என் மலர்
புதுச்சேரி
- இந்த ரெயில் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருப்பதி சென்றடையும்.
- புதுவை, திருப்பதி செல்லும் ரெயில் வில்லியனூரில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையிலிருந்து திருப்பதிக்கு நாள்தோறும் பயணிகள் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரெயில் வில்லியனூர் ரெயில்நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை மத்திய ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதையடுத்து புதுவை, திருப்பதி செல்லும் ரெயில் வில்லியனூரில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
இந்த ரெயில் மதியம் 3.04 மணிக்கு வில்லியனூரில் ஒரு நிமிடம் நின்று 3.05 மணிக்கு புறப்படும். அதேபோல திருப்பதியில் காலை 4.10 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12.36 மணிக்கு வில்லியனூர் வந்து ஒரு நிமிடம் நின்று 12.37-க்கு புறப்பட்டு புதுவை வந்தடையும்.
வில்லியனூர் ரெயில்நிலையத்தில் ரெயில் நின்று புறப்படும் விழா இன்று மதியம் 3 மணிக்கு வில்லியனூர் ரெயில் நிலையத்தில் நடந்தது.
கவர்னர் தமிழிசை, விழாவில் பங்கேற்று கொடியசைத்து வைத்து ரெயில் நிறுத்த சேவையை தொடங்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- திருபுவனை தொகுதிக்குட்பட்ட க.குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மற்றும் சிலுக்காரி பாளையம் பாதை கிராமங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
- ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட க.குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மற்றும் சிலுக்காரி பாளையம் பாதை கிராமங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்ததாவது:-
புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய சாலை வசதிகள், இலவச மன பட்டா, இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்துதல், நெற்களம், திருவிழாக் காலங்களில் தெருக்கூத்து மேடை அமைத்தல் மற்றும் குறுகிய சாலைகளுக்கு மின் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும் , சுழற்சி முறையில் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்தல், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
இக்கோரிகளை ஏற்ற அங்காளன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-
புதுவை மாநிலத்திலேயே நமது திருபுவனை தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நான் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த 2 ஆண்டுகளில் 80 சதவீதம் அடிப்படை வசதிகள் செய்து முடித்திருப்பதாகவும் மேலும் இக்கூட்டத்தில் வைத்த கோரிக்கைகளை இன்னும் 3 மாத காலங்களில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
- ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 21 -ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தேர் திருவிழா நடந்தது.
- தேரோட்டத்தில் அப்பகுதியை சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூன் சுந்தரமூர்த்தி விநாயகர்புரம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 21 -ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தேர் திருவிழா நடந்தது.
இத்தேரோட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தார்.
தேரோட்டத்தில் அப்பகுதியை சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இத்தேரானது சிவசுப்பிரமணிய கோவிலில் இருந்து புறப்பட்டு வில்லியனூர் மாட வீதியை சுற்றி வந்தது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் சுந்தரமூர்த்தி விநாயகர்புரம் நகரவாசிகள் செய்திருந்தனர். விழாவில் ஆலய அர்ச்சகர்கள் மகாகணபதி உபாசகர் சிவஸ்ரீ பாலசுப்ரமணியம் சிவாச்சாரியார், சிவஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் ஆகியோர் சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் காலாப்பட்டு முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கு பெற்றன.
- பெரிய காலாப்பட்டு அணி 2-ம் இடத்தையும், கணபதி செட்டி குளம் அணியினர் முதல் இடத்தையும் பிடித்தனர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு தொகுதி கைப்பந்து வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலாமாண்டு காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் காலாப்பட்டு முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கு பெற்றன. அனைத்து ஆட்டங்களும் லீக் முறையில் நடத்தப்பட்டது. ஆலங்குப்பம் அன்னை நகர் அணி, ஆலங்குப்பம் வாரியர்ஸ் அணி, பெரிய காலாப்பட்டு அணி, கணபதி செட்டிக் குளம் ஏ அணி ஆகியவை சூப்பர் லீக் தகுதி பெற்றன.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஆலங்குப்பம் அன்னை நகர் அணி 4-ம் இடத்தையும், ஆலங்குப்பம் வாரியர்ஸ் அணி 3-ம் இடத்தையும், பெரிய காலாப்பட்டு அணி 2-ம் இடத்தையும், கணபதி செட்டி குளம் அணியினர் முதல் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டி, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை அனைத்து விளையாட்டு வீரர்க ளுக்கும் வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் பிரகாஷ், மொய்தீன், ஸ்பைடர் விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் விஜய சாரதி, அழகேசன், ரவிச்சந்திரன், முருகன், பன்னீர் செல்வம், கவுதமன் ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவை நகரின் மையப் பகுதியில் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது.
- இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் புதிய சோதனை முயற்சி மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை நகரின் மையப் பகுதியில் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது.
வாய்க்காலில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அதிக அளவு கொசு உற்பத்தி ஆகிறது. இதை தடுக்க தொகுதி எம்.எல்.ஏ. நேரு, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் புதிய சோதனை முயற்சி மேற்கொண்டார். இதற்காக புதுவை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
துர்நாற்றம் வீசுதல் மற்றும் கொசு உற்பத்தியை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மறைமலை சாலையில் உள்ள லட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் இதற்கான சோதனை முயற்சி தொடக்கவிழா இன்று நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.
தொகுதி எம்.எல்.ஏ. நேரு முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சம்பந்தம், அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை முத்தி யால்பேட்டை முத்தையா முதலியார் பேட்டையில் உள்ள முத்து மாரியம்மன் முத்தையசாமி கோவிலில் 29-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.
- வீதி தோறும் மூட்டை மூட்டையாய் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தி யால்பேட்டை முத்தையா முதலியார் பேட்டையில் உள்ள முத்து மாரியம்மன் முத்தையசாமி கோவிலில் 29-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.
பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு அபிஷேக, ஆராதனைள் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வீதி தோறும் மூட்டை மூட்டையாய் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
- அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
- மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு நகைக் கடையில் கவரிங் நகையை விற்க முயன்ற காரைக்காலை சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்பவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் (35), ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி உள்பட 7 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இவர்கள் கூட்டாக சேர்ந்து காரைக்கால், தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள், அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.
- ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
- ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத, மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கப்பட வேண்டும்.
நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மேம்பட்ட சிகிச்சைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். இதில் அடிப்படை பரிசோதனை சேவைகள் இலவசமாக தரப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். பலருக்கு ஆயுஷ்மான்பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை. ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
குறிப்பாக புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு புதுவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுவை சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட எம்.எல்.ஏ.க்கள் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகம் கொண்டுவந்துள்ள சிகிச்சைக்கு கட்டண முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஜிப்மர் நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.
ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் சுகாதார உரிமையை பறிக்கக்கூடாது. ஏழை நோயாளிகளை வஞ்சிக்க கூடாது. புதுவை நோயாளிகளை புறக்கணிக்காதே என தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம் பரிதி, பழனி, பிரபாகரன், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ், சிறப்பு அழைப்பா ளர்கள் முகிலன், டாக்டர் நித்திஷ், தொகுதி செயலா ளர்கள், பல்வேறு அணிகளின் துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பேட்டோரை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- புதுவை அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- அப்பள்ளியின் மழலையர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர்.சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல் நாளில் மழலையார் மாணவ ர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கண் டாக்டர் வீனா, புதுவை அறிவியல் மன்ற துணைத் தலைவி ஹேமாவதி, மற்றும் ஜெயசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்கள்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மழலையர் மாணவர்களுக்கு பட்டமளித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் மழலையர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
2-வது நாளான நேற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர் மற்றும் ஊக்கமளிப்பு பேச்சாளர் புகழேந்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளியின் முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் மேற்பார்வையில் நிகழ்ச்சி யானது நடைபெற்றது.
- மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிகப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் விழா திருக்கனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிக்காக தலா ரூ.20ஆயிரம் வழங்கினார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிகப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் விழா திருக்கனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், உள்துறை அமைச்சருமான நமச்சி வாயம் தலைமை தாங்கி 90 பேருக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிக்காக தலா ரூ.20ஆயிரம் வீதம் 10 பேருக்கு மொத்தம் ரூபாய் 2 லட்சம் உதவி தொகை வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில மக்கள் நீதிமய்யத்தின் நற்பணி இயக்க அணியின் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் முத்திரையர்பாளையம் ஜி.கே.வித்யாலயம் பள்ளியில் நடந்தது.
- கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது.
புதுச்சேரி:
புதுவை மாநில மக்கள் நீதிமய்யத்தின் நற்பணி இயக்க அணியின் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் முத்திரையர்பாளையம் ஜி.கே.வித்யாலயம் பள்ளியில் நடந்தது. மாநில செயலாளர்கள் ராம.அய்யப்பன், ரூபன் தாஸ், ருத்ரகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் சக்திவேல் பட்டுரோஸ், சரவணபெருமாள், பழனி வேலன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இன்னாசி ராக், விவசாயிகள் நல அணி ஆதிசங்கர், தொழிலாளர் அணி கண்ணன், மாணவரணி மகின்பர்வத், மங்கலம் பொறுப்பாளர் சுப்ரமணி, கமல்பாலா, கமல் ஜிப்பி, தேவ்நாத், கமல்ராஜ், முகுந்தன், மோகன், செழியன், வாசுகி, மல்லிகா, ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்சியின் மாநில நற்பணி இயக்க அணிக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பிற்கு விண்ணப்பம் பெறப்பட்டு நேர்காணல் நடத்தி தகுதி வாய்ந்த நபர்களை தலைவர் கமல்ஹாசனுக்கு பரிந்துரை செய்வது, கமல்ஹாசன் பெயரில் உள்ள ரசிகர் நற்பணி மன்றங்களை ஒருங்கிணைத்து கட்சியை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவது, கட்சி வளர்ச்சி மற்றும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நற்பணி இயக்க அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- புதுவை அருகே முருங்கப்பாக்கத்தில் மயான கொள்ளை தேர் இழுக்கும் தகராறில் விழாக்குழு நிர்வாகியை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த ஆண்டு நன்கொடை வசூலித்தது போலவே இந்த ஆண்டும் வசூல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
புதுச்சேரி:
முருங்கப்பாக்கத்தில் மயான கொள்ளை தேர் இழுக்கும் தகராறில் விழாக்குழு நிர்வாகியை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது50). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார். மேலும் திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா குழு செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை விழாவில் தேர் இழுத்து செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் ராஜி ஆகியோருக்கும் நாராயணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த வர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் நன்கொடை வசூலிப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நாராயணன் பேசும் போது, கடந்த ஆண்டு நன்கொடை வசூலித்தது போலவே இந்த ஆண்டும் வசூல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
பின்னர் நாராயணன் வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த போது அங்கு வந்த மகேந்திரன், ராஜி மற்றும் இவர்களது நண்பர் ப்ரீத்தி ஆகியோர் ஏற்கனவே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறை மனதில் வைத்து நாராயணனிடம் பிரச்சினை செய்தனர்.
மேலும் தகாத வார்த்தை களால் திட்டி அவரை தாக்கினர். அங்கிருந்த வர்கள் நாராயணனை தாக்கியவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் நாராயணனுக்கு காது, கன்னம், உதடு மற்றும் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






