என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வேளாண்துறை கன்னியகோயில் உழவர் உதவியகம் சார்பில் பிள்ளையார்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளை விரட்டுவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம், ஆலடிமேடு மற்றும் தமிழக பகுதிகளில் மணிலா பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த குறை கேட்பு கூட்டத்தில் விவசாயி உமாசங்கர் கலெக்டர் மணிகண்டனிடம் புகார் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து வேளாண்துறை கன்னியகோயில் உழவர் உதவியகம் சார்பில் பிள்ளையார்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் காட்டுப் பன்றிகளை விரட்டும் செயல் விளக்கம் பயிற்சி நடத்தப்பட்டது.

    பின்னர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளை விரட்டுவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மற்றும் அதன் செயல் விளக்கத்தையும் செய்து காண்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியகோயில் வேளாண் அலுவலர் வளர்மதி வாசுதேவன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆறுமுகம், விரிவாக்க பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிள்ளை யார்குப்பம், ஆலடிமேடு, கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • குடிமைப்பொருள் வழங்கல் துறை மக்களுக்கான துறை. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பணியாற்றுகிறார்கள்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு காலாப்பட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    குடிமைப்பொருள் வழங்கல் துறை மக்களுக்கான துறை. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பணியாற்றுகிறார்கள். அமைச்சர் இந்த துறையில் தனி கவனம் செலுத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காலாப்பட்டில் அமை ந்துள்ள சிறைச்சாலையில் தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் ரூ.24 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள்தரம் உயர்த்த ப்படும் என அறிவித்தது பாராட்டுக்குரியது.

    கொரோனா காலத்திற்கு பிறகு காலாப்பட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே அனைத்து பள்ளிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு விடுவதை கைவிட்டு, மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 1 முதல் 6 வரை கொண்டு வருவதற்கு நன்றி. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7- வது ஊதியக்குழு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். மாணவர் இளைஞர்கள் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அவர்களை வழிநடத்தி செல்ல உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேவை.

    ஐ.டி. பார்க் காலாப்பட்டில் ஆரம்பிப்பதாக கூறினர். பல்கலைக்கழகத்தில் பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதனை ஐ.டி. பார்க் அமைக்க பயன்படுத்தி க்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
    • மக்கள் நலன் கருதி பல்வேறு புதியத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை சங்க தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். புதுவையில் அரசு தமிழ்ச்சிறகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை ஏற்க இயலாது. புதுவை மாநிலத்தில் கடந்த பல வருடங்களாக தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கப்பட வேண்டும் எனத் தமிழறிஞர்கள் போராடிவருகின்றனர்.

    புதுவையில் சமூக நலத்துறை உட்பட பல துறைகள், மக்கள் நலன் கருதி பல்வேறு புதியத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதுபோல கலை பண்பாட்டுத்துறையிலிருந்து புதியதாக தமிழ்வளர்ச்சித்துறை உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி புதுவை சிந்தனையாளர்கள் பேரவை மற்ற அமைப்புகளுடன் இணைந்து, முதல்-அமைச்சரிடம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனு அளித்தோம்.

    முதல்-அமைச்சர் இதனை மறுபரிசீலனை செய்து புதுவை அரசின் தமிழ்வளர்ச்சித்துறையை உடனே அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 12 ஆண்டுக்கு பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்த முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள். வெறும் இலவச அறிவிப்புகளால் மாநிலத்தை வழிநடத்தி செல்ல இயலாது.
    • பொதுமக்கள் அளிக்கும் மனு மீது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நடவடிக்கை தேவை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    12 ஆண்டுக்கு பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்த முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள். வெறும் இலவச அறிவிப்புகளால் மாநிலத்தை வழிநடத்தி செல்ல இயலாது.

    இந்த பட்ஜெட் வரியில்லா பட்ஜெட் என கூறினாலும், மின்சார வரி , மதுபான வரி, வீட்டு வரி என மறைமுக வரி விதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. புதுவை மாநிலம் வாங்கிய ரூ.10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய ஏன் மறுக்கிறது?

    பொதுமக்கள் அளிக்கும் மனு மீது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நடவடிக்கை தேவை. இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வழி காணவேண்டும். போக்குவரத்து முனையத்தில் அரசு கையகப்படுத்திய 56 ஏக்கர் நிலத்தில் உடனடியாக மென் பொருள் பூங்கா அமைத்து இளைஞர் சக்தியினை பயன்படுத்தி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    1990-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ் வளர்ச்சித்துறை போல புதுவையிலும் தமிழ்வளர்ச்சித் துறை உருவாக்க வேண்டும். புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க நடந்த முயற்சியினை தடுத்தவர் கருணாநிதி. அவருக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதே போல் இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த சுகுமார், வெங்கடேசன் நினைவினைப் போற்றும் வகையில் அரசு கட்டிடங்களுக்கு பெயர் வைக்க வேண்டும். மொத்தத்தில் இது மக்களுக்கு வரியில்லா பட்ஜெட் இல்லை, சரியில்லா பட்ஜெட்டாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாண்லே பொருட்கள் மக்களிடம் அதீத வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவற்றின் தட்டுப்பாடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
    • பால் பொருட்களை தயாரித்து தரமாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    கே.எஸ்.பி.ரமேஷ்(என்.ஆர்.காங்):- பாண்லே பொருட்கள் மக்களிடம் அதீத வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவற்றின் தட்டுப்பாடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? பாண்லே நிறுவனத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

