என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பத்தை அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆண்டியார்பாளையம், ஆண்டியார்பாளையம் காலனி, பிள்ளையார் திட்டு, கொருக்கமேடு உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த தனிநபரின் நிலத்தில் வழியாக பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டியநிலை இருந்து வருகிறது. 

    இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் பலமுறை அரசுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரி கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த அரசும் பள்ளிக்கு செல்ல வழி ஏற்படுத்தி தரவில்லை. மாணவர்களின் நலன் கருதி தனிநபர் தனது சொந்த நிலத்தில் பல ஆண்டுகளாக வழி ஏற்படுத்தி கொடுத்து வந்துள்ளார். 

    பள்ளிக்கு வேண்டிய இடத்தையும் தருவதாக தெரிவித்து இருந்தும், அரசு அந்த இடத்தை கையகப்படுத்தி முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வழக்கமாக செல்லும் போது பள்ளிக்கு செல்ல முடியாதபடி வேலி போட்டு தடுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி மாணவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் மாணவர்களுடன் பள்ளி வாசலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இடத்தின் உரிமையாளர் வேலியை அகற்றி பள்ளிக்குச் செல்ல வழிவிட்டார். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ரெட்டியார்பாளையத்தில் சொத்தை பிரித்து தராததால் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன்- மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளையம்- வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஏகியம்மாள். இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்கம் இறந்து விட்டார். இதையடுத்து ஏகியம்மாள் தனது வீட்டில் இளைய மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். வீட்டின் மாடியில் மூத்த மகன் பிரசாத், தனது மனைவி காயத்திரியுடன் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரசாத் தனது தாயிடம் சொத்தை பிரித்து தரக்கோரி பிரச்சினை செய்து வந்தார். இது சம்பந்தமாக ஏற்கனவே ஏகியம்மாள் கலெக்டரிடம் புகார் தெரிவித்து இருந்தார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பிரசாத் மற்றும் அவரது மனைவி காயத்திரி ஆகியோர் சொத்தை பிரித்து தரக்கோரி ஏகியம்மாளிடம் கேட்டனர்.  இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரசாத் மற்றும் அவரது மனைவி காயத்திரி ஆகியோர் ஏகியம்மாளை  தரக்குறைவாக திட்டி அவரை தாக்கினர்.  மேலும் சொத்தை பிரித்து தராவிட்டால் கொலை செய்து விடுவதாக ஏகியம்மாளை மிரட்டினர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஏகியம்மாள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர்  இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என என்.ஆர். இலக்கிய பேரவை வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன்  புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் விவசாயத்துக்கான நிலப்பரப்பு குறைந்து வருவதால் விவசாயிகளின்  உபரி வருமான கால்நடைகள் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதிலும் பால் உற்பத்தியாளர்கள் தங்களது கால்நடைகளை வீட்டிலேயே வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். 

    இவர்கள் தீவன பொருட்களை மட்டுமே நம்பி உள்ளதால் அவ்வப்போது ஏற்படும் விலை ஏற்றத்தால் எண்ணற்ற பால் உற்பத்தியாளர்கள் தங்களின் கால்நடைகளை விற்று விட்டு கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால் மாநிலத்தில் பால் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. தற்போது இருக்கின்ற பால் உற்பத்தியாளர்களை தக்க வைத்து  பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. 

    எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதன் மூலம் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு அல்லாமல் புதிதாக பால் உற்பத்தியாளர்களை ஈர்க்கும் விதமாக அமையும். இதன் மூலம் புதுவையில் மீண்டும் வெண்மை புரட்சிக்கு வழிவகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    நீர் மேலாண்மை பிரிவில் அமலோற்பவம் பள்ளிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    நீர் மேலாண்மை பிரிவில் புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

    மத்திய ஜல்சக்தி துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேசிய நீர் மேலாண்மை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2020-ம் ஆண்டுக்கு 11 பிரிவுகளின் கீழ் 57 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராமம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 

    அந்த வகையில் மத்திய நீர்வளத்துறை பல கட்ட ஆய்வுகளுக்கு பின் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த நீர் மேலாண்மை பள்ளி என்ற விருதை புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமிக்கு வழங்கப்பட்டுள்ளது.டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். 

