்த இரு பெயர்களும் ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணியில் உருவானதாகும்.

    ஒருமுறை பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டது. இதனால் வழக்கம் போல பார்வதி தேவி பூலோகத்தில் பிறக்க நேரிட்டது. மீண்டும் சிவபெருமானிடம் சென்று சேர வேண்டுமானால் காவிரி நதிக்கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று கூறப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி காவிரி நதிக்கரையில் எந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து லிங்கம் பூஜை செய்வது என்று பார்த்து கொண்டே வந்தாள். அப்போது கும்பகோணம் அருகே தற்போது திருசத்திமுற்றம் பகுதியில் உள்ள இடம் அவளுக்கு பிடித்து போய்விட்டது. இதனால் அங்கேயே பூஜை செய்ய முடிவு செய்தாள்.

    காவிரி கரையோரத்தில் மண் எடுத்து அதில் லிங்கம் செய்து தினமும் அதற்கு மலர் மாலைகள் சூடி வழிபாடு செய்து வந்தாள். அந்த ஈசனையே நினைத்து தவம் இருந்தாள். அவளது தவத்துக்கு மனம் இரங்கிய சிவபெருமானும் அங்கு வந்தார்.

    கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்த பார்வதியை சற்று சீண்டி பார்க்க சிவபெருமான் ஆசைப்பட்டார். அதன்படி காவிரியில் கரை புரண்டு ஓடும் வகையில் வெள்ளம் வருமாறு செய்தார். திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்தாள்.

    காவிரி கரையோரம் உள்ள மணல் லிங்கம் மீது வெள்ளம் புகுந்தால் அதில் கரைந்து லிங்கம் சென்று விடுமே என்று பரிதவித்தாள். அடுத்த வினாடி ஓடோடி சென்று அந்த லிங்கத்தை கட்டிப்பிடித்து இறுகத் தழுவிக் கொண்டாள். இதனால் காவிரி வெள்ளத்தில் இருந்து மணல் லிங்கத்தை அவளால் காப்பாற்ற முடிந்தது.

    இத்தகைய சோதனைகள் இனி வரக்கூடாது என்பதற்காக தனது வழிபாட்டை மேலும் கடுமையாக்க பார்வதி தேவி முடிவு செய்தாள். அதன்படி ஒற்றைக் காலில் நின்றபடி சிவபெருமானை மனதில் நிறுத்தி மிக கடுமையான தவத்தை மேற்கொண்டாள். அவளது இந்த தவத்தை கண்ட ஈசனுக்கு மீண்டும் இரக்கம் பிறந்தது.

    என்றாலும் இன்னொரு சோதனை செய்து பார்க்கலாமா என்று ஈசன் நினைத்தார். பார்வதியின் தவத்தை கலைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். பார்வதி தேவியை அச்சுறுத்தும் வகையில் தீப்பிழம்பாக தோன்றினார்.

    தீயின் வெப்பத்தால் பார்வதி தேவியின் ஒற்றை கால் தவம் கலைந்தது. என்ன இது சோதனை என்று நினைத்த போதே, "தீப்பிழம்பாக எழுந்து நிற்பது ஈசனே" என்று பார்வதி தேவி அறிந்து கொண்டாள். ஜோதி ரூபமாக காட்சி அளிக்கும் சிவபெருமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பார்வதி தேவி முடிவு செய்தாள்.

    ஜோதியே சிவம் என்று சொல்லியபடியே தீப்பிழம்பை பார்வதி தேவி ஆரத்தழுவிக் கொண்டாள். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு அருள்பாலித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அப்போது மகிழ்ச்சி மிகுதியால் சிவபெருமானுக்கு பார்வதிதேவி கன்னத்தில் முத்தமிட்டதாக இந்த ஆலயத்தின் தல வரலாறு குறிப்புகள் உள்ளன.

    அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த தலத்தில் கருவறையின் நுழைவு வாயில் வலது பக்கத்தில் சிவனை அம்பாள் தழுவிய கோலத்தில் ஒரு சன்னதி அமைந்துள்ளது. அம்பாள் ஒற்றைக் காலை தரையில் ஊன்றிய படி மற்றொரு காலை ஆவுடையார் மீது மடக்கி வைத்து தன் இரு கைகளாலும் சிவ லிங்கத்தை தழுவியபடி நிற்பதை அங்கு பார்க்கலாம். இத்தகைய அமைப்புடன் தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் சிவனும், பார்வதியும் இருப்பதை பார்க்க முடியாது.

    பார்வதி தேவியை பரிசோதிக்க சிவபெருமான் ஜோதி பிழம்பாக நின்றதால் அவருக்கு சிவக்கொழுந்தீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கருவறையில் உள்ள மூலவர் திருமேனியில் தீச்சுடர்கள் இருக்கின்றன. அர்ச்சகர் தீப ஆராதனை செய்யும்போது நன்கு உற்றுப் பார்த்தால் இந்த அதிசயத்தை பக்தர்கள் காண முடியும்.

    சிவபெருமான் ஜோதியாக எழுந்து நின்ற போதிலும் துணிச்சலுடன் பார்வதி தேவி தீயை கட்டிப் பிடித்ததால் ஈசன் மனம் உருகிப் போனார் என்பது புராண வரலாறு. இந்த சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே இந்த தலத்து ஈசனுக்கு "தழுவக்குழைந்த நாதர்" என்ற பெயர் ஏற்பட்டது.

    இந்த புராண வரலாறு காரணமாக இந்த ஆலயம் திருமண யோகம் பெறும் அருமையான பிரார்த்தனை தலமாக திகழ்கிறது. பரிகார தலம் என்றும் சொல்கிறார்கள். நீண்ட நாட்களாக திருமணம் கைகூடாமல் இருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் சக்தி தழுவிய ஈசனை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.

    அதிலும் குறிப்பாக சோமவார தினமான திங்கட்கிழமைகளில் சென்று வழிபட்டால் திருமணம் கைகூட விடாமல் செய்யும் தோஷங்களை மிக எளிதாக நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

    காதல் வலையில் விழுபவர்களுக்கு திருமணம் கைகூடாமல் பல பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய சிக்கல்களில் தவிக்கும் காதலர்கள் இந்த தலத்துக்கு வந்து தழுவக்குழைந்த நாதரை வழிபட்டால் தடைகள் விலகி அருமையான இல்வாழ்க்கை அமையும். காதல் வெற்றி பெற இங்கு காதலர்கள் வேண்டிக் கொள்வது உண்டு. மேலும் கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படவும் இந்த தலத்தில் வேண்டிக் கொள்கிறார்கள்.


    சில கணவன்-மனைவிகள் விதி வசத்தால் பிரிவது உண்டு. ஒரு கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவார்கள். அத்தகைய நிலையில் இருப்பவர்களும் இந்த தலத்துக்கு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். குழந்தை பாக்கியம், முன் ஜென்ம பாவ விடுதலை ஆகியவற்றுக்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    அப்பர் இந்த தலத்தில் தங்கியிருந்து ஏராளமான திருப்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு சிவக்கொழுந்தீசர் நேரில் காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. திருஞான சம்பந்தர் வெயில் படாமல் செல்வதற்காக அவருக்கு சிவபெருமான் இந்த தலத்தில் முத்துப்பந்தல் கொடுத்தார். இதை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் வாரம் முத்துப்பந்தல் திருவிழா நடத்தப்படுகிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இந்த ஈசன் மீது தேவார பதிகம் பாடியுள்ளனர்.

    தேவார பாடல் பெற்ற தலங்களில் 85-வது தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. கிழக்கு நோக்கிய இந்த ஆலயம் மிகப்பெரிய ஆலயமாகும். பல்வேறு சன்னதிகள் இங்கு உள்ளன. அம்பாள் தெற்கு நோக்கி பெரிய நாயகியாக அருள் பாலிக்கிறாள். சுவாமி சன்னதி பிரகாரத்தில் ஒரு ஆள் உயரத்துக்கு பைரவர் சிலையுடன் தனி சன்னதி இருக்கி றது. இவ்வளவு உயர பைரவரை தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க இயலாது.

    பார்வதியை தொடர்ந்து அகத்தியருக்கும் இந்த தலத்தில் ஈசன் அருள் பாலித்துள்ளார். அதாவது சிவபெருமானின் திருவடித்தரிசனத்தை இந்த தலத்தில்தான் அகத்தியரால் காண முடிந்தது. நீங்களும் அந்த தலத்துக்கு சென்று வந்தால் உங்களுக்கும் அத்தகைய தரிசனத்தை தந்து நல்ல இல்வாழ்க்கை அமைந்திட சிவக்கொழுந்தீசர் அருள்புரிவார்.

    இந்த தலத்தில் ஏராளமான அபூர்வ கல்வெட்டுகள் உள்ளன. கோவில்களில் வரி வசூல் செய்வது எப்படி? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் இங்கு இருக்கின்றன. இவை அபூர்வமானதாக கருதப்படுகிறது. ஆனால் பக்தர்கள் யாரும் அவற்றை கண்டுகொண்டதாக தெரிய வில்லை.

    இந்த ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். அதற்கேற்ப தரிசன நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். திருசத்திமுற்றம் தலத்தை சுற்றி ஏராளமான மிக பழமையான ஆலயங்கள் இருக்கின்றன. எனவே கும்பகோணம் ஆலய வழிபாடுகளின் போது இவற்றையெல்லாம் நன்கு கவனித்துக் கொண்டு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

    திருசத்திமுற்றம் தலம் போலவே கணவன்-மனைவி ஒற்றுமைக்கு சிறப்பு பெற்ற மற்றொரு தலம் திருவலஞ்சுழி. இந்த தலத்தின் சிறப்புகளை அடுத்த வாரம் காணலாம்.

    • உடல் அழிந்தால் ஆன்மா முக்தி அடையும் அல்லது பிறிதோர் உடலைப் பெறும்.
    • சித்தர்களும் ஞானிகளும் என்றும் இறப்பதில்லை. அவர்கள் தங்கள் உடலை மட்டுமே துறக்கிறார்கள்.

    உடல் என்பதொரு சட்டை. உள்ளே இருக்கும் ஆன்மா உடல் என்கிற சட்டையைத் தரித்துக் கொள்கிறது.

    ஆன்மா நிரந்தரமானது. அதற்கு அழிவே இல்லை. உடல் என்றேனும் ஒருநாள் கட்டாயம் அழியக்கூடியது.

    சென்னை திருவான்மியூரில் கோவில் கொண்டிருக்கும் பெண் சித்தரான சக்கரையம்மா, மனிதர்கள் ஆன்ம வடிவானவர்கள் என்றும், ஆன்மா ஆனந்தமே வடிவானது என்றும், அதை உணர்ந்தால் மனிதர்கள் துன்பப்பட மாட்டார்கள் என்றும் தொடர்ந்து போதித்துள்ளார். நாம் உடல் அல்ல, ஆன்மா என்பதை உணர்ந்துகொண்டால் நிரந்தரமான ஆனந்தம் கிட்டும்.

    உடல் என்பது ஓர் உறை என்றும் அந்த உறையில் ஆன்மா என்கிற வாள் இருப்பதாகவும் வாள் நிரந்தரமானது என்றும் உறை அழியக் கூடியது என்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளார்.

    உடல் அழிந்தால் ஆன்மா முக்தி அடையும் அல்லது பிறிதோர் உடலைப் பெறும். இதையே நம் இந்திய ஆன்மிக மரபு வலியுறுத்துகிறது.

    `ஆன்மா உடுத்திக்கொள்ளும் வஸ்திரமே உடல்` என முழங்கினார் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை. அவர் கோவையில் சிறைப்பட்டிருந்தபோது தத்துவ ஞானியான ஜேம்ஸ் ஆலன் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜேம்ஸ் ஆலன் கருத்தும் இதுவே.

    உடல் என்கிற சட்டை பழுதுபட்டபோது, பயன் படாதபோது, அல்லது அதன் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டுக் காலம் முடிகிறபோது, ஆன்மா அந்தச் சட்டையை உதறிவிட்டு வேறு புதிய சட்டையை அணிகிறது.

    நாம் உடல் போனால் ஏன் அழ வேண்டும்? நிரந்தரமான ஆன்மா என்றும் அழிவதில்லை என்ற உண்மையை உணர்ந்து அமைதி காக்க வேண்டியது அவசியமல்லவா? சட்டையை அதிகம் சட்டை செய்ய வேண்டிய தேவையென்ன?

    நாம் ஆன்மா என்பதை உணரும்போது சட்டையைப் பற்றிய பாசம் தானே உதிர்ந்துவிடுகிறது. பாம்பு சட்டையை உரிக்கிற மாதிரி ஆன்மா உடல் சட்டையை உதறுகிறது.

    இந்த உண்மையை மெய்ஞானிகள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தனர். தங்கள் உடலை அவர்கள் ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை.

    பகவான் ரமணரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் தங்களுக்கு வந்த புற்றுநோயை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அழிவற்றதும் என்றும் நித்தியமானதுமான ஆன்மாவின்மேல் சிந்தையைச் செலுத்திய அவர்களுக்கு உடல் கூட்டைத் துறப்பதில் தயக்கமெதுவும் இருக்கவில்லை.

    `குடம்பை தனித்தொழியப் புள்பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு` என்கிறார் திருவள்ளுவர். அவர் உடலை முட்டையின் ஓட்டுக்கும் உள்ளிருக்கும் பறவையை உயிருக்கும் ஒப்பிடுகிறார்.

