என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28-ந்தே தி நடக்கிறது.
    • விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. டாக்டர் அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஜவகர்லால் நேரு அரங்கில் இந்த பட்டமளிப்பு விழா நடக்கிறது.

    விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பட்டங்களை வழங்குகிறார்.

    விழாவில் 21 ஆயிரத்து 208 புதுவை பல்கலைக்கழக மற்றும் இணைப்பு கல்லூரி மாணவர்கள், 10 ஆயிரத்து 649 தொலை தூர கல்வி மாணவர்கள் என 31 ஆயிரத்து 857 மாணவர்கள் பட்டங்களை பெறுகிறார்கள்.

    இதில் 242 ஆராய்ச்சி மாணவர்களும் பல்வேறு பட்டப்பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்கள் பெற உள்ள 187 மாணவர்களும் அடங்குவார்கள்.

    பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது. துணை ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக ஜெகதீப்தன்கர் புதுவை வருவதையொட்டி அரசு சார்பிலான நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    • புதுவை கட்டுமான நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் என்ஜினீயர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    • முதல் கட்டமாக ரூ.50 லட்சம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கட்டுமான நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் என்ஜினீயர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தத்தெடுத்த ரூபன் திட்டத்தின் கீழ் மாதிரி கொம்யூன்களாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பாகூர் மற்றும் திருநள்ளாறு கொம்யூனில் பொதுப்பணித்துறை, சுகாதார கோட்டம், கட்டிடம் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டத்தின் சார்பில் கடந்த ஆண்டு பாகூர் பஸ் நிலையம் மற்றும் 2 ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றது.

    கட்டுமான நலச்சங்க ஒப்பந்ததாரர்கள் இந்த பணிகளை செய்து வந்தனர். இதற்காக முதல் கட்டமாக ரூ.50 லட்சம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த பணம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை.

    இதனால் இந்த பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க டி.ஆர்.டி.ஏ. காலதாமதம் செய்து வருவதால் இந்த பணிகள் அனைத்தும் கைவிடப்படும் நிலையில் உள்ளது.

    இதுபற்றி ஒப்பந்த தாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து பேசியும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஒப்பந்ததா ரர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலும் ஏற்பட்டது.

    எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு பிரசவ மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிப்பது.
    • காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், எக்டருக்கு ரூ.37 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக்கூட்டம் உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை புதுவை கட்சி தலைமை அலுவலகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு, இலவச வேட்டி சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப் பெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷன், மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.

    ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு பிரசவ மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிப்பது.

    ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக முதல்- அமைச்சர் அறிவிக்க வலியுறுத்துவது அரசு, அரசு சார்பு, கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை அரசு வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தல், ரேஷன்கடை திறப்பு, பஞ்சாலைகள் திறப்பு என தேர்தல் அறிவிப்புகளை புதுவை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், எக்டருக்கு ரூ.37 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் நடராஜன்,, மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள், எம்.ஏ.கே. கருணாநிதி, நாகமணி,காந்தி, கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம்,

    மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,நகர தலைவர் கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மதுவில் கிருமிநாசினி கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அப்போது தந்தை மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தனது சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    மதுவில் கிருமிநாசினி கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை மறைமலை அடிகள் சாலை அருந்ததி நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது90). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்களும் நெல்லித்தோப்பில் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர்.

    மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனிமையில் வசித்து வந்தார். அவருக்கு தினமும் அவரது மகன்கள் மற்றும் மகள் சாப்பாடு கொடுத்து வந்தனர்.

    ஆனாலும் தனிமையில் வசித்து வந்ததால் கிருஷ்ணமூர்த்தி விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று மதுவில் கிருமி நாசினி கலந்து குடித்தார்.

    இதில் அவரது மகள் செல்வி சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தை மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தனது சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பாரதிதெருவை சேர்ந்தவர் ஞானமூர்த்தி(66). இவருக்கு ராஜன் என்ற மனைவியும், பிரேம்சுந்தர் மற்றும் விஜய்இளங்கோ ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராஜன் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயர் கல்லூரியில் பேராசிரியராகவும், விஜய்இளங்கோ அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அதிகாலை படுக்கை அறையில் இருந்து எழுந்து நடந்து சென்ற போது ஞானமூர்த்தி தரையில் வழுக்கி விழுந்தார்.

    உடனே அவரது மருமகளான டாக்டர் நளினி ஞானமூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஞான மூர்த்தியை அனுமதித்தனர்.

    அதன்பின்பு மேல் சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஞானமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் பிரேம்சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொசு ஒழிப்புத்துறை சார்பில் வாகனம் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
    • தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான், மோரீஸ் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி குட்பட்ட வாணரப்பேட்டை, தாவீது பேட், எல்லையம்மன் தோப்பு, காளியம்மன் தோப்பு மற்றும் டாக்டர் தோட்டம் ஆகிய பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புத்துறை சார்பில் வாகனம் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.

    இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், கிளைச்செயலா ளர்கள் சந்துரு, மணி, காலப்பன், லாரன்ஸ் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான், மோரீஸ் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர். 

    • புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
    • புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு செலவீனங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 2023-24-ம் நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அனைத்து துறைகளும் முழு வீச்சில் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதையொட்டி கடந்த 26-ந்தேதி மாநில திட்டக்குழு கூடி ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் திட்ட வரையறையாக மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுவைக்கான மத்திய அரசின் நிதியுதவி ரூ.3.117.17 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.

    இதனால் புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் மிஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
    • புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ்வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் மத்திய அரசுக்கும், புதுவை மாநில தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    2026 சட்டசபை தேர்த லில் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா கோட்டையாக மாறும் என்று வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் மிஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. புதுவை ராஜ்பவன் தொகுதி துணைத்தலைவர் மாலதி வரவேற்புரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, ஓ.பி.சி. மாநில துணைத்தலைவர் சீனிவாசன், முன்னாள் நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, நகர மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆனந்தகண்ணன், விமலா, ராஜ்பவன் தொகுதி துணைத்தலைவர் ஆனந்த பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி துணைத்தலைவர் முருகன் இரங்கல் தீர்மானத்தையும், பொதுச் செயலாளர் கதிரவன் வரவு தீர்மா னத்தையும் வாசித்தனர்.

    தொகுதி தலைவர் நாகராஜன் தலைமை உரையாற்றினார். ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசும் போது, 2024-ல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தீவிரமாக களபணி யாற்றும் போது 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ராஜ்பவன் பா.ஜனதாவின் கோட்டையாக நிச்சயமாக மாறும் என்று உறுதியாக கூறினார்.

    தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் புதுவை மாநிலத்துக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ்வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் மத்திய அரசுக்கும், புதுவை மாநில தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் பா.ஜனதா ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன் நன்றி கூறினார்.

    இந்த கூட்டத்தில் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசு அழுத்தம் காரணமாக புதுவையில் ஏழை, எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

    ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன், தமிழ்செல்வன், கணேஷ்குமார், சபரி, பன்னீர், குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், வருகிற 22, 23-ந் தேதி புதுடெல்லி யில் நடைபெறும்

    ஐ.என்.டி.யூ.சி. தேசிய மாநாடு, தேசிய தலைவர் தேர்தலில் மாநில தலைவர் பாலாஜி தலைமையில் 25 பிரதிநிதிகள் பங்கேற்பது.

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகளை பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக தயாரிக்கப்பட்ட தொழிலாளர் விரோத படஜெட்டை கண்டிப்பது.

    மத்திய அரசு அழுத்தம் காரணமாக புதுவையில் ஏழை, எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நலன் தொடர்பான உத்தரவுகளை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

    பட்ஜெட்டில் பி.ஆர்.டி.சி., காண்பெட் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • புதுவையில் தற்போது நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம புற பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
    • அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக மொத்தம் 125 கிராம் கஞ்சா வைத்திருந்தார்.

