என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர்.

    புதுச்சேரி:

    டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் ஜி.என்.பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது29). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் புதுவை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அரியூர் அனந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சை நிறுத்தி கண்டக்டர் மதன்ராஜியிடம் எங்களது பஸ் டைமில் எப்படி நீ பஸ்சில் பயணிகளை ஏற்றி செல்லலாம் என கூறி தகராறு செய்தனர்.

    மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர். அதோடு இனிமேல் எங்களது பஸ் டைமில் தலையிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலில் காயமடைந்த மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற மதன்ராஜ் பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • வில்லியனூர் அருகே நோய் கொடுமையால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் வேலாயுதத்துக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே நோய் கொடுமையால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே சிவராந்தகம் காலனி மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது50). இவருக்கு சுகுணா என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வேலாயுதம் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    மேலும் வேலாயுதத்துக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதனால் அவர் கடந்த 5 ஆண்டுகளாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சர்க்கரை நோய் குணமாகவில்லை. அவருக்கு 2 கால் பாதத்திலும் சர்க்கரை நோய் காரணமாக காயம் இருந்து வந்தது. இதனால் வேலாயுதம் கடும் அவதியடைந்து வந்தார்.

    இந்த நிலையில் நோய் கொடுமையால் அவதியடைவதை விட இறந்து போகலாம் என அடிக்கடி கூறி வந்தார்.

    சம்பவத்தன்று வேலாயுதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி சுகுணா வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் வேலாயுதம் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி சுகுணா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உப்பளம் தொகுதி நேதாஜிநகர் 1-ல் அசோகன் வீதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தனர்.
    • இதை தொடர்ந்து 500கி.லோ வாட் கொண்ட புதிய மின் தாங்கி உடனடியாக பொருத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி நேதாஜிநகர் 1-ல் அசோகன் வீதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தனர். இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் மின் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.

    இதை தொடர்ந்து 500கி.லோ வாட் கொண்ட புதிய மின் தாங்கி உடனடியாக பொருத்தப்பட்டது. மின் துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சுரேஷ், ஆகியோரது முயற்சியால் புதிய மின் தாங்கி பொருத்தப்பட்டது.

    இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    • பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை.
    • பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர் பலியை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, முதல் நாளான 1-ந்தேதி மழை காரணமாக ஹெல்மெட் அணியாதவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

    ஆனால் நேற்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, எதிர்கட்சி தலைவர் சிவா முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் ஹெல்மெட் அணிய கட்டாயப்படுத்தி, அபராதம் விதிக்க கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.

    இந்த நிலையில், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு, மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கினர்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் இனிப்பு வழங்கி, ஹெல்மெட்டை அவர்களாக முன்வந்து அணியுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஒலிபெருக்கி மூலமும் ஹெல்மெட் அணியுமாறு வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:- பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை. பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும். போலீசாரின் முயற்சியால் தற்போது 30 சதவிகிதம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர் இது ஒரு வெற்றியாகும்.

    சாலை விபத்துக்களில் அதிக உயிர்பலி தலைகவசம் அணியாததால் தான் ஏற்படுகிறது. நேரு வீதி இருவழி பார்க்கிங் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய முறைப்படி ஒருவழி பார்க்கிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தற்போது சீராகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

    • எங்களுடைய கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்தபோது எண்ணற்ற உயிர் காக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.
    • புதுவை மாநிலத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவளகுப்பம் மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்.சி. (தர சான்று) எடுக்காமல் 8 மாதம் வரை ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்தபோது எண்ணற்ற உயிர் காக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.

    அவற்றில் ஒன்று இந்திய அளவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து என்.ஆர்.எச்.எம். மூலம் நடை முறைப்படுத்தினார். 108 ஆம்புலன்சை பராமரிப்பது அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி என்.ஆர்.எச்.எம். மூலம் மாநில அரசு கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    புதுவை மாநிலத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவளகுப்பம் மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்.சி. (தர சான்று) எடுக்காமல் 8 மாதம் வரை ஓடியது. இந்த விபரீத நிலை உணர்ந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே 2 மாதமாக 108 ஆம்புலன்ஸ் பராமரிப்பு இன்றி ஓரங்கட்டப்பட்டுள்ளது.