    உடலாகிய முட்டை ஓட்டைத் தனித்துக் கிடத்திவிட்டு, உள்ளிருக்கும் உயிர்ப்பறவை விண்ணில் பறக்கிறது என்கிறார். வள்ளுவர் சிந்தனை நம் இந்திய ஆன்மிக மரபைச் சார்ந்த சிந்தனைதான்.

    தங்கள் ஆன்மா தங்கியிருந்த கூடான தங்களின் உடலை மெய்ஞானிகள் உகுத்த விதங்கள் பற்பல.

    ராமலிங்க வள்ளலார் பூட்டிய அறையில் நிஷ்டையில் ஆழ்ந்தார். பலநாள் கழித்துத் திறந்து பார்த்தபோது அங்கே வள்ளலார் இருந்த சுவடே இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பஞ்ச பூதங்களிலேயே பிரித்துக் கரைத்துவிட்டார் அவர்.

    திருவொற்றியூரில் பட்டினத்தார் சித்தி அடைந்த விதம் விந்தையானது. தன்னைக் கூடையால் மூடுமாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் சொன்னார் அவர். அவர்கள் அவ்விதமே மூடினார்கள்.

    கூடையில் இருந்து அவர் மறைந்துபோனார். பின் வேறோர் இடத்தில் இருந்து சிரித்தவாறே நடந்து வந்தார்.

    சிறுவர்கள் திகைத்தார்கள். மறுபடி அவரைக் கூடையால் மூடினார்கள். மறுபடி அவர் சிரித்தவாறே எங்கிருந்தோ வந்தார்.

    சிறுவர்களுக்கு இது ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு மறுபடி மறுபடி நிகழ்ந்தது.

    ஆனால் இறுதியாகப் பட்டினத்தாரைக் கூடையால் மூடியபோது அவர் எங்கிருந்தும் திரும்பி வரவேயில்லை.

    சிறுவர்கள் திகைத்துப் போய்க் கூடையைத் திறந்து பார்த்தால், பட்டினத்தாருக்குப் பதிலாக அங்கே ஒரு சிவலிங்கம் காட்சி தந்தது. பட்டினத்தார் சிவத்தில் கலந்து, சவமாக மாறாமல் சிவமாக மாறிவிட்டார்.

    யோகி பரமஹம்ச யோகானந்தர் சித்தி அடைந்தபோது, அவர்முன் எழுநூறு பேர் அமர்ந்திருந்தனர். வெளிதேசத்தில் அமெரிக்காவில், பாஸ்டன் நகரில், அவர் மகாசமாதி அடைந்தார்.

    தான் உடலை விடும் முன்பே, 'நான் உடலை விடப்போகிறேன்' என்பதை அவர் தெளிவாக அறிவித்திருந்ததால், பற்பல விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் அந்தக் காட்சியைப் பார்க்கவென்றே வந்து அமர்ந்திருந்தனர்.

    வந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார் யோகானந்தர். பின்னர், 'இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்' என்று அறிவித்தார். பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு விழிகளை மூடிப் பலர் முன்னிலையில் நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்படியே தன் உடலை நீத்தார்.

    மருத்துவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்தார்கள். இப்படியும் ஒருவர் தாமே விரும்பி உடலை உகுக்க முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

    மருத்துவ விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, உடலில் நலிவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று கருதப்படுகிறது.

    ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் சிரித்துக்கொண்டே, 'இப்போது நான் உடலைத் துறக்கப் போகிறேன்' என்று சொல்லிவிட்டு, உடலைத் துறப்பதை மருத்துவர்கள் எங்கும் அதுவரை பார்த்திருக்கவில்லை.

    சித்தி அடைந்த பரமஹம்ச யோகானந்தரின் உடல் நூற்றுப் பதினோரு மணிநேரம் எந்தச் சிதைவும் இல்லாமல் பூப்போல அப்படியே இருந்தது. ஏராளமான அன்பர்கள் அந்த அதிசயத்தைத் தரிசித்துப் பரவசம் அடைந்தார்கள்.

    பரமஹம்ச யோகானந்தரின் குருவான யுக்தேஸ்வர கிரியும் தன் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே தெரிவித்தார். அதுமட்டுமல்ல, அவர் தம் உடலைத் துறந்த மறுநாளே தமது சீடரான பரமஹம்ச யோகானந்தருக்கு மறுபடி தன் உடலோடு ஒருமுறை காட்சி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

    ஒவ்வொரு யோகியும் ஒவ்வொரு சித்தரும் தன் உடம்பைத் துறந்துவிடும் நிலை ஒவ்வொரு வகையில் தனித்துவமானது. மகா சமாதி என அந்நிகழ்வு அழைக்கப்படுகிறது. 

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    தன் உடலை ஒரு சட்டையைக் கழற்றுவதுபோல மிக எளிதாக நீக்கிவிட்டு அவர்கள் தங்கள் உடலை விட்டுப் புறப்பட்டு விடுகிறார்கள்.

    மகாசமாதி நிலையை மரணமடைதல் என்று சொல்ல முடியாது. சொல்லக்கூடாது. அது சாகாநிலை எனப்படுகிற மரணமிலாப் பெருவாழ்வு. அவர்கள் செயல்படுவதற்கு இனி இந்த தேகம் தேவையில்லை என்பதாலும் தேகமில்லாமலே ஆன்மாவாகவே அவர்களால் செயல்பட முடியும் என்பதாலுமே அவர்கள் மகாசமாதி அடைகிறார்கள்.

    ஸ்ரீஅரவிந்தர் புதுச்சேரியில் தம் உடலைத் துறந்தபோதும் இத்தகைய அதிசயம் நடந்தது. நூற்றுப் பதினோரு மணி நேரம் அவர் உடலைச் சுற்றி வசீகரமான ஒரு பொன்னொளி பரவியிருந்தது.

    பொதுமக்கள் சாரைசாரையாக வந்து அந்தப் பொன்னொளி சூழ்ந்த புனித உடலை தரிசித்து வணங்கிவிட்டுச் சென்றார்கள். அவர் உடலில் அவர் இறந்துவிட்டதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை என்று மருத்துவர்கள் வியப்போடு சான்றுரைத்தார்கள்.

    அவர் உடலின் அருகே சலனமின்றி அமர்ந்திருந்தார் ஸ்ரீஅன்னை. அவரின் ஆழ்மனத்தில் ஸ்ரீஅரவிந்தர் உடலைச் சமாதியில் வைக்க ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து உத்தரவு கிடைத்த பின்னரே அவர் அவ்விதம் செய்வதற்கு அனுமதி அளித்தார்.

    பிரசண்ட விகடன் பத்திரிகை ஆசிரியரும் தரங்கிணி என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளருமான அமரர் நாரண துரைக்கண்ணன், அரவிந்தரைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

    அதில் அரவிந்தர் மேனி தங்க விக்கிரகம்போல் ஜொலிப்பதாகவும் அவரது வலதுகாலில் ஒரு நரம்பு மட்டும் சற்றே மாநிறத்தில் தென்படுவதாகவும் தியானத்தின் மூலம் அதுவும் தங்கநிறம் பெற்றால் அவர் மேனி தங்கத்தால் ஆன உற்சவ மூர்த்திபோல் ஆகிவிடும் என்றும் ஸ்ரீஅரவிந்தர் உடலுடன் வாழ்ந்த காலத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஸ்ரீஅரவிந்தர் உயிர் நீத்தபின் அவர் உடல் பொன்னுடலாகத் தென்பட்டதிலும் அவர் உடலைச் சுற்றிப் பொன்னொளி பரவியதிலும் ஆச்சரியமென்ன? இன்றும் பொன்னுடல் நீத்துப் புகழுடல் எய்திய மகான் ஸ்ரீஅரவிந்தர் தன் அடியவர்களுக்குப் பாதுகாவலாக இருந்து அருளாசி வழங்கி வருகிறார்.

    கபீர்தாசர் சித்தி அடைந்தபோது, அவர் உடல் ஒரு துணியால் போர்த்தப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அந்தப் போர்த்தப்பட்ட துணிக்கு உள்ளிருந்து மலர்களின் நறுமணம் பரவுவதை உணர்ந்தார்கள் அடியவர்கள்.

    ஆச்சரியத்துடன் துணியை அவர்கள் விலக்கிப் பார்த்தபோது, கபீர்தாசர் உடல் இருந்த இடத்தில் அந்த உடலைக் காணோம். ஒரு ரோஜா மலர்க்குவியல்தான் தென்பட்டது.

    பகவான் ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் கலந்து மறைந்தது. நாவலாசிரியர் கல்கி கிருஷ்ண மூர்த்தி, இந்த அதிசய சம்பவத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

    சதாசிவப் பிரம்மேந்திரர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சித்தி அடைந்ததாகக் கூறுகிறார்கள். இன்றும் திருச்சி, கரூர் அருகே உள்ள நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் அவர் அருளாட்சி செய்வதை அவரது அடியவர்கள் உணர்ந்து நெகிழ்கிறார்கள்.

    சித்தர்களும் ஞானிகளும் என்றும் இறப்பதில்லை. அவர்கள் தங்கள் உடலை மட்டுமே துறக்கிறார்கள். தங்கள் அடியவர்களின் மனத்தில் தோன்றி அவர்கள் வாழ்வில் பற்பல அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள்.

    அற்புதங்களில் எல்லாம் மேலான அற்புதம் மனத்துக்கண் மாசில்லாது இருப்பதே. சித்தர்களை வழிபடுகிறவர்களின் ஆழ்மனத்தில் அந்தச் சித்தரின் அருள் செயல்பட்டு அடியவர்களின் மன மாசுகளை அழிக்கிறது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • கடந்த ஆண்டை விட 6.5 சதவீதம் கூடுதல் என்றும் தெரிய வருகிறது.
    • தினை அரிசி உணவுகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பேருதவி புரியும்.

    மஞ்சள், மிளகு, ஏலக்காய் போன்ற மருத்துவ குணம் வாய்ந்த மணமூட்டிகளின் பிறப்பிடமாய் திகழ்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியப்படும் வண்ணம் ஆரோக்கியத்தின் அடையாளமாக இருந்த நாடு நம் நாடு. ஆனால் இன்று இனிப்பு தேசமாகி சர்க்கரை நோயில் முன்னிலை வகிப்பது என்பது நவீன வாழ்வியலுக்கு கிடைத்த பரிசு என்றே சொல்லலாம்.

    இதில் கூடுதல் வருத்தம் என்னவெனில், சர்க்கரை நோய்க்கான மருந்து விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடாக விளங்குவது நம் நாடு தான். சமீபத்திய புள்ளி விவரங்களின் படி 2023-ம் ஆண்டில் சர்க்கரை மருந்துகளின் விற்பனை மட்டும் 12500 கோடிக்கும் மேல் என்கின்றன தகவல்கள். இது கடந்த ஆண்டை விட 6.5 சதவீதம் கூடுதல் என்றும் தெரிய வருகிறது.

    உலகத்திற்கே ஆரோக்கியத்தை அள்ளித் தந்த நம் நாடு, இன்று அதற்காக உலக நாடுகளை நம்பி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. நமது பாரம்பரிய மருத்துவ அறிவையும், உணவு முறைகளையும் மறந்து போனதால் இழப்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தான். முதுமையில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உள்ளுறுப்புகள் பாதிப்பைத் தடுக்கும். எனவே நீரிழிவு நோய்க்கு மருந்து மாத்திரைகளை மட்டும் நம்பியிராமல் உணவுக்கட்டுப்பாடு இருப்பதும் அவசியம்.

    முதுமையில் உடல் செல்கள் அதிகம் தேய்மானம் அடைவதால் அத்தகைய செல்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு சத்தான உணவு அவசியமாகின்றது. அத்தகைய சத்தான உணவை உண்ண வேண்டும், அதே போல் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது முதுமையில் மிகப்பெரிய சவாலாகிறது.

    உணவுப்பொருட்களில் குறைந்த கிளைசெமிக் குறியீடு (ஜி.ஐ) கொண்ட உணவுப் பொருட்களை நாடுவது நல்லது. கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது கார்போஹைட்ரேட் (சர்க்கரை சத்து) கொண்ட உணவுப் பொருட்களின் மதிப்பீட்டு அளவாகும். ஒவ்வொரு உணவும் ரத்தச் சர்க்கரை அளவை (குளுக்கோஸ்) எவ்வளவு விரைவாகப் பாதிக்கக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

    பிரட், கேக் போன்ற அடுமனை (பேக்கரி) உணவுகள் அதிக சர்க்கரை சத்தைக் (ஜிஐ) கொண்டவை. குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட குறு தானியங்களான தினை, வரகு, சாமை, குதிரைவாலி, பாரம்பரிய அரிசி வகைகளான கறுப்பு கவுனி, மணிச்சம்பா இவற்றை நாடுவது முதுமையில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். "நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்" என்கிறது அகத்தியர் குணவாகடம்.

    அதிலும் தினை அரிசி உணவுகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பேருதவி புரியும். தினை அரிசி அதிக புரதசத்தையும், நார்ச்சத்தையும், உடலுக்கு பலன் தரும் பல்வேறு கனிம சத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் குறைந்த அளவு சர்க்கரை சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் நீரிழிவு நோயுள்ள பலரும் சர்க்கரை சத்துள்ள அரிசியை தவிர்க்க விரும்பி, கோதுமையை நாடுவது வாடிக்கையாகிவிட்டது. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சப்பாத்தியை உணவாக பலர் நாடுவது பலன் அளிக்காது. உண்மையில் அரிசிக்கு ஏறத்தாழ நிகரான சர்க்கரை சத்தினைக் கொண்டது தான் கோதுமை.

