என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • வாழ்க்கையை பயத்தோட அணுகும் மனிதர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும்.
    • பற்றுக என்பதன் அடிநாதம் நம்பிக்கை. உலகம் சுழல்வதே இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தானே.

    என்னப்பா பூனை நாய், கழுதைன்னு போய் இப்போ கடைசியில் அடிதடியிலே இறங்கிட்டீங்களான்னு கேட்கறீங்க?

    பிரச்சினைன்னு வந்தா உடனே வாடா பாத்துக்கலான்னு சொல்றதுதானே நம்ம ஸ்டைல். இல்லைன்னா பத்துபேரை அடிச்சி பறக்கவிடறதையும், பிரட்டில பிளட் தடவி சாப்பிடறதையும் ரசித்து பார்ப்போமா. ஒரே வன்முறையா இருக்கேன்னுதானே நினைக்கிறீங்க. எடுத்துக்கிட்ட தலைப்பு அந்த மாதிரி.

    மிஸ்டர் எக்ஸ்: அந்த பிரச்சினையை எப்படி சமாளிச்சேன்னு..? கேட்டா..

    மிஸ்டர் ஒய்-இன் பதில், அடி உதவுறாமாதிரி அண்ணன்தம்பி உதவமாட்டான்னு நீ கேள்விப்பட்டது இல்லையா ? இரண்டு அறை வச்சேன்.

    அப்பறம்...

    அப்பறம் என்ன? சரின்னுட்டான்னு கூலா சொல்றார்.

    நாங்கலெல்லாம் அந்தக் காலத்திலே வாத்தியாருகிட்டே பையன் முழியை மட்டும் விட்டுடுங்க, மத்தபடி தோலை உரிச்சிடுங்கன்னு சொல்லுவோம். இப்போ யென்னடான்னா முறைச்சிப் பார்த்தாகூட கம்ப்ளைண்ட் பண்ணிடறீங்க. அப்போ எப்படி பயம் வரும்ன்னு.. இதே பழமொழியை நம்ம தாத்தா பாட்டியோ அப்பா அம்மாவோ சொல்லக் கேட்டு இருப்போம்.

    அப்போ சொல்பேச்சை கேட்கலைன்னா, இடக்கு மடக்கா பேசினா அடிக்கலாமா? பழமொழி மட்டும் இல்லை, முன்னோர்கள் உருவாக்கி வைச்ச நிறைய விஷயங்களுக்கு ஒரு உள்ளார்த்தம் இருக்கு. அப்படியிருக்கும்போது அடிக்கிறது சரின்னு எப்படி சொல்வாங்க..

    நண்பர் ஒருத்தர் வீட்டுலே சின்ன கெட் டூ கெதர். அவரோட பையன் லேசா அடிபட்டு சட்டை கிழிஞ்சிபோய் வந்தான். என்னடா ஆச்சுன்னு பதறினார் நண்பர். பிரண்ட்ஸ் கூட ஒரு சின்ன பிரச்சினைப்பான்னு சொல்ல, நம்ம பரம்பரையில யாரும் அடிவாங்கிட்டு வரலை.. அடிகொடுத்துட்டுதான் வந்திருக்கோம்ன்னு ஏத்திவிடறார். இப்படி சொல்வதற்குப் பதில், என்ன சூழ்நிலையில் அந்த பிரச்சினை நடந்ததுன்னு விசாரிச்சு புத்திமதி சொல்லலாமே?ன்னு எனக்கு தோணுச்சி. அடிதடிக்குப் போறது வீரம் இல்லை.

    அப்போ என்ன நடந்தாலும், இயேசு சொன்னதைப் போல இன்னொரு கன்னத்தையும் காட்டணுமா ?ன்னு கேட்டா அதுவும் தப்புதான். நம்மோட ரியாக்ஷன் சரியான நேரத்திலே சரியான இடத்திலே தெரிவிக்கப்படும்போது அதுக்கு மதிப்பிருக்கும்.

    பழிவாங்கும் முயற்சிங்கிறது நம்ம பிறப்பிலேயே ஊறிக்கிடக்கு. எனக்கு நீ ஒரு கெடுதல் செய்தியா? அதை நூறுமடங்கா திருப்பித் தர்றேன்னு சபதம் போட்டு கிளம்பறவங்கதான் அதிகம். வெளிப்படையா சிரிச்சிகிட்டு உள்ளே வஞ்சம் வெச்சி தாக்கறவங்களும் அதிகம். எல்லாத்தையும் பார்த்து மனசில புழுங்கிகிட்டுப் ஒதுங்கிப் போறவங்க அதிகம், அதற்காக அவங்க பயந்தவங்கன்னு சொல்லமுடியாது.

    வாழ்க்கையை பயத்தோட அணுகும் மனிதர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். அந்த எச்சரிக்கை உணர்வு என்னதான் நடக்கும் பார்த்திடலான்னு நம்மை வழி நடத்திசெல்லும்.

    வன்முறை என்பது பயத்தை தருவதைக் காட்டிலும் தற்போது ரசிக்கக்கூடியதாக மாறிவருகிறது என்பது அபாயத்தின் அறிகுறியாகத்தான் பார்க்க முடிகிறது. சமீபத்திய படங்கள், பத்திரிக்கை செய்திகள், மொபைல் கேம்ஸ் என அனைத்திலும் இதைக் காணலாம்.

    உண்மையில் அடிக்கு அடி என்பதுதான் பழமொழியின் அர்த்தமா? அதுக்கு ஏன் அண்ணனையும் தம்பியையும் கூட்டி வராங்க. இப்போதைய காலகட்டத்தில் இந்த வன்முறைக்கு அதிகம் பலியாவது குழந்தைகள்தான். பொருளாதாரம், வாழ்க்கை முறை, மன அழுத்தம்னு நிறைய விஷயங்கள் பெற்ற பிள்ளைகள் மீது வன்மம் கலந்த ஒரு அன்பை காட்டுவதற்கு காரணமாகிப் போகிறது. அதென்ன வன்மம் கலந்த அன்பு. நீ எனக்கு பிடித்ததைத்தான் செய்ய வேண்டும் என்பதுதான் அது. ஒரு டாமினேஷன் கதாபாத்திரம் எல்லார் குடும்பத்திலும் இருக்கும். அப்படிப்பட்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளின் நிலைதான் ரொம்பவே மோசம்.

    மன அழுத்தம் அதிகமா இருக்கும் நேரங்களில் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதாவது ஒரு நட்பை பிடிச்சிக்கோங்க. அது இறையாகவும் இருக்கலாம். நாம தினமும் அமரும் இருக்கையாகக் கூட இருக்கலாம். நாம அதோட பேசும் போது, அதுக்கு உயிர் வர்றதை உணர முடியும்.

    சமீபத்திலே ஒரு நீண்ட பயணத்தின் போது, சாலையோரத்தில் ஆக்ரோஷமான ஒரு தெய்வத்தின் உருவம். பார்த்தாலே பயம் வரும்படியான உருவத்திடம் கொஞ்சநேரம் அமைதியா பேசிகிட்டு இருந்தேன். மனசில உள்ள பாரம் குறைஞ்சிப் போச்சு. தன்னால் முடியும் என்கிற நம்பிக்கை ஒரு கட்டத்திற்கு மேல் தலைக்கணமா மாறிடுது. சில விஷயங்கள், முழு சரணாகதிங்கிறது மோட்சத்தையே கொடுக்கும் என்பதுதான் இந்த அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம். சில உதாரணங்களோடு பார்க்கலாம்..

    பற்றுக பற்றற்றான் பாதந்தனை என்கிறது குறள்.

    இறைவனின் திருவடியைப் பற்றுதல் என்பது நமக்கு உண்டாகும் நன்மையை குறிக்கும் சொல். கவுரவர்கள் சபையில் தன் கரங்களை நம்பிய திரவுபதி கண்ணனின் மேல் கொண்ட பக்தியில் முழு சரணாகதி அடைந்த பிறகே, பலன் பெற்றாள். பற்றுக என்பதன் அடிநாதம் நம்பிக்கை. உலகம் சுழல்வதே இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தானே.

    இன்னமும் ஒரு உதாரணம் சொல்கிறேன்.

    பரதன் தன் அன்னையின் தவறால் ராமன் காட்டிற்கு சென்றுவிட்டான். அவனை அழைத்துக்கொண்டு வர முயன்று தோற்றுப் போய் அவரின் பாதுகைகளை, அதாவது ராமனின் திருவடிகளை சுமந்த பாதுகைகளை எடுத்து வந்து ஆட்சிப் புரிகிறான். இவ்விடத்தில் ராமரின் திரு அடிகள் பரதனின் நேர்மையை, தமையனை காட்டிற்கு அனுப்பி ஆட்சியைக் கைப்பற்றினான் என்ற கெட்ட பெயரை அவனுக்குத் தராமல் காத்தது. அந்த நற்பயனை ராமனின் திருவடிதான் கொடுத்தது. அங்கே அண்ணனோ தம்பியோ உதவவில்லை என்பதையும் இப்பழமொழி குறிக்கும்.

    எனக்கு இன்னொரு பெயருண்டு என்ற பாட்ஷா படத்தில் ரஜினியின் வசனத்திற்கு கைதட்டல் அள்ளும். அய்யா பாலகுமாரனின் வசனம். அதே போல்தான் அனுமனுக்கு சிறியதிருவடி என்றும், கருடனுக்கு பெரிய திருவடி என்றும் மற்றொரு பெயர் உண்டு.

    ராமனுக்காக சீதாவிடம் தூது சென்றதில் இருந்து, மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவிமலையைக் கொண்டு வந்ததிலும், பதினான்கு ஆண்டுகள் கழிந்து அண்ணன் திரும்பி வரவில்லை என்று உயிர் துறக்க முயன்ற பரதனை காக்க விரைந்து வந்ததிலும் அனுமனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதேபோல், லட்சுமணன் நாக அஸ்திரத்தில் கட்டுண்டு கிடந்த போது தன் பெரிய சிறகால் அவரை விடுவித்தும், சீதாவிற்காக ராவணணிடம் போராடியும், தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

    ராமா என்றழைத்தால், அனுமனும், நாராயணா என்றழைத்தால் கருடனும் முதல் ஆளாய் உதவிக்கு வருவார்கள் என்பதையே, பெரியவர்கள் பகவானைப் பற்றாதீர்கள் அவர்களின் திருவடிகளைப் பற்றுங்கள் என்பார்கள். இறைவனின் திரு அடி என்பது உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்பதுதான் உண்மையான அர்த்தமாகும் இப்பழமொழிக்கு.

    • ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் எந்த அளவுக்கு நேரத்தை செலவிட்டு வழிபடுகிறார்களோ அந்த அளவுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
    • ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

    கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு பெயர் பெற்று கொடுத்தது இந்த ஆலயம்தான். 30 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றில் சிறந்து விளங்குகிறது.

    இத்தலத்து ஆதிகும்பேஸ்வரர் சுயம்பு வடிவானவர். இவர்தான் உலகத்து உயிர்களின் தோற்றத்துக்கு காரணமாக கருதப்படுபவர். எனவே கும்பகோணம் ஆலயங்களை தரிசனம் செய்ய செல்லும்போது இந்த ஆலயத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

    ஏனெனில் இந்த தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு மூர்த்தமும் தனித்தனி சிறப்புகள் கொண்டவை. நிகரற்ற பலன்களை தரக்கூடியவை. எனவே ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் எந்த அளவுக்கு நேரத்தை செலவிட்டு வழிபடுகிறார்களோ அந்த அளவுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

    குறிப்பாக இந்த தலத்தில் உள்ள அம்பிகை மிகுந்த சக்தி வாய்ந்தவள். மங்களாம்பிகை என்று அழைக்கப்படும் இந்த அம்பிகைக்கு மங்கள நாயகி, மந்திரபீடேஸ்வரி, வளர்மங்கை, மந்திர பீடநலத்தாள் என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு.

    மங்களாம்பிகை சக்தி பீடங்களில் இருக்கும் அம்பிகைகளில் தனித்துவம் வாய்ந்தவள், முதன்மையானவள். திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு தனது உடலில் பாதியை கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார். அதுபோல கும்பகோணத்தில் உள்ள இந்த தலத்தில் சிவபெருமான் தன்னுடைய 36ஆயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கி உள்ளார்.

    ஏற்கனவே மங்களாம்பிகை தனக்குரிய 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுடன் வீற்றிருக்கிறாள். சிவபெருமான் கொடுத்த 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக இந்த தலத்தில் இருக்கிறாள். தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் அம்பாள் இந்த அளவுக்கு மந்திர சக்திகளுடன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    அனைத்து மந்திர சக்திகளையும் கொண்டு இருப்பதால்தான் மங்களாம்பிகைக்கு மந்திர பீடேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டது.

    அம்பாளின் உடல் பாகம் கால் பாதம் நகம் முதல் தலை உச்சி முடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கிறாள். மற்ற தலங்களில் அம்பாளை ஒரே ஒரு சக்தியுடையவளாக மட்டுமே காண முடியும். ஆனால் கும்பகோணத்தில் மங்களாம்பி கையை 51 சக்தி வடிவங்களாக பார்க்க முடியும். இத னால்தான் சக்தி பீடங்களுக்கு எல்லாம் தலைமை பீடமாக மங்களாம்பிகை பீடம் திகழ்கிறது.

    தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து வகை மங்களத்தையும் மங்களாம்பிகை தருகிறாள் என்பது ஐதீகம். தன்னை வணங்குபவர்களின் நோய்களை தீர்ப்பதால் மங்களாம்பிகைக்கு "நோயறுக்கு பரை" என்ற பெயர் உண்டு. அதுபோல தன் திருவடிகளை அடைந்தவர்களுக்கு மந்திர பீடத்தில் இருந்து அருள்வதால் மங்களாம்பிகைக்கு "மந்திர பீட நலத்தாள்" என்ற பெயர் ஏற்பட்டது.

    திருஞானசம்பந்தர் தனது பாடல்களில் மங்களாம்பிகையை "வளர்மங்கை" என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மங்களாம்பிகையை மனதார நினைத்தாலே வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    மங்களாம்பிகை அலங்கார காட்சியை எவ்வளவு பார்த்தாலும் சலிப்பே வராது. மஞ்சள் பட்டு உடுத்தி, முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகமிட்டு அவள் அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். திருமணம் கை கூட விரும்புபவர்கள், குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூ கொடுத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    புதிதாக தொழில் தொடங்குபவர்கள், கல்வியில் மேன்மை பெற நினைப்பவர்கள், பணக்காரனாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மங்களாம்பிகையை சரண் அடைந்தால் நிச்சயம் நல்லது நடக்கும். ஆண்டு தோறும் ஆவணி மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை மங்களாம்பிகைக்கு புஷ்ப அபிஷேகம் நடத்தப்படும்.

    ரோஜா, அரளி, மல்லிகை, மரிக்கொழுந்து, செண்பகப்பூ, தாழம்பூ, செவ்வந்தி, விருட்சிப்பூ உள்பட பல்வேறு வகையான மலர்களை கூடை கூடையாக கொண்டு சென்று மங்களாம்பிகைக்கு சமர்ப்பிப்பார்கள். இந்த புஷ்ப அபிஷேக பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் மங்களாம்பிகையை வழிபட்டால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம். திருமணம் ஆன பெண்கள் மங்களாம்பிகைக்கு நடக்கும் புஷ்ப அபிஷேகத்தை கண்டு வழிபட்டால் கணவரின் அன்பை அளவுக்கு அதிகமாக பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இவை மட்டுமல்ல.... மங்களாம்பிகையை மனம் குளிர வழிபட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை நூல்கள் பலவாறாக விவரித்துச் சொல்கின்றன.