    மேலும் கரிக்கலாம்பாக்கம், காட்டேரிக்குப்பம் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இதே காரணத்துக்காக ஓரங்கட்டப்பட்டு உள்ளது. இதனை புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது உடனடியாக அந்த வாகனங்களை

    எப்.சி. (தரச்சான்று)எடுத்து பயன்படுத்த வேண்டும்.

    எப்.சி. எடுப்பதற்கு நிதி இல்லை என்று சொன்னால் அந்த நிதி செலவை பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்க தயாராக உள்ளது.

    108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கு உடனடியாக கொடுக்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்கி சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் எப்.சி. எடுத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப-வடிவ வாய்க்கால் மழைக்காலங்களில் தொட ர்ச்சியாக அடைப்புகள் ஏற்பட்டு அங்குள்ள வீடுகளில் அடிக்கடி தண்ணீர் நிரம்பி விடும்.
    • ரூ.10 லட்சம் செலவில் ப-வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப-வடிவ வாய்க்கால் மழைக்காலங்களில் தொட ர்ச்சியாக அடைப்புகள் ஏற்பட்டு அங்குள்ள வீடுகளில் அடிக்கடி தண்ணீர் நிரம்பி விடும்.

    இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் சட்டமன்ற நிதியின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் ப-வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர் மணிகண்டன், மணிமாறன், காலப்பன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • அரசு பணியிடங்கள் குறித்த அரங்கத்தையும் திறந்து வைத்து நோட்டீசை வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை விடுதலை நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அரசு பணியிடங்கள் குறித்த அரங்கத்தையும் திறந்து வைத்து நோட்டீசை வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசின் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட உள்ள பணியிடங்கள், பணிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

    வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் 28, எம்.டி.எஸ். 7 பணியிடங்களுக்கு வருகிற டிசம்பர் 12-ந் தேதி முதலும், காவல்துறையில் கான்ஸ்டபிள் 253 பணிக்கு வருகிற 28-ந் தேதி, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 60 பேருக்கு வருகிற 10-ந் தேதி, டிரைவர் 26 பேர் பணிக்கு வருகிற 21-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

    தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி 5, தீயணைப்பு வீரர் 58, தீயணைப்பு நிலைய டிரைவர் 12 பேர் பணிக்கு வருகிற 7-ந் தேதி முதலும், வேளாண்துறையில் வேளாண் அதிகாரி 23, வேளாண் அதிகாரி (அக்ரி என்ஜினியர்) 5, வேளாண் அதிகாரி(புவியியல்) 5 பணிக்கு வருகிற 21-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

    தொழில்துறையில் தொழில்நுட்ப அதிகாரி 19 பணிக்கு வருகிற 16-ந் தேதி முதலும், போக்குவரத்து துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி பொறியாளர் 9, அலமாக்க உதவியாளர் 30 பேர் பணிக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் பீல்டு சூபர்வைசர் 27, புள்ளியியல் அதிகாரி 26 பேர் பணிக்கு வருகிற 15-ந் தேதி முதலும்,. நில அளவைத்துறையில் வரைபடவியலாளர் 12, பீல்டு சர்வேயர் 27, பீல்டு உதவியாளர் 31 பணிக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

    கணக்கு மற்றும் கருவூலத்துறையில் ஸ்டோர் கீப்பர் 55 பணிக்கு வருகிற 30-ந் தேதி முதலும் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் திட்ட உதவியாளர் 4, ஆய்வு பகுப்பாளர் 5 பணிக்கு வருகிற 23-ந் தேதி முதலும்,. சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப உதவியாளர் 13 பணிக்கு வருகிற 25-ந் தேதி, பிசியோதெரபி 3 பணிக்கு வருகிற 20-ந் தேதி, சமூக சேவை 21 பணிக்கு வருகிற 21-ந் தேதி விண்ணப்பிக்கலாம்.

