என் மலர்
புதுச்சேரி
- புனித தெரேசாவுக்கு அக்டோபர் மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆலயத்தில் திருவிழா ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் வெகு விமரிசையாக நடைபெறும்
புதுவை மாநிலம் மாகி பிராந்தியம் கேரள மாநில கண்ணூர் மாவட்டத்தையொட்டி உள்ளது.
இங்குள்ள செயிண்ட் தெரேசா தேவாலயம் தென்னிந்தியாவின் முக்கிய புனிதத் தலமாக விளங்குகிறது. புனித தெரேசாவின் திருவுருவத்தோடு வந்த ஒரு கப்பல் மாகி கடலோரம் வந்தபோது திடீரென்று அங்கிருந்து நகர மறுத்து விட்டதாம்.
இதனால், அப்பகுதி மக்கள் புனித தெரேசாவின் திருவுருவத்தைத் நம் நகரில் நிறுவி, அதற்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளனர். எனவே, திருவுருவம் கப்பலிலிருந்து இறக்கப்பட்டது. கப்பலும் நகரத் தொடங்கியது.
புதிதாகக் கட்டிய கோவிலில் புனித தெரேசாவின் திருவுருவம் நிறுவப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் புனித தெரேசாவுக்கு அக்டோபர் மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து புனித அன்னையின் அதிசய உருவம் ரகசிய அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் வழிபாட்டிற்காக 17 நாட்கள் வைக்கப்பட்டது.
இறுதி நாளில் முக்கிய நிகழ்வாக அன்னையின் உருவம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது இந்து வழிபாட்டில் உள்ளது போல் மலையாள மொழி பேசும் மக்கள் அங்கபிரதட்சணம் செய்து அன்னையை வழிப்பட்டனர்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் வெகு விமரிசையாக நடைபெறும் விழாவில் புதுவையின் மாகி மட்டுமல்லாது அருகில் உள்ள கேரள மாநில மக்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் அங்கபிரதட்சணம் செய்து அன்னையை வழிப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
- திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகன் கோவில் வீதியில் பிரதான சாலை உள்ளது.
- மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்குவதால் முற்றிலுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது வருகிறது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகன் கோவில் வீதியில் பிரதான சாலை உள்ளது.
சுமார் 700 குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த சாலை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பழைய நீதிமன்றத்தில் இருந்து இரும்பை செல்லும் பைபாஸ் சாலைக்குச் செல்லும் குறுக்கு வழியாகவும் உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்குவதால் முற்றிலுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது வருகிறது. இதுகுறித்து முருகன் கோவில் வீதி மக்கள் திருச்சிற்றம்பலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாலையை அமைக்க கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் இந்த அடிப்படை பிரச்சினையை கருத்தில் கொண்டு திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றம் சார்பில் மண் கொட்டி சாலை சமன் செய்யப்பட்டது. ஆனால் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இங்கு சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது அந்த மண் கொட்டப்பட்ட சாலை சேரும் சகதியுமாக மாறி வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளி வாகனங்களில் சென்று வருவது வழக்கமாக இருந்த நிலையில் இந்த சாலை தற்போது சேரும் சகதியுமாக மாறிய நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளே வர மறுத்துவிட்டனர்.
மாணவர்கள் சேற்றில் நடந்து பல தூரம் சென்று பள்ளி வாகனங்களில் ஏறி பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் அங்கு குளம் போல் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஷக்காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியும் ஆகவும் இருக்கும் நிலையில் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையில் முற்றிலும் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலோ, வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாகவோ போர்க்கால அடிப்படையில் சாலையை மேம்படுத்தி இப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- புதுவை அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
- ரூ.63 லட்சத்து 52 ஆயிரத்து 50 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்கால நிவாரணமானது நடப்பு(2022) ஆண்டிற்கு 2-ம் கட்டமாக 1,155 மீனவ குடும்பங்களுக்கு ரூ.63 லட்சத்து 52 ஆயிரத்து 50 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நிவாரண தொகையானது புதுவை பகுதியைச் சேர்ந்த 919 குடும்பங்களுக்கும், காரைக்கால் பகுதியை சேர்ந்த 73 குடும்பங்களுக்கும், மாகி பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கும், மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 143 குடும்பங்களுக்கும் முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கோடியக்கரை அருகே நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அங்கு படகில் வந்தனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தனசீலன். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றார்.
இவருடன் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணியன், அய்யப்பன், சதீஷ், மணிபாலன், அபினேஷ், மாதேஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இவர்கள் கோடியக்கரை அருகே நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அங்கு படகில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
பின்னர் இரும்பு பைப், பட்டாக்கத்தி ஆகியவற்றால் காரைக்கால் மீனவர்கள் 7 பேரையும் கொடூரமாக தாக்கினர். இதனால் அவர்கள் வேதனையால் அலறி துடித்தனர். என்றாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கி விட்டு படகில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலை, செல்போன், திசை காட்டும் கருவி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் காரைக்கால் மீனவர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவசரம் அவசரமாக மீனவர்கள் படகை கரைக்கு ஓட்டி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஊருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கிராம மக்கள் மீனவர்கள் 7 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மீனவர்கள் ஒன்று திரண்டனர். இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவியது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக புதுவை மாநில அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்றனர்.
- புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருட பணி முடித்த போலீசாருக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
- அந்த புகாரின் அடிப்படையின்படி காவலர்களுக்கு உடனே பதவி உயர்வு அளிக்க ஐ.ஜி.க்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை பதவி உயர்வு வழங்காமல் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் புதுவை போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருட பணி முடித்த போலீசாருக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். மேலும் 20 வருடம் பணி முடித்தவர்களை துணை உதவி ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். மேலும் 30 வருட பணி முடித்தவர்களை உதவி ஆய்வாளராக பணி உயர்வு வழங்க வேண்டும் என்று 6-வது சம்பள கமிஷன் உத்தரவு பிறப்பித்து 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியும் 6-வது சம்பள கமிஷன் உத்தரவை அமல்படுத்தாமல் இது வரை உள்ளது வேதனை அளிக்கிறது. கிடைக்க வேண்டிய பதவி உயர்வு குறித்த நேரத்தில் வழங்கப்படாமல் உள்ளது.
மேலும் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வில்லை என்று முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் காவலர் பொதுநல இயக்கம் புகார் அளித்தது.
அந்த புகாரின் அடிப்படையின்படி காவலர்களுக்கு உடனே பதவி உயர்வு அளிக்க ஐ.ஜி.க்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இதுவரை பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் போலீசாருக்கு பதவி உயர்வு அளித்து போலீசாரின் எதிர்கால வாழ்வில் வசந்தம் வீச வேண்டும்.
மேலும் காவல்துறையில் போலீசார் சோர்வு இல்லாமல் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி 1998-ம் ஆண்டுப தொடங்கப்பட்டு 25-ம் ஆண்டை நோக்கி வெள்ளிவிழா கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகிறது.
- இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 25-ம் ஆண்டை நோக்கி வெள்ளிவிழா கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரானா கட்டுபாடுகள் காரணமாக கொண்டாடப்படாத நிலையில் தற்போது 2022-ம் ஆண்டிற்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் கல்விக்குழுமத்தின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களிடம் இதுபோன்ற சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து வாழ்க்கையில் எவ்வாறு நலமுடன் முன்னேறுவது குறித்தும் நகைச்சுவை உணர்வோடு அவரது இயல்பான பாணியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வண்ணம் பேசினார்.
இதில் 400-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரேம் சுந்தர் அனைத்து துறை ஒருங்கிணைப்பாளர்க–ளுடன் இணைந்து செய்திருந்தார்.
- உலக மருத்துவம் சார்ந்த கல்வி வல்லுநர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- பிம்ஸ் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவம் சார்ந்த படிப்பு குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
உலக மருத்துவம் சார்ந்த கல்வி வல்லுநர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் சிறப்பாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. பிம்ஸ் மருத்துவம் சார்ந்த கல்வி(அலைய்டு ஹெல்த் சயின்ஸ்) கல்லூரி டீன் டாக்டர் அலீஸ் கிஷ்கு வரவேற்றார்.
பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவம் சார் கல்லூரி முதல்வர் டாக்டர் தீபா பிலிப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் பிம்ஸ் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவம் சார்ந்த படிப்பு குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.. பின்னர் நடந்த, செவிலியர் கல்லூரி மாணவியரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, பிம்ஸ் பிஸிதெரபி கல்லூரி முதல்வர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ சார்ந்த கல்வி தொடர்பான பள்ளி முதல்வர் ஸ்வேதா நன்றி கூறினார்.
- ‘ஜெயிலர்’ படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
- புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
புதுச்சேரி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
'ஜெயிலர்' படத்தின் முதல் கட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு கடலூர்-புதுவை எல்லையான அழகியநத்தம் (கடலூர் மாவட்டம்) தென்பெண்ணையாற்று பாலம் அருகே நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுவையில் இருந்து கார் மூலம், கடலூர் சென்றபோது புதுவை எல்லை பகுதியான குருவிநத்தத்தில் அவருக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர். மேலும் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர்.
ரசிகர்களின் வரவேற்பை அடுத்து காரின் கண்ணாடியை திறந்து பார்த்து ரசிகர்களுக்கு ரஜினி கையசைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் ரஜினியை புதுவை மாநிலம் பாகூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
'ஜெயிலர்' படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது. புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் தொகுதி எம்.எல்.ஏ.வான செந்தில்குமாரிடம் கூறியுள்ளனர். அவர் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரிடம் பேசி அனுமதி பெற்று தந்துள்ளார்.

ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
இதனையடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வை ரஜினி பார்க்க விரும்பினார். படப்பிடிப்பு தளத்தில் கேரவேனில் இருந்த ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.
அப்போது சிறுவயதில் இருந்து கமல் ரசிகரான தான் 'அண்ணாமலை' படம் பார்த்த பிறகு ரஜினிக்கும் ரசிகராகி விட்டேன் என செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறினார். இதற்கு ரஜினி தனது பாணியில் சிரித்து கொண்டே நன்றி... நன்றி என கூறியுள்ளார்.
ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. சந்தித்தது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
- தெலுங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.
- தெலுங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
புதுச்சேரி :
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரட்டை ஆட்சி நடத்துவதாகவும், தெலுங்கானாவில் அவரால் மக்களை நேரடியாக சந்தித்து குறைகேட்க முடியுமா? என்றும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த துறையில் எந்த பதவியில் இருந்தாலும் மக்கள்சேவைதான் பிரதான பணி என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. புதுவை தலைமை செயலாளரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். அரசு செயலாளர்கள், கலெக்டர்கள், துறை தலைவர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் அலுவலக பணிகளை விடுத்து மக்களை சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.
இதற்கான சுற்றறிக்கை அனுப்ப கேட்டுள்ளேன். அதற்கு அவரும் இசைவு தெரிவித்துள்ளார். அதேபோல நானும் என்னை சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால் மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்புகொள்ள முடியாதவர்கள் குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதால் மக்களை சந்திக்க மாதத்தில் 2 நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன்.
இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது. மக்களை சந்திக்கும் பழக்கம் எனக்கு நெடுநாட்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். மாணவர்களையும், பெண்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன்.
நான் பதவியேற்ற முதல் வாரத்திலேயே பிரஜா தர்பார் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். இது யாருடைய, எந்த நிகழ்வின் தொடர்ச்சியும் அல்ல. நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன். தெலுங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூறியதைப்போல் அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.
அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு தெலுங்கானா மாநிலத்தில் நான் 3-ம் ஆண்டில் செய்த அன்றாட பணிகளை பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டம்.
- தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக மேலாண்மை வணிகவியல் துறை, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் பட்டய (ஏசிசிஏ) சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர் கே.தரணிக்கரசு, தேசிய கல்விக் கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏ.சி.சி.ஏ. கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏ.சி.சி.ஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் நரேந்திர மோடி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட உத்தரவிட்டுள்ளார்.
- பல இடங்களில் வீடுகள் இருந்தாலும் கழிவறைகள் இல்லை. மனைப்பட்டா பல கிராமங்களில் இதுவரை வழங்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட உத்தரவிட்டுள்ளார், அதன் அடிப்படையில் கடந்த 1 மாத காலமாக 50 தலித் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம்.
இந்த கிராமங்கள் அனைத்தும் 50 ஆண்டுக்கு முன் இருந்த நிலையிலேயே இப்போதும் உள்ளது. காங். ஆட்சி காலத்தில் அவர்களை வஞ்சித்துள்ளனர், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் முறை–கேடுகள் நடைபெற்றுள்ளது.
பல இடங்களில் வீடுகள் இருந்தாலும் கழிவறைகள் இல்லை. மனைப்பட்டா பல கிராமங்களில் இதுவரை வழங்கவில்லை. குடிநீர் சாலை மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
அவர்களது நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்காக ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதியில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக 2016 லிருந்து 2021 வரை கடந்த காங்- தி.மு.க. ஆட்சியில் சிறப்பு கூறு நிதியை செலவிட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அம்மக்களுக்கு சமூக அநீதி நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்வேறு கட்சிகள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.
சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்றது. எங்குமே மதக் கலவரம், சாதி கலவரம் இல்லாத நிலையில் இதுபோன்ற செயல்களில் எதிர்கட்சிகள் ஈடுபடுகின்றனர், இந்தியை திணிப்பது பா.ஜனதா கொள்கை அல்ல. நான் இந்தி தெரியாதவன் தான். ஆனால் நீண்ட காலமாக பா.ஜனதா மாநில தலைவராக உள்ளேன். பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வடமாநிலங்களில் இருந்து வந்து அரசியல் செய்யவில்லை.
இதனால் மொழி குறித்து நடத்தப்படும் போராட்டம் தேவையற்றது. தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகூடங்களில் இந்தி இல்லையா? மோடி இந்தியை தாய் மொழியாக கொண்டவர் அல்ல, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சும் புதிய மதுபான ஆலைகள் வரக்கூடாது என்பதுதான் பா.ஜனதா கொள்கை, அதனை பா.ஜனதா எதிர்க்கும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 110 கிராம் கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தார்.
புதுச்சேரி:
ரெட்டியார் பாளையம்-சாரம் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.
அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 110 கிராம் கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தார்.
இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆதிச்சநல்லூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த குணசீலன் (21) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் சாரம் வெங்கடேஸ்வரா நகர் ஆட்டோ ஸ்டேண்டு பகுதியில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார் அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அந்த வாலிபர் 24 பாக்கெட்டுகள் கொண்ட 180 கிராம் கஞ்சா வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்ற அப்பு (25) என்பதும் இவருடன் சண்முகாபுரத்தை சேர்ந்த மணி மற்றும் சாமி பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் ஆகியோரும் சேர்ந்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மணி மற்றும் அரிசந்திரன் ஆகியோரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட பிரபு ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.






