என் மலர்
புதுச்சேரி
- சங்கர வித்யாஸ்ரம் மேல் நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கீதா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நீர்குடத்தை வரவேற்று கொண்டாடினர்.
புதுச்சேரி:
புதுவை ஒதியம்பட்டில் அமைந்துள்ள சங்கர வித்யாஸ்ரம் மேல் நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்கரஹாரம் அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து நீர்குடம் சுமந்து சங்கர வித்யாஸ்ரம் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கீதா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நீர்குடத்தை வரவேற்று கொண்டாடினர்.
நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை சவுந்தரி தொகுத்து வழங்கினார். புதுவை அரபிந்தோ சொசைட்டியின் மருத்துவ மற்றும் மனநல பணியாளர் அருண்பிரவீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
முடிவில் தண்ணீர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள்உறுதிமொழி ஏற்றனர்.
- மனைவி இறந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
- மனஉளைச்சல் ஏற்பட்டு மது பழக்கத்துக்கு ஆளானார். வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார்.
புதுச்சேரி:
மனைவி இறந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது36). இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலகுறைவால் சரண்யா இறந்து போனார். மனைவி இறந்து போனது முதல் கோபிநாத் மனவருத்தத்தில் சோகத்துடன் இருந்து வந்தார்.
மேலும் மனஉளைச்சல் ஏற்பட்டு மது பழக்கத்துக்கு ஆளானார். வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார். இதனால் மனைவி இறந்த சோகத்தை மறக்க கோபிநாத் தனது குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்து விட்டு புதுவை வந்தார்.
புதுவையில் கூலி வேலை செய்து அந்த பணத்தில் மது குடித்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் கோபிநாத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 1½ மாதத்துக்கு முன்பு கோபிநாத் சொந்த ஊருக்கு சென்று தாய் மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் புதுவை வந்தார்.
இந்தநிலையில் நேற்று லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் கோபிநாத் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஒரு கடை முன்பு தூங்கினார். அப்போது நாக்கு வறண்டு அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் கோபிநாத்தின் தாய் சங்கரிக்கு தகவல் தெரிவித்த னர். சங்கரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் முதியோர், விதவை, முதிர் கன்னிகள் ஆகியோருக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்க
வேலு, கலை , இலக்கிய பிரிவு சந்திரன், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க புதுவை காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரவுடிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுள்ளன.
இதற்கிடையே புதுவை மாநிலத்தையொட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் புதுவையில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக புதுவை போலீசாருக்கு தகவல் வந்தது.
மேலும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட ரவுடிகளும் அவரவர் வீடுகளில் பதுங்கியிருப்பதாக புதுவை போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி புதுவை போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். ரவுடிகளின் வீடுகளில் போலீசாரின் அதிரடி சோதனையால் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
- பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
- முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை கவர்னராக தமிழிசை பதவியேற்று 2 ஆண்டினை நேற்றுடன் நிறைவு செய்தார்.
அதனையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜ் நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பதிலுக்கு கவர்னர் தமிழிசை தனது 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய யுனைடடு பார் புராகிரஸ் என்ற ஆங்கில நூலை பரிசாக முதல்-அமைச்சருக்கு வழங்கினார்.
பின்னர் இருவரும் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். மேலும் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக புதுவை கவர்னராக பதவியேற்று 2 ஆண்டை நிறைவு செய்ததையொட்டி கவர்னர் தமிழிசை மணக்குள விநாயாகர் கோவிலில் வழிபட்டார்.
- புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
- கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
புதுவை சாமிபிள்ளை தோட்டத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டால் தினமும் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பதால் புதிதாக மதுக்கடை திறக்ககூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் சோசலிஸ்டு கம்யூனிஸ் வக்கீல் லெனின்துரை, சுப்பையா,
தமிழர் களம் அழகர், நாம் தமிழர் ரமேஷ், சாமிபிள்ளை தோட்டம் போராட்டக்குழு தலைவர் பார்த்தீபன் உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கேட்டனர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்கவில்லை. இதனால்
போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 30 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மீனவ பஞ்சாயத்தாருக்கு தட்சணாமூர்த்தி குடும்பத்தினர் மரியாதை கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- ஒரு வாரத்துக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவரின் குடும்பமும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் பரவுகிறது.
