என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் முடிவு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்ட குழு கூட்டம் தமிழர் களம் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் அழகர் தலைமையில் நடந்தது.

    இதில், 20-க்கும்  மேற்பட்ட சமூக  அமைப்புகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    இந்தியாவில் சித்தா, அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதம் என பல மருத்துவங்கள் இருந்தும். ஆங்கில மருத்துவத்தை மட்டும் திணிப்பது சட்டப்படி குற்றமாகும். 

    மத்திய அரசு நீதி மன்றத்தில் நாங்கள் மக்களை தடுப்பூசி போட கட்டாயப்படுத்தவில்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில்  புதுவை அரசு மாணவர்களையும்,அரசு ஊழியர்களையும்,பொது மக்களையும் கட்டாயப்படுத்தி  வருகிறது. இதனை போராட்டக்குழு வன்மையாக கண்டிகின்றது.

    இந்த செயலை கவர்னரும், புதுவை அரசும் உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் கவர்னரின் செயலுக்கும், அவரின் வழிகாட்டுதலின்படி கட்டா யப்படுத்தும்  அதிகாரி களுக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்கள் நடத் தப்படும். 

    மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுவை பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர்   அருகே கோர்க்காடு புதுநகரை சேர்ந்தவர் கொடிபாலன் (வயது 43). லாரிடிரைவராக வேலை செய்து வருகிறார்.

    இவர் மோட்டார்   சைக்கிளில் தனது மனைவி சங்கீதா (வயது 33) மற்றும் மைத்துனர் மகன் சுந்தர மலரவன் (11) ஆகியோருடன் குமாரமங்கலம்-பாகூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். 

    அரங்கனூர் மகாத்மா காந்தி மருத்துவமனை அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள்   எதிர்பாராத விதமாக கொடிபாலன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கொடிபாலன், அவரது மனைவி சங்கீதா மற்றும் சுந்தர மலவரன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே   அவ்வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு   கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர்.

    இதேபோல் தவளக்குப்பம்  அருகே டி.என். பாளையம் புது நகரை சேர்ந்தவர் அமர்நாத் (25). இவர்   அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். 

    இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அபிஷேகப்பாக்கம்-டி.என். பாளையம் மெயின் ரோட்டில் சிவபுரி நகர் அருகே வந்த போதுஅங்கு நிறுத்தி இருந்த மினி வேன் மீது அமர்நாத் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அமர்நாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். 

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

    இந்த 2 விபத்துகள் குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் கடலில் குதித்து காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை முத்தமிழ் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டியன் பஸ்கல் (வயது 45). இவர் வீடு கட்டி கொடுக்கும் காண்டிராக்டராக வேலை செய்து வந்தார். 

    இவருக்கு  ஞானமேரி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக வீடு கட்டிக் கொடுக்கும் பிரச்சினையில் கிறிஸ்டியன் பஸ்கல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு  செய்த கிறிஸ்டியன் பஸ்கல்  வீட்டில் இருந்து வெளியே சென்றார். 

    கடற்கரை சாலைக்கு சென்ற கிறிஸ்டியன் பஸ்கல் சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் திடீரென கடலில் குதித்தார். சற்று நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    தகவல் அறிந்த   ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டியன் பஸ்கல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
    இதுகுறித்து   அவரது மனைவி  ஞானமேரி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு   பதிவு செய்து கிறிஸ்டியன் பஸ்கல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி பாம்ரவி கொலையில் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (வயது 33). கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இருவரும் மர்மநபர்களால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

    அப்போது பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் காலாப்பட்டு சிறையில் இருந்து வினோத், தீனா ஆகியோர் சதி திட்டம் தீட்டி தனது கூட்டாளிகளை வைத்து கூலிப்படை உதவியுடன் பாம் ரவி உள்ளிட்ட இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இரட்டை கொலைக்கு உதவியாக இருந்தவர்கள், கூலிப்படையினர் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்கள் என வினோத்தின் தாய் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வெடிகுண்டு கொடுத்து உதவியதாக லாஸ்பேட்டையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரவீன், அருண் ஆகிய 2 பேர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இந்தகொலை தொடர்பாக கூலிப்படை தலைவனாக இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகுவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இவர் மீது 11 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 63 வழக்குகள் உள்ளன. எனவே காஞ்சிபுரம் போலீசாரும் தியாகுவை வலைவீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையே தியாகு அரியானாவில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து காஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் தியாகுவை நேற்று காஞ்சிபுரம் கொண்டு வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து தியாகுவை புதுவைக்கு அழைத்து வந்து ரவுடி பாம் ரவி கொலை தொடர்பாக விசாரணை நடத்த முதலியார்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
    முன்பதிவு செய்யாவிட்டால் அனுமதியில்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க ஆஸ்பத்திரிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கூட்டத்தை குறைக்க தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஜிப்மர் டாக்டர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள் ஜிப்மர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

    அதன்பின் ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் மட்டும் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பான விவரங்கள் தமிழக பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சரிவர தெரியவில்லை.

