என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிலுவை சம்பளம் முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

    புதுச்சேரி:

    பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் மாநில தலைவர் தினேஷ் பொன்னையா மாநில கவுரவ தலைவர் அபிஷேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தராசு, மகேந்திரன், மணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா,கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த, ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிலுவை சம்பளம் முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

    எதிர்வரும் காலங்களில் மாதம்தோறும் சம்பளம் வழங்கிட வேண்டும்.தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

    • தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன்.
    • உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும், பாடலாசிரியர் சந்திரபோசுக்கும், இயக்குனர் ராஜமவுலிக்கும், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    • பொதுப்பணித்துறை மூலம் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு யு வடிவிலான வடிகால் வாய்கால் அமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை சின்ன பேட் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் இல்லாமல் சாலையிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் வடிகால் வாய்கால் அமைக்க அப்பகுதி மக்கள் அங்காளன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    உடனடியாக புதுவை பொதுப்பணித்துறை மூலம் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு யு வடிவிலான வடிகால் வாய்கால் அமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டது. இந்நிலையில் இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.
    • காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அடுத்த சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்தார்.

    இதற்காக மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட்டில் கூறப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    இந்த ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும். 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும்.

    மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.

    புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம், ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, புதுவையில் உள்ள கோவில்களில் ஆவணங்கள், சொத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை மின்னனு மையமாக்கப்படும். அதனை பொதுமக்கள் பார்வையிடும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    புதுவையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும்.

    புதுவையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும்.

    தொற்று நோயை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்படும்.

    50 புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் ஏற்படுத்தப்படும்.

    அட்டவணை இனத்து பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    • புதுவை அருகே தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு கும்பல் பெரிய அளவில் காசு வைத்து சூதாடுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே ஒரு கும்பல் பெரிய அளவில் காசு வைத்து சூதாடுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வாணரப்பேட்டையை சேர்ந்த திலீப்(வயது32), வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்(33), குமரகுரு பள்ளத்தை சேர்ந்த மனோகரன்(47) மற்றும் வாணரப்பேட்டை அன்னை இந்திராநகரை சேர்ந்த முகமது ஷெரீப்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் 18 ஆயிரத்து 400 மற்றும் சீட்டு கட்டு ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை அருகே நெட்டப்பாக்கத்தில் மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதையடுத்து மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று நினைத்து மதியா வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கத்தில் மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெட்டப்பாக்கம் அம்பேத் கர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் லோகநாதன் (வயது60). கூலி தொழிலாளி. இவருக்கு மதியா என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    மகள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. மது குடிக்கும் பழக்கமுள்ள லோகநாதன் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவழித்து வந்தார். இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் லோகநாதன் மது பழக்கத்தை கைவிடவில்லை.

    இந்த நிலையில் மது குடித்து விட்டு லோகநாதன் வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால், மதியா பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனைவியை லோகநாதன் திட்டினார். இதையடுத்து மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று நினைத்து மதியா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து மதியா வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் குளியல் அறையில் இரும்பு பைப்பில் கணவர் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லோக நாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி மரியா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • முழுமையான கணினி முறையில் தேர்வு செய்யப்படுகிறது. ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் கண்காணிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை போலீஸ் துறையில் காலியாக உள்ள 279 போலீஸ் பணியிடங்களுக்கு  முதல் 31-ந் தேதி வரை ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. 279 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

    இதில் போலீஸ் பணிக்காக 14 ஆயிரத்து 173 பேரும், டிரைவர்களுக்கு 877 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.

    இவர்களுக்கு உடல் எடை, உயரம், மார்பக அளவு எடுக்கப்படும். அதற்கு முழுமையான கணினி முறையில் தேர்வு செய்யப்படுகிறது. ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் கண்காணிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

     2 நாட்கள் 500 பேருக்கும், அதன் பிறகு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கும் உடல் தகுதி தேர்வு நடக்கிறது.