    புதுச்சேரி:

    கோர்ட்டு வளாகம் எதிரே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் தற்போது நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம புற பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சாவை விற்பனையை கட்டுபடுத்தும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    மேலும் கஞ்சா விற்பவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் புதுவை-கடலூர் சாலையில் கோர்ட்டு வளாகம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் நைசாக நழுவி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரது சட்டைபையில் சோதனை நடத்தினர்.

    அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக மொத்தம் 125 கிராம் கஞ்சா வைத்திருந்தார். அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வில்லியனூர் அருகே பொறையூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவநாதன்(வயது19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வேதநாதனை போலீசார் கைது செய்தனர்.

    • பொதுப்பணித்துறையில் கடந்த ஆண்டு பணிகள், வருகிற ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • சட்டசபையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து தொகுதிவாரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பொதுப்பணித்துறையில் கடந்த ஆண்டு பணிகள், வருகிற ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். நடைபெற்ற பணிகள், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், சட்டசபையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து தொகுதிவாரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள், உதவி, இளநிலை பொறியாளர்கள் பங்கேற்றனர்.

    • தேசிய இளைஞர் திட்டத்தின் சார்பில் சர்வதேச அளவிலான இளைஞர் அமைதி முகாம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது.
    • இளைஞர்கள் இடையே நட்புணர்வை வளர்க்கும் வகையில் நாட்டுப்பற்று பாடல்கள், விவாதங்கள், உலக அமைதி, யோகா பயிற்சி, தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தேசிய இளைஞர் திட்டத்தின் சார்பில் சர்வதேச அளவிலான இளைஞர் அமைதி முகாம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது.

    இந்த முகாமில் மத்திய அரசின் தேசிய விருதுபெற்ற சமூக சேவகர் ஆதவன்தலைமையில் புதுவையில் இருந்து மனோ, சபரீஸ்வரன், ஜெயப்பிரதா, காயத்திரி, குணசாவித்திரி, சுக்தேவ், ராகவன், வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு இளைஞர்கள் இடையே நட்புணர்வை வளர்க்கும் வகையில் நாட்டுப்பற்று பாடல்கள், விவாதங்கள், உலக அமைதி, யோகா பயிற்சி, விளையாட்டுகள், சமூகப்பணி, மத நல்லிணக்கம் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    முகாமில் பங்கேற்ற இளைஞர்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர் மாளிகைக்கு அழைத்து பாராட்டினார்.

    • வேளான் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 33-வது வேளாண் திருவிழா பூக்கள், காய்கறிகள், பழங்களுக்கான கண்காட்சி ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடைபெற்றது.
    • காய்கறி தோட்டம், கல்லூரி வளாக தோட்டம், போன்சாய் மரங்கள் போன்றவை இப்போட்டியில் பங்குபெற்று காண்போரை வியப்படைய செய்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வேளான் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 33-வது வேளாண் திருவிழா பூக்கள், காய்கறிகள், பழங்களுக்கான கண்காட்சி ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடைபெற்றது.

    இதில் புதுவை மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரியின் கீழ் இயங்கும் வேளாண் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக, காய்கறி தோட்டம், கல்லூரி வளாக தோட்டம், போன்சாய் மரங்கள் போன்றவை இப்போட்டியில் பங்குபெற்று காண்போரை வியப்படைய செய்தது.

    மேலும், சுமார் 12 பிரிகளில் பரிசுகளை பெற்றதுடன், இப்போட்டிக்கான சுழற்சி முறை கோப்பையையும் வென்றனர்.

    இறுதி நாளில், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினர்.

    வெற்றி கோப்பையை மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரி முதல்வர் முகமது யாசின் முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

    இவ்விழாவில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், வெற்றிபெற்ற மாணவர்கள், வெற்றி கோப்பையை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    ×