என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த காசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன்.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களை சிறை பிடித்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். மீனவர்களை மீட்டுத்தரக்கோரி மீனவ பஞ்சாயத்தார் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், காரைக்கால் கீழக்காசக்குடி மேட்டை சேர்ந்த வைத்தியநாதன் படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்த போது, கீழ்காசாக்குடியை சேர்ந்த இளையராஜா (33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன் (31), தர்ம சாமி (48), மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்குடியை சேர்ந்த வீரா (28), தினேஷ் (28), தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (37), ஜெகதீஸ்வரன் (27), விக்னேஷ் (22), சந்திஸ்குமார் (23), நாயகர்குப்பத்தை சேர்ந்த பாக்கியராஜ் (23) ஆகிய 12 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மீனவர்களை விரைவில் விடுவிக்க இலங்கை அரசுடன் வெளியுறவுத்துறை மந்திரி பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். .

    • போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
    • சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றுள்ளனர்.

    புதுச்சேரி;

    போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

    புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43).வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் தி.ரு.வி.க தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன்,சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றுள்ளனர்.

    இதனையறிந்த ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை 2 ஆண்டுகளாக வலை வீசி தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் ஆரோக்கியராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் கோர்ட்டின் அனுமதி பெற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த பணத்தில் கார்,மோட்டார் சைக்கிள் வாங்கியதாகவும்,மீதி பணத்தை செலவழித்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் மற்றவர்களை பிடிக்கும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் செல்லஞ்சேரி காரணப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த குமரனை (51) அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பணத்தில் கடலூரில் 10 ஏக்கர் நிலமும்,புதுவையில் போலியான முகவரி கொடுத்து 3.600 சதுர அடி நிலமும் வாங்கியுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்து போனார். இதில் முக்கிய குற்றவாளியான நான்சி நாகசுந்தரி உள்பட 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தது.
    • இதனால் நூற்றுக்கணக் கானோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தது.

    இதனால் நூற்றுக்கணக் கானோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    அரசு மருத்துவமனை, சமுதாய நல வழி மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவும் பிறப்பித்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் அரசு முறை பயணமாக இன்று காரைக்கால் சென்றனர். அவர்களை அமைச்சர் சந்திரபிரியங்கா வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன், துணை கலெக்டர் ஆதர்ஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் அவர்களை வரவேற்று அழைத்துச் செனறனர்.

    திருநள்ளாறு சாலையில் வேலப்பர் அருகே உள்ள குடிநீர் தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல்- அமைச்சர் ரங்கசாமி குடிநீரில் குளோரினை அதிகமாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மருத்துவ ஆலோசனைகள் வழங்க கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.

    காரைக்கால் மாவட்ட மக்கள் 04368 236565 என்ற எண்ணில் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோ–சனைகளை பெறலாம்.

    குடிநீரில் அசுத்த நீர் கலந்து வந்தால், இணைப்பில் பழுது இருந்தால் உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, 1077, 04368 228801, 227704 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

    • நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கவர்னர் தமிழிசை 75 பள்ளிகளுக்கு செல்ல திட்டமிட்டு, இன்று தொடங்கினார். திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதலில் வந்தார். அங்கு நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    மாணவி ஒருவர் விடுதலைப்போராட்ட வீரர்களை பற்றி பேசினார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை விழாவில் பேசியதாவது:-

    75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தாலும், மாணவர்களிடையே தேச பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியதுதான் முதல் கடமை. மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    தயக்கத்தை உடைத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைக்கே படிப்பதுதான் நல்லது. ஆசிரியர்கள் தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    தாய், தந்தையர் கவனிக்கவில்லை என புகார்கூறக்கூடாது. உங்களுக்கே பொறுப்பு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வாரம் ஒரு சுதந்திர போராட்ட வீரரை தெரிந்து கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் காந்தியை தெரியும், அவரோடு சுதந்திரத்துக்காக பணியாற்றியவர்களை அறிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாணவிகளுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்கினார். மாணவி ஹரிணி, உங்களை ஈர்த்த தலைவர் யார்? என கேட்டார். இதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை, முதலில் அம்மா, பின் அப்பா, ஆசிரியர்கள், தலைவர்கள். அம்மாவிடமிருந்து அன்பையும், அப்பாவிடமிருந்து எப்படி பேச வேண்டும், படிக்க வேண்டும் என்பதையும், ஆசிரியர்களிடமிருந்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

    தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை படிக்கும்போது அதன்மூலம் அவர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்டேன். நாட்டுக்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் கற்று வருகிறேன். பெண்கள் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். பாரதியாரின் அச்சமில்லை, அச்சமில்லை என்ற வரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் நிலைப்பாட்டில் வேறாக இருந்தாலும், ஜெயலலிதாவிடமிருந்து துணிச்சல் என்னை ஈர்த்தது என தெரிவித்தார்.