    மாலை நேரங்களில் மங்களாம்பிகையை வணங்கினால் எல்லாப் பலன்களும் பெறலாம். பூதம், பிரேதம், பைசாசம் முதலான உபாதைகளில் இருந்து நீங்கலாம்.

    வெள்ளிக்கிழமையில் ஒரே ஒரு முறை தரிசித்து வணங்கினால் எல்லா வகையான தோஷங்களும் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    மங்களாம்பாளைத் தரிசித்த மாத்திரத்தில் எல்லா வகையான நோய்களும் நீங்கும். எனவே அவளுக்கு 'ருக்விபேதினி' என்ற பெயரும் உண்டு.

    பக்தர்கள் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யக் கூடியவள். அவர்கள் கேட்கும் பொருட்களை அளிப்பதால் அம்மைக்குச் 'சர்வேப்சிதப்ரதா' என்ற பெயரும் உண்டு.

    ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் 108 செம்பருத்திப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி ஸ்ரீமங்களாம்பி கைக்கு ஒரே ஒரு தடவை அணிவித்தால் போதும். அவர்கள் குடும்பம் வாழையடி வாழையாக விருத்தியாகும்.

    செம்பருத்திப் பூவினால் கிரீடம் செய்து ஒரு முறை வெள்ளிக்கிழமையில் அர்ப்பணித்தால் அவர்கள் குபேரனுக்குச் சமமான செல்வம் பெறுவார்கள். தெய்வீகக் குணங்களையும் அடைவார்கள்.

    மஞ்சள் குங்குமத்தால் மங்களாம்பிகையின் பாதங்களின் நுனியில் சிறிது சிறிதாகத் தனித்தனி யாகச் சகஸ்ர நாமத்தாலோ, அஷ்டோத்திரத்தாலோ அர்ச்சித்தால் போதும்; மனதில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் செய்ய இயலாவிட்டால் பிற நாட்களிலும் இவற்றைச் செய்யலாம். பலன் நிச்சயம் உண்டு.

    பால் குடங்களில் மங்களாம்பிகையை ஆவாகனம் செய்து பூஜித்துக் காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்பவர்கள் பரம சிவனாகவே ஆகிவிடுவார்கள்.

    பெண் ஜாதகமானாலும், ஆண் ஜாதகமானாலும் ஜனன காலத்தில் செவ்வாயும், சூரியனும் சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் தொல்லை தான். ஆண் ஜாதககாரர்கள் தடைகள் பல கடக்க வேண்டிவரும். பெண் ஜாதககாரர்களோ பெரும்பாடுபட வேண்டியிருக்கும்.

    பெண் ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் ஒன்று கூடி எந்த ராசியில் இருந்தாலும் அது கடுமையான மாங்கல்ய தோஷம் என்று கருதப்படு கிறது. வாழ்க்கையில் அவள் கடுமையான கஷ்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜோதிடர்கள் பயம் காட்டுவார்கள். ஆனால் மங்களாம்பிகையை சரண் அடைந்துவிட்டால் அந்த பயம் தேவையே இல்லை.

    செவ்வாயும், சூரியனும் சேர்ந்து இருப்பதால் ஏற்படும் தோஷத்தில் இருந்து நீங்க மங்களாம்பிகைக்கு செம்பருத்தி மாலை சூட்ட வேண்டும். இதனால் வம்சவிருத்தி ஏற்படும். எனவே கும்பகோ ணத்துக்கு செல்லும் போது பெண்கள் மறக்காமல் ஏதாவது பூக்கள் வாங்கி மங்களாம்பிகைக்கு சூடச்செய்து வழிபட்டால் தோஷங்கள் அனைத்தையும் நீக்கிக் கொள்ள முடியும்.

    கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை காட்சியளிக்கி றாள். வலது மேல் கரத்தில் அமுத கலசத்தை ஏந்தி உள்ளாள். இடது மேல் கரத்தில் அட்ச மாலை வைத்துள்ளாள். வலது கீழ் கரம் அபய கரமாகவும், இடது கீழ் கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்து உள்ளன. இதன் மூலம் மங்களாம்பிகை சர்வ சக்தி படைத்தவள் என்பதை அந்த தோற்றம் பிரதிபலிக்கிறது.

    ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் கும்பேஸ்வரரை தனித்து வலம் வர முடியாது. மங்களாம்பிகையை சேர்த்துதான் வலம் வர முடியும். அதற்கேற்ப ஆலய பிரகார அமைப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் ஈசனுக்கு நிகரான ஆற்றலுடன் இந்த தலத்தில் அம்பிகையும் அருள்பாலித்து வருவதை உணர முடியும்.

    இந்த சிறப்பை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தெளிவுபட கூறியுள்ளார். அவர் மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியம் பாடி உள்ளார். அதில் மங்களாம்பிகையை ஒரு தடவை பார்த்து தரிசித்தாலே போதும் பிறவிகடலில் மூழ்கி தினம் தினம் படும் துயரத்தில் இருந்து விடுதலை பெற முடியும் என்று கூறியுள்ளார். மங்களாம்பிகைக்கு உரிய முறையில் பூஜை செய்து வழிபட்டால் மனம் பேரானந்தம் கொண்டு கடல் அலைகள் போல ஆர்ப்பரிக்கும் என்று சொல்கிறார்.

    மங்களாம்பிகையை சரண் அடைந்து அவள் புகழ் பாடினால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    இப்படி மங்களாம்பிகை சிறப்பை சொல்லிக் கொண்டு போகலாம். அன்பான குடும்பம், அழகான கணவர் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் அவசியம் மங்களாம்பிகை அருள் பெற வேண்டும். மங்களாம்பிகை சன்னதி முன்பு அமர்ந்து தியானம் செய்தால் மிகப்பெரிய மாற்றம் மனதில் ஏற்படும் என்பது அனுபவசாலிக ளின் அசைக்க முடியாத நம்பிக்கை. கும்ப கோணம் செல்லும் போது உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கக் கூடும்.

    மங்களாம்பிகை அருளால் நல்ல கணவர் கிடைத்தால் மட்டும் போதுமா? கணவன்-மனைவி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் அல்லவா? அதற்கு கும்பகோணம் அருகே உள்ள திருசத்திமுற்றம் தலத்துக்கு சென்று வழிபட வேண்டும். அந்த தலம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • வீட்டு முற்றத்தில் இருக்கும் துளசி சர்க்கரையைக் குறைக்க எளிமையாக இயற்கை தந்த வரம்.
    • கறிவேப்பிலை பொடியை சாதத்துடன் சேர்த்துக்கொள்வதும் முதுமைக்கு நல்லது.

    முதுமையில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதையும், அதன் பின் விளைவுகளை தடுப்பதையும் விட மிகப்பெரிய சவால்கள் இருக்க முடியாது. மருந்து மாத்திரைகள் ஒரு புறமிருக்க, சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழும் எண்ணம் முதலில் இருக்க வேண்டியது அவசியம்.

    உணவு, பழக்கவழக்கம் முதலான பல்வேறு காரணிகள் நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாக இருப்பினும், நோய் உண்டான பிறகு கட்டுப்படுத்துவது முதன்மை அவசியமாகின்றது. ஆகவே எந்த வகை மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் அதனுடன் நாம் காலம் காலமாக உணவாக பயன்படுத்திய மூலிகை மருந்துகள் சேர்த்து எடுத்துக்கொள்வது முதுமையில் நலத்தைக் கட்டமைக்க உதவும்.

    அந்த வகையில் சித்த மருத்துவ மூலிகைகளில் 'அமிர்தவல்லி' எனப்படும் சீந்தில் நீரிழிவு நோய்நிலையில் உடலை அழியாமல் காக்கும் அமிர்தம் போன்றது. கடும் கசப்பை உடைய சீந்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், நீரிழிவு நோயில் உண்டாகும் சிறுநீரகம், நரம்பு தொந்தரவுகள் போன்ற விளைவுகளையும் தடுக்கும் வல்லமை உடையது. சித்த மருந்தான 'சீந்தில் சுக்கு குடிநீர்' நீரிழிவு நோயில் நற்பலன் தரும்.

    வீட்டு முற்றத்தில் இருக்கும் துளசி சர்க்கரையைக் குறைக்க எளிமையாக இயற்கை தந்த வரம். இது உடல் செல்களுக்கு அதிகம் நன்மை பயக்கக்கூடியது. துளசியுடன், சுக்கு, மிளகு, மஞ்சள் சேர்த்து தேநீராக்கி எடுத்துக்கொள்வது சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன், சுவாசப்பாதை தொற்றுக்களைக் குறைக்கவும் உதவும்.

    அதிகப்படியான கரோடீனாய்டு சத்துக்களை கொண்ட கருவேப்பிலை நீரிழிவு நோயில் உண்டாகும் ரத்தக் குழாய் பாதிப்புகளை தடுத்து கண் பார்வைக் குறைபாட்டினை தடுக்கும். இது முதுமையில் தேய்ந்து போன கணைய செல்களை புதுப்பிக்கவும் உதவும். அவ்வப்போது கறிவேப்பிலை பொடியை சாதத்துடன் சேர்த்துக்கொள்வதும் முதுமைக்கு நல்லது.

    ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் பிரபலமான மூலிகை சிறுகுறிஞ்சான். இது வளர்ச்சிதை மாற்ற நோய்நிலைகள் அனைத்திலும் பலன் தரக்கூடியது. சிறுகுறிஞ்சான் இலைகளில் ஜிம்னிமிக் அமிலம், டிரைடர்பீன் கிளைகோசைடுகள் மற்றும் குர்மரின் போன்ற செயல் மூலக்கூறுகள் உள்ளதால் டைப் 1 மற்றும் டைப்- 2 நீரிழிவு நோய் சிகிச்சையில் பயன்படுத்த நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் ஆதரிக்கின்றன.

    இது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை மறுசீரமைப்பு செய்து புத்துணர்வு தருவதாகவும் உள்ளது. இதில் உள்ள வேதிப்பொருட்கள் நம் குடலில் சர்க்கரை சத்து உறிஞ்சுவதை தடுத்து ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க வல்லன.

    காய்கறி மூலிகையான கோவக்காயில் உள்ள பெக்டின் வகை நார்சத்துக்கள் நேரடியாக ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை வாய்ந்தது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருள்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் உதவும்.

    சிறப்பாக கசப்பு சுவையுடைய பாகற்காய் 'இன்சுலின்' போன்று செயல்படுவதாக நவீன அறிவியல் கூறுகிறது. இதன் பழம் மற்றும் விதைகளில் உள்ள பி-இன்சுலின் எனப்படும் 'பாலிபெப்டைட்' வேதி மூலக்கூறு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    அடிக்கடி உணவில் சேர்க்கும் கோவக்காய் பொரியலும், பாகற்காய் வறுவலும் நீரிழிவு நோயை வாட்டி, முதுமையைக் காக்கும். பொதுவாக கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுள்ள உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வது நீரிழிவு நோயில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    நவீன அறிவியல் தலையில் வைத்து கொண்டாடும் வைட்டமின் சி-யானது உடல் செல்களை அழியாமல் காக்கும் தன்மை உடையது. இது நெல்லிக்கனியில் அதிக அளவில் உள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட் தன்மையை அதிகம் கொண்ட நெல்லி உள் உறுப்புகளைக் காக்க வந்த காவலன். எளிமையாக நெல்லிக்காய் சாறுடன் மஞ்சள் பொடி சேர்த்து எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயில் பலன் தரும்.


    தமிழர்களின் பாரம்பரிய மூலிகையான மஞ்சள் நீரிழிவு நோயில் இன்சுலின் தடையை சீராக்குவதன் மூலமும், கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும், நாட்பட்ட அழற்சியை (வீக்கத்தை) தடுப்பதன் மூலமும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

    நீரிழிவு நோய்க்கான நவீன மருத்துவத்துடன் மஞ்சள் சேர்த்து பரிந்துரைக்கும் போது சர்க்கரை அளவு குறைந்ததை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மஞ்சளில் உள்ள மருத்துவ குணமிக்க 'குர்குமின்' மூலக்கூறினை நானோ துகள்களாக்கி ஆய்வு மேற்கொண்டதில் நீரிழிவு நோயாளிகளின் கடினமான வேதனையான நியூரோபதியால் உண்டான கை கால் எரிச்சல் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது மஞ்சள் மகிமைக்கு உதாரணம்.

    மேலும் மஞ்சள் நீரிழிவு நோயில் சிறுநீரக பாதிப்பு வருவதையும் தடுக்கும் வல்லமை உடையது. எனவே முதுமையில் மஞ்சளை நாடுவது நலத்திற்கு நல்லது. அல்லது சித்த மருந்தான 'நெல்லி மஞ்சள் மாத்திரை'யும் பயன்படுத்தலாம்.

    எளிமையாக கிடைக்கும் மாவிலை, சிவ மூலிகையான வில்வ இலை மற்றும் கொய்யா இலைகளை கசாயமிட்டு குடிப்பதும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்கிறது சித்த மருத்துவம். கொய்யா இலைகளில் உள்ள 'லானோஸ்டீனாய்டு' வகை வேதிப்பொருட்கள் ரத்த சர்க்கரையைக் குறைக்கிறது என்கின்றன ஆய்வுத்தரவுகள்.

    ஆரோக்கியத்தின் நண்பனாக இருக்கும் முருங்கை முதுமையில் பல்வேறு நன்மைகளை தரவல்லது. மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் முருங்கை நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை உடையதால், ஆவாரை தேநீர் போல இதனையும் அவ்வப்போது தேநீராக்கி எடுத்துக்கொள்வது பெரும் பயனளிக்கும். இதில் உள்ள 'குர்சிட்டின்', 'கெம்பெரால்' ஆகிய வேதிப்பொருட்கள் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    நாவல் பழத்தில் உள்ள நீல நிறத்திற்கு காரணமான ஆன்தோசயனின் நிறமி சார்ந்து பல்வேறு ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க நாவல் பழம் மட்டுமின்றி, நாவல் கொட்டையும் சர்க்கரை நோயில் பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    இன்று அதிகம் தேடப்படும், அதிகம் பேர் பயன்படுத்தும் மூலிகை கடைசரக்காக உள்ளது கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை தினசரி ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை பொடித்து எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல் கருஞ்சீரகத் தைலத்தையும் தினசரி 2.5 மிலி அளவுக்கு எடுத்துக்கொண்டதில் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    தொட்டாற்சிணுங்கி, அமுக்கரா கிழங்கு, சிற்றாமுட்டி, கிராம்பு ஆகிய மூலிகைகள் நீரிழிவு நோயின் வேதனை நரம்பு தேய்மானத்தைக் குறைத்து கை, கால் எரிச்சல் குறைய வழிவகை செய்யும். அமுக்கரா (அசுவகந்தா) எனும் பல நூறு ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மூலிகை முதுமைக்கு கிடைத்த வரம். பல்வேறு நோய் நிலைகளில் பயன்தரக்கூடிய அமுக்கரா பற்றிய ஆய்வுகளுக்கும் பஞ்சமில்லை. எல்லா வயதினருக்கும் பொருந்தக்கூடிய அமுக்க ராவை தினசரி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள சர்க்கரை நோயின் பின்விளைவுகளை தடுப்பதுடன், ஆயுளையே அதிகரிக்கும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

    மூலிகை மருந்துகள் மட்டுமின்றி பல்வேறு தாது உபரச கலப்புள்ள நாக பற்பம், சிலாசத்து பற்பம், வங்க பற்பம், அப்பிரக செந்தூரம் போன்ற சித்த மருந்துகளும் சர்க்கரை நோயில் பலன் அளிக்கக்கூடியன.

