என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி பாம் ரவி கொலையில் கூலிப்படை தலைவன் கைது

    புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி பாம்ரவி கொலையில் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (வயது 33). கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இருவரும் மர்மநபர்களால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

    அப்போது பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் காலாப்பட்டு சிறையில் இருந்து வினோத், தீனா ஆகியோர் சதி திட்டம் தீட்டி தனது கூட்டாளிகளை வைத்து கூலிப்படை உதவியுடன் பாம் ரவி உள்ளிட்ட இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இரட்டை கொலைக்கு உதவியாக இருந்தவர்கள், கூலிப்படையினர் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்கள் என வினோத்தின் தாய் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வெடிகுண்டு கொடுத்து உதவியதாக லாஸ்பேட்டையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரவீன், அருண் ஆகிய 2 பேர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இந்தகொலை தொடர்பாக கூலிப்படை தலைவனாக இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகுவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இவர் மீது 11 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 63 வழக்குகள் உள்ளன. எனவே காஞ்சிபுரம் போலீசாரும் தியாகுவை வலைவீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையே தியாகு அரியானாவில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து காஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் தியாகுவை நேற்று காஞ்சிபுரம் கொண்டு வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து தியாகுவை புதுவைக்கு அழைத்து வந்து ரவுடி பாம் ரவி கொலை தொடர்பாக விசாரணை நடத்த முதலியார்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×