என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எட்ட முடியாத சாதனையாளர் எடிசன்!
    X

    எட்ட முடியாத சாதனையாளர் எடிசன்!

    • பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.
    • ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

    ஒரு சில இடங்களுக்குச் செல்லும்போது, நம்மை அறியாமல் ஏதோ ஒரு காந்த சக்தி நம்மை இழுத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு இடம்தான் அந்த நினைவில்லம். ஆரம்பக் கல்வி கூட சரியாகக் கிட்டாத ஒரு மனிதர், அதாவது மூன்று மாதம் மட்டுமே பள்ளிக்குச் சென்று பயின்றவர். பின்பு அடிப்படைக் கல்வியான, எழுத்தும், படிப்பும், கணிதமும் தன் தாயிடம் மட்டுமே பயின்றவர். அவர்தான் நம் உலகையே நிரந்தரமாக மாற்றியமைத்த அரிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்.

    இவரோ நூலகத்திலும், ஆய்வகத்திலும் தனக்கென ஒரு சிறு படுக்கையறையை வைத்துள்ளார். லட்சக்கணக்கான புத்தகங்கள் மத்தியில் தம் வாழ்க்கையை வாழ்ந்த மேதை! இவருடைய மாபெரும் ஆய்வுக்கூடம் இன்றும் அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுகிறது. அமெரிக்காவின் மூன்றாவது மாபெரும் அருங்காட்சியகம், தாமஸ் ஆல்வா எடிசன் அருங்காட்சியகம்!

    அன்பு மனைவிக்காக மோட்டார் காரை கண்டுபிடித்துக் கொடுத்தவர். அவருடைய பிரம்மாண்ட வீடு 150 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்டது. இவர்தான் நம் உலகையே நிரந்தரமாக மாற்றியமைத்த அரிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்.

    தமது அறுபது ஆண்டு கால வாழ்க்கையை ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாக, தயாரிப்பாளராக, கண்டுபிடிப்பாளராக, தொழில் அதிபராக உச்சம் தொட்டவர். கணிதம், அறிவியல் என எந்தக் கல்வியும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.

    தமது முதல் கண்டுபிடிப்புக்காக 40 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்று அதனைக் கொண்டுதான் நியூ ஜெர்சியில், தன்னுடைய சிறிய ஆய்வுக் கூடத்தையும், தயாரிப்பு வசதியையும் 1871-ம் ஆண்டில் ஏற்படுத்திக் கொண்டவர். அதன் பிறகு மிக முக்கியமான 20,000 கண்டுபிடிப்புகளை இடையறாது செய்தவர்.

    பவளசங்கரி

    இந்த அருங்காட்சியகத்தில் என்னை பிரம்மிக்க வைத்த மற்றொரு விசயம், Sipplings of the plant, planted and grown by the great Scientist THOMAS ALWA EDISON என்ற தலைப்பிட்ட பதாகையுடன், எடிசன் தாமே நட்ட அச்செடிகள் இன்றும் உயிருடன் காப்பாற்றப்பட்டு வருவதுதான்! இத்தனை ஆண்டுகளாக இவற்றை பாதுகாத்து வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தாமஸ் ஆல்வா எடிசன் வளர்த்த செடிகள் பனியிலும், கோடையிலும், ஒரே சீராக வளர, நவீனக் கருவிகளின் உதவியுடன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி, அமெரிக்காவில், ஒஹையோவில் உள்ள மிலன் எனும் ஊரில் சாமுவேல் எடிசன், ஜான்சி மேத்தியூஸ் தம்பதியருக்கு 7வது மகனாகப் பிறந்தவர். எடிசனுக்கு சின்ன வயதிலேயே காது செவிடாகப் போய்விட்டது. அது மட்டுமல்ல, பிறவியிலேயே அவருடைய தலை, பின்புறம் நீட்டிய நிலையில் சற்று கோணலாகவே இருந்தது. அவர் வளர்ந்த பிறகும் அதே தோற்றம்தான் இருந்தது.