    சிறுநீர் உறுப்பில் புண், உடலில் நமைச்சல், பிறப்புறுப்பில் நமைச்சல், உடல் இளைப்பு, அதிக உடல் சோர்வு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல் ஆகியன நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறிகளாக இருப்பினும், முதுமையில் பலருக்கு நோயின் அறிகுறிகள் ஏதுமின்றியே சர்க்கரை அளவு அதிகமாகி காணுவது இன்றைய வாழ்வியலில் அதிகமாகிவிட்டது. இத்தகைய நிலைகளில் சித்த மருந்துகளும், உணவுக்கட்டுப்பாடும், நடைப்பயிற்சியும் கூட்டாக பயன்படுத்த நற்பலன் தரக்கூடும்.

    ரத்த சிவப்பணுக்களை மையமாக கொண்டு ஆராயப்படும் எச்.பி.ஏ.1.சி. எனும் மூன்று மாத கணிப்பானது கட்டுக்குள் வைத்துக்கொள்வது முதுமையில் சர்க்கரை நோயின் பின் விளைவுகளை தடுக்க உதவும். பொதுவாக எச்.பி.ஏ.1.சி. அளவு 7.0 என்ற அளவில் இருப்பது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதை உணர்த்துவதாக 'அமெரிக்கன் டயாபெடிக் அசோசியேஷன்' குறிப்பிடுகிறது.

    எச்.பி.ஏ.1.சி. அளவை 7 சதவீதத்துக்கு கீழ் கட்டுப்பாட்டில் வைப்பதும், ரத்த அழுத்தத்தின் அளவை 144/82 (மிமீ.எச்.ஜி.) கீழ் பராமரிப்பதும் நீரிழிவு நோயில் கண் பார்வை குறைபாடு உண்டாகாமல் தடுக்கும் என்று தரவுகள் கூறுவதால், மேற்கூறிய இரண்டையும் பராமரிப்பது சிறந்தது.

    குறிப்பாக நீரிழிவுக்காக பரிந்துரைக்கும் சித்த மருந்துகள் மற்றும் மூலிகைகளை, தேக வன்மைக்கும், வாத, பித்த, கபத்தை அடிப்படையாக கொண்ட தேக தன்மைக்கும் ஏற்றார் போல மருத்துவர் தேர்வு செய்வதும் கூடுதல் அவசியம்.

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட மருந்து மாத்திரைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை உடற் பயிற்சியும், உணவு கட்டுப்பாடும். வயதான காலத்தில் எழுந்து நடக்கவே சிரமம். இதில் எங்கிருந்து உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் மேற்கொள்வது என்பது பலரின் மனக்குமுறல். இந்நிலையில் உணவுக் கட்டுப்பாடு மட்டுமே சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மற்றொரு நம்பிக்கை.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
    • 2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர்.

    நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் நீண்டகால கோரிக்கையான சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து நடந்த சிறப்பு கூட்டத்தில் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

    இந்த மசோதா புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதனிடையே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்பதால் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

    இதன்படி பாராளுமன்றத்தில் நேற்று புதுவை உள்ளிட்ட சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம் மூலம் புதுவை சட்டமன்றத்தில் 30 எம்.எல்.ஏ.க்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு ஒதுக்கீடாக கிடைக்கும்.

    இதுதவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒரு பெண் எம்.எல்.ஏ. இடம் பெறுவார்.

    இதன் மூலம் புதுவை சட்டமன்றத்தில் வரும் காலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற புதுவையில் முதல்முறையாக 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அன்று முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 15 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.

    புதுவை சட்டப்பேரவை தேர்தலில் பெண் உறுப்பினர்களை குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. முதல் சட்டப் பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப் பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார்.

    7-வது சட்டப்பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப் பேரவைக்கு 1991-ல் கேபக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    11-வது சட்டப் பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.

    இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, தி.மு.க. சார்பில் 1, பா.ஜ.க., பா.ம.க., ஐ.ஜே.க. என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

    காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, தி.மு.க. சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

    2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற சந்திரபிரியங்கா அமைச்சராக பதவியேற்றார். இவரும் கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள சட்டசபை யில் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ. மட்டும்தான் உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பெண்களை சட்டசபை தேர்தலில் நிறுத்த முன்வராததுதான் காரணம்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. காங்கிரசில் ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    என்.ஆர். காங்கிரசில் 2 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் ஒருவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால் வருங்காலத்தில் இந்த நிலை முற்றிலும் மாறும். சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு வாய்ப்பளித்தே தீர வேண்டும் என்ற நிலை உருவாகும்.

    • பாதைகள் பல இருந்தாலும் பரப்பிரம்மம் ஒன்றே என்று வயதிற்கேற்ப முயற்சிக்கேற்ப அவரவர் வழிகளில் செல்கிறோம்.
    • ஏற்கனவே எல்லாம் நிர்ணயிக்கப்பட்டது. ஆக நிகழ்வுகளிலும், செயல்களிலும் நம் உடலை நாம் இணைத்துக் கொள்ளக் கூடாது.

    பக்தி மார்க்கம் என்பது என்னைப் பொறுத்தவரை எளிதான வழிதான். கோவிலுக்குப் போகின்றோம். அர்ச்சனை, பூ, பரிகாரம் என முழு மனதோடு செய்கின்றோம். எனக்கு எல்லாம் நீயே என சரணாகதி அடைகின்றோம். தேவை என ஒரு பெரிய லிஸ்ட் வைக்கிறோம். ஆடல், பாடல், வாத்தியங்கள், அலங்காரம், தேர் திருவிழா என அமர்க்களப்படுகின்றது. பொதுவில் அநேகரும் இப்படித்தான் இருக்கின்றனர். என் கடவுள் என்னை பார்த்துக் கொள்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. பக்தி மார்க்கத்தினை போதித்த மகான்களோ தனக்கு என்று ஒன்றினை கேட்டதில்லை. மக்கள் சேவையே அவர்களுக்கு மகேசன் சேவை என இருப்பவர்கள்.

    சில நேரங்களில் நாம் வேண்டுவது நடக்காத பொழுது பக்தி அநேகருக்கு குறைகின்றது. சரணாகதி அடைவதில் தொய்வு ஏற்படுகின்றது. இது மனித இயல்பு. இந்த இடத்தில் அதிக பிடிப்பு, உறுதி தேவைப்படுகின்றது. மற்றபடி யதார்த்த வாழ்க்கையில் பக்தி என்ற பெயரில் அதனை சரியாக புரிந்து கொள்ளாது மனிதன் வாழும் வாழ்க்கை அப்படியே புரிதல் இல்லாமல் முடிந்து விடுகின்றது. இல்லையெனில் சோகத்தில், கவலையில் மூழ்கி விடுகின்றான்.

    பகவான் ரமண மகரிஷி கூறுவது

    கடவுள், ஆன்மா, குரு இவை அனைத்துமே ஒன்று தான். மனிதனின் மனதிற்கேற்றபடி பல உருவங்கள், பல சின்னங்கள், நாமாக்கள் சொல்லி வழிபடுகின்றோம். பாதைகள் பல இருந்தாலும் பரப்பிரம்மம் ஒன்றே என்று வயதிற்கேற்ப முயற்சிக்கேற்ப அவரவர் வழிகளில் செல்கிறோம்.

    ஓஷோ 'கடவுள் என்பதே பொய்' என்றார். தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணன் மூர்த்தி கடவுள் என்பதனை ஏற்கவில்லை. தந்தை பெரியாரும் இதனையேதான் சொன்னார்.


    ரமண மகரிஷி கூறியது போல் உடலில் இருப்பது பிரபஞ்சத்தில் இருக்கின்றது. வள்ளலார் கூறியது போல் அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கின்றது. இதனை உணரும் வரை பக்தி வழிபாடு, உருவ வழிபாடு என்ற முறையில் செல்வது எளிது. ஆன்மாவினை நேராய் எளிதாய் உணர முடியாது என்கின்றனர் மகான்கள்.

    அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது

    ஏற்கனவே எல்லாம் நிர்ணயிக்கப்பட்டது. ஆக நிகழ்வுகளிலும், செயல்களிலும் நம் உடலை நாம் இணைத்துக் கொள்ளக் கூடாது. என் கர்மவினை, தலைவிதி என்று மனதில் வேதனைபடுவதை விட்டு 'சரணாகதி' என்று கடவுளிடம் விட்டுவிட வேண்டும். தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க, மனம் கண்டபடி ஓடாது இருக்க அனைத்தையும் தாண்டி தூய விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்.

    மனிதன் பேசத் தெரிந்த, சிரிக்கத் தெரிந்த, உணர்ச்சிகள், உணர்வுகள் கொண்ட மிருகம், பிறரால் நமக்கு துன்பம் என்று வரும் பொழுது, தாங்க முடியாத வலி ஏற்படும் பொழுது அவரை சபிப்பதும், திரும்ப பழிக்கு பழி வாங்க நினைப்பதும் இயல்புதான். ஆனால் அவை தீர்வாகாது. சாந்தமான வழியில் போராட வேண்டும். மேற்கூறப்பட்டவை எல்லாம் பகவான் ரமணரின் வாக்குகளில் இருந்து யதார்த்த நடையில் எழுதப்பட்டவை ஆகும்.

    தூய்மை தான் ஆன்மா. அந்த தூய்மையினை தியானிக்க வேண்டும். அந்த ஒரே எண்ணம் வருவதற்கான பயிற்சியாகவும், இயல்பான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள் என்று பயிற்சி தருகின்றனர். பகவான் ரமண மகரிஷி பாலகனாக தியானம் செய்த முறையினை பார்த்தாலே அரண்டு போய் விடுவோம்.

    திருவண்ணாமலை கோவிலில் பாதாள லிங்கம் கோவில் உள்ளே செல்லும் வழியிலேயே உள்ளது. இன்று அதன் மேல் கோபுரம் கூட சிறிதாக கட்டியுள்ளனர். பாதாள லிங்கத்தினை தரிசிக்க படிகட்டுகள் உள்இறங்கி செல்லும். இருட்டாக இருக்கும். காலை மெதுவே வைத்து இறங்க வேண்டும். ஆனால் பகவான் ரமணர் சிறு பாலகராய் இங்கு வந்து தியானம் செய்தபோது இந்த வசதிகள்கூட இருந்திருக்காது. உள்ளே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இருட்டில் எதுவும் தெரியாது.


    இந்த இடத்தில் பகவான் ரமணர் இளம் பாலகராக உள்ளேயே இரவு, பகல் என இல்லாது தொடர்ந்து ஆழ்நிலை தியானத்தில் இருந்தார். பல உண்மை அரியாத சிறுவர்கள் இவர் மீது கற்களை வீசினர். இவர் உணரவில்லை. உடலெல்லாம் எறும்பு, பூச்சி, கரையான் என கடித்து புண்படுத்தி இருந்தது. பகவான் உணரவும் இல்லை. அசையவும் இல்லை. சேஷாத்ரி சுவாமிகளே பல துறவிகளின் உதவி கொண்டு பகவானை அந்நிலையில் இருந்து மீட்டார். அப்பொழுதும் பேச்சு என்பதே இல்லை. அன்ன, ஆகாரம் உள்ளே இறங்கவில்லை. இதனை 'சமாதி' நிலை என்று குறிப்பிடுவர். இங்கு கூறப்படும் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் இதில் 1 சதவீதம் நம்மால் செய்ய முடியுமா? ஆக ரமண மகரிஷி போன்றவர்களின் புத்தகங்களை படிப்பது என்பதே நாம் செய்யும் புண்ணிய செயலாக அமையும்.

    பல வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பம் குழந்தை, குட்டிகளோடு திருவண்ணாமலை சென்றோம். குழந்தைகளுக்கு ஆன்மீக விவரங்களை விளக்கிய படியே பாதாள லிங்கம் கோவில் படிகளில் இறங்கி செல்ல முற்பட்டோம். அப்படி ஒரு இருட்டு. நாங்கள் சுமார் 10 பேருக்கு மேல் இருப்போம். இருட்டில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி படிகட்டுகளில் இறங்கினோம். 'ஆ' ஊ என்ற சப்தம் வேறு. உள்ளே இறங்கி சமதரையில் நின்றோம். ஒரு சர விளக்கில் தீபம் இருந்தது. ஆனால் அதன் வெளிச்சத்தில் எதனையும் காண முடியவில்லை. குருக்கள் ஒருவர் வந்தார். பழக்கம் காரணமாக சற்று வேகமாய் இறங்கினார். தட்டில் ஒரு சிறிய அகல் தீபம் மற்றும் சற்று பெரிய கற்பூர கட்டி கொண்டு வந்திருந்தார். அதனை ஏற்றி சட்டென திரும்பினார். எங்களின் அருகில் சிவலிங்கம். சற்று பயந்து பின் நகர்ந்தோம். அப்படியே சுற்றி எங்கள் பக்கம் தீபாராதனை தட்டை நீட்டினார். அதைவிட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கருத்த உருவம், மிக ஒல்லியான தேகம், அதிக உயரம், இடுப்பில் கவுபீஷணம். அய்யப்பன் போல் அமர்ந்திருந்தார். உடலில் விபூதி பூச்சு. இமைக்காத அசையாத கண். 'ஆ ஆ' என அலறி விட்டோம். எங்களின் இரைச்சல் அவரது தியானத்தினை சிறிதளவு கூட அசைக்க முடியவில்லை. அவர் இந்த உலக தொடர்புகளுக்கு அப்பால் இருந்தார். அதிர்ச்சியில் அனைவரும் வெளியே குதித்து வந்தோம். சிறிது நேரம் பேச்சு இல்லை.

    ஆக காலம் எத்தனை மாறுதல்கள் பெற்றாலும் ஆன்மீகம் அதன் பாதையில் அழகாக சென்று கொண்டிருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.

    இதெல்லாம் படிக்கவும், கேட்கவும் நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் நம் வாழ்க்கையில் எத்தனை விதமான அடுக்கடுக்கான சோதனைகள்? இவற்றுக்கெல்லாம் நம் கர்ம வினைதான் காரணம் என்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வும் முன்பே விதிக்கப்பட்ட விதிப்படி நிகழ்கின்றது என்கிறார்கள். இப்படியெல்லாம் பேசினால் எப்படித் தான் வாழ்வது? இதற்கு பதிலாக ஏதோ 'காமா, சோமா' என்று வாழ்ந்து விடலாமே?என்று அங்கலாய்ப்பவர்கள் ஏராளம். ஏராளம்.