    இதன் காரணமாக பலர் தங்கள் உறவினர்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்து அவர்களை அனுமதிக்காததால் ஏமாந்து செல்கின்றனர். ஏழை நோயாளிகள் நீண்ட தூரத்தில் இருந்து வந்தும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். நோயாளிகளுக்கான அனுமதி குறைக்கப்பட்டுள்ளதால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கூட்டமும் குறைந்துள்ளது.
    தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரி மின்துறை ஊழியர்கள் வருகிற 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி புதுவையில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு புதுவை மாநில மின்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர் மற்றும் தொழிலாளர் தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழுவை அமைத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 15 தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தனியார் மயத்தை எதிர்த்து அவர்கள் தனித்தனியாக அரசுக்கு கடிதம் அளித்தனர்.

    இந்த நிலையில் மின்துறை தனியார் மயமாக்கத்தால் ஊழியர்களின் பணிக்கு பாதிப்பு இருக்காது என்பதை விளக்கும் கூட்டம் நேற்று மாலை மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மின்துறை சார்பு செயலாளர் முருகேசன், தலைமை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், சிறப்பு அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு மின்துறை தனியார் மயமாக்கப்படும் போது எந்த நிலையில் இருக்கும், தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறித்து விளக்கி கூறினர்.

    அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சங்க பிரதிநிதிகள், புதுச்சேரி மின்துறை லாபகரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஏன் தனியார் மயமாக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தனியார் மய எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து மின்துறை பொறியாளர், தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கூறியதாவது:-

    புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து நாங்கள் அமைதி போராட்டம் நடத்தினோம். எங்களின் முக்கிய கோரிக்கையான மின்துறை தனியார் மயமாக்கப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின்துறை தொடர்ந்து அரசு துறையாகவே செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் புதுவை அரசு அதனை ஏற்காமல் தொடர்ந்து தனியார் மயமாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இன்று (நேற்று) நடந்த கூட்டத்தில் மின்துறை ஊழியர்கள் அரசு ஊழியர்களாக தொடர எந்த வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. நாங்கள் அரசு ஊழியர்களாக பணிக்கு வந்தோம். அரசு ஊழியர்களாகவே ஓய்வுபெற விரும்புகிறோம். எனவே ஏற்கனவே போராட்ட குழு எடுத்த முடிவின்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை  தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு முன்பு புதுவை மாநிலத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக மட்டுமே இருந்தது. அரசின் அலட்சியத்தாலும் பணத்தாசையாலும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி  அளித்துவிட்டு  கொரோனாவை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்த பெருமை சுகாதாரத் துறையை கையில்   வைத்திருக்கும்  முதல்&அமைச்சரையே  சாரும். 

    தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயி ரத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. 

    கொரோனா தொற்று அதிகரிப்பால் ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் எண்ணிக்கை குறைக் கப்பட்டுள்ளது. 

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மறைமுகமாக மருத்துவத்திற்கு செலவு செய்ய நேரிடுகிறது. 

    தற்போது புதுவை அரசு மருத்துவமனை  கொரோனா  மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கொரோனாவின் தீவிரத்தை  கணக்கில் கொண்டு புதுவை  இந்திராகாந்தி  மருத்துவக் கல்லூரியும் கொரோனா மருத்துவமனையாக விரைவில் மாற்றப்படலாம். இதனால் பிறநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனியார் மருத்துவ மனைக்கு செல்லும் நிர்ப் பந்தம் ஏற்படுகின்றது. 

    புதுவையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளும் புதுவை அரசாலும், புதுவை மக்களாலும் அதிக பலன் அடைந்துள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு இக்கட்டான சூழலில் உதவ வேண்டியது அவர்களின் அடிப்படை கடமையாகும். 

    தனியார் மருத்துவ கல்லூரி  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா பாதிப்பு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் இந்த பேரிடர் காலம் முடியும் வரை அவர்களின் முழு மருத்துவ செலவையும் அந்தந்த தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகமே ஏற்க வேண்டும் அல்லது அரசு ஏற்க வேண்டும்.

    இது குறித்து  முதல்&அமைச்சர்  உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    உப்பளம் விளையாட்டு மைதானத்தில் சுற்றிய 6 அடி நீள நல்ல பாம்பை இளைஞர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் விளையாட்டு மைதானத்தில் 20-ந் தேதி காலை சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது.