    அவருடைய தாயார் ஒரு பள்ளி ஆசிரியை. பள்ளி செல்லும் வயதில் அவரை பள்ளிக்கு அனுப்பினார்கள். இரண்டு நாளில் சக மாணவர்கள் அவரை 'கோணல் மண்டையன்' என்று கேலி பேசியதால் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று வந்துவிட்டார். மீண்டும் அவருடைய தாய் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் இரண்டு மாதம்தான் தாக்குப்பிடித்தார். தன்னை 'மூளைக்கோளாறு உள்ளவன்' என்று ஆசிரியர் திட்டுவதாகக் கூறி அழுதுகொண்டு வந்துவிட்டார்.

    ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவருடைய சட்டைப் பையில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அவருடைய அன்னை அதை எடுத்துப் பார்த்ததும் கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை. வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும்", என்று அக்கடிதம் சொன்னது.

    மீண்டும் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் அவர் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டார். ஆனாலும் வீட்டிலேயே பாடம் கற்றுக்கொடுத்து படிக்க வைத்தார். ஆனால், பிற்காலத்தில் 'மெண்டோ பார்க்கின் மந்திரவாதி' என்று பாராட்டப்பட்டவரும் இவர்தான். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா. ஆம், நம் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளாகிப்போன பல்வேறு கண்டுபிடிப்புகளின் நாயகன் இவர்தான்!

    புத்தகப் பிரியரான இவர் தனது பன்னிரண்டு வயதில் புத்தகங்களுக்கும் ஆராய்ச்சி உபகரணங்களுக்கும் வேண்டிய பணத்தை தானே சம்பாதிக்க எண்ணியவர், தொடர் வண்டி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் புகை வண்டியின் சரக்கு உந்தில் தனக்கென்று சிறிய இடம் கேட்டுப் பெற்று அங்கு பழைய அச்சு இயந்திரத்தை வைத்து பத்திரிக்கையைத் தொடங்கினார். உலகத்திலேயே மிகவும் குறைந்த வயதுடைய பத்திரிக்கை ஆசிரியா் தாமஸ் ஆல்வா எடிசன் தான் என்ற பெருமைக்கும் உரியவரானார். அதே ரெயில் பெட்டியில் தனது ஆராய்ச்சிகளையும் தொடங்கினார்.

    தம்முடைய செய்தித்தாளுக்குத் தானே செய்தியாளராகவும், செய்திகளை அச்சிடுபவராகவும், விற்பனையாளராகவும் செயல்பட்டார். ரெயில் நிலைய அதிகாரியின் குழந்தையை ரெயில் விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக அவர் எடிசனுக்கு தந்தி முறையைக் கற்பித்தார். பின்னர் தமக்குத் தேவையான தந்திக் கருவியை எடிசன் தாமே தயாரித்துக் கொண்டார்.

    ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஊமைப்படங்களைப் பேச வைக்கும் போனோகிராபை தமது ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கிக் காட்டினார். மின்விளக்கினை கண்டுபிடிக்க நீண்ட நேரம் நீடித்து எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்தப் பொருளின் மூலம் உருவாக்குவது என்பதில் பெரிய சிக்கல் உண்டானது. கிட்டத்தட்ட 10,000 முறை வேறு வேறு பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார். அப்போதும் அவர் ஓயவில்லை, இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையைக் கண்டுபிடித்தார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார்.

    பத்தாயிரம் முறை தேடியும் பொருள் சிக்கவில்லை , "நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன்; பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது என கற்றுக்கொண்டேன்" என்றார். எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனைக் கொண்டு ஒளிர வைத்தார்.

    1887வரை அமிலங்களை ஊற்றித்தான் விளக்கு எரித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகுதான் எடிசன் வெப்பத்தை வெளிவிடுகிற மின் விளக்கைக் கண்டுபிடித்துப் பெரும் புகழ் பெற்றார். மின்சார விநியோக மையம் ஒன்றை நியூயார்க் நகரில் ஏற்படுத்தி நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

    அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவரே சந்தைப்படுத்தினார். எடிசன் மறைந்தபோது, அமெரிக்க வானொலியில், "எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது!" என்றும், மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியபோது அதே வானொலி சன்னமாக சொன்னது, "எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது".

    போனோகிராப் என்ற கருவியைக் கண்டுபிடித்ததும் எடிசன் உடனடியாக அதைப் பரிசோதிக்க விரும்பினார். அதில் வாய் வைத்துப் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழலில், "மேரி ஹேட் அ லிட்டில் லேம்ப்" என்ற ஆங்கில, குழந்தைப் பாடலைப் பாடினார். அதைப் பதிவு செய்துகொண்ட அந்தக் கருவி திரும்பவும் பாடியது. அதற்குக் காப்புரிமை வாங்கியவர், 1878-ம் ஆண்டில் எடிசன் ஸ்பீக்கிங் போனோகிராப் என்ற நிறுவனத்தின் மூலம் விற்கவும் தொடங்கினார். அவருடைய அந்தக் கருவி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதை வல்லுநர்களே இயக்க முடியும் என்ற நிலையே இருந்தன.

    நார்த் அமெரிக்கன் ரிவ்யூ என்ற இதழில் ஜூன் 1878-ல் எழுதிய எடிசன், இந்தக் கருவியில் எதிர்காலப் பயன்பாடுகளுக்கான சாத்தியக் கூறுகள் பற்றிப் பேசினார். கடிதம் எழுதுவது, பார்வையற்றவர்களுக்காக நூல்களை வாசித்துக் காட்டுவது, இசைப் பெட்டியாகச் செயல்படுவது, துல்லியமான உச்சரிப்புகளோடு மொழியைப் பாதுகாத்து வைப்பது, ஆசிரியர்களின் விளக்கங்களைப் பதிவு செய்து வைத்து கல்விக்கு உதவுவது போன்றவை அவற்றில் சில. எடிசன் 1931 அக்டோபர் 18-ந் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். தன்னுடைய 84வது வயதில் இவர் இறந்தபோது, அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத வகையில் இவருக்காக சுதந்திர தேவியின் கை விளக்கின் ஒளியிலிருந்து, ஊரின் அனைத்து விளக்குகளையும் நிறுத்தி வைத்திருந்தார்களாம்.

    அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின்போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21-ந் தேதி மாலை 9.59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21-ம் தேதி மாலை நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது. பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.

    அவருடைய ஒரு சின்ன படுக்கையறையில் பெரும்பான்மையான இடம் பிடித்திருந்தவை என்றால் அவை புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்களின் நடுவில் ஒரு சின்ன படுக்கை. வாசிப்பு மட்டுமே ஒருவரை மேதையாக்குகிறது என்பதை உணரச் செய்யும் மந்திர அறை அது!

    1880-ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கினார். இது 1900-ம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் இதழானது.

    தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழில் அதிபரும் ஆன இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கியவர். எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார்.

    "வாழ்க்கையை அழிக்கக்கூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன். ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டு மென்பதே எனது நோக்கம்" என்பதுதான் தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரமாக இருந்தது.

    இவர் இறந்த பின்பு இவருடைய மூளையை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ஒருவேளை இவர் மூளையில் மட்டும் ஏதாவது அதிசயமான பொருள் இருக்குமோ அல்லது மிகப் பெரிதாக இருக்குமோ என்ற ஐயத்தில். ஆனால் எல்லோருக்கும் உள்ள அதே அளவு மூளைதான் அவருக்கும் இருந்ததாம். ஆனால் கோணலாக நீட்டிக் கொண்டிருந்த அந்த பின் மண்டையில்தான் ஏதோ அதிசயம் இருக்கவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்களாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆளைப்பார்த்து எடை போடக்கூடாது இல்லையா. யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. தோல்விகளைக்கண்டு ஒருபோதும் மனம் தளரக்கூடாது.

    Next Story
    ×