    நாம் நினைத்து நம் பெற்றோர்களை தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி ஒரு அமைப்பு இருந்திருந்தால் அனைவரும் அம்பானி, டாடா, பிர்லா, பில்கேட்ஸ் போன்ற மிக பணக்கார இடங்களை தேர்ந்தெடுத்து இருப்பார்கள். ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு ஒருபோல இருப்பதில்லை. ஏன்? இதற்கு என்ன காரணம்? நம்முடைய கர்ம வினைப் பதிவுகளே திடீரென ஒவ்வொரு சூழ்நிலையிலும் பல தாக்குதலகளை ஏற்படுத்துகின்றன என்பது ஆன்மீகம் சார்ந்த கருத்து. அந்த சூழ்நிலையில் எப்படி சரியான முடிவினை எடுத்து கையாளுகின்றோம் என்பதே வருங்கால விதியினை நிர்ணயிக்கின்றது. இதையேத் தான்

    'தினை விதைத்தவன் தினை அறுப்பான்

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்'

    என்கின்றனர்.

    கோபம், ஆத்திரம் இன்றி நிதானமான, சரியான முடிவுகளை எடுக்க தியானம் வெகுவாய் உதவுகின்றது என்பது வலியுறுத்தப் படுகின்றது. எடுத்தவுடன் பி.எச்.டி. படிப்பு படித்துவிட சாதாரண மனிதர்களால் முடியாது. எல்.கே.ஜி முதல் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தான் மனம் கட்டுப்பட உருவ வழிபாடு, சுலோகங்கள், விரதங்கள் மவுன விரதம், மூச்சு பயிற்சி, யோகா, உணவு கட்டுப்பாடு என படிப்படியாக முன்னேற வேண்டி உள்ளது.

    சிலர் சில கதைகளை மனித சமுதாயம் பயன்பெற வேண்டி பயன்படுத்துவார்கள். சிலர் தன் சுய லாபத்திற்காக பயன்படுத்துவார்கள். இங்கும் விதி அவரவர் செயல்களுக்கேற்ப வினைப் பதிவினை ஏற்படுத்துகின்றது. லாபம் அறியாமல் ஒருவர் ஒரு செயலை செய்து விட்டோம் என்று நினைக்கவே முடியாது. இயற்கை என்றாலும் இறைவன் என்றாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அனைத்தினையும் இம்மி தவறாமல் பதிவு செய்து கொண்டு இருக்கின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    'எண்ணங்கள் என்பதே தொந்தரவுதான்'

    எண்ணங்களுக்கு ஏற்பதான் வாழ்க்கை. ஆகவே தான் நல்லதையே நினைக்க வேண்டும் என்கின்றனர். இந்த எண்ணங்கள் அப்படி வந்து விடுமா என்ன? நல்லது அல்லாதவற்றில் ஊறி திளைத்த மனதினை ஒடுக்கி பிடித்து கட்டுக்குள் கொண்டு வருவதே தியானம்.

    • ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதி காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்று சொல்கிறார்கள்.
    • வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் செல்வ செழிப்புக்கு தடையாக இருக்கும் அனைத்து தோஷங்களையும் போக்கி கொள்ள முடியும்.

    தோஷங்கள் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் வரக்கூடும். தெரிந்து செய்த தவறுகள், தெரியாமல் செய்த தவறுகள் எல்லாமே நிச்சயமாக தோஷமாக மாறும். அதை அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி. பரிகாரங்கள், பிரார்த்தனைகள் செய்தால் தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்களை குறைத்துக் கொள்ள முடியும் அல்லது கட்டுப்படுத்த முடியும்.

    அந்த வகையில் எந்த தோஷமாக இருந்தாலும் அதை விரட்டும் ஆற்றல் பிரதோஷ வழிபாட்டுக்கு உண்டு. சிவபெருமானை போற்றி விரதம் இருந்து வழிபடும் வழிபாடுகளில் சிவராத்திரிக்கு தனி இடம் உண்டு. அதற்கு அடுத்த இடத்தில் பிரதோஷ வழிபாடு இருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதி காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்று சொல்கிறார்கள். அந்த திதி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ஒன்றரைமணி நேரம்தான் பிரதோஷ நேர காலமாகும்.

    இந்த காலத்தில்தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காப்பாற்றினார். அந்த சமயத்தில் அவர் நீலகண்டனாக உலக மக்களுக்கு காட்சி அளித்தார். அதை பிரதிபலிக்கும் வகையில்தான் சிவா லயங்களில் பிரதோஷ கால வழிபாடு நடத்தப்படுகிறது.

    அந்த பிரதோஷ கால பூஜையில் பங்கேற்று நந்தியின் இரு கொம்பு களுக்கு இடையே சிவ பெருமானை வழிபட்டில் எவ்வளவு பெரிய தோஷ மாக இருந்தாலும் விலகி சென்று விடும் என்று முன்னோர்கள் குறிப் பிட்டு உள்ளனர். ஒரு பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றால் ஒரு வருடம் முழுவதும் சிவாலய வழிபாடு செய்த பலனை பெற முடியும். மகா பிர தோஷம் என்று அழைக் கப்படும் சனி பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 120 ஆண்டு கள் சிவாலயத்தில் ஈசனை தரிசித்த பலனை பெற முடியும் என்பார்கள்.

    அதுபோல ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்துக்கு ஒவ்வொரு வகையான தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆற்றல் உண்டு. திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் மன அமைதியை இழக்க செய்வதற்கு காரணமான தோஷங்களை விரட்ட முடியும். செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

    புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்களை வெற்றி கொள்ள முடியும். வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் கிரக தோஷங்களால் அவதிப்படு வதில் இருந்து மீள முடியும். வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் செல்வ செழிப்புக்கு தடையாக இருக்கும் அனைத்து தோஷங்களையும் போக்கி கொள்ள முடியும்.

    சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். பஞ்சமா பாவங்களும் விலகும். தோஷங்கள் அனைத்தும் நீங்குவதால் ஈசனின் அருளும் கிடைக்கும். அதனால்தான் சனி பிரதோஷத்தை மிக சிறப்பாக மகாபிரதோஷம் என்று சொல்கிறார்கள்.

    ஒரு ஆண்டில் 24 பிரதோஷங்கள் வரும். அனைத்திலும் கலந்து கொள்ள இயலாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷங்களிலாவது கலந்து கொள்ள வேண்டும். இந்த 8 பிரதோஷங்களும் மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா வகையான தோஷங்களையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் பெற்றவை.

    தோஷங்களில் பித்ரு தோஷம், கோ தோஷம், கன்னி தோஷம், நாக தோஷம், பிரம்மகத்தி தோஷம் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துபவை. பிரதோஷத்தில் வழிபட்டால் இந்த கடுமையான தோஷங்களை மிக எளிதாக எதிர்கொண்டு கடந்து செல்ல முடியும்.

    ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 3 சனி பிரதோஷமாவது வரும். அப்படி சனி பிரதோஷம் வரும்போது நந்தி பூஜைகளுக்குரிய பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும். பிரதோஷ பூஜை முடிந்ததும் 5 நெய் தீபங்களை ஏற்றி காப்பரிசி, எள் உருண்டை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். அந்த நைவேத்தியத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

    பின்னர் கோபுர பகுதியில் 3 தீபங்களை ஏற்றி முன்னோர்களை நினைத்துக் கொள்ள வேண்டும். சனி பிரதோஷத்தில் இப்படி செய்தால் எவ்வளவு வலிமையான பித்ரு தோஷமும் விலகி சென்று விடும்.

    அதுபோல வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் தினத்தன்று காலையில் இருந்தே விரதம் இருக்க வேண்டும். அன்று மாலை 3 மணிக்கே பிரதோஷ பூஜைக்குரிய பொருட்களுடன் சிவாலயத்துக்கு செல்ல வேண்டும். குறிப்பாக நந்தி பகவானுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தேவையான அளவுக்கு பால் கொண்டு செல்ல வேண்டும். நந்திக்கு பாலாபிஷேகம் நடக்கும் போது மனமுருக வழிபட வேண்டும்.

    பெரும்பாலான சிவாலயங்களில் நந்திக்கு பால் அபிஷேகம் செய்யும்போது வழிந்தோடும் பாலை பக்தர்கள் சேகரித்துக் கொள்ள அனுமதிப்பார்கள். எனவே பால் அபிஷேகம் செய்யும் போது ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் பாலை சேகரித்துக் கொள்ள வேண்டும். மறுநாள் அந்த பாலை அகத்தி கீரை மற்றும் வாழைப்பழத்தில் கலந்து பசு மாடுகளுக்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும்.

    பசு மாடு சாப்பிட்டதும் அதை 9 தடவை சுற்றி வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் கோ தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் 5 வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று இந்த பரிகாரத்தை அவசியம் செய்ய வேண்டும்.

    சிலர் கன்னி தோஷத்தால் மிகவும் கஷ்டப்படுவார்கள். கிராமங்களில் கன்னி தெய்வ வழிபாடு என்பதை மிகவும் கவனமாக செய்வார்கள். ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகாமல் 7 வயது முதல் 12 வயதுக்குள் உள்ள சிறுமி இறந்துவிட்டால் அவளை கன்னி தெய்வமாக கருதி வழிபடுவது மரபாக உள்ளது.

    கன்னி தெய்வ வழிபாட்டை எந்த குடும்பத்தினர் சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தி வருகிறார்களோ அந்த குடும்பத்தினருக்கு தோஷங்கள் என்பது வராது. சில குடும்பத்தினர் கன்னி தெய்வத்தை மறந்து விடுவார்கள். அது கன்னி தோஷம் என்ற பெயரில் ஒரு தோஷமாகவே மாறிவிடும்.

    அதன் பிறகும்கூட சில குடும்பத்தினர் கன்னி தெய்வத்தை வணங்காமல் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் கன்னி தோஷம் அந்த குடும்பத்தில் 3 தலைமுறைக்கு நீடிக்கும் என்று நம்பிக்கை உள்ளது. எனவே கன்னி தோஷம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கன்னி தோஷம் ஏற்பட்டு இருந்தால் பிரதோஷ வழிபாடு மூலம் அந்த தோஷத்தில் இருந்து மீள முடியும்.


    அதாவது செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று தவறாமல் சிவால யங்களுக்கு சென்று நந்தியை வழிபட வேண்டும். பிரதோஷ நேரத்தில் நந்திக்கு விதவிதமாக அபிஷேகம் செய்வார்கள். கன்னி தோஷ பாதிப்பு இருப்பவர்கள் நந்தி அபிஷேகத்துக்காக மஞ்சள் பொடியும், எலுமிச்ச பழமும் வாங்கி கொடுக்க வேண்டும். மஞ்சள் பொடியை நந்திக்கு அபிஷேகம் செய்யும்போது நந்தி மீது பட்டு வழிந்தோடி வரும் மஞ்சள் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

    பிரதோஷ வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த மஞ்சள் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து வழிபட வேண்டும். முடிந்தால் கன்னி பெண்களுக்கு தாம்பழம் கொடுத்து வணங்கலாம். இந்த வழிபாடு மூலம் கன்னி தோஷம் நிவர்த்தி ஆகி விடும்.

    சிலருக்கு திருமண தடைகள் நீடித்து கொண்டே இருக்கும். 30 வயதை கடந்த பிறகும் கூட சில பெண்கள் அல்லது ஆண்களுக்கு திருமணம் கைகூடாமல் இருக்கும். இதற்கு பெரும்பாலும் நாக தோஷத்தை காரணமாக சொல்வார்கள். இத்தகைய தோஷத்தில் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

    முடிந்தவர்கள் நந்தி அபிஷேகத்துக்கு சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் 3 நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

    பிரம்மகத்தி தோஷம் இருந்தால் வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று வழிபட்டால் பலன் கிடைக்கும். இவை தவிர 16 பிரதோஷங்கள் தொடர்நது வழிபாடுகள் செய்தால் செல்வாக்கும், சொல்வாக்கும், பெயரும், புகழும் தேடி வரும். 12 பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம் தீரும்.

    பிரதோஷ வழிபாட்டுக்கு இப்படி பல்வேறு ஆற்றல்கள் உள்ளன. தோஷத்தை விரட்ட பிரதோஷத்தை நாடுங்கள்.

    • தெலுங்கு, தமிழில் படுபிசியாக இருந்தேன். ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன்.
    • மற்ற மொழிகளைவிட மலையாளத்தில் நடிப்பது வித்தியாசமானது.

    நான் எங்கு ஷூட்டிங் சென்றாலும் ஒரு தயாரிப்பாளர் பின் தொடர்ந்தார்.

    அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவர் என்னை விடுவதாக தெரியவில்லை.

    பிளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லாதீங்க! என்பார்.

    ஒரு வழியாக போயிட்டு வாங்க என்று கும்பிடு போட்டு அனுப்புவேன்.

    அடுத்த சில நாட்கள் கழித்து வேறு எங்காவது ஷூட்டிங் நடக்கும். அங்கும் வந்து நிற்பார். திருப்பதி, சென்னை என்று எங்கு ஷூட்டிங் நடந்தாலும் விடாமல் துரத்திக் கொண்டே இருந்தார்.

    அய்யய்யோ விடமாட்டார் போலிருக்கே... என்று ஒரு கட்டத்தில் 'சார்... எனக்கு நேரமே இல்லை. பிளீஸ்... வேறு யாரையாவது பாருங்களேன்' என்றால், இல்லை மேடம். உங்களைத்தான் எதிர்பார்க்கிறேன். பதினைந்து நாள் மட்டும் தாருங்கள் போதும் என்று பிடிவாதமாக இருந்தார்.

    அந்த காலகட்டத்தில் தெலுங்கு, தமிழில் படுபிசியாக இருந்தேன். ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் அந்த மலையாள பட தயாரிப்பாளர் தெலுங்கில் நான் நடித்து சூப்பர் ஹிட்டான 'சீதாராமையாவின் பேத்தி' என்ற படத்தை பார்த்து இருக்கிறார்.

    அந்த படத்தை மலையாளத்தில் தயாரிக்க அவருக்கு ஆசை. மலையாளத்திலும் நானே நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

    அதற்காகத்தான் அத்தனை நாட்களாக போராடி கொண்டிருந்தார். மலையாளத்தில் முதல் படம். தெலுங்கில் எனக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த படத்தின் கதாபாத்திரத்திலேயே நடிக்க போகிறோம் என்ப தால் எனக்கும் உள்ளூர ஆசை இருந்தது.

    ஆனால் கால்ஷீட் கொடுப்பதில் தான் பிரச்சினை இருந்தது. ஒரு வழியாக பதினைந்து நாள் தானே கேட்கிறார்கள் என்று ஒத்துக் கொண்டேன். நான் ஒத்துக் கொண்டதால் தயாரிப்பாளருக்கு ஏக சந்தோசம்.

    ஆனால் ஒரு கண்டிஷன் பதினைந்து நாட்களும் தொடர்ந்து நடிக்க முடியாமல் போகலாம். தேவைப் பட்டால் இடை இடையே ஒன்றிரண்டு நாட்கள் வேறு ஷூட்டிங்கும் செல்வேன் என்றேன்.

    அதற்கும், பரவாயில்லை மேடம் உங்கள் சவுகரியம்தான் என்று சம்மதித்து சென்றார்.

    மலையாளத்தில் 'சாந்தவனம்' என்ற பெயரில் தயாரானது. ஆலுவா அரண்மனையில் ஷூட்டிங்.

    ஆலுவா, சென்னை, திருப்பதி, ஐதராபாத் என்று பறந்து கொண்டிருந்தேன். இதில் என்னைவிட கஷ்டப்பட்டது எனது உதவியாளர்கள்தான். அவர்கள்தான் பாவம்.

    ஒவ்வொரு இடத்திலும் ஷூட்டிங் முடிந்ததும் உடனே எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு அடுத்த ஊருக்கு ரெயிலில் செல்ல வேண்டும். ஓய்வே இருக்காது. பல நாட்கள் அவர்கள் வீட்டுக்குகூட சென்றதில்லை.