    மாணவி ஷிவானி கோகிலாம்பிகை, உங்களுக்கு படித்த சுதந்திர போராட்ட தலைவர் யார்? என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். காந்தியையும், சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களையும் பிடிக்கும் என்று கூறினார்.

    தொடர்ந்து எக்கோலஸ் ஆங்கில அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு நுழைவு வாயிலில் சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்த குழந்தைகள் அவரை வரவேற்றனர். அவர்களிடம் கவர்னர் பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    இதன்பின் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளிக்கு சென்ற கவர்னர், நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். தொடர்ந்து லாஸ்பேட்டை அரங்கசாமி நாயக்கர் நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கோரிமேடு இந்திராநகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

    புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது. ஒரே நாளில் 91 பேருக்கு தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 65, காரைக்காலில் 19, ஏனாமில் 7 பேர் என புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 5, ஏனாம் 2, மாகியில் ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 416, காரைக்காலில் 69, ஏனாமில் 45, மாகியில் 4 பேர் என 534 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 28, காரைக்காலில் 14, ஏனாமில் 8 பேர் என 50 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொ ரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • திருபுவனை தொகுதிக்குட் பட்ட சோரப்பட்டு கிராமம் காலனி பகுதி பிள்ளையார் கோவில் பின்புறம் புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழகத்தின் மூலமாக ரூ. 26 லட்சத்து 53 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
    • இதேபோல் சோரப்பட்டு யூ வடிகால் வாய்க்கால் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் ஓதுக்கப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட் பட்ட சோரப்பட்டு கிராமம் காலனி பகுதி பிள்ளையார் கோவில் பின்புறம் புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழகத்தின் மூலமாக ரூ. 26 லட்சத்து 53 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் சோரப்பட்டு யூ வடிகால் வாய்க்கால் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் ஓதுக்கப் பட்டுள்ளது.

    சன்னியாசிக்குப்பம் பகுதியில் புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலை கழகத்தின் மூலமாக ரூ. 5 லட்சத்து 12 ஆயிரம் 968 ரூபாய் செலவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ, அங்காளன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி யில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலை கழகத்தின் மேலாண் இயக்குனர் தயாளன்,உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் திருவருட்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரெட்டியார் பாளையத்தில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்
    • இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    ரெட்டியார் பாளையத்தில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலதிபர் பலியானார்.

    வில்லியனூர் அருகே திருக்காஞ்சியை அடுத்த கீழ்அக்ரகாரம் பி.கே.வி. நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இவரது மகன் தமிழ்செல்வன்(வயது41). இவர் பங்கூர் பகுதியில் எந்திரங்களுக்கு கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளன.

    இந்த நிலையில் தமிழ்செல்வனின் நண்பர் பிரான்சில் இருந்து புதுவை வந்திருந்தார். இதையடுத்து நண்பரின் அழைப்பை ஏற்று தமிழ்செல்வன் நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தார். பின்னர் நண்பரை சந்தித்து பேசி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.

    ரெட்டியார் பாளை யத்தில் ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாராயம் வாங்கி கொடுக்க மறுத்ததால் வாலிபரை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

    புதுச்சேரி:

    சாராயம் வாங்கி கொடுக்க மறுத்ததால் வாலிபரை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை வேல்ராம்பட்டு முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது 2-வது மகன் ஆனந்த் (வயது35). இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். ஆனந்துக்கு அதிகம் குடி பழக்கம் இருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதுமுதல் ஆனந்த் தொடர்ந்து மது குடித்து விட்டு தனது சகோதரர் கோபி மற்றும் உறவினர்களிடம் தகராறு செய்து வந்ததால் அவரிடம் யாரும் அதிகமாக பேசுவதில்லை.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி ஆனந்த் கொம்பாக்கம் சாராயக்கடையில் சாராயம் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாராயணன் என்பவர் ஆனந்திடம் சாராயம் வாங்கி கொடுக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் ஆனந்த் சாராயம் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார்.