    கோதுமையில் உள்ள 'குளுட்டன்' வேதிக்கூறு உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களின் உட்கிரகித் தலையும் தடுக்க கூடியதாக உள்ளது. ஆகவே சர்க்கரை கட்டுப்பட கோதுமை உணவுகளை நாடுவதற்கு பதிலாக, சிறுதானிய அடை அல்லது சிறுதானிய சப்பாத்தியை நாடுவது நலம் பயக்கும். கம்பு, சோளம், கேழ்வரகு, கொள்ளு சேர்ந்த உணவுப்பொருட்கள் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன் பல்வேறு கனிம சத்துக்களையும் கொண்டுள்ளன. காலை மற்றும் இரவில் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    நீரிழிவு நோயினர் எந்த அளவுக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும்? என்று பார்த்தால், நாம் உண்ணும் தட்டில் முதலில் அரை தட்டின் அளவுக்கு பல்வேறு நிறங்களைக் கொண்ட காய்கறிகளையும், பின்னர் கால் தட்டின் அளவிற்கு சிறு தானியம் சேர்ந்த உணவுகள் அல்லது பாரம்பரிய அரிசி வகையிலான சிகப்பரிசி, கருப்பு கவுனி அரிசி போன்ற சர்க்கரை சத்தும் நார்ச்சத்தும் சேர்ந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் விதத்தைக் கையாள வேண்டும். இதனால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வருவதோடு இன்னும் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

    குறிப்பாக ஒரே வேளையில் அதிக உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக சிறிது சிறிதாய் உணவை ஆறு வேளை வரை எடுத்துக்கொள்வது நல்லது. இது தடாலடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவும். தினசரி ஒரே நேரத்தில், நேரம் தவறாமல் உணவு எடுத்துக்கொள்வதும் கூடுதல் அவசியம். உணவுடன் கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், கத்திரிப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, முட்டைகோஸ், காளான், காலிபிளவர், வெங்காயம், புரோக்கோலி, சுரைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல் கீரை வகைகளில் ஆவாரை கீரை, முருங்கை கீரை, வெந்தய கீரை, கொத்துமல்லி கீரை, வல்லாரை, முசுமுசுக்கை ஆகிய கீரைகளில் ஒன்றை தினசரி சேர்த்துக்கொள்வதும் நல்லது.

    சர்க்கரை சத்து நிறைந்த வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. நார்சத்து நிறைந்த பிஞ்சுக் காய்கறிகளை சேர்ப்பது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, குடல் நலத்தை அளிக்கும். மேலும் நார்சத்துக்களை அதிகம் சேர்ப்பதால் ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதோடு, குடல் வாழ் நுண்கிருமிகளுக்கும் நன்மை பயக்கும்.

    பால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை சார்ந்த பல்வேறு ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீரிழிவு நோயை பொறுத்தவரை சர்க்கரை நோய்க்கு காரணமாகும் இன்சுலின் தடைக்கு பால் ஒரு காரணி என்கிறது நவீன அறிவியல். சித்த மருத்துவமும் பால், கபத்தை அதிகரிக்கும் பொருளாக குறிப்பிடுகின்றது.

    பாலில் உள்ள 'பால்மிடிக் அமிலம்' எனும் வேதிப்பொருள் இன்சுலின் தடையை உண்டாக்கி நீரிழிவு நோய் மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சிதை மாற்ற நோய்களான உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் இவற்றுக்கும் அடித்தளமிடும் என்கின்றன ஆய்வுகள். மாற்றாக இஞ்சி அல்லது சுக்கு, கொத்து மல்லி விதை, வெந்தயம், புதினா இவற்றை சேர்த்து தேநீராக்கி அவ்வப்போது எடுத்துக் கொள்வது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும்.

    மேலும் இறைச்சி, வெண்ணெய், பாலாடைக்கட்டி, பனை எண்ணெய் இவற்றிலும் பால்மிடிக் அமிலம் அதிகம் உள்ளது. குறிப்பாக 'பால்மிடிக் அமிலம்' அதிகம் உள்ள பனை எண்ணெய் (பாம் ஆயில்) சேர்ந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது, இதய நோயை நம் வாசலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும்.

    சர்க்கரை நோயில் துரித உணவுகளையும், நொறுக்கு தீனிகளையும் தூர எறிய வேண்டியது அவசியம். செயற்கை வேதிப்பொருட்களும், சுவைக்கு உப்பும், இனிப்புக்கு அதிக சர்க்கரையும், 'ட்ரான்ஸ் பாட்' எனும் கொழுப்பும், கலந்ததாக பெரும்பாலான துரித உணவுப்பொருட்கள் உள்ளன. இவை சர்க்கரை நோயில் இதய நோயை அழையா விருந்தாளியாக்கி ஆயுளை சுருக்கும். எனவே இயற்கை உணவுப்பொருட்களை நாடுவது நல்லது.

    நீரிழிவு நோயில் பழங்களை பயன்படுத்துவதில் பலருக்கு குழப்ப நிலை உள்ளது. பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை சத்துடன், உடல் செல்கள் அழிவைத் தடுக்கும் இயற்கை நிறமிச்சத்துக்களும், விட்டமின்களும், கனிம சத்துக்களும் உள்ளன. ஆகவே பழங்களை அவ்வப்போது உணவுக்கு முன் சேர்த்துக்கொள்வது நல்லது.

    முக்கியமாக மா, பலா, வாழை ஆகிய பழங்களை தவிர்ப்பது நல்லது. மலச்சிக்கலைப் போக்கும் என்று வாழைப்பழத்தை இரவில் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை அளவு கூடும் அபாயம் உள்ளது. மாற்றாக இலந்தை, நெல்லி, வில்வம், விளா ஆகிய நம்ம ஊர் பழங்களை சேர்ப்பது நல்லது.

    ஆப்பிள், கொய்யா, பப்பாளி, மாதுளை இவற்றை அவ்வப்போது எடுக்கலாம். நெல்லியும், மாதுளையும் நீரிழிவு நோயில் சிறுநீரக பாதிப்பை தடுப்பதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. உலர்ந்த திராட்சையில் அதிக சர்க்கரை சத்து இருப்பினும், அதன் விதைகளில் உள்ள 'ரெஸ்வெரட்ரால்' எனும் வேதிப்பொருள் இதய நலனுக்கு மிகச்சிறந்தது.

    உணவில் இனிப்பு என்பதே சேர்த்துக்கொள்ளவே கூடாதா? அதற்கு மாற்று ஏதேனும் உண்டா? என்பது முதுமையில் பலரின் கேள்வி. செயற்கை இனிப்புகளான சாக்ரின், அஸ்பார்ட்டமே, அசீசல்பேம் போன்றவை நாவிற்கு சுவை வழங்ககூடியன. இருப்பினும் அறிவியல் உலகத்தின் இந்த புதுப்புது கண்டுபிடிப்புகளும் நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுகின்றன சமீபத்திய ஆய்வுகள். மாறாக 'ஸ்டீவியா' எனும் 'சர்க்கரை துளசி' பொடியை இனிப்புக்கு மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மறந்து போன மரபு மருத்துவமும், மரபு வாழ்வியலும் இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நீரிழிவு நோய் போன்ற மரபணு ரீதியான நோய்கள் உருவாக காரணமாக உள்ளன. துரித உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் அதற்கு கூடுதல் துணை புரிவதாக உள்ளன. எனவே முதுமையில் மருந்துகளுடன், தியானமும், யோகா பயிற்சிகளும், நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் நீரிழிவு நோயினை தோழமையாக்கி, ஆரோக்கியமான வாழ்நாளை வடிவமைக்க முடியும்.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு.
    • ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்க விரும்பும் அனைத்து புண்ணியத்தையும் கொடுக்கும் விரதம்.

    பணம் அனைவருக்கும் மிக முக்கியமான விஷயம். பணம் உள்ள நபருக்கு சொத்து, புகழ், கவுரவம், அதிகாரம் எல்லாம் உண்டு. பணம் உள்ளவனையே சக்தி வாய்ந்தவன் என்று நம்புகிறார்கள். பல வீடுகளில் பணப் பற்றாக்குறையால் பரஸ்பரம் தகராறுகள் ஏற்படுகிறது. போதுமான பணம் இல்லாததால், உறவுகளில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் அன்பு இருந்தால் மட்டுமே வாழ்க்கை அழகாக இருக்கும்.

    பணப்பற்றாக்குறை மற்றும் கடனில் சிக்கித் தவிக்கும் பலர் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.

    சிலர் பணம் சம்பாதிப்பதற்காக ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் தனது தேவைகளை பூர்த்தி செய்ய பணம் சம்பாதிப்பது அவசியமாகிறது. மனிதர்கள் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் தோஷமுள்ளதாக இருப்பது என்று ஜோதிடம் கூறுகிறது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே அதிர்ஷ்டசாலியாக செல்வச் செழிப்புடன் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பற்றிக் கூறும் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்றால் சிறிய முயற்சியில் அல்லது எந்த முயற்சியும் செய்யாமல் அதிர்ஷ்டம் வெகு விரைவில் கிடைக்கிறது. ஐந்தாமிடமும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பலம் குறைந்தால் எளிதில் அதிர்ஷ்டம் வசப்படுவதில்லை. மனிதனை இயக்கும் சக்தியான நிலையான செல்வத்தை அடையும் மார்க்கத்தை நமது முன்னோர்கள் சில குறிப்பிட்ட வழிபாட்டு, விரத முறையால் அடைய முடியும் என்று உபதேசித்துள்ளார்கள். அத்தகைய விரதங்களில் ஒன்று தான் ஏகாதசி விரதம் .

    ஏகாதசி விரதம்

    திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு. திதிகளில் மிகவும் உன்னத மானதாகவும், உயர்வானதாகவும் கருதப்படுவது ஏகாதசி திதி. ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினொன்றாம் நாள் என்று பொருள். ஏகம்+தசம் (10+1) ஏகாதசித் திதியின் அதிபதி மகா விஷ்ணு என்பதால் இந்த நாளில் அவரை வழிபடுவதால் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

    மகா விஷ்ணுவை நினைத்து வழிபடும் விரதங்களில் முதன்மையானதாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருப்பது ஏகாதசி விரதம். மனிதப் பிறவியில் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி, நிறைந்த செல்வம் பாக்கிய பலன் மற்றும் முக்தியைத் தரும் விரதமாகும்.

    ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்க விரும்பும் அனைத்து புண்ணியத்தையும் கொடுக்கும் விரதம். புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் 'அஸ்வமேத யாகம்' செய்த பலன் கிடைக்கும். காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை, தாய்க்கு சமமான தெய்வம் இல்லை, கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன.

    வைகுண்ட ஏகாதசி

    ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதி வந்தாலும் மார்கழி மாதத்தின் வளர்பிறை வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு பெற்றது. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி மாத சுக்லபட்ச வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய மகாவிஷ்ணு மூன்று கோடி தேவர்களுடன் பூலோகத்தில் எழுந்தருளினார். எனவே வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

    தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், தேவ லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள். இதன்படி மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் 'உஷத் காலம்" என்கிறோம்.

    இந்த நேரத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. அன்று விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசல் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது. வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள். இத்தகைய சிறப்பு மிகுந்த வைகுண்ட ஏகாதசி திருக்கணித பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் மார்கழி மாதம் 7-ம் நாள் (23.12 2023) அன்று பரணி நட்சத்திரத்தில் சனிக்கிழமை வருகிறது.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை

    ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். மறு நாள் ஏகாதசி அன்று அதிகாலையில் நீராடி பெருமாள் கோவிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனை வணங்க வேண்டும். நாள் முழுவதும உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாம ஸ்தோத்திரங்களையும் பாடல்களையும் பாராயணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம். அல்லது மிக எளிமையாக 'ஓம் நமோ நாராயணாய" என்று கூறிக்கொண்டே இருந்தால் கூட போதுமானது.

    மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி பகவானின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை படைத்து இயன்ற அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்பவர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். வயோதிகர்கள், உடல் நலம் குறைந்தவர்கள் உப்பு, சர்க்கரை சேர்க்காத திரவ உணவு மற்றும் இறைவனுக்கு சமர்ப்பித்த பழங்களை உண்ணலாம்.

    கர்மவினை தொடர்பான தாக்கத்திலிருந்து விடுபட சனிக்கிழமை மிக உகந்த நாள். மகாவிஷ்ணு வழிபாட்டை சனிக்கிழமை கடைபிடிக்க உன்னதமான பலன் கிடைக்கும்.

    ஏகாதசியன்று உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றால் சுய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் செயலற்றுப் போகும். வறுமை விலகி நிலையான நிரந்தரமான முன்னேற்றம் கிடைக்கும்.

    விரதத்தினால் ஏற்படும் பலன்கள்

    மகாவிஷ்ணு படத்திற்கு துளசி மாலை அணிவித்து, அவல், லட்டு வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பொருளாதாரம் தொடர்பான அனைத்து குறைகளும் சீராகும்.

    சகல செல்வங்களும் உண்டாகும்.

    தொழிலில், உத்தியோகத்தில் ஏற்றம் கூடும். கொடுத்த பணம் வசூலாகும். தீராத நோய்கள் அகலும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். பித்ரு தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் அகலும். முக்தி கிடைக்கும். உடலும், ஆன்மாவும் சுத்தமடையும்.

    மார்கழி 7 (23.12.2023) சனிக்கிழமை, ஏகாதசி

    வைகுண்ட ஏகாதசி திதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் வருகிறது. ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் சுக்கிரன் இருக்கும் ஆண்கள், சுக்கிரன்+சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் சுக்கிர, சனி தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமி படத்திற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

    மார்கழி 8, 24.12.2023 ஞாயிற்றுக் கிழமை, துவாதசி, கிருத்திகை நட்சத்திரம்.

