என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்
    • வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (16-ந்தேதி) முதல் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை)முதல் 26-ந் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கலெக்டர் மணிகண்டன் இன்று காலை கால்நடைத்துறைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பணி தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உடனே நோட்டீசும் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

    ஆய்வுகள் நடத்திய சில நாட்கள் மட்டும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் தங்களது பழைய நிலைக்கே சென்றுவிடுகின்றனர்.

    இந்நிலையில் கலெக்டர் மணிகண்டன் இன்று காலை கால்நடைத்துறைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றும் 40 ஊழியர்களில் 13 பேர் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை.

    தாமதமாக பணிக்கு வந்த ஊழியர்களை உடனே வீட்டுக்கு செல்லும்படி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பணி தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உடனே நோட்டீசும் வழங்கப்பட்டது.

    இனி இதுபோன்ற ஆய்வு அனைத்து அரசு அலுவலங்களிலும் நடைபெறும் என்றும், தாமதமாக வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சமீபத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.
    • மனிதாபிமான அடிப்படையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியது நம் கடமை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    சமீபத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்கள் மாடியில் ஏறி தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்த பின்பு பணி நிரந்தரம் கிடைத்தது.

    இதேபோல சொசைட்டி கல்லூரிகள், பொதுப்பணித்துறையிலும் ஆயிரக்கணக்கானோர் நிரந்தரமற்ற வேலையில் உள்ளனர். இவர்கள், நாங்களும் மாடியிலிருந்து குதிக்க வேண்டுமா? என கேட்கின்றனர். அவர்களுக்கும் பணி நிரந்தரம் குறித்து முதல்-அமைச்சர் சபையில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் ரங்க சாமி, எதையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அனைத்து துறைகளிலும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியவர்கள் உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியது நம் கடமை.

    அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் பணியாற்றினர் என்ற அடிப்படையில் பணி நிரந்தரம் செய்துள்ளோம். பொதுப்பணித்துறையில் ஆயிரத்து 100 பேரை ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்துள்ளோம்.

    எனவே இந்த ஊழியர்கள் மீது அக்கறை உள்ளது. ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு பணி பாதுகாப்பில்லாமல் வேலையில் உள்ளனர். துறையில் காலி பணியி டம் ஏற்படும்போது கவனத்தில் கொண்டு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். 10 ஆண்டுக்கு மேல் பணியில் உள்ளவர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள். அந்தந்த துறைகளில் வாய்ப்பு ஏற்படும்போது நிரந்தரம் செய்வோம் என தெரிவித்தார்.

    • புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:
    • கிறிஸ்தவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புனிதவெள்ளி அன்று இறைச்சி, மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. அன்றயை தினம் புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும், இறைச்சிகடைகளையும் விடுமுறை அளித்து மூட உத்தரவிட வேண்டும். வள்ளலார்தினம், காந்திஜெயந்திபோல கிறிஸ்து மறித்த தினத்தை புதுவை அரசு அனுசரிக்க வேண்டும்.

    கிறிஸ்தவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புனிதவெள்ளி அன்று இறைச்சி, மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை மாநில தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
    • பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜ்மோகன், சேகர், முருகானந்தம், பிரபாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் நடந்தது. 

    இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. புதுவை மாநில தி.மு.க. அவைத்தலை வராக எஸ்.பி.சிவக்குமார், அமைப்பாளராக சிவா எம்.எல்.ஏ., துணை அமைப்பா ளர்களாக அனிபால் கென்னடி, தைரியநாதன், கல்யாணி, பொருளாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்களாக சி.பி.திருநாவுக்கரசு, சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜேவிஎஸ்.ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி ஆகிய 7 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களாக ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், மாய கிருஷ்ணன், இளம்பரிதி, பழனி, பிரபாகரன், செந்தில்குமார், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ் ஆகிய 22 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    காரைக்கால் மாவட்ட அவைத்தலைவராக மணிவண்ன், அமைப்பா ளராக நாஜிம், எம்.எல்.ஏ. துணை அமைப்பாளர்களாக காசி நாதன், முத்துகிருஷ்ணன், புவனேஸ்வரி, பொருளாளராக சங்கர், தலைமை செயற்குழு உறுப்பி னராக நாகதியாகராஜன், எம்.எல்.ஏ.

    பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜ்மோகன், சேகர், முருகானந்தம், பிரபாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.

