என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட உணவும், மருந்தும்
    X

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட உணவும், மருந்தும்

    • கடந்த ஆண்டை விட 6.5 சதவீதம் கூடுதல் என்றும் தெரிய வருகிறது.
    • தினை அரிசி உணவுகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பேருதவி புரியும்.

    மஞ்சள், மிளகு, ஏலக்காய் போன்ற மருத்துவ குணம் வாய்ந்த மணமூட்டிகளின் பிறப்பிடமாய் திகழ்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியப்படும் வண்ணம் ஆரோக்கியத்தின் அடையாளமாக இருந்த நாடு நம் நாடு. ஆனால் இன்று இனிப்பு தேசமாகி சர்க்கரை நோயில் முன்னிலை வகிப்பது என்பது நவீன வாழ்வியலுக்கு கிடைத்த பரிசு என்றே சொல்லலாம்.

    இதில் கூடுதல் வருத்தம் என்னவெனில், சர்க்கரை நோய்க்கான மருந்து விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடாக விளங்குவது நம் நாடு தான். சமீபத்திய புள்ளி விவரங்களின் படி 2023-ம் ஆண்டில் சர்க்கரை மருந்துகளின் விற்பனை மட்டும் 12500 கோடிக்கும் மேல் என்கின்றன தகவல்கள். இது கடந்த ஆண்டை விட 6.5 சதவீதம் கூடுதல் என்றும் தெரிய வருகிறது.

    உலகத்திற்கே ஆரோக்கியத்தை அள்ளித் தந்த நம் நாடு, இன்று அதற்காக உலக நாடுகளை நம்பி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. நமது பாரம்பரிய மருத்துவ அறிவையும், உணவு முறைகளையும் மறந்து போனதால் இழப்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தான். முதுமையில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உள்ளுறுப்புகள் பாதிப்பைத் தடுக்கும். எனவே நீரிழிவு நோய்க்கு மருந்து மாத்திரைகளை மட்டும் நம்பியிராமல் உணவுக்கட்டுப்பாடு இருப்பதும் அவசியம்.

    முதுமையில் உடல் செல்கள் அதிகம் தேய்மானம் அடைவதால் அத்தகைய செல்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு சத்தான உணவு அவசியமாகின்றது. அத்தகைய சத்தான உணவை உண்ண வேண்டும், அதே போல் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது முதுமையில் மிகப்பெரிய சவாலாகிறது.

    உணவுப்பொருட்களில் குறைந்த கிளைசெமிக் குறியீடு (ஜி.ஐ) கொண்ட உணவுப் பொருட்களை நாடுவது நல்லது. கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது கார்போஹைட்ரேட் (சர்க்கரை சத்து) கொண்ட உணவுப் பொருட்களின் மதிப்பீட்டு அளவாகும். ஒவ்வொரு உணவும் ரத்தச் சர்க்கரை அளவை (குளுக்கோஸ்) எவ்வளவு விரைவாகப் பாதிக்கக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

    பிரட், கேக் போன்ற அடுமனை (பேக்கரி) உணவுகள் அதிக சர்க்கரை சத்தைக் (ஜிஐ) கொண்டவை. குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட குறு தானியங்களான தினை, வரகு, சாமை, குதிரைவாலி, பாரம்பரிய அரிசி வகைகளான கறுப்பு கவுனி, மணிச்சம்பா இவற்றை நாடுவது முதுமையில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். "நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்" என்கிறது அகத்தியர் குணவாகடம்.

    அதிலும் தினை அரிசி உணவுகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பேருதவி புரியும். தினை அரிசி அதிக புரதசத்தையும், நார்ச்சத்தையும், உடலுக்கு பலன் தரும் பல்வேறு கனிம சத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் குறைந்த அளவு சர்க்கரை சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் நீரிழிவு நோயுள்ள பலரும் சர்க்கரை சத்துள்ள அரிசியை தவிர்க்க விரும்பி, கோதுமையை நாடுவது வாடிக்கையாகிவிட்டது. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சப்பாத்தியை உணவாக பலர் நாடுவது பலன் அளிக்காது. உண்மையில் அரிசிக்கு ஏறத்தாழ நிகரான சர்க்கரை சத்தினைக் கொண்டது தான் கோதுமை.