புதுச்சேரி:
புதுவை, முத்தியால்பேட்டை, சோலை நகர், செங்கேணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி (37). மீனவரான இவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
சமீபகாலமாக தட்சணாமூர்த்தி மீன்பிடிக்க செல்லாமல் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருதரப்புக்கு இடையே மோதல் நடந்தது. இந்த மோதல் விவகாரத்தில் மீனவ பஞ்சாயத்தாருக்கு தட்சணாமூர்த்தி குடும்பத்தினர் மரியாதை கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சில மாதங்களாக தட்சணாமூர்த்தி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பஞ்சாயத்தினர் தண்டோரா போட்டு அறிவிப்பு வெளியிட்டதாக. கூறப்படுகிறது.
இதனால் ஊரில் இருப்பவர்கள் யாரும் தட்சணாமூர்த்தி குடும்பத்தினரிடம் பேசாமல் புறக்கணித்தனர் . இதன் காரணமாக தட்சணாமூர்த்தி அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்ய முடியாமலும், மீன்பிடி தொழிலுக்கு செல்ல செய்ய முடியாமலும் தட்சிணாமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளனர்.
இதற்கிடையே தட்சணாமூர்த்தி வீட்டின் மீது இரவில் கல்வீசுதல், மின்சாரம் துண்டிப்பு, ஜே.சி.பி. மூலம் பள்ளம் தோண்டுதல் என அடுத்தடுத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த வாரம் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் தட்சிணாமூர்த்தி முறையிட்டார். இதையடுத்து அப்பகுதி பஞ்சாயத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தட்சிணாமூர்த்தி கூறிய குற்றச்சாட்டினை பஞ்சாயத்தார் மறுக்கவே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிகிறது. அதன்பிறகும் தட்சிணாமூர்த்தி குடும்பத்தினருடன் அப்பகுதியினர் சுமூக நிலையை தொடரவில்லை.
மேலும் மன்னிப்பு கேட்குமாறு சிலரால் மிரட்டப்படவே தட்சணா மூர்த்தி குடும்பத்தினர் மனவேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையே ஒரு வாரத்துக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவரின் குடும்பமும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் பரவுகிறது.
அந்த மீனவரும் தனது மனைவி, குழந்தைகளுடன் அங்கு வசிக்கும் நிலையில் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
- மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
செயற்கைக்கோளின் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்க பயிற்சியை அப்துல்கலாம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
புதுவை அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கணினி மற்றும் எல்.இ.டி. ஸ்கிரீன் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் செய்யப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆசிரியர்களும் மாணவியரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மின் கசிவு, தீ விபத்தையும் தடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. மின்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள் நேரில் வந்து மின் இணைப்பை சரி செய்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது.
- கலால்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
புதுவை சாமிபிள்ளை தோட்டத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டால் தினமும் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பதால் புதிதாக மதுக்கடை திறக்ககூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் இன்று கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
- புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் 33 -வது வார்டு, ஒட்டம்பாளையம் தண்ணீர் தொட்டி வீதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா புதிய சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில ஆதிதிராவிட அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், தர்மராஜ், ஜெகன், ஜனா, கே.வி.ஆர். ஏழுமலை, ராஜேந்திரன், செல்வநாதன், சுப்பிரமணி, மிலிட்டரி முருகன், வரதன், கதிரவன், வாசு, செல்வம், அருண், நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம், மணவெளி ஆர்.கே. நகரில் அரசு பள்ளி அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த அரவிந்தன்(வயது20), உருவைாறு புதுநகரை சேர்ந்தவர் நாகபிரபு(21) மற்றும் தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்த அனந்தராமன்(22) என்பதும். இவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
- ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.
புதுச்சேரி:
கோட்டகுப்பத்தை அடுத்த பொம்மையார்பாளையத்தில் வானூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே.ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட 43 பூத்துகளில் உடனடியாக கமிட்டி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.
வானூர் தொகுதியில் பா.ஜனதா வளர்ந்து வரும் நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் வந்து இணையும் உறுப்பினர்களுக்கு சரியான பதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி தலைவர் குட்டியாண்டி, மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன், முருகன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






