என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 50 சதவீத இருக்கைகளுடன் உணவகங்கள் இயங்கின.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் புதுவையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பெரிய வணிக நிறுவனங்களில் காற்றோட்ட வசதியுடன் 50 சதவீத நபர்களுடன் அனுமதிக்கப்படுகிறது. வெளிமாநில பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஒட்டல்கள், உணவகங்கள், ஆடிட்டோரியம், பியூட்டி பார்லர், சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், யோக பயிற்சி கூடம், சினிமா தியேட்டர் ஆகியவற்றிலும் 50 சதவீத நபர்கள் அனு மதிக்கப்படுகிறார்கள்.

    உணவகங்களில் கொரோனா தடுப்பு வழி முறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 4 பேர் அமர்ந்து உணவு அருந்தும் மேஜைகளில் 2 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு வாடிக்கையாளர்ளுக்கு உணவு பரிமாறப்படுகிறது. 

    இந்த நடவடிக்கை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    புதுவையில் மினி வேனில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு புவன்கரே வீதி- வினோபா வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 2 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட ஏராளமான பாக்கெட்டுகளில் போதை பொருட்கள் இருந்தன.

    இதையடுத்து மினி வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உருளையன் பேட்டை ராஜா நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் (வயது 42) என்பது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் இந்த போதை பொருட்கள் பிருந்தாவனத்தை சேர்ந்த முகேஷ் (37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ஆனால், இதற்கான எந்த ஆவணங்களும் டிரைவரிடம் இல்லை.

    இந்த போதை பொருட்களை முகேஷ் வீட்டில் வைத்து புதுவையில் உள்ள கடை வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய மினி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போதை பொருட்களை கடத்தி வந்த மினி வேன் டிரைவர் ஜெயராஜ் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    புதுவையில் ஓட்டல்கள், கடைகள், மது பார்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிப்பது உள்பட மேலும் பல கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவாக ஒமைக்ரான் மிரட்டி வருகிறது.

    புதுச்சேரியில் கடந்த வாரம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு 4 நாளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வருவது குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்தநிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் முழு ஊரடங்கு அமல்படுத்தக்கூடாது என்பதே அரசின் எண்ணம். அதன்படி கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    வருவாய், காவல்துறை, சுகாதாரம், உள்ளாட்சி ஆகிய துறைகளின் அலுவலர்கள் இணைந்து மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருவோரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி உண்டு. அதிகாரிகள் பரிசோதனையின் போது கொரோனா அறிகுறி ஏதாவது இருந்தால் உடனடியாக அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    புதுச்சேரியில் கொரோனாவின் 3-வது அலை அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி வணிக வளாகம், சந்தை வளாகங்கள், கடைகளில் போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்து 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு இடையேயும் பொது போக்குவரத்து 50 சதவீதம் இருக்கை வசதியுடன் செயல்பட வேண்டும். தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

    உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் துறை நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆடிட்டோரியம், கலையரங்கம், அழகு நிலையம், சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி மையம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவில்களில் குடமுழுக்கு, கும்பாபிஷேகம் ஆகியவற்றில் பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்பின்றி அர்ச்சகர்கள் மட்டுமே நடத்த வேண்டும். கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில் தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படும். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்பு தொடர்பாக விரைவில் தெரிவிக்கப்படும். கடற்கரை சாலையில் தற்போது உள்ள நடைமுறையே தொடரும்.

    பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தின்படி கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் செயல்படும் நேரம் மற்றும் சுழற்சி முறையில் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அது குறித்து கல்வித்துறை முடிவு செய்து அறிவிக்கும்.

    இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது. வருகிற 31-ந் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்.

    கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்ததுடன் 2 டோஸ் தடுப்பூசி போட்டது காரணமாக பொதுமக்களிடம் மெத்தனம் ஏற்பட்டுள்ளது. எனவே சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் முக கவசம் அணிவது இல்லை. இதுவும் தொற்று பரவலுக்கு காரணமாகிறது.

    எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

    புதுச்சேரியில் வருகிற 12-ந் தேதி முதல் தேசிய இளைஞர் விழா நடத்தப்பட உள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பதவி வருவதால் இந்த விழாவை நேரடியாக நடத்துவதா? அல்லது இணைய வழி வாயிலாக நடத்துவதா? என்பது பற்றி மத்திய அரசு தகவலை உறுதிப்படுத்தவில்லை. நேரடியாக நடத்துவதாக இருந்தால் அதற்கு தேவையான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை தொடர்பாகவும் மத்திய அரசின் முறைப்படியான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறுகையில், ‘புதுச்சேரியில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 126 பேருக்கு தொற்று உள்ளதா? என கண்டறிய மாதிரிகளை பெங்களுரூ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் 26 பேரின் மாதிரி பரிசோதனை முடிவுகள் மட்டும் இன்னும் வரவில்லை. இந்த பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரியும் வகையில் புதுச்சேரியில் ஆய்வு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கருவிகள் வந்ததும் பரிசோதனை கூடம் அமைக்கப்படும்’ என்றார்.
    புதுவை சட்டசபை நோக்கி ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள் கம்பன் கலையரங்கத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் சட்டசபை நோக்கி சென்றனர். 

    பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வழங்க கோரி இந்த பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பின் புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா 2-வது அலையை விட 3-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது.

    இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவையிலும் கொரோனாவை கட்டுப் படுத்த பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.  மேலும் வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனாலும், புதுவையில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 84, காரைக்காலில் 36, ஏனாமில் 1, மாகியில் 8 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். 

    புதுவையில் 46, காரைக்காலில் 19, மாகியில் 7 பேர் என 72 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 4, காரைக்காலில் 1, மாகியில் 3 பேர் என 8 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு  திரும்பினர். 

    புதுவை  மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 821 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 541 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 231, காரைக்காலில் 72, ஏனாமில் 2, மாகியில் 22 பேர் என 327 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்
    படுத்தப்பட்டு உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 399 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது.  புதுவையில் 2-வது தவணை  உள்பட 14 லட்சத்து 20 ஆயிரத்து 267 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பின் தொற்று அதிகரிக்க தொடங்கியது. 26, 27 என தொற்று இருந்து வந்தது. நேற்று 73 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 129 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டிபாளையம் அமைதிநகர் 3-வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுராமணிதிவாரி (வயது 62). இவர் குரும்பாபேட் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். 

    இவரது மனைவி மற்றும் மகன் வெளிமாநிலங்களில் உள்ளனர். அவ்வப்போது சுராமணிதிவாரியை அவரது மகன் பார்த்துவிட்டு செல்வார். சுராமணிதிவாரி பொருட்கள் வாங்க குரும்பாபேட்டில் உள்ள மாணிக்கம் என்பவர் கடைக்கு வரும்போது அவருக்கு பழக்கமானார்.

    அதன் மூலம் சுராமணிதிவாரியின் மகன் அடிக்கடி மாணிக்கத்துக்கு போன் செய்து தனது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரிப்பார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சுராமணிதிவாரிக்கு அவர் மகன் போன் செய்தார். ஆனால் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்த சுராமணிதிவாரி மகன் மாணிக்கத்துக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

    இதையடுத்து சுராமணி திவாரி தங்கியிருந்த வீட்டுக்கு மாணிக்கம்  சென்றார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் மாணிக்கம் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.  சுராமணிதிவாரி தரையில் குப்புறபடுத்த நிலையில் உடல் அழுகி இறந்து காணப்பட்டார். அவர் 3 நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணிக்கம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். மேலும் சுராமணிதிவாரியின் மகனுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்தார். போலீசார் சுராமணிதிவாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மர்மான முறையில் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பிரதமர் புதுவை வருவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    புதுச்சேரி:
    புதுவை மாநில தி.மு.க.  அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான  சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. விதி முறைகளை கடைபிடிக்காததற்கு ஐகோர்ட்டு புதுவை அரசை கண்டித்துள்ளது. 

    இந்நிலையில் தேசிய இளையோர் தின விழாவை   புதுவையில் நடத்த  அரசு  ஏற்பாடு செய்து வருகிறது. இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என கவர்னர் தெரிவித்துள்ளார். 
    தொற்று அதிகம் உள்ள வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றால் புதுவையில் கடுமையான பாதிப்பு ஏற்படும். விழா நடத்தி தொற்றை பரப்பிவிட்டு வீடுகளில் மக்களை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படும். 

    தேசிய இளைஞர் விழா என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வளர்க்க பா.ஜனதா நினைக்கிறது. இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் துணை செல்லக்கூடாது. 10 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்பாமல் விழா நடத்துவது புதுவை இளைஞர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

    எனவே தேசிய இளைஞர் விழாவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் விழா நடைபெறும் இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். 
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் எந்த கட்டுப் பாடும் இல்லாமல் மக்கள் நடமாடுகின்றனர். இதனால் கொரேனா அதிகரித்து வருகிறது. புதுவை மக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 
    புதுவையில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். பிரதமர் புதுவைக்கு வருகிறார் என கவர்னர் கூறுகிறார். பிரதமர் வருகை குறித்து முதல்-அமைச்சரோடு கலந்து பேசினாரா? என தெரியவில்லை. 

    இளைஞர் விழா புதுவையில் நடத்த முடிவெடுக்கும் முன்பு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இமாச்சல மாநில அரசு விழாவை நடத்த அனுமதிக்கவில்லை. 
    கொரோனா காலத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்த அனுமதிக்கக்கூடாது. எந்த சூழலில் பிரதமர் வருகிறார்? தற்போதைய சூழலில் புதுவைக்கு இளைஞர் விழா தேவையா? 8 ஆயிரம் இளைஞர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வந்தால் 
    கொரோனா எப்படி பரவாமல் இருக்கும்?  விழாவில் சமூக இடை வெளியை கடைபிடிக்க முடியுமா?

    புதுவைக்கு வரும் முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேசிய இளைஞர் விழாவை புதுவையில் நடத்துவதை தள்ளிவைக்க வேண்டும். ஒமைக்ரான், கொரோனா தொற்று புதுவையில் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலத்தினரால் புதுவையில் தொற்று பரவி மக்கள் அவதிப்படுவர். ரங்கசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி, தற்போதைய சூழலில் விழா நடத்தினால் கொரேனா பரவும் என தைரியமாக கடிதம் எழுத வேண்டும். விழாவை ரத்து செய்ய வேண்டும்.  பா.ஜனதாவினர் இதில் அரசியல் செய்யக்கூடாது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவால்தான் அம்மாநிலத் தில் கொரோனா தொற்று கடுமையாக பரவியது. தற்போது புதுவையில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

    இந்நிலையில் இமாச்சலத்தில் நடத்த வேண்டிய விழாவை புதுவையில் திணித்துள்ளனர். இதன் மூலம் புதுவை மக்களிடையே நோயை திணிக்கின்றனர். இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் துணை செல்கின்றனர். 
    ஏற்கனவே கொரோனா நஷ்ட ஈடைக்கூட மத்திய அரசு தரவில்லை. இந்த விழாவுக்காக அரசு நிதி வீணாக செலவிடப்படுகிறது. உள்நோக்கத்தோடும், லாப நோக்கத்தோடும் இந்த விழாவை பா.ஜனதா நடத்துகிறது.  இந்த மனிதாபிமானமற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம். பிரதமர் தனது வருகையை ரத்து செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலசெயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-
    ஒமைக்ரான்   பரவல் தொடர்பாக  பிரதமர், மத்திய அரசு, மத்திய சுகாதாரத்துறை ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2-வது அலை  பரவியபோது புதுவையில் படுக்கைகள் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது. 

    தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளும் ஆன்லைன் மூலம் செயல்படுகிறது. 
    இத்தகைய அபாயகரமான சூழலில் வருகிற 12-ந்தேதி தேசிய இளைஞர் விழா புதுவையில் நடக்கிறது.  இதில் 7 ஆயிரத்து 500 பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்க வருவர்.  ஏற்கனவே கொரோனா பரவல் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இமாச்சலபிரதேசத்தில் நடத்த வேண்டிய விழாவை புதுவைக்கு கொண்டு வந்துள்ளனர். 

    அபாயகர சூழ்நிலையால் புதுவை மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் தன் வருகையை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி டோண்ட் கம் மோடிஜி என இமெயில், தபால் அனுப்ப உள்ளோம். பிரதமர் வரக்கூடாது என வலியுறுத்தி 10-ந் தேதி  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.  இதையும் மீறி பிரதமர் வந்தால் புதுவையில் போராட்டம் நடத்துவோம். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுவை திராவிடர் கழகம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை திராவிடர் கழகம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொளத்தூர் மணி பங்கேற்றார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பிரியன் வரவேற்றார். லோகு.அய்யப்பன் தலைமை வகித்தார். விஜயசங்கர் முன்னிலை வகித்தார். திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு பெருமாள், விடுதலை சிறுத்தை கட்சி தேவ.பொழிலன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தைபெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, குணா உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். 

    30 ஆண்டாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்ய சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கியும், தமிழக அரசு பரிந்துரைத்தும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொளத்தூர் மணி கூறும்போது, 7 தமிழர்கள் விடுதலையை கடந்த செப்டம்பரிலேயே தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அமைச்சரவை முடிவை ஏற்க வேண்டியது கவர்னரின் கடமை. 

    கடந்த 7&ந் தேதி சுப்ரீம்கோர்ட்டும் இதுகுறித்து விமர்சித்துள்ளது. 7 தமிழர்கள் 2 ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம். 

    தமிழக சிறைகளில் 2 ஆயுள் தண்டனை அனுபவித்த இஸ்லாமியர்கள் பலரும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலையையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

    புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பிரதமரை வைத்து தேசிய இளைஞர் விழாவை நடத்தக்கூடாது என தெரிவித்தார்.
    ஜிப்மர் டாக்டர் வீட்டுக்குள் புகுந்து பணம் திருட்டு வீடியோ மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் டாக்டர்களுக்கு குடியிருப்புகள் உள்ளது.

    இதில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் பிபிக்ஆனந்த் ஜின்டால்  வசித்து வருகிறார்.  இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பர்சில் இருந்து ரூ.2 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இதனை கண்ட அவர் வீட்டில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தார். அப்போது அதிகாலை 1 மணி அளவில் 3 பேர் வீட்டின் கதவை திறப்பதும், அதில் ஒருவர் வீட்டில் உள்ள வரவேற்பறைக்கு சென்று அங்கு மேஜையில் இருந்த டாக்டரின் பர்சில் இருந்து பணம் திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து டாக்டர் சி.சி.டி.வி. காட்சிகளுடன் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகின்றனர். 
    இதேபோன்று அருகில் உள்ள டாக்டர் வீடுகளிலும் திருட்டு நடைபெற்று உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது வழங்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    பாகூர்:

    பாகூர்  எல்லை பகுதியான சோரியாங்குப்பம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுகடைகளுக்கு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் மது அருந்த வந்து செல்கின்றனர்.

    மது அருந்துபவர்கள் மதுபானங்களை வாங்கி அருகிலுள்ள மனைப் பிரிவுகள் மற்றும் விவசாய விளை நிலங்களில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பாகூர் போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதனை தடுக்கும் விதமாக பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விளை நிலங்களை சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதாகைகளை பாகூர், சோரியாங்குப்பத்தின் முக்கிய  பகுதிகளான 8 இடங்களில் பாகூர்  இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வைத்துள்ளனர். 