    கோதுமையில் உள்ள 'குளுட்டன்' வேதிக்கூறு உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களின் உட்கிரகித் தலையும் தடுக்க கூடியதாக உள்ளது. ஆகவே சர்க்கரை கட்டுப்பட கோதுமை உணவுகளை நாடுவதற்கு பதிலாக, சிறுதானிய அடை அல்லது சிறுதானிய சப்பாத்தியை நாடுவது நலம் பயக்கும். கம்பு, சோளம், கேழ்வரகு, கொள்ளு சேர்ந்த உணவுப்பொருட்கள் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன் பல்வேறு கனிம சத்துக்களையும் கொண்டுள்ளன. காலை மற்றும் இரவில் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    நீரிழிவு நோயினர் எந்த அளவுக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும்? என்று பார்த்தால், நாம் உண்ணும் தட்டில் முதலில் அரை தட்டின் அளவுக்கு பல்வேறு நிறங்களைக் கொண்ட காய்கறிகளையும், பின்னர் கால் தட்டின் அளவிற்கு சிறு தானியம் சேர்ந்த உணவுகள் அல்லது பாரம்பரிய அரிசி வகையிலான சிகப்பரிசி, கருப்பு கவுனி அரிசி போன்ற சர்க்கரை சத்தும் நார்ச்சத்தும் சேர்ந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் விதத்தைக் கையாள வேண்டும். இதனால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வருவதோடு இன்னும் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

    குறிப்பாக ஒரே வேளையில் அதிக உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக சிறிது சிறிதாய் உணவை ஆறு வேளை வரை எடுத்துக்கொள்வது நல்லது. இது தடாலடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவும். தினசரி ஒரே நேரத்தில், நேரம் தவறாமல் உணவு எடுத்துக்கொள்வதும் கூடுதல் அவசியம். உணவுடன் கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், கத்திரிப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, முட்டைகோஸ், காளான், காலிபிளவர், வெங்காயம், புரோக்கோலி, சுரைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல் கீரை வகைகளில் ஆவாரை கீரை, முருங்கை கீரை, வெந்தய கீரை, கொத்துமல்லி கீரை, வல்லாரை, முசுமுசுக்கை ஆகிய கீரைகளில் ஒன்றை தினசரி சேர்த்துக்கொள்வதும் நல்லது.

    சர்க்கரை சத்து நிறைந்த வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. நார்சத்து நிறைந்த பிஞ்சுக் காய்கறிகளை சேர்ப்பது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, குடல் நலத்தை அளிக்கும். மேலும் நார்சத்துக்களை அதிகம் சேர்ப்பதால் ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதோடு, குடல் வாழ் நுண்கிருமிகளுக்கும் நன்மை பயக்கும்.

    பால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை சார்ந்த பல்வேறு ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீரிழிவு நோயை பொறுத்தவரை சர்க்கரை நோய்க்கு காரணமாகும் இன்சுலின் தடைக்கு பால் ஒரு காரணி என்கிறது நவீன அறிவியல். சித்த மருத்துவமும் பால், கபத்தை அதிகரிக்கும் பொருளாக குறிப்பிடுகின்றது.

    பாலில் உள்ள 'பால்மிடிக் அமிலம்' எனும் வேதிப்பொருள் இன்சுலின் தடையை உண்டாக்கி நீரிழிவு நோய் மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சிதை மாற்ற நோய்களான உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் இவற்றுக்கும் அடித்தளமிடும் என்கின்றன ஆய்வுகள். மாற்றாக இஞ்சி அல்லது சுக்கு, கொத்து மல்லி விதை, வெந்தயம், புதினா இவற்றை சேர்த்து தேநீராக்கி அவ்வப்போது எடுத்துக் கொள்வது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும்.