    இதை ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பெண் போலீஸ்சாருக்கான தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. 31-ந் தேதி டிரைவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்கிறுது. இந்த தேர்வுகள் மூலம் போலீசாராக 253 பேர், ஓட்டுநராக 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    புதுவையில் தொடங்கிய போலீஸ் தேர்வை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தேர்வுக்கான ஓட்ட பந்தையத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேர்மையான முறையில் தேர்வு நடைபெறும். எந்த ஒரு குறுக்கு வழியையும் யாரும் பின்பற்ற வேண்டாம். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். தகுதியுடைய இளைஞர்களே தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த கட்டமாக 200 கடலோர காவல் படை, ஊர்காவல் படை வீரர்களும், காவல் துறையில்60 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ.88 லட்சத்து 67 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.
    • மலையாளத்தான் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்குட்பட்ட வில்லியனூர் - பாகூர் சாலை, கோட்டைமேடு சந்திப்பில் இருந்து உறுவையாறு சந்திப்பு வரையிலும் மற்றும் உறுவையாறு சந்திப்பில் இருந்து திருக்காஞ்சி வழியாக கீழ்அக்ராஹாரம் வரையிலும் உள்ள சாலைகளை பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ.88 லட்சத்து 67 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை விழா உறுவையாறு சந்திப்பில் நடந்தது.அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து சாலை பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரராஜி, உதவிப்பொறியாளர் கோபி, இளநிலைப்பொறியாளர் நடராஜன், ஒப்பந்ததாரர்கள் அருணகிரி, மலையாளத்தான் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளது.
    • தொழில்நுட்பப் பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் அதனை சார்ந்த கல்விப் படிப்புகளில் வேலை.

    புதுச்சேரி:

    மத்திய தகவல் பாதுகாப்புத் துறையின் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகமான எஸ்.இ.டி.எஸ்.சுடன் புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளது.

    புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பேராசிரியர் ரஜீஷ் பூடானி, எஸ்.இ.டி.எஸ். நிர்வாக இயக்குனர் சுப்ரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இயக்குநர் தரணிக்கரசு மற்றும் புல முதன்மையர் சுப்பிரமணியம் ராஜு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    பாதுகாப்பிற்கான சமூகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சுப்ரமணியன், பிரேம் லக்ஷ்மன் தாஸ், நடராஜன், ரேஷ்மி -திருப்பதி மற்றும் புதுவை பல்கலைக்கழக புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவ லர்கள், பணியாளர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் புதுவை பல்கலைக்கழக ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே குவாண்டம் பாதுகாப்பு உள்ளிட்ட தகவல் பாதுகாப்பின் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பப் பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் அதனை சார்ந்த கல்விப் படிப்புகளில் வேலை.

    திறன் மேம்பாடு, ஆலோசனை சேவைகள், கார்ப்பரேட் பயிற்சியை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற பொது அல்லது தனியார் துறை நிறுவனங்களுக்கு தகவல் பாதுகாப்புத் துறைகளில் வழங்குவதில் இணைந்து பணியாற்றுவது. கூட்டு நிகழ்வுகள், பட்டறைகள், பயிற்சி திட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை செயல்படுத்தும்.

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் பேராசிரியர் சித்ரலேகா ஒருங்கிணைத்தார். புதுவை பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத் தலைவர் சத்யா நன்றி கூறினார்.

    • மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடைபெற்றது.
    • சமுதாயக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

     புதுச்சேரி:

    உலக அமைதியை வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடந்தது.

    காஞ்சி மாமுனிவர் கல்லூரி மாணவி ஷகிலா வரவேற்றார். ஹோப் நிறுவன இயக்குனர் ஜோசப் விக்டர் ராஜ் தொடக்கவுரையாற்றினார். ஐ.ஜி.சந்திரன் கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். ரைஸ் நிறுவன கன கராஜ், ரோச் விக்டர், பால கிருஷ்ணன், சத்தியபாமா, திருமால், தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சமுதாயக் கல்லூரி மாணவர் சபரி தலைமை யில் புதுவையில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி, மற்றும் சமுதாயக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணி செல்லும் வழியில் உள்ள பொதுமக்க ளுக்கு உலக அமைதி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது பேரணி, கடற்கரை காந்தி சாலையில் தொடங்கி, புதிய பஸ் நிலையம், மூலக்குளம் வழியாக வில்லியனூர் துணை தாசில்தார் அலுவலகம் முன்பு அமைந் துள்ள அம்பேத்கர் சிலை அருகே முடிவடைந்தது.

    • புதுவை அருகே வில்லியனூர் கொம்யூனில் தனத்தமேடு கிராமத்தில் உள்ள பழைய குருக்கு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கொம்யூன் பெருங்களூர் ஏரியில் இருந்து வரும் களிங்கல் வாய்க்காலில், தனத்தமேடு கிராமத்தில் உள்ள பழைய குருக்கு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது.

    பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நீர்ப்பாசனகோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் மற்றும் என்ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.

     புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    2022ம் ஆண்டுக்கான உலக மீன்வள தினவிழாவை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.

    பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.48 ஆயிரம் பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கோவிந்தசாமி, மீன்வள உதவி ஆய்வாளர்ஆறுமுகம் மற்றும் வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ×