என் மலர்
புதுச்சேரி
- புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் மடத்தில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
- தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் ஓதி வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் மடத்தில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
புதுவை ஆதீனம் சாய் சித்தர் சந்திரசேகர சாமிகள் முன்னிலையில் சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரர் பெருமானுக்கு 4 கால பூஜை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.
தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் ஓதி வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் நாகராஜ், ராஜ்குமார், சிவகந்தன், சிவகிரி, சாய்மணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர், வெளிமாநிலங்களை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி (காந்தி சில்ப் பஜார்- 2023) திறப்பு விழா நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து
வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில் கைத்திறன் சந்தைப்படுத்துதல் மற்றும் சேவை மையங்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்ட 100 கைவினை கலைஞர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் நூல் தையல் வேலைகள், கண் ணாடி நகைகள், தரை விரிப்புகள், வடமாநில கலை உலோக பொருட்கள், கலைநயம் மிக்க கல் படைப்புகள், அச்சிடப்பட்ட துணி வகைகள், பீகார் ஓவியங்கள், குஜராத் புடவை வகைகள், பட்ட சித்திர ஓவியங்கள், ஒடிசா
வெள்ளி நகைகள், மரச்சிற்பங்கள், காகித கூழ் பொம்மைகள், தஞ்சாவூர்-மைசூர் ஓவியம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை கடற்கரைக்கு வந்திருந்த உள்ளூர், வெளிமாநிலங்களை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 0 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது.
- தேர்தலில் போட்டியிடும் தொகுதி நிர்வாகிகள் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் ஆணையாளரால் ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
15-வது தி.மு.க. பொதுத்தேர்தல் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதில் முதல் கட்டமாக கிளைக் கழகத் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக் தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலை தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு அவைத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் (3 பேர்), பிரதிநிதி (2 பேர்), செயற்குழு உறுப்பினர் (6 பேர்) என மொத்தம் 14 பொறுப்புகளுக்கான தொகுதி நிர்வாகித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுக்கல் கட்சி தலைமையால் வழங்கப்பட்டன.
தேர்தலில் போட்டியிடும் தொகுதி நிர்வாகிகள் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், இலாசுப்பேட்டை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார் பேட்டை, அரியாங் குப்பம், மணவௌி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய 22 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., முன்னிலையில், தலைமைக் கட்சித் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளர் பி.டி.சி. ஜி. செல்வராஜ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் ஆணையாளரால் ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது.
இதில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத்,. செந்தில்குமார், மாநில துணை அமைப்பாளர்கள் சண். குமரவேல், ஏ.கே. குமார், குணாதிலீபன், எஸ்.எஸ். செந்தில்குமார், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் கே.எம்.பி. லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் எஸ். கோபால், வி. கார்த்திகேயன், அ. முகிலன், சன். சண்முகம், ப. வடிவேல், கோபால கிருஷ்ணன், டாக்டர் நித்திஷ், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
திருபுவனை அருகே கொத்தபுரி நந்தம் சொசைட்டி வீதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது57). இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அரிகிருஷ்ணன் திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து கடந்த 2019-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அரிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்தநிலையில் வீட்டில் இருந்த அரிகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திடீர் மாரடைப்பால் அரிகிருஷ்ணன் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் சரவணசாமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருபுவனை அருகே கணவரை விட்டு பிரிந்த வேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கணவரை விட்டு பிரிந்த வேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் வி.பி.சி. நகரை சேர்ந்த வர் கலியமூர்த்தி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் கலைச்செல்வி (வயது37).
இவருக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளங்கோ என்பவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால்கலைச்செல்வி கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கலைச்செல்வி வேலை செய்து வந்தார். இதற்கிடையே கணவரை விட்டு தனிமையில் வசித்து வந்ததால் வேதனையடைந்து கலைச்செல்வி 3 முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவ்வப்போது கலைச்செல்வியை அவரது தாயார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி கணவரை விட்டு பிரிந்து சென்றதை எண்ணி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்காமல் கலைச்செல்வி அலறல் சத்தம் போட்டார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்து கலைச்செல்வியை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கலைச்செல்வியை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தாய் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காசியை போல் திருக்காஞ்சியிலும் கங்கா ஆரத்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது. இதற்காக சங்கரா பரணி ஆற்றில் படித்துறைகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முதல் முறையாக வருகிற ஏப்ரல் மாதம் 22-ந் தேதி மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காசியை போல் திருக்காஞ்சியிலும் கங்கா ஆரத்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி புஷ்கரணி விழா நடைபெறும் வரை வாரந்தோறும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது. இதற்காக சங்கராபரணி ஆற்றில் படித்துறைகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர்.
கங்கா ஆரத்தி விழாவை சிறப்பிக்கும் வகையில் கங்கை நதீஸ்வரர் கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் எழுதிய பாடலுக்கு கொங்கணவர் கலைக்கூடம் இசைகலைஞர் கலைதாசன் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடலின் குறுந்தகடு (சி.டி.) வெளியீட்டு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. அதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட, இந்து அறநிலைத்துறை செயலர் உதயகுமார் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பாடலின் சிறப்புகளையும், பாடல் குறித்த முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீதாராமன், செயல் அதிகாரி சதீஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருக்காஞ்சி சங்கராபரணி கங்கா ஆரத்தி பாடல் குறுந்தகட்டை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டபோது எடுத்தபடம்.