    ஞாயிற்றுக்கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். கிருத்திகை சூரியனின் நட்சத்திரம்.

    ஞாயிற்றுக்கிழமையும், கிருத்திகை நட்சத்திரமும் துவாதசி திதியும் இணைந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபட அரசு உத்தியோகம் கிடைக்கும். அரசாளும் யோகம் கிடைக்கும்.

    கண் தொடர்பான பாதிப்புகள் அகலும்.தந்தையின் அன்பும், ஆசிர்வாதமும் கிடைக்கும். சமுதாய அந்தஸ்து, கவுரவம்'புகழ், வெற்றி, தைரியம் உங்களை வழி நடத்தும்.

    பித்ரு தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷத்தால் குடும்பத்தில் முன்னேற்றம் குறைவு இருப்பவர்கள் துவாதசி திதி அன்று இயன்ற உணவு தானம் தண்ணீருடன் சேர்த்து வழங்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

    சுய ஜாதகரீதியான சங்கடங்கள் விலகி நிம்மதி அடைய ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • வீட்டு வாசலில் கருட கொடி கிழங்கு கட்டுவது மிக மிக நல்லது.
    • 9 கலசங்கள் கொண்ட ஆலய கோபுரங்களை தரிசனம் செய்தால் திருஷ்டி விலகும்.

    கல் அடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அதாவது கண் திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதனைத்தான் இப்படி சொல்வார்கள். பொறாமைக்காரர்களின் ஏக்கப் பார்வைதான் அல்லது எரிச்சல் பார்வைதான் தோஷமாக மாறி தாக்கி விடுவது உண்டு.

    பொதுவாக பார்வையை சுப பார்வை, அசுப பார்வை என்று இரண்டு வகையாக குறிப்பிடுவார்கள். பாசத்தோடு பார்ப்பது சுப பார்வை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது உறவுகள் மீது அந்த பார்வை பார்ப்பார்கள். சித்தர்கள், ஞானிகள் பார்வையும் சுப பார்வை தான். சில சித்தர்களின் பார்வை பட்டாலே தோஷம் விலகி ஓடி விடும் என்று சொல்வது இதனால்தான்.

    ஆனால் சிலரது பார்வை ஒருவரை அல்லது அவரது குடும்பத்தினரை படாதபாடு படுத்தி விடும். பார்வைக்கு அந்த அளவுக்கு தீய சக்தியை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. பொறாமைக்காரர்களாலும், கெட்ட எண்ணத்துடன் இருப்பவர்களாலும் இந்த தீய சக்தி ஏற்படுவது உண்டு.

    கண் திருஷ்டியினால் ஏற்படும் தோஷம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கும். சிலருக்கு பாதிப்பு குறைவாக இருக்கலாம். சிலருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். எப்படி இருந்தாலும் தொடர்ந்து காணப்படும் சில அறிகுறிகளால் கண் திருஷ்டி தோஷத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

    குறிப்பாக கண் திருஷ்டி தோஷம் அதிகமாக இருந்தால் குடும்பத்துக்குள் அமைதி இருக்காது. நன்றாக இருந்த கணவன்-மனைவிக்கு இடையே கூட பிரச்சினை வந்து விடும். சொந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி தோஷத்தால் அடுத்தடுத்து தடைகள் ஏற்படலாம், லாபங்கள் குறையலாம். சிலருக்கு மிகப்பெரிய பொருள் இழப்பு கூட ஏற்படும்.

    சில வகை கண் திருஷ்டி தோஷங்கள் மிக மோசமானவை. சோகத்தை கூட ஏற்படுத்தி விடக்கூடும். எனவேதான் கிராமங்களில் திருஷ்டி கழிப்பதை பெரும்பாலானவர்கள் ஒரு சடங்காகவே வைத்திருப்பது உண்டு. பெண்கள் தங்களுக்கு மன சோர்வோ, அல்லது விரக்தியோ ஏற்பட்டுவிட்டால் உடனே திருஷ்டி கழிப்பதை தான் முதன்மையாக மேற்கொள்வார்கள்.

    சிலர் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கும் திருமண விழா, கோவில் விழா போன்றவற்றுக்கு சென்று விட்டு வந்தாலே திருஷ்டி கழித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள். இதையெல்லாம் செய்யாவிட்டால் கண் திருஷ்டி தோஷம் தீவிரமாகி கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

    இத்தகைய சூழ்நிலையில் ஒருவரது ஜாதக அமைப்பு கை கொடுக்காவிட்டால் கண் திருஷ்டி தோஷங்கள் நீண்ட நாட்களாக நீடிக்கும் நிலைக்கு வந்து விடும். குறிப்பாக ஒருவரது ஜாதகத்தில் 1, 5, 9-ம் இடங்களில் மாற்றி இருந்தால் அவர்களை கண் திருஷ்டி தோஷம் எளிதில் தாக்கும் என்பார்கள்.

    சனி, ராகு, கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டாலும் கண் திருஷ்டி தோஷத்தால் பாதிப்பை சந்திக்க நேரிடும். எப்படி இருந்தாலும் கண் திருஷ்டி தோஷத்தை உடனுக்குடன் நீக்கி விடுவது நல்லது. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய ஆதிகாலத்தில் இருந்தே தமிழர்களிடம் எத்தனையோ பழக்கவழக்கங்கள் வாழ்க்கையின் ஒரு மரபு போலவே மாறி இருக்கிறது.

    இந்த மரபு பழக்கவழக்கங்களை எதற்காக செய்கிறோம் என்பது தெரியாமல்கூட தற்போதைய தலைமுறையினர் உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கற்பூரத்தை உடல் முழுக்க சுற்றி வீட்டு வாசல் படியில் ஏற்றுவதை மிகச் சிறந்த கண் திருஷ்டி தோஷ நிவர்த்தி என்று சொல்வது உண்டு. ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலக தலைமுறையினர் இதை கிண்டல் செய்கிறார்கள். கற்பூரத்தை கொளுத்தினால் எப்படி தோஷம் நீங்கும் என்று கேட்கிறார்கள்.

    இது போல நம்மிடையே பின்னிப்பிணைந்து இருக்கும் தோஷ நிவர்த்திகள் ஏராளம் உள்ளன. தேங்காயை தலையை சுற்றி எடுத்து சிதறு காய் உடைப்பது தோஷ நிவர்த்திதான். கல் உப்பை தண்ணீரில் கலந்து குளிப்பது மிக சிறந்த தோஷ நிவர்த்தி ஆகும்.

    குலை தள்ளிய வாழை மரத்துக்கு தோஷத்தை ஈர்த்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. பொறாமைக்காரர்கள், எரிச்சல்காரர்கள் ஒரு விழாவுக்கு வரும்போது மோசமான பார்வை பார்த்தால் அதனால் ஏற்படும் தோஷத்தை வாழை மரங்கள் தங்களுக்குள் ஈர்த்து வைத்துக் கொள்வதாக ஆதிகாலத்தில் இருந்தே நம்பிக்கையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் திருமண விழாக்களில் வீட்டு வாசலில் குலை தள்ளிய வாழை மரங்களை கட்டுவதை பார்த்து இருக்கலாம்.

    வாழையை போன்று பூசணிக்காய்க்கும் கண் திருஷ்டி தோஷத்தை விரட்டும் ஆற்றல் உண்டு. ஒரு வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி முடிந்ததும் குடும்பத்தி னர் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து பூசணிக்காயை சுற்றி உடைப்பதை பார்த்து இருப்பீர்கள். ஒரு குடும்பத்தில் புதிதாக குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை கன்னத்தில் அவசியம் திருஷ்டி பொட்டு வைக்க வேண்டும். எல்லா பெண்களுக்கும் இந்த தோஷ நிவர்த்தி நிச்சயம் தெரிந்திருக்கும். அதுபோல குழந்தையின் கால் கட்டை விரலில் கறுப்பு மை வைக்கும் பழக்கமும் உண்டு. சில இடங்களில் குழந்தைகளின் கையில் செம்பு வளையல் கட்டி விடுவார்கள்.

    வீட்டுக்குள் கண் திருஷ்டி தோஷம் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் கண் திருஷ்டி விநாயகர், முகம் பார்க்கும் கண்ணாடி, மீன் தொட்டி, கற்றாழை, சப்பாத்தி கள்ளி, மஞ்சள், ரோஜா செடி ஆகியவற்றை வைக்கலாம். வியாபாரம், தொழில் செய்யும் இடம் என்றால் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்ச பழத்தை வெட்டி ஒரு பகுதியில் குங்குமத்தையும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியையும் தடவி வீட்டு வாசலில் வைக்கலாம்.

    வீட்டு வாசலில் கருட கொடி கிழங்கு கட்டுவது மிக மிக நல்லது. இதை ஆகாய கருடன் கிழங்கு என்று சொல்வார்கள். நாட்டுமருந்து கடைகளில் இது கிடைக்கும். இதன் மீது மஞ்சள், குங்குமம் தடவி வீட்டு வாசலில் கட்டி விட்டால் கண் திருஷ்டி நீங்கும். அது போல படிகாரம், சோத்து கற்றாழை, விநாயகர் படம், மிளகாய், எலுமிச்சம் பழம் கட்டி தொங்க விடுவதும் திருஷ்டியை தடுக்கும் என்கிறார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பார்வையில் படும்படி பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பூக்களை மிதக்க வைத்தால் அவை திருஷ்டியை தடுக்கும் என்கிறார்கள்.

    சில ஊர்களில் 4 மூலை சந்திக்கும் இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து வந்து வீட்டில் உள்ளவர்களுக்கு சுற்றி போட்டால் கண் திருஷ்டி விலகி விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கடல் தீர்த்தம், புண்ணிய நதி தீர்த்தங்கள் கோமியம் போன்றவற்றைவீடு, கடைகளில் தெளித்தால் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். யாருடைய வீட்டில் தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம், காயத்ரி மந்திரம், கோளறு பதிகம் ஒலிக்கிறதோ அந்த வீட்டில் தோஷம் நுழையவே நுழையாது.

    அது போல வீட்டில் குல தெய்வத்துக்கு நெய் தீபம் ஏற்றி மல்லிகை பூ அலங்காரம் செய்து வழிபட்டால் கண் திருஷ்டிகள் வந்த வழியே திரும்பி சென்று விடும். திருஷ்டி மிக கடுமையாக இருப்பதாக கருதினால் கணபதி ஹோமம் அல்லது மகாசுதர்சன ஹோமம் செய்து வழிபட லாம். பெண்கள் தினமும் முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளித்தால் அவர்களை கண் திருஷ்டி தோஷங்கள் நெருங்கவே நெருங்காது.

    ஆலய வழிபாடு செய்து கண் திருஷ்டி தோஷத்தை விலக்க வேண்டும் என்று நினைப்ப வர்கள் மலைகளில் உள்ள முருகன் தலங்களுக்கு சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும். மருதாணி விதை போட்டு தூபம் காட்டினால் மகாலட்சுமி மூலம் திருஷ்டிகள் விலகும். செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்து கழிக்கும் திருஷ்டிகள் உடனடியாக கழிந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடியில் உங்கள் உருவத்தை பார்த்தால் திருஷ்டி தீரும் என்பார்கள். சென்னையில் மகாபலிபுரம் சாலையில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு இயற்கையாகவே திருஷ்டி பொட்டு உள்ளது. அங்கு வழிபடுவதன் மூலம் திருஷ்டி நீங்கும் என்கிறார்கள்.

    வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழ மைகளில் புனித தீர்த்தங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து வீட்டில் தெளித்தால் எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் விலகி குடும்பத்தில் அமைதி உண்டாகும். அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில் வீட்டில் சாம்பிராணி பொடி தூபம் போட்டு வழிபட்டால் தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

    வீட்டில் முக்கிய விசேஷம் அல்லது விருந்து நடத்தினால் உறவுகளால் கூட திருஷ்டி ஏற்படுவது உண்டு. இதை போக்குவதற்கு குடும்ப தலைவருக்கும், தலைவிக்கும் ஆரத்தி எடுத்து திலகமிடுவார்கள். திருமண விழாக்களில் மணமகன், மணமகளுக்கு ஆரத்தி எடுப்பது என்பது சங்க காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. குங்குமம், சுண்ணாம்பு கலந்த தண்ணீரில் வெற்றிலை மீது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்தால் தீய சக்திகள் உடனே விலகும் என்பது ஐதீகமாகும். இதனால் இன்றளவும் முக்கிய விழாக்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

    9 கலசங்கள் கொண்ட ஆலய கோபுரங்களை தரிசனம் செய்தால் திருஷ்டி விலகும். விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு மிக சிறந்த திருஷ்டி தோஷ வழிபாடாக கருதப்படுகிறது. ஆஞ்சநேயர் கையில் லிங்கம் ஏந்தி வரும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டாலும் திருஷ்டி வராது. கண் திருஷ்டி தோஷத்தை போக்க இப்படி ஏராளமான வழிகள் உள்ளன. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அதை அவ சியம் பயன்படுத்துங்கள்.

    • ஆனந்த நிலையினை அடைவதற்கு மற்ற மூன்று நிலையினையும் கடக்க வேண்டும்.
    • வாழும் மக்கள் சூரியனைக் கொண்டு இயக்கத்தினை நடத்தலாம்.