    முதல்-அமைச்சர் ரங்கசாமி:- பாண்லே நிறுவனம் பாலுடன் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை தயாரித்து தரமாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    தற்போது உள்ளூரில் போதிய அளவு பால் கிடைக்காததால் பால் பொருட்கள் தயாரிப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியை அதிகரிக்க வங்கிகள் மூலம் கறவை மாடு கடன், பசுந்தீவன வளர்ப்பை ஊக்குவிப்பது, மானியத்துடன் மாட்டு தீவனம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமும், அண்டை மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதன் மூலம் பற்றாக்குறையை போக்கி பாண்லே பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    நாள்தோறும் ஐஸ்கிரீம் உற்பத்தி அளவு 10 ஆயிரம் லிட்டரில் இருந்து 20 ஆயிரம் லிட்டராக மேம்படுத்தப்பட உள்ளது. பாண்லே பிரெட் தயாரிப்பு தினசரி 400 என்ற நிலையிலிருந்து 3 ஆயிரமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதோடு நெய், குல்பி, பால்கோவா, சுவையூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • குரூப் ‘பி’ பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிவடைந்த வுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    அவர் பேசும்போது, குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல்-அமைச்சர் மிகவும் பிற்படுத்தப்பட்டோரு க்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றார். அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க.

    எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், செந்தில்குமார் ஆகியோர் இடஒதுக்கீட்டில் சில சந்தேகங்களை எழுப்பினர். அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை நகல் வழங்கப்படும் என்றார். முன்னதாக கேள்விநேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி, அரசிதழில் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

    அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் முன் பாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து உட்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    • புதுவையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மின்பாதைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் மற்றும் புதுவையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணியின் போது வயல்வெளி பகுதியில் இருந்த மின் பாதைகள் அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு வருடங்கள் கடந்த நிலையில் உயர் மின் அழுத்த மின்பாதை மட்டுமே சரி செய்யப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் விவசாய தேவைக்கான மின் பாதைகள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பாகூர் கிழக்கு வெளி பகுதியில் அப்புறப்படுத்தப்பட்ட மின் பாதைகள் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் உள்ள சுமார் 100-க்கு மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுகான போர்வெல்லுக்கு மின்சாரம் கிடைக்காமல், பாசன நீரின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை மின்துறை உள்ளிட்ட துறை அதிகாரி சந்தித்து வயல்வெளியில் உள்ள போர்வெளுக்கான மின்பாதைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் அதிகாரிகள் அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. அது தேசிய நெடுஞ்சாலை துறையின் பணி என்பதால் அவர்கள் தான் அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறிவிட்டனர்.

    இந்நிலையில், பாகூர் விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பாகூர் -கன்னி கோவில் சாலை புறவழிச் சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மின்துறை இளநிலை பொறியாளர் ஸ்டாலின் சம்பவத்தை சென்று விவசாயகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் இன்னும் 10 நாட்களுக்குள் விவசாயத்திற்கான மின்பாதைகள் சீரமைப்பு செய்து கொடுப்பதாக உத்திரவாதம் அளித்தனர் அதன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை விட்டு கலந்து சென்றனர்.

    • தி.மு.க. உட்பட சில கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிறிய அளவில் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய் மூடி மவுனம் காத்தனர்.
    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கவர்னர் உரைக்கு சம்பந்தமே இல்லாத மதுபான விற்பனைகள் குறித்து பேசியது வியப்பாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் உரை, பட்ஜெட் உரையின் போது கவர்னர், முதல்-அமைச்சர் உரை நிகழ்த்திய போது பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உட்பட சில கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிறிய அளவில் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய் மூடி மவுனம் காத்தனர்.

    இதிலிருந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியே இல்லாத நிலையை எங்கள் கூட்டணி முதல்-அமைச்சர் உருவாக்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு நிறைவேற்றி உள்ளதை தி.மு.க. ஏற்றுக்கொண்டு அமைதி காத்தது.

    எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கவர்னர் உரைக்கு சம்பந்தமே இல்லாத மதுபான விற்பனைகள் குறித்து பேசியது வியப்பாக உள்ளது. மாநில வருவாய்க்காக புதிதாக மதுபான விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்குவது தவறு என்றும் இதனால் மாநிலம் கெட்டுவிடும் என்கிறார்.

    அவர் பத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளை பினாமி பெயரில் பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறார். அதிக மதுபான கடைகள் திறப்பதால் தனது மதுபான கடைகள் வருவாய் குறைந்துவிடும் என்ற தனது சுயநல சிந்தனையை சட்டமன்றத்தில் பொதுநல நோக்கோடு பேசுவதாக புகுத்தியுள்ளார்.

    பொது நோக்கோடு எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது உண்மையாக இருந்தால் அவர் பினாமி பெயரிலும் வாடகை அடிப்படையிலும் நடத்தப்படும் மதுபான கடை உரிமைகளில் ஒன்று, இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற கடைகளை அரசிடம் திருப்பிக்கொடுக்க முன்வர வேண்டும்.

    கவர்னர் உரையில் அரசின் திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும், வருவாய் பெருக்கத்தையும்,நிதி மேலாண்மையும், சமூக சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகள் குறித்து பேசாமல் மதுபான விற்பனை குறித்து பேசி தனது ஜனநாயக கடமையை சிறப்பாக எதிர்க்கட்சித் தலைவர் நடத்தியுள்ளார். இதுதான் திராவிட மாடலா என மக்கள் வினவுகின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-
    • நகர பகுதியில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால் விபத்து மற்றும் குற்ற செயல்கள் அதிகம் நடப்பதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-

    ஜி20 மாநாடு நடந்த ஒரு வாரம் புதுவை தூய்மையாக இருந்தது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த புதுவை மாநிலம் முழுவதும் ஒரு மாதத்தில் தூய்மையாக பளிச்சென்று மாறி விடலாம்.

    இதற்கு கவர்னர், தலைமை செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் முன் வர வேண்டும். நகர பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு வீதிகளில் வழிந்தோடும் நிலை உள்ளது.

    நகர பகுதியில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால் விபத்து மற்றும் குற்ற செயல்கள் அதிகம் நடப்பதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

    ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கிய நிதியில் இதுவரை 60 சதவீத நிதியை கூட செலவு செய்யவில்லை என்று தெரிகிறது. தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைத்து பொறியியல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். பஞ்சாலைகள் திறப்பு குறித்து கவர்னர் உரையில் குறிப்பிடாதது வேதனை தருகிறது.

    ஸ்மார்ட் சிட்டி குறித்து விசாரனை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதுவை நகராட்சி செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மக்களுக்கு பேட்கோ மூலம் வழங்கப்பட்ட தொழில் கடன்கனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தகுதியானவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
    • முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா சட்ட மன்ற அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் முதியோர், முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுவையில் பல்வேறு தொகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா சட்ட மன்ற அலுவலகத்தில் நடந்தது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இதில் பா.ஜனதா பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தன்னார்வ தொண்டர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வி மூலம் இளைஞர் மேம்பாடு என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சியை நடத்தியது.
    • புதுவையை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரி காட்சி தொடர்பு துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவர்கள், என்.எஸ்.எஸ். தன்னார்வ தொண்டர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வி மூலம் இளைஞர் மேம்பாடு என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சியை நடத்தியது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    புதுவையை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் லலிதாராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

    • கிராம மக்கள் உணவு உண்ண முடியாமல், மூச்சு விட முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.
    • 300-க்கும் மேற்பட்ட மக்கள், இன்று காலை துறைமுக வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் மேலவாஞ்சூர் அருகே தனியார் கப்பல் துறைமுகம் இயங்கி வருகிறது.

    இத்துறை முகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்கப்பட்டதால், சுற்றியுள்ள வடக்கு வாஞ்சூர், மேல வாஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதால், நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டது. இந்நிலையில் துறைமுக நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேறு ஒருவர் கைக்கு மாறியதால், மீண்டும் நிலக்கரி அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நிலக்கரியில் இருந்து வெளியாகும் துகள்கள், சுற்றியுள்ள கிராமங்களில் 24 மணி நேரமும் படிவதால், கிராம மக்கள் உணவு, உடைகளில் அளவுக்கு அதிகமாக படிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமல், மூச்சு விட முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.

    முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் அதிகமாக நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் துறைமுக நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும், அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் நிலக்கரியை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்து வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள், இன்று காலை துறைமுக வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்கால் திருப்பட்டினம் போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட அளவில் கலெக்டர் அல்லது அதற்கு இணையான அதிகாரிகள் வந்து முறையான தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே முற்றுகையை கைவிடுவோம் என கிராம மக்கள் முற்றுகையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் காரைக்கால் -நாகப்பட்டினம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    ×