- அமலோற்பவம் மேல்நிலை பள்ளியில் இருந்து 455 படைப்புகளும், லூர்து அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளி 336 படைப்புகள் இடம் பெற்றன.
- கலை, அறிவியல், திறன் கல்வி ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறந்த 8 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டினர்.
புச்சேரி:
புதுவை அமலோற்பவம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற கண்காட்சி அமலோற்பவம் ஆரம்ப பள்ளி வளாகத்திலும், கொம்பாக்கம் அமலோற்பவம் லூர்து அகாதெமி வளாகத்திலும் நடைபெற்றது.
இதில் அமலோற்பவம் மேல்நிலை பள்ளியில் இருந்து 455 படைப்புகளும், லூர்து அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளி 336 படைப்புகள் இடம் பெற்றன. கண்காட்சியை பள்ளி முதுநிலை முதல்வர் லூர்துசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அறிவியல் படைப்புகள் பண்ணை வளர்ப்பு திட்டம், ஆட்டோமெட்டிக் தெருவிளக்கு, சென்சார் உதவியோடு குப்பைகளை சுத்தப்படுத்துதல், மழைக்காலங்களில் வீட்டுக்குள் நீர் புகாமல் மிதக்கும் வீடுகளாக அமைக்கும் தொழில்நுட்பம், காகித அட்டைகளை கொண்ட ரோபோடிக் வாக்கும் கிளீனர் உள்பட பல இருந்தன.
புதுவையில் வேறெந்த பள்ளியில் இல்லாத வகையில் மாணவர்களின் பன்முக திறமையை வளர்க்கும் திறன்சார் கல்வி படைப்புகளும் இருந்தது. 9 மணி முதல் 5 மணி வரை நடந்த கண்காட்சியை பொதுமக்கள், பெற்றோர்கள் பலர் கண்டுகளித்தனர்.
இதில், கலை, அறிவியல், திறன் கல்வி ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறந்த 8 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டினர்.
இதில் சிறந்த வெற்றியாளராக தேர்வாகுவோருக்கு விரைவில் வெள்ளி பதக்கங்கள் வழங்கபடவுள்ளது.
- மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஜான்பால் நகர் உள்ளது. இப்பகுதியில் ஒரு மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்த மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவது உறுதியானது. மனமகிழ் மன்றத்தில் போலீசார் நுழைவது தெரிந்தவுடனே அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதையடுத்து மனமகிழ் மன்ற உரிமையாளர் அருள் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் என மொத்தம் 25 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து 23 செல்போன்கள், 13 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். கைதான நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுவையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய நபர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெறுகிறது.
- முக்கிய வீதிகள் வழியாக கரகம் விதி உலா வந்து கோவிலை வந்தடைந்தது.
புதுச்சேரி:
பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் இருந்து புனித நீர் திரட்டி கரகம் புறப்பாடு நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக கரகம் விதி உலா வந்து கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆதரனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் முதல் மயான கொள்ளை உற்சவம் நடை பெற்றது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
- இவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மறு வாழ்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. புதுவையிலும் பல அரசு மற்றும் தனியார் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.
இவற்றில் சில காப்பகங்கள் அனுமதியின்றி லாப நோக்கோடு செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப்பவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டாலும், முதியோருக்கு உரிய சிகிச்சை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
புதுவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டு மீட்கப்படும் சிறுமிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்ட இளம்பெண்கள் பலர் இதுபோன்ற காப்பகங்களில்தான் தங்க வைக்கப்படுகி ன்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மறு வாழ்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
புதுவையில் ஒவ்வொரு சிக்னல்களிலும் பச்சிளம் குழந்தைகளுடன் யாசகம் பெற இளம் பெண்களும், முதியோரும் கையேந்தி நிற்பது மிகவும் கொடுமையானது.புதுவை மாநிலத்தில் உள்ள காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆசிரமங்கள், சிறுவர் இல்லங்களை அரசு அதிகாரிகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை அரசு காப்பகங்களில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.
சிக்னல்தோறும் யாசகம் பெறுவோரை தடுத்து நிறுத்தி புதுவையை சீர்மிகு நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் காப்பகம், ஆசிரமம், இல்லங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஆதரவற்றோருக்கு தேவை யான அரவணைப்பை அளிக்க வேண்டும்
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- புதுவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 பிப்ரவரி 19-ந் தேதி காவல் துறையினரால் வக்கீல்கள் தாக்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி வருவதால், தமிழகம் மற்றும் புதுவையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, புதுவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல்பக்தவச்சலம் மற்றும் 15 நீதிமன்றங்களை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இதில் கலந்து கொண்டனர்.
- மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது அங்கு கத்தியுடன் நின்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகரில் ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற பாம் மணி(வயது34) என்பதும், ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.