    மேலும்   பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க பதாகைகளில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ரோந்து போலீசார் தொலைபேசி எண்கள் இடம்பெற்றுள்ளன.
    இந்தியாவில் வேலை தருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் பெருமிதம் தெரிவித்தார்.
    புதுச்சேரி:
    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்து 500 இளைஞர்கள் பங்கேற்கும் தேசிய இளைஞர் விழா வருகிற 12-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை புதுவையில் நடக்கிறது.

    பு-துவை பல்கலைக்கழகத்தில்   நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய  தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மந்திரி அனுராக் தாகூர் புதுவைக்கு வந்தார்.  பல்கலைக்கழகத்தில்  விழா நடைபெறும் இடங்களை பார்வையிட்டார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் மற்றும்  அதிகாரிகள் உடனிருந்து விளக்கினர். 

    இதன்பின் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முன்னிலையில் கவர்னர்  தமிழிசை தேசிய இளைஞர் தின விழா லோகோவை வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    இதில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் பேசியதாவது:-

     தேசிய இளைஞர் தினவிழா திறன்மிகு இளைஞர்கள், ஆற்றல் மிகு இளைஞர்கள்  என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடக்கும். நாடு முழுவதும் இருந்து இளைஞர் வருவதால் புதுவையின் திறனை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவும் என்றார். 

    இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    அரவிந்தர், பாரதி, விவேகானந்தர் ஆகியோர் இளைஞர்களுக்கு  முன்மாதிரிகள். பாரம்பரியத்தை இளையோருக்கு முன்நிறுத்தவே  இவ்விழா நடத்துகிறோம்.  பிரதமர் மோடி விழாவை தொடங்கி வைத்து  உரையாற்றுகிறார். இத்திருவிழாவை புதுவையில் நடத்த பிரதமர் விரும்பினார். 

    கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்கான  வழிமுறைகளை செய்துள்ளோம். புதிய நிறுவனங்களை தொடங்குவோர், சுய தொழில் புரிவோர், வங்கி சார்ந்த துறைகள், தொழில்  முனைவோர் அதிகரித்துள்ளனர். வேலை கேட்போரை விட வேலை தருவோர் அதிகரித்துள்ளனர். கொரோனா தொற்று இருந்தால் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். ஒமைக்ரானை   பொறுத்த வரை சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்கின்றனர். 

    தொற்று  பாதித்தவர்கள் விரைந்து குணம் அடைவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். வானொலி சேவையை நாங்கள் முடக்கவில்லை விரிவுபடுத்துகிறோம். பிரதமர் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்வை வானொலியில் கேட்போர்   எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது போனிலும் கேட்கும் வகையில் தொழில் நுட்பத்தை பலப்படுத்தி உள்ளோம். இந்திய விளையாட்டு ஆணையத்தில் பெறப்பட்ட பாலியல்  புகார் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளின்படி நட வடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொங்கல் பண்டிகைக்கு முன் இலவச பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    புதுச்சேரி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 21 வகையான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    இதேபோல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து 10 வகையான பொங்கல் பொருட்களை வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 10 வகையான பொருட்களை மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் விதமாக கொள்முதல் செய்ய பாப்ஸ்கோ சார்பில் இன்று (வியாழக்கிழமை) டெண்டர் விடப் படுகிறது.

    அதன்பின்னரே பொங்கல் பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் ஒட்டுமொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்து பேக்கிங் செய்ய வேண்டும். எனவே பொங்கல் பண்டிகைக்குள் இலவச பொருட்கள் கைக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ஏனெனில் தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ஆகியன இன்னும் மக்களை முறையாக சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே பொங்கல் பொருட்களை விரைவில் வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×