    மலையாளத்தில் நடிகர் சுரேஷ்கோபி அப்பா வேடத்தில் நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கு நான் ஜோடியாகவே நடித்து இருக்கிறேன் என்பது வேறு கதை. கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? இதுதான் சினிமா.

    மலையாளத்துக்கு சென்றதும் கொஞ்சம் பயம் இருந்தது. தெரியாத மொழி. எப்படி நடிக்கப் போகிறோம் என்ற தயக்கம் வேறு.

    ஏன் மொழி தெரியாத தெலுங்கில் சாதிக்கவில்லையா? அதேபோல் தான். மலையாளத்திலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு காலடி எடுத்து வைத்தேன். நடித்தேன்.

    மற்ற மொழிகளைவிட மலையாளத்தில் நடிப்பது வித்தியாசமானது. பிரமாண்டம் என்பது இருக்காது. ஏன், மேக்-அப்பே பெரிய அளவில் இருக்காது. டான்ஸ் இல்லை.

    ஒரு டான்ஸ்கூட இல்லையா? படம் எப்படி வெற்றி பெறும்? என்று சந்தேகப்பட்டேன். இசைக்கு ஏற்ப கொஞ்சம் அங்கும், இங்கும் திரும்பி உடலை அசைத்தாலே... வேண்டாம் மேடம் என்றார்கள்.

    டைரக்டர் சிபிமலையில் காட்சிகள் பற்றி விளக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். மோகன் சித்தாரா இசை அமைத்து இருந்தார்.

    "உன்னி வாவா வோ, பொன்னுண்ணி வாவாவோ (கண்ணா வாவாவோ... என் தங்ககண்ணா வாவாவோ...)"

    தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா குழந்தையை கொஞ்சி பாடும் தாலாட்டு பாடல். இந்த பாடல் மலையாள தேசமெல்லாம் வாசம் வீசியது. கூடவே மீனாவையும் அழைத்து சென்றது.

    படத்தில் நெடுமுடி வேணுவின் பேத்தியாக நடிப்பேன். சுரேஷ்கோபி பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து அமெரிக்காவில் வசிப்பார். அவர்க ளுக்கு குழந்தையாக இருக்கும் நான் வளர்ந்து தாத்தா-பாட்டி மேல் காட்டும் பாசமும், அவர்கள் என்மீது காட்டும் பாசமும் தான் கதைக்களம். எத்தனையோ குடும்பங்களில் இந்த மாதிரி பிரிவுகளும், பாசத்துக்கான ஏக்கமும் இருப்பதால் கதை குடும்பங்களின் மனதை தொட்டது.

    ஆனால் படப்பிடிப்பின்போது டான்ஸ் எதுவும் இல்லாமல் மிக சாதாரணமாக காட்சிகள் படமாக்கப்பட்டது. ரொம்ப இயல்பாகவே நான் நடித்தேன். எனக்கு எதுவும் புரியவில்லை. இது என்ன ரசனை? மக்கள் ரசிப்பார்களா? என்று யோசித்தப்படியே இருந்தேன்.

    படம் முடிந்து குறிப்பிட்ட நாளில் வெளியானது. எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மலையாளத்தில் நான் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்.

    தெலுங்கில் எந்த அளவு வெற்றி பெற்றதோ அதேபோல்தான் மலையாளத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    அதன்பிறகு மலையாள பட உலகிலும் மீனாவின் கொடி பறந்தது.

    மலையாள படங்களை பொறுத்தவரை ஆஹா... ஓஹோ... என்ற சினிமாத்தனம் இருக்காது. நடிப்பு என்பது தற்செயலாக இருக்குமே தவிர மிகைப்படுத்தல் இருக்காது. யதார்த்தமாகவே காட்சி அமைப்புகள் அமைந்து இருக்கும்.

    ஒரே படத்தில் மலையாள பட உலகமும் என்னை வாரி அணைத்துக் கொண்டது.

    குட்டி பொண்ணே வா வா வோ...

    எங்கள் தங்க பொண்ணே வா வா வோ...

    என்று என்னையும் பாடி பரவசப்படுத்தியது போல் அந்த அனுபவம் இருந்தது.

    மற்றுமொரு புதிய அனுபவத்தோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்)

    • பிரஞ்சுப் புரட்சிக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் மன்னராட்சிக்கு எதிரான புரட்சியாளர்களின் கிளர்ச்சி நிகழ்ந்திருந்தது.
    • 1804 முதல் 1815 வரையிலான மாவீரன் நெப்போலியன் போனபார்ட் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் பிரான்சு புகழின் உச்சத்தில் இருந்தது.

    உலக வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைத்த பிரெஞ்சுப் புரட்சி என்றால் என்ன? அது ஏன் உண்டானது? அதன் விளைவுகள் என்னென்ன? பிரெஞ்சுப் புரட்சி மக்களுக்கு சொல்லும் பாடம் என்ன?

    பசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த மக்களால் பெரும் புரட்சி ஏற்பட்டது. பல ஆண்டுகளாக போர் ஒன்றே முக்கிய தொழிலாகி, விவசாயம் கூட முடங்கிப் போனதால் அடிப்படை உணவான ரொட்டியின் விலையும் உச்சத்திற்குச் சென்ற அதே வேளையில் அரச குடும்பத்தின் ஆடம்பர செலவுகளும், அரண்மனை விருந்துகளும் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

    தொடர்ந்த போர்களின் விளைவால் அந்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சு தேவையில்லாமல் ஈடுபட்டதால், பெரும் பொருள் செலவாகியிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வட அமெரிக்காவிலிருந்த பிரான்ஸ் காலனிகளின் கட்டுப்பாட்டை இழந்தது அதன்பின் பிரிட்டன் ஆதிக்கமும் பெருகியது.

    இதனால் பிரெஞ்சு மன்னர்கள் மீது கடும் கோபம் கொண்டார்கள் பிரெஞ்சு குடிமக்கள். கடன் சுமையால் நாட்டில் நிலவிய மோசமான சூழல் அதனால் கடுமையான வரி வசூல் போன்றவை மக்களை பொங்கி எழச்செய்தது. பசிக்கொடுமையால் மக்கள் துடித்துக்கொண்டிருக்க "உண்ண ரொட்டி இல்லாவிட்டால் என்ன., கேக் இருக்கிறதே" என்று எள்ளி நகையாடிய ஆட்சியாளர்களின் ஆணவத்தினால் புரட்சி வெடித்துச் சிதறியது. 11 ஆண்டுகள் தொடர்ந்து போராடி சாமான்ய மக்கள் நிலப்பிரபுத்துவத்திற்கு ஒரு முடிவை உண்டாக்கிய புரட்சி இது என வரலாறு குறிப்பிடுகிறது.

    பிரஞ்சுப் புரட்சிக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் மன்னராட்சிக்கு எதிரான புரட்சியாளர்களின் கிளர்ச்சி நிகழ்ந்திருந்தது. பிரெஞ்சு புரட்சிக்கு சற்றுமுன்னரே அமெரிக்கப் புரட்சி நடைபெற்று உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே பிரெஞ்சு புரட்சியும் உண்டானது.

    பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், ஐரோப்பாவில் மிக அதிகமாக இருந்தது. அதிகார வர்கத்தை கூண்டோடு ஒழித்த புரட்சி இது. நிலபிரபுத்துவ, அதிகார முறைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த அதிகார கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு குடியுரிமை, மக்கள் உரிமைகள் போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும், இம்மாற்றங்களுக்கு காரணமாக இருந்தனர்.

    1815-ல் பிரெஞ்சுப் புரட்சியினால் குடிமக்களுக்குக் கிடைத்திருந்த உரிமைகளும் பல்வேறு சலுகைகளும் பிரெஞ்சுப் பேரரசு வீழ்ந்ததனால் பறிக்கப்பட்டபோதிலும் குடிமக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதையும், புரட்சி செய்வதையும் மறக்கவில்லை. இதன் விளைவு, இம்மக்களின் சுய அடையாளத்தில், அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன என்கின்றனர் வரலாற்றாளர்கள். சமூகத்தில் சமத்துவம், மனித உரிமைகள் போன்ற சுதந்திரக் கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கின.

    இறுதியில் தோல்வியடைந்தாலும் முதலில் ஐரோப்பாவிலும் பின்பு உலகெங்கும் மக்களாட்சிக் கருத்துகள் பரவ இந்த புரட்சியே வித்திட்டது என்றால் அது மிகையாகாது. சீனாவில் நடைபெற்ற மாசேதுங்கின் புரட்சியிலும் இந்த பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் இருந்தது.

    1804 முதல் 1815 வரையிலான மாவீரன் நெப்போலியன் போனபார்ட் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் பிரான்சு புகழின் உச்சத்தில் இருந்தது. அதாவது பிரெஞ்சு புரட்சியால் உருவான குழப்பத்தில் தான் மாவீரர் நெப்போலியன் பிரான்சு நாட்டின் அதிபர் ஆனார் என்கின்றனர்.


    ரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல நூற்றாண்டுகளாக பிரான்சில் நீடித்திருந்த மன்னராட்சி முறை முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. மாபெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. வழக்கிலிருந்த நூற்றாண்டுக்கால அதிகாரக் கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டு குடியுரிமை, நிரந்தர உரிமைகள் போன்றவை பரவின.

    இதே பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கம் நமது புதுச்சேரியிலும் இருந்தது வேதனைக்குரிய விசயமாக இருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் இன்றும் நமக்கு வாழ்க்கையை எளிதாக எதிர்கொள்ள வழியமைப்பதை மறுக்க முடியவில்லை. அவர்களுடைய நகர கட்டமைப்புகள் இன்றளவிலும் மிகச்சிறப்பாக இருந்து கொண்டுள்ளன. இன்றும் பிரெஞ்சு நாட்டு ஓய்வூதியம் பெறும் முதியோர் இருந்துகொண்டுதான் உள்ளார்கள்.

    பிரெஞ்சுக்காரர்கள் சுதந்திரத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற பற்றின் காரணமாக அவர்கள் வணங்கக்கூடிய சுதந்திர தேவியின் உருவத்திலேயே பிரம்மாண்ட சிலையைப் படைத்து அதனை அமெரிக்க மக்களுக்குப் பரிசாக அளித்துள்ளனர். சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!

    சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. சுதந்திரதேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் வருடத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.

    ரோம் நகரப் பெண்களின் பாரம்பரிய உடையான இசுடோலோ என்பதை அணிந்துள்ள நிலையில் காணப்படும் சுதந்திர தேவி சிலை 1902-ம் ஆண்டு வரை கலங்கரை விளக்காகவும் இருந்துள்ளது. இச்சிலையின் உட்புறத்தில் 354 ஒற்றை வளைவு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தை அடைந்து அதன் மீது ஏறி நின்று ரசிக்க முடியும். 25 சாளரங்கள் கொண்ட இந்த அறையிலிருந்து நியூயார்க் நகரைப் பார்வையிடலாம். சிலையின் உச்சியில் அதன் பீடத்தில் எம்மா லாசரசின் கவிதையான, புதிய கொலாசசு செதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டு, 1886-ல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.

    இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.

    1865-ல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.

    1886-ல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்ட மாக்கப்போ கிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.

    ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800-களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி சுதந்திர தேவியின் திருவுருவம், 'புலம் பெயர்ந்தோரின் தாய்' என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.

    முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்றம் சரிவடைந்ததால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், ராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகளை வெறித்துப் பார்க்கும் பொழுதெல்லாம் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது.

    பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடு களுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளில் இருந்து மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.

    வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில் சூலை 4,1776 என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியிடம் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்க ளையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்தில் இருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டு உள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

    சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:

    "அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையா ளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்து உள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்".

    இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டு களிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிச யங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

    சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தைப் பார்ப்பது நியூயார்க் நகரத்திற்கான பயணத்தின் மிக சிறப்பான அனுபவங்களில் ஒன்று. 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கு செல்ல அனுமதி இல்லை. மிகவும் பிரபலமாக உள்ள கிரீடத்திற்கான நுழைவுச் சீட்டுகள் முன்பதிவு மூலம் மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவில் மட்டுமே கிடைக்கின்றன, தீவுக்கு நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பே கிரீடத்திற்கான நுழைவுச் சீட்டுகள் வாங்கப்பட வேண்டும்.

    நியூயார்க் - சுதந்திர தேவி சிலை அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் வாசகம்!

    I am a lover of my own liberty and so I would do nothing to restrict yours.

    Mahatma K. Gandhi

     


    • மின்னணுத்துணிமணியை அணியக்கூடிய தொழில் நுட்பத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
    • லாரி, பஸ் ஓட்டும் டிரைவர்களின் உடல் சோர்வு குறித்தும் கண்காணித்து விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்க முடியும்.

    "மேடம்! கொஞ்சம் இப்படி உட்கார்ந்துக்கறீங்களா?"

    "நீ டிக்கட்ட கொடுப்பா முதல்ல!"

    "தர்ரேன் மேடம்! நீங்க உட்காருங்க! உங்களுக்கு உடம்பு சரியில்ல!"

    "கண்டக்டர்! என் உடம்பு பத்தி உனக்கென்னய்யா தெரியும்?"

    "மேடம்! உங்க சுடிதார் சொல்லுது! உங்க ஹார்ட் ரேட் 110 காட்டுது!"

    "என்னது சுடிதார் ஹார்ட் ரேட் சொல்லுமா?"

    ஆம் சொல்லும். இன்னும் என்னென்னவோ சொல்லும்!

    இ டெக்ஸ்டைல்ஸ் அல்லது மின்னணுத்துணிமணி!

    அதாவது உங்கள் துணிமணிக்குள் மைக்ரோ கூறுகள் (components) மற்றும் பாட்டரிகள் அல்லது விளக்குகள் கூட உட்பொதிக்க முடியும்.

    இந்த மின்னணுத்துணிமணியை அணியக்கூடிய தொழில் நுட்பத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. அது வேறு, இது வேறு.


    எலக்ட்ரானிக்சை துணி மணிக்கு உள்ளேயே உட்பொதிப்பது வெகு சமீப தொழில்நுட்ப முன்னேற்றம்.

    உலக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த மின்னணுத்துணிமணியில் மூன்று தலைமுறை பொருட்களை அடையாளப்படுத்தி இருக்கிறது.

    முதல் தலைமுறை, இது துணிமணிக்குள் சென்சாரைப்பொருத்துவது. உலகளாவிய விளையாட்டுப் பொருட்கள் நிறுவனமான அடிடாஸ், நைகி, ரீபாக் போன்றவர்கள் இதைச்செய்ய ஆரம்பித்து விட்டனர்.

    இரண்டாம் தலைமுறை, இது சென்சார்களை துணி மணிக்குள் உட்பொருத்துவது, கவனியுங்கள் வெறுமனே பொருத்துவதில்லை, உட்பொருத்துவது. அதாவது நம் கண்ணில் படாமல் இழைத்துத்தைப்பது. சாம்சங், ரால்ப் லௌரென், பிக்ஸ் போன்ற பாஷன் துணிக் கம்பெனிகள் இந்த நுட்பத்தைப்பயன் படுத்துகின்றன.

    மூன்றாம் தலைமுறை, இதில் துணிமணிகளே சென்சார்கள் தான்! அதாவது துணி நெய்யப்படும்போதே அழுத்தம், கனம், உஷ்ணம் ஆகிய சென்சார்களை துணியோடே நெய்துவிடுவது!

    உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்தத்துணிமணிகளில் புதுமை செய்வது 1000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. முதலாம் எலிசபெத் மகாராணி போட்டுக்கொண்ட கவுன்கள் தங்கத்தால் மூடப்பட்ட இழைகள் கொண்டு செய்த தாம்!

    19-ம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல நாம் மின்சார சாதனங்களுக்கு பழகிவிட, ஆராய்ச்சியாளர்கள் துணி மணிகளுடன் அதேபோல, நகைகளுடன் கூட, மின்சாரத்தை இணைத்துப்புதுமை செய்தனர்.

    1800-களிலேயே செல்வாக்குள்ள பிரபுக்கள் விருந்து கேளிக்கைகள் நடத்தும்போது எலக்ட்ரிக் கேர்ள் லைட்டிங் கம்பெனியிலிருந்து மின்சார விளக்குகள் ஒளிரும் உடையணிந்த கவர்ச்சிப்பெண்களை வாடகைக்கு எடுத்து விருந்தாளிகளை பிரமிக்க வைத்த கதைகள் உண்டு.

    ஜெயராமன் ரகுநாதன்

    ஜெயராமன் ரகுநாதன்

     1968-ம் ஆண்டு நியூயார்க் மியூசியத்தில் ஒரு பெரிய பொருட் காட்சியில் தொழில் நுட்பத்துக்கும் துணிமணிகளூக்குமான தொடர்புகள் பற்றி மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை காட்சியாக்கியிருந்தனர். அதில் அணியும் உடைகள் நேரத்துக்கேற்ப சூடாகவோ அல்லது குளிரவோ செய்யும்படி வடிவமைக்கப் பட்டிருந்தனவாம்!

    அதோடு மட்டுமின்றி உடைகள் குளிரவோ அல்லது சப்தமிடவும் செய்தன! இதைச்செய்து காட்டியவர் அந்நாளைய புதுமை வடிவமைப்பாளர் டயானா ட்யூ என்பவர்!

    இன்னொரு விஷயம், ஹென்றி வெயின்ரைட் என்பவர் நாம் போட்டுக்கொள்ளும் டி ஷர்ட்டில் ஒரு கார்ட்டூன் படமே ஓடச்செய்தவர்! பைபர் ஆப்டிக்சும் மைக்ரோப்ரோ ஸசரும் துணிக்குள் உட்பொருத்தி இந்த அனிமேஷனை அவர் நிகழ்த்தினார். இந்த இ டெக்ஸ்டைலின் வளர்ச்சி முழுக்க முழுக்க அபார ஆராய்ச்சியின் விளைவுகளால்தான் என்று அடித்துச்சொல்லலாம்.

    பைபர்ட்ரானிக்ஸ் என்னும் இயலின் மூலம் உலோக பைபர்களை துணிமணிக்குள் நெய்துவிடமுடியும். இந்த உலோக பைபர்கள் கடத்தி அல்ல குறை கடத்தி, அடிக்க வராதீர்கள், அப்படி என்றால் கண்டக்டர் அல்லது செமி கண்டக்டர் வகையைச் சேர்ந்தவைகளாம்.

    இவற்றின் மூலம் அணியக்கூடிய டிஜிட்டல் சமாச்சாரங்களை துணிமணிகளுக்குள் பொருத்தி விடமுடியுமாம். இந்த உலோக பைபர்கள் துணிமணி மடக்கி நீட்டி கசக்கி என்று என்ன செய்தாலும் ஒரு டாமேஜும் ஆகாதாம்!

    "ஆமா, இத்தன மெனக்கெட்டு துணிமணிக்குள்ள எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் வெக்காட்டிதான் என்ன?"

    அவற்றின் பயன்களைப்பார்த்தால் இப்படி கேட்க மாட்டீர்கள்!

    இந்த இ டெக்ஸ்டைல் அணிவதன் மூலம் ஒரு நோயாளியின் இதயத்துடிப்பையும் பிளட் பிரஷரையும் சர்க்கரை அளவையும் கண்காணித்து அவ்வப்போது சிகிச்சை அளிக்க முடியும். டென்னிஸ், லாங் ஜம்ப் போன்ற விளையாட்டுப்பயிற்சியின் போது உடலின் பல முக்கிய சமன்பாடுகளின் தகவல்களைத்திரட்டி விளையாட்டு வீரரின் திறனை அதிகப்படுத்த முடியும்.

    ஆபத்தான பொருட்களுடன் வேலை செய்பவர்கள் இந்த வகை துணிமணி அணிந்தால் அவர்களைத்தொடர்ந்து கண்காணித்து ஆபத்து ஏற்படுவதற்கு முன்னரே நடவடிக்கைகள் எடுத்து இழப்புக்களை சமாளிக்க முடியும்.

    ராணுவ வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது சுலபமாகிவிடும். அவர்களின் உடுப்பில் உள்ள சென்சார்கள் ராணுவ முகாமுக்கு செய்தி அனுப்பிவிட, ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படும் முன்னரே அவர்களின் போக்குவரத்தை மாற்றி அமைத்து ஆபத்தைத்தவிர்க்கலாம்.

    நீண்ட நேர விமானப்பயணத்தில் பைலட்டின் சோர்வுகளைப்பு உடல் நிலைபற்றி கண்காணித்து முன்கூட்டியே தேவையான அறிவுரைகள் வழங்கலாம். அதேபோல லாரி, பஸ் ஓட்டும் டிரைவர்களின் உடல் சோர்வு குறித்தும் கண்காணித்து விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்க முடியும்.

    தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முன்னேற்றமும் தினப்படி வாழ்க்கையில் முழுமை பெறுவதற்கு முன்பே இன்னொரு மாற்றம் முன்னேற்றம் நிகழ்ந்து நம் காலுக்கடியில் உலகம் நம்மை விட வேகமாக நழுவிக்கொண்டிருக்கிறது.

    "ஏம்ப்பா லாரி! நீ நேரா பார்த்து வண்டி ஓட்டு! அதென்ன சைடுல பராக்கு பார்த்துக்கினே ஓட்டறே?"

    "சாரிங்க! ஆனா அதெப்படி உங்களுக்கு தெரிஞ்சது?"

    "உனக்கு நாங்க குடுத்த யூனிஃபார்ம் இ டெக்ஸடைல்! அது மூலமா வர்ற சென்சர் சைகைகளை வெச்சுப்பார்த்தா நீ இடது பக்கம் இருக்கற லேடீஸ் காலேஜப்பார்த்து ஓட்டறேன்னு இங்கயே தெரியுதே! பார்த்துய்யா! வேலை போய்டும்!"

    "அய்யோ! சாரிங்க! இனிமே கவனமா இருக்கேங்க!"

    ஆம், மின்னணுத் துணிமணிகளின் உபயம்!

    • பேருந்துப் பயணத்தையே எடுத்துக் கொள்வோம்.
    • பயணத்தை முந்திக்கொண்டு சிலர் பயணிப்பதைப் பார்த்திருப்போம்.

    வாழ்க்கைப் பயணத்தில் வசந்தங்களை எதிர்நோக்கும் வளமான வாசகர்களே!

    வணக்கம்.

    நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தொடக்கப்புள்ளி பிறப்பு என்றால் நிறைவுப்புள்ளி இறப்பு ஆகும். இந்தத் தொடக்கப் புள்ளிக்கும் நிறைவுப் புள்ளிக்கும் இடையே நாம் வரையப்போகிற ஓவியமே வாழ்க்கை ஆகும். அது நீள்கோடாகவும் அமையலாம்; நெளிகோடாகவும் ஆகலாம். வளைந்து,நெளிந்து, சுழித்துத் திகழுகிற வண்ணக் கோலங்களாகவும் சிறப்புப் பெறலாம். புள்ளிக்கும் புள்ளிக்கும் இடையே தொடர் இணைப்புகளைத் தொடர்ந்து பொருத்த முடியாதவர்களுக்கு அது புரியாத கிறுக்கலாகவும் அமைந்து போகலாம்.

    வாழ்க்கை என்பது புள்ளிக்கும் புள்ளிக்கும் இடையே நிகழும் ஓவியப் பயணம். ஆம்!. வாழ்க்கை என்பதும் பயணம் தான். கருவூரிலிருந்து மேலூரு போகும் வரை எல்லோரும் நிகழ்த்த வேண்டிய கட்டாயப் பயணம். இந்தப் பயணம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம்; அவசியம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்தே தான் ஆக வேண்டும்; அவரவர் ஓவியத்தை வரைந்தே ஆக வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பயணம் என்பது விரைவுப் பயணமாகவே எதிர்பார்க்கப் படுகிறது. ஏறியவுடனே இறக்கிவிடக் கூடிய அளவுக்கு அதி வேகத்துடன் செல்லக்கூடிய ஊர்திகளையே மக்கள் விரும்புகின்றனர். ஒலியின் வேகத்தைவிட விரைந்து செல்லக்கூடிய வானூர்திகளையும், காற்றைவிட விரைந்து செல்லும் ரெயில்களையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மனிதனின் அறிவியல் மூளை ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

    எல்லாவற்றிலும் வேகத்தை விரும்புகிற மனித மனம், வாழ்க்கைப் பயணத்திலும் விரைவை எதிர்பார்ப்பது நியாயமா?.

    பேருந்துப் பயணத்தையே எடுத்துக் கொள்வோம். பேருந்து நிலையத்தில் நாம் செல்லவேண்டிய ஊருக்கு எத்தனை பேருந்துகள் நின்றாலும், இடை நில்லாப் பேருந்தையே (Point To Point) கண்கள் தேடுகின்றன. அந்தப் பேருந்து, வழியில் எந்த ஊரிலும் நிற்காது; சொல்லப்போனால் எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் புறவழிச் சாலையில் மட்டுமே செல்லும். வசதியாகவும் விரைந்தும் செல்ல ஆறுவழிச்சாலை; எதிரில் வருகிற வாகனங்களுக்குத் தனிவழி; எதிரிகளே இல்லாமல் போரில் வெறும் வாளைச் சுழற்றிக்கொண்டே செல்வது போன்ற பயணம்.

    வழியில் மனித நடமாட்டம், கால்நடைகள் நடமாட்டம் என வாழ்விடக் காட்சிகள் எதுவுமின்றிப், பகலிலும் மங்கலான வெளிச்சத்தில், வெளிக்காற்றுத் தவறியும் உள்ளே வந்துவிடாதபடிக் கிச்சென்று அடைக்கப்பட்ட குளிர்சாதனப் பேருந்தில் பயணிப்பது கொடுமையே தவிர மகிழ்ச்சி என்பது சிறிதும் கிடையாது.

    இப்போதெல்லாம் எல்லாப் பயணமும் முன்பதிவு செய்யப்பட்டே மேற்கொள்ளப் படுகின்றன. முன்பெல்லாம் பேருந்தில் உட்கார இருக்கைக்காக இடம்பிடிப்பது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியப் பதவியைப் பிடிப்பது போல. அப்படி உட்கார்ந்தாலும், அருகில் உட்கார்ந்திருப்பவர், கொஞ்சம் நெருக்கி, நம் இருக்கையை ஆக்கிரமிப்பது போலத் தோன்றினாலும் அவரிடம் 'இது என் இடம்!' என்று சொந்தம் கொண்டாடிச் சண்டைக்குப் போய்விடுவோம்.

    வயதில் மூத்தோர், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைக்காரர் என எவர் வந்து நம் அருகில் நின்றாலும், இது கஷ்டப்பட்டுப் பிடித்த இடம்! எழுந்திருக்க முடியாது! என்று கூறி விடுவோம். அந்தப் பேருந்தின் மொத்தப் பயண நேரமே இரண்டு மணி நேரம்தான். சேரவேண்டிய இடத்தை அடைந்தவுடன் எல்லோரும் சொந்தம் கொண்டாடிய இருக்கைகளை விட்டு இறங்கிச் சென்று விட வேண்டியதுதான். அடுத்து ஏறிச் சீட்டுப் பெற்றுப் பயணிக்கப் போகிறவர்களுக்கு, அடுத்த இரண்டுமணி நேரத்திற்கு அந்த இருக்கை சொந்தம்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்


    அதற்குள் மனிதனுக்குள் நான், எனது என்னும் அகங்காரம், நிலையற்றவற்றை நிலையானதாக எண்ணும் மாயப் பற்று எல்லாம் வந்து விடுகிறது. இந்த வகையில் பயணம் தருகிற படிப்பினையை மனிதன் உணர்ந்து திருந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது

    சென்னையில் பாரிமுனையில் உள்ள ஒரு புத்தக நிறுவனத்தில் ஒருவர் எடுபிடி வேலை செய்து வருகிறார். காலை பத்து மணிக்கு அலுவலகம் வந்து விட்டால், இரவு எட்டு மணி வரை அவர் நின்றுகொண்டே வேலை பார்க்க வேண்டும். சொற்பச் சம்பளம். அதனால் பெருநகர எல்லை தாண்டி, திருப்போரூரில் வீடு வாடகைக்குப் பிடித்துத் தங்கி, அங்கிருந்து பேருந்தில் அன்றாடம் வேலைக்கு வந்து போகிறார். பயண நேரம் மட்டுமே ஒன்னரை மணி நேரம் ஆகும்.

    இரவு வேலை முடிந்தவுடனேயே பிராட்வே பேருந்து நிலையம் சென்று, இருக்கைகள் காலியாக இருக்கக்கூடிய திருப்போரூர் பேருந்தைப் பார்த்து ஏறிக்கொள்வார். இரவுநேரப் பேருந்து ஆகையால், பிதுங்கி வழியும் கூட்டம் சேர்ந்த பின் தான் ஓட்டுநர் வண்டியை எடுப்பார். அந்த நேரம் பார்த்து நமது திருப்போரூர் நண்பர், யாராவது வயதான ஒருவரை அழைத்து நீங்கள் உட்காருங்கள்! என்று அவருடைய இருக்கையைக் கொடுத்துவிட்டு எழுந்து அருகில் நின்று கொள்வார். நன்றிப்பெருக்கோடு முதியவர் இவரைப் பார்த்துவிட்டு அமர்ந்து கொள்வார். நாலைந்து நிறுத்தங்கள் தாண்டியவுடன் பெரியவர் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்து விடும். இருக்கையை இவரிடமே தந்து விட்டு இறங்கிக் கொள்வார்.

    அப்போது நமது திருப்போரூர் நண்பர், மற்றுமொரு வயதான நபரைப்பார்த்து, அவரிடம் இருக்கையை வழங்கிவிட்டு நின்றுகொள்வார். இப்படியே வண்டி திருப்போரூர் போய்ச் சேருவதற்குள் குறைந்தது ஆறேழு பேர்களுக்காவது அந்த இருக்கையை வழங்கி மகிழ்ந்து கொள்வார். இவ்வாறு செய்வதை, தான் நகரப் பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் செய்து வருகிறார்.

    திருப்போரூர் போன்ற தொலைதூர ஊர்களிலிருந்து நகரத்திற்கு வேலைக்கு வரவேண்டுமென்றால் அதிகாலையிலேயே எழுந்து கிளம்ப வேண்டும். அப்படி வேலைக்கு வந்தவுடன் தொடர்ந்து இரவு எட்டு மணிவரை உட்காரக்கூட முடியாமல் ஓய்வில்லாது உழைக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான அசதியின் பின்னணியில் பேருந்தில் ஏறினால் லேசாக ஒட்டிக்கொள்ள இடம் கிடைத்தாலும் தூக்கம் சொக்கிவிடும். ஆனால் இவரோ வசதியான இருக்கை பார்த்தே அமருகிறார். அப்படியே தூங்கத் தொடங்கினால் ஒன்னரை மணி நேரம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்கிக் களைப்பைப் போக்கிக் கொள்ளலாம்.