    விழாவில் அமலோற்பவம் பள்ளியின் தாளாளர், நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்துசாமி கலந்து கொண்டு விருதினை பெற்றுக்கொண்டார். அப்போது பள்ளியின் துணை முதல்வர் செல்வநாதன், லூர்து அகாடமியின் உதவி தலைமை ஆசிரியர் அருள் ரொசாரியோ ஆகியோர் உடன் இருந்தனர். விருதுடன் பாராட்டு சான்றிதழ், கோப்பை மற்றும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இது அமலோற்பவம் லூர்து அகாடமிக்கு கிடைத்துள்ள முதல் தேசிய விருதாகும். 

    விருது பெற்றதை தொடர்ந்து பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் உடன் இருந்தனர். 

    இந்த சாதனை குறித்து பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி கூறுகையில், ‘பெருமைக்குரிய இந்த விருது பெற அர்ப்பணிப்புடன் உழைத்த ஆசிரியர்கள், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் மற்றும் உயிரோட்டம் தந்த மாணவர்களுக்கு மனப்பூர்வமான நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
    வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து மதகடிப்பட்டில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.
    புதுச்சேரி:

    வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை கண்டித்து மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் புதுவை பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட்டு இடஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு உடனடியாக மீண்டும் இடஒதுக்கீடு கிடைக்குமாறு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் திருபுவனை தொகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். 

    இதனை தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார்  அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பா.ம.க.வினரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
    போலி பத்திரம் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வங்கியின் முன்னாள் மேலாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் யூகோ வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2016-ம் ஆண்டு போலி பத்திரம் மூலம் முதலியார்பேட்டையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான கணேசன் என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    இதற்கு முன்னாள் வங்கி மேலாளர் தென்னரசு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் குற்றம்சாட்டப்பட்ட கணேசன், தென்னரசு ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பு அளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் பிரவீன்குமார் ஆஜரானார்.
    புதுவை அரியாங்குப்பத்தில் கவர்னர் தமிழிசை பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பாகூர்:

    புதுவை தனியார் தையல் பயிற்சி மையம் சார்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    இதில், கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு வந்த கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரை வரவேற்று அரியாங்குப்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    புதுவை - கடலூர் சாலை அரியாங்குப்பம் புதுப்பாலம் அருகில் வைக்கப்பட்டு இருந்த கவர்னர் படம் பொறித்த பேனரை யாரோ மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பேனரை கிழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    காரைக்கால் திருநள்ளாறில் திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறை அருகே சேத்தூர், பண்டாரவாடை கிராமத்தை சேர்ந்தவர் தீபா(வயது29). இவர் மயிலாடுதுறை பகுதி காவேரி நகரை சேர்ந்த யபேஷ்(30) என்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததார்.

    இந்நிலையில், யபேஷ் தீபாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, யபேஷ் தீபாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த தீபா யபேஷிடம் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    ஆத்திரமடைந்த யபேஷ் தீபாவை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தீபா காரைக்கால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பரில் வழக்கு பதிவு செய்த போலீசார், யபேஷை கைது செய்தனர். மேலும் யபேஷ் சகோதிரி ஜபசீலி (37), ஜபசீலி கணவர் இன்பராஜ் (39) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெண்களை குறைவாக நினைக்கும் சமுதாய சிந்தனை இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை பே‌ஷன் டாட் ஹைடெக் கம்ப்யூட்டரைஸ்டு தையல் பயிற்சி நிறுவனம் சார்பில் அரியாங்குப்பம் அகில பாண்டுரங்கன் திருமண மண்டபத்தில் பெண்கள் தின விழா நடந்தது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு தையல் பயிற்சி பெற்ற ஏழை மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தையல் எந்திரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையின் வளர்ச்சிக்காக மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பெண்கள் எதற்காகவும் மரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது.

