என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.
    X

    ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.

    • ‘ஜெயிலர்’ படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
    • புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.

    'ஜெயிலர்' படத்தின் முதல் கட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு கடலூர்-புதுவை எல்லையான அழகியநத்தம் (கடலூர் மாவட்டம்) தென்பெண்ணையாற்று பாலம் அருகே நடைபெற்று வருகிறது.

    இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுவையில் இருந்து கார் மூலம், கடலூர் சென்றபோது புதுவை எல்லை பகுதியான குருவிநத்தத்தில் அவருக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர். மேலும் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர்.

    ரசிகர்களின் வரவேற்பை அடுத்து காரின் கண்ணாடியை திறந்து பார்த்து ரசிகர்களுக்கு ரஜினி கையசைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்த நிலையில் ரஜினியை புதுவை மாநிலம் பாகூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    'ஜெயிலர்' படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது. புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் தொகுதி எம்.எல்.ஏ.வான செந்தில்குமாரிடம் கூறியுள்ளனர். அவர் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரிடம் பேசி அனுமதி பெற்று தந்துள்ளார்.


    ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    இதனையடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வை ரஜினி பார்க்க விரும்பினார். படப்பிடிப்பு தளத்தில் கேரவேனில் இருந்த ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.

    அப்போது சிறுவயதில் இருந்து கமல் ரசிகரான தான் 'அண்ணாமலை' படம் பார்த்த பிறகு ரஜினிக்கும் ரசிகராகி விட்டேன் என செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறினார். இதற்கு ரஜினி தனது பாணியில் சிரித்து கொண்டே நன்றி... நன்றி என கூறியுள்ளார்.

    ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. சந்தித்தது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

    Next Story
    ×