search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுதந்திர போராட்ட தியாகி பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் -  கவர்னர் தமிழிசை விருப்பம்
    X

    திருவள்ளுவர் அரசு பள்ளியில் நடந்த 75-வது ஆண்டு சுதந்திரதின விழாவில் கவர்னர் தமிழிசை குத்துவிளக்கேறினார். அருகில் பள்ளி கல்வி இயக்குனர் ருத்ரகவுடு உள்ளார்.

    சுதந்திர போராட்ட தியாகி பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் - கவர்னர் தமிழிசை விருப்பம்

    • நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கவர்னர் தமிழிசை 75 பள்ளிகளுக்கு செல்ல திட்டமிட்டு, இன்று தொடங்கினார். திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதலில் வந்தார். அங்கு நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    மாணவி ஒருவர் விடுதலைப்போராட்ட வீரர்களை பற்றி பேசினார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை விழாவில் பேசியதாவது:-

    75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தாலும், மாணவர்களிடையே தேச பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியதுதான் முதல் கடமை. மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    தயக்கத்தை உடைத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைக்கே படிப்பதுதான் நல்லது. ஆசிரியர்கள் தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    தாய், தந்தையர் கவனிக்கவில்லை என புகார்கூறக்கூடாது. உங்களுக்கே பொறுப்பு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வாரம் ஒரு சுதந்திர போராட்ட வீரரை தெரிந்து கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் காந்தியை தெரியும், அவரோடு சுதந்திரத்துக்காக பணியாற்றியவர்களை அறிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாணவிகளுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்கினார். மாணவி ஹரிணி, உங்களை ஈர்த்த தலைவர் யார்? என கேட்டார். இதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை, முதலில் அம்மா, பின் அப்பா, ஆசிரியர்கள், தலைவர்கள். அம்மாவிடமிருந்து அன்பையும், அப்பாவிடமிருந்து எப்படி பேச வேண்டும், படிக்க வேண்டும் என்பதையும், ஆசிரியர்களிடமிருந்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

    தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை படிக்கும்போது அதன்மூலம் அவர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்டேன். நாட்டுக்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் கற்று வருகிறேன். பெண்கள் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். பாரதியாரின் அச்சமில்லை, அச்சமில்லை என்ற வரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் நிலைப்பாட்டில் வேறாக இருந்தாலும், ஜெயலலிதாவிடமிருந்து துணிச்சல் என்னை ஈர்த்தது என தெரிவித்தார்.

    மாணவி ஷிவானி கோகிலாம்பிகை, உங்களுக்கு படித்த சுதந்திர போராட்ட தலைவர் யார்? என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். காந்தியையும், சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களையும் பிடிக்கும் என்று கூறினார்.

    தொடர்ந்து எக்கோலஸ் ஆங்கில அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு நுழைவு வாயிலில் சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்த குழந்தைகள் அவரை வரவேற்றனர். அவர்களிடம் கவர்னர் பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    இதன்பின் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளிக்கு சென்ற கவர்னர், நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். தொடர்ந்து லாஸ்பேட்டை அரங்கசாமி நாயக்கர் நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கோரிமேடு இந்திராநகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

    Next Story
    ×