    ஆனால் ஏன் இவ்வாறு அவர் செய்கிறார்? இதனால் அவருக்கு கிடைக்கும் பலன் என்ன?.

    " நான் எந்த விதமான வசதி வாய்ப்புகளும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் சமுதாயத்தில் சக மனிதர்களுக்கு எந்த விதத்திலாவது நாம் உதவிகரமாக இருக்கவேண்டும் என்று கருதுபவன். நான் வாங்கும் சம்பளம் மற்றும் எனக்குக் கிடைக்கும் நேரத்தைக் கொண்டு, யாருக்கும் பெரிய அளவில் பண உதவியோ மற்ற உதவிகளோ என்னால் செய்து விட முடியாது. எனக்குக் கிடைக்கும் நேரம் அந்தப் பேருந்தில் பயணிக்கும் நேரம் மட்டும்தான். அந்த நேரத்தில் எந்தச் செலவும் இல்லாமல் அடுத்தவர்க்கு எப்படி உதவுவது என்று யோசித்தேன். அப்போது உதித்ததுதான் இந்த இடம்தந்து உதவும் ஐடியா!" என்கிறார் திருப்போரூர் நண்பர்.

    "நான் ஒவ்வொரு பயணத்தின்போதும் இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு நாளும் நன்றி பெருகும் கண்களோடு பத்துப் பதினைந்துபேர் மனதார என்னை வாழ்த்துகிற வாழ்த்தொலியை என் மனத்தில் கேட்டு மகிழ முடிகிறது." உதவி மிகச்சிறியது தான் என்றாலும் தேவைப்படுகிற தருணத்தில் வழங்கப்படுகிற போது எவ்வளவு பெரிய உதவியாக விஸ்வரூபம் எடுத்து விடுகிறது!.

    பேருந்துப் பயணத்தில் நமக்கான இடத்தைப் பிடிப்பது மட்டுமல்ல; தேவைப்பட்டால் தேவைப்படும் மற்றவர்க்குக் வழங்கக் கூடிய தாராள குணமும் இதனால் பெறப்படுகிறது. அன்றாட வாழ்வில் விட்டுக்கொடுத்தல் என்பதையும் பயண அனுபவத்தில் கற்றுக்கொள்ள முடிகிறது.

    பயணம் ஒரு நகர்தல் அனுபவத்தை உடையது. ஆம் ஓடிக்கொண்டே இருந்தால்தான் பயணம். அதைப்போல வாழ்ந்துகொண்டே இருந்தால்தான் வாழ்க்கை. வாழ்க்கையும் நகர்தல்தான். இயங்காத வாழ்க்கை தேங்கி நிற்கும் சாக்கடையாகிப் போகும்.

    பயணத்தில் பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று ஆட்களை இறக்கிவிடவும் புதிதாக ஆட்களை ஏற்றிக்கொண்டும் செல்கிறது. வாழ்க்கையிலும் இதுபோலவே நிகழவேண்டும்; அப்போதுதான் வாழ்வியலில் புதுமையாக்கமும் புத்துணர்வூக்கமும் நிகழ வாய்ப்பு ஏற்படும்.

    வேலைக்காகப் பயணிப்பது, உறவைக்காணப் பயணிப்பது, ஊர்சுற்றிப் பார்க்கப் பயணிப்பது, வழிபாடு நிகழ்த்தப் பயணிப்பது, மருத்துவத்திற்காகப் பயணிப்பது. எனப் பயணங்கள் பலவகைப் படலாம். ஆனாலும் நோக்கங்கள் பலவானாலும் பயணம் செய்வதே ஒரு சிறந்த அனுபவம்தான். வாழ்க்கையும் அப்படிப்பட்டதே ஆகும். ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு நோக்கத்திற்காக வாழ்க்கையை நாம் வாழ்ந்தாலும் வாழ்வதே ஒரு சுகமான அனுபவம்தான்.

    பயணத்தை முந்திக்கொண்டு சிலர் பயணிப்பதைப் பார்த்திருப்போம். சும்மா நின்றுகொண்டிருக்கும் பேருந்தில்கூட அவசரமாக ஓடிவந்து ஏறுவது, வண்டி நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்னரே அவசரப்பட்டு இறங்க முயற்சிப்பது, அத்தனை இருக்கைகள் காலியாக இருந்தாலும் பரபரப்புடன் நின்றுகொண்டே பயணிப்பது!, ஏன் என்று கேட்டால் மிகவும் அவசரம் என்று பதிலளிப்பது… இவையெல்லாம் எந்தக் காரணமும் இல்லாமல் முந்திக்கொண்டு செயல்பட நினைப்பதன் அறிகுறிகள்.

    ஏன் இந்த அவசரம்? நம்மை முந்திக்கொண்டு போய் நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? சிலர் தங்களின் வாழ்க்கையை முந்திக்கொண்டு வாழ்ந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதற்றங்களும் ரத்த அழுத்தங்களுமே பரிசாகக் கிடைக்கும். செல்கிற வாழ்க்கையைத் திட்டமிடுங்கள்! திட்டமிட்டபின் அதன் போக்கிலேயே அதனைப் போகவிட்டு, மெல்லிய பூங்காற்றைப் போலப் பின்தொடர்ந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

    பயணத்தில் சிலர் ஏறியவுடன் உறங்கிப்போகிறார்கள். சிலர் கூட்டமாக இருந்தால் நின்றபடியே தூங்கிப்போவதற்கும் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். பயணத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நடத்துநர் தொடங்கி ஓட்டுநர் வரை ஒவ்வொரு பயணியின் ஒவ்வொரு குண விசேஷங்களையும் கவனித்தால். மனித வாழ்வியலின் மகத்தான தத்துவங்களைப் படித்துக்கொள்ளலாம். மேடு பள்ளங்கள், வளைவு நெளிவுகள், குண்டு குழிகள் நிறைந்த பாதைகளில் பயணிக்கும் போது இதுவும் சிறந்த பயணம்தான் என்பது தெளிவாகும்.

    வாழ்க்கைப் பாதையும் அப்படிப்பட்டது தான்; சந்திக்கும் மனிதர்களும் பலதரப்பட்டவர்கள்தான். எல்லாவற்றையும் எளிதாக்கி விடுவதுபோல வாழ்க்கையை எளிதாக்கிவிட முடியாது. பிறந்த தேதியும் மறையும் தேதியும் வாழ்க்கையில் எண்களாக மட்டுமே கருதப்படும். இடையில் மனிதன் வாழும் தேதிகளே வரலாற்றில் அழியாத கல்வெட்டாய் புகழ்நினைவில் போற்றப்படும். வாழ்வோம்! வாழ்ந்து காட்டுவோம்!

    • மனத்தைப் பொறுத்தவரை அதற்குத் தீய பழக்கம் நல்ல பழக்கம் என்ற வேறுபாடு ஏதுமில்லை.
    • `நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்` என்கின்றன வேதங்கள்.

    மனமே முருகனின் மயில் வாகனம் எனக் கவிதை எழுதினார் தில்லானா மோகனாம்பாள் நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு.

    மயிலில் முருகன் அமர்கிறான். அதனால் முருகப் பெருமானை மயில்வாகனன் என்கிறோம். அடியவர் மனத்திலும் முருகன் அமர்கிறான். அப்படியானால் மனமும் அவனது மயில் வாகனம் போன்றதுதானே என்கிறார் அவர்.

    `மனம் இறைவன் வாழும் கருவறை. உடல் அவன் வாழும் ஆலயம்` என்கிறார் திருமந்திரம் எழுதிய சித்தரான திருமூலர்.

    `உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.`


    செடிகொடிகளில் பூத்த மலர்களால் அல்ல, மனத்தில் தோன்றும் எண்ணம் என்னும் மலர்களால் இறைவனை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியான கவிஞர் சுவாமி விபுலானந்தர்.

    `வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த

    மாமலரோ?

    வள்ளல் அடியிணைக்கு

    வாய்த்த மலரெதுவோ?

    வெள்ளை நிறப் பூவுமல்ல,

    வெறெந்த மலருமல்ல,

    உள்ளக் கமலமடி உத்தமனார்

    வேண்டுவது!`

    மனத்தில் குடிகொண்ட இறைவனை எப்படி அர்ச்சிப்பது? மனத்தில் தோன்றும் எண்ண மலர்களால் அவனை அர்ச்சித்து வழிபடுவதே இறைவனை நாடும் நெறிகளில் உயரிய நெறி.

    இறைவழிபாட்டில் உயர்ந்த வழிபாடு என்பது, மனத்தால் இறைவனைத் துதிப்பதே. புறக் கிரியைகள் முக்கியமல்ல. அக வழிபாடுதான் முக்கியமானது.

    63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் அப்படித்தான் சிவபெருமானை வழிபட்டார். மனக்கோவில் கட்டிய மகான் அவர்.

    காடவர்கோன் கனவில் தோன்றி அவன் கட்டிய கற்கோவிலின் கும்பாபிஷேகத் தேதியை மாற்றி வைக்கச் சொன்னார் சிவபெருமான். அதே நாளன்று, பூசலாரின் மனக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக பூசலாரின் மன ஆலய கர்ப்பகிரகத்தில் எழுந்தருளினார் இறைவன்.

    பூசலார் இருப்பிடத்தைத் தேடிவந்து வணங்கி அவர் ஆசியைப் பெற்றான் மன்னன் காடவர்கோன்.

    `நின்றவூர் பூசல் அன்பன்

    நெடிதுநாள் நினைந்து செய்த

    நன்றுநீ டால யத்து

    நாளைநாம் புகுவோம் நீயிங்கு

    ஒன்றிய செயலை நாளை

    ஒழிந்துபின் கொள்வாயென்று

    கொன்றைவார் சடையார் தொண்டர்

    கோவில் கொண்டருளப் போந்தார்!`

    என்று இந்நிகழ்ச்சியை விவரிக்கிறது சேக்கிழார் இயற்றிய பெரிய புராணப் பாடல்.

    சென்னை அருகேயுள்ள திருநின்றவூரில் வாழ்ந்தவர் பூசலார் நாயனார். மனக் கோவில் கட்டிய அவருக்கு அந்த ஊரிலேயே ஒரு கற்கோவில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

    இருதயாலீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் அந்தச் சிவன் கோவிலில் சிவனின் மூல ஸ்தானத்தில் பூசலார் நாயனாரின் சிலை உள்ளது.

    சிவன் மட்டுமா, கண்ணனும் அடியவர் மனத்தில் குடியிருப்பவன்தான்.

    பரோடாவில் குதிரை வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார் கிருஷ்ண பக்தரான அரவிந்தர். திடீரென வெறி பிடித்தாற்போல் குதிரை தறிகெட்டு ஓடியது. சாலையில் நடந்துகொண்டிருந்த மக்கள் பீதியடைந்து மிரண்டு விலகி ஓடினார்கள்.


    மலைப் பிரதேசத்தில் பெரும் வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த குதிரை வண்டி மலை முகட்டிலிருந்து அதல பாதாளத்தில் விழும் நிலை உருவாகியது. மலை முகட்டில் இரு கால்களையும் தூக்கியவாறு பாயத் தயாராயிருந்தது குதிரை.

    வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்தார் அரவிந்தர். கண்மூடி மனத்திற்குள் தன் இஷ்ட தெய்வமான கண்ணனைத் துதிக்கலானார். மூடிய விழிகள் மூடியபடி இருக்க, அவர் விந்தையான ஓர் அகக் காட்சியைக் காணப் பெற்றார்.

    அவர் மனத்தில் குடியிருந்த கண்ணன் கையில் சாட்டையோடு மனத்தை விட்டு வெளியே வந்தான்! சாட்டையைச் சொடுக்கிக் குதிரையை அதட்டி நிறுத்தினான்.

    மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டிய கண்ணனுக்கு ஒரே ஒரு சாதாரண வண்டிக் குதிரையை அடக்குவது சிரமமா என்ன?

    குதிரை தூக்கிய கால் தூக்கியபடி நின்றவாறே மெல்லப் பின்வாங்கியது. வண்டிக்கு எந்தச் சேதமும் இல்லாமல் அமைதியாகத் தன் வழியில் திரும்பி நடக்கத் தொடங்கியது.

    குதிரையை அடக்கியபின் கண்ணன் புன்முறுவல் தவழ மீண்டும் அரவிந்தரின் உள்ளத்தில் வந்து ஒய்யாரமாக அமர்ந்து கொண்டான்!

    தன் உள்ளத்தில் குடிகொண்ட கண்ணன் செய்த ஜாலத்தைப் பார்த்து வியந்த அரவிந்தர், எந்தச் சோதனையில் இருந்தும் கண்ணன் தன்னைக் கட்டாயம் காப்பாற்றுவான் என அப்போதுதான் மன உறுதி பெற்றார்.

    அவர் பெற்ற அந்த மன உறுதி அவர் வாழ்நாள் முழுவதும் நீடித்தது. எந்தச் சூழ்நிலையிலும் கண்ணன் தன்னைக் காப்பாற்றுவான் என்ற எண்ணம் எதற்கும் கலங்காதிருக்கும் மனநிலையை அவரிடம் தோற்றுவித்தது.

    பின்னர் அவர் தீவிர கிருஷ்ண பக்தியில் தோய்ந்ததும், சிறையில் கண்ணனைக் குறித்துத் தவமிருந்ததும் அகக் கண்ணால் கண்ட கண்ணனைப் புறக் கண்ணாலும் கண்டதும், தான் நேரில் கிருஷ்ண தரிசனம் பெற்ற உண்மையை அவர் உத்தர்பாரா என்ற இடத்தில் மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்ததும் அரவிந்தர் வரலாறு சொல்லும் செய்திகள்.

    மனத்தை ஆராய்கிறபோது மனத்திலுள்ள மாசுகள் மறைகின்றன. மனத்துக்கண் மாசிலன் ஆதல்தான் ஆன்மிகம். மாசற்ற மனத்தில் இறைவன் தானே விரும்பிக் குடிகொள்கிறான்.

    மனத்தை ஆராய்ந்து அதை மாசில்லாததாக மாற்றிக்கொள்ளும் நெறியையே `அகத்தாய்வு` என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வேதாத்ரி மகரிஷி. இந்த நெறியை `மனவளக் கலை` என ஒரு கலையாகவும் அவர் குறிப்பிடுகிறார்.


    தத்துவச் சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன் மனித மனத்தை ஆராய்ந்தவர்களில் மிக முக்கியமானவர். அவரது கருத்துகளால் பெரிதும் கவரப்பட்டார் சுதந்திரத் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை.

    அந்தச் செக்கிழுத்த செம்மல், கோவையில் சிறைப்பட்டிருந்த போது, ஜேம்ஸ் ஆலன் எழுதிய ஆங்கிலப் புத்தகங்களைத் தாமே விரும்பித் தமிழில் மொழிபெயர்த்தார்.