    பின்னர் ஆனந்த் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது சாராயம் வாங்கி கொடுக்காததால் ஆத்திரமடைந்த நாராயணன் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆனந்துவை சரமாரியாக தாக்கினார். மேலும் இனிமேல் என்கிட்ட வைத்துக்கொண்டால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து ஆனந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆனந்த்தின் சகோதரர் கோபிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கோபி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்தை மீட்டு ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு ஆபத்தான நிலையில் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ஆனந்தின் தாய் ராணி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் வருகை ஏற்பாடுகளை செய்ய சென்றதால் என்னால் காரைக்கால் செல்ல முடியவில்லை.
    • பள்ளி மாணவர்களின் பஸ் இயக்க புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் பஸ் இயக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இன்று 5 பள்ளிக்கு செல்கிறேன். மாணவர்களோடு மதிய உணவு அருந்துகிறேன்.

    ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறை நவீனமயமாக மாற்றப்பட வேண்டும்.

    இதற்காக முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். காரைக்காலில் வாந்தி பேதியால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் வருகை ஏற்பாடுகளை செய்ய சென்றதால் என்னால் காரைக்கால் செல்ல முடியவில்லை.

    இருப்பினும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். வாந்தி, பேதியை தடுக்கும் வழிமுறைகள் பற்றி அறிவுறுத்தினேன். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தற்போது வாந்தி, பேதி கட்டுக்குள் வந்துள்ளது. முதல்-அமைச்சரும் காரைக்காலுக்கு நேரில் சென்றுள்ளார்.

    பள்ளி மாணவர்களின் பஸ் இயக்க புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் பஸ் இயக்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டு விட்டது. 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணி தொடங்கி உள்ளோம்.

    மதிய உணவு பற்றி ஆய்வு செய்ய நேரில் சாப்பிட உள்ளேன். எந்த குறைபாடையும் நியாயப்படுத்தவில்லை. அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்படும். நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று உயர்ந்துள்ளது. முக கவசம் அணிவது கட்டாயம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    கொரோனாவை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ. முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் சென்டாக் அறிவிப்பு வெளியிடப்படும்.

    பிரதமர் என்னை சந்தித்தபோது புதுவையை பற்றி கேட்டறிந்தார். புதுவையில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்கள் வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை தாகூர் கலைக்கல்லூரி, மணக்குள வினாயகர் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • தி.மு.க. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு மக்களை கல்வி பயிலச் செய்து வாழ்க்கையில் மேம்படுத்த வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை தாகூர் கலைக்கல்லூரி, மணக்குள வினாயகர் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    புதுவை மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பாளர் சிவா மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    தி.மு.க. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு மக்களை கல்வி பயிலச் செய்து வாழ்க்கையில் மேம்படுத்த வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு தமிழக முதல் -

    அமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    எந்தவகையில் கல்வி பயில மாணவர்களுக்கு தடை ஏற்பட்டாலும் என்னை, எப்போதும் தொடர்பு கொள்ளலாம். உங்களது கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அமுதாகுமார், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன்,துணை அமைப்பாளர்கள் பால பாரதி, ஸ்டீபன், யோகேஷ், கல்லூரி அமைப்பு நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தவளக்குப்பம் 4முனை சந்திப்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
    • இந்த பிரச்சாரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மின் துறையை தனியார்மயப்படுத்தும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தவளக்குப்பம் 4முனை சந்திப்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

    இந்த பிரச்சாரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். கட்சியின் மேலிட பொறுப்பாளரும், மாநில பொருளாளருமான தமிழ்மாறன், மாநில செயலாளர் தமிழ்வளவன் ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தவளக்குப்பம் கடைவீதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கி விடுதலைச் சிறுத்தை கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் பிரச்சாரத்தில் மணவெளி, ஏம்பலம், பாகூர் ஆகிய தொகுதிகளை சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலைமணி, வக்கீல் செந்தமிழன், பாண்டியன், கவியரசன், வினோத், ராஜா, சிவகுரு, வீரமணி, சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சண்முகம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் தலைமை தாங்கினர்

    புதுச்சேரி:

    மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் ஆனந்தவேலு, கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சண்முகம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் தலைமை தாங்கினர்.

    விழிப்புணர்வு பேரணியை பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இதில் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கையில் பதாகைகளை ஏந்தி மலேரியா எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×