    • கவர்னர் உரை என்பது மகத்துவமாக இருக்க வேண்டும். முன்னுக்கு பின் முரணாக இருக்க கூடாது.
    • கவர்னர் உரையில் கொடுத்துள்ள தனி நபர் வருமான கணக்கை பார்த்தால் புதுவையில் வறுமையே இல்லை என்பதாகத்தான் அர்த்தம்.

    புதுச்சேரி:

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் பேசிய தாவது:-

    கவர்னர் உரை என்பது மகத்துவமாக இருக்க வேண்டும். முன்னுக்கு பின் முரணாக இருக்க கூடாது. இலக்கிய கருத்தரங்கம் போல கவர்னர் உரை இருந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. தொழிற்சாலையே இல்லாத மாநிலத்தில் தொழிலே வாழி என கூறுகிறீர்கள். எந்த பாடலை வைத்தும் உரைக்கு மெருகேற்ற முடியாது.

    யானை பசிக்கு சோளப்பொறி போன்றதே இந்த பட்ஜெட். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது 22 சதவிகிதமான புதுவை வளர்ச்சி இருந்தது. ஆனால் 4,9 சதவிகித வளர்ச்சியை பெருமையாக பேசி வருகிறீர்கள்.கவர்னர் உரையில் கொடுத்துள்ள தனி நபர் வருமான கணக்கை பார்த்தால் புதுவையில் வறுமையே இல்லை என்பதாகத்தான் அர்த்தம்.

    எனவே கவர்னர் உரையில் கொடுத்துள்ள தனி நபர் வருமான கணக்கே தவறு.

    ரேஷன் கடை திறப்பதாக உறுதி அளித்தீர்கள். ஆனால் திறக்கப்படவில்லை. பாரதியார் உணவு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் பொருளை கொடுக்க வேண்டும் என கூறவில்லை. எனவே ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை கொடுக்க வேண்டும். விவசாய துறையில் நிதி சரியாக செலவிடப்படவில்லை.

    காரைக்கால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது யாரும் சென்று பார்க்கவில்லை பான்லே நஷ்டத்தில் இயங்கி வருவது குறித்து எதுவும் கூறவில்லை. அரியூர் பகுதியில் பால்பண்ணை தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் உரையில் இல்லை. லிங்காரெட்டிப்பாளையம், பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

    கலைமாமணி, தெலுங்கு ரத்தனா அறிவிப்பு இல்லை. வீடுகளில் கொடி ஏற்றியதை சாதனையாக கூறுகிறீர்கள். புதுவை மக்கள் எப்போதும் நாட்டு பற்றுடன் தான் இருப்பார்கள். அதனை உரையில் கூறியுள்ளீர்கள். செல்ல வேண்டிய விவரங்களை சொல்லியிருக்கலாம். ஜி20 மாநாட்டினால் புதுவைக்கு என்ன பயன். வழிநெடுகிலும் காவி பெயிண்ட் அடித்தீர்கள். கால்நடைத்துறையில் ஒதுக்கப்பட்ட நிதி சரியாக செலவு செய்யப்படவில்லை.

    கல்வித்துறையில் 802 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள். அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்ற விவரம் இல்லை.

    மின்துறைக்கு டெண்டர் விட்டுள்ளீர்களா என்ற விவரம் இல்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மதுவை தவிர வேறு எதுவும் சுற்றுலா வில் இல்லை. இ.சி.ஆரில் பெண்களுக்கென தனியாக ரெஸ்ட்டோபார் வைத்துள்ளார்கள். இவை கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.

    இதனை அனுமதிக்க கூடாது. மாநில அந்தஸ்து குறித்து கவர்னர் எதுவும் கூறவில்லை. வெற்று உரையை வைத்துக்கொண்டு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்க சொன்னால் என்ன தெரிவிப்பது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அதானி குடும்பத்துக்கு தாரை வார்ப்பதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.
    • பிரதமர் மோடி, அதானி உருவ படங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அதானி குடும்பத்துக்கு தாரை வார்ப்பதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடந்தது.

    வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பி ரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கட்சியின் மூத்த துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், கார்த்திகேயன், அனந்தராமன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வக்கீல் அணி மருதுபாண்டியன், பொதுச்செயலாளர்கள் தனுசு, இளையராஜா, திருமுருகன், சங்கர், வேல்முருகன், மாவட்ட தலைவர்கள் வேல்முருகன், கோபி, முத்துராமன், பிசிசி உறுப்பினர்கள் ராஜாகுமார், செல்வநாதன், வட்டார தலைவர்கள் ஆறுமுகம், கிருஷ்ணராஜ், ஜெரால்ட், ராஜ்மோகன், ஏம்பலம் தொகுதி மோகன்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. ஆம்பூர் சாலை அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்பை மீறி செல்ல முயன்றதால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் மோடி, அதானி உருவ படங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.