    `அகமே புறம், மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், மெய்யறிவு` என்பன போன்ற தலைப்புகளில் வ.உ.சி. மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் சின்னஞ்சிறு புத்தகங்கள் மனித மனம் குறித்த ஏராளமான உண்மைகளைப் பேசுகின்றன. பயில்வார் மனத்தை மேம்படுத்துகின்றன.

    தண்ணீரின் குணம் மேலிருந்து கீழ்நோக்கிச் சரிவது. நெருப்பின் குணம் கீழிருந்து மேல்நோக்கி எரிவது.

    தண்ணீருக்கும் நெருப்புக்கும் இப்படி இயற்கைத் தன்மை இருப்பது மாதிரி மனத்திற்கும் ஓர் இயற்கைக் குணம் உண்டு. அது என்ன தெரியுமா? மனத்தின் குணம் பழக்கத்திற்கு அடிமைப் படுவது.

    இந்த அடிமைப்படும் குணம் மனத்திற்கு இருப்பதால்தான் பலர் மதுவுக்கும் சிகரெட்டிற்கும் கஞ்சாவிற்கும் பான்பராக்கிற்கும் இவைபோன்ற இன்னும் பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை.

    மனம் பழக்கங்களுக்கு அடிமையாகும் என்பது உண்மைதான். ஆனால் மனத்தைப் பொறுத்தவரை அதற்குத் தீய பழக்கம் நல்ல பழக்கம் என்ற வேறுபாடு ஏதுமில்லை. தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போலவே ஒருவன் முயன்றால் நல்ல பழக்கங்களுக்கும் அடிமையாகலாம்.

    மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவன், தொடர்ந்து முயற்சி செய்தால் விரைவில் மது குடிக்காமல் இருக்கும் பழக்கத்திற்கும் அடிமையாகலாம்!

    இதென்ன விந்தை என்று தோன்றுகிற தல்லவா? இது விந்தையல்ல, உண்மை.

    உதாரணமாக நாள்தோறும் கடிகாரத்தில் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஆரம்பியுங்கள். ஒரு வாரம் அப்படி அலாரம் வைத்து எழுந்துகொண்டால், எட்டாம்நாள் நீங்கள் அலாரம் வைக்காமலே சரியாக ஐந்து மணிக்கு எழுந்து கொள்வீர்கள்.

    காரணம் காலை ஐந்து மணிக்கு எழும் நல்ல பழக்கத்திற்கு உங்கள் மனம் அடிமையாகிவிட்டது என்பதுதான்.

    மனத்தைப் பொறுத்தவரை அதற்கு நல்ல பழக்கம் தீய பழக்கம் என்ற வேறுபாடு எதுவுமில்லை. அது எந்தப் பழக்கமானாலும் அதற்கு அடிமையாகக் காத்துக் கொண்டிருக் கிறது. நாம்தான் நல்ல பழக்கங்களை அதற்குப் பயிற்றுவிக்க வேண்டும்.

    ஜேம்ஸ் ஆலன் கண்டுபிடித்த மனம் பற்றிய உண்மைகளில் அது பழக்கத்திற்கு அடிமையாகக் கூடியது என்ற உண்மை மிக முக்கியமானது.

    `நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்` என்கின்றன வேதங்கள்.

    ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லும் பட்டுப்பூச்சி கதை சிந்தனைக்குரியது. ஊர்ந்து செல்லும் கூட்டுப் புழு தன்னை ஓயாமல் பறக்கும் பட்டுப்பூச்சி என்றே நினைக்கிறது. அந்த நினைப்பைப் பிறர் தகர்த்துவிடாமல் இருக்க அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டிக் கொள்கிறது.


    குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அது கூட்டை உடைத்துக் கொண்டு, கூட்டுப் புழுவாய் அல்ல, பட்டுப் பூச்சியாகவே வான வெளியில் பறந்து செல்கிறது.

    நற்குணங்களே வடிவான இறைவனை ஓயாமல் நினைத்துக் கொண்டிருக்கும் போது நாமும் நற்குணங்களை அடையப் பெறுகிறோம். இறைவனைச் சிந்தித்த அடியவர்கள் இறைவனாகவே ஆனதும் இப்படித்தான்.

    இறைவனை எப்போதும் நினைக்கும் பழக்கத்திற்கு நம் மனத்தை நாம் அடிமையாக்கி விட்டால் போதும். நம் மனத்தில் குடியிருக்கும் இறைவன் நம்மைத் தீய நினைவுகள் அண்டாதவாறு காப்பாற்றுவான்.

    மனம் மாசில்லாததாக ஆகும். மாசில்லாத மனம் நம் வாழ்வில் அற்புதங்களைத் தோற்றுவிக்கும்.

    மனத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். நல்ல எண்ணங்களையே எண்ணுவோம். இறைவனை நம் மனத்தில் குடியமர்த்துவோம். அதன் பயனாய் இறைவனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • குழந்தை பாக்கியத்துக்காக வழிபட விரும்புபவர்கள் இந்த தலத்துக்கு அமாவாசை தினத்தன்று செல்ல வேண்டும்.
    • சோழ அரசி செம்பியம் மாதேவியால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பஸ் மூலம் மிக எளிதில் சென்று வரலாம்.

    கும்பகோணம் பகுதியில் உள்ள ஆலயங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது திருமணஞ்சேரி. சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் என்ற சிறப்பு இந்த தலத்துக்கு உண்டு. இதனால்தான் இந்த தலத்தின் பெயர் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

    இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறும் சொல்லப்படுகிறது.

    சிவனுக்கும் பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால் அகத்திய முனிவரை சிவபெருமான் தென்நாட்டுக்கு அனுப்பி உலகை சமன் செய்ததாக சொல்வார்கள்.

    இந்த திருமணத்துக்கு பிறகு மீண்டும் ஒரு தடவை சிவபெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று பார்வதிதேவி ஆசைப்பட்டாள். தனது ஆசையை சிவபெருமானிடம் வெளிப்படுத்தி அதை வரமாக கேட்டாள். அந்த வரத்தை கொடுக்க ஈசனும் சம்மதித்தார்.

    என்றாலும் திருமணத்தை எப்போது, எப்படி, எங்கு நடத்துவது என்பதை சிவ பெருமான் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. இதனால் பார்வதி தேவி அதிருப்தி அடைந் தாள். சிவ பெருமானிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினாள்.

    அந்த சமயத்தில் சிவபெரு மானுக்கும் கோபம் ஏற்பட்டது. மறுநிமிடமே பார்வதி தேவிக்கு சிவபெருமான் சாபமிட்டார். பூமியில் பசுவாக பிறந்து அலைந்து திரிய வேண்டும் என்று சாபமிட்டார். இதன் காரணமாக பூமியில் பார்வதிதேவி பசுவாக உருவெடுத்தாள்.

    தனக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள மீண்டும் சிவபெருமானை நோக்கி வழி பட்டாள். பல்வேறு தலங்களுக்கும் சென்று ஈசனை வழிபட்டாள். இதனால் மனம் இரங்கிய சிவபெருமான் விரைவில் பூமிக்கு வந்து பார்வதிதேவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

    அதன்படி தற்போது திருமணஞ்சேரி என்று அழைக்கப்படும் இடத்தில் சிவபெருமான்- பார்வதி தேவி திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு பரதமகரிஷி மிகப்பெரிய யாகவேள்வி குண்டத்தை அமைத்து பூஜைகள் செய்தார்.

    அந்த திருமணத்துக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் அழைக்கப்பட்டனர். அவர்களை மகாவிஷ்ணு அழைத்து சென்றார். மணப்பெண் ணாக பார்வதிதேவி தயாராக இருந்த நிலையில் அங்குள்ள யாக குண்டத்தில் இருந்து சிவபெருமான் மணமகனாக தோன்றினார். இதையடுத்து சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது மகாவிஷ்ணு தங்கை பார்வதியை கன்னிகா தானம் செய்து கொடுத்தார். பிரம்மா புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் தேவர்கள், ரிஷிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார் கள். இப்படி பிரமாண்டமாக திருமணம் நடந்த தால் அந்த இடம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் திருமணஞ்சேரியை சுற்றி இருக்கும் இடங்களும் அதற்கேற்ப பெயர் பெற்றுள்ளன. திருமணஞ்சேரி தலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மேலதிருமணஞ்சேரி உள்ளது. இந்த ஊருக்கு எதிர்கொள்பாடி என்ற பெயரும் உண்டு. சிவன்-பார்வதி திருமணத்துக்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களை மகாவிஷ்ணு எதிர்கொண்டு அழைத்த இடம் என்பதால் அந்த ஊருக்கு எதிர்கொள்பாடி என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

    ஆண்டு தோறும் இந்த ஊரில் இருந்துதான் சிவன்-பார்வதி திருமணத்துக்கு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறிப்பி டத்தக்கது. திருமணஞ்சேரியில் சிவனும், பார்வதியும் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து திருமணம் செய்த னர். அவர்களை மேற்கு பார்த்து நின்று விஷ்ணு வாழ்த்தினார். இதை பிரதிபலிக்கும் வகையில் எதிர்கொள்பாடியில் பெருமாள் மேற்கு பார்த்து காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய சிறப்புடைய திருமணஞ்சேரி தலத்தில் வேண்டிக்கொண்டால் எத்தகைய திருமண தடைகள் இருந்தாலும் அவை அனைத்தும் பனி போல் விலகி மிக விரைவில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகமாகும். திருமண பிரார்த்தனைக்காக வருபவர்கள் உரிய முறைபடி இந்த ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.

    முதலில் ஆலயத்துக்கு வந்ததும் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஆலயம் அருகே உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் குளித்து விட்டு ஆலயத்துக்கு செல்வார்கள். தற்போது அது இயலாத காரியம் என்பதால் தலையில் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டால் போதும்.


    பின்னர் ஆலயத்துக்குள் சென்று கல்யாண அர்ச்சனையில் பங்கேற்க வேண்டும். இந்த கல்யாண அர்ச்சனைக்காக 2 மாலை, 2 தேங்காய், மஞ்சள்-குங்குமம், சூடம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சப்பழம், சர்க்கரை வாங்கி செல்ல வேண்டும். குறிப்பாக கல்கண்டு இடம் பெறுவது நல்லது.

    இவை அனைத்தும் ஆலயம் அருகிலேயும் ஆலயத்துக்கு உள்பகுதியிலும் கிடைக்கும். இந்த பூஜை பொருட்களுடன் கோவிலுக்குள் இருக்கும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட வேண்டும். மூலவரையும் வழிபட்டு அங்கு அர்ச்சனை செய்து தீபம் வைக்கப்படும் மேடையில் 5 தீபம் வைக்க வேண்டும். இதையடுத்து கல்யாண சுந்தரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்குள்ள பெரிய அரங்கத்தில்தான் திருமண யோகம் பெறும் பூஜைகள் நடத்தப்படும். கல்யாண வரம் வேண்டி வந்திருப்பவர்கள் ஒரு பக்கமாகவும், இந்த தலத்தில் வேண்டிக் கொண்டு திருமணம் ஆனவர்கள் தம்பதி சகிதமாக மற்றொரு பக்கமாகவும் அமர வைக்கப்படுவார்கள்.

    பின்னர் கல்யாண வரம் வேண்டி வந்திருப்பவர்களிடம் இருந்து பூஜைக்குரிய பொருட்களை அர்ச்சகர் வாங்கி சென்று கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்வார். சுவாமி மீது சாத்தப்பட்ட மாலைகளில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் கொடுப்பார். தம்பதிகள் அந்த மாலையை மாற்றிக் கொள்வார்கள்.

    திருமண வரம் வேண்டி சென்றவர்கள் அந்த மாலையை பெற்று தங்கள் கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த மாலையை பத்திரமாக வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த மாலைக்கு தனி மகத்துவம் உண்டு. அந்த மாலையை எப்படி பராமரித்து பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை அர்ச்சகர் தெளிவாக மைக்கில் சொல்வார். இதை கவனமுடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.

    இந்த அர்ச்சனையின்போது பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஒன்றையும் அர்ச்சகர் தருவார். அதை மறுநாள் காலை சாறு பிழிந்து காலை உணவுக்கு முன்பு அருந்த வேண்டும். அர்ச்சகர் சொல்வது போல மாலை, விபூதி, குங்குமம், மஞ்சள் போன்றவற்றை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வர வேண்டும். இந்த வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் நடைபெறும்.

    திருமணஞ்சேரியில் சிவனும், பார்வதியும் கைகோர்த்த நிலையில் புன்னகை பூக்க அழகாக காட்சி தருகிறார்கள். அந்த காட்சியை கண்குளிர கண்டு தரிசனம் செய்து வந்தாலே தோஷங்கள் அனைத்தும் விலகி உடனே திருமணம் கை கூடும் என்பது பலரது வாழ்விலும் நடந்த அனுபவப்பூர்வமான உண்மையாகும்.

    திருமணம் நடந்த பிறகு பூஜையில் வைத்து வழிபட்டு வந்த மாலையை மீண்டும் திருமணஞ்சேரி தலத்துக்கு எடுத்து வர வேண்டும். தம்பதிசகிதமாக கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு நன்றி தெரிவித்து பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் இத்தகைய பிரார்த்தனை தலம் திருமணஞ்சேரி மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. எனவே கும்பகோணம் ஆலய வழிபாட்டுக்கு செல்லும் போது கும்பகோணத்தில் இருந்து மிக அருகில் உள்ள இந்த தலத்துக்கு செல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குழந்தை பாக்கியத்துக்காக வழிபட விரும்புபவர்கள் இந்த தலத்துக்கு அமாவாசை தினத்தன்று செல்ல வேண்டும். அங்கு மனித உருவில் இருக்கும் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து பால் பாயாசம் நைவைத்தியம் படைத்து பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    குழந்தை பெற்ற பிறகு மீண்டும் இந்த தலத் துக்கு வந்து கொலுசு, மணி, விளக்கு வகைகள் போன்றவற்றை காணிக்கை செலுத்து வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    சிவபெருமான் நெற்றி கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் தனது தவறுக்கு வருந்தி ஈசனை பல ஆண்டுகள் வழிபட்டான் அவனுக்கு இந்த தலத்தில்தான் சிவபெருமான் சாபவிமோசனம் வழங்கினார். எனவே இந்த தலத்தில் வழிபட்டால் எத்தகைய சாபமும் நிவர்த்தி ஆகும்.

    அது மட்டுமல்ல இந்த தலம் நித்திய கல்யாண தலம் என்ற சிறப்புக்குரியது. சிவனும், பார்வதியும் கை கோர்த்த நிலையில் இங்கு இருப்பதும் தனி சிறப்பாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல சிவன், பார்வதி, விஷ்ணு, லட்சுமி, பிரம்மா ஆகியோர் இந்த தலத்தில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.

    ஆகையால் இங்கு வழிபட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும். இந்த தலத்தில் தாயார் கோகிலாம்பிகை என்ற பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை மாதம் பூசம் நட்சத்திரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் இந்த தலத்தில் நடக்கும் திருமணம் மிக விமர்சையாக நடைபெறும்.

    இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. சிவபெருமான் இங்கு உத்வாக நாதராக இருந்து அனைத்தையும் ஆட்சி செய்கிறார். இவரை வழிபட பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். சோழ அரசி செம்பியம் மாதேவியால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பஸ் மூலம் மிக எளிதில் சென்று வரலாம்.

    திருமணம் ஆகி விட்டது. வருகிற கணவர் நல்லவராக இருக்க வேண்டுமே? அதற்கு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மங்களாம்பிகையை வழிபட வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    ×