    இதைக்கண்டு நடைபயிற்சி மற்றும் விளை யாட்டில் ஈடுபட்டவர்கள்  அஞ்சி ஓடினர்.  அப்போது அங்கு நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த குயவர் பாளையத்தை சேர்ந்த சுனில் என்பவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்கு காத்திருந்த நிலையில், பாம்பு புதருக்குள் செல்ல முயன்றது. இதைக்கண்ட இளைஞர் சுனில் அந்த நல்லபாம்பை விரட்டிப்பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். 

    பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வந்த வனத்துறையினரிடம் ஒப்படைத்த  இளைஞரை வனத் துறையினர் பாராட்டினர்.  வனத்துறை காப்பகத்தில் வைக்கப்படும் பாம்பு சில நாட்களுக்கு  பிறகு காட்டுப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி: 

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணிஅரசு கண்டு கொள்ளாமல் இருப் பதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

    நீட் தேர்வில்  வெற்றி பெற்றும் ஒதுக்கீடு இல்லாததால் புதுவை அரசு பள்ளி   மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீராகியுள்ளது. 

    கடந்த   காங்கிரஸ் ஆட்சியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை   தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. 

    அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பினார். முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி, மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து அனுமதி கோரியும் பா.ஜனதா அரசு வேண்டுமென்றே காலம் கடத்தி நிராகரித்தது. 

    இப்போது என்.ஆர்.காங் கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் பெறும் எண்ணம் இல்லாமல் இருப்பது சரியல்ல. 

    மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் சமூக பார்வை நல்ல அரசுக்கு இருக்கவேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆண்டாக உள் ஒதுக்கீடு பெற்று, சுமார் 300 பேர் பயனடைந்துள்ளனர். 

    புதுவையிலும் இட ஒதுக்கீடு வழங்கினால் சுமார்  40 மாணவர்கள் மருத்துவக்கல்வி பெற்று பயனடைவர். 

    புதுவை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலம் கடத்தாமல் உரிய   நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு அளித்திட அரசு முன்வர வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பெண்கள் உயிர் தப்பினர்.
    புதுச்சேரி:

    புதுவை மடுகரை கிராமத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புத்துப்பட்டு அய்யனார் கோவிலுக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர்.

    மூலக்குளம் அருகே சென்றபோது காரில் இருந்து திடீரென புகை வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்டு காரில் பயணம் செய்த 5 பெண்கள் உடனடியாக வெளியே ஓடி வந்தனர்.  மேலும் டிரைவரும் காரில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

    அருகிலிருந்த ரெட்டியார் பாளையம் போலீசார் உடனடியாக காரில்  எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் டிரைவர்  காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

    இச்சம்பவத்தால் புதுவை-விழுப்புரம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் சாலையை சீரமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி: 

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு சார்பில் முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர் குடியிருப்பு பகுதிகளில்   மோசமான சாலைகளை கண்டித்தும், இந்த சாலைகளை தார் சாலைகளாக   அமைத்து கொடுக்க வேண்டும். 

    கழிவுநீர் வாய்க்கால்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வில்லியனூர்& முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் பிரதான நெடுஞ்சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    மறியல் போராட்டத்துக்கு  சுகதேவ், கண்ணன், கலியபெருமாள்,  சுப்பிர மணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். பூபதி,   பச்சையப்பன், முத்துவேல்,  வாழ்முனி, சிவராமகிருஷ்ணன், வசந்தா, வேலு, செல்வராஜ், பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    முன்னதாக   மறியல் போராட்டத்தில்   ஈடுபட்ட வர்கள்   முருங்கப்பாக்கம்& கடலூர் சாலையில் இருந்து வில்லியனூர்   சாலை வழியாக அரவிந்தர் நகருக்கு ஊர்வலமாக வந்தனர். 

    ஊர்வலம் மற்றும் மறியல்   போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர்   விசுவநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் அபிஷேகம், கீதநாதன், சரளா மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கணேசன்,   அந்துவான், அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 19-ந் தேதி 6 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 2 ஆயிரத்து 783 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2 ஆயிரத்து 230, காரைக்காலில் 462, ஏனாமில்  68,  மாகியில் 23 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 81, காரைக்காலில் 35, ஏனாமில் 12, மாகியில் 15 பேர் என 144 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 20, காரைக்காலில் 25, ஏனாமில் 2, மாகியில் 26  பேர் என ஆயிரத்து 73 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 342 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 392 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 10 ஆயிரத்து 745, காரைக்காலில் ஆயிரத்து 792, ஏனாமில் 225, மாகியில் 147 பேர் என 12 ஆயிரத்து 909 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 13 ஆயிரத்து 53 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். புதுவை சுதந்திர பொன்விழா நகரை சேர்ந்த 95 வயது மூதாட்டி கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில்  2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 12 ஆயிரத்து 236 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    ×