    இதைத்தொடர்ந்து மகளிர் காங்கிரசார் எல்லைபிள்ளை சாவடியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ரெட்டியார்பாளையம் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    போராட்டத்தின் முடிவில் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம் வாங்குவது உட்பட செலவுகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வருகிறது. மீதம் உள்ளது ரூ.2 ஆயிரத்து 600 கோடிதான். 3 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிலிண்டருக்கு ரூ.300 மானியம், இத்திட்டத்துக்கு மட்டும் ரூ.120 கோடி செலவாகும். பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கும் திட்டத்துக்கு எங்கிருந்து நிதி வரும்? இதற்கு ரூ.100 கோடி தேவைப்படும். ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ளது. இந்நேரத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த நிதி எங்கிருந்து வரும். இது ஏமாற்று பட்ஜெட், மாயாஜால பட்ஜெட்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை அருகே வில்லியனூர் பகுதியில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • பச்சையப்பன் பேச்சு மூச்சுயின்றி மயங்கிய நிலையில் இருந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    வில்லியனூர் அருகே உருவையாறு-பாகூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது56). புதுவை அரசு மின்துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பச்சையப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வெளியே சென்று விட்டு இரவு 11 மணியளவில் பச்சையப்பன் வீட்டுக்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு தூங்கினார். பார்த்த போது பச்சையப்பன் பேச்சு மூச்சுயின்றி மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதனை கண்ட குடுபம் பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனே பச்சையப்பனை காரில் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பச்சையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுவை அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு பின்னர் அனைத்து மீனவ சங்க நிர்வாகிகள் சந்திரன், ஆறுமுகம், ராஜ்குமரன், மாசிலாமணி, பெரியாண்டி, குமார், தேவநாதன், செல்வகுமாரி மற்றும் வீரமணி ஆகியோர் கூட்டம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசாங்கம் கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக கடலிலும் கடற்கரையிலும் பல திட்டங்களுக்கு இடம் பிடிக்க முயற்சிக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப் பட்ட திட்டங்களினால், கடற்கரை கிராமங்களில் இடப்பற்றாக் குறை ஏற்பட்டு எதிர்கால மீனவர்களின் வாழ்வு கேள்விக் குரியாகியிருக்கிறது.

    எனவே மீனவர்களுக்கு கடலும் மிச்சம் இருக்கிற கடற்கரையும் அப்படியே வேண்டும், அதில் ஒரு பிடி மண்ணைக் கூட அரசாங்கமோ தனியாரோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த மண்ணும் கடலும் அவர்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கு வேண்டும். எனவே தற்போது வெளியிடப் போகும் கடற்கரை ஒழுங்கு முறை திட்டத்தில், கடலில் இருந்து ஆயிரம் மீட்டர் தூரத்திற்குள் உள்ள அத்தனை நிலப் பரப்பும் மீனவர்கள் வாழ்விடங்களுக்கும், தொழில் செய்வதற்கும் மட்டுமே ஒதுக்கப் படவேண்டும். கடல் முழுக்க மீன் பிடி தொழிலுக்கு மட்டுமே பயன் படுத்தப் பட வேண்டும். இந்த இடங்களில் எந்த ஓரு அரசு மற்றும் தனியார், வர்த்தக அல்லது சுற்றுலாத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

    வெளியிட இருக்கும் கடற்கரை ஒழுங்கு முறை திட்ட நகலை எளிய தமிழில் அச்சிட்டு வெளியிட வேண்டும். அதில் எல்லா கிராமங்களின் பெயரையும் தொழிற் செய்யும் இடங்களையும் பதிவு செய்ய வேண்டும். மீத முள்ள இடங்களையும் மீனவர்களின் எதிகால தேவைக்கு என்றே குறியிட்டு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவையில் கொசு பெருக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • தொகுதி தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமல், தொகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் யோகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொசு பெருக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    அதனை தடுக்கும் வகையில் உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க. பொறுப்பாளர் கோபால் கொசு மருந்து தெளிக்கும் பணியை தொகுதி முழுவதும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சஞ்சய் காந்தி நகர், சுப்பையா நகர் கிளை பகுதிகளில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குரு, மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மன், உருளையன்பேட்டை தொகுதி அவைத் தலைவர் ஆதி நாராயணன், தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சசிகுமார்,