    பெண்களை குறைவாக நினைக்கும் சமுதாய சிந்தனை இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கான முழு அதிகாரமும் உரிமையும் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அதன் பிரதிநிதியாக நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன்.

    பெண்களுக்கு யார் மரியாதை கொடுக்க மறுக்கிறார்களோ, அவமதிக்கிறார்களோ அவர்கள் தலைகுனியும் அளவுக்கு பெண் சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும்.

    பெண்கள் தலை நிமிர வேண்டும் என்பது என்னுடைய ஆவல். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கும் போது தன்னம்பிக்கை வந்துவிடும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அதை கைத்தொழில்கள் நமக்கு அளிக்கும். பெண்கள் யாருக்காகவும் தலைகுனிய கூடாது. தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். அது தன்னம்பிக்கையினால் இருக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அரசு மற்றும் சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக புதுவை கொரோனா இல்லாத மாநிலமாக மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருந்தது.

    இந்த நிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு புத்தாண்டு கொண்டாட வந்தவர்களால்தான் கொரோனா தொற்று அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    ஜனவரி மாதத்துக்கு பின் புதுவையில் கொரோனா தொற்று மீண்டும் குறைய தொடங்கியது. ஒரு நாள் பாதிப்பு 10-க்கும் கீழ் சென்றது. ஒரு சில நாட்களில் தொற்று இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் 222 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் குணமடைந்தனர். இதனால் புதுவை மாநிலம் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறி உள்ளது.

    அரசு மற்றும் சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக புதுவை கொரோனா இல்லாத மாநிலமாக மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் புதுவையில் ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 919 பேர் 2-வது தவணை தடுப்பூசியையும், 105 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

    இதுவரை 16 லட்சத்து 36 ஆயிரத்து 901 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
    என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் புதுவை அ.தி.மு.க. தொடர்கிறது என்று அன்பழகன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. 

    மக்கள் விரோத காங்கிரஸ்-தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் கூட்டணிக்கு மகத்தான வெற்றி வாய்ப்பை மக்கள் தந்தனர். 

    உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தைபோல் புதுவையிலும் பா.ஜனதா தனியாக நிற்கும் என தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் தலைமை யில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவோம். 

    இந்த கூட்டணியில் எவ்வித மான மாற்றமும் இல்லை. கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டால், தலைமைக்கழகம் முடி வெடுத்து அறிவிக்கும். 

    இன்றைய நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணியில் அ.தி.மு.க. தொடர்கிறது. பா.ஜனதா தனித்து நிற்பது என்பது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு.
    சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தை மக்களுக்கு பயன்படுத்தாமல், முகஸ்துதி அரசியல் செய்தும், பிரதமரை இழித்து பேசுவதையும் தி.மு.க. செய்துள்ளது. 

    மேகதாது அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் எடுத்து வரும் அத்தனை நடவடிக்கைக்கும் அரசியல் வித்தியாசம் பாரக்காமல் அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் ஒருசேர இணைந்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினர். 

    காரைக்கால் விவசாயி கள் நலனுக்காக அணை கட்டும் முயற்சியை தடுக்க புதுவை சட்டமன்றத்தில் தீர்மான கடிதம்கூட தி.மு.க. தரவில்லை. 
    கடந்த காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி ஒருமுறை கூட முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. இப்போது முழு பட்ஜெட் பற்றி பேச தி.மு.க.வுக்கு  தகுதி இல்லை. 

    இவ்வாறு அவர் கூறி னார்.
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    நிர்வாகக்குழு உறுப்பினர் சரளா தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். 

    தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் அஜிஸ்பாஷா தேசியக்குழு முடிவுகள் குறித்து விளக்கினார்.  கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், சுப்பையா, சிவா, தனராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    கூட்டத்தில் புதுவை அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    ×