    மேலும் இறைச்சி, வெண்ணெய், பாலாடைக்கட்டி, பனை எண்ணெய் இவற்றிலும் பால்மிடிக் அமிலம் அதிகம் உள்ளது. குறிப்பாக 'பால்மிடிக் அமிலம்' அதிகம் உள்ள பனை எண்ணெய் (பாம் ஆயில்) சேர்ந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது, இதய நோயை நம் வாசலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும்.

    சர்க்கரை நோயில் துரித உணவுகளையும், நொறுக்கு தீனிகளையும் தூர எறிய வேண்டியது அவசியம். செயற்கை வேதிப்பொருட்களும், சுவைக்கு உப்பும், இனிப்புக்கு அதிக சர்க்கரையும், 'ட்ரான்ஸ் பாட்' எனும் கொழுப்பும், கலந்ததாக பெரும்பாலான துரித உணவுப்பொருட்கள் உள்ளன. இவை சர்க்கரை நோயில் இதய நோயை அழையா விருந்தாளியாக்கி ஆயுளை சுருக்கும். எனவே இயற்கை உணவுப்பொருட்களை நாடுவது நல்லது.

    நீரிழிவு நோயில் பழங்களை பயன்படுத்துவதில் பலருக்கு குழப்ப நிலை உள்ளது. பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை சத்துடன், உடல் செல்கள் அழிவைத் தடுக்கும் இயற்கை நிறமிச்சத்துக்களும், விட்டமின்களும், கனிம சத்துக்களும் உள்ளன. ஆகவே பழங்களை அவ்வப்போது உணவுக்கு முன் சேர்த்துக்கொள்வது நல்லது.

    முக்கியமாக மா, பலா, வாழை ஆகிய பழங்களை தவிர்ப்பது நல்லது. மலச்சிக்கலைப் போக்கும் என்று வாழைப்பழத்தை இரவில் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை அளவு கூடும் அபாயம் உள்ளது. மாற்றாக இலந்தை, நெல்லி, வில்வம், விளா ஆகிய நம்ம ஊர் பழங்களை சேர்ப்பது நல்லது.

    ஆப்பிள், கொய்யா, பப்பாளி, மாதுளை இவற்றை அவ்வப்போது எடுக்கலாம். நெல்லியும், மாதுளையும் நீரிழிவு நோயில் சிறுநீரக பாதிப்பை தடுப்பதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. உலர்ந்த திராட்சையில் அதிக சர்க்கரை சத்து இருப்பினும், அதன் விதைகளில் உள்ள 'ரெஸ்வெரட்ரால்' எனும் வேதிப்பொருள் இதய நலனுக்கு மிகச்சிறந்தது.

    உணவில் இனிப்பு என்பதே சேர்த்துக்கொள்ளவே கூடாதா? அதற்கு மாற்று ஏதேனும் உண்டா? என்பது முதுமையில் பலரின் கேள்வி. செயற்கை இனிப்புகளான சாக்ரின், அஸ்பார்ட்டமே, அசீசல்பேம் போன்றவை நாவிற்கு சுவை வழங்ககூடியன. இருப்பினும் அறிவியல் உலகத்தின் இந்த புதுப்புது கண்டுபிடிப்புகளும் நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுகின்றன சமீபத்திய ஆய்வுகள். மாறாக 'ஸ்டீவியா' எனும் 'சர்க்கரை துளசி' பொடியை இனிப்புக்கு மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மறந்து போன மரபு மருத்துவமும், மரபு வாழ்வியலும் இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நீரிழிவு நோய் போன்ற மரபணு ரீதியான நோய்கள் உருவாக காரணமாக உள்ளன. துரித உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் அதற்கு கூடுதல் துணை புரிவதாக உள்ளன. எனவே முதுமையில் மருந்துகளுடன், தியானமும், யோகா பயிற்சிகளும், நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் நீரிழிவு நோயினை தோழமையாக்கி, ஆரோக்கியமான வாழ்நாளை வடிவமைக்க முடியும்.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×