    நம் வீடுகளில் குறிப்பாக இந்து மத வழிமுறைப்படி வாழ்பவர்கள் வீட்டில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது என்பது தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக அமாவாசை நாட்களில் இதனைச் செய்வார்கள்.

    தர்ப்பணம் என்றால் என்ன?

    'திருப்தி செய்வது' என்று பொருள் படும். முன்னோர்களை திருப்தி செய்து வழிபடு என்பது நம் மகான்கள் சொல்லிக் கொடுத்த வழிபாடு ஆகும். இதில் உள்ள ரகசியம்தான் என்ன?

    சரீரத்தினை ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் என ஐந்து பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

    இதில் ஸ்தூல சரீரம் என்பது நாம் கண்ணால் பார்க்கக் கூடிய இந்த உடல். மற்ற நான்கும் ஆத்ம அமைப்பாகின்றது.

    இதனை மற்றொரு விதமாகவும் கூறுவார்கள். அன்னமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்த மய கோசம் என்பர்.

    இதில் ஆனந்த மய கோசம் தான் பரமாத்மாவுடன் இணையும் ஆனந்த நிலை.

    இந்த ஆனந்த நிலையினை அடைவதற்கு மற்ற மூன்று நிலையினையும் கடக்க வேண்டும். மனித உடலுக்கு உணவு அவசியம். சூட்சும உடல் பிரபஞ்ச சக்தியினைப் பெறுகின்றது. சந்திரனில் இருந்துதான் இந்த உடல் சக்தி பெறுகின்றது. இதனால்தான் அமாவாசை காலத்தில் இந்த சக்தி கிடைக்க வாய்ப்பில்லை. அதனாலேயே தர்ப்பணம் செய்யப்படுகின்றது. மனிதர் செய்யும் தர்ப்பணமே அந்த ஆத்மாக்களுக்கு சக்தியாகின்றது என்பது முன்னோர் வாக்கு. காற்று இல்லாமல் மனித உடல் இயங்காது என்பது போல் சந்திர ஒளி இல்லாமல் முன்னோர் ஆத்மாக்கள் பரிதவிக்கும் என்பதனை மகான்கள் கூறிச் சென்றுள்ளனர்.

    வாழும் மக்கள் சூரியனைக் கொண்டு இயக்கத்தினை நடத்தலாம். ஆனால் நம் முன்னோர்கள் ஆன்மாக்களுக்கு திதியினை வைத்தே தர்ப்பணம் செய்கின்றோம். ஆன்மாக்களுக்கு உடல் இல்லாவிடினும் அவர்களின் சக்திக்காக எள்ளும், நீரும் திதியன்று தர்ப்பணம் செய்தனர்.

    எள் நீரில் மூழ்கி இருந்தாலும் முளைக்காது. அது போல் ஆத்மாக்கள் பிறவா நிலையினை அடைய வேண்டும் என்கின்றனர். எள்ளுக்கு பிரபஞ்ச ஈர்ப்பு சக்தி இருப்பதால்தான் எள் எண்ணையில் தீபம் ஏற்றுகின்றனர்.

    அன்றாடம் தர்ப்பணம் செய்யச் சொன்னார்கள். அமாவாசைக்கு அவசியம் தர்ப்பணம் கொடுங்கள் என்பதற்காகவே எள் தர்ப்பணம் செய்கின்றனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏழு தலைமுறையினை நினைவில் கொண்டு செய்யச் சொன்னார்கள். இப்படி தலைமுறையினரைப் பற்றி யோசிக்கும் போது எல்லா மானிடமும் ஒரு மூலத்தில் இருந்து வந்தவர்களே என்பது புரியும்.

    இந்த உலகில் இப்போது இருப்பவர்கள், முன்பு இருந்தவர்கள், இனி வரப்போகின்றவர்கள் அனைவருமே ஒரு பரம்பொருளிடம் இருந்து வந்தவர்கள்தான்.

    'ஒன்றே குலம், ஒருவனே தேவன்'. இதனை ஒரு பெரியவர் சொல்ல நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். நம்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் படித்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை.

    திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் ரமண மகரிஷி சொன்ன உண்மை வரலாறு.

    கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கி போன ஒரு பெரியவர், வட்டுக் கட்டைகளின் உதவியுடன் மிகவும் கஷ்டப்பட்டு கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அவர் அதுபோல் அடிக்கடி கிரி வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி மிகுந்த சோர்வுடனும், கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையை சுற்றி வந்து கொண்டிருந்தார்.


    அதற்கு காரணம் இருந்தது. பலமுறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். ஏன்? கால்கள் தொய்வுற்றதால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றியது.

    குடும்பத்தினருக்குத் தன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்கு சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, அவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண்காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று விடலாம் என்று அந்த பெரியவர் முடிவெடுத்தார். அதனால் கடைசி முறையாக திருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

    விந்தி, விந்தி சுருங்கிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்த போது பாதி வழியில் ஒரு வாலிபர் எதிர்பட்டார்.

    பெரியவரை நெருங்கிய அந்த வாலிபர் 'ஓய் கால் சரியில்லாத நீ கவட்டை கட்டையுடன் கிரிவலம் வர வேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி எல்லாம் நடந்தால் நீ மலையை சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்கு சரி படாது என்று கூறிக் கொண்டே, எதிர் பாராத ஒரு செயலைச் செய்தார்.

    ஆமாம். அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கி தூர எறிந்து விட்டு, அவர் பாட்டுக்குச் சென்று விட்டார்.

    அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வந்தார், திட்டினார், கவட்டைக் கட்டைகளை தூர எறிந்தார். இப்படி ஒருத்தர் மனிதாபிமானம் இல்லாமல் இருப்பாரா? ஆவேசத்துடன் அந்த இளைஞரை திட்ட ஆரம்பித்தார். ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும், மனமும் சிலிர்த்தது. அப்படியே நின்றார்.

    ஆமாம். அவரது ஊனம் காணாமல் போய், கவட்டு கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்த பெரியவர்.

    அந்த இளைஞர் சென்ற திசை நோக்கி தொழுதார். அவர் கண்களில் இருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

    அதன் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்த பெரியவர் எங்குமே செல்லவில்லை.

    இந்த உண்மை சம்பவத்தினை பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார் பகவான் ரமணர்.

    அந்த பெரியவர் பல ஆண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்ததையும் பலரும் அறிவார்கள்.

    அருணாசலமலையினை சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதனை சுட்டிக் காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார் எனப் படித்தேன்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    ஆம். நம் பகவான் அண்ணாமலையார்தான் அந்த இளைஞர். கால்கள் கொடுத்தவர் அந்த இறைவன்தான். கடவுள் எல்லா நன்மைகளையும் செய்து விட்டு நான்தான் செய்தேன் என சொல்லி இருக்கிறாரா என்ன?

    அப்போது மட்டும் இல்லை, இப்போதும் அண்ணாமலையார் சன்னதி முன் நின்று வேண்டினாலும் சரி, நினைத்து வேண்டினாலும் சரி அதையெல்லாம் உடனே தருவார் என்பதே உண்மை.

    ஈசனே தான் திருவண்ணாமலை.

    'ஓம் அருணாசலேஸ்வராய நமக' நான் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பகவான் ரமண மகரிஷியின் வார்த்தைகள் அந்த பரமேஸ்வரனின் வார்த்தைகள் அல்லவா. அப்படியிருக்க அவர் கூறியிருக்கும் 'நான் யார்?' என்ற ஆத்ம விசாரணை, தியானம் இவற்றை நாம் கண்டிப்பாய் பின்பற்ற வேண்டும் அல்லவா? செய்வோமே!

    கல்வி அறிவு, அனுபவ அறிவு என்று சொல்வது உண்டு. இதில் அனுபவ அறிவு என்பதற்கே கூடுதல் சிறப்பினைச் சொல்கின்றனர். எந்த வேலைக்கும் நேர்முகக் காணலில் முன் அனுபவம் இருக்கின்றதா? என்று கேட்பார்கள்.

    'வாழ்க்கையே அனுபவம்தான், அந்த அனுபவமே நான்தான்" என கடவுளின் பதிலாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகின் கோடானு கோடி அனுபவப் பாடங்களை நாம் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க முடியுமா என்ன? இங்குதான் தகுதி பெற்ற அனுபவங்கள் நமக்கு அனுபவப் பாடங்களாக கிடைக்கின்றது. இதே போன்றுதான் பலரின் தவறுகளும் இப்படி இருக்கக் கூடாது என்ற அனுபவ பாடமாக அமைகின்றது.

    அனுபவ அறிவினைப் பெறுவது என்பதே ஒரு பொக்கிஷத்தினைப் பெறுவது போல்தான். அதுவே நம் வாழ்விற்கு சிறந்த வழிகாட்டி. எங்கும் நம்மை விழிப்புணர்வுடன் வைக்கும் நம் தவறினை திருத்தும்.

    இந்த அறிவினைத்தான் பகவான் ரமண மகரிஷி மற்றும் பல மகான்கள் தருகின்றனர். நம்பிக்கை உள்ளவர்கள் இதனை கடை பிடிக்கலாமே.

    • நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்க சென்றது உற்சாகமாக இருந்தது.
    • நான் அந்த டிரஸ்சில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு மின்னல் வேகத்தில் ஆடிய படி செல்வேன்.

    8 டிசம்பர் 2023...

    மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த சென்னை நகரம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நேரம்...

    மழை வெள்ள பாதிப்பை நேரில் அனுபவிப்பவர்களில் நானும் ஒருத்தி. எனவே அதன் வேதனையும், வலியும் எனக்கு புரியும்.

    2015 மழை வெள்ளத்தில் எங்கள் வீட்டின் தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி போனது. குடும்பமே மேல் தளத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம்.

    விலை உயர்ந்த பொருட்கள், அரிய பொருட்கள் என அத்தனையும் வெள்ளத்தில் வீணாகி போனது. நாங்கள் அன்று அனுபவித்த வேதனை இன்று வரை எங்கள் மனதில் மாறாத வடுவாக உள்ளது.

    துயரத்தில் ஒரு ரிலாக்சுக்காக 28 வருடங்களுக்கு முன்பு ரஜினி சார் ஜோடியாக நான் நடித்து வெளிவந்த 'முத்து' படம் சென்னையில் திரையிடப்பட்டிருந்ததால் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தேன். நான், கே.எஸ்.ரவிக்குமார் சார், அவரது குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்க சென்றது உற்சாகமாக இருந்தது. அதிலும் இந்த 28 வருஷத்தில் இப்போது தான் 'முத்து' படத்தை முழுமையாக பார்க்க போகிறேன்...

    அதெப்படி... நெசமாகவா...? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

    அட, நெசமாகத்தான் சொல்கிறேன். முத்து படத்தை இதுவரை முழுமையாக பார்த்தது கிடையாது. அப்ப.. அப்ப.. சில சீன்கள், பாடல்கள் கேட்டிருக்கிறேன் அவ்வளவு தான்.

    அந்த படம் வெளியான காலக்கட்டத்தில் நான் பிசியான நடிகை. உட்கார நேரமில்லாமலும், தூங்க நேரமில்லாமலும், சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாமலும் ஓடி, ஓடி உழைத்துக்கொண்டு இருந்த காலக்கட்டம். இரண்டரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    எனவே இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.

    அதற்குள் தற்காலத்துக்கு வந்து விட்டீர்களே கடந்த காலம் இன்னும் நிறைய இருக்கே..? என்று ரசிகர்களும், வாசகர்களும் நினைக்கலாம். உண்மை தான்.

    ஆனால் இது இப்போது நடந்தது. எனவே சூட்டோடு சூடாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வரும் வாரங்களில் விட்டதில் இருந்து தொடர்கிறேன்.

    பட ஒளி வெண்திரையில் விழுந்தது. படத்தை பார்ப்ப தில் ரசிகர்களை விட எனக்கு அதிக ஆர்வமாக இருந்தது.

    ஒருவன் ஒருவன் முத லாளி... என்ற பாடலை பாடிக்கொண்டு ரஜினிசார் குதிரை வண்டியில் என்ட்ரி ஆனதும். தியேட்டரில் விசில் பறந்தது. ரசிகர்களின் ஆரவாரத்தில் திரையரங்கமே அதிர்ந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் தெரிந்த போது வாவ். இவ்வளவு அருமையாக நாம் நடித்திருக்கிறோமா. இந்த காட்சி இந்த இடத்தில் வைத்து படப்பிடிப்பு நடந்ததல்லவா? இந்த காட்சி படமாக்கப்பட்ட போது இந்த, இந்த சம்பவங்கள் நிகழ்ந்த தல்லவா? என்று பல நினைவுகள் என் கண் முன்னே வந்து போனது. நானே மறந்து போன பல நினைவுகளை முத்து எனக்கு நினைவூட்டியது.

    படம் பார்க்க, பார்க்க ஆசை, ஆனந்தம். எல்லாவற்றிக்கும் மேலாக தியேட்டருக்கு நான் வந்திருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள்... ரங்க நாயகி.. ரங்க நாயகி... என்று உற்சாக குரல் எழுப்பியதும் மனதுக்குள் எழுந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 28 ஆண்டு களுக்கு பிறகும் அதே உற்சாகம் தரைபுரள ரசிகர்கள் என்னை கொண்டாடியதை நேரில் பார்த்ததும் மனதுக்குள் மிகப்பெரிய பூரிப்பு.

    இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...

    இதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா. முத்து படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போது நான் தெலுங்கு படத்தில் பிசியாக இருந்தேன். ஆனாலும் ரஜினி சாருடன் ஜோடி, கே.எஸ்.ரவிக்குமார் சார் டைரக்ஷன் என்றது படத்தை விட மனதில்லை. கதை என்ன, எனது பாத்திரம் என்ன என்று எதுவும் கேட்டகவில்லை. மொத்தத்தில் 20 அல்லது 22 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்து இருந்தேன். முதல் நாள் படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. முதல் காட்சி யே கிளைமாக்ஸ் காட்சியை தான் படமாக்கினார்கள்.

    அன்றைய தினம் நான் மைசூர் சென்று சேர்வதற்கு முன்பு ஒருவன் ஒருவன் முதலாளி... என்ற பாடல் காட்சியை ரஜினி சாரை வைத்து ஹூட்டிங் முடித்திருந்தார்கள். நான் போனதும் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கினார்கள்.

    படப்பிடிப்பு கேரள மாநிலம் சொரனூர் மற்றும் மைசூரில் நடந்தது. 'தில்லானா... தில்லானா... நீ தித்திக்கின்றதேனா...'

    பாடல் காட்சியை எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். அந்த ஒரே பாடலுக்கு 6 வித மான காஸ்ட்யூம்கள்.

    எந்த நிற உடையில் வருகிறேனோ அதே நிறத்தில் செட் அமைக்கப்பட்டிருக்கும்.

    ஒரு நாள் ஷுட்டிங் முடிந்து மறுநாள் என்னகலர் உடையில் ஷுட்டிங் நடக்குமோ அதே கலர் பெயின்ட் செட்டிற்கும் அடிக்கப்படும். இப்படி தொடர்ந்து 6 நாள் அந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

    வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் தான் செட் அமைத்து இருந்தார்கள்.

    சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், இளம்பச்சை, கோல்டன் கலரில் ஆடைகள் இருந்தது. கோல்டன் கலர் காஸ்ட்யூமை இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும்.

    உடல் முழுவதும் ஜிகு.. ஜிகு... என்று தங்கத்தை போல் மின்னும். அதுவும் பளிச்சென்று லைட் வெளிச்சத்தில் என்னை பார்த்தாலே கண்ணை பறிக்கும்.

    நான் அந்த டிரஸ்சில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு மின்னல் வேகத்தில் ஆடிய படி செல்வேன். ரஜினிசார் ஸ்டெப் எடுத்து வைப்பார்... அதற்குள் கண்ணை பறிக்கும் எனது ஆடை யால் ஸ்டெப் சரி வராது! என்னப்பா... அந்த பொண்ணு மின்னல் போல் வருகிறது. திரும்பி பார்ப்பதற்குள் சென்று விடுகிறது என்பார். அந்த ஒரு டேக்கை மட்டும் நாலுமுறை எடுக்க வேண்டிய தாயிற்று...

    இப்படி இன்னும் பல சுவாரஸ்யங்கள் முத்துவிடம் உள்ளது. அடுத்த வாரம் சுவா ரஸ்யங்களை பகிர வருகிறேன்.

    (தொடரும்...)

    • பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.
    • ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

    ஒரு சில இடங்களுக்குச் செல்லும்போது, நம்மை அறியாமல் ஏதோ ஒரு காந்த சக்தி நம்மை இழுத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு இடம்தான் அந்த நினைவில்லம். ஆரம்பக் கல்வி கூட சரியாகக் கிட்டாத ஒரு மனிதர், அதாவது மூன்று மாதம் மட்டுமே பள்ளிக்குச் சென்று பயின்றவர். பின்பு அடிப்படைக் கல்வியான, எழுத்தும், படிப்பும், கணிதமும் தன் தாயிடம் மட்டுமே பயின்றவர். அவர்தான் நம் உலகையே நிரந்தரமாக மாற்றியமைத்த அரிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்.

    இவரோ நூலகத்திலும், ஆய்வகத்திலும் தனக்கென ஒரு சிறு படுக்கையறையை வைத்துள்ளார். லட்சக்கணக்கான புத்தகங்கள் மத்தியில் தம் வாழ்க்கையை வாழ்ந்த மேதை! இவருடைய மாபெரும் ஆய்வுக்கூடம் இன்றும் அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுகிறது. அமெரிக்காவின் மூன்றாவது மாபெரும் அருங்காட்சியகம், தாமஸ் ஆல்வா எடிசன் அருங்காட்சியகம்!

    அன்பு மனைவிக்காக மோட்டார் காரை கண்டுபிடித்துக் கொடுத்தவர். அவருடைய பிரம்மாண்ட வீடு 150 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்டது. இவர்தான் நம் உலகையே நிரந்தரமாக மாற்றியமைத்த அரிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்.

    தமது அறுபது ஆண்டு கால வாழ்க்கையை ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாக, தயாரிப்பாளராக, கண்டுபிடிப்பாளராக, தொழில் அதிபராக உச்சம் தொட்டவர். கணிதம், அறிவியல் என எந்தக் கல்வியும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.

    தமது முதல் கண்டுபிடிப்புக்காக 40 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்று அதனைக் கொண்டுதான் நியூ ஜெர்சியில், தன்னுடைய சிறிய ஆய்வுக் கூடத்தையும், தயாரிப்பு வசதியையும் 1871-ம் ஆண்டில் ஏற்படுத்திக் கொண்டவர். அதன் பிறகு மிக முக்கியமான 20,000 கண்டுபிடிப்புகளை இடையறாது செய்தவர்.

    பவளசங்கரி

    பவளசங்கரி

    இந்த அருங்காட்சியகத்தில் என்னை பிரம்மிக்க வைத்த மற்றொரு விசயம், Sipplings of the plant, planted and grown by the great Scientist THOMAS ALWA EDISON என்ற தலைப்பிட்ட பதாகையுடன், எடிசன் தாமே நட்ட அச்செடிகள் இன்றும் உயிருடன் காப்பாற்றப்பட்டு வருவதுதான்! இத்தனை ஆண்டுகளாக இவற்றை பாதுகாத்து வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தாமஸ் ஆல்வா எடிசன் வளர்த்த செடிகள் பனியிலும், கோடையிலும், ஒரே சீராக வளர, நவீனக் கருவிகளின் உதவியுடன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி, அமெரிக்காவில், ஒஹையோவில் உள்ள மிலன் எனும் ஊரில் சாமுவேல் எடிசன், ஜான்சி மேத்தியூஸ் தம்பதியருக்கு 7வது மகனாகப் பிறந்தவர். எடிசனுக்கு சின்ன வயதிலேயே காது செவிடாகப் போய்விட்டது. அது மட்டுமல்ல, பிறவியிலேயே அவருடைய தலை, பின்புறம் நீட்டிய நிலையில் சற்று கோணலாகவே இருந்தது. அவர் வளர்ந்த பிறகும் அதே தோற்றம்தான் இருந்தது.

    அவருடைய தாயார் ஒரு பள்ளி ஆசிரியை. பள்ளி செல்லும் வயதில் அவரை பள்ளிக்கு அனுப்பினார்கள். இரண்டு நாளில் சக மாணவர்கள் அவரை 'கோணல் மண்டையன்' என்று கேலி பேசியதால் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று வந்துவிட்டார். மீண்டும் அவருடைய தாய் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் இரண்டு மாதம்தான் தாக்குப்பிடித்தார். தன்னை 'மூளைக்கோளாறு உள்ளவன்' என்று ஆசிரியர் திட்டுவதாகக் கூறி அழுதுகொண்டு வந்துவிட்டார்.

    ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவருடைய சட்டைப் பையில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அவருடைய அன்னை அதை எடுத்துப் பார்த்ததும் கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை. வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும்", என்று அக்கடிதம் சொன்னது.

    மீண்டும் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் அவர் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டார். ஆனாலும் வீட்டிலேயே பாடம் கற்றுக்கொடுத்து படிக்க வைத்தார். ஆனால், பிற்காலத்தில் 'மெண்டோ பார்க்கின் மந்திரவாதி' என்று பாராட்டப்பட்டவரும் இவர்தான். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா. ஆம், நம் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளாகிப்போன பல்வேறு கண்டுபிடிப்புகளின் நாயகன் இவர்தான்!

    புத்தகப் பிரியரான இவர் தனது பன்னிரண்டு வயதில் புத்தகங்களுக்கும் ஆராய்ச்சி உபகரணங்களுக்கும் வேண்டிய பணத்தை தானே சம்பாதிக்க எண்ணியவர், தொடர் வண்டி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் புகை வண்டியின் சரக்கு உந்தில் தனக்கென்று சிறிய இடம் கேட்டுப் பெற்று அங்கு பழைய அச்சு இயந்திரத்தை வைத்து பத்திரிக்கையைத் தொடங்கினார். உலகத்திலேயே மிகவும் குறைந்த வயதுடைய பத்திரிக்கை ஆசிரியா் தாமஸ் ஆல்வா எடிசன் தான் என்ற பெருமைக்கும் உரியவரானார். அதே ரெயில் பெட்டியில் தனது ஆராய்ச்சிகளையும் தொடங்கினார்.

    தம்முடைய செய்தித்தாளுக்குத் தானே செய்தியாளராகவும், செய்திகளை அச்சிடுபவராகவும், விற்பனையாளராகவும் செயல்பட்டார். ரெயில் நிலைய அதிகாரியின் குழந்தையை ரெயில் விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக அவர் எடிசனுக்கு தந்தி முறையைக் கற்பித்தார். பின்னர் தமக்குத் தேவையான தந்திக் கருவியை எடிசன் தாமே தயாரித்துக் கொண்டார்.

    ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஊமைப்படங்களைப் பேச வைக்கும் போனோகிராபை தமது ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கிக் காட்டினார். மின்விளக்கினை கண்டுபிடிக்க நீண்ட நேரம் நீடித்து எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்தப் பொருளின் மூலம் உருவாக்குவது என்பதில் பெரிய சிக்கல் உண்டானது. கிட்டத்தட்ட 10,000 முறை வேறு வேறு பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார். அப்போதும் அவர் ஓயவில்லை, இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையைக் கண்டுபிடித்தார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார்.

    பத்தாயிரம் முறை தேடியும் பொருள் சிக்கவில்லை , "நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன்; பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது என கற்றுக்கொண்டேன்" என்றார். எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனைக் கொண்டு ஒளிர வைத்தார்.

    1887வரை அமிலங்களை ஊற்றித்தான் விளக்கு எரித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகுதான் எடிசன் வெப்பத்தை வெளிவிடுகிற மின் விளக்கைக் கண்டுபிடித்துப் பெரும் புகழ் பெற்றார். மின்சார விநியோக மையம் ஒன்றை நியூயார்க் நகரில் ஏற்படுத்தி நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

    அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவரே சந்தைப்படுத்தினார். எடிசன் மறைந்தபோது, அமெரிக்க வானொலியில், "எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது!" என்றும், மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியபோது அதே வானொலி சன்னமாக சொன்னது, "எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது".

    போனோகிராப் என்ற கருவியைக் கண்டுபிடித்ததும் எடிசன் உடனடியாக அதைப் பரிசோதிக்க விரும்பினார். அதில் வாய் வைத்துப் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழலில், "மேரி ஹேட் அ லிட்டில் லேம்ப்" என்ற ஆங்கில, குழந்தைப் பாடலைப் பாடினார். அதைப் பதிவு செய்துகொண்ட அந்தக் கருவி திரும்பவும் பாடியது. அதற்குக் காப்புரிமை வாங்கியவர், 1878-ம் ஆண்டில் எடிசன் ஸ்பீக்கிங் போனோகிராப் என்ற நிறுவனத்தின் மூலம் விற்கவும் தொடங்கினார். அவருடைய அந்தக் கருவி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதை வல்லுநர்களே இயக்க முடியும் என்ற நிலையே இருந்தன.

    நார்த் அமெரிக்கன் ரிவ்யூ என்ற இதழில் ஜூன் 1878-ல் எழுதிய எடிசன், இந்தக் கருவியில் எதிர்காலப் பயன்பாடுகளுக்கான சாத்தியக் கூறுகள் பற்றிப் பேசினார். கடிதம் எழுதுவது, பார்வையற்றவர்களுக்காக நூல்களை வாசித்துக் காட்டுவது, இசைப் பெட்டியாகச் செயல்படுவது, துல்லியமான உச்சரிப்புகளோடு மொழியைப் பாதுகாத்து வைப்பது, ஆசிரியர்களின் விளக்கங்களைப் பதிவு செய்து வைத்து கல்விக்கு உதவுவது போன்றவை அவற்றில் சில. எடிசன் 1931 அக்டோபர் 18-ந் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். தன்னுடைய 84வது வயதில் இவர் இறந்தபோது, அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத வகையில் இவருக்காக சுதந்திர தேவியின் கை விளக்கின் ஒளியிலிருந்து, ஊரின் அனைத்து விளக்குகளையும் நிறுத்தி வைத்திருந்தார்களாம்.

    அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின்போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21-ந் தேதி மாலை 9.59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21-ம் தேதி மாலை நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது. பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.

    அவருடைய ஒரு சின்ன படுக்கையறையில் பெரும்பான்மையான இடம் பிடித்திருந்தவை என்றால் அவை புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்களின் நடுவில் ஒரு சின்ன படுக்கை. வாசிப்பு மட்டுமே ஒருவரை மேதையாக்குகிறது என்பதை உணரச் செய்யும் மந்திர அறை அது!

    1880-ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கினார். இது 1900-ம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் இதழானது.

    தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழில் அதிபரும் ஆன இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கியவர். எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார்.

    "வாழ்க்கையை அழிக்கக்கூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன். ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டு மென்பதே எனது நோக்கம்" என்பதுதான் தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரமாக இருந்தது.