    பார்மசிஸ்ட் 38 பேர் பணிக்கு, ஏ.என்.எம்., மகப்பேறு உதவியாளர் 49 பேர் பணிக்கு, ஈ.சி.ஜி. தொழில்நுட்பம் 6 பேர் பணிக்கு டிசம்பர் 5-ந் தேதி, அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர் 33 பணிக்கு வருகிற 10-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

    பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் எல்.டி.சி. 165 பணியிடங்களுக்கு வருகிற 10-ந் தேதி முதலும், சுற்றுலாத்துறை உதவியாளர் 5 பணியிடத்துக்கு வருகிற 24-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் இதற்கான அறிவிப்பை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    இந்த அறிவிப்பு புதுவை இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் சிறப்பு பயிற்சி பெற தனியார் பயிற்சி மையங்களை நாடி வருகின்றனர். உதவியாளர் பணி நேரடி நியமனத்துக்கு அமைச்சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வில்லை.

    • புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள வலம்புரி வித்யா விநாயகர் கோவில் 34 ஆண்டுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் பல்லைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள வலம்புரி வித்யா விநாயகர் கோவில் 34 ஆண்டுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மண்டலாபிஷேக விழா நடந்தது.இதன் நிறைவு விழா கணபதி ஹோமம், யாக வேள்வி, கடம் புறப்பாடு, சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது. துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பிரசாதம் வழங்கினார்.

    விழாவில் பல்லைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

    • புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.
    • ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.

    பிறகு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொம்யூன் மேலாளர் குப்பன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், உதவிப்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப்பொறியாளர்கள் ரங்கமன்னார், சத்திய நாராயணன், கருத்தையன் மற்றும் ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • மோதலை தடுக்க முயன்ற வக்கீலை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அங்கு மணிகண்டனின் கட்சிக்காரரான சசியுடன் மேலும் 3 நபர்கள் இருந்தனர்.

    புதுச்சேரி:

    மோதலை தடுக்க முயன்ற வக்கீலை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் கவியரசன் (வயது33). இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கவியரசன் கோர்ட்டில் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட தயாரான போது அவரது நண்பரும், வக்கீலுமான மணிகண்டன் என்பவர் கோர்ட்டு எதிரே ரோடியர் மில் திடலில் தனது கட்சிக்காரரை சந்தித்து பேசிவிட்டு செல்லலாம் என்று அழைத்ததின் பேரில் மணிகண்டனுடன் கவியரசன் ரோடியர் மில் திடலுக்கு சென்றார்.

    அங்கு மணிகண்டனின் கட்சிக்காரரான சசியுடன் மேலும் 3 நபர்கள் இருந்தனர். அவர்களிடம் மணிகண்டன் வழக்கு சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது மணிகண்ட னுக்கும் அவரது கட்சிக்காரர் சசிக்கும் பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு நடக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

    மேலும் மணிகண்டனை சசி தாக்க முயன்றார். இதையடுத்து கவியரசன் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த சசி மற்றும் அவரது கூட்டாளிகள் வக்கீலுக்கு வக்கீல் ஆதரவாக பேசுகிறாயா? என கூறி கவியரசனை கையால் தாக்கினர்.

    மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து கவியரசனை தலையில் சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சசி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த கவியரசனை அவரது நண்பர் மணிகண்டன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.

    பின்னர் இதுகுறித்து கவியரசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • இந்தநிலையில் ஆனந்த் அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    திருக்கனூர் அருகே சந்தை புதுக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது35). டிரைவர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனந்த்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் ஆனந்த் அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆனந்த் மயங்கி சாய்ந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரில் வானூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி ஆனந்த் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது உறவினர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×