    மாநில பிரதிநிதி பொன்னுசாமி, கிளை தி.மு.க. செயலாளர்கள் முருகன், முத்து, அந்தோனி, கருணாகரன், சரவணன், குருசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்திரன், தேவா, அன்பு, பிரகாஷ், கோபால கிருஷ்ணன், அய்யப்பன், வினோத், தொகுதி தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமல், தொகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் யோகேஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    • புதுவையில் மின் ஆய்வுகளை மேம்படுத்த மின்சார உரிமம் வழங்கும் வாரியம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
    • நவீன முன்மாதிரி மீனவ கிராமம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து ரூ.100 கோடி நிதி கோரப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்க சாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    புதுவையில் மின் ஆய்வுகளை மேம்படுத்த மின்சார உரிமம் வழங்கும் வாரியம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வில்லியனூர், காலாப்பட்டு, திருபுவனை, கோர்க்காடு தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையங்களின் மின் மாற்றிகளின் திறனை மேம்படுத்த ரூ.44 கோடியே 13 லட்சம் செலவிடப்படும். அனைத்து தெருவிளக்கு களும் எல்.இ.டி. மின் விளக்குகளாக ரூ.4.50 கோடியில் மாற்றப்படும். இத்துறைக்கு ரூ.ஆயிரத்து 946 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை நவீனமயமாக்கப்படும்.

    புதுவை, வில்லியனூர், தவளகுப்பம், லிங்காரெட்டி பாளையத்தில் 4 புதிதாக 4 தீயணைப்பு நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப் படும். கரையாம்புத்தூர், காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். 54 மீட்டர் உயரம் செல்லக்கூடி ஸ்கைலிப்ட் தீயணைப்பு ஊர்திகளின் பராமரிப்புக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு சாதனங்களும் வாங்கப்படும்.

    மீனவ முதியோரை பாதுகாக்க 70 முதல் 79 வயது வரை வழங்கப்படும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ரூ.2 ஆயிரம் முதியோர் பயன்பெறுவர்.

    சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மீனவ மாணவருக்கு அட்டவணை, பழங்குடியினர் நலத்துறை யால் வழங்கப்படும் கல்வி நிதி உதவிக்கு நிகரான நிதி வழங்கப்படும். நவீன முன்மாதிரி மீனவ கிராமம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து ரூ.100 கோடி நிதி கோரப்படும்.

    மின்னியல் மீன் காட்சி யகம், கடலுக்கு அடியில் உயிரியல் பொழுது போக்கு பூங்கா அமைக்க மத்திய அரசிடம் ரூ.42 கோடி கோரப்படும். மீன் பதப்படுத்தும் தொழிலை பாதுகாக்க ஊக்குவிப்பு மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும். புதுவை அரியாங் குப்பத்தில் இ.எஸ்.ஐ. பயனாளிகள் பயன்பெறும் வகையில் 2 டாக்டர் உள்ளடக்கிய துணை மருத்துவ நிலையம் அமைக்கப்படும்.

    கர்ப்ப வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க அனைத்து பெண்களுக்கும் கட்டாய பரிசோதனை செய்யப்படும். இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா உதவியுடன் புதுவையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு  முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    • கண்காட்சியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அறியப்படாத சுதந்திரப் போராட வீராங்கனைகள் பற்றிய படக்காட்சிகளையும், அரங்குகளையும் பார்வையிட்டார்.
    • பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். நளினி பார்த்தசாரதி, மத்திய கலாச்சார அமைச்சகம் மாலதி செல்வம், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கள விளம்பர புதுவை பிரிவு சார்பில் ரோசம்மா திருமண நிலையத்தில் 'பெண்கள் உரிமைகளும் பாலின சமத்துவமும்' கண்காட்சி தொடங்கியது.

    கண்காட்சியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அறியப்படாத சுதந்திரப் போராட வீராங்கனைகள் பற்றிய படக்காட்சிகளையும், அரங்குகளையும் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில், மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் தெற்கு மண்டல தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், சென்னை, பத்திரிகை தகவல்தொடர்பு நிறுவனத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, சமூக நலத்துறைச் செயலர் உதயகுமார், புதுவை களவிளம்பரப் பிரிவின் துணை இயக்குனர் சிவகுமார், பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். நளினி பார்த்தசாரதி, மத்திய கலாச்சார அமைச்சகம் மாலதி செல்வம், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் குழந்தைகளுக்கான ரூ 50 ஆயிரம் காப்பீட்டுத் திட்டம், சமையல் எரிவாயு மானியம் ரூ. 300 மற்றும் உலகத் தமிழ் மாநாடு புதுவையில் நடத்துவதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்ததற்காக முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

    ×