    இவர் இறந்த பின்பு இவருடைய மூளையை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ஒருவேளை இவர் மூளையில் மட்டும் ஏதாவது அதிசயமான பொருள் இருக்குமோ அல்லது மிகப் பெரிதாக இருக்குமோ என்ற ஐயத்தில். ஆனால் எல்லோருக்கும் உள்ள அதே அளவு மூளைதான் அவருக்கும் இருந்ததாம். ஆனால் கோணலாக நீட்டிக் கொண்டிருந்த அந்த பின் மண்டையில்தான் ஏதோ அதிசயம் இருக்கவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்களாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆளைப்பார்த்து எடை போடக்கூடாது இல்லையா. யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. தோல்விகளைக்கண்டு ஒருபோதும் மனம் தளரக்கூடாது.

    • செயலி உங்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
    • ஹெல்திபைமீ என்னும் இச்செயலி மிக நல்ல அம்சங்கள் கொண்டதாய் இருக்கிறது.

    "மாமன்னரே! அடுத்து எந்த தேசத்தைக் கபளீகரம் செய்யப்போகிறோம்?"

    "எல்லா தேசங்களையும் தான்!"

    "ஆகா நன்று! எப்போது புறப்பட வேண்டும்?"

    'ஒரு வெங்காயம் வேண்டாம்! இங்கிருந்தே வென்று விடலாம்!'

    "என்ன சொல்கிறீர்கள் மன்னவா?"

    "இரு தொந்தரவு செய்யாதே! அதுக்குத்தான் இந்த செயலியை டவுன்லோட் பண்ணிட்டு இருக்கேன்!"

    மாவீரன் அலெக்சாண்டர் காலத்தில் மொபைல் போன் இருந்திருந்தால், இப்படித்தான் உரையாடல் நடந்திருக்கும்!

    ஆம், எதை எடுத்தாலும் அதைச்செய்து முடிக்க மொபைல் செயலிகள் வந்துவிட்டன.

    "அடுத்த வாரம் என் தங்கச்சி வீட்டுல விசேஷம். எனக்கு ஆபீசுல லீவு கெடைக்காது! நீ போய்ட்டு வந்துரும்மா! இன்னைக்கு டிக்கெட் புக் பண்ணிக்குடுத்திறேன்!"

    புருஷன் சொல்லிவிட்டால் மனைவி ரெடியாகிவிடுவாள். அவளுக்கு ஆபீசில் லீவு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பல்லவன் எக்ஸ்பிரசில் எட்டு மணி நேர பயணம்.

    என்ன செய்வது?

    தூராத்து உறவினர் வீட்டுத்திருமணம். நுழைந்தவுடன் 'வாங்க உட்காருங்க சாப்பிட்டுத்தான் போகணும் சொல்லிட்டேன்' வரவேற்ற பெண்மணி மற்ற பேரைக்கவனிக்க போய்விட்டதும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு எவ்வளவு நேரம்தான் சடங்குகளை கவனிப்பது?

    "டாக்டருக்கு ஒரு எமர்ஜென்சிங்க! இன்னும் ஒரு மணி நேரமாகும். பிளீஸ் கொஞ்சம் வெயிட் பண்றீங்களா?"

    நர்சிங் ஹோம் பெண் சொன்ன பிறகு எப்படி ஒரு மணி நேரத்தைக்கழிப்பது?

    இதெல்லாவற்றுக்கும் நம் மொபைல் போன் ஒரு வரப்பிரசாதம். 97 சதவீதம் சதவீதம் ஆசாமிகள் மொபைல் போனை விட்டுப்பிரிவதே இல்லையாம்! அந்த மொபைல் போனை சுவாரஸ்யமாகவும் உபயோகமாகவும் எப்படிப்பயன்படுத்துவது என்பதற்காக ஏராளமான செயலிகள் வந்துவிட்டன.

    சுவாரஸ்யமான செயலிகள் சிலவற்றைப்பார்க்கலாமா?

    கலரைஸ் (Colorize)

    இந்த செயலி கறுப்பு வெள்ளை போட்டோக்களை கலராகச்செய்ய உதவும் செயலி. இதன் பின்புலத்தில் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பம் அமைந்திருக்கிறது. நான் பார்த்தவரையில் கறுப்பு வெள்ளைப்படங்களை கலர்கொடுக்க முயலும் செயலிகளில் இது பிரமாதமான ஒன்று என்று நம்புகிறேன். இது டவுன்லோடு செய்யவும் உபயோ கிக்கவும் வெகு சுலபமான செயலி. இந்தச்செயலிக்குள் உங்களின் பால்ய காண்ட போட்டோ ஒன்றை உட்புகுத்துங்கள் அல்லது ஸ்கேன் செய்யுங்கள். சில வினாடிகளிலேயே உங்களின் ஆதர்ச தாத்தாவோ பாட்டியோ அக்காலத்தில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளையிலிருந்து வசீகரமாக இக்கால தொழில்நுட்ப வண்ணங்களில் தம் பொக்கை வாய்ச்சிரிப்புடன் உங்களைப்பார்க்கும் அனுபவத்தை உணரலாம்! மேலும் இந்தச்செயலி மூலமாகவே அந்தக்கலர் போட்டோவை உங்கள் உறவுகளுக்கு ஷேர் செய்யலாம்.

    இன்னொரு நல்ல அம்சம் என்னவென்றால் இந்தச்செயலியில் பழைய போட்டோவையும் புதிதாகக்கலர் செய்த போட்டோவையும் அருகருகே ஒப்பீடு செய்யவும் முடியும்! இந்தச்செயலி முழுவதும் இலவசமில்லை. குறைவான அளவே போட்டோக்களை இலவசச் செயலியில் சேமிக்க முடியும். இதற்கு மேலும் வேண்டுமென்றால் சந்தா கட்ட வேண்டும். இல்லையென்றால் கலர் செய்த போட்டோக்களை வேறொரு டிஸ்கில் சேமித்துக்கொண்டு இந்தச்செயலியில் இருந்து நீக்கிட வேண்டும். அல்லது மீண்டும் இச்செயலியை தரவிறக்கம் செய்து மேலும் மேலும் பயன்படுத்தலாம்! செயற்கை அறிவுத்திறனின் சக்தியை வெளிப்படுத்தும் இந்தச்செயலியை முயன்று பாருங்கள்

    வால்ராப் (Wallwrap)

    மொபைல் போன் என்பது தொலைபேசும் கருவி என்பதிலிருந்து வெகு தூரத்துக்கு வந்துவிட்டோம். போன மாதம் புது மொபைல் போன் வாங்க கடைக்குப்போனேன். ஒரு லேடஸ்ட் போனை எடுத்தேன்.

    "இந்த மொபைல் மாடல் எப்படிங்க?"

    "அடடா! இது பிரமாதமான மொபைல் மாடல் சார்! ஏழு பிக்செல் கேமரா இருக்கு. நீங்க எடுக்கற படம் ஒவ்வொண்ணும் துல்லியமா விழும் தெரியுமா?"

    'அப்படியா?'

    "அட ஆமாம் சார்! அது மட்டுமில்ல, இதுல ரேடியோ இருக்கு! எல்லா விதமான சினிமா பாட்டு, கர்நாடக சங்கீதம், பாப் மியூசிக்குன்னு ஆயிரத்துக்கும் மேல்பட்ட பாட்டுக்கள் கேக்கலாம் சார்!"

    "அட!"

    "அது மட்டுமில்ல, இங்க பாருங்க எவ்வளவு பவர்புல் டார்ச் லைட் இருக்கு! நீங்க இருட்டுல மாட்டினா இந்த டார்ச் லைட்ட வெச்சிக்கிட்டு ஆறு மணி நேரம் வெளிச்சத்துல இருக்க முடியும்!"

    "ஒரு கேள்வி கேட்கலாமா?"

    "கேளுங்க சார்!"

    "இந்த மொபைல்ல போன்ல பேச முடியுமா?"

    ஆம், மொபைல் போன் என்பதன் அடிப்படை வலுவிழந்துபோய் மற்ற விஷயங்கள் முன்னுக்கு வந்துவிட்டன. அந்த வகையில் உங்கள் மொபைல் போன் ஸ்கிரீனில் விதவிதமான டிசைன்கள் கொண்ட வால்பேப்பர் வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு தனி செயலி இருக்கிறது, அதுதான் வால்ராப். இந்தச்செயலியின் மூலம் ஆயிரக்கணக்கன ஸ்கிரீன் வடிவமைப்பை உங்கள் மொபைலில் வைத்துக்கொள்ள முடியும். அன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு அந்த ஸ்கிரீன் மேற்புறத்தை வெவ்வேறு வால்ராப் பால் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு உங்கள் நண்பர்களிடமிருந்து பாராட்டுக்களை அள்ளலாம். அதோடு விதவிதமான வால்ராப் புக்களை ஒரு க்யூவில் வைத்து நேரக்கணக்கின்படி அதுவாகவே லூப்பில் மாற்றிக்கொள்ளும் படியும் செய்ய முடியும்.

    பிராக்டோ (practo)

    இந்தச்செயலி உங்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்களை கண்டுபிடிக்க உதவுகிறது. அது மட்டுமில்லை அங்குள்ள டாக்டர்கள், அவர்களின் ஸ்பெஷாலிடி, அவர்களுடன் எப்படி அப்பாயிண்ட்மெண்ட் செய்வது போன்ற வசதிகளும் கொண்டது. அதோடு எந்தெந்த டாக்டர்களின் நேரம் எப்போதெல்லாம் கிடைக்கும் என்பதையும் இச்செயலி தெரிவித்துவிடுவதால் நம் நேரம் மிச்சப்படும்.

    நோய்களை வகைப்படுத்தி ஒவ்வொன்றுக்குமான கன்சில்டிங் விவரங்களையுமே இச்செயலியில் காண முடியும். டாக்டர்களின் ஸ்பெஷலிடி தவிர அவர்களின் படிப்பு அனுபவத்தையுமே இச்செயலியில் காண முடியும். இது தவிர அந்த கிளினிக்குக்கோ அல்லது டாக்டரிடமோ சென்றவர்கள் தாம் அனுபவத்தையுமே இதில் பகிர முடிவதால் மற்றவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கிறது.

    ஹெல்திபைமீ

    பிட்னெஸ் என்றால் பெண்கள் உடனே எடை குறைப்பதை மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால் பிட்னெஸ் என்பது தினமும் கவனித்து பராமரிக்க வேண்டிய விஷயம். ஹெல்திபைமீ என்னும் இச்செயலி மிக நல்ல அம்சங்கள் கொண்டதாய் இருக்கிறது. உங்களின் தினப்படி டையட்டைக்கூட இதில் கண்காணிக்கலாம். அதோடு மட்டுமின்றி நீங்கள் பிட்-பிட், அல்லது கூகிள் பிட் போன்ற சாதனங்களை பயன்படுத்துபவராக இருந்தால் இச்செயலியின் விவரங்களை அந்தச்சாதனங்களில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    உதாரணத்திற்கு நீங்க சாப்பிடும் ஒவ்வொரு உணவு வகையிலும் இருக்கும் கலோரிகளை இச்செயலி தெரிவித்து விடுவதால் உங்களின் தினப்படி கலோரி அதிகரிப்பைக்கண்காணிக்க முடிகிறது. அதனால் உங்களின் பிட்னெசை தினமுமே ஒவ்வொரு உணவின்போதும் கண்காணித்து கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள முடியும்.

    இந்த மொபைல் செயலிகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டதை மறுதளிக்கவே முடியாது. 2019-ல் மட்டுமே இந்தியாவில் 19 கோடி செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டதாம்! 91 சதவீதம் இந்தியர்கள் மொபைல் போன் மூலம் செயலிகளைப்பயன்படுத்துகிறார்களாம். உலகத்திலேயே மிக அதிகமாக வாட்ச அப் செயலியைத்தரவிறக்கம் செய்த பெருமையை இந்தியா தட்டிக்கொண்டு போய்விட்டது.

    "லெச்சுமி! செத்த மாடிக்குப்போய் துணி காயப்போட்டு வந்திருடி!"

    "பாட்டி! ஏன் சும்மா தொண்டை கிழிய கூவுற? அதான் உன் மொபைலுல துணின்ற செயலி இருக்குல்ல? அதுல ஒரு மெசேஜ் தட்டிவுட்டா வந்துரமாட்டேனா? கத்துறியே?"

    மேற்கண்ட உரையாடலைக்கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

    • சரிவிகிதமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சரியாக உடல்நலத்தைப் பேண முடியும்.
    • உலகில் உள்ள உயிரினங்களில் மனம் என்பது உள்ள ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமேயாகும்.

    உடல் நலமும் உள்ள நலமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற உன்னதமானவர்களே!

    வணக்கம்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை இயக்கத்திற்கும் அவனது உடல் மற்றும் உள்ளம் ஆகியவையே அடிப்படைக் காரணிகளாய் அமைகின்றன. எந்த அளவிற்கு நாம் நமது உடலின் நலத்தில் அக்கறை காட்டுகிறோமோ, அதே அளவிற்கு நமது உள்ளத்தின் நலத்திலும் அக்கறை செலுத்தவேண்டும்.

    அதனால் தான் கவியரசர் கண்ணதாசன் "உடலும் உள்ளமும் நலந்தானா?" எனத் திரைக் காதலனைக் கேட்பதுபோல் நம் எல்லோரையும் பார்த்துக் கேட்கிறார். உள்ளம் நலமாக இருந்தால் தான் உடல் வளமாக இருக்கும். உடல் வளமாக இருந்தால் தான் உள்ளம் நலமாக இருக்கும்.

