என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை லாஸ்பேட்டையில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை பூஞ்சோலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மகள் தனலட்சுமி (வயது 30) இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலபதி என்பவ ருடன் திருமணம் நடந்தது. 

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அவரது கணவர் வெங்கடா சலபதி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இதனால் தனலட்சுமி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தையை பராமரிக்க தனலட்சுமி வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். ஆனால் சரியான வேலைகிடைக்க வில்லை. மேலும் குடும்பம் நடத்த முடியாமல் தனலட்சுமி சிரமப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த தனலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

    வீட்டில் அனைவரும் தூங்கிய  பின்னர் தனலட்சுமி வீட்டின் சமையறைக்கு சென்று அங்குள்ள ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு  தொங்கினார். 

    நள்ளிரவு திடீரென எழுந்து பார்த்த கஸ்தூரி படுக்கையறையில் மகளை காணாமல் சந்தேக மடைந்து சமையல் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு மகள் தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  தனலட்சுமியை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து அவரது தாயார் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் மது குடித்துவிட்டு பொது இடத்தில் ரகளை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை மெயின் ரோட்டில்  3 வாலிபர்கள் மது குடித்து விட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பண்ருட்டி கீழ் கவரபட்டு பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 20) ராபின் ராஜா (24) மற்றும் மேல் குமாரமங்கலம் ரகு (23) என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மதகடிப்பட்டு சந்திப்பில் மதுகுடித்து விட்டு போதையில் அவ்வழியே செல்லும் பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த விழுப்புரம் மகாராஜ புரத்தை சேர்ந்த பழனி (வயது 45) என்பவரை திருபுவனை போலீசார் கைது செய்தனர்.

    லிங்காரெட்டி பாளையத்தில் மது கடை அருகே குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட நவமால்  மருதூரை சேர்ந்த கார்த்திகேயனை (வயது 45) காட்டேரிக்குப்பம் போலீசாரும் வில்லியனூர் அருகே ஆரியபாளையம் பாலத்தில் நின்று கொண்டு குடிபோதையில் ரகளை செய்த செல்லிப்பட்டு பெரிய காலனியை சேர்ந்த ராம்குமார் (வயது 39) என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.

    மங்கலம் பகுதியில் ஒரு தனியார் கம்பனி அருகே நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்த மேல் திருக்காஞ்சி காமராஜர் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர். 
    செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு நாள், தண்ணீர் நாள் மற்றும் சர்வதேச பொம்மலாட்ட நாள் சிறப்பு நிகழ்ச்சி  என முப்பெரும் விழா நடைபெற்றது. 

    ஆசிரியர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்ற நிறுவனர் அருண் நாகலிங்கம் கலந்து கொண்டு சர்வதேச சிட்டுக்குருவிகள் நாள் பற்றி சிறப்புரை ஆற்றினார். 

    தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம் பொம்மலாட்டம் மூலம் காடும் யானையும், முதலுதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் வளம் காப்போம், தண்ணீர் சிக்கனம் பற்றி வலியுறுத்தினார்.

     நிகழ்வின் இறுதியாக பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 
    புதுவையில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை செய்து 5 பேரை கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு வீசி எதிராளிகளை கொலை செய்யும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.

    மேலும் முக்கிய ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்கின்றனர். அதோடு ரவுடிகளை ஊருக்குள் நுழையவும் தடை விதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா தலைமையில் உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை, முதலியார்பேட்டை ஆகிய போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வாணரப்பேட்டை, ரோடியர்பேட், ஆட்டுபட்டி, பெரியார்நகர், அனிதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், ரவிக்குமார், சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின்போது ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.

    போலீசார் சோதனை நடத்த வருவதை அறிந்துகொண்ட ஒருசில ரவுடிகள் வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

    அதேவேளையில் முதலியார்பேட்டை பகுதியில் 2 ரவுடிகளையும், ஒதியஞ்சாலை பகுதியில் 3 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர்.

    புதுவை வர்த்தக சபை புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை வர்த்தசபையின் நிர்வாகக்குழு தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி கடந்த 2019--ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதம் 31--ந் தேதியுடன் முடிவ டைந்தது. 

    இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்தது.  அதில் தலைவராக குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் துணைத் தலைவராக ரவி, பொதுச் செயலாளராக ஆனந்தன், இணை பொதுச் செயலாள ராக முகம்மது சிராஜ், பொருளாளராக வி.எம்.எஸ்.ரவி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சிவசங்கர் எம்.எல்.ஏ., தேவக்குமார், ஞானசம்பந்தம், நமச் சிவாயம், ராமமூர்த்தி, ஜெக தீசன், பிரகாஷ், அமுர்த கண்டேசன், குமார், ராஜவேல், ஜெய்கணேஷ் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். 

    தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற தொழிலாளர் அதிகாரி கலியபெருமாள், ஆறுமுகம், சுவாமிநாதன் ஆகியோர் செயல்பட்டனர். 
    புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் 2025--ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தை துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 262 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டனர். தற்போது, பாதிப்பு படிப்படியாக குறந்து மார்ச் மாதம் 105 பேர் பாதிக்கப்பட்டனர்.

     இதில் குறிப்பாக 40 பேர் பாகூர் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால், புதுச்சேரி அரசு நலவழித்துறை, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக, பாகூர் பகுதி முழுவதும் தீவிர டெங்கு ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நேற்று பாகூர் பேட்டில் டெங்கு ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுகாதார இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு பிரசாரத்தை கொடியசைத்து துடங்கி வைத்தார்.
     
    துணை இயக்குனர்கள் டாக்டர் முரளி, ரகுநாதன், மலேரியா தடுப்பு திட்ட உதவி இயக்குனர் வசந்தகுமாரி, தொழில் நுட்பவல்லுனர் செந்தில் வேலவன், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு கலந்து கொண்டனர்.
    மூலிகை , தானியங்களுக்கு மக்களிடம் அதிகமான வரவேற்பு உள்ளது என சுசான்லி டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    திருச்சி தோட்டக்கலை மற்றும் ஆய்வு மைய பெண்கள் கல்லூரி மற்றும் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு படிக்கும் 23 மாணவ-மாணவிகள் சுசான்லி டாக்டர் ரவியை சந்தித்து பேசினார்கள். 

    மூலிகைகளின் வளர்ச்சி, அதன் மூலம் கிடைக்கும் வியாபார வாய்ப்பு, மானியத் துடன் கூடிய மூலிகைகள் பற்றிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

    சித்தா, ஆயுர்வேதா மருந்துகளை தயாரிக்கும் தி சுசான் சிலி குரூப்சின் வீ ஹெர்பல் கேர் நிறுவனம் மற்றும் சாய்டீரி ஹெர்பல்ஸ் நிறுவனங்களின் மூலிகை மருந்துகளை தயாரிக்கும் முறை கடந்த 10 ஆண்டுகளில் இவற்றின் வள ர்ச்சி குறித்தும் விளக்கினார்.

    மேலும் அவர் கூறும் போது, தற்சமயம் மூலிகைகள் மற்றும் குறு, சிறு தானியங்கள் குறித்து மக்களிடம் அதிக மான வரவேற்பு உள்ளது. தேசிய மூலிகை வாரியம் சில குறிப்பிட்ட மூலிகை மற்றும் வேளாண்மைக்கு 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. 

    இவற்றை பயன்படுத்தி மூலிகை சாகுபடி செய்து நேரடியாக மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க   லாம் என்றும், கடந்த 30 வருடங்களாக குறுசிறு தானியங்கள் மற்றும் மூலிகைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளதாக வும், இக்காலகட்டங்களில் விவசாயம் உள்ளிட்ட, மூலிகை சாகுபடிக்கு மிகவும் சிறப்பானது என்றும் கூறினார். 

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    புதுச்சேரி- திருப்பதி இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் பிற்பகலில் திருப்பதிக்கு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலானது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    அதன்பின் தொற்று குறைந்து பல ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையிலும் புதுச்சேரி-திருப்பதி ரெயில் இயக்கப்படாமலேயே இருந்தது. இந்தநிலையில் நேற்று முதல் இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

    இதன்படி தினந்தோறும் பிற்பகல் 2.55 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் இந்த மெமு ரெயில் இரவு 11 மணிக்கு திருப்பதி செல்கிறது. திருப்பதியில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 12.50 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது.

    ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்ட நிலையில் மிகக்குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். விரைவில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ரெயிலானது சின்னபாபுசமுத்திரம், விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், ஒலக்கூர், தொழுப்பேடு, மதுராந்தகம், செங்கல்பட்டு, பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் (கிழக்கு), காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது.
    புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

    2022-2023-ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவிக்கப்பட்டு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இதன்படி புதுவையில் வீட்டு உபயோக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. 100 யூனிட்டுக்குள் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101-ல் இருந்து 200 யூனிட் வரை ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும் உயர்ந்துள்ளது. 

    201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.
    உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதாக கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடி ஸ்மார்ட் சிட்டி திட்ட இணைதலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    உப்பளம் தொகுதி முழுவதும் ஸ்மார்ட் திட்டங்கள் முழுமையாக கொண்டு வரப்படாமல் இருப்பதும் முழுமையாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதும் வருத்தத்திற்குறியது.

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு சம்மந்தமாக முன்பே கோப்புகள் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் நிலைப்பாடு குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் கஷ்டமான சூழலில் இயற்கையை எதிர்த்து போராடி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி முழுமையடைய வேண்டும் என்றால் அங்கு வசிக்கும் அனைவருக்கும் அரசால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதன் மூலம்தான் அந்த பெயர் அரசுக்கும், அதிரிகாரிகளுக்கும் சென்று அடையும்.

    உப்பளம் தொகுதியில் யூ. நீர்க்கால் மற்றும் எல்.நீர்க்கால் இதுவரை ஸ்மார்ட் சிட்டி மூலம் சீர்செய்யப்படவில்லை. படகுகளில் தொழில் செய்யும் மக்களுக்கு சாலை, வலைகூடம் அமைத்து தண்ணீர், மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். 

    பாண்டி மெரினாவில் சுனாமி நினைவு சின்னம் கட்டாயம் அமைத்து தரவேண்டும். வீராம்பட்டினம் சுரங்கப்பாதை செல்லும் வழியிலும் அதன் அருகில் உள்ள துறைமுகம் வரை சாலை அமைத்து தரவேண்டும். 

     இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பிரிவு அதிகாரிகள், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், துணை பொறியாளர் பன்னீர்செல்வம், பொது மேலாளர் சோமசுந்தரம், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி ஆதிதிராவிடர் நலத்துறை துணை அமைப்பாளர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பிரதமருடன் கலந்துரையாடலில் புதுவையில் மாணவர்களுடன் ரங்கசாமி பங்கேற்றார்.
    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி இந்திய அளவில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் நேரடியாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் “தேர்வுகள் குறித்த விவாதம் 2022“ (பரிக்ஷா பே சர்ச்சா 2022) கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று டெல்லி தால்கட்டோரா அரங்கில் நடைபெற்றது. 

    நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பயனடையும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுவை  கல்வித்துறை சார்பில் மொத்தம் 178 உயர்கல்வி மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் ஒளிபரப்பட்டது.  

    புதுவை கவர்னர் மாளிகையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சி திரையிடப்பட்டது. கல்வித்துறை சார்பில் 50 மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர். அமைச்சர் லட்சுமிநாராயணன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்தரி, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

    அலுவல் காரணமாக தெலுங்கானா மாநிலம் சென்றுள்ள கவர்னர் தமிழிசை தெலுங்கானா கவர்னர் மாளிகையில் மாணவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியை கவனித்தார். பிரதமரின் உரைக்குப்பின் தெலுங்கானா கவர்னர் மாளிகையில் இருந்து காணொலி மூலமாக புதுவை கவர்னர் மாளிகையில் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்துரையாடலில் மாணவிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     
    இதேபோல் காலாப்பட்டு, ஜிப்மர் வளாகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெற அரசு நூலகத்துக்கு பயிற்சி புத்தகங்களை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    நீட் நுழைவு தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பூரணாங்குப்பம் அரசு நூலகத்துக்கு நீட் நுழைவு தேர்வு பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு அசோகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஆனந்தன் தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு புத்தகங்களை நூலக அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில் தவளக்குப்பம் ராமு, பூரணாங்குப்பம் எழில்ராஜா, தட்சிணாமூர்த்தி, குமாரசாமி, வாழுமுனி, திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×