    உடலுக்கு உருவம் இருக்கிறது. அங்கங்கள் இருக்கின்றன. ஆனால் உள்ளம் என்பதற்கு உருவமும் கிடையாது. அங்கங்களும் கிடையாது. நிலையான இருப்பிடமும் கிடையாது. நமது உடல்சார்ந்த சிந்தனைப் பரப்புகளெங்கும் அது வியாபித்து நிற்கும். ஆனாலும் உள்ளம் சார்ந்த நலக்குறைவுகளால் நமது உடலில் அவ்வப்போது சில மாற்றங்கள் உண்டாகும்; உடல்நலக் குறைபாட்டு அடையாளங்களைக் கொண்டே நமது மன நிலைகளில் கேடு உண்டாகியிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    சரிவிகிதமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சரியாக உடல்நலத்தைப் பேண முடியும். அதேபோலச் சரிவிகிதமான சிந்தனை ஒழுக்கம் மூலமாக நமது மன நலத்தையும் சிதைந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். உடலில் பாதிப்பு என்றால் அது பார்ப்பவர்களுக்கு வெளிப்படையாகப் புலப்பட்டுவிடும்; ஆனால் மனநிலையில் கோளாறு என்றால், பொதுப்படையாகப் பார்ப்பவர்களுக்குச் சட்டென்று தெரிந்து விடுவதில்லை.

    ஒரு மனநல மருத்துவர், ஒரு மனநோயாளியிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எனக்குக் கூறினார். "அவர்கள் திடகாத்திர மானவர்களாகவும் பார்வைக்கு எந்தவிதக் குறைபாடும் இல்லாதவர்கள் போலவும்தான் தென்படுவார்கள். சில நேரங்களில் அவர்களோடு பேசிப்பார்த்தால் நம்மைவிடத் தெளிவாக அறிவுபூர்வமாகப் பேசவும் செய்வார்கள்" என்கிறார்.

    இப்படித்தான் ஒருநாள் மருத்துவர் தனது மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்த போது, ஒருவர் தனது ஒரு கையை நீட்டி உள்ளங்கையை விரித்து வைத்துக்கொண்டு, மற்றொரு கை விரல்களால் இந்தக் கையிலிருந்து எதையோ எடுத்துக் கீழே போடுவதுபோலத் தொடர்ந்து பாவனை செய்து கொண்டிருந்தார்.கொஞ்ச நேரம் அவரது அருகில் நின்று தீவிரமாக இதைக் கவனித்த மருத்துவர் அவரிடம், "ஐயா! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

    அதற்கு அந்த நோயாளிர் கீழே போடுவதை நிறுத்தாமல் சொன்னார்,"கீழே வாத்துகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கிறேன்!" என்று.

    மருத்துவர் தீவிரத்தன்மை குறையாமல் கேட்டார்," உங்களுடைய கையில் தீவனம் எதுவும் இல்லையே ஐயா?"

    "ஆமாம்! நீங்கள் சொல்வது சரிதான்!. ஆனால் கீழே வாத்துகள்கூட இல்லைதான்! அதற்காகத் தீவனம் போடாமல் இருக்க முடியுமா?" என்று கேட்டாரே பாருங்கள்! இப்போது மருத்துவரும் நோயாளி நிலைக்கு மாற்றப்பட்டு விட்டார்.

    பல நேரங்களில் தெளிவாக யோசிப்பதாலேயே நமது மனம் நோயின்றி இருப்பதாக நம்பிவிடுவது பெருந்தவறாய் முடிந்துவிடும். உடலும் மனமும் ஒன்றினொன்று இயைபுடையதாகவும் தொடர்புடையதாகவுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நமது நீடிய ஆயுளுக்கும் தடைபடாத செயல்பாடுகளுக்கும் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத தேவை ஆகிறது.

    உலகில் உள்ள உயிரினங்களில் மனம் என்பது உள்ள ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமேயாகும். மனது உள்ளதனால் அவன் மனிதன் என்று அழைக்கப்படுகிறான். கண், காது, மூக்கு, வாய், உடல் எனும் ஐம்பொறிகளும் முழுமையாகவோ அல்லது ஒன்றிரண்டு குறைவாகவோ உடையவை உயிரினங்கள்; இந்த ஐம்பொறிகளோடு ஆறாவது அறிவாகிய மனத்தை உடையவன் மனிதன். எனவே ஐம்பொறி இயக்கத்திற்கும் அடிப்படையான சிந்திக்கும் செயலைச் செய்து கொண்டிருக்கிற உள்ளத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது மனிதனின் இன்றியமையாக் கடமையாகும்'

    இன்றைய வாழ்வியல் போக்கில் மனிதனை மனவியல் நோக்கில் அதிகம் பாதிக்கக் கூடிய நோய் மன அழுத்தம் என்பதாகும். மனம் அழுத்தத்திற்கு ஆளாகும் மனிதர்களுக்கு அவர்களை அறியாமலேயே கைகால் நடுக்கம், உடலில் பதற்றம், வேகமான இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படும். மனம் நோய்வாய்ப் பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இவை; இதற்கு உடலியல் சார்ந்த மருத்துவம் பார்ப்பது மட்டும் பலன் அளிக்காது.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    அதே போல சிலருக்கு உடம்பில் நீண்ட நாள் தீராத வலிகள், கைகால் மூட்டுகளிலோ, முதுகுப்பகுதிகளிலோ இருக்கலாம். இந்த வலிகள் தொடர்ந்து இருக்கும்பட்சத்தில், மனவியல் ரீதியான பாதிப்புகள் உண்டாகலாம். மனத்தளர்ச்சி ஏற்பட்டு, வாழ்க்கையில் பற்றில்லாமல் அவநம்பிக்கை பெருகிவிடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. உடலுக்கு மருத்துவம் பார்க்கும் அதே வேளையில் உள்ளத்தில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான மனவியல் சிகிச்சையையும் இணையாக மேற்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் தீராத ஆவல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்; அதைச் செய்யவேண்டும்! இதைச் செய்ய வேண்டும்! அதைச் சாதிக்கவேண்டும்! இதைச் சாதிக்கவேண்டும்! என்று அலைபாயும் மனத்துடனேயே அலைந்து கொண்டிருப்பார்கள்;

    இப்படிப்பட்டவர்கள் அளவுக்கதிகமாக உணவுண்டு, உடல் அவஸ்தையிலும் தவிப்பார்கள்! என்கின்றனர் மருத்துவர்கள்.

    சிலருக்கு அடிக்கடி கோபம் வருவதுகூட ஒருவித மனவியல் குறைபாடுதான். கோபத்தை ஒரு ஆயுதமாகக் கையாண்டால் வாழ்க்கையில் நிர்வாகத்தில் வென்றுவிடலாம் என்று சிலர் கருதவும் செய்கின்றனர். கோபத்தால் உடலியல் அடிப்படையில் நலக்குறைவுகள்தாம் வருமேயொழியத் துளியளவும் நன்மை விளையாது. எனவே தொடர் மனப்பயிற்சி மூலமாகக் கோபத்தைத் துரத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    எப்போதும் நல்ல சிந்தனைகளை நெஞ்சமெல்லாம் தேக்கி, மகிழ்ச்சியோடு இருப்பவர்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் இயல்பாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை அகற்றி விட்டாலே நேர்மறை எண்ணங்கள் தாமாகவே நம் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதற்கு 'நல்லவை நாடி இனியவை சொல்ல வேண்டும்' என்கிறார் திருவள்ளுவர்.

    ஒரு காட்டில் ஓர் ஆசிரியரும் ஒரு மாணவரும் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்தனர். இருவருக்கும் யோகப் பயிற்சியும் தியானப் பயிற்சியும் அத்துபடி. ஆள் அரவமற்ற நடு வனத்துக்குள் சென்று கொண்டிருந்தபோது ஏதோ சிறு சலசலப்புக் கேட்டு, மாணவன் லேசாகத் திரும்பிப் பார்த்தான். அவர்கள் இருவருக்கும் பின்னால் பத்தடி தூரத்தில் ஆஜானுபாகுவான புலி ஒன்று அவர்களை நோக்கி கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தது.

    அதிர்ந்துபோன மாணவன் அச்சத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், "குருவே பின்னால் பத்தடி தூரத்தில் புலியொன்று நம்மை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்று கேட்டான். பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஆசிரியர் சொன்னார்,

    " புலியிடமிருந்து தப்பிக்க நாம் மூன்று விதமான செயல்களை மேற்கொள்ளலாம்!.

    ஒன்று இப்படியே வரிந்து கட்டிக்கொண்டு எவ்வளவு விரைவாக ஓட முடியுமோ அவ்வளவு விரைவாக ஓடத் தொடங்கலாம். ஆனால், நாம் பதினாறு அடி வேகத்தில் பாய்ந்து ஓடினால், புலி முப்பத்து இரண்டு அடி வேகத்தில் நம்மை முந்தி வந்து தாக்கும். உயிர் தப்பிக்க ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லை.

    இரண்டாவது, நாம் நடந்து செல்வதை நிறுத்திவிட்டுக் கற்சிலைபோல அப்படியே நின்றுவிடுவது. அப்படி நின்றுவிட்டால் நமக்குப் பின்னாலிருந்து வரும் புலி அசைவற்று நிற்கும் நம்மை ஒன்றும் செய்யாமல் நம்மைக் கடந்து சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இப்படி நடப்பதற்குப் புள்ளி ஒரு சதவீதம் வாய்ப்பே இருக்கிறது. அதனால் இந்த உபாயத்தாலும் உயிர்தப்பிக்க வாய்ப்புப் பிரகாசமாக இல்லை.

    மூன்றாவதாக நான் சொல்லப்போகும் வழியே ஆகச் சிறந்த நல்லவழி. நாம் நமது நடையை நிறுத்தாமல் மெதுவாக நடந்து கொண்டே கண்களைமூடி ஆழ்நிலை தியானத்தில் ஆழ வேண்டும்.

    மனத்திற்குள், 'நான் ஒரு புள்ளி; இந்தப் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி. இந்தப் புள்ளியிலிருந்து, அன்பு, கருணை, இரக்கம், பரோபகாரம் போன்ற அமைதிக் குணங்கள் அலையலையாய் பரவத் தொடங்கவேண்டும். நான் எனும் புள்ளியிலிருந்து நாம் பரப்பத் தொடங்கும் அன்புக் குணங்கள், முதலில், நம்மைச் சுற்றிலும் உள்ள வனங்களில் உள்ள செடி கொடி மரம் பூ கனி புல் பூண்டு உயிரினங்கள் அனைத்திலும் பரவி, அவற்றை அன்புமயமாகவும் கருணை மயமாகவும் மாற்ற வேண்டும். அப்படியே தியான அலைகளை விரிவாக்க விரிவாக்க அவை, வனம் தாண்டி, மலைதாண்டி, கடல்தாண்டி, வாழுகிற எல்லா ஜீவராசிகளையும் அன்புமயத்தில் கரையச் செய்ய வேண்டும்.

    இப்படி அன்புமயத் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், நமக்கு வேறாய் வந்து கொண்டிருக்கும் புலியை, நமது அன்பு வசியத்தால் நம்மில் ஒருவராய் ஆக்கி, அதன் கொடூர குணத்திலிருந்து அதனைச் சாதுவாக மாற்றித் தப்பித்து விடலாம்" என்றார் குருநாதர்.

    புலியோடு போரிட்டு வெல்வதை விட, அல்லது ஓடித் தப்பிப்பதைவிட, மனத்தால் அன்பு வசியப்படுத்தி அதனை வசப்படுத்திக் கொள்ளலாம் என்பதே ஆசிரியர் கூறிய உபாயம்.

    புலியை வெல்வதற்கே மனத்தை அன்புமயப் படுத்தும் உபாயம் போதும் என்னும்போது, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களை வெல்வதற்கும் அதனையே கடைப்பிடிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!.

    ஆனால் மனப் பயிற்சி என்பது ஒரேநாளில் வாய்த்துவிடக்கூடிய ஜீபூம்பா சமாச்சாரம் அல்ல; உடம்பை வளப்படுத்தவும் நலப்படுத்தவும் அன்றாடம் உடற்பயிற்சி என்பது எவ்வளவு அவசியமோ அதைப்போலவே மனப் பயிற்சிக்கும் கடுமையான முயற்சிகள் அவசியம். முறையான உடற்பயிற்சியாளர் மூலமே உடற்பயிற்சி வித்தைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும். முறையான யோக, தியானப் பயிற்சியாளர்கள் மூலமே மனத்தை நலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    உடல் செம்மையாக முறையான உணவுப்பயிற்சியும் தேகப்பயிற்சியும் போதும். ஆனால் மனமது செம்மையாகத் தொடர்ந்த நற்சிந்தனைகளும் நற்செயல்களும், மனம் அடக்கும் பயிற்சிகளும் அவசியம் தேவை.

    'மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை' என்று ஆன்றோர்கள் கூறுவது, மனத்தை அடக்கியோர் தெய்வீகநிலைக்கு உயர்ந்து விடுவர் என்பதை எடுத்துரைக்கவே ஆகும். செம்மை மனநலமும் திறமான உடல் நலத் தூய்மையும் உடையவர்கள் மந்திரம் செபித்துத்தான் தெய்வீக நிலையை அடைய வேண்டும் என்கிற கட்டாயமில்லை.

    நலம்பெறுவோம்! நலமாக்குவோம்! உடல் வாழ்க! உள்ளமும் வாழ்க!!

    தொடர்புக்கு 9443190098

    ×